சோதிடப் புரட்டு (66 – 72)

சோதிடப் புரட்டு (66)

ஆன்மீகமும் அறிவியலும்!

இற்றை நாளில் சோதிடர்கள் தங்களது சோதிட சாத்திரம் அறிவியல் சார்ந்தது என்று சொல்லத் தொடங்கியுள்ளார்கள். சோதிடர்கள் மட்டுமல்ல வேதாந்திகள், சித்தாந்திகள், ஆன்மீகவாதிகள், மதவாதிகள் என எல்லோரும் தங்கள் கோட்பாட்டின் உள்ளுறை (உட்பொருள்) அறிவியல் சார்ந்தது எனப் புது விளக்கம் கொடுக்கிறார்கள். பேச்சுத் தமிழில் “கரடி” விடுகிறார்கள்!

சொல்வதை அறிவியலோடு முடிச்சுப் போட்டுச் சொன்னால் மட்டுமே தங்கள் பக்தி வாணிகத்தைத் தொடர்ந்து நடத்த முடியும் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிகிறது. அந்த மட்டில் அவர்கள் புத்திசாலிகள் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மார்ச்சு 7 2004 இல் வெளிவந்த பார்ப்பன நாளேடான தினமலர் (ஞாயிறு சிறப்பு மலர்)  ‘ஜாதகம் மரபணு அறிவியல்!’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

‘ஜாதகம் என்றால் பொய் பித்தலாட்டம்  என்கிறது சில ‘பகுத்தறிவு’கள்.  ஜாதகம் பொய்யா? இல்லை! ஜாதகம் இந்து ஆன்மீகத்தின் அற்புதக் கணிதம். இது ஆதாரமற்ற பிரச்சாரப் பேச்சு அல்ல…. அறிவியல் ரீதியான ஆதாரங்கள் கொண்ட உண்மை!’ என்கிறார் கட்டுரையாளர். தொடர்ந்து தனது வாதத்தை நியாயப்படுத்தப் பல கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

முதலில் இந்து ஆன்மீகத்துக்கும் கணிதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அற்புதக் கணிதம் என்றோ ஆன்மீகக் கணிதம் என்றோ ஒரு கணிதம் இல்லை. இந்து, இஸ்லாம், கிறித்தவம் என்றெல்லாம் கணிதம் இல்லை. இருப்பதெல்லாம் ஒரு கணிதந்தான்.

வேத கணிதம் என்று சொல்கிறார்களே? அது சில கூட்டல் பெருக்கல்களை குறுக்கு வழியில் விடை காண்பது பற்றிய வாய்ப்பாடுதான். அது கிரேக்கர்களுடைய கணிதத்துக்கு உறைபோடக் கூடக் காணாது.

‘சாதகம் பொய் பித்தலாட்டம் என்கிறது சில பகுத்தறிவுகள’; என அஃறிணையில் எழுதும் தினமலர் கட்டுரையாளர் தன்னைப் பகுத்தறிவே இல்லாத விலங்கு என்று சொல்கிறாரா?;

உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு உண்டு என்பது ஊர் உலகம் அறிந்த உண்மை!

இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொல்காப்பியர் புலன் அடிப்படையில் உயிர்களைப் பாகுபடுத்தி மரபியலில் விளக்கியுள்ளார். இந்த உயிர்ப்பாகுபாடு சமண மதத்துக்கு உரியது.

உடம்பால் மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள்.
உடம்பாலும் நாவாலும் அறிவன இருஅறிவு உயிர்கள்.
உடம்பு, நா, மூக்கு மூன்றாலும் அறிவன மூஅறிவு உயிர்கள்.
உடம்பு, நா, மூக்கு, கண் நான்காலும் அறிவன நாலறிவு உயிர்கள்.
உடம்பு, நா, மூக்கு, கண், காது இவை அய் அறிவு உயிர்கள்.
இந்த அய்ந்தோடு மனத்தாலும் அறிவன ஆறறி உயிர்கள்.

உடம்பு, நா, மூக்கு, கண், செவி இந்த அய்ந்;தறிவு படைத்தவை பறவைகள் மற்றும் விலங்குகள். இவற்றோடு மனதால் சிந்திக்கும் ஆறாவது அறிவு படைத்தவனே மனிதன்.

மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலேயே பொருள் முதன்மையானதா? அல்லது அது பற்றிய கருத்து முதன்மையானதா ? எதிலிருந்து எது தோன்றியது? இந்தக் கேள்விகளுக்கு தத்துவவாதிகள் விடை காண முயன்றபோது அவர்கள் இரு கன்னைகளாகப் பிரிந்து நின்றார்கள். இது பற்றி (சோதிடப் புரட்டு 42) ஏற்கனவே எழுதியுள்ளேன்.

பொருள்தான் முதன்மையானது, அதன் பிரதிபலிப்பே கருத்து என்று சொன்னவர்கள் பொருள் முதல்வாதிகளாகவும், கருத்துத்தான் முதன்மையானது, அதன் பிரதிபலிப்புத்தான் பொருள் என்று கூறியவர்கள் கருத்து முதல்வாதிகளாகவும் அடையாளம் காணப்பட்டனர்.

உலோகம் என்பது வடமொழிச் சொல். அதற்கு ஈடான தமிழ்ச்சொல் பொருள். உலோகாயதவாதிகளைத் தமிழில் பொருள்முதல்வாதிகள் என அழைக்கிறார்கள்.

உலோகாயத வாதிகள் கருத்தியல் வாதிகளின் தத்துவத்தை நிராகரித்தார்கள்.

1) அண்டம் இயற்கையானது. என்றென்றும் உள்ளது, யாராலும் படைக்கப்படவில்லை. உலகம் மட்டுமே, காட்சி ஒன்றே மெய்.

2) நிலம், நீர், தீ, வளி எனும் நான்கு பூதங்களே மெய்ப் பொருள்.

3) பூதங்களின் சேர்க்கையால் தோன்றிப் பிரிவால் மாய்வதாகிய உடம்பினிடத்தே அறிவு, கள்ளில் களிப்புப்போல வெளிப்பட்டு அழியும்.

4) பரலோகம், சொர்க்கம், நரகம், மறுமை இல்லை.

5) காயமே (உடம்பு) ஆன்மா (உயிர்), காயத்திற்கு வேறாக ஆன்மா இல்லை.

6) வினை இல்லை.

7) கடவுள் இல்லை

8) இன்பமும் பொருளுமே உறுதிப்பொருட்கள் (புருஷார்த்தங்கள்). இன்ப துன்பத்தில் இருந்து விடுபடுபது என்பது மோசடி ஆகும். இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்க்கை. இன்பத்தின் அளவைப் பெருக்குவதும் துன்பத்தின் அளவைக் குறைப்பதுமே வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

பிற்காலத்தில் கார்ல் மார்க்ஸ் கருத்தியல் முதல்வாதத்துக்கு எதிராக பொருள்முதல் (அயவநசயைடளைஅ) வாதத்தை முன்வைத்தார். ஆனால், அவருக்கு முன்பே பொருள்முதல் வாதக் கோட்பாடு இருந்திருக்கிறது.

வீட்டுக்குள் இருக்கும் ஒருவர் பலகணி வழியே வெளியே பார்க்கும் பொழுது எதிரில் நிற்கும் மரம் அவரது கண்ணுக்குத் தெரிகிறது. அறிவியல் அடிப்படையில் சொன்னால் மரத்தின் மீது ஒளிக் கதிர்கள் பட்டுத் தெறித்துக் கண்ணில் உள்ள திரையில் வந்து விழுந்து அந்தக் காட்சி மூளைக்குச் செய்தியாக அனுப்பப் படும்போது மரம் தெரிகிறது. உடனே மூளை அந்தக் காட்சியைப் பதிவு செய்து வைக்கிறது.

மரம் ஒரு பொருள் (matter). எமது அய்ம்பொறி ஒவ்வொன்றும் ஒரு பொருள், புலனறிவையும் பட்டறிவையும் மனதில் பதிவு செய்யும் மூளையும் ஒரு பொருள்தான். நாம் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் மரம் ஒரு பொருளாகவே இருக்கும்.

மூளை நுட்பமான ஒரு பொருள், மூளை சிந்திக்க வல்லது, படைப்பாற்றல் கொண்டது, பகுத்தறிவுக்கு  இட்டுச் செல்லும் ஆற்றல் படைத்தது ஆகும்.  புற உலகோடு உறவு கொள்ளும் அதே சமயம் உடம்பின் அனைத்து உறுப்புக்களது செயல்பாடுகளையும் அது ஒருங்கிணைக்கிறது! அதனை மனம் என்கிறோம். மனத்தின் இயக்கம் சிந்தனையாகும்.  சிந்தனை மாறும்  தன்மையுடையது.

பொருளில் இருந்தே அனைத்தும் தோன்றின. புல், பூண்டு, புழு, மரம், பறவை, விலங்குகள், மனிதர்கள் பொருளின் மாற்றத்தால் தோன்றியவையே. அவை யாரோ ஒருவரால் வெளியில் இருந்து படைக்கப்பட்டவை அல்ல.

அண்டம் என்பது வெளி, காலம், பொருள், ஆற்றல் இவற்றால் ஆனது.  பொருளுக்குக் காலமும் இடமும் (வுiஅந யனெ ளுpயஉந) உண்டு. அவற்றை ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாது. பொருள் எதிர் மின்மம் (நடநஉவசழளெ)  நொதுமம் (நெரவசழளெ)  நேர்மின்மம் (pசழவழளெ)  பொடிமம் (ஙரயசமள) டிழளழளெஇ  அரழளெ  போன்ற நுண்ணிய துகள்களால் ஆனது.

பொருள் தொடக்கமும் முடிவும் இல்லாதது. பொருளைப் படைக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. பொருளை ஆற்றலாக மட்டுமே மாற்ற முடியும்.

பொருளிலிருந்தே கருத்துக்கள் தோன்றுகின்றன. மாமரம் என்ற கருத்து மரத்தைப் பார்ப்பதால் மூளையில் பதிவாகிறது. மரத்தை மா மரம், தென்னை மரம், பனை மரம் என மூளை பகுத்துத் தெரிந்து கொள்வது மனிதனிடம் காணப்படும் ஆறாவது அறிவான பகுத்தறிவு மூலமே.

எனவே பொருளில் இருந்தே கருத்துக்கள் தோன்றுகின்றன. கருத்தில் இருந்து பொருள்கள் தோன்றுவதில்லை. இந்த உண்மையை தெளிவாக உணர்ந்து கொண்டால் சோதிடம் போன்ற மூடநம்பிக்கையில் இருந்து மனம் விடுபடுவது எளிதாகிவிடும்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பின்தான் மனிதன் கடவுளைப் படைத்தான். அச்சம் காரணமாகவே கடவுள் படைக்கப்பட்டார். கருத்தியல் வாயிலாகவே அந்த அச்சம் மனிதனது மனதில் பதியப்பட்டது. அறிவியல் மூலம் அந்த அச்சத்தை நீ;க்கினால் கடவுள் பற்றிய அச்சமும் மறைந்து கடவுளும் மறைந்து விடுவார்!

சென்ற தலைமுறையில் வாழ்ந்த மக்கள் மனதில் பேய், பிசாசு, பூதம், இடி, மின்னல், புயல், நிலநடுக்கம், எரிமலை பற்றிய அச்சம்  இருந்தது. மாரடைப்பால் மாண்டவர்களைப் பேய் அடித்து மாண்டதாகச் சொன்னார்கள். எலும்புருக்கி நோய் பிடித்தவர்களைப் பார்த்துப் பேய் உமிழ்வதாகச் சொன்னார்கள்!

ஊரில் உள்ள ஒவ்வொரு புளியமரத்திலும் முனி இருந்தார், வேப்ப மரத்தில் வைரவர் இருந்தார், கொள்ளிவால்ப்; பேய், கொத்திப்பேய், குறளிப்பேய், சுடலைமாடன், காத்தவராயன், அண்ணமார் இப்படி ஏகப்பட்ட பேய்கள்!

இரவில் புளிய மரத்தில் இருந்த முனி தெருவில் நடப்பதாகவும், நடக்கிற சத்தம் கேட்டதாகவும், நாய்கள் பயந்து குரைத்ததாகவும் ஊரில் உள்ள கிழடுகட்டைகள் பகலில் தங்களுக்குள் கதைப்பார்கள்.

பேய் பிடித்தவர்கள் அய்யனார், அம்மன், முனியப்பர் கோயில் திருவிழாக்களின் போது பேய் ஆடினார்கள். கோயில் பூசாரி மந்திரித்து அந்தப் பேய்களை ஓட்டினார்.

ஆனால், எப்போது ஊர்ப்புறங்களுக்கு மின்சாரம் வந்ததோ அப்போதே பேய்களும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய்விட்டன!

கனடாவில் புளியமரம் வேப்ப மரம் இல்லை. தாய் தந்தையர் பேய்களைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தாலேயொழிய இங்கு வாழும் பிள்ளைகளுக்குப் பேய்கள் பற்றிய பயம் வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

ஆன்மீகமும் சோதிடமும் வெறும் மூடநம்பிக்கையும் பொய்மையும் கொண்ட கருத்துக்களால் ஆன கருத்தியல் (னைநழடழபல).

பரமாத்மா, சீவாத்மா, பதி, பசு, தளை, ஆணவம் கன்மம் மாயை, சொர்க்கம், நரகம் எல்லாமே கருத்தியலே! அவற்றைப் பார்க்க முடியாது.

மனிதனது மனம் உற்பத்தி செய்த சாதி, சமயம், இலக்கியம்,  கல்வி, சட்டம், அரசியல், சித்தாந்தம், வேதாந்தம், சோதிடம், பாவம், புண்ணியம் எல்லாமே கருத்துக்களால் ஆன கருத்தியலே!

புத்தரும், மகாவீரரும் ஒருவகையில் பொருள்முதல் வாதிகளே! இருவரும் உலகத் தோற்றத்துக்கு ஒரு முதல் காரணன் இல்லை என்றார்கள்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் மூடநம்பிக்கைகளுக்குக் கருத்து முதல்வாதமே காரணம்! மனிதனைத் தவிர்ந்த பிற உயிர்களுக்கு உலகம் பற்றிய அறிவில்லை. அவை தன்னுணர்வு பாங்கு கொண்டவை.

சிலந்தி நுட்பமான வலை பின்னுகிறது. தூக்கணாம் குருவி வேலைப்பாட்டுடன் கூடிய கூடு கட்டுகிறது. இதற்கு அவற்றின் உள்ளுணர்வுதான் (iவெரவைழைn) காரணம். அதில் மாற்றம் இருக்காது. ஆனால், மனிதனுக்கு மட்டும் உலகம் பற்றிய ஏதோ ஒரு கருத்துண்டு.

மலைக் குகையில், மரங்களில் வாழ்ந்த மனிதன் மட்டுமே பின்னர் தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி குடிசை கட்டி, குடிசையை வீடாக்கி, வீட்டை மாடியாக்கி, மாடிவீட்டை மாளிகையாக்கி வாழக் கற்றுக் கொண்டான்.

உடையில்லாது அம்மணமாகத் திரிந்த மனிதன் பருத்திச் செடியைப் பயிர் செய்து, பருத்திப் பஞ்சில் இருந்து நூல் திரித்து, நூலில் இருந்து உடை நெய்து அதனை ஆடையாக அணியக் கற்றுக் கொண்டான்.

நாடோடியாகக்  காட்டில் அலைந்து  திரிந்து காய் கனி, கிழங்கு போன்றவற்றை பறித்துண்ட மனிதன் பின்னர் ஒரு இடத்தில் தங்கிக் காடழித்து வயலாக்கிப் பயிரிடக் கற்றுக் கொண்டான்.

காட்டில் மிருகங்களை வேட்டையாடித் தின்ற மனிதன் அவற்றை வீட்டு மிருகங்களாக வசப்படுத்திப் பயனடைந்தான்.

பச்சை இறைச்சியை உண்ட மனிதன் நெருப்பைக் கண்டு பிடித்த பின்னர் அதில் வேக வைத்து உண்டான்.

முதலில் கைகளை அசைத்துத் தனது உணர்வுகளை வெளிப்படுத்திய மனிதன் பின்னர் ஓரசைவுச் சொற்களாக ஒலித்து அவற்றை வெளிப்படுத்தினான்.

அதன் பின்னர் ஈரசைச் சொற்களைப் பயன்படுத்தினான். காலம் செல்லச் செல்ல பல சொற்களைச் சேர்த்து வாக்கியம் ஆக்கிப் பேசக் கற்றுக் கொண்டான்.

அதைத் தொடர்ந்து எழுதவும் கற்றுக் கொண்டான். சித்திர எழுத்;தைத்தான் முதலில் அவன் பயன் படுத்தியிருக்க வேண்டும்.

மனிதரிடம் காணப்படும் இந்த படிமலர்ச்சியை (evolution)  இதே அளவில் வேறு உயிரினங்களிடம்  காணமுடியாது.

வானியலைப்பற்றிய அறிவு வளர வளரச் சோதிடம் பொய் என்பதை இயற்கையை ஆய்வு செய்த அறிவியலாளர்கள் எண்பித்துக் காட்டினார்கள்.

ஏற்கனவே கூறியது போல 16 ஆம் நூற்றாண்டில் கோபெர்னிக்கன்  சூரிய மையக் கோட்பாடு சோதிடத்தின் ஆணி வேரையே பிடுங்கி எறிந்துவிட்டது.

பதினேழாம் நூற்றாண்டில் நியூட்டனின் புவி ஈர்ப்புக் கொள்கை எல்N;லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் சோதிடம் அறிவியல் அடிப்படையற்ற போலிச் சாத்திரம் என்பது  எந்த அய்யத்துக்கும் இடமின்றி மெய்ப்பிக்கப்பட்டது.


தோதிடப் புரட்டு (67)

மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முடியாது!

சோதிடம் கோள்களைப்  பிராமண, சத்திரிய, வைசிக, சூத்திர வருணம் என்றும், ஆண், பெண், அலி என்றும், நீர், நெருப்பு, புவி (பிருதிவி)  காற்று, வானம் (ஆகாயம்) என்றும், பகை (சத்துரு – நட்பு (மித்துரு) உச்சம், ஆட்சி, கேந்திரம், யோகம் (யோகக்காரர்கள்) கண்டம் (மாரகாதிபதிகள்) ஆரோக்கணம் அவரோக்கணம் என்றும் பாகுபடுத்துகிறது.

கோள்களைப் போலலே இராசிகளையும் நீர், நெருப்பு, புவி (பிருதிவி)  காற்று, வானம் (ஆகாசம்) என்றும், ஆண் பெண் என்றும், பகல் இரவு எனவும், சரம், ஸ்திரம், உபயம் எனவும், உச்சம் நீச்சம் எனவும், திதி சூன்யம் எனவும் பிரிக்கிறது.

இவ்வாறு விதிக்கட்டுப்பாடின்றி மனம் போன போக்கில் பகுப்பதற்கும் பிரிப்பதற்கும் வானியல் அடிப்படையில் எதுவித ஏதுவும் இல்லை. வானியலின் படி கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் உயிரற்றவை, உணர்ச்சியற்றவை, அறிவற்றவை ஆகும்!

இந்திய சோதிடம் வானியலாளர்கள் கண்டுபிடித்த யுறேனஸ், நெப்தியூன் புளுட்டோ ஆகிய மூன்று கோள்களையும் கணக்கில் எடுப்பதில்லை. பின் சோதிடம் “அறிவியல் ரீதியான ஆதாரங்கள் கொண்டது” என எப்படிக் கூறமுடியும்?

கடந்த ஆண்டுகளில் புதிதாக 28 பெருங்கோள்களும் 1000 கும் மேற்பட்ட குறுங்கோள்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், சோதிடத்தில் சூரியனையும் சேர்த்து ஒன்பது கோள்கள் மட்டுமே உண்டு. இந்த ஒன்பது கோள்களை வைத்துச் சோதிடர்கள் நடத்தும் வாணிகம் எப்படிச் சரியாகும்?

சோதிடத்தில் ஒரே ஒரு நிலாத்தான் உண்டு. ஆனால், வானியல் 112 பெரிய நிலாக்களும் 16 சிறிய நிலாக்களும் ஆக மொத்தம் 128 நிலாக்கள் உண்டென்கிறது.

சோதிடர்கள் இந்த 128 நிலாக்களில் புவியின் துணைக் கோளான நிலாவை மட்டும் வைத்துப் பலன் கூறிவிட்டு எஞ்சிய 127 நிலாக்களையும் தள்ளி விடுகிறார்கள்.

“சாதகம் அறிவியல் ரீதியான ஆதாரங்களைக் கொண்டது” எனக் கூறும் கட்டுரையாளர் 128 நிலாக்களைத் தள்ளிவிடுவது அறிவியலா?

சென்ற மாத நடுப்பகுதியில் சனிக் கோளுக்கு ஏவப்பட்ட Cassini-Huygens  விண்கலம் முறையே 194,000, 211,000 கிமீ உயரத்தில் இரண்டு புதிய நிலாக்கள் சனிக் கோளை வலம் வருவதைக் கண்டு பிடித்துள்ளது.

முன்னர் கூறியது போல் சோதிடம்  புவி என்னும் கோளைக் கணக்கில் எடுப்பதில்லை. சோதிடம் சொல்லும் நவகோள்களில் ஞாயிறு ஒரு விண்மீன், நிலா ஒரு துணைக்கோள், இராகு கேது கற்பனைக் கோள்கள்,  பின் எப்படிச் சோதிடம் அறிவியலாகும்?

மேலும் “பூமி, கிரகங்கள், சூரியக் குடும்பம் எப்படி உருவானது? பரம் பொருளின் எண்ணத்தில் பிறந்த படைப்பு! எண்ணம் என்று ஆன்மீகம் கூறுவதும் அதிர்வு என்று அறிவியல் கூறுவதும் சரிசமம்தான். ஆன்மீகம், அறிவியல் இரண்டும் கூறுவது ஒரே கருத்துக்தான்! வார்த்தைகள் தான் வேறு!” என்கிறார்.

அண்ட ஆற்றல் கலவையின் (Primordial soup) வெட்பம் 25 கோடி பாரன்கைட் ஆக இருந்தபோது அது வெடித்துச் சிதறி சூரிய குடும்பங்கள், விண்மீன்கள் தோன்றின. அவை உயிரற்ற, அறிவற்ற பருப்போருள் (matter) என்கிறது அறிவியல்.

ஒன்றும் இல்லாமை இல் (சூனியம்) இருந்து தோன்றுவதுதான் படைப்பு! என்றும் உள்ள பொருள் அல்லது ஆற்றImage result for primordial soupல் திரிபாக்கம் ஆவது படிமலர்ச்சி!

பரம்பொருளின் எண்ணத்தில் அண்டம் படைக்கப்பட்டது என ஆன்மீகம் கூறுவதும் அண்டம் வெடித்துச் சிதறி சூரிய குடும்பங்கள், விண்மீன்கள் தோன்றின என அறிவியல் கூறுவதும் எப்படி ஒன்றாகும்?

எனவே  உயிரும் அறிவும் அற்ற அண்டமும் உயிரும் அறிவும் ஆனந்த குணமும் (சத் சித் ஆனந்தம்) உடைய பரம்பொருளும் ஒன்றாக முடியாது.

“மேலும் சந்திரக் கதிர்களும் சூரியக் கதிர்களும் உயிரின இயல்புகளில் தாக்கம் செலுத்துகிறது என்கிறது அறிவியல். கிரகங்களின் கதிர்களுக்கும் மனித வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று தீர்மானிக்கலாம். இதைத்தானே சாதகக்கணிதம் கூறுகிறது? கிரகங்கள், சூரியன் இவற்றின் கதிர் வீச்சு உயிரினங்களின் உடல்களில் தாக்கம் உண்டாக்கும். சூரியக் குடும்பத்தில் இருக்கும் கிரகங்கள் மற்ற நட்சத்திரக் குடும்பங்களை விட நமக்கு அருகில் இருப்பவை. எனவே, மற்ற நட்சத்திரக் குடும்பக் கதிர்களின் ஆதிக்கத்தை விட, நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும் கிரகங்களின் கதிர்களின் ஆதிக்கம்  நம் மீது அதிக அளவில் இருக்கும்” என்கிறார் கட்டுரையாளர்.

சூரியன் மற்றும் சூரியக் குடும்பத்தில் இருக்கும் கோள்களின் கதிர்வீச்சின் தாக்கம் மனிதர்களின் பிறந்த நாள் நேரம் இவற்றின் அடிப்படையில் இருக்க முடியாது என அறிவியல் சொல்கிறது. எந்தத் தாக்கமும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.

“ஒரு குழந்தை பிறக்கு போது, கிரகநிலை அமைப்புகள் எந்த வகையில் இணைந்துள்ளதோ அந்தக் கணக்குதான் ஜாதகமாகக் குறிப்பிடப்படுறது” என்கிறார் தினமலர் கட்டுரையாளர்.

பன்னிரண்டு இராசி மண்டலங்கள் சோதிடர்களால் விதிக் கட்டுப்பாடின்றி செயற்கையாக வரையப்பட்டவை. அதே போல் 12 வீடுகளும் வான் வெளியல் ஞாயிறு செல்வது போல் தோன்றும் 360 பாகை கொண்ட பாதையை (ecliptic) விதிக்கட்டுப்பாடு எதுவுமின்றிப் பிரித்துக் கூறப்படுவதுதான். இந்தப் 12 வீடுகளும் சாதகனது தலை முதல் கால் வரை உள்ள உறுப்புக்களைக் குறிக்கிறது என்பது அழகான வெறும் கற்பனையே!

இராசி வீடுகளில் கிரகங்கள் சஞ்சரிப்பது என்பது வெறும் புலக் காட்சியே. இராசி மண்டலங்களுக்கும் புவிக்கும் இiடையில் பல நூறு ஆயிரம் ஒளியாண்டு இடைவெளி இருக்கிறது. அதே போல் ஒரு விண்மீனுக்கும் இன்னொரு விண் மீனுக்கும் இடையில் பல்லாயிரம் ஒளியாண்டு இடைவெளி இருக்கிறது.

இந்த இராசிகள், வீடுகள், கோள்கள் இவற்றுக்குக் கற்பிக்கப்படும் பலன்கள் தற்போக்காகச் சொல்லப்படும் புனைந்துரையே!

இதில் குழந்தை பிறந்த நாள் நேரம் இவற்றோடு கோள்களையும் இராசிகளையும் வீடுகளையும் தொடர்பு படுத்துவது வெறும் புலக் காட்சி அளவில் செய்யப்படுவதே.

வானிலுள்ள கோள்கள் இராசிகள் எல்லோர்க்கும் பொதுவானது. சோதிடம் சொல்வது போல் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு அமைப்பு இல்லை.

இராசிகள், வீடுகள், கோள்கள் இவற்றைவிட மனிதர்கள் வாழும் சூழல் (நிலம், நீர், தட்பவெட்பம், சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு ஆகியன) கூடுதலான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே சோதிடத்துக்கும் அறிவியலுக்கும் முடிச்சுப் போடுவது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் வீண் வேலையாகும். இரண்டும் ஒன்றை ஒன்று சந்திக்க முடியாத இரு சமாந்தரக் கோடு;கள்!

மேலும் அவர் எழுதுகிறார் “ஒரு குறிப்பிட்ட வகையில் கிரகங்கள் இணைந்துள்ள போது அவற்றின் மொத்தக் கதிர் வீச்சு அளவு ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கும். எனவே அந்தக் கதிர் வீச்சு அளவின் ஆதிக்கம் அந்தக் குழந்தையின் வாழ்வில் ஆதிக்கத்தைச் செலுத்தும்.”

இந்தக் “கதிர் வீச்சு அளவின் ஆதிக்கம்” வெறும் கற்பனை என முன்னரே (புரட்டு 40) விரிவாகப் புள்ளி விபரச் சான்றுகளோடு எண்பித்துள்ளேன்.

புவிக்கும் கோள்களுக்கும் இடையில் உள்ள தொலைவைக் கணக்கில் எடுத்தால் இந்த மேலாண்மை ஒரு மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்பது தெரியவரும்.

புவியில் இருந்து கோள்களின் (ஞாயிறு கோள் அல்ல)  பொதுமேனி கிமீ தொலைவு –

சனி               – 1280.00 மில்லியன் கிமீ (798.30 மில்லியன் கல்)
வியாழன்     – 588.50 மில்லியன் கிமீ (367.04 மில்லியன் கல்)
செவ்வாய்    – 56.00 மில்லியன் கிமீ (35.00 மில்லியன் கல்)
ஞாயிறு        – 149.60 மில்லியன் கிமீ (92.90 மில்லியன் கல்)
வெள்ளி        – 40.00 மில்லியன் கிமீ (24.90 மில்லியன் கல்)
புதன்             – 77.30 மில்லியன் கிமீ (48.21 மில்லியன் கல்)
சந்திரன்        – 384,487 கிமீ (238,909 மைமல்)

இவ்வளவு தொலைவில் உள்ள கோள்களின் கதிர் வீச்சு ஒன்று சேர்ந்து புவியில் ஒரு நாட்டில், ஓர் ஊரில், ஒரு வீட்டில், ஓர் அறையில், நான்கு சுவர்களுக்கு இடையில், ஒரு குறிப்பிட்ட நாளில், நேரத்தில் பிறந்த குழந்தையின் மீது வீசுமா? தாக்குமா? அதனால் குழந்தை பாதிக்கப்படுமா? அறிவியல் இல்லை என்கிறது.

அப்படியே அந்தக் கதிர் வீச்சு தாக்குவதற்கும் அந்தக் குழந்தையின் உடல்நலம், வளர்ச்சி, நுண்ணறிவு, கல்வி, வேலைவாய்ப்பு, வயது, ஆளுமை, வறுமை, செல்வம், கணவன்-மனைவி உறவு, மணமுறிவு, கடன்தொல்லை, மலட்டுத்தன்மை, தேர்தலில் வெற்றி தோல்வி, மாமியார் மருமகள் சண்டை போன்றவற்றுக்கும் என்ன தொடர்பு?

ஒரு தனி மனிதனின் வாழ்வியல் கூறுகள், அவனின் பண்பு நலன்கள், கேடுகள் இவற்றுக்கு அவனது மரபியலும் (genetics) சூழலும் (environment) காரணிகள் என்பதே உளவியல், சமூகவியல் அறிவியல் ஆய்வுகளின் முடிவாகும்!

இறுதியாகக் கட்டுரையாளர் “ஜாதகத்தில் இருக்கும் கிரக இணைப்புச் சேர்க்கையால் ஏற்படும் பாதிப்புக்களைச் சில பரிகாரங்களால் (கிரகக் கதிர் வீச்சு அளவுகளை மாற்றும் முறை) சரி செய்யலாம் என்கிறது இந்து ஆன்மீகம். மரபணுக்களில் இருக்கும் சில அம்சங்களை நீக்கியும் சில அம்சங்களைப் புதிதாகச் சேர்த்தும் சரி செய்யலாம் என்கிறது நவீன அறிவியல்.”

சனி தோசம் செவ்வாய் தோசம் உள்ள ஒருவன் எள்ளெண்ணெய் எரித்தல், நவக்கிரகங்களைச் சுற்றி வருதல், அருச்சனை செய்தல், அபிசேகம் செய்தல், காகத்துக்குப் படைத்தல் முதலான கிரக சாந்தி பரிகாரம் செய்தால் அந்தக் கோள்களின் கதிர் வீச்சு அளவுகளை மாற்றி விட முடியுமா? இதனைச் சான்றுகளோடு மெய்ப்பிக்க முடியுமா? இந்தப் பரிகாரம் என்பது உழையாது, உடம்பை வளையாது, இருந்த இடத்தில் இருந்து மக்களைச் சுரண்டுவதற்குச் சோம்பேறி சோதிடர்கள் கண்டுபிடித்த உபாயமாகும்.

மரபணுப் பொறியியல் (genetical engineering) போன்ற அறிவியலும் சோதிடம் என்ற மூடநம்பிக்கையும் சரி சமமாக முடியாது. மரபணுப் பொறியியல் நடைமுறையில் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. கிரக பரிகார தோசத்தையும் மரபணுப் பொறியியலையும் ஒன்றென்பது கோமாளித்தனமானது.

“சாதகம் என்பது கட்டுக் கதை அல்ல. அறிவியல் மதமான இந்து மதத்தின் அற்புதமான வாழ்க்கை வழிகாட்டி” என்று எழுதுவது இந்து சமயத்துக்கு இப்போது எஞ்சி இருக்கும்  கொஞ்சநஞ்ச மதிப்பைபும் போக்கிவிடும்!

இந்து மதம்தான் மனித குலத்தைப் பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் எனப் பிரித்து ஒரு குலத்துக்கு ஒரு நீதி போதிக்கிறது. இந்து மதம்தான் நாட்டில் நாலாயிரம் சாதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்து மதம்தான் பெண்களுக்கு வீடு பேறு இல்லை அவர்கள் பாபப் பிறப்பு என்கிறது. இந்து மதம் வேதங்களைப் பெண்களும் சூத்திரனும் படிக்கக் கூடாது என்கிறது. வேதம் கேட்ட சூத்திரனின் காதில் இரும்பை உருக்கி இரக்கம் காட்டாது ஊற்ற வேண்டும் என்கிறது.

இந்து மதம்தான் கணவனை இழந்த பெண்களை வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றிக் கொன்றது.

இந்து மதம்தான் பெண்களுக்குத் தேவதாசிப்  பட்டம் சூட்டி அவர்களின் கற்பைக் கோயில் அருச்சகர்களும் மணியகாரரும் காமுகர்களும் சூறையாடப் பாதை திறந்து விட்டது.

இந்து மதம்தான் பெண்களுக்கு தேவதாசி  பட்டம் சூட்டி அவர்களின் கற்பைக் காமுகர்கள் சூறையாட வழிவகுத்தது.

இந்து மதம்தான் நந்தனைத் தீக் குளித்து பிராமணனோடு வா என்று ஏமாற்றி  உயிரோடு கொளுத்திவிட்டு அவன் சோதியில் மறைந்தான் என்று கதை கட்டியது. தில்லையில் நந்தன் நுழைந்த ஒன்பதாவது வாசல் தீட்டுப்பட்டதால் இன்றளவும் அது பூட்டப்பட்டுக் கிடக்கிறது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்து மதத்தில் மட்டுமல்ல வேறு எந்த மதத்திலும் அறிவியல் கிடையாது.

கடவுள் ஆறு நாள்களில் அண்டத்தையும் உலகத்தையும் உயிரினங்களையும் படைத்து ஏழாவது நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார் என்பது கட்டுக் கதை. அது போலவே ஆதாமை மண்ணில் இருந்து (உடல் மட்டும்) படைத்து அவன் தூங்கும்போது அவனது விலா எலும்பை எடுத்து ஏவாளைப் படைத்தார் என்பதும் கற்பனைக் கதையே!

மதங்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. கடவுள், படைப்பு, ஆன்மா, நரகம், சொர்க்கம், பாவம் புண்ணியம், தலைவிதி, ஊழ்வினை எல்லாம் மனிதன் கற்பித்த மூடநம்பிக்கையே!

தீமித்தல், காவடி எடுத்தல், செடில்க்; காவடி எடுத்தல், பறவைக் காவடி எடுத்தல், அலகு குத்துதல், வேப்பிலை அடித்தல் போன்றவையும் மூடநம்பிக்கையே!

சோதிடம் புரட்டு, பொய், பித்தலாட்டம் என்று பகுத்தறிவாளர் மட்டும் அல்ல நோபெல் பசிசு பெற்ற உலகத்தின் தலைசிறந்த அறிவியலாளரும் அப்படித்தான் சொல்கின்றனர்.


தோதிடப் புரட்டு (68)

எங்களது எதிர்காலம் எங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது

பல்வேறு அறிவியல் துறையை சார்ந்த 186 புகழ்பெற்ற அறிவியலாளர்கள் (இதில் 18 பேர் நோபல் பசிசு பெற்றவர்கள்)

சோதிடத்துக்கு மறுப்புத் தெரிவித்து  (ழுடிதநஉவழைளெ வழ யுளவசழடழபல)  ஒரு அறிக்கையை 1975 ஆம் ஆண்டு வெளியிட்டனர். இந்த அறிக்கை வுhந ர்ரஅயnளைவ (ளுநிவநஅடிநசஃழுஉவழடிநச 1975) என்ற ஏட்டில் வெளியானது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

‘பல்வேறு அறிவியல்த் துறையைச் சார்ந்த அறிவியலாளர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் சோதிடத்துக்குக் கிடைத்துவரும் அதிகளவு ஒப்புதலையிட்டுக் கவலை அடைந்துள்ளார்கள்.

இதன் கீழ் கையொப்பம் இட்டுள்ள வானியலாளர்கள், வானயியற்பியலாளர்கள் (Astro – phyicists) மற்றும் பல்வேறு துறைசார்ந்த அறிவியலாளர்கள் சோதிடர்கள் தனிப்பட்ட முறையிலும் பலர் அறியவும் கூறும் பலன்களைக் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் பொதுமக்களை எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.

சோதிடத்தை நம்புவோர் அதன் கோட்பாடுகளுக்கு எவ்வித அறிவியல் அடிப்படையும் கிடையாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

பண்டைய காலத்தில் சோதிடர்கள் சொல்லும் பலன்களையும் அறிவுரைகளையும் மக்கள் நம்பினார்கள். காரணம் சோதிடம் மாயமந்திரங்களோடு பின்னிப் பிணைந்து கிடந்ததுதான்.

அவர்கள் வான் வெளியில் காணப்பட்ட பருப்பொருட்கள் கடவுளரின் உறைவிடம் அல்லது சகுனங்கள் என்று நினைத்தார்கள். அதனால் அவை உலகில் நடைபெறும் நிகழ்வுகளோடு மிக நெருங்கிய தொடர்புடையவை என எண்ணினார்கள்.

அவர்களுக்குக் கோள்களும் விண்மீன்களும் உலகில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதைப்பற்றிய அறிவு சிறிதும் இருக்கவில்லை.

இன்று இந்தத் தொலை தூரங்கள் கணக்கிடப் பட்டுவிட்டன. அதனால் கோள்களாலும் அதற்கு அப்பால் காணப்படும் விண்மீன்களாலும் விளைவிக்கக் கூடிய  ஈர்ப்பு விசை மற்றும் தாக்கம் எவ்வளவு நுண்ணளவானது என்பதை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

பிறப்பின் போது இந்தக் கோள்களாலும் விண்மீன்களாலும் ஏற்படுத்தப்படும் தாக்கம் எங்களது எதிர்கால வாழ்க்கையை ஏதோ ஒருவகையில் தீர்மானிக்கிறது என நினைப்பது முற்றிலும் பிழையாகும். அது மட்டுமல்ல, இந்தத் தொலைதூர விண்ணுலக உடலிகள்  (heavenly bodies) இருக்கை சில நாள்களை அல்லது காலத்தை குறிப்பிட்ட வினை செய்வதற்கு சாதகமானது என்றோ அல்லது ஒருவர் பிறந்த இராசி அவர் மற்றவர்களோடு ஒத்துப்போகக் கூடியவர் அல்லது ஒத்துப்போக முடியாதவர் என்பதை முடிவுசெய்கிறது என்பதோ உண்மையல்ல.

மனிதர்கள் ஏன் சோதிடத்தை நம்புகிறார்கள்? எதுவும் நிச்சயமற்ற இன்றைய உலகில் முடிவுகளை எடுப்பதற்கு மற்றவர்களது வழிகாட்டல் இருக்கிறது என்ற எண்ணம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது, தங்களது சக்திக்கு அப்பால் தெய்வ சக்திகளால் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விதியை நம்ப விரும்புகிறார்கள்.

ஆனால், எங்களது எதிர்காலம் எங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது, அது தூரத்துக்  கோள்கள் விண்மீன்களில் அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அறிவும் கல்வியும் அசுர வளர்ச்சியடைந்துள்ள  இன்றைய கால கட்டத்தில் மாயமந்திரத்திலும் மூடநம்பிக்கையிலும் கட்டி எழுப்பப்பட்ட நம்பிக்கைகளை அம்பலப்படுத்துவது அவசியமற்றது என்று எண்ணத் தோன்றும். ஆனால், சோதிடத்தை ஏற்றுக் கொள்ளும் போக்குத் தற்கால சமுதாயத்தின் சகல மட்டங்களிலும் பரவியிருக்கிறது.

குறிப்பாக ஊடகங்கள், புகழ் பெற்ற செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் மற்றும் நூல் வெளியீட்டாளர்கள் சரியாக ஆய்வு செய்யப்படாத தரவுகளைத் தொடர்ந்து பரப்புவது எமக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இது மாதிரியான செயற்பாடு பகுத்தறிவு மற்றும் ஆராயச்சிக்கு மாறான போக்கை வளர்க்வே உதவும்.

போலி சோதிடர்களின் பகட்டான கோரிக்கைகளை நேரடியாகவும் காத்திரமாகவும் எதிர்கொள்வதற்கான காலம் கனிந்துவிட்டது என நாம் நம்புகிறோம்.Image result for heavenly bodies

சோதிடத்தில் தொடர்ந்து நம்பிக்கை வைக்கும் பேர்வழிகள் அந்த நம்பிக்கைக்கு ஆராய்ந்து கண்ட எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டும், உண்மையில் அதற்கு எதிரான வலுவான சான்றுகள் இருந்தும், அதில் நம்பிக்கை வைக்கிறார்கள்.

Sponsoring Committee

(Affiliations, as of 1975, given for identification only.)

Bart J. Bok, emeritus

Professor of Astronomy

University of Arizona

Lawrence E. Jerome

Science Writer

Santa Clara, California

Paul Kurtz

Professor of Philosophy

SUNY at Buffalo

Signed by 183 others, including 18 Nobel Prize winners

“சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை கிடையாது, எங்களது எதிர்காலம் எங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது” என உலகின் தலைசிறந்த இந்த அறிவியலாளர்கள் சொல்வதைப் படித்துவிட்டாவது சோதிடத்தை நம்புவர்கள், நம்பி ஏமாறுபவர்கள் அதையிட்டு மறு சிந்தனை செய்ய வேண்டும். அப்படிச் செய்தார்களேயானால் சோதிடம் ஒரு புரட்டு என்ற முடிவுக்குக் கட்டாயம் வருவார்கள்.

சோதிடம் புரட்டு என்று சொல்பவர்களைப் பார்த்து கேட்கப்படும் ஒரு கேள்வி ‘சோதிடம் பொய் என்றால் அல்லது அதற்கு அடிப்படை இல்லை என்றால் ஏன் மக்கள் அதில் தொடர்ந்து நம்பிக்கை வைக்கிறார்கள்?’ என்பதாகும்.

இதற்கான விடை என்னவென்றால் சோதிடத்தை நம்பும் ஒருவரது மனதில் அது பொய்யில்லை என்ற எண்ணம் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் சோதிடம் முற்றிலும் உளவியல் காரணங்களின் அடிப்படையிலேயே  நம்பப்படுகிறது.

எடுத்துக் காட்டாக போலி விளைவு (pடயஉநடிழ) சோதிடத்தில் இடம்பெறலாம். ஒருவர் அவருக்குத் தெரியாமல் ஒரு இனிப்பு மாத்திரைபை உண்மையான மருந்து என்று நினைத்து சாப்பிட்டாரானால் அவரது ‘நோய்’ மாறக் கூடும். அதே மாதிரி சோதிடத்தை நம்பும் ஒரு வாடிக்கைகாரர் சாதகமான சோதிட பலனைக் கேட்கும் போது அவருக்கு நலமாக இருப்பது போன்ற ஒரு உளவியல் திருப்தி ஏற்படக் கூடும். அது நடைமுறைச் சாத்தியமே.

இதேபோன்ற உளவியல் திருப்தி கல்லைக் கடவுள் என்று நம்பி பூசை, அருச்சனை, அபிசேகம், யாகம், காவடி, சாந்தி, விரதம், திருவிழா, தேரோட்டம், தீர்த்தம் ஆடும்  அடியார்களுக்கும் ஏற்படுகிறது.

மசூதியில் அல்லா என்று பிரார்தனை செய்பவனுக்கும் தேவாலயத்தில் யேசுவே என்று தோத்திரம் செய்பவனுக்கும் இதே உளவியல் திருப்தி ஏற்படுகிறது.

உண்மையில் மருந்தென்று நினைத்து இனிப்பு மாத்திரையைச் சாப்பிடும் நோயாளி பின்னர் அதில் இருந்து விடுபட முடியாது தவிப்பது போல சோதிடம் கடவுள் போன்றவற்றை நம்புவனும் இதே நிலையில்தான் இருக்கிறான். அதனால் பக்க விளைவுகள் கூட அவனுக்கு ஏற்படலாம்!

வேறு பல உளவியல் கோட்பாடுகளும்  தொழிற்;படலாம். சோதிடத்தை நம்பும் ஒருவருக்கு அவரது சாதகத்தைப் பார்த்து எல்லா மனிதர்களிடமும் காணப்படும் பொது சாயல்களைச் சொல்லிவிடலாம்.

எடுத்துக்காட்டாக சாதககாரர் முன் எச்சரிக்கை உடையவர், எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடியவர். மற்றவர்களை நம்பி ஏமாறக்கூடியவர், இரக்க சுபாவம் உடையவர், கை ஓட்டை இப்படிச் சாதககாரர் தன்னைப்பற்றி மற்றவர்கள் எதைச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ அவற்றைச் சொன்னால் எந்தச் சாதககாரரும் அவற்றை விழுங்கி விடுவார். காரணம் அவை எல்லோருக்கும் பொருந்தி வரக்கூடிய பலன்கள ஆகும்;!

தெரிவு செய்யப்பட்ட நினைவு (selective amnesia) ஒருவரைச் சோதிடத்தை நம்பச் செய்யலாம். விமானத்தில் பயணம் செய்துவிட்டு நாடு திரும்பும் ஒருவர் அவரது பொதி காணமால் போய்விட்டால் உடனே சோதிடர் ‘நீங்கள் பயணம் செய்யும் போது சில சிக்கல்கள் ஏற்படலாம்’  என்று சொன்னது அவருக்கு ஞாபகம் வருகிறது. சோதிடர் சொல்லி நிறைவேறாத பலன்களை வசதியாக சாதககாரர்கள் மறந்துவிடுவார்கள்!

மேலும் ஒரு சோதிடர் பல பலன்களைச் சொன்னால் அதில் ஒன்றிரண்டு சரிவர வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் வரட்சி ஏற்படும், வங்காளத்தில் வெள்ளம் ஏற்படும், யப்பானில் நில நடுக்கம் ஏற்படும், பாகிஸ்தானில் இராணுவப் புரட்சி ஏற்படும், இஸ்ரேலில் அரசியல் தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்படுவார், குடும்பத்தில் உயிர் இழப்பு நேரிடும் பொருள் இழப்பு நேரிடும் இப்படி ஏகப்பட்ட பலன்களைச் சொன்னால் அதில் ஏதாவது ஒன்று சரி வரும்! அதை வைத்துக் கொண்டு சோதிடர் தனது தொழிலை வெற்றிகரமாகத் தொடரலாம்!

பல சோதிடர்கள் சாதககாரனை நேரில் பார்த்துப் பலன் சொல்வதையே விரும்புவார்கள். அப்போதுதான் அவரிடம் இருந்து சில தடயங்களை நேரடியாகத் திரட்ட முடியும்.

ஒருவரது சுபாவம், பாங்கு, பரவணி, உடை, பேச்சு, தோற்றம் இவற்றை வைத்துச் சில மணித்துளிகளில் சோதிடர் அவரை எடை போட்டுவிட்டு அவற்றின் அடிப்படையில் சாதகத்தைப் பார்த்துச் சொல்லுவது போல் ஆளைப் பார்த்து எல்லாவற்றையும் சொல்லிவிடுவார்.

சில சோதிடர்கள் சாதககாரர்களுக்குப் பாதகமான பலன்களைச் சொல்லி உளவியல் அடிப்படையில் அவர்களை நோகடிப்பதும் சாகடிப்பதும் உண்டு.

“உனக்கு 18 வயதில் கண்டம்” என்று ஒருவனுக்கு சோதிடர் பலன் சொன்னால் போதும். அது அவன் ஆழ்மனத்தை மிகவும் பாதித்துப் பதினெட்டு வயதைத் தாண்டினாலும் பயத்தால் உணவு உட் கொள்ளாமல் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இறந்து விடுவான். அவனது ஆழ்மனம் அவனையும் அறியாமல் சோதிடர் சொன்னதை மெய்யாக்கி விடுகிறது.

சங்க காலத்தில் தமிழகம் புகுந்த சமணர்கள் தமிழர்களிடையே பரவியிருந்த மூடநம்பிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார்கள். மூடநம்பிக்கைகளை உலக மூடம், தேவ மூடம், பாசாண்டி மூடம் என வகைப்படுத்தி அதற்கு எதிராகப் பரப்புரை செய்தார்கள்.

உடன்கட்டை ஏறுதல், மலையில் இருந்து குதித்து இறத்தல், ஆழமான நீர்நிலைகளில் பாய்ந்து இறத்தல், ஆடு கோழிகளைப் பலியிடுதல் உலக மூடம்.

தேவர்கள், தெய்வங்கள் இவற்றை வணங்கினால் செல்வம் முதலியவற்றைத் தந்து காப்பாற்றுவார்கள் என நம்புவது தேவ மூடம்.

குற்றமுடைய நெறியில் நின்றவர்களைப் பூசித்தால் நன்மை கிடைக்கும் என்று நம்புவது  பாசாண்டி மூடம்.

நாய்க்கு நடுக்கடலில் போனாலும் நக்குத் தண்ணீர்தான் என்பார்கள். நம்மவர்கள் கண்டம் விட்டுக் கண்டம் போனாலும் அங்கும் மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டி காவிக் கொண்டு போயே தீருவோம் என்று கங்கணம் கட்டி நிற்கிறார்கள். அதுவும் எங்கே? புகழ் பூத்த கெப்லர், நியூட்டன், டார்வின், கிறகம் பெல், எடிசன் போன்ற அறிவியலாளர்கள் பிறந்த நாடுகளில்!

அறிவியல் கண்டு பிடிப்புக்கள் மூட நம்பிக்கைகளை ஒழித்து அறிவொளி ஏற்றும் என்று பார்த்தால் அதே அறிவியல் கண்டு பிடிப்புக்களை வைத்து மூட நம்பிக்கைகளை மேலும் பரம்பல் செய்கின்றன.

இந்தப் பணியில் வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், செய்தித்தாள்கள் முதலிடம் வகிக்கின்றன. மலிவான பொழுது போக்குக்காகவும் பணம் சேர்ப்பதற்கும் சோதிடம், தேரோட்டம், தீர்த்தத் திருவிழா பற்றித் தமிழ் ஊடகங்கள் பரப்புரை செய்கின்றன! கைவிட்டு எண்ணக்கூடியவையே புறநடையாக உள்ளன.

சோதிடம், அருள்வாக்குப் போன்றவை  சமணம் சொல்லும் மூடம் போன்றவைதான். கடந்த கிழமை இலண்டன் ஐபிசி வானொலி வியாழ மாற்றம் (குரு பெயர்ச்சி) பற்றி ஒரு நிகழ்ச்சியைத் தமிழ் நாட்டில் இருந்து வந்த ஒரு பெண் சாமியாரிணியை வைத்து நடத்தியது. அந்தச் சாமியாரிணியின் பொட்டுக்கேடு பற்றி அடுத்த கிழமை எழுதுவேன்.


தோதிடப் புரட்டு (69)

பிள்ளையே இல்லாதவருக்கு பிள்ளைகளால் சிக்கல்!

ஐபிசி வானொலி நடத்திய நிகழ்ச்சியின் போது இந்தச் சாமியாரிணியிடம் ஒரு பெண் தன் குடும்பச் சிக்கல் பற்றிக் கேள்வி கேட்டார்.

அவர் தனது சிக்கலைப் பற்றிச் சொல்லு முன்னரே சாமியாரிணி ‘உனக்குப் பிள்ளைகளால் தான் பிரச்சினை. ஒன்றுக்கும் யோசிக்காதே! பிள்ளைகள் குழப்படியாக இருந்தாலும் இன்னும் இரண்டு முன்று வருடங்களில் நன்றாகப் படிப்பார்கள்’ என்று சொன்னார். சாமியாரிணியிடம் அருள் வாக்குக் கேட்ட பெண் அதிர்ச்சி அடைந்தார்.

‘இல்லையம்மா, எனக்குப் பிள்ளைகளே இல்லை, அதைப் பற்றித்தான் கேட்க வந்தேன்’ என்றார்.

சாமியாரணியின் முகத்தில் மட்டுமல்ல ஐபிசி ஒலிபரப்பாளர் முகத்திலும் விளக்கெண்ணை வடிந்திருக்க வேண்டும். ஆனால், அதைப் பார்க்க வாய்ப்பில்லாமல் போயிற்று!

சாமியாரிணியின் பதிலைக் கேட்ட பின்னாவது வானொலி ஒலிபரப்பாளருக்கு அறிவு வந்திருக்க வேண்டுமே? அதுதான் இல்லை! இல்லதில் இருந்து உள்ளது வராது அல்லவா?

இது நடந்து முடிந்த இரண்டொரு நாட்களில் அதே வானொலியில், அதே சாமியாரிணி வியாழ மாற்றம் (குருப் பெயற்சி) பற்றி அறிவியல் விளக்கம் அளித்தார்.

பிள்ளை இல்லாத பெண்ணைப் பார்த்து பிள்ளைகளால்தான் சிக்கல், ஒன்றுக்கும் யோசிக்காதே என்று அருள் வாக்குச் சொன்ன இந்த மூட சாமியாரிணியை வியாழ மாற்றம் பற்றி அறிவியல் விளக்கம் கொடுக்க அழைத்த ஐபிசி வானொலியின் அறிவீனத்தை யாரிடம் சொல்லி அழுவது என்பது புரியவில்லை.

கேள்வி: ஈழப்போர் முடிவுக்கு வராதா? சமாதானம் கிடையாதா?

பதில்: பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகாமகம் இவ்வருடம் வந்திருக்கிறது. ஆகவே இவ்வருடத்திற்குள் ஈழப்போர் முடிவுக்கு வரும், சமாதானம் கிட்டும்.

சேச்சே! இப்படி மகாமகம் வந்தால் அமைதி வந்துவிடும் என்பது தெரியாமல் 18,000 வி.புலி வீரர்கள் வீணாகப் போர்க்களத்தில் விழுப்புண் பட்டு வீரச் சாவைத் தழுவிக் கொண்டார்களே? இந்தச் சாமியாரிணி இதனை ஏன் 12 ஆண்டுகளுக்கு முன் சொல்லவில்லை?

ஒரு புறம்  திரு. வே. பாலகுமார் ஒஸ்லோவில் நடந்த தமிழ்ச் சங்க வெள்ளி விழாவில் பேசும்போது திருமூலரின் திருமந்திரத்தை மேற்கோள் காட்டி தமிழர்கள் நிலையாமைத் தத்துவத்தில் அமிழ்ந்து கிடந்த காலத்தை எண்ணிக் கழிவிரக்கப்பட்டார். அவர் மேற்கோள் காட்டிய பாடல் இதுதான்:

ஊரெல்லாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடை கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.     (திருமந்திரம்)

‘உயிரானது உடம்பினின்று ஆடம்பரமும் ஆரவாரமும் இன்றி இரகசியமாக நீங்கிவிடுகிறது. இவ்வளவு இரகசியமாக அது நீங்கினாலும் அதனை உறவினர்கள் ஊரெல்லாம் அம்பலப் படுத்துகிறார்கள். பின்னர் பிணத்தைச் சுடுகாட்டில் கொண்டு போய் எரித்து விட்டுத் தண்ணீரில் முழுகி நினைப்பை விட்டு விடுகிறார்கள்’ என்பது இதன் பொருள்.

இப்படி நிலையாமைத் தத்துவம் பேசிய காலம் தொலைந்து போய் ஒரு புது ஊழி  பிறந்துவிட்டது என திரு. .பாலகுமார் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மறுபுறம்  தமிழ்த் தேசியத்துக்கு உரம் சேர்ப்பதாகக் கூறிக் கொள்ளும்  ஐபிசி வானொலியோ தமிழ் மக்களைக் கற்காலத்துக்கு இழுத்துக்க் கொண்டு போயே தீருவோம் என்று மல்லுக்கு நிற்கிறது!

‘நல்ல மாடென்றால் ஊரிலேயே விலை போயிருக்கும்! சந்தைக்கு ஏன் வருவான்?’ என்று சொல்வார்கள்.

அது போல இந்தச் சாமிகளும் சாமியாரிணிகளும் அம்மாக்களும் சோதிடர்களும் ஈழத் தமிழரின் தலையில் மிளகாய் அரைப்பதுதான் சுலபம் என நினைத்துக் கொண்டு இங்கிலாந்து கனடா போன்ற நாடுகளுக்குப் படையெடுக்கிறார்கள். பணத்தைப் வாங்கிக் கொண்டு அவர்களை இந்திரன் சந்திரன் எனப் போற்றி விளம்பரம் செய்யும் சில ஊடகவியலாளர்கள் அவர்களது சுரண்டலுக்கு உடந்தையாக இருக்கிறார்கள்.

அங்கே விடுதலைக்கான ஒரு வேள்வி நடக்கிறது, இங்கே மூட நம்பிக்கைகளைப் பரப்புவதற்கு மேடை போடப்படுகிறது!

அண்மையில் கனடாவுக்குத் தன்னை ஒரு டாக்டர் என்று சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் வந்தார். அவருக்கு ஐபிசி வானொலி போலவே இங்குள்ள தமிழ் வானொலிகளும்  பணத்தை வாங்கிக் கொண்டு கடையை விரிக்கத் தளம் அமைத்துக் கொடுத்தன.

அவரிடம்  ஒரேயொரு மருந்துதான் இருந்தது. அதை வைத்துக் கொண்டு தீராத வியாதிகள் எதுவாயிருந்தாலும் – முடக்குவாதம் முதற் கொண்டு புற்றுநோய் வரை கடவுள் அருளோடு தீர்த்து வைப்பதாக வானொலியில் சொன்னார்.

நோயாளிகளின் உளவியல் முறையான பலவீனத்தைப் பயன்படுத்தி ஒன்று 20 டொலர் விலையில் தலைக்கு நாலு போத்தல்களை விற்றுப் பல ஆயிரம் டொலர்களைச் சம்பாதித்துக் கொண்டு போய்விட்டார்.

இப்படிச் சகல நோய்களையும் தீர்த்து வைக்கும் ஒரு ‘சகலரோக சஞ்சீவி’ மருந்து இருப்பது உண்மையென்றால் அதன் தயாரிப்பு முறையை அமெரிக்காவில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு ((Multi-billion Pharmacutical Companies)  பல கோடி டொலருக்கு விற்று விடலாமே?

மருந்து தயாரிப்பு நிறுவனம் வேண்டாம்,  இங்கே கனடாவில் நல்வாழ்வு பேணல் நடுவண் மற்றும் மாகாண அரசுகளுக்குத் தீராத தலையிடியாக இருக்கிறது. வரவு செலவுத் திட்டத்தில் பாதி நிதி இந்த நல்வாழ்வுத் துறைக்குப் போய்விடுகிறது.  சகலரோக சஞ்சீவி மருத்துவர் இங்கேயே ஒரு தனி மருத்துவமனையைத் திறந்து குறைந்த செலவில் நிறையப் பேரைக் குணப்படுத்தலாமே? ஏன் செய்யவில்லை?

இப்படி மருந்தாலும் மந்திரத்தாலும் அருச்சனையாலும் அபிசேகத்தாலும் சாந்தியாலும் நோய் நொடி, பொருள் முடை, கிரக தோசம், திருமணத்தடை எல்லாவற்றையும் நீக்கிவிடுவதாகச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றுபவர்கள் தமிழ் சமுதாயத்தில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

சங்கீதம் நோய் தீர்க்கும் என்கிறார்கள்!

வரிஷவர்த்தனி இராகம் இசைத்தால் மழை பெய்யுமாம்!

சூரிய ஸ்தோத்திரம் சொன்னால் கண் நோய் குணமாகுமாம்!

‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்றால் நாக்கு மடிந்து இதயம் பலப்படுகிறதாம்!

அய்தெழுத்து மந்திரத்தை 108 தரம் நாள் தோறும் சொன்னால் இதய நோய்கள் குணமாகிறதாம்!

குருவாயூரப்பன் பஞ்சரத்னத்தை சொன்னால் வாதநோய் முற்றிலும் நீங்குமாம்.

ஸ்ரீநாராயண அஷ்டகம் புற்றுநோயைக் குணப் படுத்துமாம்!

பதிணெண் புராணங்களின் பெயர் கொண்ட மந்திரத்தைச்சொல்லி வந்தாலே ‘புத்திர பாக்கியம்’ கிடைக்குமாம்!

வைத்தியநாத ஸ்தோத்திரம் சொன்னால் வாய் பேசாதவர் பேசுவார்கள், காது கேட்காதவர்களுக்குக் காது கேட்கும், கண் தெரியாதவர்களுக்குக் கண் தெரியும், நடக்க முடியாதவர் நடப்பர்!

கருட தண்டகம் சொன்னால் பாம்பு கடிக்கவே கடிக்காதாம். அப்படியே கடித்துவிட்டாலும் நஞ்சு இறங்கிவிடுமாம்!

இவையெல்லாம் உண்மை என்றால் சகல நோய்களுக்கும் மணி மணியாய் மந்திரங்கள் இருக்கும்போது மருத்துவக் கல்லூரிகள் ஏன்? மருத்துவ மனைகள் ஏன்? மருத்துவப் படிப்பு ஏன்? மருத்துவ நூல்கள் ஏன்?

மருத்தவ மனைகளை மூடிவிட்டு, பள்ளிக்கூடங்களை மூடிவிட்டு அனைவரும் பஞ்சரத்தினத்தை, பதிணெண் புராணங்களைப் பகல் இரவென்று பாராயணம் செய்யலாமே!

சங்கீதம் நோய் தீர்க்கும் என்கிறார்கள்! இராகங்களின் பெயர்களைச் சொல்கிறார்கள்! எந்த நோயாளி குணமடைந்தான்? விவரம் கிடையாது. ஆனாலும், வெட்கமில்லாமல் இதையே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். (தினகரன் அருள் – 27-07-2004)

சூரிய ஸ்தோத்திரம் சொன்னால் கண் நோய் குணமாகுமாம்! அப்படி என்றால் சங்கராச்சாரியார், ஜீயர்கள், மடாதிபதிகள் ஏன் 8 புள்ளி 10 புள்ளி மூக்குக் கண்ணாடி மாட்டித் திரிகிறார்கள்?

விஷ்ணு கவசம் விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்னால் இரத்த அழுத்தம் குறையுமாம்!

குருவாயூரப்பன் பஞ்சராத்னத்தைச் சொன்னால் வாதநோய் முற்றிலும் நீங்குவது உண்மையானால் வாதநோய் தாக்கிய பிச்சைக்காரர்கள் குருவாயூர் கோயில் அருகிலேயே குடியிருக்கிறார்களே! அது எப்படி?

பதிணெண் புராணங்களின் பெயர் கொண்ட மந்திரத்தைச் சொல்லி வந்தாலே “புத்திர பாக்கியம்’ கிடைக்குமாம்! அப்படியென்றால் தாம்பரம் மகப்பேறு மருத்துவர்கள் ஜமுனா, மருத்துவர் கமலா செல்வராஜ் போன்றவர்கள் நடத்தும் தனி மருத்துமனைகளை எப்போதோ மூடி இருக்க வேண்டுமே? ஏன் மூடவில்லை?

‘கிருஷ்ணா, கிருஷ்ணா” என்றால், நாக்கு மடிந்து இதயம் பலப்படுகிறதாம்! அய்ந்தெழுத்து மந்திரத்தைச் சொன்னால் இதய நோய்கள் குணமாகிறதாம்!

இது முன்னாள் சனாதிபதி கிளின்டனுக்குத் தெரியாமல் போய்விட்டதே! மனிதர் தயங்கித் தயங்கிப் போய் ஆபத்தான அறுவை வைத்தியம் (triple – pass surgery) செய்ய வேண்டிய தேவை இருந்திருக்காதே!

ஸ்ரீநாராயண அஷ்டகம் புற்று நோயைக் குணப் படுத்துமாம். புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கக் கோடிக் கணக்கில் பணத்தை இறைத்து ஆராய்ச்சி செய்யும் மருத்துவர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.

வைத்தியநாத ஸ்தோத்திரம் சொன்னால் வாய் பேசாதவர் பேசமுடியும், காது கேட்காதவர்  கேட்க முடியும், கண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம், நடக்க முடியாதவன் நடக்கலாம்!

அப்படியென்றால் கண், காது மருத்துவ மனைகள் தேவை இல்லையே! ஜெயப்பூர் வெண்புறா செயற்கை உற்பத்தி நிறுவனங்கள் தேவை இல்லையே!

நாலாவித நோய்களுக்கும் மணி மணியாய் மந்திரங்கள, தந்திரங்கள், யந்திரங்கள் இருக்கும்போது மருத்துவக் கல்லூரிகள் ஏன்? மருத்துவமனைகள், மருத்துவப் படிப்பு, மருத்துவ நூல்கள் இவை தேவையில்லையே!

மூட நம்பிக்கைகளை ஒழித்து அறிவியலை வளர்க்க வேண்டிய சில ஊடகங்களே மூட நம்பிக்கைகளுக்கு நீர் ஊற்றி வளர்ப்பது பேயை ஓட்ட வந்த பூசாரிக்கே பேய் பிடித்த கதை போன்றது!


தோதிடப் புரட்டு (70)

எனை நாடி வந்த கோள் என் செயும்!

சோதிடப் புரட்டு மக்களது மனங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என நம்புகிறேன். பல வாசகர்கள் மின்னஞ்சல் மூலம் பாராட்டி எழுதியுள்ளனர். விடாமல் தொடர்ந்து எழுதுங்கள் என்று கேட்கிறார்கள். அதே சமயம் சோதிடத்தை நியாயப்படுத்தி எழுதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அப்படி எழுதுவோர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

கடந்த வாரம் இங்குள்ள கனேடிய பல்கலாசார பண்பலை வானொலி (சிஎம்ஆர்) ‘சோதிடத்தை நம்புகிறீர்களா?’ என்ற தலைப்பில் ஒரு அரை மணித்தியால நிகழ்ச்சியை நடத்தியது. வானொலி நேயர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள்.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் சோதிடம் பற்றி எனது கருத்தைச் சொல்லுமாறு கேட்டார்கள். ஒரு சோதிடரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால், காற்றலையில் கடைசிவரை அவர் வரவே இல்லை!

சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை கிடையாது. அது வெறும் நம்பிக்கைதான். சோதிடம் ஞாயிறு புவியைச் சுற்றுகிறது என்ற அடிப்படை நம்பிக்கையில் கட்டியெழுப்பப் பட்டுள்ளது. ஆனால், உண்மை அதுவல்ல என்பது இப்போது எல்லோருக்கும் தெரியும்.   விருச்சிகம்

இராசி மண்டலங்களை புலக் காட்சியின் அடிப்படையில் ஆடு, எருது, சிங்கம், நட்டுவக்காலி, கன்னி, தராசு என உருவகிப்பதும் அந்த உயிரினங்களது குணாம்சங்களை அவற்றில் மாட்டேறு செய்து பலன் சொல்வதும் பொய்யானவை. பகுத்தறிவுக்கு முற்றிலும் முரணானது.

அது போலவே இராசி வட்டத்தை 12 வீடுகளாக வகுத்து அதற்குள் இராசிகளை அடக்குவது வெறும் கற்பனையே. இவ்வாறு சுருக்கமாக எனது கருத்தை சொல்லி முடித்தேன். இதனைத் தொடர்ந்து நேயர்கள் காற்றலைக்கு வந்தார்கள்.

ஒரு உடன்பிறப்பு கிரகங்களுக்குப் பரிகாரம் செய்தால் அதில் பலன் உண்டா? நக்கீரன் அது பற்றி என்ன சொல்கிறார்? என்று கேட்டார். நிகழ்ச்சியின் அமைப்பு அதற்கான பதிலைச் சொல்ல எனக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை.Image result for signs rasi

காற்றலையில் வந்து தங்கள் கருத்தைச் சொன்ன நேயர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1) சோதிடத்தை நம்புவர்கள்.

2) கோதிடத்தை நம்பாதவர்கள்.

3) சோதிடத்தை நம்புகிறோம் ஆனால், சோதிடர்களை நம்பவில்லை என்பவர்கள்.

இந்த மூன்று பிரிவிலும் ஏறத்தாழ சரி சமமான விழுக்காட்டினர் இருந்தார்கள். சோதிடத்தை நம்புகிறோம் ஆனால், சோதிடர்களை நம்பவில்லை என்பவர்கள் உண்மையில் சோதிடத்தைப் படிக்காதவர்கள். சோதிடத்தைப் படிக்காதவர்கள் அதை நம்புகிறோம் என்று சொல்வதும் ஒரு நம்பிக்கைதான்.

இங்குள்ள கீதவாணி வானொலி அதிபர் நடா இராஜ்குமார் ‘அண்ணன் நீங்கள் சோதிடம் பற்றிச் சொல்லுகிற கருத்துக்கு நான் முற்றிலும் உடன்பாடு. அதனை நான் சொல்ல  முடியாது. நீங்களே அதைச் சொல்லுங்கள். வாரத்தில் அரை மணித்தியாலத்தை அதற்காக உங்களுக்கு ஒதுக்கித் தருகிறேன்’ என்றார்.

தலைமுறை தலைமுறையாக மக்களின் குருதியில் ஊறிப் போன ஒரு மூட நம்பிக்கையைக் களைவது சுலபமல்ல. கல்லில் நார் உரிப்பது போன்றது, ஆனால், முடியாத காரியம் என்று ஒன்றும் இல்லை. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.

மதங்களில் இந்து மதமே சோதிடத்தை வேதத்தின் ஒரு அங்கமாக தெய்வீக நிலைக்கு உயர்த்தியுள்ளது. வடமொழியில் அதனை ஜோதிஷ் என்று அழைக்கிறார்கள். ஜோதி என்றால் ஒளி, இஷ் என்றால் ஈஸ்வரன் எனவே ஜோதிஷ் என்றால் ஈஸ்வரனின் ஒளி என்று பொருள்.

சோதிடம்பற்றி அதர்வ வேதத்திலும் முண்டக உபநிடத்திலும் எழுதப்பட்டுள்ளன என்கிறார்கள். எனவே இந்தச் சாத்திரம் காலம் கடந்தது அநாதியானது என்கிறார்கள்.

வேதகால சோதிடம் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.

1) எதிர்காலப் பலன்களை கணித்துச் சொல்லும் ஜாதகம்
2) கணிதம்
3) சம்ஹித அல்லது மனிதர் அல்லாத நாடுகள், உலக நிகழ்ச்சிகள் பற்றிய ஆரூடம்.

பல ரிஷிகள் சோதிடம் பற்றி எழுதியிருந்தாலும் பராசரர் எழுதிய பராசர ஹொரா சாத்திரமே அதன் அடிப்படை நூலாக இருக்கிறது.

இந்து மதத்தில் சோதிடம் தெய்வீக நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதால் சோதிட சாத்திரிகளும் கோயில் அர்ச்சகர்களும் கூட்டணி வைத்துக் கொண்டு இந்த மூட நம்பிக்கையை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார்கள்.

பவுத்தம் சோதிடத்தை நம்பவில்லை. சோதிடம் விலங்குகளின் சாத்திரம் என்று புத்தர் சொல்லியிருக்கிறார்.

கிறித்தவம் சோதிடத்தை நம்பவில்லை. சோதிடம் சாத்தானின் சாத்திரம் எனச் சொல்கிறது.

இஸ்லாம் மதத்தில் சோதிடத்துக்கு இடமே இல்லை. உருவமற்ற எல்லா வல்லமையும் படைத்த அல்லாவை விஞ்ச ஒரு ஆற்றல் இல்லை என்கிறது இஸ்லாம்.

கடவுள் நம்பிக்கைபோல் சோதிடத்தை நம்புவதற்கு அச்சம்தான் காரணம். சோதிடம் புதன் கோள் நட்புக் கிரகம் என்று சொல்கிறது. ஆனால், சனிக் கோளை பாப கோளாகச் சித்தரிக்கிறது. இதனால் புதனுக்கு யாரும் பூசை செய்வதில்லை. எல்லாப் பூசையும் கெட்ட சனியனுக்குத்தான்.

கெட்டவனைக் கண்டு மக்கள் பயப்படுகிறார்கள். நல்லவனைக் கண்டு அவ்வாறு அவர்கள்  பயப்படுவதில்லை.

“ஐயா! சாமி! பிச்சை போடுங்கோ” என்றால் யாரும் பிச்சை போடுவதில்லை. ஆனால், ஒரு சண்டியன் கத்தியைக் காட்டி “பையில் உள்ள பணத்தை எடு! கையில் உள்ள கடிகாரத்தைக் கழட்டு” என்று மிரட்டினால் பயத்தில் அவன் கேட்டதற்கு மேலாக எல்லாவற்றையும் மூச்சுப் பேச்சின்றிக் கொடுத்து விடுவார்கள்!

அதியமான் நெடுமானஞ்சி கெட்ட நாள் சென்றாலும் தீயபுள் எதிர்ப்பட்டாலும் வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்பமாட்டானாம். போர் மேற்கொள்ளும் போது நாளும் கோளும் பார்ப்பதில்லை என்று ஒரு புறப்பாடல் (124) தெரிவிக்கிறது.

திருஞானசம்பந்தர் “நல்லவர்க்கு இல்லை நாளும் கோளும்” என்கிறார்.

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டுமுடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே!

இந்த சம்பந்தர் தேவாரத்தை சைவர்கள் நம்புவதில்லை.

நாளென் செயும் வினைதான் என்
செயும் எனை நாடி வந்த
கோள் என் செயும் கொடுங் கூற்றென்
செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் ……………………..
……………………………………………………
என் முன்னே வந்து தோன்றிடினே

என்ற அருணகிரியாரின் கந்தரலங்காரத்தைச் சைவர்கள் நம்புவதில்லை. வேறு மாதிரிச் சொன்னால் சாத்திரத்தை நம்புகிறார்கள். தோத்திரத்தை நம்புவதில்லை.

வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்தது. நாங்கள் நினைப்பது பல வேளை நடப்பதில்லை. நாங்கள் நடக்க விரும்பாதது நடந்து விடுகிறது.

இதனால் மனிதன் தன்னம்பிக்கை இழந்து தனது எதிர் காலத்தைப் பற்றி வீணாகப் பயப்படுகிறான். அதனால் முன் கூட்டியே அது எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாக இருக்கிறான். மனிதனது இந்தப் பலவீனத்தை சமயமும் சாத்திரமும் தமது சுரண்டலுக்குப் பயன்படுத்துகின்றன.

சங்க காலத் தமிழர் (முற்பகுதி) முற்போக்கு சிந்தனையோடு வாழ்ந்தார்கள். இன்பம் துன்பம் பிறப்பு இறப்பு இதுதான் இயற்கை என சங்கப் புலவர்கள் பாடி இருக்கிறார்கள். இதில் இனியவற்றைச் செய்வதே இயல்பாக அமைய வேண்டும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதல் புதுவதன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே…
………….. மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! (புறம் 192, 1-6, 11-13)

நன்மைக்கும் தின்மைக்கும்  காரணங்கள் எமது செயல்களே அன்றி பிறர் கொடுத்து வருவது அன்று என பூங்குன்றன் என்ற நற்றமிழப்; புலவன் உரைக்கிறான்.

ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்
ஈர்த் தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூ அணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார் புறைப்பப்
படைத்தோன் மன்ற அப்பண் பிலாளன்
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல் புணர்ந்தோரே!   (புறம் 194)

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன்பகல் அமையமும் இரவும் போல
வேறு வேறு இயலவாகி மாறு எதிர்த்து
உள என உணர்ந்தனை ஆயின்….. (புறம் 327, 1-4)

தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியாதோரையும் அறியக் காட்டி
திங்கள் புத்தேள் திரிதரும்; உலகத்து..…  (புறம் 27, 11-14)

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. அதுதான் இயற்கை என்பதைச் சங்க காலத் தமிழர் உணர்ந்திருந்தனர் என்பதை இப் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன.

ஏற்கனவே கூறியது போல் கோயில், சமயம், மதம், என்ற சொற்கள் தொல்காப்பியத்திலும் இல்லை.  சங்க இலக்கியங்களிலும் இல்லை.

ஒருங்கிணைக்கப்பட்ட சமயம் ஒன்று தமிழர்களுக்கு இல்லாத காரணத்தாலேயே பிற மதங்களான வைதீகம், சமணம், பவுத்தம் மிக எளிதாகத் தமிழகத்தில் புகுந்தன.

ஆரியர்களின் மதங்கள் தமிழ் நாட்டில் புகுந்தபோது உலகியல் வாழ்க்கையே சிறப்புற்றிருந்தது. யாக்கை பொய், உலகம் மாயை என்ற கொள்கை தமிழர்களிடம் இருக்கவில்லை.

போர் காதல் இவை இரண்டுமே அவர்களது அக வாழ்க்கை புறவாழ்க்கை ஆக இருந்தன.

அறம், பொருள், இன்பம் மூன்றுமே உறுதிப் பொருள்கள். மது, மாமிசம் விலக்கப்படவில்லை. மறு உலகம் (வீடு பேறு) பற்றிய எண்ணம் ஆரியர்களால் புகுத்தப்பட்டது.

தோதிடப் புரட்டு (71)

வள்ளுவர் வழி வாழுங்கள்

தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைக்குரிய  நிலத் தெய்வங்களையே வணங்கினார்கள். போரில் விழுப்புண்பட்டவர்களுக்கு ஊரின் ஒரு கோடியில் மரத்தின் கீழ் தூண் நட்டு அதில் தெய்வ உருவம் பொறித்து வணங்கினார்கள். ஆடு கோழிகளை உயிர்ப் பலி கொடுத்தார்கள்.

மறக்குடிப் பிறந்த முல்லை நிலமக்களுக்கு குரவும் தளவும் குருந்தும் முல்லையும் என்ற நான்குவித பூக்கள் அல்லது வேறு பூக்கள் இல்லை, அவர்க்கு உணவானது வரகு, தினை, கொள், அவரை என்ற நான்கு அல்லது வேறு இல்லை, அவரிடையே நிலவும் குடிவகை துடியன் குடி, பாணன் குடி, பறையன் குடி, கடம்பன் குடி என்ற நான்கல்லது வேறு குடிகள் இல்லை. இவ்வாறு பலவகைப் பூவணிதலும் உணவுண்டலும் குடிவகை கோடலும் இச் சிறு குடியில் உள்ளார்க்கு இயல்பாயினும் பல கடவுளர் வழிபாடு இயல்பன்று. ஒரு கடவுளை வழிபடுதலே இயல்பாகும். கொம்புகளையுடைய யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண் பட்டு இறந்த வீரர்களது நினைவாக அவர்களது பெயரும் பெருமையும் எழுதி நட்ட கல்லைக் கடவுளாகக் கருதி நெல்;லைச் சொரிந்து வழிபடுவதல்லது நெல்லைச் சொரிந்து வழிபடும் கடவுள் வேறு இல்லை எனச் சங்கப் புலவர் மாங்குடி கிழார் சொல்கிறார்.

அடலகுந் துப்பின் ……………………..
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரை
இந்நான் கல்லது உணாவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பெனென்
இந்நான்கு அல்லது குடியு மில்லை
ஒன்னாத் தெய்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவி னல்லது
நெல்லுகுத்துப் பரவுங் கடவுளும் இலவே.…… புறம் 335)

சங்க காலத் தமிழ்க் குடிகள் பகுத்தறிவோடு இசைந்த தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தனர் என்பது மனதுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.

சைவம் வடபுலத்தில் பிறந்து தென்புலத்தில் பரவி வளர்ந்ததாகும். அது மூவாயிரம் ஆண்டு பத்தாயிரம் ஆண்டு பழமையுடையது என்பது வெறும் புனைந்துரை. மொகஞ்சதாரோவில் ஆசனமிட்டுத் தலையில் வளைந்த எருமைக் கொம்புகளோடு யோகத்தில் அமர்ந்திருப்பது போலக் காணப்படும் உருவம் சிவனுடையது என்றும்  சிவ வழிபாடு அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதும் வெறும் ஊகமே!

அன்றைய வைதீக மதம் சங்க காலத்தின் இறுதியிலேயே தமிழகத்தில் கால் கொள்ளத் தொடங்கியது. வெள்ளை நிறத்தவரான ஆரியர் தம்மை நிலத்தேவர் என்றும் தம் மொழி தேவ மொழி என்றும் கருப்பு நிறத்தவரான தமிழ் மன்னர்களை ஏய்த்து அவாகளை நம்ப வைத்தனர்.

இதனால் போர் புரியாமலே திராவிடரை வெல்லவும், அவர்களை வருணங்களாகப் பிரித்து அடிமை கொள்ளவும் செய்தனர். ‘மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்பதற்கு ஒப்ப பொதுமக்களும் மூவேந்தர் வழி சென்றனர்.

சங்க காலத்தில் தொழில் அடிப்படையில் பிரிவு இருந்தது. பிறப்பு அடிப்படையில் பிரிவு இருக்கவில்லை. தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்டவர்கள் குடிகள் எனவும் குலங்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.

கிறித்துவுக்குப் பின் 2 ஆம் நூற்றாண்டிலேயே இந்து சமயக் கோய்pல்களும் உருவ வழிபாட்டு முறைகளும் பரவின. சிலப்பதிகாரம் காமன், பலதேவன், இந்திரன் போன்றோருக்குக் கூடக் கோட்டங்கள் (கோயில்கள்) இருந்ததைத் தெரிவிக்கின்றது. பின்னர் அவர்களுக்கான வழிபாடு வழக்கொழிந்து இறந்தன.

முருகனை மட்டுமே தமிழ்க் கடவுள் என்று குறிப்பதன் மூலம் எதிர்மறையாக எஞ்சிய கடவுளர் தமிழ்க் கடவுளர் அல்லர் என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது.

அரிது அரிது மானிடப் பிறப்பு அரிது என்றார் அவ்வையார். எனவே அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தப் பிறப்பிலேயே நாம் செம்மையாக வாழ வேண்டும். செழுமையாக வாழவேண்டும். மகிழ்வோடு வாழவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பகுத்தறிவோடு வாழ வேண்டும்.

நாம் வாழும் உலகம் சங்கரர் சொல்வது போல் மாயை அல்ல. புத்தர் சொன்னது போல் முற்றிலும் துன்பம் நிறைந்ததும் அன்று. சமணமதம் கொல்லாமை, புலால் உண்ணாமை, துறவு போன்றவற்றை அளவுகடந்து வற்புறுத்தியதால் அது போர் வெறுப்பிலும்,  அது கலை வெறுப்பிலும் பெண் வெறுப்பிலும் முடிவுற்றது. இந்து மதம் ஒருவன் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைப் படி பிரமனால் படைக்கப்படுகிறான் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று சொல்வது கட்டுக்கதை. அழகான கற்பனை.

துறவறத்தையும் மறுபிறப்பையும் கர்மவினையையும் வற்புறுத்திய இந்தச் சமயங்களால் தமிழர் போர்க்குணத்தை இழந்தார்கள். எதிரிகளோடு போராடி வெல்லாது அவர்களோடு இசைந்து செல்லும் சாதுக்களாகவும் ஏமாளிகளாகவும் உண்டு உடுத்தி வாழும் இரண்டு கால் மாடுகளாகவும் மாறினார்கள். உழைத்துப் பொருள் தேடாது பொருளின்மை விதி என்று அமைதியடைந்தார்கள். காணும் உலகியல் வாழ்க்கை சிற்றின்பம் எனவும் காணாத மறுவுலக வாழ்க்கை பேரின்பம் எனவும் சொல்லித் தமிழர் முட்டாள்க்களாகப்பட்டாள்.

தமிழருக்குக் கல்வி மறுக்கப்பட்டது. கல்வி பிராமணருக்கு மட்டும் உரியது என்று சொல்லப்பட்டது. 1901 ஆம் ஆண்டு எடுத்த புள்ளிக் கணக்கில் தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்த பிராமணரது விழுக்காடு 100 ஆக இருந்தது, ஆனால், தமிழரது விழுக்காடு 1.5 மட்டுமே. பெண்களின் விழுக்காடு 0.5 மட்டுமே.

அறிவுள்ள சமுதாயம்தான் முன்னேறும் அறிவில்லாத சமுதாயம் பின்தங்கிவிடும். இதை அறிந்துதான் வள்ளுவர் “அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்” (If you have knowledge you have everyting. If you don’t have knowledge, everything you have amounts to nothing) என்று அருளியுள்ளார். ஆனால், திருவள்ளுவர் பிறந்த நாட்டில் பிறந்த மக்கள் அறியாமை என்ற இருளில் மூழ்கிக் கிடக்க நேரிட்டது.

ஒருவரது வாழ்க்கை, அவரது உடல் நிலை, மனநிலை, நோய் நிலை, பொருளாதார நிலை அவரவரது மரபுவழி மற்றும்  இப்பிறப்பில் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அமையும் என்பதற்குப் பதில் முப்பிறப்புக்குத் தக அமையும் என்ற மூடநம்பிக்கை மூளையில் திணிக்கப்பட்டது.

1) தெய்வீகமானவை எனக் கட்டிவிடப்பட்ட நம்பிக்கையினால் மனத்திற்கு மாத்திரம் திருப்தி அளிப்பதான பலவித சடங்குகளைச் செய்வது மூடநம்பிக்கை நிலைத்திருப்பதற்கும் வளர்வதற்கும் காரணியாகும்.

2) சாதி மத வேறுபாட்டைப் பிரித்துக் காட்டக்கூடிய ஆடை ஆபரணங்கள், மதச் சின்னங்கள் ஆகிய வெளிவேடங்கள் மூட நம்பிக்கைக்கு ஆதாரமாகும்.

3) பழைய பழக்க வழக்கங்களை எவையாயினும் அவற்றின் நன்மை தின்மைகளை ஆராயாமல் அவற்றில் அதிக மரியாதை வைத்துக் கொண்டாடுதல் மூடநம்பிக்கைக்கு ஏதுவாகும்.

4) குருமார்கள் என்பவர்கள் தங்கள் உடம்பை வருத்தி வேலை செய்யாமல் பொருள் சேர்க்கவும், சுகமாக வாழவும் ஆசை கொண்டு ஏற்படுத்தியுள்ள பலவிதமான சூழ்ச்சிகளை நம்புதல், இந்நம்பிக்கையினால் ஏமாறுதல் ஆகிவை மூட நம்பிக்கையை வளர்ப்பதாகும்.

5) கர்வத்தை உண்டாக்குவது, புதுமையை உண்டாக்குவது ஆகிய எண்ணங்களைக் கொண்டாடுதலும் மூடநம்பிக்கைக்கு ஏதுவாகும்.

6) கடவுள் வேண்டியவர்களுக்கு நன்மையும் வேண்டாதவர்களுக்குத் தீமையும் செய்வது போலவும், பெண்டு பிள்ளைகளுடன் வாழ்வது போலவும், இழிந்த செயல்களையும் வெறுக்கத் தகுந்த செயல்களையும் செய்வது போலவும், தரகர்கள் கடவுளைக் கற்பனை செய்து மனிதனைப் போல வைத்துக் கொண்டாடுவதனாலும் மூட நம்பிக்கை உலகில் பரவுகிறது.

7) மனிதன் அறிவு வளர்ச்சி பெறாமல் காட்டு மிராண்டியாக இருந்த காலத்தில் நோய் முதலிய தீமைகள் ஏற்பட்ட போது அவைகளை வைத்தியத்தின் மூலம் நீக்கிக் கொள்ள வழி தெரியாமல் இருந்தான். அப்பொழுது அவன் எவற்றைத் தெய்வமென்று நம்பிக்கொண்டிருந்தானோ அவற்றைத் தனது தீமைகளையும் நீக்கும்படி வேண்டிக் கொண்டான். இவ்வாறு தனக்கு நேர்ந்த தீமைகளை நீக்குமாறு வேண்டிக்கொள்ளும்  பழக்கம் மாந்த வரலாற்றின் காட்டுமிராண்டிப் பருவத்தில் ஏற்பட்ட பழக்கம் என அறியாமல், அப்பழக்கத்தையே இப்போதும் கொண்டாடிக் கொண்டிருப்பது மூடநம்பிக்கையை வளர்க்கிறது.

மூடநம்பிக்கையை ஒரு குரங்குக்கு ஒப்பிட்டுக் கூறலாம். குரங்கு இயல்பிலேயே குறும்புத்தனமுடையது, அதன் கையில் அகப்படக்கூடிய பொருளை அது சும்மா வைத்திருக்குமா? அந்தப் பொருள் தான் உருப்படியாக இருக்குமா? அது போல மூடநம்பிக்கையே கெடுதியாகும். அது மதத்தோடு சேரும்போது குரங்கு கள் குடித்தது போல மேலும் அதிக தீமையைச் செய்கிறது.

நல்ல உணவென்றாலும் அவற்றை நாள்ப்பட வைத்திருப்போமேயானால் அதில் புழுக்கள் நெளியும். அது போல நல்ல மதமும் கூட காலம் போகப் போக பொருளற்ற சடங்குகளாக மாறுகிறது.

தமிழ்ப் புலவர்களில் வள்ளுவர் ஒருவரே சிறந்த பகுத்தறிவாளர். சமயக் கணக்கர் கேள்வி கேட்காமல் தாம் சொல்வதை நம்புங்கள் என்று சொன்ன பொழுது வள்ளுவர் மட்டுமே  எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் உண்மையைக் காண்பதே அறிவாகும் என்றார். மேலும் எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அப்பொருளிடத்தில் உள்ள உண்மையான இயல்பை அறிவதே அறிவு என்றார்.

வள்ளுவருக்கு முன் இப்படிச் சொன்னவர் புத்தர் மட்டுமே. அவரும் ஆன்மாவை மறுத்துவிட்டு இருவினைக்கு ஏற்ப மறுபிறப்பு உண்டென்று சொல்லிவிட்டார். வள்ளுவர் இந்த உலகில் வாழ்வாங்கு வாழ மக்களுக்கு வழிகாட்டியவர். தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பிற பண்பாட்டுப் படையெடுப்புக்கு வேலி கட்டியவர்.Image result for Thiruvalluvar

திருக்குறளில் ‘முழு முதற்கடவுள்” பற்றியோ ‘ஆன்மா’ பற்றியோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. திருவள்ளுவர் கடவுள் என்ற சொல்லை யாண்டும் ஆளவில்லை. இறைவன் என்ற சொல்லை இருமுறை கையாள்கிறார். இறைமை என்பது குணமற்ற தனிப்பொதுப் பேராற்றல். மக்கள் வாழ்க்கையை உயர்த்தாத இறைக் கொள்கை முளைக்காத விதை, பூக்காத செடி, காய்க்காத மரம், விளையாத நிலம், தண்ணீர் இல்லாத ஆறு, உழாத மாடு, எலி பிடிக்கத் தெரியாத பூனை, ஈணத்தெரியாத பசு ஆகியவை போன்று பயனற்றவை.  இறைநெறி விளங்கமுடியாத சிக்கல் நிறைந்த தத்துவம் அன்று, அல்லது வாழ்க்கைக்குப் பின் நிகழும் நெறியும் அன்று.

வள்ளுவர் வினை அறுப்பைக் கூறவில்லை. அவா அறுப்பைக் கூறுகிறார். வினையாற்றத் தூண்டுவதே இறைவழிபாடு.

ஊழ்க்கொள்கை பற்றி வள்ளுவர் மிக நுட்பமாக விளக்குகிறார். ஊழ் அதிகாரத்தில் காணப்படும் பத்துக் குறள்களிலும் முற்பிறப்புக் குறிப்போ, பழவினைக் குறிப்போ, மேலுலகக் குறிப்போ இம்மியும் இல்லை. சூழ்நிலை காரணமாகவே ஒருவன் செல்வமோ, அறிவோ சேர்த்துக் கொள்கிறான். இரண்டையும் பெறுவது அரிய சூழ்நிலை.

நல்லவை தீயவையாகிப் போவதுண்டு. தீயவை நல்லவையாகிப் போவதும் உண்டு. ஒருவனது நூல் அறிவு பரந்துபட்டதாயினும் அந்தச் செயற்கை அறிவைவிட அவனது இயற்கை அறிவே மிகுந்து நிற்கும்.

தனிமனித செயலழுத்தங்கள் உலகைத் தாக்கும், உலகச் சூழல் அழுத்தங்கள் தனிமனிதனையும் தாக்கும்.

ஆகூழ், போகூழ் என்று நிலையாக எதுவுமில்லை. ஒருவனது ஆகூழ் இன்னொருவனுக்கு போகூழ் ஆகும். ஒருவனுக்கு முன்பு போகூழாக இருந்தது பின்பு ஆகூழாகக் கூடும்.

ஊழ் என்பது முற்பிறப்பிற் செய்த பழ வினை அன்று. ஊழ் என்பது நாம் வாழும் உலகச் சூழ்நிலை. ஊழ் அதிகாரத்தில் (38) ஊழின் வலிமையை வற்புறுத்திய வள்ளுவர் ஆள்வினை உடைமை அதிகாரத்தில் (62) இடைவிடாது முயற்சி செய்தால் அந்த ஊழை வெல்லலாம் என்கிறார்.

வீடு பேறு (சீவான்மா பரமான்வாவோடு இணைதல்) பற்றியும் திருக்குறள் எதுவும் பேசவில்லை. திருக்குறளில் சமயக் கோட்பாடுகள் இல்லை. சமயம் சொல்லும் கடவுள் -உலகம் – உயிர் பற்றியோ அவற்றுக்கு இடையிலான உறவு பற்றியோ திருக்குறளில் யாதும் சொல்லப்படவில்லை.

சமயங்கள் வினை, வினைப்பயன் ஆகியவற்றை மாற்றச் சொல்லும் வழிமுறைகள் திருக்குறளில் இல்லை. திருவள்ளுவரின் வினைக் கோட்பாடு இந்த உலகத்தைப் பற்றியது. அடுத்த உலகத்தைப் பற்றியது அல்ல. ஒருவன் செய்த வினைகள் அவற்றுக்குரிய வினைப் பயன்கள் இந்த உலகத்திலேயே வந்து சேரும். முற்பகலில் மற்றவர்களுக்கு விளைத்த துன்பம் பிற்பகலில் வினை செய்தவனை வந்து சேரும்.

ஒருவனது நிழல் அவனை எப்போதும் பின் தொடர்வது போல் ‘தீயவை செய்தவர் கெடுதல் நிழல்தன்னை விடாது அடி உறைந்தற்று” என்கிறார். வினைக்குரிய விளைவுக்குப் பிற ஆற்றல் காரணமில்லை. அவை தாமே வருகின்றன என்கிறார் வள்ளுவர்.

திருக்குறள் கூறும் மெய்யுணர்வு ‘மருள் நீங்கி மாசறுத்தல்’ ‘அய்யத்தின் நீங்கித் தெளிதல்” ‘எப்பொருளிலும் மெய்ப் பொருள் காண்பது’ என்பதாகும்.

மத்துவாச்சாரியரால் சொல்லப்பட்ட பரமான்மாவும் சீவான்மாவும் வேறு வேறென்ற துவைதம்.

பொருளியல் உலகம் மாயை, பிரம்மம் உண்மை. பிரமத்தில் இருந்து வேறான ஆன்மாக்கள் இல்லை, பிரமம்தான் அனைத்துமாய்த் தெரிகிறது, பிரமமும் உயிர்களும் பிரிப்பின்றி உள்ளன,  அவை இரண்டில்லை ஒன்றுதான் (இருதிறன் அன்மை) என்னும் அத்துவைதம்.

உலகத்தினுள்ளும் உயிரினுள்ளும் ஊடுருவி இரண்டறக் கலந்து கடவுள் நிற்கிறான். எல்லா வல்லமையும் படைத்த கடவுள்தான் மூல காரணம், அண்டம் (பிரபஞ்சம்) காரியமாகும் என்ற விசிட்டாத்வைதம் முதலிய சிக்கலான கோட்பாடுகள் திருக்குறளில் சொல்லப்படவில்லை.

சங்கரர் வேதாந்தி, எனவே அவரது அத்வைதத்தை சைவ சித்தாந்திகள் ஏற்க மாட்டார்கள் என்பது தெரிந்ததே. எனவே சைவசித்தாந்திகள் சுத்த அத்துவைதம் என்ற இன்னொரு கோட்பாட்டை உருவாக்கினார்கள்.

கடவுள், உலகம், உயிர் ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து நிற்பது திருவருள் ஒன்றே. உயிருடன் இறைவன் ஒன்றாய், வேறாய், உடனாய் என்ற மூன்று தன்மைகளிலும் இணைந்து நிற்கிறான். உடம்பை நடத்துகிற உயிரானது எப்படி உடலோடு அத்துவிதமாய் கலந்திருக்கிறதோ அவ்வாறே கடவுளும் உலகத்தோடு கலந்து நிற்கிறான். உடலை உயிர் செலுத்தும் போது ஒன்றாயும், பொருட் தன்மையில் உயிர் வேறு இறைவன் வேறு. உயிர் இறைவன் அல்ல என்பதே சித்தாந்தக் (இறைவனே உயிர் என்பது வேதாந்தக் கொள்கை) கொள்கை. உயிருக்கு உயிராய் இறைவன் இருப்பினும் உயிர் புரியும் நன்மை தீமைகளுக்கு அவன் சாட்சியாய் உடன் இருப்பானே ஒழிய அதனால் பாதிக்கப்படமாட்டான்.

இந்தக் கோட்பாடுகளை உருவாக்கியவர்கள் இல்லாத ஊருக்குப் போகும் வழி காட்டியவர்கள். ஓவ்வொருவரும் தங்கள் தங்கள் அறிவுக்கு எட்டியவாறு உயிர், உலகம், இறைவன் என்ற மூன்றினது உறவைத் தத்துவமாகச் சொன்னார்கள்.

திருக்குறளில் இப்படிச் சிக்கலான, யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளமுடியாத கோட்பாடுகள் கிடையாது.


சோதிடப் புரட்டு (72)

சோதிடம் என்பது மூடத்தனம்! அறிவியல் உங்கள் மூலதனம்!

துறக்கம் (சொர்க்கம்) என்பதும் நிரயம் (நரகம்)  என்பதும் ஒருவித மன உணர்வுதான். அவை வெறும் கற்பனை. வான வெளியில் விரிந்து கிடப்பவை அல்ல. சட்டம் இல்லாத காலத்தில் மக்களைப் பயமுறுத்தி குமுதாய ஒழுங்கை நிலைநாட்டச் சொல்லப்பட்ட பொய்கள் அவை. துறக்கமும் நிரயமும் இவ்வுலகில் ஒருவன் தான் செய்கிற வினையின் அறுவடையாகும். வினை இன்ப உணர்வை ஏற்படுத்தும் போது துறக்கமும் துன்ப உணர்வை ஏற்படுத்தும் போது நரகத்தையும் உண்டாக்குகிறது.

திருவள்ளுவரது குறிக்கோள் அறிவுடைய சான்றோர் கொண்ட குமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே. அதற்கு வேண்டியது அன்பு, அறன், அருள், ஒழுக்கம், ஒப்புரவு, பழிக்கு அஞ்சுதல், நட்புறவு, கண்ணோட்டம் (civility) உண்மை முதலியன ஆகும்.

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும், தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்றார். அதாவது மக்களுடைய பெருமையையும் சிறுமையையும் அறியும் உரைகல்லாக இருப்பவை அவரவர் செயல்களே ஆகும். புறக் காரணம் இல்லை என்றார்.

“ஒழுக்கம் விழுப்பம் தரும். ஆதலால் அது உயிரைவிட மேலானது” என்றார்.

ஒழுக்கம் பற்றித் திருவள்ளுவர் தொடர்ச்சியாகப் பத்து அதிகாரங்களில் விளக்கிக் கூறுகிறார்.

“வெள்ளத்து அனைய மலர் நீட்டம், மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு” என்கிறார். இதையேதான் தாயுமானவர் மனமது சுத்தமானால் மந்திரம் தேவையில்லை என்றார்.

“உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல், மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ என்கிறார். அதாவது உயர்வைப் பற்றியே எண்ணுதல் வேண்டும். அது கூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதைக் கைவிடக் கூடாது என்கிறார்.

“செயற்பாலதோரும் அறனே, ஒருவற்கு உயற்பால தோரும் பழி” என்கிறார். ஒருவனுக்கு செய்யத் தக்கது நல்வினை. செய்யத் தகாதது தீவினை.

“பொருளிலார்க்கு இவ்வுலகு இல்லை என்பது பொய்மொழி இல்லை” எனவே பொருளைத் தேடுங்கள். தீவினை வழியில் அல்லாது நல்வழியில் பொருளை ஈட்ட வேண்டும்.

பிறனில் விழையாமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங் கூறாமை, தீவினை அச்சம், ஒப்புரவறிதல், ஈகை, அன்புடமை, அருளுடமை நல் அறங்களாகும்.

கள்ளுண்பவர் நஞ்சுண்பவர் என்கிறார் திருவள்ளுவர். கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் களவும் பஞ்சமாபாதகம் என்கிறது மணிமேகலை. குடியைக் கெடுக்கும் குடிப் பழக்கத்திற்கு ஆளானவர்கள் அதனை அடியோடு கைவிட வேண்டும். புகை பிடித்தலுக்கு அடிமை ஆனவர்களும் அவ்வாறே செய்தல் வேண்டும்.

மதங்கள் ஒழுக்கத்தைவிட பக்தியே சிறந்தது என்கின்றன.

பகவத் கீதையில் கண்ணன்  ‘எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னிடம் சரண்புகு. எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன்’ ( கீதை 18-66) என்கிறான்.

அறம் செய்யத் தேவையில்லை, ஒழுக்கம் தேவையில்லை பக்தி செய்தால் போதும் கொலைகாரனாக இருந்தாலும் அவனுக்குத் துறக்கத்தின் கதவுகள் திறக்கப்டும். இந்துக்கள் கொண்டாடும் சிவராத்திரிக் கதை இதைத்தான் சொல்கிறது.

திருமங்கை ஆழ்வார் நாகபட்டினம் பவுத்தவிகாரையில் இருந்த புத்தரின் தங்கச் சிலையைக் களவுசெய்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குத் திருப்பணி செய்தார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தைக் கையாடி கோயில் கட்டினார்.

பெரியபுராணத்தில் சொல்லப்படும் பல கதைகள் பக்திக்காக எந்த நேர்மையற்ற அநாகரிகச் செயலையும் செய்யலாம் என்கிறது.

ஒரு நாயனார் தினந்தோறும் சூதாடிப் பெற்ற பணத்தில் கோயில் திருப்பணி செய்தார். சிறுத் தொண்டர் என்ற நாயனார் சிவனடியார் கேட்டார் என்பதற்காக தனது பிள்ளையை வெட்டிக் கறி சமைத்து விருந்து வைத்தார். இயற்பகை நாயனாரிடம் சிவனடியார் அவரது மனைவியைத் தன்னோடு அனுப்பி வைக்குமாறு கேட்டபோது அப்படியே தன் மனைவியை சிவனடியாரோடு அனுப்பி வைத்தார். உற்றாரும் ஊராரும் எதிர்த்தபோது வெறியோடு அவர்களை மழுவால் வெட்டி வீழ்த்தினார்.

விவிலிய வேதத்தில் கடவுள் கேட்டதற்கு இணங்க தனது ஒரே பிள்ளையை (Issac) வெட்டிப் பலிகொடுக்க ஏப்ரகாம் முன்வந்த கதை கூறப்படுகிறது. நல்ல காலமாக பிள்ளையைப் பலி கேட்ட கடவுள் பின்னர் மனம் மாறி ஆடு ஒன்றை வெட்டிப் பலி கொடுத்தால் போதும் எனச் சொல்லிவிட்டார். ஏப்ரகாமின் பக்தியைச் சோதிக்கவே கடவுள் இவ்வாறு பலி கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கடவுள் விளையாட்டுக்குத்தானும் நரபலி கேட்பவர் என்ற கதை கடவுள் இலக்கணத்துக்கு களங்கம் கற்பிப்பது ஆகும்.  பிள்ளைக்குப் பதில் ஆடு பலிகொடுக்கப்பட்டாலும் அந்த ஆடு என்ன பாவம் செய்தது?  இன்று கூட அந்த நாளைக் கொண்டாடும் போது இலட்சக்கணக்கான ஆடுகளை இஸ்லாமியர் ஈவு இரக்கமின்றி வெட்டிப் பலி கொடுக்கிறார்! (Deuteronomy 12:31)

இவ்வாறான அருவருப்பான கதைகள் மனிதன் நாகரிகம் அடையாத காட்டுமிராண்டிக் காலத்தில் புனையப் பட்டவையாகும். அவர்களை மன்னிக்கலாம்.

ஆனால் இப்படி ஒழுக்கத்திற்கும், நேர்மைக்கும், அறிவிற்கும் மாறான மதங்கள் நம் வாழ்வுக்குப் பயன்படுமா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“அறம் எனப்படுவது மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் கொடுத்தல் அல்லது வேறில்லை”

“மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்கிறது மணிமேகலை.

அறம் செய்யுங்கள். மற்றவர்களுக்கு உதவுங்கள். உங்கள் வருவாயில் இரண்டு விழுக்காட்டை அறச் செய்கைகளுக்குச் செலவிடுங்கள். சாநாள் வரும் வரை காத்திருக்காதீர்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்……….

என்ற பாரதியாரின் வாக்கைப் பொன்னே போல் போற்றி நடவுங்கள்.

அறம் என்பது மனத்துக் கண் மாசிலன் ஆதல். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரம். பொறாமை, அவா, கோபம், கடுஞ்சொல் இந் நான்கும் கடிந்து நடத்தல் அறமாகும்.

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.             (குறள் 278)

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்                 (குறள் 280)

புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப்படும்.                (குறள் 298)

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை           (குறள் 322)

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.                 (குறள் 616)

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.                 (குறள் 625)

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையால்.              (குறள் 972)

வாழ்க்கை என்பது ஒரு கலை, அதன் வழிகாட்டி திருக்குறள்!

திருக்குறளை நாள்தோறும் படித்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!

மறு உலகுபற்றிக் கவலைப்படாது இந்த உலகில் இன்புற்று வாழுங்கள்!

‘உண்டால் அம்ம இவ்வுலகம் பிறர்க்கென
வாழுநர் உண்மையானே’

என்று புறநானூறு பேசுகிறது. தனக்கென வாழாமல் பிறருக்காகவே வாழும் சான்றோர் இருப்பதால்தான் இந்த உலகம் தளைத்திருக்கிறது.

திருக்குறளில் உள்ள மருந்து அதிகாரத்தைப் படித்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் உடல்நலம் மனநலம் நீங்கள் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று, அகத்தூய்மை மற்றும் புறத்தூய்மை, போதிய உறக்கம் போன்றவற்றில் தங்கியிருக்கிறது.

அருச்சனை அபிசேகம் தேர்த் திருவிழா செய்தால் பாவம் கரையும் மறு உலகம் கிடைக்கும் என்றோ பிரார்த்தனை செய்தால் முக்தி கிடைக்கும் என்றோ வள்ளுவர் சொல்லவில்லை. அதனால் சமயவாதிகள் தீக்குறளை ஓதோம் என்று சொல்லிவிட்டார்கள்.

‘இதெல்லாம் என் விதி!  போதாத காலம்’  என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விடாதீர். தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.  வாழ்வில் வெற்றிபெற தன்னம்பிக்கையும் விடாமுயற்சி.யும் வேண்டும்.

‘பிரார்த்தனை, ஆராதனை இவற்றால் பஞ்சம் தீராது.  உழைத்தால்தான் பஞ்சம்  தீரும். இதற்கு அறிவு, ஆற்றல், நம்பிக்கை இருக்க வேண்டும். சில சோம்பேறிகள் இருப்பதால்தான் நாடு  பின்தங்கிய நிலையில் இருக்கிறது. மேலும் அறியாமை, மூடநம்பிக்கை நம் நாட்டில் அப்படியே இருக்கிறது’ என்கிறார் கவியரசு வைரமுத்து.

பிறர்க்கு கவலையும் துன்பமும் செய்யாது நீங்குங்கள்!

பொய் பேசாதீர், புறங் கூறாதீர்!

அறம் செய்யுங்கள், செய்நன்றி மறவாதீர்!

தீயோர் நட்பை விலக்குங்கள், பொய்ச் சாட்சி சொல்லாதீர்!

பொருள் மொழிகளைக் கேட்பதிலிலிருந்து நீங்காதீர்!

நல்லோர் அவையினைத் தேடி அடையுங்கள்!

தீயோர் அவையிலிருந்து தப்பிப் பிழையுங்கள்!

பிறர் மனை அஞ்சுங்கள், துன்பமுறும் உயிர்களைக் காப்பாற்றுங்கள்!

இல்லறத்தை விரும்புங்கள், அறமல்லாதவற்றை வெறுத்து ஒதுக்குங்கள்!

கள், களவு, காமம், பொய், பயனில் சொல், பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றை  ஒழிக்கும் வகையறிந்து ஒழியுங்கள்!

கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போகட்டும்!

குலமும் ஓன்றே தேவனும் ஒன்றே!
பிறப்பும் ஒன்றே இறப்பும் ஒன்றே!

தேடுகிற புராணமெல்லாம் பொய்!
ஆடுகிற தீர்த்தமெல்லாம் அசுத்தம்!

உள்ளத்தில் உண்மை ஒளி வேண்டும்!
வாக்கினில் வாய்மை வேண்டும்!

நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!

திரவியம் தேடுங்கள்!

பிறர் பொருள் கரவேல்!

வருவாயக்கு மேல் செலவு செய்யாதீர்கள்

சூது விரும்பேல்!

பகைவர்களை நம்பாதீர்!

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்!

தாய் தந்தை பேணுங்கள்!

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்!

மக்கள் பணியே இறைவன் பணியென நினையுங்கள்!

எண்ணும் எழுத்தும் கண்ணனெனத் தகும்!

நூல் பல கற்று அறிவைப் பெருக்குங்கள்!

சாதிப் பிரிவினில் சாத்திரக் குப்பையில்
சாதகத்தில் பஞ்சாங்கத்தில் தீயை மூட்டுங்கள்!

மூடநம்பிக்கைகளை விட்டொழியுங்கள்!

புத்தியைத் தீட்டுங்கள்!

பகுத்தறிவோடு வாழுங்கள்!

அறிவியல், பொருளியல்;, கலை, பண்பாட்டுத் தளங்களில் ஏனைய இனத்தவர் போல் தமிழர் உலகில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

சோதிடம் ஒரு புரட்டு என்பதை அசைக்க முடியாத சான்றுகளோடு இந்த நூலை எழுதியுள்ளேன். இதைப் படித்தவர்கள் தங்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் ஆகியோரை சோதிடக் புரட்டில் இருந்து மீட்டெடுத்து குறள் வழி வாழக் கற்றுக் கொடுங்கள்.

தோதிடம் என்பது மூடத்தனம்! அறிவியல் உங்கள் மூலதனம்! (முற்றும்)


அருஞ்சொல் விளக்கம்

அச்சு – புவியின் நடுவே செல்வதாகக் கற்பனை செய்யப்படும் தண்டு. இது புவியின் சுற்றுப்பாதைக்கு 23.27 பாகை சரிந்திருக்கிது.

Axis                        –     An imaginary stick going through the center of the earth or geometric object that rotates or may be conceived to rotate. . It is tilted 23.27  degrees  with respect to earth’s orbit.

அச்சுத் திசைமாற்றம்  – ஒரு பம்பரத்தின் அச்சு வெளி ஆற்றல் காரணமாக தனது அச்சில் தள்ளாடிக் கொண்டு சுற்றுவது போன்ற அசைவு.

Precession               –     The motion of the axis of a spinning body, such as the wobble of a spinning top, when there is external force acting on the axis. 

அடர்த்தி  – செறிவு, நெருக்கம், செறிமானம், பருவ அளவுடன் எடைமானத்துக்குள்ள விழுக்காடு.

Density                  –      The mass per unit volume of a substance under specified conditions of pressure and temperature.

அடிவானம்               –  ஒரு நோக்குநர் பார்வையில் வானும் மண்ணும் ஒன்றை ஒன்று தொடும் அல்லது பிரிக்கும் ஒரு கோடு.

Horizon                 –     The apparent intersection of the earth and sky as seen by an observer.  The line that separates earth from sky.

அயன முந்து நிகழ்வு      –   ஞாயிறு, திங்கள் மற்றும் கோள்களின் ஈர்ப்புக் காரணமாக புவியின் அச்சு ஞாயிறு சுற்றுப் பாதையில் பின்நோக்கி மேற்குத் திசையில் தள்ளுப்படுத்தல்.

Precession of equinoxes    –      A slow gyration of the earth’s axis around the pole of the ecliptic, caused mainly by the gravitational pull of the sun, moon, and other planets on the earth’s equatorial bulge. It causes a  slow westward shift of the equinoxes along the plane of the ecliptic, resulting from precession of the earth’s axis of rotation, and causing the equinoxes to occur earlier each sidereal year. The precession of the equinoxes occurs at a rate of 50.27 seconds of arc a year. A complete precession requires 25,800 years.

அமாவாசை                         – புது நி்லா அல்லது உவவுமதி     New Moon

ஆண்டு                                – புவி ஞாயிறைச் சுற்றிவரும் காலப்பகுதி. 365.24219 நாள்களைக் கொண்டது

இயலுலகம்                    – அண்டம் (வடமொழி) புவி, பால்மண்டலங்கள் மற்றும் வெளி உட்பட எல்லாத் திடப்பொருட்களையும் ஆற்றலையும் உள்ளடக்கிய மொத்த வெளி

Universe                    –       All matter and energy, including the earth, the  galaxies and the contents of intergalactic space, regarded as a whole. 

இருக்கை                        –  இருப்பு, நிலை, இடம்

Position                      –       A place or location 

ஈர்ப்பு                       – ஞாயிறு, கோள், விண்மீன் முதலிய விண் பொருள்களின் இயற்கைக் கவர்ச்சியை ஒரு நிலையில் குறிப்பது. ஒரு பொருள் இன்னொரு பொருளைக் கவரும் விசை.

Gravity                        –      The natural force of attraction exerted by a celestial body, such as Earth, upon objects at or near its surface, tending to draw them toward the center of the body. 

உச்சிக்கு நேர் எதிர்       –  விண் கோளத்தில் உச்சிக்கு நேர் எதிர் கீழே உள்ள புள்ளி.

Nadir                         –       A point on the celestial sphere directly below the observer, diametrically opposite the zenith. 

உடு விண்மீன் அல்லது நாண்மீன், நட்சத்திரம் (வட மொழி)  – வானில் தெரியும் சுய ஒளி படைத்த நட்சத்திரங்கள்.

Stars                           An object in the sky that sends out its own , generated by  in its center. There are many billions of stars in our galaxy, theMilky Way.

உடுமண்டலம்  – விலங்குகள் வேறு உருவங்கள் போல் காட்சி தருமாறு விதிக்கட்டின்றி தொடுக்கப்பட்ட விண்மீன் கூட்டம்,

Constellation     –          An arbitrary formation of stars perceived as a figure or design, especially one of 88 recognized groups named after characters from classical mythology and various common animals and objects.

உணர்வுக் காட்சி –  புலனுணர்வுப் பொருள், புலனியல் காட்சி, உளவியல் – செயல்துறை இல்லாத பட்டறிவு.

Perception          –          Insight, intuition or knowledge gained by  perceiving.     

எடுகோள்        –  ஆதாரற்ற அனுமானம் அல்லது கற்பனை. மேலாராய்வுக்கு அடிப்படையாகத் தற்காலிகமாக எடுத்துக் கொள்ளப்படும் கருத்து.  இது ஆய்வின் மூலம் நிறுவப்படும் அல்லது புறக்கணிக்கப்படும்,

Hypothesis        – A tentative explanation for an observation, phenomenon, or scientific problem that can be tested by further investigation.

ஏரணம்              –   அளவை. காரண காரியங்களோடு ஆய்வு முடிவை எட்டுவது.

Logic              – The study of the properties of propositions and deductive reasoning by abstraction and analysis of the form rather than the content of propositions under consideration. 

எதிர்வு கூறல்  –   நடக்கப் போவதை முன்கூட்டியே சொல்லல்.

Prediction     –       Something foretold or predicted. A prophecy.

ஒளியாண்டு  –   ஓராண்டு ஒளி வெற்றிடத்தில் கடக்கும் தொலைவு.
வானியல் தொலைவின் அலகு. ஒளியின் வேகம் வினாடிக்கு 300,000 கிமீ ஆகும். எனவே ஒரு ஆண்டில் அது 9,500,000,000,000 கிமீ செல்கிறது.
Light Year  – A light-year is a unit of distance. It is the distance that light can travel in one year. Light moves at a velocity of about 300,000 (km) each second, therefore, one light-year is equal to 9,500,000,000,000 km.

ஓரை வட்டம்      – இராசிச் சக்கரம் (வட மொழி) ஞாயிறு, நிலா, கோள்கள் செல்லுமாப் போல் தோன்றும் கற்பனைப் பட்டை. சோதிடத்தில் இது ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட 12 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

Zodiac             –  In Astrology  this band divided into 12 equal parts called signs, each 30° wide, bearing the name of a constellation for which it was originally named but with which it no longer coincides owing to the precession of the equinoxes. 

கடகக்கோடு    – புவி நடுக்கோட்டில் இருந்து 23°27′ பாகை வடக்கேயுள்ள வட்டம்.

Tropic of Cancer – The parallel of latitude 23°27′ north of the equator. The northern boundary of the Torrid Zone and the most northerly latitude at which the sun can shine directly overhead.

கடா  – பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேடம்.  Aries  
கருதுகோள்    – கருத்துப்படிவம், பொதுக்கருத்து.

Concept              –       A general idea derived or inferred from specific instances or occurrences.

குறுக்குக்கோடு  – அட்சரேகை (வட மொழி) நிலநடுக்கோட்டில் இருந்து வடக்கு – தெற்கு திசைகளைக் குறுக்கே வெட்டி அதன் தொலைவை பாகையில் குறிக்கும் கற்பனைக் கோடுகள்.

Latitude       –     The angular distance north or south of the earth’s equator, measured in degrees along a meridian, as on a map or globe.

கோள்          –  ஞாயிறை வலம் வரும் விண் உடலி. (கிரகம் – வட மொழி) ஞாயிறு போன்ற விண்மீனிடம் இருந்து ஒளியைப் பெறுகிறது.

Planet        –   A non-luminous celestial body larger than an asteroid or comet, illuminated by light from a star, such as the sun, around which it revolves.

கோளம்       –   பந்து போன்ற விண் உடலி

Sphere       –      A celestial body, such as a planet or star

கோட்பாடு – புனைவு, புனைகருத்து, பல தனிச் செய்திகளை  இணைத்துகாட்டி அவற்றின் ஒருமை விளக்கம். நடைமுறை சாராக் கோட்பாட்டுத் திட்டம். (தத்துவம் – வட மொழி)

A set of statements or principles devised to explain a group of facts or phenomena, especially one that has been repeatedly tested or is widely accepted and can be used to make predictions about natural phenomena.

கோள்வீதி                – கோள்கள் ஈர்ப்பு விசை காரணமாக ஞாயிறைச் சுற்றிவரும் பாதை.

ஞாயிறு மறைப்பு   –  ஞாயிறுக்கும் பார்வையாளருக்கும் அல்லது பார்வாiயாளருக்கும் வானுடலிக்கும்  இடையில் ஒரு வானுடலியை இன்னொரு வானுடலி முழுதாகவோ பாதியாகவோ மறைக்கும் நிகழ்வு.

Eclipse                –           An obstruction of one of the heavenly bodies by the interposition of another either between it and the spectator or between it and the sun. In other words to hide a luminous body wholly or in part.

ஞாலம்                   – நாம் வாழும் புவி – ஞாயிறில் இருந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

Earth                 –  The planet on which we live — the third planet from the earth

ஞாயிறு குடும்பம் – ஞாயிறும் அதனைச் சுற்றிவரும் ஒன்பது கோள்களும்

Solar System       –     The sun together with the nine planets and all other celestial bodies that orbit the sun.

ஞாயிறு வீதி         – புவியில் இருந்து பார்க்கும் போது விண்ணில் ஞாயிறு செல்வதாகத் தோன்றும் சுற்றுவட்டப் பாதை.

Ecliptic              –     A great circle inscribed on a terrestrial globe inclined at an approximate angle of 23°27′ to the equator and representing the apparent motion of the sun in relation to the earth during a year.

ஞாயிறு மைய அண்டம்         – ஞாயிறை மையமாகக் கொண்ட இயலுலகம்.

Heliocentric   Universe     – Copernican system that placed the sun motionless at the center of the solar system with all the planets, including the earth, revolving around it     

சம தளம்                    – வளைவின்றி நேராக இருக்கும் மேற் பரப்பு.

Plane                         –   a flat or level surface containing all the straight lines that connect any two points on it.

சமபகலிரவுகள்     – வானத்தில் ஞாயிறு செல்வதாகத் தோன்றும் வட்டப் பாதை விண்ணக நடுக்கோட்டை வெட்டும் புள்ளி. ஒவ்வொரு ஆண்டும் இருமுறை மார்ச்சு 21 (இளவேனில் சமபகலிரவு) செப்தெம்பர் 23 (இலையுதிர் சமபகலிரவு) இது இடம்பெறுகிறது.

Equinox                     –   The bigger circle of the ecliptic intersects the bigger circle of the celestial equator. Each year this happens twice, i.e. on the 21st March & 23rd September when the durations of day & night are equal. On the 21st March it is called vernal equinox, whereas 23rd September autumnal equinox.  

சார்புக் கோட்பாடு         –   வெளி மற்றும் காலம் நிச்சயமான கருத்துருவம் என்பதை விட அவை ஒப்பீடடு கருத்துருவம் என்ற கோட்பாடு

Theory of Relativity      –       the theory that space and time are   relative concepts rather than absolute concepts

சிறுவட்டம்                     – ஒரு இணக்க வட்டத்தின் பரிதிப் புள்ளிகளை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு வட்டம

Epicycle                     –    A circle whose circumference rolls along the circumference of a fixed circle, thereby generating an epicycloid or a hypocycloid 

சுழியம்                            –  சுன்னம், பூச்சியம் (வடமொழி) சைபர் (ஆங்கிலம்)

Zero                         –      The identity element for addition.

திங்கள் நாள்                 –  திதி          – 0.983 நாள்
திணிவு                           –  ஒரு குறிப்பிட்ட வடிவம் அற்ற  பொருளிலுள்ள சடப் பொருளின் அளவு.

Mass                        – A unified body of matter with no specific shape: a mass of clay.

தென் துருவ வட்டம்   – புவி நடுக்கோட்டில் இருந்து 66 33’ பாகை தெற்கில் உள்ள கற்பனை வட்டம்.

Antarctic Circle         – The parallel of latitude approximately 66°33′ south.           

நெடுக்கோடு       – புவியை அல்லது வான் கோள் வட்டத்தை கிழக்கு மேற்காக இரண்டு சரிசமமான பாகங்களாகப் பிரித்து அவற்றின் தொலைவை ஞாயிறு சுற்றுப் பாதையில் இளவேனில் சமபகலிரவு புள்ளியில் இருந்து பாகையில் காட்டும் கோடுகள்

Longitude             –    Distance of place, east or west of a given meridian distance in degrees from the vernal equinox on the ecliptic.

நிலநடுக்கோடு    – புவியை மற்றும் விண்கோளை வட தென் முனைகளில் இpருந்து சமமாக கிழக்கு மேற்காகப் பிரிக்கும் கற்பனைக் கோடு.   இது 0 பாகையாகும்.

Equator               –     A great circle, drawn east to west, divides the celestial sphere into two equal parts which are known as Northern & Southern Hemisphere. The sun remains in the northern hemisphere from 21st March to 23rd Sept. while from 24th September to 20th March in the southern hemisphere. Great circle in the sky in the plane perpendicular to earth axis.

நிறை                        –   ஒரு பொருளின் புவி ஈர்ப்பு விசை.

Weight              –    The force with which a body is attracted to Earth or another celestial body, equal to the product of the object’s mass and the acceleration of gravity.

நிலா                          –   திங்கள், மதி, சந்திரன் (வடமொழி) Moon
நீள்வட்டப்பாதை    –  வானத்தில் ஞாயிறு செல்லுமாப் போல் தோன்றும் 23°27 கோணத்தில் சரிந்திருக்கும் வட்டப்பாதை. கதிர் வீதி.

Galaxy               –    Any of numerous large-scale aggregates of stars, gas, and dust that constitute the universe, containing an average of 100 billion.     
நீள்வட்டம்          –  முட்டை வடிவான வட்டம்.

Ecliptic          –   A great circle inscribed on a terrestrial globe inclined at an approximate angle of 23°27′ to the equator and representing the apparent motion of the sun in relation to the earth during a year.

நுண்மாண் நுழைபுலம்   –   பல நூல்களைக் கற்பதால் வரும் நுட்பமான அறிவு

நெடுக்கோடு         –  நிரைகோடு, தீர்க்கரேகை (வட மொழி) ஞாயிறு சுற்றுப் பாதையில் குறிப்பிட்ட வான்கோள் வட்டத்தை கிழக்கு அல்லது மேற்காகப் பிரித்து அவற்றின் தொலைவை  பாகையில் காட்டும் கோடுகள். வட-தென் துருவத்தை மேல்கீழாக ஊடறுக்கும் கற்பனைக் கோடுகள். Longitude

நொடி     – விநாடி, Second

பால்மண்டலம் – உடுமண்டலம்  Galaxy

Galaxy               –    Any of numerous large-scale aggregates of stars, gas, and dust that constitute the universe, containing an average of 100 billion.                            

பாகை   – ஒரு வட்டத்தின் 1ஃ360 பங்கு, கலை, ஒரு விற்கலை, ஒரு வெப்ப நிலை அளவு.
பின்னேகல்     – எதிர் இயக்கம், வக்கரிப்பு (வட மொழி)

 in astronomy, real or apparent movement of a planet, moon, asteroid, or comet from east to west relative to the fixed stars. 

புவி மைய அண்டம்        – புவியை நடுவாகக் கொண்ட இயலுலகம். .

Geocentric  Universe    –    Having the earth as the center.     
பெயர்ச்சி                          – ஒரு கோள் ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்குப் பெயர்தல்.

Transit                         The passage of a celestial body across the  observer’s meridian. The passage of a smaller celestial body or its shadow across the disk of a larger celestial body.

பொதுமேனி   –   சராசரி (வட மொழி) Average

மகரக்கோடு  –  புவி நடுக்கோட்டில் இருந்து 23°27′ பாகை தெற்கேயுள்ள வட்டம்.

Tropic of Capricorn The parallel of latitude 23°27′ south of the equator, the southern boundary of the Torrid Zone, and the most northerly latitude at which the sun can shine directly overhead.

மணித்துளி                      – நிமிடம், கலை (வட மொழி)
வடதுருவ வட்டம்          – புவி நடுக்கோட்டில் இருந்து 66 33’ பாகை வடக்கில் உள்ள கற்பனை வட்டம்

வடமீன்                            – துருவ நட்சத்திரம்

Polestar (Polaris)         –  The brightest star in Ursa Minor; at the end of the handle of the little dipper; the northern axis of the earth points toward it

வானலகு  – ஞாயிறு        – புவி இரண்டுக்கும் இடையிலான பொதுமேனித் தூரம். இது 149,597,870 கிமீ ஆகும்

Astronomical Unit (AU)  –    A unit of length used in measuring astronomical distances within the solar system equal to the mean distance from Earth to the Sun. Approximately 150 million kilometers (93 million miles).

வான்கோள் வட்டம்   – உச்சிப் பொழுதில் உச்ச நீசங்களையும் வான்கோள் துருவங்களையும் ஊடுருவிச் சென்றிணைக்கும் கற்பனைக் கோடு. அடிவானத்தைப் பார்க்கும் போது உச்சிவேளையில்   புவியின் வட- தென் துருவங்களை இணைக்கும் கற்பனைக் கோடு.

Meridian                      – Pertaining to the mid-day an imaginary circle passing through the poles of the heavens and the zenith of the spectator which the sun crosses at mid-day

விண் கோளம்        – வானிலுள்ள விண்மீன்கள் யாவும் ஒரு கற்பனைக் கோளத்தின் உட்பகுதியல் ஒட்டிக் கொண்டிருக்குமாப் போல் தோன்றும் எல்லையில்லா கற்பனைக் கோளம்

Celestial Sphere        –   An imaginary sphere of infinite extent with the earth at its center on which the stars, planets, and other heavenly bodies appear to be located

விண்கற்கள்                  –  விண்ணில் ஓடிக் கொண்டிருக்கும் சிறு கற்பாகைள்.

Meteoroids                –  A solid body, moving in space that is smaller than an asteroid and at least as large as a speck of dust.

விண்ணக உடலிகள்  – வானில் காணும் விண்மீன்கள், கோள்கள், பால்மண்டலம் முதலியவை. ர்நயஎநடெல டிழனநைள.
விண்ணக துருவம்  – விண்ணக துருவம். புவிக்கு துருவங்கள் இருப்பது போல் விண்ணுலகுக்கும் துருவங்கள் இருப்பதாகக் கற்பனை செய்யும் துருவங்கள். இவ்வாறே விண்ணுலகில் நடுக்கோடு, நிரைகோடு, குறுக்குக்கோடு இருப்பதாகக் கற்பனை செய்யப்படுகிறது.

Celestial Pole           –   As the Earth rotates west to east, the stars appear to circle the celestial pole, east to west above the Earth’s equator halfway between the north and south . 

விண்வெளி                 – ஞாயிறு குடும்பம், விண்மீன்கள் மற்றும் பால் மண்டலங்கள் இருக்கும் பெரு வெட்டவெளி

Space                       –  The expanse in which the solar system stars and galaxies exist; the universe

 

About VELUPPILLAI 3405 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply