சுமந்திரன் ராஜ்ஜியம்: வீழ்த்தும் திறன் யாரிடமுண்டு?

Pagetamil

June 19, 2025· 

“தொகுதிக் கிளை, மாவட்டக் கிளைகளின் தீர்மானம் என்று கட்சியினுடைய அரசியற் குழுவின் தீர்மானத்தை மீறி எவராவது செயற்பட்டால் (விளையாட்டுக் காட்டினால்) கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்திருக்கிறார் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம். ஏ. சுமந்திரன்.

கட்சியின் நிலைப்பாட்டை மீறி, அதாவது சுமந்திரனை மீறி, திருகோணமலையில் குகதாசனும் கிளிநொச்சியில் சிறிதரனும் செயற்படுவதை – விளையாட்டுக் காட்டுவதை – தடுப்பதற்கே சுமந்திரனின் இந்த எச்சரிக்கையாகும்.

இது, சிறிதரனுக்கும் குகதாசனுக்கும் சுமந்திரன் போட்டுள்ள பூட்டாகும். ஏற்கனவே சுமந்திரனை எதிர்த்துக் கம்பு சுத்திய முல்லைத்தீவு சிவமோகன், இதற்குமேல் இயலாது என்ற நிலையில் சுமந்திரனுடன் சமரச முயற்சியில் ஈட முயற்சிக்கிறார் என்று தகவல்.

எமது பத்தியில் தொடர்ந்து நாம் சுட்டிக் காட்டி வருவதைப்போல, தமிழரசுக் கட்சியைத் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் சுமந்திரன் கொண்டு வந்து விட்டார். சட்டரீதியான பதிவில் அவர் பதில் செயலாளர் எனக் குறிப்பிடப்பட்டாலும் நடைமுறையில் சுமந்திரனே தலைவர். சுமந்திரனே செயலாளர். அதாவது சுமந்திரனே தீர்மானிக்கும் சக்தி (He is the deciding force). சுமந்திரனை மீறி இப்போதைக்கு எவரும் எதையும் செய்ய முடியாது.

இதை மேலும் மேலும் சுமந்திரன் தனது ஒவ்வொரு செயற்பாட்டின் மூலமும் நிரூபித்து வருகிறார். குறிப்பாகத் தான் ஒரு தீர்க்கமான ஆளுமையாக (Decisive personality). உண்மையும் அதுதான்.

தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ் அரசியல் வெளியிலும் சுமந்திரனுக்கு எதிரான பெரும்பரப்பொன்று உள்ளது. அது சுமந்திரனைத் துரோகியாகச் சித்திரித்துப் புறமொதுக்குவதற்குப் பலமாக முயற்சிக்கிறது.

இதைப் பற்றிச் சுமந்திரனும் நன்றாகவே அறிவார். இது முன்பு ஒரு கட்டத்திலிருந்து சம்பந்தனையும் அப்படித்தான் அடையாளப்படுத்தியது – சொன்னது.

ஆனால், சம்பந்தனும் சரி, சுமந்திரனும் சரி இதையிட்டு வருந்தியதோ அச்சமடைந்ததோ தடுமாறியதோ கிடையாது. எதன்பொருட்டும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதும் இல்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால், தாங்கள் முன்வைத்த காலைப் பின்னெடுக்கவில்லை.

ஆனால் மாவை சேனாதிராஜா அப்படியல்ல. அவர் வெளிச் சூழலுக்குப் பயந்து எப்போதும் தளம்புகின்றவராக – தாளம் போடுகின்றவராகவே இருந்தார். அதனால்தான் அவரால் ஒரு தலைவராகச் சோபிக்க முடியவில்லை.

தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் மிக நீண்ட காலம் (பத்து ஆண்டுகளுக்கு மேலாக) தலைவராக இருந்தவர் சேனாதிராஜா. அப்படியிருந்தும் அவரால் எத்தகைய ஆளுமை மிக்க, பெறுமானத்துக்குரிய எந்தத் தீர்மானங்களையும் எடுக்க முடியவில்லை. கட்சியைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கவும் இயலவில்லை. மட்டுமல்ல, தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் மிக மோசனமான தலைவராகவே தன்னைப் பதிவு செய்தார் சேனாதிராஜா.

மட்டுமல்ல, கட்சியின் விதிமுறைகளை மீறித் தன்னுடைய மகனை, கட்சியில் முதன்மைப்படுத்துவதற்கு சேனாதிராஜா கடுமையாக முயற்சி செய்தார். அதற்காகப் பல விமர்சனங்களையும் கண்டனங்களையும் கூடச் சேனாதிராஜா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருந்தும் சேனாதிராஜாவின் மறைவுக்குப் பிறகு, மகன் கலையமுதனைப் பற்றிய பேச்சையே காணவில்லை. பதிலாக சேனாதிராஜாவின் சம்மந்தியாகிய திருமதி ரவிராஜ் கூட கட்சியை விட்டு விலக வேண்டியதாகி விட்டது.

தற்போது தமிழரசுக் கட்சியின் பதில் தலைவராக இருக்கும் சி.வீ.கே. சிவஞானமும் ஏறக்குறைய சேனாதிராஜாவைப் போன்ற ஒருவரே. வெளிச் சூழலுக்குத் தளம்பும் குணவியல்பைக் கொண்டவர். தலைமைத்துவத்துக்குரிய ஆளுமைப் பண்புகள் இல்லாதவர். ஆனால் சேனாதிராஜாவை விடச் சற்றுப் பரவாயில்லை என்ற கணக்கில் வரக் கூடியவர்.

தமிழரசுக் கட்சியில் இப்போதுள்ள ஆளுமைகளில் சுமந்திரன்தான் முதன்மையாளர். ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாலும் வெற்றிகரமாக நின்று பிடிப்பதற்கு அதுதான் காரணம். தமிழரசுக் கட்சிக்குள் மட்டுமல்ல, தமிழ் அரசியல் வெளியிலும் சுமந்திரன் தவிர்க்க முடியாத சக்தியாகி விட்டார்.

இதனால்தான் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும் அரசியலில் தவிர்க்க முடியாத ஒருவராக சுமந்திரன் தோற்றமளிக்கிறார்; செல்வாக்குச் செலுத்துகிறார். அதாவது தேர்தல் கணக்குகளை வைத்து சுமந்திரனை மதிப்பிட முடியாது என்பதைச் சுமந்திரன் நிரூபித்து விட்டார்.

இப்பொழுது சுமந்திரனின் எதிராளிகளிற் பலர், தமிழரசுக் கட்சிக்குள்ளும் வெளியிலும் சுமந்திரனைத் தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாகப் புலம்பெயர் சூழலிலும். அதேவேளை சுமந்திரனை எதிர்த்து நின்ற சக்திகளை ஆதரித்தவர்கள் இப்பொழுது தணியத் தொடங்கி விட்டனர். அவர்களில் பலர் சுமந்திரனை ஆதரிக்கும் அளவுக்கு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முக்கியமான சில காரணங்களைச் சொல்ல வேண்டும்.

1. சுமந்திரனுடைய வெளிப்படைத்தன்மையான பேச்சுகளும் நடவடிக்கைகளும். தான் நம்புகின்ற அரசியலை, தன்னால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும் பற்றித் தயக்கமில்லாமல் வெளிப்படையாகப் பேசும் இயல்பு. உதாரணமாக, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்பதுதொடக்கம் முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை தவறு, விடுதலைப்புலிகளிடத்திலும் தவறுகள் உண்டு, போரில் அரசும் புலிகளும் குற்றமிழைத்துள்ளனர் வரையான விடயங்களைப் பற்றி வெளிப்படையாகவே பேசுவது.

தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் இயங்கும் முன்னிலையாளர்கள் இப்படிச் சொல்லி வெற்றியடைய முடியாது என்று தெரிந்து கொண்டும் சுமந்திரன் இவ்வாறான விடயங்களை நேர்மையோடு பேசியிருக்கிறார். அதேவேளை சுமந்திரனுடைய அதிகப் பிரசங்கித்தனமான பேச்சுகளும் வாயடிப்புகளும் உண்டு. அவை அவருக்கு எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கியுள்ளன. அவ்வாறான பேச்சுகள் அவரை Politician நிலையிலிருந்து மாற்றி, Policeman போலாக்கி விடுவதுண்டு.

2. துணிச்சல். அரசியல் தலைமைத்துவத்திற்கு அவசியமாக இருக்க வேண்டிய அடிப்படையும் முக்கியமான பண்பும் துணிச்சலாகும். தீவிரமான விமர்சனங்கள், கடுமையான கண்டனங்கள், குற்றச்சாட்டுகள், அவதூறுகள், வசைபாடல்கள் போன்ற எதிர்ப்புக் கணைகள் போன்றவற்றைக் கண்டு அஞ்சாமல் – தயங்காமல் – தீர்மானங்களை எடுப்பதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் தலைவத்துவத்துக்கு அவசியமானது. அதைச் சுமந்திரன் கொண்டிருக்கிறார்.

3. ஒப்பீட்டளவில் சுமந்திரனிடமுள்ள ஜனநாயகத் தன்மை. இது இரண்டு வகையானது. கட்சிக்குள் அவர் பின்பற்றுகின்ற ஜனநாயகத் தன்மை கேள்விக்கும் விமர்சனத்துக்குமுரியது. அதை அவர் தன்னுடைய சட்டப் புலமையின் ஊடாக, நியாயப்படுத்தி, சமப்படுத்தி வருகிறார். ஆனால், வெளியே சுமந்திரன் கடைப்பிடிக்கின்ற ஜனநாயகத் தன்மையும் அவர் பேசுகின்ற – பின்பற்றுகின்ற அரசியலும் வெளித் தரப்புகளின் கவனத்திற்குரியன. குறிப்பாக நடைமுறைக்கும் தீர்வுக்குச் சாத்தியமுடையவையுமான விடயங்களைப்பற்றிய உள்ளடக்கத்தைக் கொண்டவை. என்பதால்தான் அவர் துலங்கும் அரசியல் ஆளுமையாக (A volatile political personality) உள்ளார்.

4. தமிழ் அரசியல் பரப்புக்குள் மட்டும் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், இலங்கை அரசியலிலும் இடையீட்டைச் செய்யும் தன்மை. குறிப்பாக இலங்கையின் ஜனநாயக நெருக்கடிகள், அதிகார வலுவாக்கப் பிரச்சினைகளில் சுமந்திரனின் இடையீடுகள் அவர் மீதான கவனத்தை உள்நாட்டுச் சமூகங்களுக்கிடையிலும் வெளியுலகிலும் உருவாக்கியுள்ளன. இதனால் தமிழ் அரசியல் பரப்பில் சுமந்திரன் வெளித்தெரியும் ஒருவராகியுள்ளார்.

தமிழரசுக் கட்சியில் சுமந்திரனை எதிர்த்து வந்த தரப்பொன்று ஏற்கனவே வெளியேறி விட்டது. கொழும்பு தவராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகையின் முதலாளியுமாகிய சரவணபவன் போன்றோர்.

அப்படிச் சென்றவர்கள் உதிரிகளாகி விட்டனர். தங்களை மாற்றுத் தரப்பாக முன்வைப்பதற்கு அவர்களால் முடியவில்லை.

அப்படித்தான் சிவமோகனும். கட்சிக்குள்ளும் சரி, வெளியிலும் சரி தன்னுடைய செல்வாக்கினாலும் வல்லமையினாலும் ஒரு அணியைத் திரட்டுவதற்குச் சிவமோகனால் முடியவில்லை. என்பதால்தான் சுமந்திரனோடு சமரசத்துக்கு முயற்சிக்கிறார். கேள்விப்படும் தகவல்களின்படி சிவமோகன் தொடுத்த வழக்குகளையே கைவிட (கைவாங்குவதற்கு) சிவமோகன் முன்வந்திருக்கிறார் என்று தெரிகிறது.

தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரனுக்கு எதிராகச் செயற்படுவோரில் சிறிதரனும் குகதாசனுமே சற்றுப் பலமானவர்கள். அவர்கள் இருவரும்தான் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் அல்லது சுமந்திரனைப் பொறுத்து, அவர்கள்தான் குழப்படிகாரர்களுமாக உள்ளனர். இதற்குக் காரணம், கிளிநொச்சியில் சிறிதரனும் திருகோணமலையில் குகதாசனும் சற்றுச் செல்வாக்கோடு இருப்பதாகும்.

குகதாசனுடைய நிலைப்பாடு அல்லது குழப்படி, வேறு விதமானது. அது கட்சிக்குள் தன்னுடைய தனித்த அடையாளத்தை நிறுவுவதோடு, திருகோணமலையில் தன்னை முன்னிலைச் சக்தியாக ஆக்கிக் கொள்ளும் எத்தனத்தோடு சம்மந்தப்பட்டது. அதனால், திருகோணமலை மாவட்டக் கிளையைத் தன்னுடைய செல்வாக்கினுள் கொண்டு வருவதை முதன்மையாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார். சம்பந்தனுக்குப் பிறகு குகதாசன் என்றே திருகோணமலைத் தமிழ் அரசியல் சரித்திரம் இருக்க வேண்டும் என்பது குகதாசனின் கனவு. அப்படியே நகர்ந்து தமிழரசுக் கட்சியில் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவது.

அதனால் குகதாசன் தனி ஆவர்த்தனத்துக்கு முயற்சிக்கிறார்.

சிறிதரனுக்கும் கட்சிக்குள் தன்னுடைய முதன்மையை நிறுவும் தேவையும் ஆசை இருக்கிறது. ஆனால், அதனை எட்டுவதற்கு நிறையச் சவால்களும் தடைகளும் உண்டென்று சிறிதரன் நடைமுறையில் உணர்ந்து கொண்டுள்ளார். முக்கியமாக தலைமைவத்துவத்துக்குரிய ஆளுமைப் பண்புகளில் சிறிதரன மிகப் பலவீனமான நிலையிலேயே உள்ளார். ஏறக்குறைய 15 ஆண்டுகால அரசியலில் தன்னைத தகுதியானவராக வளர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைத்தபோதும் சிறிதரன் அதைத் தவற விட்டுவிட்டார். இருந்தாலும் அந்த ஆசை தீரவில்லை. அவருக்கு அதில் சலிப்பு வந்தாலும் அவரோடு உள்ளவர்கள் சிறிதரனைத் தூண்டிக் கொண்டேயுள்ளனர்.

அதனால் சுமந்திரனை வீழ்த்தி அல்லது ஓரங்கட்டி அல்லது கட்சியிலிருந்து விலக்கி விட்டு அந்த இடத்தில் தான் வந்து அமர்ந்து விடலாம் என்று முயற்சிக்கிறார் சிறிதரன். அதற்கு அவர் தரப்பு பயன்படுத்திக் கொள்ளும் ஒரே ஆயுதம் தம்மைத் தியாகிகளாகவும் சுமந்திரனை துரோகியாகவும் சித்திரித்துக் காட்டுவதேயாகும்.

அதாவது, அரசியல் நிலைப்பாட்டில் சுமந்திரனும் தானும் எதிர்த்துருவங்கள் என்று காட்டிக் கொள்ள முற்படுகிறார் சிறிதரன். விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாகத் தன்னை அடையாளப்படுத்த முற்படுகிறார் சிறிதரன். புலிகள் முன்னெடுத்த தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைத் தீவிர நிலையில் தொடருவதாகச் காட்டிக் கொள்கிறார்.

அதேவேளை கட்சியை தமிழ்த்தேசியத்துக்கு மாறான முறையில் சுமந்திரன் தவறாக வழிநடத்துகிறார் என்றொரு தோற்றப்பாட்டைச் சிறிதரன் உருவாக்க முயற்சிக்கிறார். இதன் மூலம் சுமந்திரனைத் துரோகியாக்கி ஓரங்கட்டுவதே சிறிதரனின் நோக்கமாகும்.

ஆனால், தமிழ்த்தேசிய அரசியல் வேறு திசையில் நகர்ந்து யாரும் துரோகியும் இல்லை. யாரும் தியாகியும் இல்லை என்ற கட்டத்துக்கு – என்ற நிலைக்கு வந்துள்ளது.

“சுமந்திரன் இல்லையென்றால் அல்லது சுமந்திரனை ஓரங்கட்டி விட்டால், அடுத்த ஆண்டு தமிழீழத்தைப் பெற்றுத் தந்து விடுவாரா சிறிதரன்?” என்று ஒருவர் கேட்டதை இங்கே சிரிப்போடு நினைவிற் கொள்ளலாம். ஆனால், தமிழீழம் கிடைப்பதற்கு சுமந்திரன்தான் தடை என்ற மாதிரித்தான் சிறிதரன் குழாத்தினர் கருதிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், சிறிதரன் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றால், தமிழரசுக் கட்சியின் கதை அவ்வளவுதான். அதோடு கதை முடிந்தது. கட்சியும் முடிந்தது.

2023 இல் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் தெரிவு செய்யப்பட்ட கையோடு எழுந்த சர்ச்சையின்போது இதைப்பற்றி எழுதியிருந்தேன். நேர்ப்பேச்சிலும் அரசியல் வட்டாரங்களில் உள்ள முக்கியதஸ்தர்களிடம் இதைப்பற்றிச் சொன்னதுண்டு.

உண்மையில் சுமந்திரனால்தான் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றிருப்பதும் பலமாக இருப்பதுமாகும். சுமந்திரன் கட்சியின் பொறுப்பில் இருந்தால், தமிழரசுக் கட்சி மேலும் சில பத்து ஆண்டுகளுக்கு அரசியலில் தாக்குப்பிடிக்கும் என.

சுமந்திரனுக்குப் பதிலாகச் சிறிதரன் வந்தால் தமிழரசுக் கட்சி மிகச் சீக்கிரமாகத் தன்னுடைய மயானத்தை எட்டி விடும். தனக்குத் தானே கல்லறையை எழுப்பி விடும்.

இது அவரவர் அறிவு, அதைப் பயன்படுத்திக் கொள்ளும் நுட்பம், தீர்மானம் எடுக்கும் ஆற்றல், வழிநடத்தும் ஆளுமை, எதிர்ச் சூழலைக் கையாளும் திறன், துணிச்சல், விவேகம், தன்னம்பிக்கை போன்றவற்றால் உருவாகும் விளைவாகும்.

சுமந்திரனிடம் மேற்குறித்த அடிப்படைகளும் தகுதிகளும் உள்ளன. என்பதால் அவ்வளவும் தமிழரசுக் கட்சியில் பிரயோகிக்கப்படுகின்றன. அப்படிப் பிரயோகிக்கப்படும்போது, தமிழரசுக் கட்சி பலமாக இருப்பதோடு, நீண்டகாலத்துக்கு உயிர்வாழக் கூடிய வாய்ப்புகளே அதிகமாக உண்டு என்றேன்.

சம்பந்தன், சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு, சுமந்திரன் கட்சியைத் தன்னுடைய பொறுப்பில் எடுத்த பிறகு தமிழரசுக் கட்சி ஒப்பீட்டளவில் வலுப்பெற்றுள்ளது. அரசியல் ரீதியாக (கோட்பாட்டு அடிப்படையிலும் நடைமுறைகளிலும்) தமிழரசுக் கட்சி வெற்று டப்பாதான். ஆனால், அந்த வெற்று டப்பாவையே வெற்றிகரமாகக் கிலுக்கிக் காட்டக்கூடிய திறனைச் சுமந்திரன் கொண்டிருப்பதுதான் ஆச்சரியமானது.

இப்பொழுது சுமந்திரன் பகிரங்கமாகவே தன்னுடைய எதிரிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். அவரை மறுப்போர் கட்சியை விட்டு வெளியேறலாம். அப்படி யாராவது வெளியேறினால் அது தவராஜா, சரவணபவன், சிவமோகன் போன்றோருக்கு ஏற்பட்ட முடிவை – கதியைப் போலவே இருக்கும். அதற்கு முன் அப்படி முறுக்கியவர்கள் இருந்த இடமே தெரியாமல் போய் விட்டார்கள்.

என்பதால் சிறிதரனும் குகதாசனும் எதையும் செய்யப்போவதில்லை. குமைந்து கொண்டிருக்க வேண்டியதுதான். அடுத்த சில ஆண்டுகளில் அவர்களை முழுமையாகவே தன்னுடைய செல்வாக்கிற்குள் கொண்டு வந்து விடுவார் சுமந்திரன். அல்லது அவர்களைத் தனிமைப்படுத்தி விடுவார்.

இந்தக் கணிதத்தை மாற்ற வேண்டும் என்றால், அதற்குத் துணியவேண்டும். துணிவே துணை என்று முடிவுகளை எடுக்க வேண்டும். சுமந்திரனை மீறிச் செயற்படுவதற்கான களமொன்றைத் திறக்க வேண்டும். அதைச் செய்வதற்குரிய ஆற்றலும் ஆளுமையும் சிறிதரனுக்கோ குகதாசனுக்கோ உண்டா?

About VELUPPILLAI 3397 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply