மாந்திரீகம்… பரிகார பூஜை… கொல்லப்பட்ட இளம்பெண்! – கைதான போலிச் சாமியார்!

மாந்திரீகம்… பரிகார பூஜை… கொல்லப்பட்ட இளம்பெண்! – கைதான போலிச் சாமியார்! நெல்லை ‘திடுக்’

பி.ஆண்டனிராஜ்ரா. ராம்குமார்

கயல்விழியுடன் காரில் சென்ற பெண், கொட்டாரத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரி என்பதைக் கண்டுபிடித்து, அவரிடமிருந்து விசாரணையைத் தொடங்கினோம்.

published:20 Jun 2025

கயல்விழி

கயல்விழிListen to Vikatan stories on our AI-assisted audio player

கணவருடன் சேர்ந்து வாழ விரும்பிய பெண்ணை, மாந்திரீகம் செய்து சேர்த்துவைப்பதாகக் கூறி ஏமாற்றி, நகை, பணத்தைப் பறித்ததோடு, அந்தப் பெண்ணையும் கொன்று கால்வாயில் வீசிய கொடூரச் சம்பவத்தில், எட்டு மாதங்களுக்குப் பின்னர் குற்றவாளிகள் சிக்கியிருக்கிறார்கள். அதன் பின்னணி நம்மைத் திடுக்கிடவைக்கிறது!

 இளம்பெண்ணின் சடலத்தைத் தேடும் தீயணைப்புத்துறையினர்...
இளம்பெண்ணின் சடலத்தைத் தேடும் தீயணைப்புத்துறையினர்…

நெல்லை மாவட்டம், பழவூர் அருகேயுள்ள மாடன் பிள்ளை தர்மம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவலிங்கதுரை. இவரின் 28 வயது மகள் கயல்விழி. திருமணமான ஒன்றரை ஆண்டிலேயே கருத்து வேறுபாடு காரணமாக கயல்விழியின் கணவர் பிரிந்துசென்றுவிட்டார். இந்த நிலையில், 5-10-2024 அன்று கோயிலுக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற கயல்விழி வீடு திரும்பவில்லை. இது குறித்து பழவூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் சிவலிங்கதுரை. இதையடுத்து கயல்விழியின் தோழிகள், உறவினர்கள் எனக் கடந்த எட்டு மாதங்களாகப் பலரிடமும் விசாரித்தும் போலீஸாருக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், காணாமல் போன அன்று, பெண் ஒருவருடன் கயல்விழி காரில் ஏறிச் செல்லும் காட்சி ஒன்று பழவூர் பகுதியிலுள்ள சிசிடிவி பதிவில் கிடைக்கவே… அதை நூல் பிடித்துச் சென்ற போலீஸார், எட்டு மாதங்களுக்குப் பிறகு குற்றவாளிகளைக் கொத்தாகத் தூக்கியிருக்கிறார்கள்.

இது குறித்துப் பேசுகிற தனிப்படை போலீஸார், “கயல்விழியுடன் காரில் சென்ற பெண், கொட்டாரத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரி என்பதைக் கண்டுபிடித்து, அவரிடமிருந்து விசாரணையைத் தொடங்கினோம். அதாவது, கணவருடன் சேர்ந்து வாழ விரும்பிய கயல்விழிக்கு, அவரின் தோழிகள் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த சிவசாமி என்ற மந்திரவாதி குறித்துத் தெரியவந்திருக்கிறது. அந்த மந்திரவாதியிடம் சென்று பூஜைகள் செய்தால் கணவருடன் சேர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கையில், சாமியார் சிவசாமியைச் சந்தித்து, தன் பிரச்னையைச் சொல்லியிருக்கிறார். அனைத்தையும் கேட்டுக்கொண்ட சாமியார், ‘மாந்திரீகத்தால் முடியாத காரியம் எதுவும் கிடையாது. சில பரிகார பூஜைகளைச் செய்தால், பிரிந்துபோன உன் கணவன் உன் காலடியிலேயே விழுந்துகிடப்பான்’ என்று நம்பிக்கையாகப் பேசியிருக்கிறார். அதை நம்பிய கயல்விழி, சாமியார் கேட்டபோதெல்லாம் பணம், நகைகளைக் கொடுத்திருக்கிறார். ஆனால், மாதங்கள் கடந்ததே தவிர, பிரிந்து சென்ற கணவர் கயல்விழியுடன் வாழ வரவே இல்லை.

கயல்விழி

கயல்விழி

அதனால் அதிருப்தியடைந்த கயல்விழிக்கு, சாமியார்மீது சந்தேகம் வந்து சண்டையிட்டி ருக்கிறார். மேலும், ‘தான் கொடுத்த பணத்தையும் நகையையும் திருப்பித் தராவிட்டால், போலீஸுக்குப் போவேன்’ என சாமியாரை மிரட்டியிருக்கிறார். அதனால், கயல்விழியைக் கொலைசெய்ய முடிவுசெய்த சாமியார் சிவசாமி, தன் உறவினர்களான சிவனேஸ்வரி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாயாண்டி ராஜா, வீரவநல்லூரைச் சேர்ந்த கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார்.

 சிலம்பரசன்

அதன்படி, கயல்விழியை சிவனேஸ்வரி மூலமாகப் பேசி நம்பவைத்து, 5-10-2024 அன்று காரில் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது இந்தக் கும்பல். பின்னர் காரில் வைத்தே கயல்விழியின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்திருக்கிறார்கள். பிணத்தை யாருக்கும் தெரியாமல் போட வேண்டும் என்பதற்காக, களக்காடு அருகேயுள்ள மணிமுத்தான் குளம் கால் வாயைத் தேர்வுசெய்திருக்கின்றனர். புதர்கள் சூழ்ந்த காட்டுக்குள் இருக்கும் அந்தக் கால்வாய், 80 அடி ஆழத்தில் பாறை களை உடைத்து வெட்டப்பட்டது. அந்தப் பகுதிக்கு ஆடு, மாடு மேய்ப்பவர்கள்கூடச் செல்வதில்லை. அதன் கரையோரம் வழியாகக் காரை ஓட்டிச் சென்று, கயல்விழியின் உடலில் கல்லைக் கட்டி தண்ணீருக்குள் வீசிவிட்டுத் திரும்பியிருக்கிறது இந்தக் கொடூரக் கும்பல்” என்றனர் விலகாத அதிர்ச்சியுடன்.

நெல்லை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் இந்த வழக்கு குறித்துக் கேட்டோம். “கயல்விழியைக் கொலைசெய்வதற்காக, சிவசாமி தன் சகோதரியின் மகன் மாயாண்டி ராஜா, உறவினர்களான சிவனேஸ்வரி, கண்ணன் ஆகியோரைப் பயன்படுத்தியிருக்கிறார். கொலை செய்த பின்னர் கயல்விழியின் கழுத்தில் கிடந்த ஏழு சவரன் நகையையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பிடிபட்ட கொலையாளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், 80 அடி ஆழத்தில் கிடந்த கயல்விழியின் எலும்புக்கூடுகளை, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கைப்பற்றி சோதனைக்கு அனுப்பி யிருக்கிறோம். கைதானவர்களிடம் இருந்த ஏழு சவரன் நகையையும் கொலைக்குப் பயன்படுத்தப் பட்ட இரு கார்களையும் பறிமுதல் செய்து, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். கொலைக்கு மூளையாகச் செயல்பட்ட போலி மந்திரவாதியான சிவசாமியை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றார்.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலுமா மாந்திரீகம்… பரிகாரமென்று மக்கள் ஏமாறுவது?!

https://www.vikatan.com/crime/young-woman-murder-in-tirunelveli

About VELUPPILLAI 3397 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply