அண்ணாவும் பெரியாரும் ஒரே சிறையில்

” தம்பி , ஆறு நூறு அபராதம், கட்டத் தவறினால் நாலு மாத சிறைவாசம்” என்று தீர்மானிக்கப்பட்டது: அபராதம் செலுத்தவில்லை, சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். திருச்சியில்; எனக்குக் கிடைத்த வாய்ப்பு எப்படிப்பட்டது தெரியுமா தம்பி, பெரியாரும் அதே நாளில், அதேவிதமான தண்டனை பெற்று, அதே சிறைக்கு வந்தார், இருவரையும் ஒரே போலீஸ் வானில்தான் ஏற்றிச் சென்றார்கள்.

திராவிடர் கழகமாக இருந்தபோது இப்படித்தானே நடந்திருக்கும், இதிலே என்ன ஆச்சரியம் என்று சொல்லுவாய், தம்பி! இது திராவிட முன்னேற்றக் கழகமாக நீயும் நானும் மாறின பிறகு, நடைபெற்ற நிகழ்ச்சி – 1949 இல்.

“ஆரிய மாயை’ எனும் ஏடு தீட்டியதற்காக எனக்குச் சிறை.

“பொன் மொழிகள்” தீட்டியதற்காகப் பெரியாருக்குச் சிறை.

திருச்சி கோர்ட்டாருக்கு இப்படி ஒரு காட்சியைக் காண வேண்டுமென்று ஆசைபோலும். இரண்டு தனித்தனி வழக்குகள்; தனித்தனியாகத்தான் விசாரணைகள்; எனினும் “தீர்ப்பு மட்டும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அளிக்கப்பட்டது.

பிரிந்து நெடுந்தூரம் வந்துவிட்ட என்னை, அன்று அந்தக் கோர்ட்டில், பெரியாருக்குப் பக்கத்திலே நிற்கச் செய்து, வேடிக்கைப் பார்த்தது வழக்கு மன்றம். போலீஸ் அதிகாரிகள் அதை தொடர்ந்து, ஒரே வானில் ஏற்றிச் சென்றனர்; அதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையிலே இருந்த அதிகாரி, பெரியார் கொண்டுவந்திருந்த சாமான்களைக் கணக்குப் பார்த்துச் சரியாக இருக்கிறதா என்று கூறும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத சம்பவம்; எனக்கு உள்ளூரப் பயந்தான்!

கேள்விக்கணையுடன் நிறுத்திக்கொள்ளாமல், அன்புக் கணையையும் ஏவினால், என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும் என்றெல்லாம் அச்சப்பட்டேன். ஆனால் இடை யிடையே ஒரு தைரியம் எனக்கு; பெரியார் அவ்விதமெல்லாம் எண்ணமாட்டார் – அவர் மனதில் அந்த அளவுக்கு விரோதத்தைவடித்தெடுத்துப் பாய்ச்சிவிட்டிருக்கிறார், அந்த வித்தையிலே விற்பன்னர்; எனவே பயமில்லை என்றிருந்தேன்.

பக்கத்துப் பக்கத்து அறை; பகலெல்லாம் திறந்துதான் இருக்கும்; பலர் வருவார்கள், இங்கு சிறிது நேரம், அங்கு சிறிது நேரம். இன்னும் சிலர் கூர்ந்து கவனித்தபடி இருப்பார்கள், நாங்கள் இருவரும் பேசிக் கொள்கிறோமோ என்று. அவர் அறைக்கு உள்ளே இருக்கும்போது நான் வெளியே மரத்தடியில்! அவர் வெளியேவர முயற்சிக்கிறார் என்று தெரிந்ததும் நான் அறைக்கு உள்ளே சென்றுவிடுவேன்.

இப்படிப் பத்து நாட்கள்!!

நாளைய தினம் எங்களை விடுவிக்கிறார்கள் – முன் தினம் நடுப்பகலுக்கு மேல், ஒரு உருசிகரமான சம்பவம் நடைபெற்றது.

பெரியாருக்கு வேலைகள் செய்துவந்த கைதி என் அறைக்குள் நுழைந்து, “ஐயா! தரச்சொன்னார்” என்று சொல்லி என்னிடம் ஆறு பிஸ்கட்டுகள் கொடுத்தான். கையில் வாங்கியதும், என் நினைவு பல ஆண்டுகள் அவருடன் இருந்த போது கண்ட காட்சிகளின்மீது சென்றது.

மறுநாளே திடீரென்று “விடுதலை’ கிடைத்தது.

அந்த வேடிக்கையையும் கேள் தம்பி.

எங்களை விடுதலை செய்யப்போகிறார்கள் என்ற செய்தி, உள்ளே எங்களுக்குத் தெரிவதற்கு முன்பே, வெளியே தெரிந்துவிட்டிருக்கிறது. எனவே, எங்களை அழைத்துச்செல்ல நண்பர்கள் வெளியே “முஸ்தீபுகள்’ செய்யத் தொடங்கிவிட் டிருந்தனர். நமது கழகத்தார் முஸ்தீபுகளிலே மும்முரமாக ஈடுபட்டு, நேரத்தை மறந்துவிட்டனர்; எனவே, சிறைக்கதவு திறக்கப்பட்டு எங்களை வெளியே அனுப்பியதும், வாசற்படி அருகே, பெரியாரை அழைக்க வந்தவர்கள் கொண்டுவந்த “மோட்டார்’ தான் இருந்தது.

அதற்கு என்னையும் அழைத்துச் சென்றனர்; இது போதாதென்று, “போட்டோ’ எடுப்பவர் ஒருவர் ஓடிவந்தார் – இருவரும் அப்படியே, நெருக்கமாக நில்லுங்கள் என்று, போட்டோ எடுப்பவர்களுக்கே உரித்தான சாமர்த்தியத்துடன்கூறி, போட்டோவும் எடுத்துவிட்டார், அது வெளியிடப்படவில்லை; வெளியிடாதிருந்தது நல்லதுதான் என்றே சொல்லுவேன், அவ்வளவு திகைப்பு என் முகத்தில் இருந்தது, அவர் எப்படி இருந்தாரோ, எனக்குத் தெரியாது. வேதாசலம் அவர்கள் வீடுவரையில் சென்று, அவர் இறங்கிக் கொண்டார். நான் அதே மோட்டாரில் சாம்பு இல்லம் சென்றேன். “

– அறிஞர் அண்ணா , ( 30 – 7 – 1955 , திராவிடநாடு )

About nakkeran 197 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply