பவுத்தத்தை வீழ்த்திய வைதீக மதங்கள்
அண்மையில் நாம் படித்த இரண்டு செய்திகள் பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
கடந்த வெள்ளிக்கிழமை (யூன் 5, 2009) ஸ்ரீலங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சாவின் துணைவியாரும் மகனும் பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் சென்று திரும்பியுள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் என்ற ஊரில் ஒரு புதிய பவுத்த விகாரை சிங்களப் படையினால் கட்டப்பட்டுள்ளது. அதனைத் திறந்து வைக்கவே தாயும் மகனும் சென்றிருந்தார்கள். சென்றவர்கள் வெறுமனே செல்லவில்லை. பேரரசர் அசோகரின் மகள் சங்கமித்திரையின் உருவச்சிலையையும் கையோடு எடுத்துச் சென்றார்கள்.
இந்த நிகழ்ச்சியின் போது தென்னிலங்கையில் இருந்து கூட்டிச் சென்ற 7 பெண்கள் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடினார்கள்.
அசோகர் தம் ஆட்சிக் காலத்தில், தம் மகளான சங்கமித்திரையை (கிமு 272 – 232) பவுத்தமதத்தைப் பரப்புரை செய்ய தென்னாட்டிற்கும் இலங்கைக்கும் அனுப்பினார். பொதிய மலைப்பகுதியில் “சங்கமித்திரை மேடு” என்ற ஒரு பகுதி காணப்படுகிறது.
சங்கமித்திரை முதன் முதலாக இலங்கையில் கரையிறங்கிய இடம் சம்பில்துறை என மகாவம்சம் கூறுகிறது. அப்போது புத்தர் மெய்ஞானம் (பரிநிருவாணம்) அடைந்த போதி மரத்தின் கிளை ஒன்றைச் சங்கமித்திரை தம்மோடு கொண்டு வந்திருந்தார்.
மகாவம்சம் புனிதப் பெருமக்களின் மன எழுச்சிக்கும் அமைதி மற்றும் ஆனந்தத்துக்குமாக எழுதப்பட்டது என்பதை அதன் ஆசிரியர் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் தவறாது குறிப்பிடுகிறார்.
மகாவம்சம் பவுத்த சித்தாந்தங்களை விட பவுத்த தேரர்களுக்கே முக்கியத்துவம் அளித்து முன்னிலைப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எல்லா மதங்களும் அவற்றின் மதகுருமாருக்;கு முக்கியத்துவம் வழங்கினாலும் பவுத்தத்தில் அது பேரளவில் காணப்படுகிறது.
அரசன் என்ன தவறு செய்தாலும் தேரர்களின் காலில் விழுந்துவிட்டால் அவன் மன்னிக்கப்படுகிறான். மனிதன் எத்தகைய தீவினையைச் செய்தாலும் வணக்கத்துக்குரிய தேரர்களின் காலில் விழுந்தால் “நீ ஆசீர்வதிக்கப்படுவாய்!’ என்று மிக நேரடியாகவே மகாவம்சம் சொல்லிவிடுகிறது.
மாதகலில் பவுத்த விகாரையைக் கட்டியதன் மூலம் இலங்கை முழுதும் பவுத்த – சிங்களவருக்குச் சொந்தமானது என்பதை சிங்கள பேரினவாதம் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகப் பறையறைகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இரண்டாவது செய்தி இளைப்பாறிய உச்ச நீதிமன்ற நீதியரசர் சரத் நந்தன சில்வா பற்றியது. கடந்த யூன் மாதம் 6 ஆம் நாள் திருகோணமலையில் கட்டப்பட்ட சில புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார். அதன்போது சேருவில பவுத்தகோயிலில் நடந்த வைபவத்தில் ஒரு உண்மையைச் சொன்னார்.
1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை உடன்பாட்டின் கீழ் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வட – கிழக்கு மாகாணங்களைப் பிரிக்கவேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில் தான் தீர்ப்பு அளிக்கு முன் அந்தப் பகுதியில் காணப்பட்ட சிங்கள – பவுத்த பாரம்பரியத்தை கவனமாகப் படித்தததாகவும் அதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் சரத் சில்வா கூறினார்.
இந்த வழக்கை தீவிர சிங்கள – பவுத்த இனவாதக் கட்சிகளான ஜாதிக்க விமுக்தி பெரமுனையும் ஜாதிக ஹெல உறுமையையும் 2006 ஆம் ஆண்டு தொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய சரத் சில்வா திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சேருவில மற்று சோமாவதி போன்ற பவுத்தசமய இடங்களில் காணப்பட்ட விகாரைகளை மேம்பாடு செய்வதில் நெடுங்காலமாக சிங்கள தேசியவாதிகள் ஈடுபட்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் முதன்மை நீதியரசராக இருந்த போதே சரத் சில்வா தொலைக்காட்சியில் பவுத்த மதம் பற்றிப் பேசி வந்தார்.
சரத் சில்வாவின் பேச்சு ஸ்ரீலங்காவின் உச்ச நீதி மன்றம் சிங்கள – பவுத்த மயம் ஆக்கப்பட்டிருப்பதையும் அதன் தீர்ப்பு சட்டத்தின்படி அல்லாது சிங்கள – பவுத்த உணர்வோடு வழங்கப்படுகிறது என்பதை எண்பித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு கிழக்கு மாகாணம் சிங்கள – பவுத்தர்களின் இருப்பிடம்தான் என்பதை நிலைநாட்ட எழுதப்பட்ட தீர்ப்பாகும்.
இந்த இரண்டு செய்திகளும் இலங்கைத் தீவில் பவுத்தம் அங்கிங்கின்னாதபடி எங்கும் வேருன்றி இருப்பதைக் காண்பிக்கிறது.
நான் ஏற்கனவே கூறியவாறு சிங்கள தேசியத்தின் அடையாளம் பவுத்த மதமாகும். சிங்கள தேசியத்தின் பிரிக்கமுடியாத அம்சமாக பவுத்த மதம் இன்று திகழ்கிறது. சிங்கள அடையாளத்தின் வடிவம் வரலாறு சமூக உளவியல் என அனைத்துமே ஏதோ ஒருவகையில் இலங்கையின் தேரவாத பவுத்தத்தோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. இன்று பவுத்த தேரர்களும் அவர்களுடைய பீடங்களும் இல்லாத ஒரு சிங்கள சமூகத்தை நாம் கற்பனைசெய்து கூட பார்க்க முடியாது. அவ்வளவு தூரம் சிங்கள இன அடையாளமும் பவுத்த மத உணர்வும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. இந்த உண்மையைத் தமிழர்கள் மனதில் ஆழமாக பதித்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து தமிழகத்தில் பவுத்தம் வீழ்ச்சி அடைந்த வரலாற்றைப் பார்ப்போம். யுவாங் சுவாங் என்னும் சீன நாட்டுப் பவுத்தர் 7 ஆம் நூற்றாண்டில் இந்தியா முழுதும் பயணம் செய்து தனது பட்டறிவை எழுதி வைத்துள்ளார். இவர் கிபி 640 இல் காஞ்சீபுரத்திற்கு வந்தார். காஞ்சீபுரத்திலே அசோகப் பேரரசரால் கட்டப்பட்ட நூறு அடி உயரம் உள்ள பவுத்த தூபிகள் இருந்ததையும் சோழ நாட்டிலே அசோக பேரரசர் கட்டிய பவுத்த விகாரை இருந்ததையும் குறிப்பிடுகிறார். அன்றியும் பாண்டி நாட்டின் தலைநகருக்கு (மதுரைக்கு) அருகே மகேந்திர தேரர் கட்டிய ஒரு பவுத்த விகாரை இருந்ததாகவும் அதற்குக் கிழக்கே அசோகப் பேரரசரால் கட்டிய இன்னொரு தூபி இருந்ததாகவும் இவை இரண்டும் இவர் காலத்தில் இடிந்து சிதைந்து புல்பூண்டு முளைத்துக் காணப்பட்டன என்றும் யுவாங் சுவாங் எழுதி வைத்துள்ளார். (பவுத்தமும் தமிழும் – பக்கம் 27)
மேலும் பவுத்தத்தின் வீழ்ச்சிக்கான காரணிகளை யுவான் சுவாங் பின்வருமாறு தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
“பவுத்த மதத்தின் புனித நூல்களில் மூன்று தொகுதிகளை எவனொருவன் விளக்கிக் கூறுகிறானோ, அவனுக்கு சேவகம் புரிய பல பணியாளர்கள் ஒதுக்கப்பட்டார்கள். அய்ந்து தொகுதிகளை விளக்குபவனுக்கு யானை பரிசாக வழங்கப்பட்டது. ஆறுதொகுதிகளுக்கு உரை கூறுபவனுக்கு சூழ்ந்து வரும் பரிவாரம் வழங்கப்பட்டது.
சொற்போரில் வெற்றி பெற்றவனுக்கு விலை மதிப்புமிக்க ஆபரணம் வழங்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது அவனை ஊர்வலமாக திருமடம் வரை அழைத்துச் சென்றார்கள். இதற்கு மாறாக சொற்போரில் ஒருவன் தோற்றாலோ, அழுத்தமில்லாமல் வாதம் புரிந்தாலோ அவன் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தப்பட்டது. தலையில் குப்பைகள் கொட்டப்பட்டன. கழுதையின் மீது அவனை ஏற்றி மனித நடமாட்டமில்லாத இடத்தில் கொண்டு போய் விட்டார்கள். அல்லது சாக்கடையில் தள்ளினார்கள். இப்படி ஞானவானுக்கும் மூடனுக்கும் இடையில் வித்தியாசம் காட்டினார்கள்…”
தமிழ்நாட்டில் வடக்கிலிருந்து வந்து புகுந்த மதங்கள் தங்களுக்குள்ளே போட்டி போட்டுக் கொண்டு ஒன்று இன்னொன்றைப் பழித்து இழித்துச் சண்டை இட்டன.
பவுத்தம் சமணம் இரண்டும் வைதீக மதங்களின் தாக்குதலுக்கு ஆளாகி வீழ்ச்சி கண்டது.
மாணிக்கவாசகர் (கிபி 9ஆம் நூற்றாண்டு) பவுத்தத்துக்கு எதிரான வாதத்தில் இலங்கையில் இருந்து சென்ற பவுத்த தேரரை தத்துவ அடிப்படையில் வெல்ல முடியாத நிலையில் நாமகளின் துணையால் பவுத்தர்களை ஊமையாக்கினார் என திருவிளையாடல் புராணம் புகல்கிறது.
இவற்றின் பின்னரே சைவ சமயத்துக்குத் தத்துவ அடிப்படையில் சித்தாந்தம் ஒன்றை தோற்றுவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது எனலாம்.
தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய ஒரு பாடல் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பதை விளக்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பவுத்தர்களைக் குறிக்கும்.
‘வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே
அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!’
கிபி 8 ஆம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட திருமங்கை ஆழ்வார் என்ற குறுநில மன்னர் நாகப் பட்டினத்துப் பவுத்த விகாரையில் வைக்கப்பட்டிருந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு ஸ்ரீரங்கம் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்தார்.
இது போன்றே ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற சைவ நாயன்மார்களும் சமண – பவுத்த மதங்களைச் சாடிப் பாடல் பாடியுள்ளார்கள்.
அருணந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞானசித்தியார் என்ற நூலில் பரபக்கம் என்ற பகுதியில் 14 மதங்கள் கண்டிக்கப்படுகின்றன. அதில் பவுத்தம் முதல் இடம் வகிக்கிறது.
சங்கரர் (கிபி 7 ஆம் நூற்றாண்டு) எவ்வாறு பவுத்தத்தைப் புறங்காண பவுத்த தத்துவங்களைப் பயன்படுத்தியது போல் அருணந்தியும் பவுத்த அளவைகளை (தர்க்கங்களை) பயன்படுத்தி இருக்கிறார்.
கேரளத்தில் இன்று அய்யப்பன் கோயில் என்று வழங்கப்படுவது முற்காலத்தில் பவுத்த கோயிலாக இருந்தது.
சாத்தன் என்பது சாஸ்தா என்பதன் திரிபு. சாஸ்தா என்பதும் புத்தருக்கு மற்றொரு பெயர். காவு அல்லது கா என்பது தோட்டம். சாத்தான் காவு என்றால் புத்தரது தோட்டம் என்பது பொருள்.
காஞ்சிபுரத்தில் காணப்படும் பல கோயில்களில் காமாட்சி அம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி கோயில் ஆகும். இக் கோயிலில் பல பவுத்தஉருவங்கள் இருந்தன. (பவுத்தமும் தமிழும் பக்கம் 73, 55)
தமிழக வரலாற்றைத் தோண்டிப் பார்த்தால் தமிழர்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் கழுவிலேற்றியும் ஒரு மதத்தவரின் வழிபாட்டுத்தலத்தை இடித்து மற்றொருவர் கோயில் கட்டிக் கொள்வது போன்ற கேடுகள் தடையின்றி அரங்கேறியுள்ளதைக் காணலாம். இதற்கு அரசர்களும் உடந்தையாய் இருந்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் பவுத்த கோயில்கள்.
காஞ்சிபுரத்தில் காணப்படும் பல கோயில்களில் காமாட்சி அம்மன் கோயிலும் ஒன்று அந்தக் கோயில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி கோயிலாக இருந்தது என எழுதியிருந்தேன்.
காஞ்சிபுரம் தொன்றுதொட்டு கல்வியில் சிறந்து விளங்கி வந்திருக்கிறது. மேலும் இந்த நகர் தொன்றுதொட்டு சைவ, வைணவ, சமண, பவுத்த மதத்தவர்களுக்கு நிலைக்களமாக இருந்துவந்தது.
உலகம் முழுதும் பேர் பெற்றிருந்த நாலந்தாப் பல்கலைக் கழகம் போல் காஞ்சி மாநகர் பவுத்தப் பேரறிஞர்களது அறிவுக்களஞ்சியமாக விளங்கியது. உலகத்தில் இன்றுநிலவும் பவுத்தமதப் பெரும் பிரிவுகளில் ஒன்றான சென் பவுத்தம் அல்லது தியான பவுத்தம் சீனாவிலும் யப்பானிலும் பேரும் புகழும் பெற்று விளங்குகிறது. இதனை அங்குச் சென்று கிபி 6 ஆம் நூற்றாண்டில் நிலைநாட்டியவர் காஞ்சி மாநகர் போதிதருமராவர். இந்த மதத்தினைச் சீனாவில் மேலும் வளர்த்தவர் பல்லவ மன்னன் நரசிங்கவர்மன் காலத்தவரான வச்சரபோதி ஆவர். இவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லவர் காலத்தில் காஞ்சிபுரமே அவர்களது தலைநகராக விளங்கியது.
பண்டைக்காலத்தில் பவுத்தர்கள் இந்த நகரில் அதிகமாக வாழ்ந்தனர். இந்த நகரில் கிமு 3 ஆம் நூற்றாண்டில் அரசாண்ட பேரரசர் அசோகர் கட்டிய ஒரு பவுத்த தூபி இருந்ததாக கிபி 7 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்த யுவாங் சுவாங் என்னும் சீன யாத்திரிகர் எழுதியிருக்கின்றார்.
கிபி 2 ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு தொண்டைநாட்டை அரசாண்ட காலத்தில் ‘பைம்பூம்போதிப் பகவற்கு’ ஒரு சேதியம் அமைத்தான் என்று மணிமேகலையினால் அறிகின்றோம்.
இளங்கிள்ளி அரசாண்ட கிபி 2 ஆம் நூற்றாண்டிலே காஞசிபுரத்துக்குத் தென்மேற்குத் திசையில் ‘தருமத வனம்’ என்னும் ஒரு பூந்தோட்டம் இருந்ததென்றும் அதில் இளங்கிள்ளி ஒரு பவுத்தபீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலையினால் அறிகின்றோம்.
காவிரிப் பூம்பட்டினத்தில் பவுத்தப் பள்ளியின் தலைவராக இருந்த அறவண அடிகள் பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் வந்து தங்கிப் பவுத்த மதத்தைப் போதித்து வந்தார் என்பதும் மணிமேகலையினால் அறியப்படுகின்றது. இன்றைக்கும் காஞ்சிபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டென்றும் அது ‘அறவணஞ்சேரி’ என்பதன் மரூஉவென்றும் அறவண அடிகள் தங்கியிருந்த தெரு ஆதலின் அத்தெரு இப்பெயர் வாய்ந்ததென்றும் கூறுவர்.
அன்றியும் ‘புத்தேரித் தெரு’ என்னும் பெயருடன் ஒரு தெரு காஞ்சிபுரத்தில் இருக்கின்றதென்றும் அது ‘புத்தர் தெரு’ என்பதன் மரூஉவென்றும் கூறுவர்.
மாதவி மகள் மணிமேகலை பவுத்த தருமங்கேட்டுத் துறவு பூண்டபின் காஞ்சிபுரத்திலே கடைநாள் வரையில் இருந்ததாக மணிமேகலை கூறுகின்றது.
இப்பொழுதும் காஞ்சிபுரத்து அருகில் ‘மணிமேகலை அம்மன்’ என்னும் பெயருடன் ஒரு அம்மன் கோயில் இருக்கின்றதாகச் சொல்லப்படுகின்றது. பவுத்த பிக்குணியாகிய மணிமேகலையின் கோயிலாக இது இருந்திருக்கலாம்.
காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு அரசாண்ட பல்லவ அரசர்களுள் புத்தவர்மன் என்பவன் பவுத்த மதத்தைச் சேர்ந்தவன் ஆக இருத்தல் வேண்டும். என்று கூறப்படுகின்றான். இவன் பவுத்தர்களுக்காகப் பவுத்தப்பள்ளிகளைக் கட்டி அவர்களை ஆதரித்திருக்கக்கூடும்.
கிபி 7 ஆம் நூற்றாண்டில் ஹிமசீதளன் என்னும் அரசன் பவுத்தர்களை ஆதரித்தான் என்றும் அகளங்கர் என்னும் சமணர் காஞ்சிபுரத்தில் இவ்வரசன் முன்னிலையில் பவுத்தர்களுடன் சமயவாதம் செய்து இவ்வரசனை சமண சமயத்தில் சேர்த்தார் எனக் கூறப்படுகிறது. தோல்வியுற்ற பவுத்தர்கள் இலங்கைக்குத் தப்பிச் சென்றதை முன்னர் (13 ஆம் அத்தியாயம்) பார்த்தோம்.
காமாட்சி அம்மன் கோயிலில் அய்ந்தாறு புத்தர் உருவச் சிலைகள் இன்றைக்கும் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானது பெரிதாகவும் புத்தர் நிற்கும் கோலமாகவும் அக்கோயிலின் உட்பிராகாரத்திலே இருக்கின்றது.
இந்தப் பவுத்தஉருவத்திற்கு இப்போது ‘சாத்தன்’ என்று பெயர் சொல்லப்படுகின்றது. ‘காமாட்சி லீலாப் பிரபாவம்’ என்னும் நூலில் சாஸ்தா (சாத்தன்) தேவியின் முலைப்பால் உண்டு வளர்ந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது. புத்தருக்குச் சாஸ்தா என்பதும் ஒரு பெயர். காமாட்சியம்மன் கோயில் பண்டைக்கால்த்தில் பவுத்தக் கோயில் என்று சொல்லுகிறவர்களின் கொள்கையை இவை ஆதரிக்கின்றன.
காஞ்சிபுரத்திலே உள்ள இன்னொரு அம்மன் கோயிலில் புத்தர் உருவச் சிலைகள் இரண்டு காணப்படுகின்றன.
திருச்சிக்கு அருகேயுள்ள உறையூர் சோழர்களின் தலைநகரமாக இருந்தது. இந்த ஊரை வடமொழியில் ‘உரகபுரம்’ என்பர். பேர் பெற்ற பவுத்த ஆசாரியரும் பவுத்த நூல்களுக்குப் பாளிமொழியில் பல உரைகளை இயற்றியவருமான புத்ததத்ததேரர் (கிபி 4 ஆம் நூற்றாண்டு) இந்த நகரத்தில் பிறந்தார். இவ்வூரில் பவுத்தர் அதிகமாக இருந்ததாகவும் தெரிகின்றது.
சங்கமங்கை என்ற ஊரின் பெயரே இது புத்தர் வாழ்ந்த ஊர் என்பதைத் தெரிவிக்கிறது. சங்கம் என்பது, புத்தம், தர்மம், சங்கம் என்னும் மும்மணிகளில் ஒன்றாகும். சங்கமங்கை, பவுத்த தேரர்கள் வாழ்ந்ததால் இப் பெயர் தோன்றியிருக்க வேண்டும்.
பொதிகை மலை பவுத்தர்களின் புண்ணிய மலைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. அந்த மலையில் அவலோகிதீஸ்வரர் என்னும் போதி சத்வர் வீற்றிருக்கிறார் என்பதும் அவரிடம் அகத்தியர் தமிழ் கற்றார் என்பதும் பவுத்தர்களின் நம்பிக்கை. இந்த மலையை அடுத்து ‘மலைய நாடு’ என்னும் பெயருடைய நாடு இருந்தது. அந்நாட்டில் தந்திரயான பவுத்த மதத்தவராகிய வச்சிரபோதி (கிபி. 661 – 730) என்பவர் பிறந்தார். இவரே சீன நாட்டிலும், யப்பான் நாட்டிலும் சென் பவுத்த (Zen Buddhism) மதத்தைப் பரப்பியவர்.
பாளி மொழியில் பதினான்கு பவுத்த நூல்களை இயற்றிய பேர்பெற்ற பவுத்த தேரர் ஆசாரிய தர்மபாலர் இந்த ஊரில் பிறந்தவர்.
அன்றைய சேரநாடு இன்று கேரளமாக மாறிவிட்டது. அதன் தலைநகராக வஞ்சிமாநகர் இருந்தது. கிபி 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவனாகிய கோவலன் என்பவனுடைய மூதாதை, கோவலன் என்னும் பெயருள்ளவன், இந்த நகரத்தில் சிறந்ததோர் புத்தசேதியம் கட்டினான் என்று மணிமேகலை மூலம் தெரிகின்றது.
சிலப்பதிகாரத் தலைவனாகிய கோவலனது ஒன்பது தலைமுறைக்கு முற்பட்ட பாட்டனான இந்தக் கோவலன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு உற்ற நண்பன் என்பதும் பாதபங்கய மலையிலிருந்து வந்த ஒரு பவுத்த தேரரின் அறிவுரைகளைக் கேட்டு இவன் துறவு பூண்டு சேதியம் அமைத்ததோடு தன் பொருள் முழுவதையும் ஈகை செய்தான் என்றும் தெரிகின்றது. இவன் கிமு முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவன் ஆக வேண்டும்.
கிபி 2 ஆம் நூற்றாண்டில், இந்தச் சேதியமும் இன்னும் பல பவுத்தப் பள்ளிகளும் இருந்ததாகவும் கோவலன் தந்தை மாசாத்துவான் என்பவனும் மணிமேகலையும் அறவண அடிகள் என்னும் தேரரும் வஞ்சி நகருக்குச் சென்று அங்கிருந்த பவுத்த விகாரைகளைத் தொழுதனர் என மணிமேகலை கூறுகின்றது.
தக்கயாகப்பரணி உரையில் பவுத்தபுரம் என்னும் ஓர் குறிப்படுகின்றது. இந்த இடம் எது என்பது தெரியவில்லை.
சோழப் பேரரசர் இராச இராச சோழன் (கிபி 985 – 1014) காலத்தில் நாகபட்டினத்தில் (நாகையில்) ஸ்ரீசைலேந்திர சூடாமணி விகாரை என்னும் பவுத்தப்பள்ளி கட்டப்பட்டது. ஸ்ரீவிஜய என்னும் அரசையும் பர்மா நாட்டில் கடாரம் என்னும் அரசையும் ஆண்ட 1846 இல் காணப்பட்ட தோற்றம்
ஸ்ரீமால் விஜயோத்துங்கவர்மன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த விகாரையைக் கட்ட இராச இராச சோழன் அனுமதி அளித்ததான். இந்த விகாரை ஸ்ரீமாற விஜயோத்துங்கனின் தந்தையான சூடாமணிவர்மன் என்பவன் நினைவாகக் கட்டப்பட்டதாகலின் இதற்குச் ‘சூடாமணி விகாரை’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
தமிழ் அன்னைக்கு அணிகலம் பூட்டிய பவுத்த – சமண காப்பியங்கள்,
தமிழ்மொழியில் உள்ள சமய இலக்கியங்கள் போன்று அளவில் வேறுமொழிகளில் இல்லை எனத் துணிந்து சொல்லலாம். தமிழுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஹீப்புரூவும் மூன்றாவது இடத்தில் ஆங்கிலமும் இருப்பதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.
உலகில் உள்ள முக்கிய சமயங்கள் – சைவம், வைணவம், பவுத்தம், சமணம், கிறித்தவம், இஸ்லாம் – பற்றிய இலக்கியங்கள் தமிழில் பண்டுதொட்டு இருந்து வந்துள்ளன.
நாயன்மார்கள் முதலியோர் பாடிய பன்னிருதிருமுறைகளில் காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை 18,282 ஆகும். ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்களின் எண்ணிக்கை 3,776 ஆகும். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் எண்ணிக்கை 1,326 ஆகும். கம்பர் பாடிய இராமாயணத்தின் பாடல்களின் தொகை 12,000 ஆகும். நல்லாப்பிள்ளை பாடிய பாரதத்தில் 13,949 பாடல்கள் உள்ளன. இது முழுமையான பட்டியல் அல்ல.
தமிழ் இலக்கியத்தை சங்காலம் (கிமு 350 – கிபி 100) சங்கம் மருவிய காலம் (கிபி 200 – கிபி 300) பிற்கால இலக்கியம் என கால அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள்.
தொல்காப்பியம் இடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கண நூல் ஆகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் கடைச் சங்க காலத்தவை.
எட்டுத்தொகை நூல்கள் அரசர்கள், புலவர்கள் ஆகியோரால் தொகுக்கப்பட்ட நூல்கள். இவற்றில் அய்ந்து அகப்பொருள் பற்றியவை. இரண்டு புறப்பொருள் பற்றியவை. பரிபாடல் அகவும் புறமும் பற்றியது.
பத்துப் பாட்டுள் அய்ந்து ஆற்றுப்படை நூல்கள், மூன்று அகப்பொருள் பற்றியவை. மதுரைக் காஞ்சி புறப்பொருள் பற்றியது. நெடுநல்வாடையில் அகக் கூறுகள் மிகுந்து காணப்பட்டாலும் அதில் இலச்சினை குறிக்கப்படுவதால் அதனைப் புறப்பொருள் எனலாம்.
சங்கப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை 2381 ஆகும். பாடிய புலவர்களில் பெயர் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 473. பெயர் தெரியாதவர்களின் தொகை 102. பதினாறு புலவர்கள் 1107 பாடல்களைப் பாடியுள்ளனர்.
சங்ககால இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் இரண்டும் நீங்கலாக எஞ்சியவை சமயசார்பு அற்றவை ஆகும்.
பதிணெண்கணக்கு நூல்கள், அய்ம்பெரும் காப்பியங்கள், அய்ஞ்சிறு காப்பியங்கள் சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் ஆகும். திருக்குறள் பதிணெண் கணக்கு நூலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அது சங்கம் மருவிய காலத்துக்கு முந்தியது. சங்கம் மருவிய காலத்தில் எழுந்த அய்ம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. பதிணெண்கணக்கு நூல்கள் நீதி இலக்கியம் எனவும் அழைக்கப்படுகின்றது.
என்றும் சீரிளமைத் திறத்தோடு வாழும் தமிழ்நங்கை என்னும் பெருமாட்டிக்குச் சிலம்பு, மேகலை, வளை, குண்டலம், மணி என்னும் விலைபெற்ற நகைகளை அணிவித்து, என்றென்றும் அவள் சீரோடும் சிறப்போடும் அழகோடும் புகழோடும் விளங்கச் செய்தவர் பவுத்த சமண மதப் புலவர்களே ஆவர். அஃதாவது, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சிந்தாமணி என்னும் அய்ம்பெருங்காப்பியங்களை இயற்றித் தமிழ் அன்னையை அழகுறச் செய்தவர்கள் பவுத்த – சமண புலவர்களே.
பவுத்தர்களும் சமணர்களும் தங்கள் மதக் கொள்கைகளை உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் அறிய வேண்டும் என்னும் பரந்த மனப்பான்மை உடையவர்கள். ஆகையால், அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய்மொழிகளில் தங்கள் சமயக் கோட்பாடுகளை எழுதியும் பேசியும் வந்தார்கள்.
தமிழர்களின் சமயமாக வருணிக்கப்படும் சைவம் கிபி 6 ஆம் நூற்றாண்டில்தான் தமிழ் நாட்டில் நிறுவனப் படுத்தப் பட்டது. பக்தி இயக்க காலத்தில் அது பவுத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்தி வளர்ச்சி அடைந்தது.
பெரும்பான்மைத் தமிழர்கள் அதற்குப் பின்னர்தான் சைவசமயத்தைத் தழுவிக் கொண்டனர். ஆசிவகத்திற்குப் பின்னும் சைவத்திற்கு முன்னும் இருந்த இடைப்பட்ட காலத்தில் பெரும்பான்மை தமிழர்களால் தழுவப்பட்டு மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்த இரு பெரும் சமயங்கள்தாம் பவுத்தமும் சமணமும்.
பவுத்தத்தையும் சமணத்தையும் பின்னாளில் வந்தவர்கள் மதமாக வரித்துக் கொண்டாலும் உண்மையில் அவை மதங்கள் அல்ல. பழைய பவுத்த – சமண மதங்கள் கடவுளை அடிப்படையாகக் கொள்ளாமல் அன்பை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். வன்முறைக்கு எதிரானவை ஆகும். பிற்காலத்தில்தான் பவுத்தம் புத்தரையும் சமணம் முதல் தீர்த்ததங்கரரையும் (அருகன்) கடவுளாக வழிபடத் தொடங்கின.
திருவள்ளுவர் குறிப்பிடும் ஆதிபகவன் என்பவர் சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் ஆவார். ரிஷபநாதர் என்பது அவருடைய இயற்பெயர். இவர்தான் சமண மதத்தை முதன் முதலாகத் தோற்றுவித்தவர். ஆகையினாலே, சமணர்கள் இவரை ஆதிநாதர் என்றும் ஆதிபகவன் என்றும் அழைக்கின்றனர்.
பொறிவாயில் அய்ந்தவித்தான் என்று திருக்குறளில் கூறப்படுகிறவர் சமண சமயத்து அருகக் கடவுளாவர். அனாதியான ஒரு பரம்பொருள், உலகத்தையும் உயிர்களையும் படைத்த ஒரு மூலக் கடவுள் உண்டு என்பது பவுத்த – சமண சமயக் கொள்கை அன்று.
அய்ம்பொறியும் அய்ம்புலனும் உடைய மானிடனாகப் பிறந்து மனிதனாக வளர்ந்து பின்னர் தவத்தினாலே அய்ம்பொறிவாயில்களை அவித்துப் பிறவித் துன்பத்தை நீக்கி வீடுபேறு பெற்ற தீர்த்தங்கரர் அருகக் கடவுள் எனப்படுவார். இவர்தான் பொறிவாயில் அய்ந்தை அவித்துக் கடவுள் நிலையை அடைந்தவர். இவரைத்தான் திருக்குறள் ஆதிபகவன் என்கிறது.
மற்ற சமயங்களில் கூறப்படுகின்ற தொடக்கமும் முடிவும் இல்லாத – பொறிவாயில்கள் இல்லாத – ஒரு பரம்பொருள் கோட்பாடோடு சமண பவுத்த சமயங்களுக்கு உடன்பாடு இல்லை.
கிமு 3 ஆம் நூற்றாண்டில் பவுத்தமும் சமணமும் தமிழ் மக்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவியன. மணிமேகலை, குண்டலகேசி போன்றவைகள் தமிழில் தோன்றிய பவுத்த இலக்கியங்கள். தமிழ்க் காப்பியமான மணிகேலைக்கு நிகரான ஒரு பவுத்த நெறிக் காப்பியம் வேறு எந்த மொழிகளிலும் இல்லை எனலாம். பவுத்தத்தைக் காட்டிலும் சமணம் தமிழோடு மிக அதிகமாக தொடர்புற்றிருந்த ஒன்றாகக் கருதப் படுகிறது.
தமிழர்கள் மத்தியில் சைவம் எழுச்சிபெறத் தொடங்கிய காலம் 6 ஆம் நூற்றாண்டாகும். அதாவது அதன் காலம் சுமார் 1400 ஆண்டுகள் ஆகும்.
ஆனால் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் தனிப்பெரும் சமயமாக பவுத்தமும் சமணமும் விளங்கியிருக்கின்றன. தமிழ் மொழிக்குப் புதுக் குருதி பாய்ச்சியவர்கள் பவுத்த – சமணத் துறவிகளே. தமிழ் மொழிக்கு இலக்கணங்களை வகுத்தவர்களும் அவர்கள்தாம். இன்று தமிழர்களால் போற்றப்படும் பெருவாரியான நூல்களைப் படைத்தவர்களும் அவர்களே.
அய்ம்பெருங்காப்பியங்கள், அய்ஞ்சிறுங்காப்பியங்கள், பதிணெண் கீழ்க்கணக்கு நூல்கள் போன்ற தமிழ் இலக்கிய கருவூலங்களில் பவுத்தர் – சமணர் ஆகியோரின் பங்குதான் மிக அதிகமாக உள்ளது.
தமிழரின் தேசியக் காப்பியம் எனப் பல தமிழறிஞர்களால் போற்றப்படும் சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் ஒரு சமணத் துறவி ஆவர். மணிமேகலையை யாத்தவர் சாத்தனார் என்ற பவுத்தர். சீவக சிந்தாமணியை எழுதிய திருத்தக்க தேவர் ஒரு சமணத் துறவி. தொல்காப்பியத்தைத் தழுவி நன்னூல் எனும் தமிழ் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் ஒரு சமணர். நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி எனத் திருக்குறளோடு இணைத்துப் போற்றப் படும் நாலடியாரை எழுதியவர்கள் சமணத்துறவிகளே.
அய்ம்பெருங் காப்பியங்களில் மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் மூன்றையும் பவுத்தரும், சிலப்பதிகாரம், சிந்தாமணி என்னும் இரண்டையும் சமணரும் இயற்றினர். அவர்கள் தமிழ் அன்னைக்கு அணிவித்த வேறு அணிகலன்களும் உண்டு.
முத்தமிழ் நூலென சிறப்பிக்கப்படும் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோ அடிகள் சைவம், வைணவம், பவுத்தம், சமணம் ஆகிய நான்கு சமயங்கள் பற்றிப் போற்றிப் பாடியிருக்கிறார்.
மணிமேகலையை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். இவரும் சங்க காலத்துச் சீத்தலைச் சாத்தனாரும் ஒருவரல்ல. இருவரும் வெவ்வேறு புலவர்கள். மணிமேகலை முழுக்க முழுக்க பவுத்தமத காப்பியமாகும். பாளிமொழியில் எழுதப்பட்ட பவுத்த தத்துவங்களைச் சாத்தனார் அழகான தமிழில் மொழியெர்த்து எளிமையாக எழுதியுள்ளார்.
சீவக சிந்தாமணி பதின்மூன்று இலம்பகங்களைக் கொண்டது. இதன் கதைத் தலைவன் சீவகன் ஒரு சமணன் ஆவான். சமண தத்துவத்தைத் திருத்தக்க தேவர் கலையழகோடு தமிழ் மரபினை – ஆநிரை மீட்டல், போர்முறை, திருமண நிகழ்வுகள் யானை ஏற்றம் குதி;ரை ஏற்றம், பந்தாடல் – ஒட்டி எழுதியுள்ளார். தமிழர் வாழ்க்கையின் அழகும் வளமும் நலமும் நீர்மையும் ஒருங்கே திரண்டு தன்னேரில்லாத் தனிப்பெரும் காப்பியமாகச் சீவக சிந்தாமணி ஒளிர்கின்றது.
கண்ணகியின் காற்சிலம்பு பற்றி சிலப்பதிகாரம் பெயர் பெற்றது. சீவக சிந்தாமணி காப்பியத் தலைவனின் பெயரால் வழங்கப் படுகிறது. மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி முதலானவை அவற்றில் வரும் தலைவிகளால் பெயர் பெற்றது எனலாம்.
கோவலனுக்கும் கணிக குலத்து மாதவிக்கும் பிறந்த மணிமேகலை அறத்தின் உருவாகத் தவத்தின் வடிவாகக் காட்டப் படுகிறாள்.
கண்ணகி தன் கணவன் பழி சுமத்தப்பட்டு அநியாயமாகக் கொலையுண்டான் என்றவுடன் சினம் கொண்டு எழுந்தாள். பட்டாங்கு யானும் ஒரு பத்தினியே ஆம் ஆகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையை என வஞ்சினம் பூண்டாள். ஆனால் குண்டலகேசியோ கொண்ட கொழுநனை சூழ்நிலை காரணமாகக் கொன்று கொலையாளி ஆனாள். “தன்னைக் கொல்ல வருபவனை முந்திக்கொண்டு கொல்வதில் தவறில்லை” என்ற கருத்தை இக் காப்பியம் எடுத்து இயம்புகிறது.
எண்ணிலாப் பாடல்கள் கொண்ட குண்டலகேசி,
அய்ம்பெருங் காப்பியங்களில் இன்று முழுமையாகக் கிடைப்பவை சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை ஆகியவையே!
வளையாபதி, குண்டலகேசி ஆகிய இரண்டின் கதை நிகழ்ச்சிகளை சில உரையாசிரியரின் மேற்கோள்கள் மூலமும் பல தமிழறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளின் மூலமும் கர்ண பரம்பரையாக நிலவி வரும் இலக்கியச் சான்றுகள் மூலமும் அறிய முடிகிறது.
குண்டலகேசி ஒரு பவுத்த காப்பியம். இதனை எழுதியவர் நாகுதத்தனார் என்ற புலவர். இது நாடக பாங்குடன் நயமுடன் எழுதப்பட்டுள்ளது.
குண்டலகேசியில் இருந்து பத்தொன்பது பாடல்களே இன்று கிடைத்துள்ளன. தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீர சோழிய உரை, நீலகேசி, சிவஞானசித்தியாருக்கு ஞானப்பிரகாசர் எழுதிய உரை ஆகியவற்றுள் மேற்கண்ட 19 பாடல்கள் காணப்படுகின்றன.
நீலகேசிக்குத் திவாகரவாமன முனிவர் எழுதிய உரையில் குண்டல கேசியின் 99 பாடல்களின் முதற் குறிப்புகள் மட்டுமே காணப்படுகின்றன.
குண்டலகேசிக்கு மறுப்பாக எழுதப்பட்ட நீலகேசி என்ற சமண சமயத்தை போற்றும் சிறு காப்பியம் மூலமே குண்டலகேசி எண்ணிலாப் பாடல்களை கொண்ட பெருங்காப்பியம் என்பதை நாம் அறியக் கூடுவதாக இருக்கின்றது.
குண்டலகேசி முழுமையாகக் கிடைத்திருந்தால் இக்காப்பிய காலத்திய சமுதாய நிலை, சமய நிலை, கல்வி நிலை, சமயங்களின் காழ்ப்புணர்வுகள் போன்றவற்றை நாம் தெளிவாக அறிந்திருக்கலாம்.
குண்டலகேசியில் ஊடலால் வந்த இடர் சிலம்பின் கானல்வரியை நினைவூட்டுகிறது. அதுபோல் காளனும் குண்டலகேசியும் முதன் முதலில் சந்தித்தபோது இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று உண்ண அவர்கள் காதல் வயப்பட்டனர் எனக் குண்டலகேசி சித்திரிப்பது கம்பன் காவியத்தில் சீதையும் இராமனும் முதல்முறை பார்த்துக்கொண்டதை “கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்பதை நினைவூட்டுகிறது.
பூம்புகார் நகரத்தில் செல்வம் மிக்க வணிகனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு பத்திரை எனப் பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். பத்திரையின் குழந்தைப் பருவத்திலேயே அதன் தாய் இறந்து விட்டாள். எனவே தனது ஒரே மகளான பத்திரையைத் தந்தையாகிய வணிகன் சீரும் சிறப்புமாக வளர்த்து வருகிறான்.
குண்டலம் என்ற சொல்லுக்குச் சுருள் என்பது பொருளாகும். கேசி எனும் சொல் கூந்தலைக் குறிக்கும். பத்திரை சுருண்ட கூந்தலைக் கொண்டிருந்ததால் குண்டலகேசி என்று அழைக்கப் பட்டாள்.
குண்டலகேசி தன் கன்னிப் பருவத்தில் ஒருநாள் தனது இல்லத்தின் மாடியில் தோழிகளுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். பந்தானது அவள் கையிலிருந்து தவறிப் போய் வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபனின் தோளின் மீது பட்டுக் கீழே விழுந்தது.
மாடியில் இருந்து குண்டலகேசி கீழே குனிந்து எட்டிப் பார்க்கவும், பந்து தோளில் பட்ட வாலிபன் நிமிர்ந்து மேலே பார்க்கவும் சரியாக இருந்தது. இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று உண்ண அவர்கள் காதல் வயப்பட்டனர்.
குண்டலகேசி அந்த இளைஞன் யாரென விசாரிக்கத் தொடங்கினாள். அவன் அந்நாட்டு அமைச்சர் கருணைவேல் என்பவரின் மகனாவான். அவனது பெயர் காளன். மேலும் கொலை, களவு, கணிகையர் இன்பம் போன்ற பலவற்றிலும் ஈடுபட்டு வருபவன் என்பதையும் அவள் விசாரித்து அறிந்தாள். அவன் தற்பொழுது காவலர்களால் பிடிக்கப் பட்டு விட்டான். அரசர் அவனுக்கு மரண தண்டனை விதித்தார். திறமையும் கடமை உணர்வும் நேர்மை எண்ணமும் கொண்ட அமைச்சர் கருணைவேலர் தன் மகன் என்றும் பாராமல் அத்தண்டனையை முன்மொழிந்தது குறிப்படத்தக்கதாகும்.
அந்நாள்களில் பூம்புகாரில் இந்திர விழா கொண்டாட்டம் தொடங்கியிருந்தது. அம்மங்கல விழாக்காலத்தில் கொலைத் தண்டனைகள் நிறைவேற்றுவதை நிறுத்தி வைப்பது வழக்கம். இதை அறிந்த குண்டலகேசி காளனை விடுவித்து மணம் செய்து கொள்ள விரும்பினாள்.
மணந்தால் காளனையே மணப்பது என்ற தன் உறுதியைத் தன் தந்தையிடம் தெரிவித்தாள். தனது ஒரே மகளின் விருப்பத்தை நிறைவேற்ற அவள் தந்தை முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால் அமைச்சர் கருணைவேலரோ தண்டனையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார். உடனே குண்டலகேசியின் தந்தை அமைச்சரிடம் ‘நீர் காளனைச் சிறுவயதில் சரிவர வளர்க்கவில்லை. பெற்றோர் கடமையிலிருந்து தவறியது உம் குற்றம்” என்று சுட்டிக் காட்டினார்.
அப்படியும் அமைச்சர் மனம் மாறவில்லை. எனவே குண்டலகேசி தனது தந்தையிடம் முறையிட்டாள். அரசனும் அவையும் அதையிட்டு ஆலோசனை செய்தனர். இறுதியில் காளனின் எடைக்கு எடை பொன்னும், எண்பத்தோர் யானைகளும் அரசுக்கு வழங்கினால் காளன் விடுவிக்கப்படுவான் என அறிவிக்கப்பட்டது.
காளன் விடுதலையானான். குண்டலகேசி அவனை மணம் புரிந்தாள். இருவரும் இல்லறத்தில் இன்பமாக வாழத் தொடங்கினார்கள்.
குண்டலகேசியின் வாழ்வில் விதி விளையாடத் தொடங்கியது. காவிரியில் முதல் வெள்ளம் வர மக்கள் புதுப் புனலாடக் கிளம்பினர். குண்டலகேசியும் செல்ல விரும்பி ஒப்பனை செய்து கொள்ளத் தொடங்கினள். காளன் அருகிருந்து அவளைப் பார்வையில் பருகிக் கொண்டிருந்தான்.
அப்போது காளன் விளையாட்டிற்காக குண்டலகேசியின் குங்குமச் சிமிழை எடுத்து மறைத்து வைத்தான். அதைக் காணாத குண்டலகேசி பதறிப் போய் அங்கும் இங்கும் தேடினாள்.
காளன் சிரித்துக் கொண்டே சிமிழை எடுத்துத் தந்தான். அதை வாங்கிய குண்டலகேசியும் விளையாட்டாக ‘நீர் கள்வர் அல்லவா? உம் மாயக்களவெல்லாம் நான் அறிவேன்”; என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.
இதைக் கேட்ட காளன் திடுக்கிட்டான். தனது முந்தைய வாழ்வை அவள் இடித்துக் காட்டுவதுபோல் உணர்ந்தான்; பதறினான்; சினம் கொண்டான்.
‘ஆமாம்; நான் கள்வன் தான்; அப்படியானால் நீ கள்வனின் காதலியல்லவா?” என்று உறுமலுடன் கூறினான். விளையாட்டு வினையானதே என்று குண்டலகேசி மனம் வருந்தினாள்.
இருவரும் சென்று புனலாடி வந்தனர். ஆனால் காளன் அவள் சொற்களை மறக்கவே இல்லை. அவை வடுப்போல் ஆழமாகப் பதிந்து விட்டன. தனக்கு அவள் மேல் இருந்த வெறுப்பை வெளிக்காட்டாமல் அவளை விரும்புவது போல் பாடியும் கூடியும் நடித்தான். அவளும் அவனை நம்பி நடந்தாள்.
ஒருநாள் காளன் குண்டலகேசியிடம் ‘நான் விடுதலையானால் மலை உச்சியில் உள்ள தெய்வத்தை வந்து வழிபடுவதாக வேண்டிக்கொண்டேன். நாளையே நாம் செல்வோம்” என்று கூறினான்.
அது கேட்ட குண்டலகேசி மனம் மகிழ்ந்தாள். மலைவளம் காணவும் தெய்வத்தை வழிபடவும் கணவனுடன் புறப்பட்டாள். அவனும் அவளை ‘வாராய்; நீ வாராய்” என்று மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான்.
குண்டலகேசி உச்சியை அடைந்ததும் ‘வழிபட வேண்டிய தெய்வம் எங்கே உள்ளது” என்று கேட்டாள். அவனோ கபடமாகச் சிரித்துக் கொண்டே ‘நான்தான் அந்தத் தெய்வம்! என்னை நீ கள்வன் என்று ஏளனம் செய்ய உனக்கு எவ்வளவு துணிவு இருக்க வேண்டும்” என்று கேட்டான்.
‘என்னை அறியாமல் ஊடலின்போது நான் விளையாட்டாகக் கூறியதை இன்னமுமா மறக்கவிலை?” என்று அவள் கேட்டாள்.
‘இல்லை; அவை என் உள்ளத்தைப் புண்ணாக்கி விட்டன. அதற்கு மருந்து நீ இறப்பதுதான். உன்னை இந்த மலை உச்சியிலிருந்து உருட்டித் தள்ளத்தான் இங்கு அழைத்து வந்தேன். நீ கடைசியாக உன் வழிபடு தெய்வத்தை மனத்தில் வணங்கிக் கொள்” என்று காளன் சீறினான்.
குண்டலகேசி மனம் உடைந்தாள். ‘எனக்கு நீங்களே தெய்வம். உங்களை மும்முறை வலம் வந்து நானே இம்மலையிலிருந்து விழுந்து உயிர் துறக்கிறேன்” என்று வேண்டினாள். காளனும் கொலைவெறியில் மதிமயங்கி அதற்கு உடன்பட்டான்.
காளனை நடுவில் நிறுத்தி குண்டலகேசி வலம் வரத் தொடங்கினாள். அவளின் பெண்மைக் குணம் மறைந்தது. மூன்றாம் முறை வலம் வரும்போது அவள் கைகள் காளனின் விலாப்புறத்தை அழுத்தித் தள்ளின.
இதனைச் சற்றும் எதிர்பாராத காளன் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து உடல் சிதறி இறந்தான். எட்டிப் பார்த்த குண்டலகேசி இப்போது அச்சம் கொண்டாள். கணவனைக் கொன்ற தானும் ஒரு பெண்ணா என்று மனம் வருந்தினாள். தானும் உயிர் விடுவது என்று முடிவு செய்தாள்.
மலை உச்சியிலிருந்து விழ இருந்த அவளை ஒரு வேடுவப் பெண் தடுத்தி நிறுத்தினாள். குண்டலகேசிக்கு வழிகாட்டுமுகத்தான் அப்பெண்ணும் அவள் கணவனும் அவளைத் ‘துறவோர் பள்ளியில்’ சேர்த்தனர். குண்டலகேசி மனம் மாறினாள். அருக்கச்சந்திரரிடம் உபதேசம் பெற்று பவுத்தபிக்குணியானாள். தலைமுடி களைந்தாள். ஆயினும் விரைவில் சுருள் முடி வளரத் தொடங்கியது. எனவே பத்திரை என்ற பெயர் மாறிக் குண்டலகேசி என்று அவள் அழைக்கப் பட்டாள். பல சமயவாதிகளுடன் பட்டிமன்றம் ஏறி வாதிட்டுப் பவுத்த மதத்தின் பெருமையை நிலைநாட்டினாள்.
குண்டலகேசியில் காணப்படும் ஒரு பாடல் யாக்கை நிலையாமை பற்றிக் காவியச் சிறப்போடும் சொல் நயத்தோடும் எடுத்து விளக்குகிறது. மனிதர்கள் ஏன் தமக்காக அழுவதில்லை?
பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்பும் இன்னே
மேல்வரும் மூப்பும் ஆகி
நாளுநாள் சாகின் றோமால்
நமக்குநாம் அழாதது என்னோ?
தமிழகத்தில் பவுத்தம் (18)
மணிமேகலைக் காப்பியம்
பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்பும் இன்னே
மேல்வரும் மூப்பும் ஆகி
நாளுநாள் சாகின் றோமால்
நமக்குநாம் அழாதது என்னோ?
பொருள் – கருவில் குழந்தையாக இருந்த நிலை இறந்த போதும்
பிறந்து பாலகனாக இருந்த நிலை இறந்த போதும்
மிடுக்குடைய வாலிபனாக இருந்த நிலை இறந்த போதும்
இளமை இன்பம் துய்க்கும் செழுமை வளர்ந்திருந்த நிலை இறந்த போதும்
எல்லா இயல்பும் மாறி இளைப்பும் வாதமும் தோன்றி மூப்பு நிலைக்கு ஆளாகி
ஒவ்வொரு நாளும் சாகாமல் சாகின்ற நாம்
நமக்காக ஒரு நாளேனும் அழாதது ஏனோ?
ஒரே பார்வையில் அய்ம்பெரும் காப்பியங்கள் பற்றிய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
|
சிலப்பதிகாரம் |
மணிமேகலை |
சீவக சிந்தாமணி |
வளையாபதி |
குண்டலகேசி |
|
|
ஆசிரியர் |
இளங்கோவடிகள் |
சீத்தலைச் சாத்தனார் |
திருத்தக்க தேவர் |
தெரியவில்லை |
நாதகத்தனர் |
|
சமயம்
|
சமணம் |
பெளத்தம் |
சமணம் |
சமணம் |
பெளத்தம்; |
|
காப்பியத் தலைவன் தலைவி |
கோவலன் கண்ணகி |
மணிமேகலை |
சீவகன் எட்டு மனைவியர் |
நவகோடி நாராயணன் |
பத்திரை என்னும் குண்டலகேசி |
|
பாடல்கள் |
காண்டங்கள் – 3 காதைகள் – 30 |
காதைகள் 30 |
13 இலம்பகங்கள்; |
72 பாடல்களே கிடைத்துள்ளன |
19 பாடல்களே கிடைத்துள்ளன |
|
பாவகை
|
அகவல் யாப்பு |
அகவல் யாப்பு |
விருத்தப்பா |
விருத்தப்பா |
விருத்தப்பா |
|
பாத்திரங்கள் (பிற) |
மாதவி கவுந்திஅடிகள் மாதரி பாண்டியன் நெடுஞ்செழியன் |
அறவண அடிகள் மாதவி சுமதி தீவதிலகை உதயகுமாரன் |
சச்சந்தன் விசயை நந்தட்டன் கட்டியங்காரன், சீவகன் மணந்த எண்மர் |
தெரியவில்லை |
காளன் |
|
நூற்சிறப்பு |
1. முதற்காப்பியம் |
1.உணவிடும் உன்னதப்
|
1. மணநூல் |
தமிழன்னையின் |
1. கதைப்
|
அய்ம்பெருங்காப்பியங்கள் போன்றே தமிழில் அய்ஞ்சிறுகாப்பியங்கள் இருக்கின்றன. அவையாவன உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகியனவாம். இவை அய்ந்தையும் படைத்தவர்கள் சமணர்களே.
மேலும் ஏலாதி, பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம், பெருங்கதை ஆகியன சமணர் படைத்த தமிழ் இலக்கியங்களே.
வைதீக மதமோ பொது மக்கள் அறியாத சமற்கிருத மொழியில் எழுதப்பட்ட வேதங்களை பிராமணரல்லாத மற்ற வருணத்தவர்கள் படிக்கவும் கூடாது, பிறர் படிப்பதைக் காதால் கேட்கவும் கூடாது, அப்படிச் செய்வராயின் அவரைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்று சட்டமும் எழுதிவைத்துள்ளது.
மணிமேகலை காப்பியத்தின் கதைச் சுருக்கம் பின்வருமாறு.
சோழ வளநாட்டின் புகழ்பூத்த பெரும் பதியான காவரிபூம்பட்டினத்தின் பழம் பெயர் “சம்பாபதி” என்பதாம். இந்தப் பெயர் தாங்கிய ஒரு பெண் தெய்வம், காவரிப்பூம்பட்டினத்தைக் காவல் காத்து, பகையரசர்களிடமிருந்து மட்டுமில்லாது இயற்கையில் எழுகின்ற நோய் நொடிகளிலிருந்தும் இந்தப் பதியிலுள்ள மக்களைக் காத்து வந்ததால் இதற்குச் ‘சம்பாபதி’ என்னும் பெயர் ஏற்பட்டது.
மணிமேகலைக் காபியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி இருவரின் மகளாவாள். அவள் பிறந்த போது ஆயிரம் கணிகையர் கூடி மகிழ அக்குழந்தைக்குக் கோவலன் தன் குலதெய்வம் மணிமேகலா தெய்வத்தின் பெயரைச் சூட்டினான். அழகும் இளமையும் உடைய மணிமேகலை இந்திர விழாவில் ஆடவருவாள் என்று பூம்புகார் மக்கள் எதிர்பார்த்து நின்றனர்.
அப்போது மதுரையில் பாண்டியன் மனைவியின் கால் சிலம்பைத் திருடியதாக ஒரு பொற்கொல்லனால் குற்றம் சாட்டப்பட்டு பாண்டிய மன்னனால் கொலைத் தண்டனை பெற்று இறந்து படுகிறான். இச் செய்தி மாதவியை எட்டுகிறது. அவள் ஆறாத் துயரில் மூழ்கிறாள். நிலைகுலைந்த மாதவி துறவுக் கோலம் பூண்டு அறவண அடிகளிடம் அறவுரை கேட்டு பவுத்த மதத்தை மேற்கொள்கிறாள்.
கோவலன் கொலையுண்ட செய்தி மணிமேகலையையும் எட்டுகிறது. அதுகாலை இந்திராவிழாவுக்குச் செல்ல மலர்மாலை கட்டுவதற்குச் சிறந்த பூக்களைக் கொய்யும் பொருட்டு மணிமேகலை தனது தோழி சுதமதியுடன் மலர்த் தோட்டத்திற்குச் செல்கின்றாள்.
அச்சமயம் உதயகுமரன் என்ற சோழ இளவரசன் மணிமேகலையின் அழகில் மயங்கி அவளைப் பின்தொடர்கிறான். மணிமேகலை பளிக்கறையினுள்ளே மறைந்து கொள்கிறாள். உதயகுமரன் துயரத்தோடு அங்கிருந்து அகன்றான்.
அப்போது இந்திரவிழாவைக் காண வந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையை உதயகுமரனிடமிருந்து காப்பாற்றுவதற்காக அவளைத் தூக்கிச் சென்று மணிபல்லவத் தீவில் விட்டு விடுகிறது. அத் தீவில் காணப்பட்ட ஒரு மாணிக்கப் பீடிகை மூலம் மணிமேகலை தன் பழம் பிறப்பைப் பற்றிக் கேட்டறிகிறாள். அப்போது கடலின் கடவுளான மணிமேகலா தெய்வம் தோன்றி “நின் மனக் கவலையை ஒழிப்பாயாக” என்று கூறி மந்திர உபதேசத்தினை அருளிச் செய்து மறைகிறது. அப்போது தீவதிலகை என்னும் தெய்வமானது தோன்றி அமுதசுரபி என்னும் மாட்சிமை பொருந்திய அமுதசுரபி பாத்திரத்தை மணிமேகலைக்கு அளித்தது.
அமுதசுரபி என்பது அள்ள அள்ளக் குறையாமல் சோறு வந்து கொண்டே இருக்கும் அதிசயமான பாத்திரம் ஆகும். மணிமேகலை அந்தப் பாத்திரத்துடன் பூம்புகார் சென்று ஏழை எளியோருக்கு அறம் செய்கிறாள்.
இதையெல்லாம் கேட்டறிந்த உதயகுமரன் மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். அவன் தரும் தொல்லைகளிலிருந்து தப்ப அவள் காயசண்டிகை எனும் பெண்வடிவினை எடுக்கிறாள்.
இந்நிலையில் காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பான் தன் மனைவியைத் தேடி வருகிறான். அவன் உதயகுமரன் மேல் அய்யம் கொண்டு அவனை வாளால் வெட்டிக் கொலை செய்து விடுகிறான்.
இளவரசனைக் கொன்ற பழி மணிமேகலை மீது விழுகிறது. காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். மகனைப் பறிகொடுத்த உதயகுமரனின் தாய் இராசமாதேவி மணிமேகலைக்குக் கொடுமைகள் பல செய்கிறாள்.
சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்கிய மணிமேகலை தனது வரத்தின் வலிமையால் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறாள். அவள் இராசமாதேவிக்கு நல்ல அறநெறிகள் இவை என உரைத்து அவளைத் திருத்தி அறநெறியைப் பின்பற்றச் செய்கிறாள். மணிமேகலை அவ்விடம் விட்டு ஆபுத்திரன் நாட்டை அடைகிறாள். பின்னர் வஞ்சி நகரத்திற்குச் சென்று அங்கு இருந்த சமயவாதிகளிடம் அவரவர் கொள்கைகளை கேட்டறிகிறாள். அதன் பிறகு அங்கிருந்து தனது தாயாரோடு அறவண அடிகளைத் தேடி காஞ்சிபுரம் சென்றடடைந்தனர். அறவண அடிகளின் திருவடிகளை வணங்கி தவத்திறனைப் பூண்டவளாகி அவரிடம் தருமநெறிகளை கேட்டறிகிறாள். அறவண அடிகள் மணிமேகலைக்கு ஆபுத்திரனின் வரலாற்றை எடுத்துரைக்கிறார்.
தமிழகத்தில் பவுத்தம்,
கிபி இரண்டாம் நூற்றாண்டுத் தமிழகம்
மணிமேகலை வஞ்சி மாநகரில் தாய் கண்ணகியும் கோவலனும் படிமங்களாக இருந்த கோயிலுக்குச் சென்று வணங்கினாள். “மதுரையை எரித்த காரணம் கூறி அருள வேண்டும்” எனப் பத்தினித் தெய்வத்தை வேண்ட கண்ணகி தெய்வமும் “பழம்பிறப்பின் தீவினை ஒருவரை வந்து அடைந்தே தீரும்” எனச் சொல்லி மதுரை எரித்ததற்கும் கோவலன் கொலையுண்டதற்கும் ஆன காரணங்களை” பத்தினித் தெய்வம் எடுத்துரைத்தது. வஞ்சி மாநகர் சேரநாட்டின் தலைநகர் ஆகும்.
மேலும் பத்தினித் தெய்வம் மணிமேகலையிடம் “நீ இந் நகரில் உள்ள பல சமயத்தவரும் கூறும் கொள்கைகளைக் கேட்டு அவை உனக்கு உண்மையென்று தோன்றாமையால் பவுத்த சமயத்தைப் பற்றி ஒழுகுவாயாக!” எனச் சொல்லிற்று.
மணிமேகலை கண்ணகியை வணங்கி மந்திரம் ஓதி ஒரு முனிவன் உருக்கொண்டு வஞ்சி நகருள் புகுந்தாள்.
வஞ்சி நகரில் முதலில் வைதிக நெறியைச் சார்ந்த அளவை (தருக்க) வாதியையும் பின்னர் முறையே சைவவாதி, வைணவவாதி, ஆசீவவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைவேடிகவாதி ஆகியோரையும் சார்ந்து அச்சமயங்களின் கொள்கைகள் பற்றி வினாவி அறிந்து கொண்டாள்.
(மேலே கூறப்பட்ட சமயங்கள் தமிழகத்தில் கிபி 2 ஆம் நாற்றாண்டில் காணப்பட்ட நெறிகளாகும். அவற்றைப் பற்றி விரிவாக அறிய விரும்புவோர் சாத்தனாரின் மணிமேகலை, திரு. ந.சி.கந்தையா எழுதிய “தமிழர் சமயம் எது?” (அமிழ்தம் பதிப்பகம் – 2003) என்ற நூல்களைப் படிக்கவும்.)
வஞ்சி நகர் பல மதில்களைக் கொண்டது. மதில்களின் உட்புறத்திலும் வெளியே புறஞ்சேரியுpலும் நால்வகைப் படையினரும் திரண்டு இருந்தனர். மணிமேகலை புறநகரைக் கடந்து அகழியை வந்தடைந்தாள்.
தெருக்களில் பலவகையான மீன்களை விற்கும் பரதவர், உப்பு விற்கும் வலைச்சியர், பிட்டு வணிகர், அப்ப வணிகர், இறைச்சி விற்போர், வெற்றிலை விற்போர், மணப்பொருள் விற்போர், குயவர், செப்புப் பாத்திரம் செய்வோர், வெண்கலக் கன்னார், பொன்செய் கொல்லர், உருக்குத் தட்டார், தச்சர், மண்பாவை செய்வோர், வரந்தரத்தக்க கடவுள் உருவம் எழுதும் ஓவியர், தோல் பதனிடும் பாணர், தையல் வேலைசெய்வோர், மாலை கட்டுவோர், காலத்தைக் கணக்கிட்டுச் சொல்லும் கணியர், தாளம், யாழ் இவற்றால் இனிய பண் மிழற்றும் பாணர் போன்றோர் வாழும் வீதிகள்.
சங்கறுப்போர், முத்துக் கோப்போர் வதியும் வீதி, வேத்தியல் (அரசர்க்கு ஆடும் கூத்து) பொதுவியல் (பொதுமக்களுக்கு ஆடும் கூத்து) வாழும் தெரு, எண்வகைத் தானியங்களை குவித்து வைத்திருக்கும் கூலவாணிகர் தெரு, அரசனை பாராட்டும் மாகதர், சூதகர் வாழும் தெரு, நாழிகை அறிவிக்கும் வேதாளிகர் ஆகியோர் வாழும் தெரு, பொதுமகளிர் வாழும் தெரு, ஆடைகள் நெய்து விற்கும் சேணியர் தெரு, வண்ணக்கர், மணிகள், முத்துக்கள் விற்கும் வணிகர் நிறைந்த தெரு, அந்தணர் தெரு, அரசப் பெருந்தெரு, அமைச்சர் தெரு, சேனாதிபதி தெரு, மன்றங்கள், அம்பலங்கள், சதுக்கங்கள், சந்திகள், யானைப் பாகர், குதிரை வாதுவர் ஆகியோர் வாழும் வீதிகள் பலவற்றைக் கண்டவாறே மணிமேகலை சென்றாள்.
பின்னர் பவுத்த துறவிகள் உறையும் தவப்பள்ளி அடைந்து அங்கே தவமேற் கொண்டிருந்த மாசாத்துவானைக் (கோவலனின் தந்தை) கண்டு அவன் திருவடியை வணங்கித் தன் வரலாற்றினை முறையே தெரிவித்தாள்.
அவனும், தான் கோவலனும் கண்ணகியும் இறந்தமை கேட்டுப் பவுத்த தருமம் மேற்கொண்ட தாகத் தெரிவித்து, ‘கோவலனுக்கு ஒன்பது தலைமுறைக்கு முன்பிருந்த கோவலன் என்பான் இந்நகரின்கண் கட்டுவித்த பவுத்தசயித்தியத்தைக் கண்டு வழிபட வந்தேன்;. வந்தவிடத்து இங்குள்ள முனிவர்கள் காவிரிப்பூம் பட்டினம் கடல் கோட்படும் என்று அருளினர.;; அதனால் யான் இங்கே தங்கினேன்;.
இனி, அறவணவடிகள் நினக்கு அறங்கூறற்கு ஏற்றவிடம் கச்சிமாநகர் (காஞ்சிபுரம்) என்றெண்ணி அங்கே மாதவியும் சுதமதியும் உடன்வரச் சென்றுள்ளார். மேலும் அக்கச்சிமாநகரும் வறுமையால் வருந்துகிறது, உயிர்கள் பல உணவின்றி இறக்கின்றன் அங்கே நீ சென்று அவற்றைப் பாதுகாப்பது பேரறம்” என்று இசைத்தான்.
அதுகேட்ட மணிமேகலையும் வஞ்சிநகரின் மேற்றிசையில் விண் படர்ந்து, வடகிழக்காகக் கச்சிமாநகரடைந்து, அது வறங்கூர்தலால் பொலிவிழந்திருப்பது கண்டு மனமிரங்கினாள்.
பின்னர், அந்நகர் நடுவே இளங்கிள்ளி என்பான் அமைத்திருந்த பவுத்த சயித்தியத்தை வணங்கி, அதற்குத் தென்மேற்கிலிருந்த பொழிலொன்றை யடைந்தாள். அவள் வரவறிந்த கஞ்சகன்சென்று கச்சிவேந்தற்கு அறிவிக்க அவன் தன் அரசியும் சுற்றமும் உடன்வர வந்து மணிமேகலையின் அறச் செயலைப் பாராட்டி வரவேற்று, தனக்குத் தெய்வமொன்று தோன்றி மணிமேகலையைப் பற்றிக் கூறியதைத் தெரிவித்து, அது தன்னை மணிபல்லவத் துள்ளது போலக் கோமுகிப்பொய்கையும் பொழிலும் பிறவும் சமைக்குமாறு பணித்ததையும் அவ்வாறே தான் செய்தமையும் தெரிவித்து, அவ்விடத்தையும் அவட்குக் காண்பித்தான்.
மணிமேகலையும் அதனைக் கண்டு வழிபட்டுக் “காணார் கேளார் கால்முட மானார், பேணா மாக்கள் பேசார் பிணித்தோர், படிவ நோன்பியர் பசிநோ யுற்றோர்” முதலிய பலரையும் வருவித்துத் தன் அமுதசுரபியால் இனிய அமுதுண்பித்தாள். அக்காலை அறவணடிகளும் மாதவியும் சுதமதியும் மணிமேகலையின் அறச்சாலை அடைந்தனர். அவரைக் கண்டதும் மணிமேகலை அவர்க்குரிய வழிபாடியற்றி, அறுசுவை நால்வகை உணவு தந்து மகிழ்வித்துத் தன் ஆண்வேடத்தை மாற்றிக்கொண்டாள்.
தருமம் கேட்கப்புக்க மணிமேகலைக்கு மெய்ப்பொருளைத் தேர்ந்துணர்தற்கு வேண்டும் அளவைகளையும் அவற்றுள் தீயவற்றை நீக்கித் தூயவற்றால் பொருளின் மெய்ம்மைத் தன்மையை அய்யமின்றி அறியும் திறத்தையும் அறிவுறுத்த அறவண அடிகள், மேலும் கூறற்குரிய அறங்களைக் கூறினார்.
மணிமேகலையும் பவுத்ததன்ம சங்கம் என்னும் மும்மணிகளையும் மும்மையின் வணங்கிப் பவுத்த தருமத்தைச் சரண்புகுந்தாள். அமரர் வேண்டுகோட்கு இரங்கித் துடித லோகத்தினின்றும் தோன்றி, போதிமூலத்திருந்த வாமன் உரைத்த திருவறத்தை அவற்குப் பிற்போந்த எண்ணிலரான புத்தர்கள் வழிவழியாக உரைத்துப் போந்தனர்; அதனை உனக்குரைப்பேன் என அறவணடிகள் உரைக்கத் தொடங்கி பன்னிரு நிதானங்களும், அவற்றின் மண்டிலவகையும் கண்ட வகையும் சந்தி வகையும் தோற்ற வகையும் கால வகையும் பிறவும் தொகுத்தும் விரித்தும் கூறினார்.
பின்பு, நால்வகை வாய்மையும், அய்வகைக் கந்தமும், அறுவகை வழக்கும், நால்வகை நயங்களும், வினாவிடைகளும் விரித்து விளங்கக் கூறினார். முடிவில் கட்டும் வீடும் ஒவ்வொன்றன் காரணமும் அவரவர் முயற்சியால் விளையுமேயன்றிப் பிறரால் தரப்படுமாறில்லை யென்பதை வற்புறுத்தி, இறுதியாக, மேலே கூறிய பொருள் எல்லாவற்றிற்கும் காமம் வெகுளி மயக்கம் என்ற மூன்றுமே காரணமென்றும் காமத்தை அநித்தம் துக்கம் அநான்மா அசுசியெனத் தனித்துப் பார்த்துப் பற்றறுக்கும் அசுப பாவனையால் கெடுத்தல் வேண்டுமென்றும், வெகுளியை மைத்திரி பாவனை, கருணா பாவனை, முதித பாவனைகளால் கெடுத்தல் வேண்டுமென்றும், மயக்கத்தை ஞான நூற்பொருளைக் கேட்டல் சிந்தித்தல் பாவனை தரிசனையெனவரும் உபேக்ஷ பாவனையால் கெடுத்தல் வேண்டுமென்றும் அறிவுறுத்தினாராக, மணிமேகலையும் அவர் காட்டிய ஞானவிளக்கின் துணை கொண்டு தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு பிறவித் துன்பம் நீங்க நோன்பு மேற்கொண்டாள்.
‘தனது வினைத்திறம் அற்றுப் போக’ எனக் கூறி நோன்பு மேற்கொண்டு நாடெங்கும் பவுத்த மதக் கொள்கைகளைப் பரப்புகிறாள். பவுத்த துறவியாகி மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை அவள் மறைவிற்குப் பின்னர் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

Leave a Reply
You must be logged in to post a comment.