ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது

2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் மிகக் கொடூரமாக வகை தொகை இன்றி கொல்லப்பட்டதனால் ஈழத் தமிழர்களின் மனதில் வழி சுமந்த மாதமாக பதிவாகிவிட்ட மே 18ல் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் நினைவை ஈழத் தமிழர்கள் அனுஷ்டித்தனர்.

மறுபுறத்தில் சிங்கள தேசத்தில் தமிழ்களின் சாவை மே 19ல் வெற்றி விழாவாக கொண்டாடி அனுரகுமார திசாநாயக்காவினதும், என்பிபி முகமூடி அணிந்த ஜேவிபி அரசாங்கத்தினதும் முகத்திரையை கிழித்து விட்டது.

அதுமட்டுமல்ல சிங்கள முற்போக்காளர்கள் என்று ஜேவிபி உடன் கூட்டிணைந்து, கைகோர்து தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுவிட முடியும் என நம்பிய, அல்லது நம்பியது போல் நடித்த தமிழ் தாராளவாதிகளினதும், இடதுசாரிகளினதும், தமிழ் ஓடுகாலிகளினதும் கால்களை வாரி, வாலையும் மூக்கையும் அறுத்து விட்டது அனுரகுமார அரசாங்கம்.

தமிழ் மக்கள் எந்த சிங்கள முற்போக்கு சக்திகளை நம்பிப் பயணிப்பது? என்ற கேள்விக்கு எந்த சிங்கள தலைவர்களையும், அரசியல் கட்சிகளையும், சிங்கள அமைப்புகளையும் தமிழ் மக்கள் நம்பிப் பயணிக்க முடியாது என்பதே உண்மையாகும்.

பௌத்த சிங்கள பேரினவாதம் 

சிங்களதேசம் பௌத்தத்தினாலும், சிங்கள மொழியினாலும், தமிழின எதிர்ப்பினாலும் முறுக்கேறி பௌத்த சிங்கள பேரினவாதமாக உருத்திரண்டு இருக்கிறது. இடதுசாரி கட்சிகளாயினும் சரி வலதுசாரி கட்சிகளாயினும் சரி இனவாத முகமாகவே அவர்கள் தொழிற்படுவர்.

அதுவே இலங்கை அரசியலில் கடந்த ஒரு நூற்றாண்டு கால தொடர் வளர்ச்சி போக்காகும். இலங்கைத் தீவை தனித்துவமான பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதே அவன் இலக்கு. இந்த வளர்ச்சிப் போக்கில்தான் இப்போது அனுரகுமார திசாநாயக்கா இடதுசாரி கட்சியின் தலைவர், இடதுசாரிக் கொள்கை உடையவர், அவரிடம் இனவாதம் கிடையாது, மதவாதம் கிடையாது என்றெல்லாம் கூவி பல்வேறு வேடங்களை, முகமூடிகளை அணிந்து தேர்தல் காலங்களில் விட்ட அனைத்து அறிக்கைகளும், அனைத்து வாக்குறுதிகளும் இப்போது காற்றில் பறந்து விட்டன.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது | Sri Lanka Political Article In Tamil

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் ஏறிய மறுகணமே அந்த ஆட்சி அதிகார சுகத்தில் இருந்து கொண்டு தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான சிந்தனையே சிங்களத் தலைவர் வளர்த்துக் கொண்டுள்ளார்கள். அதுவே இப்போதும் வெளிப்பட்டிருக்கிறது.

இந்த வாரம் ஈழத் தமிழர்கள் மே 18 இன ஒழிப்பு நாளாகவும் தமிழினத்தின் துக்க நாளாகவும் அனுசரித்துக் கொண்டிருக்க அனுர அரசாங்கம் தேசத்தில் மே 19ஐ வெற்றி நாளாக, நாட்டை ஒன்று படுத்திய நாளாக, சிங்கக் கொடியின் ஆணையை இலங்கை தீவில் நிறுவிய நாளாக கொண்டாடியது.

கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகளில் இருந்து மாறுபட்டு தான் அதிகாரம் செலுத்த போவதாக, அல்லது ஆட்சி செலுத்த போவதாக கூறி ஆட்சியதிகாரத்துக்கு வந்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் இராணுவ தரப்பினருக்கு அளித்த மரியாதையும், அவர்களுடன் நடந்து கொண்ட விதமும், அந்த கொண்டாட்டத்தில் அவர் பேசிய திமிர் கொண்ட பேச்சுக்களும் தமிழ் மக்களின் முன்னே ஜேவிபியின் இனவாத அரசியலை அம்பலப்படுத்தி விட்டது.

இனப்படுகொலை 

இந்த அடிப்படையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் “இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை. இனப்படுகொலை என்ற சொல்லை தவறாக பயன்படுத்துபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ள கருத்து தமிழ் மக்களை மேலும் சீண்டுவதாகவும், தமிழ் மக்களை மிரட்டுவதாகவும், இலங்கையின் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் கேள்விக்கு உள்ளாக்குவதாகவும் உள்ளது. இது ஒருவருடைய தனிப்பட்ட கருத்தல்ல.

இது பௌத்த சிங்கள பேரினவாதத்தின் கருத்து. சிங்கள மக்களின் கருத்து. சிங்கள அதிகார வர்க்கத்தின் கருத்து. சிங்கள அரசாங்கத்தின் கருத்து என்பதுதான் எதார்த்தமும். அது மாத்திரமல்ல தொடர்ந்து அவர் வழங்கிய செவ்வியில் மே 18 நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் கல்விமான்கள் பிரமுகர்கள் போன்றவர்களிற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு “எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம்” என” பதில் அளித்துள்ளார்.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது | Sri Lanka Political Article In Tamil

இந்தப் பதில் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் அல்லது உயர் கல்வி நிறுவனங்களில் அல்லது நிர்வாக சேவைகளில் உயர் பதவி வகிக்கின்ற தமிழர்களை பதவியில் இருந்து அகற்றிவிட்டு சிங்கள இனத்தவர்களை பதவியில் அமர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவே இதனை பார்க்க வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்கள் ஏதோ தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேண்டுமென்றே தம் சாவை அணைத்துக் கொண்டார்களா? இலங்கை இராணுவத்தின் கொடூரமான தாக்குதலிலே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

அதுவும் தமிழ்மொழி பேசிய மக்கள் என்பதனால் கொல்லப்பட்டார்கள். ஆகவே அதை இனப்படுகொலை அன்று தானே சொல்ல வேண்டும். அதை வேறு எவ்வாறு அழைப்பது? ஆனால் சிங்கள பௌத்த பேரகங்கார வாதம் தமிழின படுகொலையை ஒரு கொலையாக கூட கருதவில்லை. தமிழ் மக்களை மனிதர்களாக அது கணிக்கவில்லை.

ஜேவிபியின் முகமூடி  

இப்போது ஜேவிபி முற்று முழுதாக இனவாதத்தை வெளிப்படையாக கக்கத் தொடங்கிவிட்டது. என்பிபி என்ற முகமூடிக்குள் ஒழித்துக் கொண்டு பேசிய வார்த்தை ஜாலங்கள் அடிபட்டுப் போய்விட்டது. ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் காட்டிய பொய் முகங்கள் உள்ளூராட்சி தேர்தலில் கிழியத் தொடங்கிவிட்டன.

அதை இப்போது முள்ளிவாய்க்கால் நிகழ்வின்போது அம்பலப்படுத்தி தாங்கள் இனவாதிகள்தான் என்பதை வெளிக்காட்டி விட்டனர். ஜேவிபி என்பது இலங்கையில் ஒரு இனவாத அடிப்படை வாதக் கட்சி.

அது தன்னை எந்த முகமூடி அணிந்தாலும் அது தன்னுடைய கொண்டையை மறைக்க முடியாது. ஜே.வி.பி கட்சியினுடைய கடந்தகால வரலாறு எங்கிலுமே இனவாதமே வெளிப்பட்டது.

என்பதற்கான சில உதாரணங்களையும் பார்த்து விடுவோம். என். சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இருந்த ரோகண விஜயவீர, தமிழின எதிர்ப்பு உணர்வோடு, தமிழரான சண்முகதாசன் தலைமைதாங்கும் கட்சியில் தான் இருக்கக் கூடாது என்பதனாலேயே அக்கட்சியின் இளைஞர் அணியைப் பிரித்தெடுத்து ஜே.வி.பி. என்ற தனிச் சிங்கள கட்சியை உருவாக்கினார்.

இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போதே இனவாத கட்சிதான் என்பதை நிரூபித்திருக்கிறது. ஜேவிபி யினர் ஆபத்தானவர்கள், அவர்களுடன் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனை 31அக்டோபர் 1978 ல் யாழ் முற்றவெளி மைதானத்தில் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளர் ரி.சந்ததியார் தனது தலைமை உரை ஆற்றும் போது “”ரோஹன விஜவீராவை நாம் நம்பக் கூடாது அவர் தமிழர் சுயநிர்னய உரிமையை ஏற்க மறுக்கிறார். தனது வகுப்புகளில் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்கிறார்.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது | Sri Lanka Political Article In Tamil

1977ம் ஆண்டு கலவரத்தின் போது தமிழ் மக்களை பாதுகாக்க தவறியவர். அதற்காக குரல் கொடுக்கவும் தவறியவர்.'”” என ஜே.வி.பி யின் உண்மை முகத்தை தோலுரித்தக்காட்டி பேசியதையும் இங்கே குறிப்பிட்டுச் செல்ல வேண்டும். சந்ததியார் ரோஹன விஜவீராவுடன் சிறையில் ஒன்றாக இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் வெளிப்பாடுதான் மேற்படி கூற்று.

அதன் பின்னர் 1983 கருப்பு ஜூலை படுகொலையின் போது தென்பகுதியில் தமிழின படுகொலையில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் ஜேவிபி கட்சியைச் சார்ந்தவர்களும், அவர்களுடைய ஆதரவாளர்களுமே. அந்தப் படுகொலையின் போது ஏற்பட்ட அண்டை நாட்டு அழுத்தத்தை தணிப்பதற்கு ஜே ஆர் ஜெயவர்த்தன அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கிய ஜேவிபினருக்கு மீண்டும் தடையை விதித்தது என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தப் படுகொலையின்போது தமிழ் மகன் ஒருவனை நிர்வாணப்படுத்தி தாக்கும் நபர்களில் ஒருவராக இன்றைய ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நிற்கும் புகைப்படம் இன்றும் வலைத்தளங்களில் காண முடியும். 2004 சுனாமி பேரிடருக்கு பின்னர் மீள் கடடுமான, நிவாரண பணிகளை செயற்படுத்த சுனாமி பொது கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

கருப்பு யூலை

சமாதான கால சம பங்காளிகளான விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி பொதுக் கட்டமைப்பில் நிர்வாக ரீதியாக செயல்பட முடியாது என கடுமையக எதிர்த்தார் அனுரகுமார திநாயக்க. அதற்காகவே தனது அமைச்சுப் பதவியைத் துறந்து சுனாமி பொதுக்கட்டமைப்பை இயங்க முடியாமற் செய்தவர் என்பதையும் என்பதையும் மறந்துவிட முடியாது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடக்கு – கிழக்கு தற்காலிக இணைப்பை நிரந்தரமாகப் பிரிப்பதற்காக உயர்நீதிமன்றில் ஒரு வழக்கை தாக்கல் செய்து வெறும் சாதாரண சட்ட நுணுக்கத்தைப் பயன்படுத்தி வடக்கு – கிழக்கை இரண்டாகப் பிரித்து தமிழ் மக்களுக்குக் கிடைத்த அற்ப, சொற்ப அரசியல் தீர்வையே இல்லாமற் செய்தவர்களும் இந்த ஜே.வி.பி.யினரே என்பதை தமிழ் மக்கள் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். 2005ல் பொதுத் தேர்தலில் ராஜபக்சாக்களுடன் தேர்தற் கூட்டில் ஜே.வி..பி. யினர் சேர்ந்து கொண்டனர்.

ஜே.வி.பி.யினர் இந்திய எதிர்ப்பு, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்பவற்றைத் தெளிவாக முன்னிறுத்தி சிங்கள தேசத்தின் பட்டிதொட்டி எங்கும் மேடைகளில் பேசி ராஜபக்சக்களையும் வெல்ல வைத்து தாமும் 39 ஆசனங்களை பெற்றுக் கொண்டனர். இந்த வெற்றியின் பின்னர் ஜே.வி.பி யினர் தமிழினத்திற்கு எதிரான யுத்தத்திற்கு சிங்கள தேசமெங்கும் ராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் பிரச்சாரத்தை பெருமெடுப்பில் முன்னெடுத்து கணிசமான சிங்கள அடித்தட்டு இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்தனர்.

இவர்களே முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை வகை தொகையின்றிப் படுகொலை செய்த முன்னணி படை பிரிவினராகச் செயற்பட்டு இருந்தனர்.

இதனால்தான் இன்று முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களை படுகொலை செய்து சிங்கள இராணுவம் பெற்ற வெற்றியை அன்றைய சிங்களப் படைத் தளபதி சரத் பொன்சைக்காவைத் தனது அருகில் அமர்த்தி இனப்படுகொலை வெற்றியை தன்னுடையதாக அனுரகுமாரதுசா நாயக்கா கொண்டாடுகிறார்.

இப்போது இந்த இனப்படுகொலை கூட்டுப் பங்காளிகளின் தேர்தல் பசப்பு வார்த்தைகளை நம்பி கடந்த ஆட்சியாளர்களிலிருந்து மாறுபட்டு இவர்கள் ஏதோ செய்து விடுவார்கள் என நம்பிய ஒரு தமிழ் மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்தது.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது | Sri Lanka Political Article In Tamil

அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி மக்கள் என் பி பி கட்சிக்கு வாக்களித்தார்கள். இவர்களை நம்பிய மக்களையும் இவர்களுக்கு பின்னே சென்ற இவர்களின் அடிவருடிகளையும் இந்த மே 19 ராணுவ வெற்றி விழாவை கொண்டாடியதன் மூலம் கைகழுவி விட்டிருக்கிறார்கள்.

காலை வாரிவிட்டு இருக்கிறார்கள் என்பது மாத்திரமல்ல முன்னைய இலங்கை ஆட்சியாளர்களில் இருந்து தான் எந்த வகையிலும் மாறுபடவில்லை என்பதையும் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பொதுத் தேர்தலின் பின் ஐந்து மாத இடைவெளிக்குள் இவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றாமையினால் தமிழ்மக்கள் இவர்கள் மீது சந்தேகம் கொண்டிருந்தனர், அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதற்கடுத்த வந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இவர்களுக்கு வாக்களிக்காமல் தமிழ் கட்சிகளின் பக்கம் மக்கள் நின்றதை தேர்தல் முடிவுகள் வெளிகாட்டுகின்றன.

தமிழ் மக்களை இலகுவில் ஏமாற்றி விட முடியாது என்பதை இது வெளிப்படுத்துகிறது. தமிழ் மக்கள் எப்போதும் கொள்கையின்பால் நிற்பவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

இவை எல்லாவற்றிற்கும் அப்பால் இப்போது முள்ளிவாய்க்கால் முள்ளிவாய்க்கால் பேரழிவை, பேரவலத்தை நினைவு கூறுவதற்காக கடந்த காலத்தை விட அதிகமான மக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று திரண்டு உணர்வுபூர்வமாக நினைவெழுர்ச்சிநாளை அனுஷ்டித்து இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கின்ற சதி பிரேமதாசா இராணுவத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு “”முள்ளிவாய்க்காலில் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் புலிகளிடமிருந்து தாயகத்தை விடுவித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்”” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

கடந்த 16 ஆண்டுகளாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களைப் பற்றி இவரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதற்கு இவர் ஒருபோதும் ஒரு அனுதாப செய்தியாது வெளியிடவும் இல்லை என்பதிலிருந்து இவர்களுடைய இனவாத கருத்தியல் புரியப்பட வேண்டும். இதே சஜித் பிரேமதாசாதான் வடக்கில் ஆயிரம் விகாரைகளை கட்ட வேண்டும் என்ற செயல்திட்டத்தை முன்மொழிந்தவர்.

அது இப்போது நடைமுறையில் செயற்பட்டு கொண்டு இருக்கிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அதே நேரம் இதே சஜித் பிரேமதாசாவுக்குத்தான் தமிழரசு கட்சியினர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளித்தார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது.

கடந்த ஒரு நூற்றாண்டு கால இலங்கை அரசியலில் சிங்களத் தலைவர்கள் யாரும் இனவாதத்தை கையில் எடுக்காமல் ஆட்சியாளர் அதிகாரத்தில் இருந்தது கிடையாது. அவர்கள் யாவரும் தம்ம தீபக் கோட்பாட்டின் அடித்தளத்தில் இருந்து கொண்டே இலங்கை தீவு பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது என்ற கோட்பாட்டுடன் தனது அதிகாரத்தை செலுத்தினர்.

தீவிர இனவாதிகள் 

அதற்கு வலதுசாரிகளாயினும் சரி இடதுசாரிகள் ஆயினும் சரி விதிவிலக்கல்ல. அந்த அடிப்படையில் தற்போது இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடி அணிந்த ஜேவிபி அரசாங்கமும் விதிவிலக்கு அல்ல.

அது மாத்திரமல்ல அவர்கள் கடந்த கால இன ஒடுக்குமுறையாளர்களிலும் விட பன்மடங்கு தீவிர இனவாதிகளாகவும், இன ஒடுக்குமுறையாளர்களாகவும் வளர்ந்து செல்வதையே இன்றைய கால நடைமுறை அரசியல் நிரூபித்து நிற்கிறது.

தமிழ் மக்கள் கடந்தகால அரசியல், ஆயுதப் போராட்ட தோல்விகளிலிருந்தாவது பாடங்களைக் கற்றிருக்க வேண்டும். ஆனால் நாம் தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை. மாறாக எமது தோல்விக்கான காரணங்களிலிருந்து எம்மை விடுவித்து எதிரியிடமும், மாற்றாரிடமும், வெளி அரசுகளிடமும், சர்வதேசத்திடமும் எம்முடைய தோல்விக்கான காரணங்களை தேடுகிறோம். முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு இந்தியா காரணம் என்கிறோம்.

சீனா காரணம் என்கிறோம். 39 சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவளித்தது என்கிறோம். சர்வதேசம் ஆயுத தளபாடங்களை இலங்கை அரசுக்கு வழங்கியது என்கிறோம். இவ்வாறு தமிழ் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சமூக சேட்பாட்டாளர்களும் கூக்குரல் இடுவதன் மூலம் பிராந்திய, சர்வதேச எதிர்ப்பு வாதத்தை பேசுகிறோம்.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது | Sri Lanka Political Article In Tamil

மறுபுறத்தில் ஐநா ஊடாக நீதி விசாரணை வேண்டும், சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என சர்வதேச ஆதரவை கோருகிறோம். இது தமிழ் மக்களின் போராட்ட அரசியலில் ஒரு துயரமான பக்கம். கல்லில் எங்கள் காலை நாமே கொண்டு போய் மோதிவிட்டு “”கல் அடித்து விட்டது”” என்று பொய் காரணத்தைச் சொல்வது போலவே தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்திலும் நமது தோல்விக்கு நாமே காரணம் என்பதை மறைத்து தோல்விக்கான காரணத்தை மாற்றான் மீது சுமத்துகிறோம்.

நம்முடைய பலத்தை எம்மால் கண்டறிய முடியவில்லை என்பது மட்டுமல்ல நமது பலவீனத்தையும் எம்மால் கண்டறிய முடியவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. நாம் எம்மை ஒரு முழுமையான தத்துவ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதனுடாக தோல்விக்கான காரணங்களை அறிவார்ந்து கண்டறிய வேண்டும்.

எமது தோல்விக்கு நாமே காரணம் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது தோல்விகளை ஏற்றுக் கொள்ளாமல் கடந்தகால வீர தீர கதைகளை பேசுவதனால் எம்மால் ஒரு அங்குலம் கூட நகர முடியாது. தமிழர்களிடம் உள்ள பலத்தை கண்டறியாமல், நம்மிடம் உள்ள பலத்தை ஒன்று திரட்டாமல் கடந்தகால தோல்வியடைந்த பாதையிலேயே தொடர்ந்து பயணித்தால், தமிழர்களிடமிருக்கின்ற பலவீனத்தை மாத்திரமே முதலீடாக கொண்டு போராட முற்பட்டால் தொடர்ந்தும் தோல்விகளை எமக்கு பரிசாக கிடைக்கும்.

கடந்த ஒரு நூற்றாண்டு காலத் தோல்விக்கு தோல்விக்கான காரணத்தை எங்களிடமே தேட வேண்டும். விமர்சனத்திற்கு உட்படாத எந்தப் பொருளும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை. எந்தக் கோட்பாடுகளும், எந்த தத்துவங்களும், எந்தக் கொள்கைகளும் புனிதமானது கிடையாது. அவை அந்தந்த காலத்தின் தேவைக்கேற்ப சமூகத்துக்கு நலன் தயக்கக் கூடியவாக அமைந்ததனால் அவை போற்றப்படுகின்றன.

மாறாக நலன் பயக்கவில்லை எனில் அவற்றிற்கு மாற்றீடான கொள்கைகளும், கோட்பாடுகளும் தோற்றுவிக்கப்படுவது அவசியமானது. எங்களுடைய பலவீனங்களையே நாம் பலப்படுத்த வேண்டும். எங்களுடைய வளங்களை நாம் ஒன்று திரட்ட வேண்டும். தமிழர்கள் தம்மை பலப்படுத்திக் கொண்டால் சர்வதேச அரசியலில் தமிழ் மக்கள் வாழ்கின்ற மூலோபாய வாழ்விட கேந்திர நிலையம் தமிழ் மக்களுக்கான சர்வதேச ஆதரவை பெற்றுத் தரும். தமிழ் மக்கள் யாரிடமும் இரஞ்சி பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை.

இன்றைய இந்து சமுத்திர அரசியல் பொருளியல் போட்டியில் அவரவர் நலன்களை பெற்றுக் கொள்வதற்கு தமிழ் மக்களுடன் உறவைப் பேண வேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ் மக்களை நிலைநிறுத்துவதற்கான முக்கிய ஒரு காலகட்டத்தில் இன்று நாம் நிற்கிறோம்.

இந்து சமுத்திர அரசியலில் தமிழ் மக்களுக்கு சார்பான அரசியலை உண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு சர்வதேச அரசியலையும், உள்நாட்டு அரசியலையும், தமிழ் மக்கள் தமக்கிடையேயான ஐக்கியத்தின் பலப்படுத்துவதன் ஊடாக அரசியலில் வெற்றிக் கனியை பறிக்க முடியும். 

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது – தமிழ்வின்

About VELUPPILLAI 3397 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply