காஞ்சி மடமா? கும்பகோண மடமா? பகுதி 20
சிருங்கேரி மடத்துக்குள் தமிழ் குடியேற்றங்களை உள்ளே விடாததற்கும்… காஞ்சியா கும்பகோணமா என்பதற்கும் என்ன சம்மந்தம் என்று தானே கேட்கிறீர்கள்.
மறுபடியும் மடத்தின் வாசல். “நீங்கள் எந்த கோத்ரமாக இருந்தாலும்… எந்த வேதக்காரராக இருந்தாலும் (பிராமணர்களில் ரிக் வேதக்காரர்கள், யஜுர், சாம, அதர்வண வேதக்காரர்கள் என ஒவ்வொரு வேதத்தின் வழி வந்தவர்களாக பிரிக்கப் பட்டிருக்கிறார்கள்)
இங்கே உங்களுக்கு ஆசி பெறவோ, தீட்சை பெறவோ, தரிசனம் பண்ணவோ பாக்கியம் கிடையாது. அதனால் நீங்கள் இம்மடத்துக்கு வரவேண்டாம். உங்களால் மடத்துக்கு, தோஷமும் உங்களுக்கு பாவமும் நேரவேண்டாம்.”
“நாங்களும் இந்த மடத்துக்கு பாத்யப் பட்டவர்கள்தானே… நாங்கள் உள்ளேவர சாத்தியப்படாதா?” என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள் கேள்வி எழுப்பி செய்த பக்தி போராட்டம், வெற்றியைத் தரவில்லை.
இங்கே இன்னும் ஒரு முக்கியமான விஷயம் சோழ மண்டலத்திலிருந்தும்… திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் தென் மண்டலத்திலிருந்தும் சிருங்கேரி சுற்று வட்டாரங்களில் சில தலைமுறைகளுக்கு முன்னரே குடியேறியவர்களில் சிலர்… முறையாக தீட்சை பெற்று… சந்யாசம் பெற்று பிரம்மச்சர்யத்தை பிடிப்போடு கவனித்து வந்தார்கள்.
அவர்களுக்கும் அனுமதி மறுப்பு கண்டு கொதித்துப்போன தமிழ் வழி குடியேற்றத்தினர், என்ன செய்யலாம் என்று விவாதிக்கக் கூடினார்கள்.
“நம்மை அனுமதிக்காத மடத்தை நாம் விடக்கூடாது. எப்படியாவது உள்ளே செல்லவேண்டும். மட காரியங்களில் நாம் பங்கு பெறவேண்டும்” குடுமியை முடிந்து கொண்டே கோபத்தை அவிழ்த்து விட்டார் ஓர் இளைஞர்.
“பக்தியில் பிளவு செய்யப் பார்க்கிறார்கள். இதை சாத்வீகமாய் எதிர்கொண்டு மடத்துக்குள் சஞ்சரிப்போம்” என்றார் இன்னொருத்தர். இப்படி பல கருத்துகள் எதிரொலித்துக் கொண்டிருந்த போது தான்… ஒரே ஒரு குரல் வித்தியாசமாய் வெளிப்பட்டது.
“நாம் சாதாரணப்பட்டவர்கள் அல்ல… வேத ஞானம் விருத்தியானவர்கள். நம்முடைய வித்வான்களுக்காக ராஜாக்களும், நிலக்கிழார்களும் பல கிராமங்களை நமக்கு பாத்யப்படுத்தியிருக் கிறார்கள். இப்படியிருக்க நாமே தனியாக ஒரு மடத்தை ஸ்தாபித்து, இறைத்தொண்டும் ஏழைகளுக்குத் தொண்டும் செய்யலாமே…”
இந்த யோசனையை எல்லோர்க்கும் பிடிக்க… அன்று முதல் சிருங்கேரி மடத்தை பகிஷ்கரித்து அதன் அருகிலேயே சங்கமேஸ்வரம் என்னும் இடத்தில் புதிய மடத்தை ஸ்தாபித்தனர்.
தங்களுக்குள்ளேயே ஒரு மடாதிபதியை நியமித்துக் கொண்டு – சங்ஙகர மடங்களிலிருந்து பெற்ற சாரங்களை அடிப்படையாக வைத்து இம்மடத்தை பரிபாலித்தனர். இம்மடத்துக்கு சோழ மண்டல, தொண்டை மண்டல… என தமிழகத்தின் பல பக்தர்களும் வந்து போக ஆரம்பிக்க… காலதேவன் பயணத்தில் காஞ்சியில் ஓர் முக்கிய சம்பவம் நடந்தது.
கோயில்கள் நகரம், சிற்பக் கலைகளின் சீமாட்டி நகரம் என்றெல்லாம் புகழ் பெற்ற காஞ்சீபுரம் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களிலும் ஒன்றாகக் கருதப்பட்டது.அதாவது… அயோத்யா, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சீ, பூரி, துவாரகை எனப்படும் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களில் தென்பகுதியில் இருக்கும் ஒரே நகரம் காஞ்சிதான்.
அந்த அளவுக்கு இங்கே பக்தி வெள்ளம் அணைகள் இல்லாமல் ஆன்மீகப் பாசனம் செய்து கொண்டிருந்தது. எங்கெங்கு பார்த்தாலும் இறை முழக்கங்கள், சிற்ப சாஸ்திரங்கள் நிறைந்த காஞ்சீபுரத்தில் சங்கமேஸ்வர மடத்தின் ஒரு கிளையை அங்கிருந்து திரும்பி வந்தவர்கள் நிர்மானித்தனர்.
கட்டிடம் கிடையாது, பெரிய இடம் கிடையாது, சிறியதொரு குடில், மிக எளிமையான தோற்றம் கொண்டது காஞ்சிமடம். சங்கரரின் உபதேசங்களின்படி அத்வைதத்தை பரப்பவும், அறம் செய்யவும் அமைக்கப்பட்ட இம்மடம் இருக்குமிடம் தெரியாத அளவுக்கு எளிமையாக இருந்தது.
மடத்திலிருந்த சந்நியாசிகள் பிக்ஷாந்திக்காகவும்… உபந்யாசங்களுக்காகவும்… கோயில்கள், ஆற்றங்கரைகள் என மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்றுவர காஞ்சியின் மணம் மெல்ல மெல்ல வீசத் தொடங்கியது.
அப்போது தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சித் தொடங்கியிருந்தது. சந்நியாசிகளின் உபதேசங்கள், அவர்களுடைய ஆசீர்வாதம் ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டனர் நாயக்க மன்னர்கள். சொல்லப்போனால் நாயக்கர்களின் ராஜ நாயகர்களாக விளங்கியவர்கள் சந்நியாசிகளும், துறவிகளும்தான். அறமும், பக்தி நெறியும், ஆன்மீகக் கட்டுப்பாடுகளும் ஒருங்கிணைந்து தங்களை வழிநடத்த வேண்டும் என விரும்பிய நாயக்க மன்னர்களின் காதுகள் வரை வந்து நிறைந்தது காஞ்சி மடத்தின் புகழ்.
அப்படிப்பட்ட ஒரு மடம்… ஏன் அதே மடத்தை நம் ராஜ்ஜியத்தில் அமையுங்கள்.எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன். அறமும், பக்தியும் தழைக்கவேண்டும் என நாயக்க மன்னன் ஆசைப்பட, ஆணையிடப்பட்டது.
உதயமானது கும்பகோண மடம் இன்றையிலிருந்து சுமார் நானூறு – அய்ந்நூறு ஆண்டுகளுக்குமுன் கும்பகோணத்தில் காமகோடி மடம் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது காஞ்சியிலிருந்த அம்மடம்.
காஞ்சியில் இருந்ததைவிட கும்பகோணத்துக்கு வந்தபின் நாயக்கர்களின் ஆதரவால் பீடுநடை போட்டது புதிய மடம். சொத்துகளை நிறைய தானமாக கொடுத்தனர் மன்னர்கள். அன்றிலிருந்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதி, சுமார் 60, 70 ஆண்டுகள் முன்புவரை, கும்பகோண காமகோடி மடம்தான் அது.
எனவேதான், கும்பகோண மடம் என்றே பலராலும் அழைக்கப்பட்டது. இவ்வளவு பிற்காலத்தில் தோன்றிய இம்மடத்தையும் ஆதிசங்கரர்தான் நிர்மானித்தார் என சிலர் சொல்லி வருவதை ஒதுக்கிவிட்டு… கும்பகோண மடம் காஞ்சிக்கு மீண்டும் வந்த கதையைப் பார்ப்போமா…? – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)
ஆசைவைப்பவன் பக்தன் கிடையாது, நம்மில் ‘பக்தர்கள்’ எத்தனை பேர் இருப்போம் என்றும் எண்ணிப் பாருங்கள் – பகுதி 21
கும்பகோண மடம் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன்பு… கும்பகோணத்தில் மடத்தின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை பொதுவாகப் பார்த்துவிடலாம்.
பெண்களை உள்ளே அனுமதிக்காத, ‘எல்லைகளை’ கடுமையாக அனுஷ்டித்த சிருங்கேரி மடம் போலவேதான் கும்பகோண மடமும், மடம் அமைந்திருக்கும் தஞ்சாவூர் ஜில்லா தாண்டி திருச்சிராப்பள்ளி ஜில்லாவின் ஒரு பகுதி. ராமநாதபுர சமுத்திரக் கரைப்பகுதி தொண்டை மண்டல பிரதேசம் என எங்கும் மடாதிபதி போகமாட்டார்.
ஆனால்… இம்மடத்துக்கே உரிய விசேஷமான விஷயம், பக்தர்கள் எங்கிருந்தும் இம்மடத்துக்கு வரலாம். அதாவது,‘எல்லை தாண்டிய பக்தியோடு இங்கே வரலாம்.
இந்த இடத்தில் பக்தர்கள் என்றால் யார் என்பதற்கு இலக்கணமாக ஒரு ஸ்லோகம் பார்க்கலாமா?
“பரமாத்மனே யேர் ரக்தஹவிரக்தோ அபரமாத்மநீ”…என்று போகும் வரிகள், பக்தர்கள் என்றால் யார் என்பதைச் சொல்கின்றன.
அதாவது, கடவுளைத் தவிர வேறு யார் மீதோ, எந்தப் பொருள் மீதோ ஆசைவைப்பவன் பக்தன் கிடையாது.
இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால்… பெண்ணோடு தேக சம்பந்தம் கொள்ளாது, புத்ர இஷ்டம் இல்லாத… லௌதீகத்தில் நாட்டம் வைக்காத மனது கொண்டவன்தான் பக்தன் என்கிறது இலக்கணம்.
இப்போதெல்லாம் சின்னச் சின்ன தெருமுனைக் கோயில்கள் வரை உற்சவங்களுக்கு வெளியிடப்படும் அழைப்பிதழ்களில் எல்லாம் ‘பக்த கோடிகளே’ என அழைக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள் நம்மில் ‘பக்தர்கள்’ எத்தனை பேர் இருப்போம் என்றும் எண்ணிப் பாருங்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம். இப்படிப்பட்ட இலக்கணங்கள் பெற்றோ, பெறாமலோ பல பக்தர்கள்(!) கும்பகோண மடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இவர்களில் ஒருவர்கூட சூத்திரர் கிடையாது காரணம்?
“அப்பிராமணர்கள் (பிராமணர் அல்லாதவர்கள்) சந்யாசிகளாக கூடாது…” என்று ஸ்மிருதி வகுத்த விதி அப்படியென்றால் சந்யாசம் பெற்றவர்களை தரிசிக்கவும் கூடாது என்றது தொடர்விதி.
இப்படிப்பட்ட சீதோஷண நிலையில் மன்னர்களின் ஆதரவோடு ‘சிறப்பாக’ நடந்து கொண்டிருந்தது கும்பகோண மடம். பல மடாதிபதிகளுக்குப் பிறகு கும்பகோண மடாதிபதியானார் சிறீசந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் அவருடன் நான் பல விஷயங்களில் நட்பு பாராட்டி ஆத்ம தோழனாக இருந்தேன்.
அப்போத மகாபெரியவர் அத்வைத பிரச்சாரம் பண்ணுவதற்காக பல வெளிஸ்தலங்களுக்கும் போக ஆரம்பித்தார். (எல்லைக் கட்டுப்பாடுகள் தளர ஆரம்பித்துவிட்டன). இதன் விளைவாக பல முக்கியஸ்தர்கள் மகாபெரியவரின்
பக்தர்கள் ஆனார்கள்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் என் ஞாபகப்படி மகாத்மா காந்தியடிகளே கும்பகோணத்துக்கு வந்து மகா பெரியவரை மூன்று முறை சந்தித்திருக்கிறார். இன்னும், பல தேசத் தலைவர்களும் மகா பெரியவரை தரிசித்து ஆசிபெற்று அருள்பிரசாதம் பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.
இந்த சமயங்களில்கூட சிருங்கேரி மடத்துக்கும் கும்பகோண மடத்துக்கும் இடையே கருத்து ரீதியான பல மோதல்கள் நடந்து கொண்டிருந்தன.
‘நாங்கள்தான் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட மடக்காரர்கள்’ என அவர்களும்… இல்லை இல்லை நாங்கள்தான் ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப் பட்டவர்கள்’ என்றும் பல வாதங்கள், பிரதிவாதங்கள் ஒரு பக்கம் நடக்க… இன்னொரு பக்கம் அத்வைத ப்ராபகண்டாவை லட்சியமாகக் கொண்ட காரியங்களும் நடந்து கொண்டிருந்தன.
மடங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வர்ணாஸ்ரம தர்மத்தை வளர்த்துக் காப்பதில் சங்கரரரின் சர்வ மடங்களும் சம்மதமாகத்தான் செயல்பட்டு வந்தன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
சென்ற நூற்றாண்டின் முற்பகுதி… பல அரசியல் தலைவர்களும் தரிசித்துச் சென்றதாலும், வெளியூர்களுக்குச் சென்று வந்ததாலும் மகா பெரியவரின் ப்ராபகண்டா பெருகியது.
அந்த நேரத்தில் கிழக்குப் பகுதி மடமான பூரி சங்கராச்சாரியாரின் மதராஸ் ராஜதானிக்கு வந்து பல சமய சம்ப்ரதாய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு, தன் எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்தார். இச்செய்தியை மகாபெரியவரின் கவனத்துக்கு சிஷ்ய கோடிகள் கொண்டு சென்றார்கள்.
“கிழக்கேயிருந்து இங்கே வந்து ப்ராபகண்டா செய்கிறார் பூரி சங்கராச்சாரியார். நாம் அங்கே செல்லும்போது நமக்கு பல எதிர்ப்புகளை அவர்கள் காட்டியிருக்கிறார்கள். நமது மடத்தை அவர்கள் ஒரு மடமாகவே பார்க்காமல் ஜடமாக பார்த்து வந்தார்கள். அவர்கள் இங்கே வருவதா? என சித்தம் நொந்து கேட்டிருக்கிறார்கள். அவர்களை சாந்தப்படுத்தினார் மகா பெரியவர்.
இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் முற்பாதிப் பகுதியில் நடந்தவை. அப்போது மகா பெரியவர் ‘தேசாந்திரம்’ எனப்படும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போது… ‘கும்பகோணம் மடாதிபதி வருகை…’ என்றே அன்றைய செய்தித்தாள்கள் பிரசுரம் செய்தன.
இதற்கெல்லாம் பிறகுதான் நாம் கும்பகோணத்தில் இருப்பதால் பலரும் நம்மை ஒதுக்கப் பார்க்கிறார்கள்.நாம் பிரதான ராஜஸ்தானியர் மதராசுக்கு அருகில், பல வருடங்கள் முன்பு தாய்மடம் இருந்த காஞ்சிக்கே செல்லலாம்’ என முடிவெடுக்கப்பட்டது. கும்பகோண மடம் மறுபடியும்… காஞ்சிக்கு வந்த கதை இப்போது புரிந்துவிட்டதா?
சரி… மகாபெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுடன் தோழமை கொண்டிருந்தேன் என குறிப்பிட்டேன் அல்லவா? அந்தத் தூய்மையான தோழமையில் எனக்கு வாய்க்கப்பெற்ற அனுபவத்தை உங்களோடு, சேர்ந்து மறுபடியும் அனுபவித்துப் பார்க்கட்டுமா? – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
மகாபெரியவர் சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளுடன் நான் பெற்றிருந்த பாக்கியத்துக்குரிய தோழமை அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் முன், அவரோடு எனக்கு நெருக்கத்தை ஏற்படுத்திய என் வாழ்க்கை நிலைமையும் ஞாபகத்தில் வந்து கூத்தாடுகிறது. இதைச் சொல்லிவிட்டுப் பிறகு மகா பெரியவரின் தோழமைக்குள் நுழைந்ததை தொட்டுத் தொடருகிறேன்.
என் குழந்தைப் பருவத்திலே நான் தொட்டு விளையாடிய பொருள்களிலே வேதப்புஸ்தகங்களும் அடங்கும்.என்னுடைய தகப்பனார்…தாததேசிக தாத்தாச்சாரியார் வேதங்களைக் கரைத்துத் தாளித்துத் தளிகை செய்து உண்டவர் என்றுகூட சொல்லலாம். நான் சின்னக் குழந்தையாக இருக்கும் போதே என் சின்னச்சின்ன செவிமடல்களில் அவரது வேதக்குரல் மோதிக் தளும்பும் அப்போது எனக்கு வேதமும் தெரியாது வெங்காயமும் தெரியாது.
நான் வளர்ந்த நாள்களில் சேட்டைகள் செய்து கொண்டிருக்கும் போது சொந்தக்காரர்கள் பலர் அது சொல்லுது… இது சொல்லுது… என பேச வைத்துக் கொண்டிருக்க… என் தந்தையார் என்னைக் கொஞ்சும் போதும் வேத மந்திரங்களைத் தான் சொல்லுவாராம். நான் ரொம்ப அடம் பண்ணினால் கோபிக்கும் போதும், வேத மந்திரங்களிலிருந்து சில கடும் புத்தி சொல்லும் ஸ்லோகங்களைச் சொல்லித்தான் கோபிப்பாராம். இப்படியாக எனக்குத் தெரியாமலேயே… வேதங்கள் என்னோடு விளையாடிக்கொண்டிருந்தன.
கற்கும் வயது வந்ததும் என்னுடைய தகப்பானாரே எனக்கு வேதங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அவரிடம் வேத அத்யயனம் செய்த நான்… அவருடைய மகனாக மட்டுமன்றி மாணவனாகவும் மலர்ந்தேன். வேதத்தின் ஓசைகளை காதால் கேட்டு அதை நாக்கால் புரட்டிப் போடுவது தான் வேத அத்யயனம் என்ற நிலை இருந்த அந்தக் காலத்தில் எனக்கு சின்னஞ்சிறு வயதிலேயே வேதத்தின் பொருள் பகுத்து விளக்கிவந்தார் தகப்பனார்.
பதினைந்து வயது முதலான நாள்களில் வேதங்களைப் பற்றி நானே சிந்திக்க ஆரம்பித்தபோதுதான்… நாட்டில் ஆரிய சமாஜம் என்ற அமைப்பு பிராமணர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது.
அதென்ன ஆரிய சமாஜம் தயானந்த சரஸ்வதி என்பவரால் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அந்த அமைப்பு பிராமணர்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியதை அன்று இளைஞனான என்னால் உணர முடிந்ததது.
அந்த அளவுக்கு தயானந்த சரஸ்வதி என்ன சொன்னார் தெரியுமா…?
“வேதத்தை பிராமணர்கள் தங்களது தொழிற்கருவியாகப் பயன்ப டுத்திவிட்டனர். இதனால் வேதம் பிராமணர்களின் வீட்டு புஸ்தகங்களுக்குள் புதைந்து கிடக்கிறது. தாங்களும் வேதத்தைக் கற்காமல் அடுத்தவர்களும் கற்காமல் வேதத்தை அவர்கள் சிறைப் பிடித்து வைத்துள்ளனர்.
எனவே, வேதத்தை பிராமணர்கள் மட்டுமல்ல எல்லோரும் படிக்கவேண்டும். வேதப்பொருள்களை அனைவரும் உணர வேண்டும். அனைவரும் என்றால் பிராமணர் அல்லாதவர்களும்.” என்ற ரீதியில் தயானந்த சரஸ்வதி பரப்பிய கருத்தை அவரது ஆரிய சமாஜத்தினர் இந்தியா முழுவதும் பரப்பி வந்தனர். இங்கே தமிழ் நாட்டுக்கும் வந்து சேர்ந்தது அந்தக் கருத்துரு.
பத்திரிகைகளில் பிரசுரம் செய்யப்பட்டது. சென்னை சவுகார்பேட்டையில் வந்து சமாஜத்தினர் கூட்டங்களும் போட்டனர். இந்த நிலையில்தான் கும்பகோணத்தில் வேதம் படித்துணர்ந்த நானும் என் சனாதன சகாக்களும் பிராமணீயத்தைக் காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தோம்.
பிராமண சபை, என ஒரு சபையை அமைத்தோம். அந்த நேரத்தில் ஈரோடு ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் பிராமணர்களை… பிராமணீயத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.
எனவே நாங்கள் ‘பிராமண சபை’யை ஆரம்பித்து சனாதன தர்மத்தைப் பாதுகாக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டோம்.
ஊர், ஊராக கிராமம் கிராமமாக ஜில்லா முழுவதும் செல்வோம். ஒருநாள் உபந்யாசம் செய்தால் சபையிலிருந்து 10 ரூபாய் சம்பளமாகக் கொடுப்பார்கள். ஊரெல்லாம் சுற்றி நாங்கள் ராமசாமி நாயக்கருக்குப் பதிலடி கொடுத்து வந்த வேளையிலே ஒரு சுவராஜ்யம்.
பரவஸ்து ராஜகோபாலாச்சாரி அய்யங்கார் எனும் ஒரு நண்பர்… வேதங்கள் மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களில் சூத்திரர்களைத் தாக்கி, அவமானப்படுத்தும் விதமாக உள்ள ஸ்லோகங்களை யெல்லாம் எடுத்து எழுதி ராமசாமி நாயக்கரின் இயக்கக்காரர்களிடம் கொடுத்து விடுவார். அவர்களுக்கு எங்களை வசவுபாட இது மேலும் வசதியாக இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையிலும் சனாதன தர்மசபை என மேலும் ஒரு சபை நிறுவப்பட்டது. அந்தக் காலத்தில் காங்கிரசில் தீவிரமாக இருந்த ஜி வெங்கட்ராமய்யர், எம்.கே. வைத்யநாத அய்யர் போன்றவர்கள் எல்லாம் எங்கள் சபைக்கு வரத்தொடங்கினர்.
அப்போது கும்பகோணத்தில் கம்பீரமாக இருந்த சங்கரமடத்தின் சார்பில் ‘ஆரிய தர்மம்’ என்னும் ஒரு பத்திரிகைகூட வெளிவந்தது. அதிலே என்னுடைய சித்தப்பா அக்னிஹோத்ரம் கோபால தேசிகாச்சாரியார் ‘எடிட்டர்’ ஆகவும் இருக்கிறார். அதோடு ‘ஜாதி தத்வ நிரூபணம்’ எனும் ஒரு புத்தகத்தையும் அவர் எழுதினார்.
இப்படியாக நான் சபைகளின் மூலம் வேத தர்மத்தைக் காக்க பிரச்சாரத்திலும், சில பத்திரிகைகளில் எழுதிக் கொண்டும் இருந்த போது… அடிக்கடி சென்னை சென்றும் வருவேன். நான் இப்பிரச்சாரங்களில் மிகத் தீவிரமாக இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்ட கும்பகோண மடத்தின் சங்காராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னைப் பற்றி சிலரிடம் விசாரித்திருக்கிறார். அவர்களிடமே என்னை அவர் கூப்பிட்டு அனுப்ப…
என் இளமைப் பருவத்தின் ஒரு காலைவேளையில் கும்பகோணம் சங்கர மடத்துக்குப் போனேன். தாத்தாச்சாரீ… வாரும்.. உட்காரும்… என அழைத்து தன் அருகிலேயே என்னை உட்கார வைத்தார். – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
“வாரும் தாத்தாச்சாரியார்… நன்னா இருக்கீரா? உம்மைப் பத்தி சிஷ்யாளெல்லாம் சொன்னா… தர்ம பிரச்சாரம் பண்ணிண்டே இருக்கீராமே… உடம்பை பார்த்துக் கோங்காணும்….”….என முதன் முதலாய் என்னிடம் வார்த்தைகளை மென்மையாக வீசினார்
சங்கராச்சாரியார்.சனாதனத்துக்கு நம்மளால முடிஞ்சதை பண்ணணுமே ஸ்வாமி… அதான் அங்க இங்கேன்னு அலைஞ்சாலும் விடாம தர்மப் பிரச்சாரத்துலேயே இருக்கேன். என நான் பதில் சொல்ல…. எங்களது சபை சமாச்சாரங்களைப் பற்றி ரொம்ப கேள்விகள் கேட்டார் மகா பெரியவர்.
நானும் சளைக்காமல் போன, வந்த இடங்கள், பிரசங்க அனுபவங்கள் பற்றியெல்லாம் ஏற்ற இறக்கங்களோடு அவரிடம் விளக்கினேன்.
எனது அனுபவங்களையெல்லாம் சிலாகித்துக் கேட்ட மகா பெரியவர்… ‘ரொம்ப நல்லது பண்ணின்டிருக்கீர்… இன்னோர் நாளைக்கு விஸ்தாரமா பேசுவோம்’ என விடை கொடுத்தார். அவரின் பல வினாக்களுக்கு விடை கொடுத்த நானும் கிளம்பி வந்தேன்.
நான் சங்கராச்சாரியாரைப் பார்த்து விட்டு வந்ததில் எங்கள் சமூகக்காரர்களுக்கிடையிலேயே ஒரு சின்ன சலசலப்பு.
என்ன ஓய்… நாமெல்லாம் சுத்த ஆச்சார்ய புருஷாள்… ஆனா இவர் சங்கராச்சாரியாரை பார்த்துட்டு வந்திருக்காரே… இதெல்லாம் நன்னா இருக்ககோ…” என என் காதுபடவே கும்பகோணத்தில் சில குரல்கள் புறப்பட்டன.இதெல்லாம் நன்னா இருக்கோ?… என பார்ப்பதற்கு முன்… ‘அதென்ன ஆச்சார்ய புருஷாள்?… என உங்களுக்குள் ஒரு கேள்வி முளைக்கும்.
ஒரு சமூகத்தில் அதாகப்பட்டது அந்த கால பிராமண சமூகத்தில் சமய தத்துவங்களை போதிக்க ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவை நிரம்பப் பெற்ற சிந்தன வாதிகளுக்குக்குத் தான் சிறப்புத் தகுதி இருந்தது. அதாவது அவர்களை குரு ஸ்தானத்தில் வைத்திருந்தனர்.
இதுபோல் அனைத்து சமய தகுதிகளும் வாய்க்கப் பெற்ற குரு ஸ்தானத்தில் உள்ளவர்கள் சிற்சிலர் தான் இருப்பார்கள். அவர்களை தேர்ந்தெடுத்து சகல மரியாதைகளையும் கௌரவத்தையும் கொடுத்து போற்றி வந்திருக்கிறார்கள். அப்படி போற்றப்பட்டவர்கள் தான் ஆச்சார்ய புருஷரின் வம்சா வழியான நானும் ஓர் ஆச்சார்ய புருஷன்.
அதே நேரம்… வெறும் வம்சத்தால் மட்டுமே இப்பெருமையை இப்போது பலர் பெற்றிருக்கிறார்கள். சிலர் தான் அந்த ஞானம் ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் இன்னமும் தங்கள் பரம்பரைப் புகழை காப்பாற்றி வருகின்றனர்.
உதாரணத்துக்கு சிறீராமானுஜர் அருளிய பாஷ்யத்தைப் பற்றி உபதேசிக்கவும் எடுத்துரைக்கவும் பாஷ்ய சிம்மாசனாதிபதிகள் என சிலர் அவரது காலத்திலேயே நியமிக்கப்பட்டனர்.
அவர்களின் பரம்பரையில் பிறந்து வந்ததன் காரணமாகவே இன்றும் சிலர் தங்களை பாஷ்ய சிம்மாசனாதிபதிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் ‘பாஷ்யம்’ பற்றி இவர்களுக்கு தெரிந்தது பூஜ்யம் என்றாலும் கூட இவர்கள் தான்
இன்று பாஷ்ய சிம்மாசனாதிபதிகள். அதுபோல… ஆச்சார்ய புருஷர் பரம்பரையில் வந்த நான் ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் எதையும் நழுவவில்லை. அதனால்தான் ஆச்சார்ய புருஷராகிய நான் மாற்று தத்துவக்காரராகிய மகா பெரியவரை சந்தித்தது பற்றி சிலர் கும்பகோணத்தில் கேள்வி எழுப்பினார்கள்.
அழைத்தவரை சென்று சந்திக்காமல் இருப்பதைவிட பெரிய கௌரவக் குறைச்சல் இருக்கமுடியுமா?…அதனால் அக்குரல்கள் பற்றி நான் கவலைப்படவில்லை.அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு மகா பெரியவர் அவ்வப்போது என்னை சந்திப்பார்.
அப்படி ஒரு தடவை சந்தித்தபோது… ‘முதலில் நாம் நம்மை சுத்தப்ப படுத்திக்கணும் இல்லையா?… இப்போது பல பிராமணர்கள் வேதத்தை மறந்து பாவம் சுமக்க தொடங்கி விட்டார்கள். வேதத்தை எப்படியாவது காப்பாற்றணும் அதற்கு நாம் ஏதாவது ஸ்தாபனரீதியாக செய்யவேண்டும். ஏதாவது சொல்லுங்களேன்…’ என்றார் மகா பெரியவர்.
நான் சொன்னேன் ‘நாங்கள் சபை மூலமாகவும், பத்திரிகைகள் முலமாகவும் கூடிய அளவுக்கு பிரச்சாரங்கள் செய்தபடி தான் இருக்கிறோம். டி.கே. ஜெகந்நாதச்சாரியார் (எழுத்தாளர் சாண்டில்யனின் தகப்பனார்) கூட ‘பிராமணன்’ ‘தார்மீக ஹிந்துனு’ பத்திரிகைகள் நடத்தறார். நாங்களும் பேசி எழுதிதான் வருகிறோம்’ என நான் சொன்னேன்.
பதிலுக்கு மகா பெரியவர்…‘அதெல்லாம் நடக்கட்டும் தாத்தாச்சாரியார்… ஆனாலும் பிராமணர்கள் தங்கள் கடமையை மறந்துட்டா இல்லையா?அதனால அவாளை திருத்துறதை முக்ய நோக்கமா கொண்டு… ஒரு சபை ஆரம்பிக்கலாம்.
அதுக்கு வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபைனு பேர் வைக்கலாம். இதுக்கு நீர்தான் பெரிய உபகாரம் பண்ணனும்.மொதல்ல பிராமணர்கள் வேதத்தை படிச்சு அதை தழைக்க செய்யணும்.
இந்த சபை நடத்தறத்துக்கான பணத்தை பிராமணாள்ட்ட மட்டும் வாங்கணும். அப்பத்தான்.. நாம செஞ்ச பாவத்தை நாமளே சுத்தப்படுத்த முடியும்” என்றார்.
இஃது உடனே செயல் வடிவமாக்கப்பட்டது.குளித்தலை அண்ணாத்ர அய்யங்காரும், ஜெயராமய்யரும் இந்த சபைக்கு
செகரட்டரியானார்கள்.அன்றைய தஞ்சாவூர் ஜில்லா முழுவதும் இவர்கள் பிராமணர்களை சென்று சந்தித்து அவர்களால் முடிந்த காணிக்கை பணத்தை வசூல் செய்ய, அவர்களோடு நானும் புறப்பட்டேன்.
“பிராமணர்கள் திருத்தினால் நல்வழிப்படுத்தினால் அவர்கள் சமூகத்தை நல்வழிப்படுத்துவார்கள்” நம்பிய மகா பெரியவர். இதற்காகத்தான் வேத சாஸ்திர பரிபாலன சபையை ஆரம்பிக்க வைத்தார். அது என்ன பலனை கொடுத்தது? – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
மகா பெரியவரின் ஆசீர்வாதத்தோடு ஆரம்பிக்கப்பட்ட வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை. அன்று எங்களைப் போலவே இளமையோடு வீரியமாக விஸ்தாரமாக செயல்பட ஆரம்பித்தது. “ வேதங்களை சிரத்தையாக வாசித்து அது சொல்லியபடி அனுஷ்டிக்கும் பிராமணாள் குறைஞ்சிட்டா… அவாளுக்கு வேதிக் ஸ்பிரிட் (Vedic spirit) உண்டாக்கணும்.நாம் நம்ம தரப்பிலிருந்து செய்ய வேண்டியவற்றை செய்தால்தான்… பகவான் அவர் தரப்பிலிருந்து செய்ய வேண்டியதை செய்வார் இல்லையா?…” என என்னிடம் வினவிய மகா பெரியவர், வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபையின் ஒவ்வொரு கூட்டங்களிலும் யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஆவஹந்தி ஹோமத்தை நடத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
எத்தனையோ ஹோமங்கள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்க எதற்கு ஆவஹந்தி ஹோமம்?… அப்படியென்றால் என்ன?…ஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு நோக்கத்துக்காகத்தான் அதாவது கோரிக்கைகளை (Demands) முன்னிறுத்திதான் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் ஆவஹந்தி ஹோமம்.. ப்ரம்ம தேஜஸ்க்காக நடத்தப்படுகிறது.
புனித கலசத்தை நிறுவி… அதன்மேல் வேதங்களை தொகுத்த வ்யாஸரை போற்றி துதி செய்து… அக்னி வளர்த்து மந்த்ரங்களை முழங்குவதுதான் ஆவஹந்தி ஹோமம் இந்த ஹோமத்துக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது வெறுஞ்சாதம். அஃதாவது அன்னத்தை கொடுத்து வ்யாஸரின் வேத அறிவையும் கொடுத்து ‘ப்ரம்ம தேஜஸ்’ஸை, கடவுளின் பலத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும் இந்த ஹோமத்தில் ப்ரம்ம தேஜஸ்’ என்பது பிராமணீயத்தின் பலம் என குறிப்பிடப்படும்
ஆவஹந்தி ஹோமத்தின் முக்கிய பலன் பிராமணீயத்தை பலப்படுத்துதல்.
இப்போது புரிகிறதா இந்த ஹோமத்தை ஏன் பண்ணச் சொன்னார் என்று.
இந்த ஹோமம் செய்து முடிந்ததும்… வேதத்தைப்பற்றி விளக்கமாக உபன்யாசிக்க வேண்டும். வேதங்களை பிராமணர்கள் கைக்கொண்டு செய்ய வேண்டியவற்றையெல்லாம் அந்த உபன்யாஸங்கள் விளக்கும்.
அப்போது… கும்பகோண மடத்துக்கு ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியான செல்வம் இல்லை. நாங்கள் இந்த சபைக்கென எந்த மூலதனத்தையும் முன் கூட்டியே வைத்திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் எந்த வங்கிக் கணக்கும் இல்லை. சபைக்கென டிரஸ்டியும் இல்லை.
இந்த ‘வசதி’கள், ஒன்றுகூட இல்லாவிட்டாலும் அப்போது… மகாபெரியவரின் ஆசீர்வாதம். எங்களது உழைப்பு ஆகியவற்றால் வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை கனஜோராக செயல்பட்டது.
இதன் முக்கியமான விளைவாக… தஞ்சாவூர் ஜில்லாவில் நாங்க போன ஒவ்வொரு கிராமத்திலும்… ஒவ்வொரு பேரூர்களிலும் வேதப் பிரச்சாரம் முழுமையாக நடந்தது. பல பிராமணர்கள் தங்கள் குழந்தைகளை வேத பாடசாலை பக்கம் திருப்பி விட்டனர். ஒரு ஆன்மீக வேத புத்துணர்ச்சி எழும்பியது. இதற்கு சீதாராமையர் பெரும் பொறுப்பு வகித்தார்.
இப்படியாக… இந்த வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்ததில் மகா பெரியவருக்கு மெத்த மகிழ்ச்சி. தஞ்சாவூரின் கிராமங்களில் வேத உபன்யாஸமும் பண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு பம்பாயிலிருந்து அழைப்பு வந்தது.
யார் அழைத்தது? இங்கேயிருந்து போன பிராமணர்கள்தான் செல்வச் செழிப்பில் மிதந்த அவர்கள் வேதத்தை விட்டு ஒதுங்கியிருந்தாலும் வேத ஈடுபாட்டிலிருந்து விலகவில்லை.
அதனால் எங்களை அழைத்தார்கள். பம்பாய் தொடங்கி… அகமதாபாத் டெல்லி, கல்கத்தா, நாக்பூர் என தென்னிந்திய பிராமணர்கள் வசிக்கும் வட இந்திய பகுதிகளுக்கெல்லாம் சென்றோம். ஹோமம் வளர்த்தோம். உபன்யாசம் செய்தோம். அதன்மூலம் வேதம் வளர்த்தோம்.
அதற்கு கிடைத்த சம்பாவணை அதாவது சன்மானத்தை மறுபடியும் தஞ்சாவூர் ஜில்லாவில் வேதம் வளர்க்க பயன்படுத்தினோம். இப்படி நாங்கள் பரபரப்பான பகவத் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம்.. நாத்திக நாயகரான ராமசாமி நாயக்கரும் பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கி சுற்றிக் கொண்டிருந்தார்.
அவருக்கும் தெரிந்த எனக்கும் தெரிந்த ஒருத்தர் கே.கே. நீலமேகம். கும்பகோணம் கடைத்தெருவில் அவரை நான் பார்க்கும்போது..
“ஸ்வாமி… பார்த்தீரா… எங்கள் ராமசாமி நாயக்கர் உங்களை வாங்கு வாங்கென வாங்கிவிட்டார்” என்பார். கடைத்தெருவில் நாயக்கர் சொன்ன வாதங்களுக்கு எதிர்வாதங்களை நீலமேகத்திடம் எடுத்துச் சொல்லிவிட்டுத்தான் நான் நகர்வேன்.
இந்நிலையில் பிராமணர்களை மட்டுமன்றி.. தெய்வங்களின் சொரூபங்களை கிண்டலடிக்கும் அபச்சாரத்தை அப்போது நாத்திகக்காரர்கள் கூடுதல் உத்தியாக கையிலெடுத்தனர்.
இது மகா பெரியவரையும் உறுத்தியது. வழக்கம்போல என்னிடம் ஆலோசித்தார். தாத்தாச்சாரீ… நாம மொதல்ல நடத்தின வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை ரொம்ப நன்னா போறது.
அதுக்கு அடுத்ததா.. அவாள்லாம் சொரூபங்களை கிண்டலடிக்கிறதால… நாம் பூஜா தத்வத்தையும்… சிற்ப சாஸ்திரத்தையும் பத்தி எல்லாருக்கும் புரிய வச்சாகணும்… என்ன சொல்றீர்..” என்றார்.
“வாஸ்தவம்தான் ஸ்வாமீ… இந்த ‘அவேர்னஸ்’ (Awareness) பிராமணாளுக்கும் வரணும்… மத்தவாளுக்கும் வரணும்…” என்றேன். எங்களின் சிலநாள் ஆலோசனைகளுக்குப் பிறகு… உதித்தது ஆகம சிற்ப சதஸ். – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)

Leave a Reply
You must be logged in to post a comment.