நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில், படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே!

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில், படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே! (திருமந்திரம் 1857)

மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள் · 

“படமாடக்கோயில்’ திருமந்திரப் பாடலுக்கான விடையளிக்க சிறிய பின்னூட்டம் தேவைப்படுகிறது.

திருமந்திரம் – பெயர்க் காரணம்!

திருமந்திரம் தமிழ் ஆகமநூல். ‘திரு’ என்ற சொல்லின் பொருள் ‘இறைவன்’; இறைவனை அடைய கைகொடுக்கும் ‘மந்திரம்’ என்பதால் ‘திருமந்திரம்’ எனப் பெயர்பெற்றது.

திருமந்திரம் தமிழ் ஆகமம்!

வடபுலத்தில், இடையர் குலத்தில் அவதரித்த கண்ணபிரான் அருளிய பகவத்கீதையைப்போல், தென்புலத்தில் இடையர் குலத்தில் அவதரித்த மகான் திருமூலர் அருளிய தமிழாகமம் திருமந்திரம். சைவ சமய அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர். திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. காலத்தால் கிபி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

( மனித குலத்துக்கே எதிரான நால்வருண சாதிமுறையை சுலோகங்களாக பகவத்கீதையில் இடைச்செருகல்கள் மனம்போல் செய்து, மக்களை ஏமாற்றும் உத்தியை ஆரியர்கள் பிற்காலத்தில் செய்தனர். ஆரிய ஏமாற்றைச் சரிசெய்யும் பொருட்டாகவோ என்னவோ, அதே இடையர் குலத்தில், திருமூலர் அவதரித்தார் போலும்!)

(இடையர் குலத்தில் பிறந்த ஒருவர் இயற்றிய ‘திருமந்திரம்’ தமிழ் ஆகம நூல் ஆகலாமா என்று எண்ணிய வருணசாதிமுறையைப் பின்பற்றும் ஆரிய அடிவருடிகளான சில தன்னலத் தமிழர்கள், வேறு ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.

அதன்படி, திருக்கயிலையில் வாழ்ந்த சிவயோகியார் ஒருவர், அகத்திய முனிவரைத் தரிசிக்க தென்திசை வந்தபோது, இறந்துபோன மூலன் என்னும் இடையனின் உடலில் புகுந்தார் என்று புராணம் புனைந்து உலவ விட்டனர். இப்பொய்ப் புராணமே பெரியபுராணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது என்பது வேதனையான கதை.)

திருமூலர் அவதரித்ததன் காரணம்!

இப்பிறவியில் ஆற்ற வேண்டிய நற்காரியங்களை விட்டுவிட்டு, மறுபிறவியில் நற்கதியையும், துறக்கம் என்னும் இந்திரலோக வாழ்வையும் வேண்டி, ஆரியவைதிகப் பிராமணர்களுக்குப் பெரும்பொருள் தானமாகக் கொடுத்து, வேதவேள்விகள் செய்வது தேவையற்றது என்றும்,

இறைவனை மனத்தால் முயன்று சிந்தித்தால் அதுவே நற்தவம் ஆகும் என்று முதல் இரண்டு வரிகளில் தன் சீடர்களுக்கு உபதேசம் செய்த திருமூல தேவநாயனார், அடுத்துவரும் இரண்டு அடிகளில்,

இறைவன் திருமூலராகிய தம்மைப் படைத்ததன் நோக்கம், இறை உண்மைகளை(இறைவனை) நன்றாகத் தமிழில் திருமந்திரமாக இயற்றும் பணியைச் செய்வதற்கே என்று அருளிய திருமந்திரம் உங்களுக்காக:

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது?
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்!
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே. திருமந்திரம் 81.

இறைவனை அடையக் கைகொடுக்கும் மந்திரம்தான் திருமந்திரம் என்பதை, மனதில் உள்வாங்கிக் கொண்டால், திருமூலரின் பின்வரும் திருமந்திரம் இன்னும் அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சும்.

சிவவழிபாடு செய்து இறைவனை அடைய விரும்பும் ஒருவர் மனம், மொழி, மெய் எனப்படும் மூன்று கருவி-கரணங்களால் பெறவேண்டிய தகுதியை உணர்த்தும் நூல் திருமந்திரம்.

“எனக்குள் இருக்கும் இறைவன்பால் நான் உண்மையான அன்பு கொண்டால், அவன் வெளிப்பட்டுத் தோன்றுவானா?”, என்று சீடர் ஒருவர் கேட்க, திருமூலர்

“மனம் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்யும் பக்குவத்தைப் பெறுவதே மனம் என்னும் கருவியால் ஒருவன் ஈட்ட வேண்டிய தகுதியாகும்.” என்ற திருமூலரிடம்,

“அப்படியானால், ஐயனே! எனக்கு ‘அன்பு’ என்பதன் பொருளை உணர்த்தி அருளுக”, என்று சீடன் வேண்ட, சிவகுருநாதன் திருமூலர் சொல்கிறார்:

‘அன்பு’ என்ற சொல்லின் பொருள்!

“அன்பும் சிவமும் இரண்டு பொருட்கள் என்பார்கள் அறிவில்லாதவர்கள்; அத்தகையோர் அன்புதான் சிவமாக இருக்கின்றது என்பதை அறிய மாட்டார்கள்! இந்த அறியாமை நீங்கி, அவர்களுக்கு அன்பே சிவமாக இருப்பது அறிந்தவுடன், அவர்களும் அன்பு வடிவாகி, சிவமாகி, உலகோருக்குத் தொண்டு செய்து இவ்வுலகத்திலேயே சிவமாக அமர்ந்து வாழ்வார்கள்.” என்பதாகும்.

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்;
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்;
அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமாக அமர்ந்து இருந்தாரே! – திருமந்திரம்

“ஐயனே! ‘மொழி’ என்னும் கருவியால் ஈட்ட வேண்டிய தகுதி யாது என்பதையும் தாங்களே உணர்த்தி அருளவேண்டும்!”, என்று சீடன் வேண்ட,

“மொழி என்பது உடல்மொழி, கைமொழி, வாய்மொழி என்ற அனைத்தும் உள்ளடக்கிய ஈகை!”, என்றார் சிவகுருநாதர் திருமூலர்.

“ஐயனே! இவ்வுலகில், இறைவனுக்கு மலரிட்டுப் பூசனை செய்யும் பொருட்டுகூட பொருள் இல்லாத வறியவர்கள் எவ்வாறு ஐயம் (தானம்) என்னும் ஈகை புரிய இயலும் என்பதை அடியேனுக்கு விளக்கியஅருள வேண்டும்”, என்று சீடன் பணிவாக விண்ணப்பிக்க,

வசதி இல்லாதவர்களால் ‘ஈகை'(தானம்) செய்ய இயலுமா?

திருமூலர் சொல்லலானார்: “அப்பனே! இறைவன் மனிதனிடம் மலரிட்டுப் பூசனை செய்ய வேண்டும் என்று எப்போதாவது கேட்டானா? அன்புதான் இறைவனைப் பூசிப்பதற்கான நன்மலர் என்பதை அறிவாயாக!

கையில் கிடைக்கும் ஓர் பச்சிலை கொண்டு அன்பால் இறைவனைப் பூசிப்பது யாவருக்கும் முடியக்கூடியதுதானே! உலகோருக்குப் பால்பொழியும் பசுவிற்கு நன்றி சொல்லுவதற்கு, ஒரு வாய் புல்லைக் கொடுக்கும் ஈகை யாவருக்கும் முடியக்கூடியதுதானே!

அவரவர் உண்ணும் உணவில் ஒரு கைப்பிடியைப் வறியவர்க்குக் கொடுக்கும் ஈகை யாவருக்கும் முடியக்கூடியதுதானே! இவை அனைத்திற்கும் வாய்ப்பு இல்லாது போனாலும், பிறருக்கு இனிய சொற்களைப் பேசும் ஈகை யாவருக்கும் முடியக்கூடியதுதானே! ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்துவதும், ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவும் அனைவராலும் முடியக்கூடிய ஈகை”,

என்று அன்பால் ஈகை புரியும் வழி சொல்லும் பின்வரும் திருமந்திரத்தை அருளினார் திருமூலதேவநாயனார்.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. திருமந்திரம் 252.

“ஐயனே! மனம் என்னும் கருவியால் பிற உயிர்களிடம் அன்பு செலுத்துவது, மொழி என்னும் கருவியால் ஈகை புரிவது என்பதை உணர்த்தி அருளினீர்கள்.

இனி, மெய் என்னும் இவ்வுடல் கருவிகொண்டு, இறைவனை அறிய நாங்கள் செய்ய வேண்டியவைகளை உணர்த்தியருள வேண்டுகிறோம்”, என்றனர் சீடர்கள்!

இறைவன் மனிதனின் ஊன்-உடலில் இருக்கிறான்!

“இறைவனை உணர்ந்து அறிந்ததால், யான் பெற்ற இன்பத்தை, உங்கள் மூலம், இவ்வையகத்தில் உள்ளோர் அனைவரும் பெற்று இன்புறட்டும்!

தூய வான்வெளியில், குணங்களுக்கு அப்பாற்பட்ட நிர்குணப் பிரமமாக உள்ளான் என்று வேதாந்தங்கள் சொல்லும் மறைப்பொருளாம் பரம்பொருள், பிரமம் என்னும் இறைவனைப் பற்றிய ஓர் உண்மையை உங்களுக்கு இப்போது உபதேசிக்கின்றேன் கேளுங்கள்!

பிரமம் என்று வேதமறைகள் முழங்கும் இறைவன் வான்வெளியில் இல்லை! உங்களுடைய ஊன்-உடம்பைப் பற்றிகொண்டு இருக்கும் உங்கள் உயிருக்குள் உயிராய் நிற்கிறான்;

“தான்” என்னும் உயிரே இறைவனைப் பற்றும் மந்திரம்!

உணர்வால் அவனை நீங்கள் உற்று அறிய உதவும் மந்திரம் ‘தான்’ என்னும் உயிராகிய நீங்கள்தான்.

‘தான்’ என்னும் நீங்கள், உணர்வால் எத்துணை அளவு அவனைப் பற்ற முடியுமோ, அத்துணை அளவு சிக்கெனப் பற்றிக் கொள்ளுங்கள்; அவ்வாறு, நீங்கள் பற்றப் பற்ற அவன் உங்களுக்கு வெளிப்பட்டு அருளுவான்!” என்கிறார் சிவகுருநாதன் திருமூலர்.

இப்போது, திருமந்திரத்தைப் படியுங்கள்!

யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்!
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே! திருமந்திரம் 85.

ஒரு சீடர் திருமூலரை நோக்கி, “ஐயனே! வடமொழியின் வேதாந்த பிரம்மசூத்திரம் ‘பிரம்மம் நிர்க்குணன்’ என்று சொல்கின்றது. ‘பிரம்மம் இவ்வுடல் அன்று’, என்றும் சொல்கிறது.

அப்படியானால், ‘பிரமம்’ என்னும் இறைவன் ‘ஊன்-உடலில் இல்லாமல் வானுக்குள்தான் இருக்கிறானோ என்ற ஐயம் என்னை வாட்டி வதைக்கிறது. என் ஐயத்தைப் போக்கி அருளவேண்டும்”, என்று விண்ணப்பித்தார்.

சிற்றுண்டிவேளை வந்ததால், அங்கு வந்த பணியாளர், சீடர்கள் அனைவருக்கும் தேனும், தினைமாவும் தேக்கிலையில் பரிமாறினார்.

ஊனுக்குள் ஒளிந்திருந்த ஈசன்!

திருமூலதேவர் சீடர்களைப் பார்த்துச் சொல்லலானார், “தேனை உண்ணும் போது நீங்கள் உய்த்து உணரும் இனிப்பு இன்பத்திற்கு கருப்பு என்றோ, சிவப்பு என்றோ உங்களால் உருவம் கொடுக்க முடியுமா?

புறத்தே வானுக்குள் ஈசனைத் (பிரமத்தைத்) தேடும் மதியற்றவர்களே! எவ்வாறு தேனுக்குள் இனிப்பு இன்பம் நீங்கள் காண இயலாதவாறு செறிந்து உள்ளீடாக இருந்ததோ, அதுபோல் பேரின்ப மயமான இறைவன் நம் ஊன் – உடம்புக்குள் உலவும் உயிருக்குள்தான் உள்ளீடாக ஒளிந்திருக்கிறான்.” என்றார்.

தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே. – திருமந்திரம்

இன்னுமொரு சீடர், “ஐயனே! ஈசன் ஊனுக்குள் ஒளிந்திருப்பது உண்மையானால், கோயிலில் பகவானுக்குப் படையல் போட்டு வழிபடுவது வீணா? அவை இறைவனுக்குப் போய்ச் சேராதா? அவை வெறும் சடங்குகளா?”, என்று கேள்விமேல் கேள்வி தொடுத்தார்.

ஏழையின் வயிற்றுக்குச் சோறிட்டால் இறைவனுக்குச் சேரும்!

திருமூலர் புன்னகையுடன், “ஆம் குழந்தாய்! கோயிலில் வரைந்து வைக்கப்பட்ட பகவானின் திருவுருவத்தின் முன்னர் நீ படைக்கும் படையல், நடமாடும் கோயில்களான ஊன்-உடல்களில் வாழும் நம் இறைவனுக்கு ஒருபோதும் சென்று சேருவதில்லை.

ஆனால், நடமாடும் கோயில்களான ஏழை மனிதர்களின் ஊன்-உடல்களில் வாழும் நம் இறைவனுக்கு நீ ஒன்று கொடுத்தாய் என்றால், அது கோயிலில் வரைந்து வைக்கப்பட்ட பகவானிடம் உடனே சென்று சேர்ந்துவிடும்!” என்று அருளினார்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே – திருமந்திரம்

இன்னுமொரு சீடர், “ஐயனே! படமாகக் கோயிலுக்கு கோபுரவாசல் உண்டு! கோயிலுக்குள் இறைவன் சிவலிங்கமாக எழுந்தருளியுள்ளான்!

அவன் திருவுருவை நாம் தெளிவாகக் காண, காளாமணி விளக்குகள் கொண்டு பூசகர் காட்டுவார்.

இத்தகைய வழிபாடு ஊனுடம்பில் வாழும் இறைவனுக்குச் செய்வது முடியக்கூடிய செயலா என்பதை அடியேனுக்கு விளக்கி அருள விண்ணப்பிக்கிறேன்!”, என்றார்.

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்!

திருமூலர் சிரித்துக்கொண்டே, “அப்பனே! உள்ளத்தினும் பெரிய கோயில் இறைவனுக்கு இப்பரந்த அண்டசராசரத்தில் எங்குமே இல்லை! ஊன் – உடம்பே இறைவனின் ஆலயம்!

வள்ளல்பிரானுக்கு, அவன் திருப்பெயரைச் சொல்லும் வாயே கோபுரவாயில் ஆகும்.

ஆகம விதிகளின்படி உருவமும்-அருவமும் ஆன சிவலிங்கத்துக்குள் இறைவன் எழுந்தருளியிருப்பதைப்போல், உருவமான உடம்பினுள் அருவமாக இருக்கும் சீவன் என்னும் உயிர் சிவலிங்கம் என்பதையும், சீவனுக்குள் எழுந்தருளியிருப்பவன் சிவபெருமான் என்பதையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர்கள் அறிவார்கள்.

அவ்வாறு அறிந்தவர்களுக்கு, அவர்கள் உடலில் பொருந்திய கள்ளப் புலன்களான மெய்-வாய்-மூக்கு, செவி, கண் ஆகிய ஐந்தும் காளாமணி விளக்குகளாக மாறி, இறைவனின் திருமுகத்தைக் காட்டும் “, என்று அருளினார்.

“உள்ளம் பெருங்கோயில்! ஊனுடம்பு ஆலயம்!
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்!
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்!
கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே” – திருமந்திரம்

(ஏன் ‘கள்ளப் புலன் ஐந்தும் என்று பெருமான் திருமூலர் சொன்னார்? மனிதனின் அறிவு வளர்ச்சி, கண்ணால் பார்த்தல், செவியால் கேட்டல், மூக்கால் நுகர்தல், உடலால் உணர்தல், நாவால் சுவைத்தாலும், பேசுதலும் ஆகிய செயல்கள் மனம் வழியே செயல்படுட்டு, மூளையில் பதிவாகிறது. இப்புலன்கள் ஐந்தும் உலகப் பொருட்களை மட்டுமே உணர்த்தி, சிற்றறிவு என்னும் உலகஅறிவு தருகின்றன.

இறைவன் அருளால், இறைவனை உணரும் முற்றறிவு பெறவும் இப்புலன்கள் ஒளிவிளக்குகள் போல் உதவும் என்பதையே, ‘கள்ளப்புலன் ஐந்தும் காளாமணி விளக்கே’ என்றார்.)

https://ta.quora.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81


முதலாவது குறளில் (தெய்வத்தான் ஆகா…. ) ஊழை முயற்சியால் வெல்லலாம், கடவுளாலேயே முடியாததனை கடும் முயற்சியால் முடிக்கலாம் எனப் பகுத்தறிவு பேசும் வள்ளுவன், இரண்டாவது குறளில் (ஊழிற் பெருவலி… ) ஊழை வெல்ல முடியாது எனக்கூறி ஏன் தனக்குத்தானே முரண்படுகின்றார் என எண்ணியதுண்டா? எனக்கும் இந்தக் குழப்பம் முன்பு இருந்தது. இப்போது ஆசிவகம் எனும் மதத்தைப் பற்றிய சில புரிதல்களின் பின்பு , அக் குழப்பம் நீங்கிவிட்டது. வள்ளுவர் காலத்தில் தமிழர்களிடையே ஆசிவகம்,பவுத்தம்,சமணம் (ஜைனம்) மூன்று முதன்மையான மதங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. வைதீகம் (இன்றைய இந்து) அப்போதுதான் நுழையத்தொடங்கியிருந்தது. மதமற்ற சங்ககாலத் தமிழரிடையே வைதீக-வேதக் கருத்துக்களை எதிர்த்தே இம் மூன்று மதங்களும் முதன்மைபெற்றிருந்தன. இவை மூன்றுமே வேத மறுப்புடன், கடவுள் (எல்லாம் வல்ல)மறுப்பினையும் கொண்டவை. அவற்றுள் ஒன்றான ஆசிவகத்தின் கோட்பாடே ஊழ். இந்த ஊழிற்கான விளக்கம் பலவாறு சொல்லப்பட்டாலும் பொதுவாக தலைவிதி (fate), வாய்ப்பு(luck), இயற்கை வகுத்த பாதை (வகுத்தான் வகுத்த வகை ) என்ற பொருள்களில் விளங்கிக்கொள்ளலாம். இந்த ஊழ் தொடர்புடைய செய்திகளைச் சங்ககாலப் பாடல்களிலும் காணலாம். இந்த ஊழினை அடிப்படையாகக் கொண்டே ஆகூழ் (நல்லூழ்)=Good luck , போகூழ் (தீயூழ்)= Bad luck போன்ற சிறப்பான தமிழ்ச் சொற்கள் உருவாகின (அதிஸ்டம், துரதிஸ்டம் என்பன தமிழ்ச் சொற்களல்ல என்பன மட்டுமல்லாமல், அவை ஆகூழ்-போகூழ் போன்ற ஆழமான பொருளுடையனவல்ல).

ஆகூழ்::: (Luck)
தமிழில் ஒரு பழமொழி உண்டு. “கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிரித்துக் கொண்டு வந்து கொடுக்கும்”. இதுதான் ஆகூழ்.அதாவது நீங்கள் ஒன்றும் வேண்டாம் என வீட்டினையே பூட்டிவிட்டிருந்தாலும், நற்பேறு உங்களை வந்தடையும் என்பதே.

போகூழ்:::: (Bad luck)
இதனையும் ஒரு பழமொழி மூலமே விளக்கலாம். “ பட்டகாலிலேயே படும்” . அதாவது தொடர்ந்து இன்னல்கள் வருவது. இதனையே போகூழ் என்பர்.

“பாவம் “ என்ற வடசொல்லிற்கான தமிழ்ச்சொல் கூட ஊழ்கம்.

மேற்குறித்த விளக்கங்கள் மூலம் “ ஊழ்” தமிழர் வாழ்வில் செலுத்திய தாக்கத்தினை அறியலாம். இதனையே வள்ளுவரின் ஊழ் என்ற அதிகாரத்தின் (அதிகாரத்தை அவர் வகுக்கவில்லையாயினும் குறள்கள் அவரினதே) கீழ் வரும் குறள்கள் விளக்குகின்றன.

அவ்வாறாயின் படத்தில் முதலாவதாகவுள்ள குறளினை ஏன் கூறுகின்றார். அது பவுத்த மதத்தின் தாக்கம். மணிமேகலை காப்பியத்தில் சமயக்கணக்கர் திறம் கேட்ட காதையில் மணிமேகலை ஆசிவகத்தினை எதிர்த்து வழக்காடும்போது “ஊழ் தான் எல்லாம் எனில் மனித முயற்சிக்கு என்ன பயன்?” எனக் கேள்வி கேட்கின்றார். வேறு புறக்காரணங்களுடன் இவ்வாறான கேள்விகள் மூலமே பவுத்தம் ஆசிவகத்தினை வெற்றிகொள்கின்றது. இவ்வாறான கேள்விக்கான பதிலினையே வள்ளுவரும் வழங்குகின்றார்.

குறள் மதசார்பற்றது::::
மேற்குறித்த விளக்கத்தின் ஊடாக வள்ளுவன் ஆசிவக-பவுத்த மதப் பரப்புரை செய்தார் என நான் கூறவில்லை. குறள் மதசார்பற்றது. அதன் வேலை அறம் கற்பிப்பதே தவிர, மதப் பரப்புரையல்ல. நான் கூறுவதெல்லாம் வள்ளுவர் குறள்களில் அக்கால நம்பிக்கைகள் செலுத்திய தாக்கத்தினையே.

வள்ளுவர் முரண்பட்ட குறள்களை கூறுவது சூழல் வேறுபாடே
அதாவது ஒருவர் கடுமையாக முயற்சிசெய்து கமஞ்செய்து பயிர்கள் வளரும்போது, ஒரு இயற்கைப் பேரிடர் மூலம் எல்லாம் அழிந்துவிடுகின்றது என வைப்போம், அவரிற்கு ஊழை வலியுறுத்தும் குறள்கள். அவரினை ஆறுதல்படுத்த அக் குறள்கள்.
அதற்காக ஒருவர் ஊழ் வழியேதான் எல்லாம் நடக்கும் என நினைத்து செயற்படாமலேயே இருந்தால், முயற்சிக்கும் ஏற்ற பலன் உண்டு, ஊழின் தாக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும் (மெய்வருத்தக் கூலி தரும்) என்ற குறள்.
வள்ளுவன் முரண்படவில்லை. சூழல்தான் வேறுபடுகின்றது. சூழலிற்கேற்ப குறளைப் பயன்படுத்துவது எங்களது பொறுப்பு.

Be the first to comment

Leave a Reply