“கைபர்போலன்” கணவாயில் ஊடுருவிய ஒரு சமூகம்.. கோயிலில் சமஸ்கிருதத்தை திணிச்சாங்க? விளாசிய சிரவை ஆதீனம்

கைபர்போலன்” கணவாயில் ஊடுருவிய ஒரு சமூகம்.. கோயிலில் சமஸ்கிருதத்தை திணிச்சாங்க? விளாசிய சிரவை ஆதீனம்

By Noorul Ahamed Jahaber Ali

March 9, 2023

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு விழாக்களை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெய்வீக பேரவை சார்பில் கடிதம் எழுதி இருக்கும் குமரகுருபர சுவாமிகள், கைபர்போலன் கணவாய் வழியே வந்த ஒரு குறிப்பிட்ட சமூகம் வடமொழி வழிபாட்டைத் துவக்கியதாக தெரிவித்து இருக்கிறார். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கை தமிழில் நடத்துவது தொடர்பாக நெறிமுறைகளை வரையறுக்க ஆதீனங்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

குழுகுன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருக்கயிலாய மரபுவழி பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை குமரகுருபர சுவாமிகள், மு.பெ.சத்தியவேல் முருகனார், ப.குமரலிங்கனார் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்று உள்ளனர்.

“சமஸ்கிருதம் திணிப்பு”..தமிழில் கோயில் குடமுழுக்கு நடத்த முதல்வருக்கு தெய்வீக பேரவை ஆதீனங்கள் கடிதம் கூச்சல் குழப்பம் கடந்த சில நாட்களுக்கு முன் சுகி சிவம் தலைமையில் திருநெல்வேலியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பாஜகவினர், இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க மறுபக்கம் தமிழில் குடமுழுக்கை நடத்த ஒரு தரப்பினர் முழக்கமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஸ்டாலினுக்கு கடிதம் இந்த நிலையில் அந்த குழுவில் இடம்பெற்று உள்ள குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், மயிலை ஆதீனம், பேரூராதீனம், சிரவை ஆதீனம், காமாட்சிபுரி ஆதீனங்களை கொண்ட தெய்வீகப் பேரவை தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர்.

ஆதீனங்களின் கடிதம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கையெழுத்திட்ட அந்த கடிதம் மற்ற ஆதீனங்களின் ஒப்புதலுடன் முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப் பட்டதாக தெய்வீக பேரவை உறுதிபடுத்தி உள்ளது. இதில் வடமொழி திணிப்புக்கு எதிராகவும், எப்படி சமஸ்கிருதம் தமிழ்நாட்டு கோயில்களில் ஊடுருவியது என்பதையும் விரிவாக விளக்கி உள்ளனர்.

தமிழ் மன்னர்கள் உருவாக்கிய கோயில்கள் தமிழகத்தில் வழிபாடுகள் நடைபெற்று வரும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழுள்ள திருக்கோவில்களும், திருமடங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் கோவில்களும் பெரும்பகுதி புராண காலங்கள் மற்றும் பண்டைய தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். மேலும் பண்டைய காலங்களில் திருக்கோவில்களின் குடமுழுக்கு, விழாக்கள், பெருவிழாக்கள் அனைத்தும் தமிழ் முறைப்படியே நடைபெற்று வந்துள்ளது. சமஸ்கிருதம் எப்படி வந்தது? தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு வந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் சமஸ்கிருதத்தை வழிபாட்டு மொழியாக சிறிது சிறிதாக மாற்றியுள்ளனர்.

கடந்த 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில், பின்னிட்டு கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் போன்ற திருக்கோவில்களில் வடமொழி வழிபாடுகளோ அல்லது பிற மொழி வழிபாடுகளோ நடைபெற்றதாக எவ்வித சரித்திரக் குறிப்புகளும் இல்லை. வடமொழியில் குடமுழுக்கு நடக்கவில்லை மேலும் மேற்கண்ட கோவில்களின் குடமுழுக்கு விழாக்களும், சைவப் பெருந்தகைகளால் நடைபெற்றதாகத் தான் சான்றுகள் தெரிவிக்கின்றன. எனவே சங்க காலம் தொட்டு, ஆண்டாண்டு காலமாக மூவேந்தர்கள் காலம் வரையும், தமிழக கோவில்களில் தமிழ்முறைப்படிதான் குடமுழுக்கு விழாக்கள், அன்றாட வழிபாடுகள், பெருவிழாக்கள் ஆகியவை தமிழ் முறைப்படிதான் நடைபெற்று வந்துள்ளன. ஊடுருவிய சமூகத்தினர் மேலும் வைணவத் திருத்தலமான திருமலை திருப்பதியில் கூட இன்று வரை நாலாயிரத்திவ்யப் பிரபஞ்சம்தான் வழிபாட்டுப் பாடலாக உள்ளது.

எனவே வடமொழியில் குடமுழுக்கு நடத்துவதும், பின்னிட்டு பல்வேறு மன்னர்களின் படையெடுப்பில் ஊடுருவிய ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வடமொழியை தெய்வமொழி என்றும், இறைவன் மொழி என்றும் தவறாகச் சித்தரித்து வடமொழியின் ஆதிக்கத்தையும், ஆளுமையையும் முன்னெடுத்து விட்டனர். தமிழின் சிறப்பு மேலும் தமிழ் மொழியின் சிறப்பை அறியாதவர்கள், வடமொழி என்பது இறைமொழி என தவறாகக் கருதிக் கொண்டு அவர்கள் பின்னால் அணிவகுத்து விட்டனர். எனவே தமிழ்மொழியின் சிறப்பையும், அதன் வழிபாட்டு முறைகளையும் பல பொதுத் தளங்களில் வெளிப்படுத்தி வருகிறோம்.

விஜய நகரப் பேரரசிற்கும், முகலாயப் பேரரசிற்கும் இடைப்பட்ட காலத்திலேதான் வடமொழி வழிபாடுகள் இந்தியாவிற்குள் நுழைந்தது. கைபர்போலன் கணவாய் கைபர்போலன் கணவாய் வழியே பல்வேறு பணிகளுக்காக சிந்து சமவெளியில் இருந்து வந்த ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் வடமொழி வழிபாட்டைத் துவக்கி ஆண்டாண்டு காலமாக தமிழகத்தில் நடைபெற்று வந்த தமிழ்மொழி வழிபாட்டைப் புறந்தள்ளினார்கள். எனவே தெய்வத்திருமொழியாம் தமிழ் மொழியில் தமிழகக் கோவில்களில் திருக்குடமுழுக்கு நடத்துவதற்கு தகுந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், தகுந்த அரசாணையையும் பிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/siravai-adheenam-about-the-community-entered-in-khyber-pass-canal/articlecontent-pf876368-502201.html

About VELUPPILLAI 3405 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply