விக்னேஸ்வரனின் (பதவி) நாட்கள் எண்ணப்படுகின்றன!
நக்கீரன்
நல்லூர் கந்தசாமி கோயிலில் கொடியேற்றம். அடுத்த 27 நாளும் திருவிழா. இருபத்து நான்காம் நாள் தேர்த் திருவிழா. அதற்கு முந்திய நாள் சப்பரத் திருவிழா. தேருக்கு அடுத்த நாள் தீர்த்தம்.
திருவிழாக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். குறிப்பாக தெற்கு வீதியில் முருகனுக்குத் தீபாதூபம் காட்டும் போது நெரிசல் அதிகமாகும். பக்தர்கள் முண்டி அடிப்பார்கள். வினை தீர்க்கும் வேலனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற முழக்கம் வானைப் பிளக்கும். இந்தச் சூழ்நிலையை உள்ளூர் அயலூர் திருடர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். பெண்களது கழுத்தில் உள்ள தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடுவார்கள். ஓடும்போது கைகளைக் கும்பிடுவது போல தலைக்கு மேல் வைத்துக் கொண்டு “திருடன்… திருடன் ஒடுகிறான்… பிடி” என்று கூச்சல் போட்டுக் கொண்டு ஓடித் தப்பி விடுவார்கள். கும்பிட்ட கைகளுக்குள்த்தான் அறுத்த தங்கச் சங்கிலி இருக்கும்!
இந்தத் திருடனைப் போலத்தான் வட மாகாண முலமைச்சர் விக்னேஸ்வரன் தனக்கு எல்லாம் தெரியும் என்றும் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும், தான் யோக்கியன் மற்றவர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று பேசி வருகிறார்.
அண்மையில் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது “தமிழ்த் தலைமைகளின் அகந்தையே எமது பின்னடைவுகளுக்குக் காரணம். இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரை எமது தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக வேறுபாட்டுக் கொள்கைகளும் மற்றும் இன்னோரன்ன காரணிகளே நாம் தொடர்ச்சியாக அரசியல் பின் னடைவுகளைச் சந்திப்பதற்கான ஏதுக்களாக இருந்து ளமையை நாம் காண்கின்றோம். இந்த நிலையில், நாம் எமது இருப்புக்களை உறுதி செய்து எம் மீது திணிக்கப்படுகின்ற அரசியல் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து எமது மக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அதற்குரிய கல்வி நிலையை நாம் பெற்றுக்கொள்ள முனைப்புடன் செயலாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்த் தலைமைகளின் தூரநோக்கற்ற தன்மையும் இறுமாப்புத்தன்மையும் அகந்தையுமே தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளைச் சந்திக்கக் காரணம்” என்ற வாசகத்தை விக்னேஸ்வரன் கண்ணாடிக்கு முன் ஒருமுறை நின்று சொல்லிப் பார்க்க வேண்டும்.
தூரநோக்கின்மை, இறுமாப்பு, அகந்தை ஆகியவற்றின் மொத்த உருவமாக காட்சி அளிப்பவர் விக்னேஸ்வரன் ஒருவரே. இந்த இலட்சணங்களுக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் விளங்குபவர் விக்னேஸ்வரன் என்ற மனிதர்தான்.
விக்னேஸ்வரன் யூலை 1979 ஆம் ஆண்டு தொடக்கம் ஒக்தோபர் 2004 மட்டும் மொத்தம் 25 ஆண்டுகள் நீதித்துறையில் காலத்தைக் கழித்தவர். ஓய்வு பெற்ற பின்னரும் தமிழ் மக்களுடைய துன்ப துயரத்தில் பங்கு கொள்ளாதவர். போர்க் காலத்தில் தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தின் பீரங்கித் தாக்குதலுக்கும் சிறிலங்கா விமானப் படையின் குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகிச் செத்து மடிந்த போது கண் மூடி மவுனியாக இருந்தவர். சிறிலங்கா அரசு போரை நிறுத்தி வி.புலிகளுடன் பேசி இனச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று நாலு வரி அறிக்கை விடாதவர்.
தன்னை ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டு 13 இளம்பிள்ளைகளின் கற்பைச் சூறையாடி, அதனைத் தட்டிக் கேட்ட பொறியாளர் ரவியைக் கொலைசெய்து ஆச்சிரம வளவுக்குள் குழி தோண்டிப் புதைத்த குற்றங்களுக்காக இரட்டை ஆயுட் தண்டனை பெற்ற பாலியல் சுவாமி பிரேமானந்தாவுக்கு புளியங்குளத்தில் கோயில் எழுப்பி கும்பாவிசேகம் செய்ததுதான் அவர் செய்த தொண்டு. தில்லி உச்ச நீதிமன்றம் சென்று பிரோமானந்தா குற்றமற்றவர் நிரபராதி எனப் பொய்ச் சாட்சியும் சொன்னவர்.
இத்தியாதி சாமுத்திரிகா இலட்சணங்களைக் கொண்ட விக்னேஸ்வரன் தமிழ்த் தலைமைகளின் தூரநோக்கற்ற தன்மை, இறுமாப்பு, அகந்தை பற்றி விமரிசனம் செய்வதா? அதற்கான யோக்கியதை விக்னேஸ்வரனுக்கு இருக்கிறதா?
தந்தை செல்வநாயகம் அவர்களுக்கு தூர நோக்கு இருந்த ஒரே காரணத்தால்தான் அவரைத் தேடிச் சென்ற நீதிபதிப் பதவியை உதறித் தள்ளிவிட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை நிறுவினார். அதன் காரணமாகவே இலங்கையில் இன்றும் இனச் சிக்கல் இருக்கிறது அதற்கு நியாமானதும், நீதியானதும் ஆன அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது பேசு பொருளாக இருக்கிறது.
ஒரு மாகாண சபையை நிருவகிக்கத் தெரியாதவர், தானே நியமித்த ஆணைக் குழு மருத்துவர் ப. சத்தியலிங்கம் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் எண்பிக்கப்படவில்லை அவர் நிரபராதி என்று சொன்ன பின்னரும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பொதுமக்கள் அவரது முறைகேடுகள் பற்றி புகார் செய்யலாம் என்று அறிவித்தார். இது இறுமாப்பு இல்லையா? அகந்தை இல்லையா? ஆணவம் இல்லையா?
விக்னேஸ்வரன் தான் அமைத்த ஆணைக் குழு உறுப்பினர்களிடம் “சத்தியலிங்கத்தை எப்படியாவது மாட்ட முடியாதா” என்று அகந்தையோடு கேட்டாரா இல்லையா?
நல்வாழ்வு அமைச்சர் சத்தியலிங்கம் பதவி விலக வேண்டும் என்று கேட்டது ஆணவம் இல்லையா?
ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சருக்கு சட்ட அதிகாரம் இல்லை என்று சட்டம் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல் மீன்பிடி அமைச்சர் பா. டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தது ஆணவம் இல்லையா?
மேன்முறையீடு நீதிமன்றம் பா. டெனீஸ்வரனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவி நீக்கம் செய்தது சட்டப்படி செல்லாது, பதவி நீக்கல் கடிதம் செல்லுபடியற்றது என்று சொன்னது. அதே நேரம் சட்டத்தை பின்பற்றி பா. டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறது என்ற தீர்ப்பளித்தது. அதன் பின்னரும் எதற்காக அவர் உச்ச நீதிமன்றம் சென்றார்?
அமைச்சர் பா. டெனீஸ்வரனே முதலமைச்சர் தன்னைப் பதவி நீக்கம் செய்தது பிழை என்று ஒத்துக் கொண்டால் தான் தனது பதவியை விட்டு விலகுவதாகச் சொன்ன பின்னரும் முதலமைச்சர் எதற்காக தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என அடம் பிடிக்கிறார்? அவரது நடத்தை அவரது அகந்தையைக் காட்ட வில்லையா?
2015 இல் யூஎன்டிபி அ.டொலர் 150 மில்லியனை வடக்கு மாகாண விவசாயிகளுக்கு கொடுக்க முன்வந்தது. ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது மருமகன் நிமலனுக்கு மாதம் அ.டொலர் 5,000 சம்பளத்தில் சிறப்பு அலுவலகர் பதவி கேட்கப் போய் அந்த உதவி நிதியை கோட்டை விட்டது அவரது தூரநோக்கைக் காட்டுகிறதா? இல்லை அவரது அகந்தையைக் காட்டுகிறதா?
முதலமைச்சராக பதவி ஏற்ற காலம் தொட்டு விக்னேஸ்வரன் சாதித்தது என்ன? தமிழ் அரசுக் கட்சியோடு சண்டை, பிரதமரோடு சண்டை, மாகாண அமைச்சர்களோடு சண்டை, ஆளுநர்களோடு சண்டை, நீதிமன்றத்துக்குப் போகும் அளவுக்கு மாகாண சபை செயலாளரோடு சண்டை. இவர் போன பிறப்பில் சண்டைக் கோழியாக இருந்திருப்பாரா?
சரி போகட்டும். முதலமைச்சர் விக்னேஸ்வரனால் நாலு பேருக்கு வேலை கொடுக்க ஒரு ஆடைத் தொழிற்சாலையை கட்ட முடிந்ததா?
கண்கெட்ட பின்னர் சூரிய வணக்கம் செய்தவன் கதையாக பதவிக் காலம் முடிய இன்னும் சரியாக இரண்டு மாதங்கள் இருக்கும் போது 5 ஆண்டு பொருளாதார அபிவிருத்தித் திட்டம் ஒன்றை தயாரித்து இருப்பதாகச் சொல்வது சிரிப்பாக இல்லையா?
இந்த இருண்ட பின்னணியில் ஒரேயொரு ஆறுதல். விக்னேஸ்வரன பதவிக் காலம் எண்ணப்படுகின்றன!

Leave a Reply
You must be logged in to post a comment.