சிங்கள (மகாவம்ச) பவுத்தம் மீள் பார்வை
எழுதியவர் ஜே.எல். தேவானந்தா
(இந்தக் கட்டுரையை எழுதியவர் ஒரு சிங்கள எழுத்தாளர். இக் கட்டுரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டாலும் இப்போது வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கையில் புத்த மதத்துக்கு முதன்மை இடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதி மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் மக்களிடையே காணப்படும் மகாவம்ச சிந்தனையே முக்கிய காரணமாகும். அதன் வரலாற்றுப் பின்னணியை இக்கட்டுரை நன்கு விளக்குகிறது. தமிழாக்கம்- நக்கீரன்)
(டிசெம்பர் 26, 2011 கொழும்பு, சிறிலங்கா கார்டியன்)
சிறிலங்காவில் கடைப்பிடிக்கப்படும் பவுத்தம், உண்மையில் சிங்கள பவுத்தம் (அல்லது மகாவம்ச – பவுத்தம்) ஆகும். தேரவாத பவுத்தம் கடைப்பிடிக்கப்படும் தாய்லாந்து, கம்போதியா போன்ற நாடுகளுக்கு வேறுபட்ட மதமாகும். இந்த நாடுகளில் வாழும் பவுத்தர்கள் பவுத்தமத மறைநூலான திரிபீடகம் (முக்கூடை) (1. சுத்த பீடகம் 2. வினைய பீடகம் 3. அபிதம்ம பீடகம்) ஒன்றையே பின்பற்றுகிறார்கள். அதேவேளை சிறிலங்காவில் புத்தர் நிர்வாணம் அடைந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மகாவிகாரை தேரர்களில் ஒருவரான மகாநாம தேரர் அவர்களால் எழுதப்பட்ட மகாவம்சம் பவுத்த மறை நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனினும் மகாவம்வம் பெரும்பாலும் பவுத்த மதத்தின் புராண அல்லது இயற்கைக்கு மாறான வரலாற்றைக் கூறுகிறது. திரிபீடகம் மற்றும் மகாவம்சம் இரண்டும் பாளி மொழியில் எழுதப்பட்டவையாகும். பாளி மொழியை படித்திராத ஒரு சாதாரண பவுத்தன் இந்த இரண்டுக்கும் (திரிபீடகம், மகாவம்சம்) இடையிலான வேறுபாட்டை அறியமாட்டான். எனவே அவன் அல்லது அவள் பவுத்த தேரர்கள் போதிப்பவை எல்லாம் புத்தரின் உண்மையான வாய்மொழி என நம்புகிறான் அல்லது நம்புகிறாள்.
அறியாமை காரணமாக, சிங்கள பவுத்தர்கள் இன்றும் தாங்கள் புத்தரின் இரத்த உறவினர்கள் என நம்புகின்றனர். காரணம், மகாவம்சம் அவர்களின் (சிங்களவர்களின்) மூதாதையான பாண்டு வாசுதேவன் சாக்கிய குலத்தைச் சேர்ந்தவன் என்றும் புத்தரது உறவினன் என்றும் சொல்லுகிறது. ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் பாண்டு என்ற சொல் பாளி மொழியில் பாண்டியர்களைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள்.
பவுத்த மதத்தின் படி ஒருவர் ஒரு பவுத்த தேரராக (சங்கத்தில்) தீட்சை பெற்ற பின்னர் அவர் அகிம்சை (பிற உயிர்க்கு தீங்கு செய்யாமை) கருணை (தாட்சண்யம்) மெத்தா (அன்புள்ள கருணை) மற்றும் மயித்திரிய (தயவு) போன்றவற்றை இனம், சமயம் கடந்து வாயளவில் இல்லாது மனத்தினாலும் நடத்தையினாலும் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். நற்பேறு இல்லாததால், மகாவம்சத்தின் செல்வாக்கால், ஒரு பவுத்த தேரர் இனவாத அரசியலில் ஈடுபடவும் நாங்கள் இன்று பார்ப்பதுபோல சிங்கள – பவுத்த பேரினவாதம் மற்றும் வெறுப்புணர்வை வளர்ப்பதற்கும் அவருக்குச் சுதந்திரம் இருக்கிறது.
கிமு இரண்டாம் நூற்றாண்டில் மகிந்த தேரரின் தலைமையில் பேரரசர் அசோகன் பவுத்த தேரர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். அதுமட்டும் இங்கு (இலங்கையில்) பவுத்தம் இருக்கவில்லை. மகிந்த தேரரே இந்து (சைவ சமயம்) மதத்தில் இருந்த நாகர்குல அரசனான (தேவநம்பிய) தீசனை பவுத்த சமயத்துக்கு மாற்றினார். அதே போல் கிபி 5 ஆம் நூற்றாண்டில் மகாவிகாரையில் இருந்த தேரர்கள் சிங்கள இனத்தையும் / குலத்தையும் உருவாக்கும் வரை சிங்கள இனமோ / குலமோ இலங்கையில் இருக்கவில்லை. இந்து/ பிராமணிய செல்வாக்கு பவுத்த மதத்துக்கு ஒரு பெரிய அறைகூவலாக எழுந்து பவுத்தம் மக்களிடையும் மன்னர்களிடையும் தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியபோது இந்தியா முழுதும் பவுத்த நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. அனுராதபுரத்தில் இருந்த மகாவிகாரை தேரர்கள் (பாளி மொழியில் மகாவம்சத்தை எழுதிவரும் பவுத்த நாகர்குல அரசனான தாதுசேனனின் நெருங்கிய உறவினருமான வண. மகாநாம தேரர் உட்பட) இந்தியாவில் பவுத்த மதம் சரிவடைவதையும் தன்னிலை இழப்பதையும் கண்டார்கள். பவுத்தத்திற்கு எதிராக இந்தியாவில் ஏற்பட்ட சம்பவங்கள் இலங்கை மகாவிகாரையில் வாழ்ந்த தேரர்களைப் பவுத்த சமயத்தைக் காப்பாற்றுவதற்கான உத்தியையும் /மூலோபாயத்தையும் வகுக்கத் தூண்டியிருக்க வேண்டும்.
சிறிலங்காவில் புத்த சமயத்தைக் காப்பாற்ற வேண்டும் அதனை வலுப்படுத்த வேண்டும் என்ற அவர்களது கடுமையான ஈடுபாடு காரணமாக மகாவம்சம் / தீபவம்சம் போன்ற வரலாற்று நூல்களை எழுத முடிவு செய்தார்கள். அதன் மூலம் சிறிலங்காவை ஒரு தம்மதீப /சிங்களதீப (புத்தரால் தெரிவு செய்யப்பட்ட பூமி. அதில் பவுத்தம் 5,000 ஆண்டுகள் நிலைதிருக்கும்) ஆக மாற்ற அதில் வாழும் பல்வேறு இனக் குழுக்களை /குலங்களை ஒன்றிணைத்து சிங்கள இனத்தை (கவுதம புத்தர் தேர்ந்தெடுத்த மக்கள்) உருவாக்கி பவுத்த மதத்தை, அடுத்த மயித்திரிய புத்தர் வரும்வரை 5,000 ஆண்டுகளுக்கு சிறிலங்காவில் பாதுகாப்பதற்குத் திட்டமிட்டார்கள்.
பவுத்த மன்னர்களின் ஆதரவோடு மகாவிகாரை தேரர்களே வெவ்வேறு குலங்களில் காணப்பட்ட பவுத்தர்களை தன்மயமாக்கி (assimilate) அவர்களை சிகல ( கற்பனைப் பாத்திரமான விஜயனின் சந்ததிகள்) என அழைத்தார்கள். இந்தியாவில் (வங்காளம்/ குஜராத்) இருந்து தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள், நாடு கடத்தப்பட்டவர்கள் இலங்கைத் தீவில் புகலிடம் கேட்டிருக்கலாம். அவர்கள் அங்கு குடியமர அனுமதிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் நாளடைவில் உள்ளூர் மக்களோடு கலந்து போயிருப்பார்கள். ஆனால் விஜயன் தனது 700 தோழர்களோடு இலங்கைக்கு வந்தபோது அங்கு சிங்களவர்கள் இருந்தார்கள் என்பதற்கான பழைய வரலாற்றுச் சான்றுகள் கிடையவே கிடையாது.
‘சிகல’ என்ற சொல் முதன் முதலாக கிபி 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தீபவம்சம் / மகாவம்சம் என்ற புராண வரலாற்று நூல்களிலேயே காணப்படுகிறது. அதுவும் தொடக்க அதிகாரங்களில் இரண்டுமுறைதான் வருகிறது. இன்று மட்டும் ‘ஹெல’ அல்லது ‘சிகல’ அல்லது ‘சிங்கள’ மக்கள் விஜயன் வருகைக்கு முன்னர் (இலங்கையில்) இருந்ததாக தொல்லியல் சான்று எதுவும் கிடைக்கவில்லை. பின்னாளில் மகாவம்ச நூலுக்கு உரை எழுதப்பட்ட மகாவம்ச திக்கா என்ற நூலில் மட்டும் மர்மமான ‘வம்ச பாடங்கள்’ ‘சிங்கள அத்தகத்தாய’ (வாய்வழி வந்த கதைகள்) இல் இருந்து தத்தெடுத்ததாகக் கூறுகிறது. மிகவும் விசித்திரமாக இந்த சிங்கள அத்தகத்தாய என்ற நூலில் காணப்படும் கதைகள் இந்திய இதிகாசங்கள் (மகாபாரதம், இராமாயணம்) மற்றும் புராணங்களில் காணப்படும் கதைகளை ஒத்ததாகவே இருக்கின்றன. உச்சக் கட்டமாக மகாவம்சம் புத்தரை இலங்கையில் இன அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிங்கள – பவுத்தத்தின் ஒரு சிறப்பான புரவலர் ஆக மாற்றிவிட்டது.
சிங்கள மற்றும் தெமெல
இலங்கையில் ஏராளமான தொல்பொருள் சான்றுகள் – உதாரணமாக பிராமி கல்வெட்டுக்கள், குகை எழுத்துக்கள், பாளி புராண வரலாறுகள் போன்றவை ‘தமிட, தெமில, தமில, தெமிழ் போன்ற சொற்கள் (இலங்கைத் தீவில்) வாழ்ந்த ஒரு தொகுதி மக்களைக் குறிக்கிறது. ஜாதக கதைகளிலும் தமிழ் நாடு (தெமில றட்ட) பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால் ஹெல, சிகல, சிங்கள போன்ற சொற்கள் கிறித்துவுக்கு முன்னரான சில நூற்றாண்டுகளிலும் பாளி மொழியில் மகாவம்சம் எழுதப்பட்ட கிபி சில நூற்றாண்டுகள் வரையும் பயன்பாட்டில் இருந்ததாக எந்தவித சான்றுகளும் கிடைக்கவில்லை. மகாவம்சம் கூட மகிந்த மகா தேரர் இலங்கைத் தீவிலுள்ளவர்களுக்கு உபதேசம் செய்த போது தீப பாசையில் ( தீவின் பாசை) செய்ததாகக் கூறுகிறது. ஆனால் தீப பாசை என்ற அந்தப் பாசை ‘எலு’ அல்லது ‘ஹெல’ அல்லது ‘சிகல’ பாசை எனக் கூறப்படவில்லை.
இது பற்றிச் சில சிங்கள புலமையாளர்கள் மேலேயுள்ள பலவீனமான வாதத்தை முன்வைக்கிறார்கள். ஆதிக்கக் குழுவின் பெயர் இந்தப் பதிவுகளில் இடம்பெறாது இருப்பதற்கு தக்க நியாயம் இருக்கிறது என வாதிடுகின்றனர். எல்லோரும் சிகல என்ற பெயருக்கு உரித்துடையவர்களாக இருந்தால் எந்தவொரு ஆளையும் அவன்/அவள் என வேறுபடுத்தி அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள். மில்லியன் டொலர் கேள்வி என்னவென்றால் இன்று கூட பெரும்பான்மையராக (அவர்கள் எப்படிப் பெரும்பான்மையாராக வந்தார்கள் என்பது வேறு கதை. கீழே அதுபற்றிச் சுருக்கமாகக் குறிபிடுவேன்) இருக்கும் (சிங்களவர்கள்) அவர்களுக்கு ஏன் பெயர் (சிங்களவர்) இருக்க வேண்டும்? இன்று மருந்து போன்ற முக்கிய பொருள் மட்டுமல்ல வீட்டுக் கூரைகூட சிங்களத்தில்தான் பெயரிடப் பட்டுள்ளன.
‘ஹெல’ ‘சிகல’ ‘சிங்கள’ போன்ற சொற்கள் சிறிலங்காவுக்கு வெளியே எங்காவது காணப்பட்டால், குறைந்தபட்சம் இலங்கைத் தீவின் வரலாற்றோடு எப்போதும் தொடர்புடைய இந்திய நாட்டின் (தெற்கு அல்லது வடக்கு) இலக்கியம் – கல்வெட்டு – பாறைவெட்டுப் போன்றவற்றில் காணப்பட்டிருந்தால் மேலே கூறப்பட்ட வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம். பெறுபேறின்மையால் (unfortunately) இதுவரை ஒன்றுமே கண்டறியப் படவில்லை.
அனுராதபுரம் மற்றும் பொலனறுவை இராச்சியங்கள் சிங்கள இராச்சியங்கள் என அறியப்படவில்லை. இந்த இராச்சியங்களை ஆண்ட நாகர் மற்றும் தமிழ் அரசர்கள் தங்களை ‘ஹெல’ ‘சிகல’ அல்லது ‘சிங்கள’ என்று அழைக்கவில்லை. நாகர்கள் சிங்களவர்கள் என்றோ அல்லது சிங்களவர்களாக மாறினார்கள் என்றோ கணிக்கப்பட எந்தச் சான்றும் இல்லை. பத்தாம் நூற்றாண்டில் சோழர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போது பவுத்தர்கள் ஆகவும் சிங்களவர்கள் ஆகவும் இருந்தவர்கள் தங்களது பழைய அனுராதபுரம் மற்றும் பொலநறுவை இராச்சியங்களைக் கைவிட்டு இலங்கையின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு தங்கள் இராச்சியத்தை இடம் மாற்றினார்கள். தங்களை இந்துக்களாகவும் தமிழர்களாகவும் அடையாளம் கண்டவர்கள் தங்களது ஆட்சியை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குக்கு இடம் மாற்றினார்கள். 13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே கோட்டை மற்றும் கண்டி இராச்சிங்கள் ‘சிங்கள’ இராச்சியங்கள் என அழைக்கப்பட்டன. இருந்தும் கிழக்கு கண்டி இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தாலும் அதனை தென் – கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த கலிங்கரும் தென்னிந்தியாவைச் சார்ந்த நாயக்கர்களும் ஆட்சி செய்தார்கள். இவர்களோடு தமிழர்களுக்கு எந்தச் சிக்கல்களும் இருக்கவில்லை. மேலும் ‘ சிங்கள’ என்ற சொல் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சூளவம்சத்தில் மட்டும் தோற்றம்பெற்றது. தீபவம்சம் / மகாவம்சத்தில் சிங்கள என்ற சொல் காணப்படவில்லை.
இலங்கையைப் பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரும் பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தரும் கைப்பற்றி ஆண்ட காலத்தில் தென் இந்தியாவில் (இன்றைய கேரளா, தமிழ் நாடு, ஆந்திரா) இருந்து குற்றேவல் செய்வதற்குக் பல்லாயிரக்கணக்கணக்கில் கூலிகளாக அழைத்து வந்து தீவின் தென்பகுதியில் குடியமர்த்தினார்கள். இவர்கள் கறுவா வளர்ப்பது / உரிப்பது, மீன்பிடித்தல் /முத்துக் குளித்தல், தென்னை நடுதல் / தேங்காய் பறித்தல், கள் இறக்குதல் போன்ற பல தொழில்களில் ஈடுபட்டார்கள்.
சில நூற்றாண்டுகளுக்குள் இவர்கள் உள்ளூர் சிங்களவர்களது மொழி, மதம் இரண்டையும் தமதாக ஏற்றுக் கொண்டு சிங்கவளர்களோடு கலந்து கொண்டதால் சிங்களவர்களது மக்கள்தொகை மிக வேகமாக அதிகரித்தது. இன்று அவர்களது சந்ததிகள் (ஆறாவது தலைமுறை) இலங்கையின் புராதன நாகரிகத்தைத் தங்களது ‘சிங்கள’ பாரம்பரியமாக ஏற்றுக் கொண்டதும் அல்லாமல் சிங்கள – பவுத்த பேரினவாதத்தின் தேசபக்தர்களாகவும் வீரஆதரவாளர்களாகவும் மாறிவிட்டார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரித்தானியர்களே மகாவம்சம் என்ற நூலை மீள் கண்டுபிடித்தார்கள். அவர்களது பாளி மொழிபெயர்ப்பாளர்கள் அதனைத் தவறாக மொழிபெயர்க்கவும் செய்தார்கள். இதனால் ஆரிய – சிங்கள என்ற மற்றொரு கட்டுக்கதையை உருவாக்கினார்கள். சிங்களம் (எலு) மொழி (சமற்கிருதம், பாளி, தமிழ் / மலையாள மொழிகளின் கலவை) இந்தோ – ஐரோப்பிய மொழி போல் இருந்த காரணத்தால், பிரித்தானியர் சிங்களவர்களை வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்கள் என அறிவித்தார்கள். அதேபோல் தமிழர்களைத் தென்னிந்தியாவில் இருந்து வந்த திராவிடர் எனச் சொன்னார்கள். கொலனி வரலாற்று மேலாண்மையின் செல்வாக்குக் காரணமாக சிங்களவர்கள் தாங்கள் இலங்கைத் தீவின் பூர்வீக குடிமக்கள் எனவும் தமிழர்கள் தென்னிந்தியாவில் இருந்து வந்த படையெடுப்பாளர்கள் எனவும் அறிவித்தனர்.
மகாவம்சம் அத்தியாயம் VII விஜயன் முடி சூட்டிக் கொண்டதைச் சொல்கிறது. “ஆனால் சிங்கபாகு அரசன் சிங்கத்தைக் கொன்றதன் காரணமாக சிகல என அழைக்கப்பட்டான். இதனால் சிங்கபாகுவுடன் தொடர்புடைய விஜயனும் அவனது சுற்றமும் சிகல என அழைக்கப்பட்டார்கள் என்றால் இந்தியாவின் சிங்கபுரத்தில் வாழ்ந்த விஜயனின் இரட்டைப் பிறப்பு சுமித்தாவும் அவனது சுற்றமும் ஏன் சிகல என அழைக்கப்படவில்லை? இது எதனை எண்பிக்கிறது என்றால் விஜயன் மற்றும் சிங்கள இனம் இரண்டும் வண. மகாநாம மற்றும் மகாவிகாரை தேரர்களின் கற்பனை உருவாக்கம் என்பதே.
இன்னொரு நல்ல எடுத்துக்காட்டு மகாவம்சம் விபரிக்கும் எல்லாளன்/ துட்டகைமுனு கிளைக் கதையாகும். இதில் மகாவம்சம் கற்பனைகளையும் புதிர்களையும் வீண்கனவுகளையும் மூடநம்பிக்கைகளையும் கதைகளையும் கலந்து எழுதப்பட்டுள்ளது. எல்லாளன்/ துட்டகைமுனு பற்றி தீபவம்சம் எண்ணிப் பத்து வரிகள்/ செய்யுள்கள் மட்டும் எழுதி வைத்துள்ளது. ஆனால் மகாவம்சமோ அதனை 11 அத்தியாயங்களாகப் பெருப்பித்து இந்துக்களை இகழ்ந்தும் பவுத்த அரசர்களைப் புகழ்ந்தும் எழுதி ஒரு “மேலான இனம்” :”பூமிபுத்திரர்” (மண்ணின் மைந்தர்கள்) “சிங்களதீப” “ஒற்றையாட்சி” “தம்மதீப” என்ற கோட்பாடுகளை உருவாக்கியது. மகாவம்ச ஆசிரியர் ஒரு பவுத்த தேரர். அவர் துட்டகைமுனுவால் 60,000 ஆயிரம் தமிழர்கள் / இந்துக்கள் (படையெடுப்பாளர்கள் என்றும் அறியப்பட்டவர்கள்) கொல்லப்பட்டதை நியாயப்படுத்திய காரணத்தால் மற்றவர்கள் (புத்தசமயத்தைச் சேராதவர்கள்) தமிழர்கள் கொலை செய்யப்படுவதை நியாயப்படுத்தும் சிங்கள – பவுத்தம் ஒரு காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சமயம் என நினைக்கிறார்கள். இன்றும் சிறிலங்காவில் சிங்கள – பவுத்தர்களால் தமிழர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தும் இந்த அநாகரிகமான – காட்டுமிராண்டித்தனமான இன – மத சிங்கள – பவுத்தம் (அல்லது மகாவம்ச -பவுத்தம்) என அழைக்கப்படுகிறது.
பவுத்த வேதவாக்கியமான திரிபீடகம் புத்தரின் வாழ்நாளில் நடந்த நிகழ்வுகளைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. அவர் சென்ற இடங்கள், யாரோடு சென்றார், எங்கே எதனை யாருக்குப் போதித்தார் என்பன சொல்லப்பட்டுள்ளது. ஆனால் புத்தர் சிறிலங்கா என்ற தீவுக்குச் சென்றார் அல்லது சிறிலங்கா என்றை தீவைப்பற்றிப் பேசினார் என்பன எங்கேயும் சொல்லப்படவில்லை. சிறிலங்காவில் காணப்பட்ட பவுத்த சமயத்தை வலுவான தென்னிந்திய இந்து இராச்சியங்களிடம் இருந்து காப்பாற்ற மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதினார். அதன்போது தனது சொந்தக் கற்பனைகளையும் தொன்மைக் கதைகளையும் சேர்த்துக் கொண்டார். அவர் புத்தர் பற்றி நடைபெறாத அநேக சம்பவங்களையும் புத்தர் சொல்லாதவற்றையும் செய்யாதவற்றையும் தனது நூலில் புகுத்தினார். இப்படியான சம்பவங்கள் வேறு எந்த பவுத்த வேதங்களிலும் (தேரவாதம் மற்றும் மகாயானம் இரண்டிலும்) சொல்லப்படவில்லை.
எடுத்துக்காட்டாக, மகாவம்சத்தின்படி புத்தர் மூன்றுமுறை மந்திரசக்தியால் பறந்து வந்தார், அப்படி வந்த ஒவ்வொருமுறையும் (இலங்கைத்) தீவின் ஒவ்வொரு பகுதியையும் தம் வசப்படுத்திக் கொண்டார் எனவும் அதற்கான காரணம் அவர் இறந்து இரண்டு நூற்றாண்டுகள் கழிந்த பின்னர் பவுத்த மதத்தை பரப்பச் செய்யப்பட்ட முன்னோடி ஆயத்தங்கள் எனச் சொல்லப்படுகிறது. இப்படி அவர் ஒருமுறை வருகை செய்தது நாகதீபத்தில் (நயினாதீவு) இயக்கர்களுக்கும் நாகர்களுக்கும் இடையில் (குறிப்பு: இந்தத் தகவல் பிழையானது. நாகதீபத்தை ஆண்ட நாக மன்னர்களான குடோதரன் மகோதரன் இருவருக்கும் இடையில் ஒரு இரத்தின சிம்மாசனம் பற்றிய பிணக்கை தீர்த்து சமாதானத்தை நிறுவ வந்தார் என்றே மகாவம்சம் கூறுகிறது) எழுந்த பிணக்கை தீர்க்க வந்தார் என்றும் அவர் இயக்கர்களை வசப்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. இயக்கர்கள் தீவில் வசித்த மனிதர் அல்லாதவர்கள் என மகாவம்சம் கூறுகிறது.
புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வருகை தந்தார் என்பதற்கான சான்றுகள் எதுவுமே இல்லை. அண்மையில் மூன்று சயித்தியங்களை (பவுத்த கட்டமைப்புக்கள்) மூன்று வெவ்வேறு இடங்களில் “இங்கேதான் புத்தர் வந்தார்” நிறுவியுள்ளார்கள். சிறிபாத (சிவனொளிபாத) மலையில் காணப்படும் புத்தரின் பாதச் சுவடுகள் கூட தெளிவான கட்டுக்கதை மட்டுமே.
மகாவம்சக் கதையின் படி புத்தர் பரிநிருவாணம் அடையு முன்னர் அரசகட்டிலில் வீற்றிருந்தவாறு தேவர்களது அரசனும் புத்த தர்மத்தின் (புத்தர் போதித்த போதனைகள்) தெய்வீக காவலனுமான இந்திரனை (சக்கா) அழைத்து “ ஓ சக்கா, எனது போதனைகள் இலங்கைத் தீவில் இறுதியில் நிலைநாட்டப்படும். இந்த நாளில் லாலா நாட்டு சிங்கபுர அரசனான சிங்கபாகுவின் மூத்த மகனான விஜயன் தனது 700 கூடடாளிகளோடு லங்காவில் கரையிறங்கியுள்ளான். லங்காவில் எனது சமயம் நிலை நிறுத்தப்படும். எனவே அவனையும் அவனது பரிவாரத்தையும் லங்காவையும் கவனமாகக் பாதுகாப்பாயாக” எனக் கட்டளை இட்டார். அதனைச் செவிமடுத்த இந்திரன் தாமரை மலரின் நிறத்தை ஒத்த கடவுளை (விஷ்ணு) அழைத்து “தாமரை மலரின் நிறத்தை ஒத்த தேவனே, அரசகுமாரன் விஜயனையும் அவனது தோழர்களையும் மற்றும் (புத்த) தர்மத்தையும் லங்காவில் ஐயாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்க இருக்கும் (புத்த) கோட்பாட்டையும் ஆர்வத்தோடு பாதுகாப்பாயாக” எனக் கேட்டுக் கொண்டான். (மகாவம்சம் – அத்தியாயம் V11).
புத்தமத ஆகமங்களில் புத்தர் எந்த ஹிந்து / பிராமண கடவுள்களைப் பற்றி ஒருபோதும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்துக்கள் / பிராமண கடவுள்களுடன் எந்த தொடர்பும் இல்லாத வேறுபட்ட உலகங்களிலில் இருக்கும் தேவாஸ் மற்றும் பிரம்மாஸ் பற்றி மட்டுமே பேசுகிறார்.
ஜாதிய சிந்தனையும் (மகாவம்ச சிந்தனையும்) அதன் விளைவுகளும்
வண. மகாநாம தேரர் மூன்று கூறுகள் – நாடு, இனம், மதம் இடையே ஒரு கற்பனையான இணைப்பை உருவாக்கியுள்ளார். இது தூய்மையான திரித்துவம் (Holy Trinity) போன்றது. அதே போன்று சிறி லங்கா (தம்ம தீப), புத்தர் தேர்ந்தெடுத்த மக்கள் (சிங்களவர்) மற்றும் பவுத்தம் (பவுத்த சாசனம்) ஆகிய மூன்றும் 5,000 ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே ஜாதிய சிந்தனை அல்லது மகாவம்ச சிந்தனை எனக் கூறப்படுகிறது. அதன் விளைவுதான் ‘சிங்கள – பவுத்த தீப’ மற்றும் ‘ஒற்றையாட்சி’ ஆகும். எனவே, இலங்கையில் அடுத்த 2,500 ஆண்டுகளுக்கு சிங்கள பவுத்தம் ஒரு இணைப்பாட்சி அரசு அல்லது சுயாட்சி (சிங்கள – பவுத்தர்கள் அல்லாதோருக்கு) ஒரு போதும் அனுமதி அளிக்க மாட்டார்கள்.
நாங்கள் இன்று காண்பது ஒருவித அரசியல் பவுத்தம். மதத்தை (பவுத்தத்தை) தனிமனித பேரின்பப் பேறு (வீடுபேறு) அடைய ஒரு வழி காட்டியாக இல்லாது அது சிங்கள – பவுத்தர்களின் நலங்களை மேம்படுத்த முயற்சிக்கிறது. இதுவே நாட்டில் சமாதானம் ஏற்பட முக்கிய தடையாக விளங்குகிறது. காரணம் சிங்கள இனம் மற்றும் பவுத்த மதத்தின் முன்னுரிமை மேலாதிக கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது.
மிக இளமைக் காலம் தொடக்கம் சிங்கள பவுத்த சிறார்கள் பவுத்த கோயில்கள் நடத்தும் தகம் பாசெல்லா (ஞாயிறு பள்ளிக்கூடம்) க்குப் போகிறார்கள். அங்கே அவர்களது அடிமனங்களில் மகாவம்ச பவுத்தம் மற்றும் சிங்கள இனவாதம் இரண்டும் செதுக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். சிங்கள பவுத்தர்கள் அல்லாதோர் (தமிழர்கள்) படையெடுப்பாளர்கள் அவர்களுக்கு சிறிலங்காவில் இடம் இல்லை எனக் கற்றுக் கொடுக்கப்பட்டு அவர்களை நம்ப வைக்கிறார்கள். தமிழர்கள் எல்லோரையும் புராதன துட்டகைமுனு அரசன் செய்தது போல தமிழ்நாட்டுக்குத் துரத்த வேண்டும். நாடு (சிறிலங்கா), சிங்கள இனம், பவுத்தம் தமிழர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அண்மைக் காலத்தில் வெளியே எறியப்பட வேண்டியவர்களில் கிறித்தவர்களையும் சேர்த்திருக்கிறார்கள். மேற்கண்ட சிந்தனை காரணமாக பெரும்பான்மை சிங்கள – பவுத்தர்கள் முழு இலங்கையும் தங்களுக்கே சொந்தம், சிறுபான்மையினர் அந்நியர்கள் என நம்புகின்றனர்.
இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் கூற்றாகும். அவர் ஒருமுறை சொன்னார், சிறிலங்கா சிங்களவர்களுக்கு சொந்தமானது. சிறுபான்மையினர் சிங்களவர்களோடு வாழலாம். ஆனால் அவர்கள் மட்டுமீறிய உரிமைகளைக் கேட்கக் கூடாது. இந்தப் பொதுவான புரிதல் /நம்பிக்கை (understanding/belief ) சிங்கள பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல (படித்தவர்கள் மற்றும் படியாதவர்கள் இரு சாராரும்), பவுத்த குருமார் மத்தியில் மட்டுமல்ல சிங்கள அரசியல்வாதிகள் மட்டத்திலும் இருக்கிறது. 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் இருந்து, 1958 இல் வண்டிகளுக்கு சிங்கள சிறி தகடுகள் பொருத்தப்பட்ட போதும் (நாங்கள் அதனை விளைவைப் பற்றி, பல சகாப்தங்களாக நாட்டை குட்டிச்சுவராக்கியது பற்றி பாடம் கற்றுக்கொண்டோமா?) மற்றும் அண்மையில் தமிழில் தேசிய கீதம் இசைப்பதை ஒதுக்கித் தள்ளி விட்டு தனிச் சிங்கள தேசிய கீதத்தை மட்டும் வைத்திருக்க வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி போல் அல்லாமல் இராஜதந்திரம் காரணமாக பொதுமேடைகளில் பேசும்போது மிகவும் கவனமாகப் பேசினார்கள்.
அறியாமையில் இருந்து வெளியே வருதல்
சிறிலங்காவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வரலாறு திரிக்கப்பட்டு மூத்திரை இடப்பட்டுவிட்டது. இப்போது இருப்பது வரலாறு அல்ல, அவரது – கதை (his-story) அதாவது வண. மகாநாம தேரர் அவர்களின் கதை. இன்று கட்டுக்கதையே உண்மையாகிவிட்டது. இன்று யாராவது வரலாற்றுத் திரிப்பை சரிசெய்ய (புதிய கண்டு பிடிப்புக்களின் அடிப்படையில்) நினைத்தால் அவர் / அவள் தேசபக்தி இல்லாத துரோகியாக ஏன் “பயங்கரவாதிகளின் ஆதரவாளர்” எனக் கருதப்படுவார். மகாவம்ச புராணக் கதைக்கு சாதகம் இல்லாத புதிய தொல்பொருள் கண்டுபிடிப்புக்கள் (கலைத் தொல்பொருள்கள்) மறைக்கப்பட்டுள்ளன. அதாவது உண்மைகள் வெளிவராது மறைக்கப்பட்டுள்ளன. அல்லது பெரும்பான்மை இனத்தவரை மகிழ்ச்சிப்படுத்த அரச அதிகாரிகளாலேயே காணாமல் ஆக்கப்பட்டுள்ளன.
அந்த கொந்தளிப்புக் காலத்தில் (புத்தமதம் அச்சுறுத்தலுக்கு உட்பட்டது), மகாவம்ச எழுத்தாளர் வண. மகாநநாம தேரர் மற்றும் மகாவிகாரை துறவிகள் மேலேயுள்ள தொன்மத்திற்கான உண்மையான காரணத்தை கொண்டிருந்தனர், ஆனால் துரதிருஷ்டவசமாக இன்று அறியாமை மற்றும் பகுத்தறிவு சிந்தனை இல்லாததால் சிங்கள பௌத்தர்கள் இன்னும் மகாவம்சம் (கடவுளின் நற்செய்தி) என இப்போதும் நம்புகின்றனர்.
சிங்களவர்கள் அறியாமையோடு இருக்கு மட்டும் 2,500 ஆண்டுகளுக்கு முந்திய புதிர்களை அவர்கள் வழிகாட்டியாகக் கொண்டிருக்கும் வரை, மகாவம்ச சிந்தனையில் மூழ்கிக் கிடைக்கும் வரை, எந்தத் தீர்வையும் கொண்டுவர முயற்சித்தாலும் அல்லது கொண்டுவரப் போவதாகப் பாசாங்கு செய்தாலும் சிங்கள – பவுத்தர்கள் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சிங்கள (மகாவம்ச) பவுத்த மனநிலையை (முழு இலங்கைத் தீவுக்கும் உரிமை கோரும் சிங்கள பவுத்தர்களது மன நிலையை) அடையாளம் கண்டுள்ளனர். பெரும்பான்மை சிங்களவர்கள் பகுத்தறிவோடும் தாரளமனத்தோடும் சிந்திக்க முடியாது என்பதற்கான காரணம் இதுவே.
சிங்களப் பெரும்பான்மை மக்கள் படிக்க வேண்டிய முதல் பாடம், அல்லது ஒரேயொரு முக்கிய பாடம் அவர்கள் சிங்களத்தையும் சிறிலங்காவையும் வேறுபடுத்தி / பிரித்தறியக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் அறியாமையிலிருந்து வெளியே வரமுடியும். இதனை நல்லிணக்கக் ஆணைக்குழு (LLRC) இந்த மட்டில் விளங்கியிருக்க வேண்டும். சிங்களமும் பெளதிகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தான காலப்பகுதியில் பாலி எழுத்துக்கள் ஏன் பயன்படுத்தப் பட்டன என்பதற்கான காரணத்தை விளக்குகின்றன.
பொறுப்புள்ள தலைவர்கள், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல மிதவாத ஊடகவியலாளர்கள், கல்விகற்ற அறிவாளிகள் மற்றும் மிதவாதத் தலைவர்கள் / பவுத்த குருமார்கள் சிங்கள மக்களை பகுத்தறிவோடு சிந்திக்கத் தூண்ட வேண்டும். சிங்களத்தை சிறிலங்காவில் இருந்தும் சிங்கள பவுத்தத்திலிருந்து பவுத்தத்தையும் உண்மைகளைக் கற்பனைகளிலிருந்தும் வேறுபடுத்தி / மாறுபடுத்திப் பார்க்க வேண்டும். பவுத்தத்திற்கு மிகப்பெரிய ஆபத்தான காலப்பகுதியில் பாலி மொழியில் புராணங்கள் எழுதப்பட்டதற்கான காரணத்தை விளக்க வேண்டும். இன்று பவுத்தத்திற்கு அப்படியான ஆபத்து இல்லை. (முற்றும்)
இதன் ஆங்கில மூலத்தை இந்த முகவரியில் பார்க்கவும்.
http://www.srilankaguardian.org/2010/12/sinhala-mahavamsa-buddhism-revisited.html

Leave a Reply
You must be logged in to post a comment.