தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும்

“வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து”

என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்து கி.மு. 7ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்கு தெற்கில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை என்பது தெரிகின்றது எனப் பாவாணர் தமிழ் வரலாறு குறித்து எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியம் கி.மு. 7ஆம் நூற்றாண்டில் தோன்றியது என அவர் காலத்தில் நிலவிய கருத்தினையே அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், கீழடி ஆய்வுக்குப் பிறகு சங்க இலக்கியங்களின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பு என்பது உறுதியாகியுள்ளது. அப்படியானால், தொல்காப்பியத்தின் காலம் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகும். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலால் தொல்காப்பிய காலத்திற்கு முன்பே தமிழில் பல இலக்கியங்கள் தோன்றியிருக்கவேண்டும். அதைப்போல பல சூத்திரங்களில் என்ப, என்பனார் எனத் தொல்காப்பியர் சுட்டிச் செல்கிறார். அதாவது, அவர் காலத்திற்கு முன்பே தமிழில் பல இலக்கண நூல்கள் இருந்திருக்கின்றன என்பது இவற்றின் மூலம் பெறப்படுகிறது. எனவே, தமிழின் தொன்மை இன்னும் பழமையானது என்பது உறுதியாகிறது.

கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே குமரிலபட்டர் என்னும் தெலுங்கு அறிஞர் தெலுங்கைத் தமிழ்மொழியிலிருந்து பிரித்துக் காட்டுவதற்காக ஆந்திர திராவிட பாசா என்று கூறினார். அதற்குப் பின்னரே கன்னடமும் மலையாளமும் தமிழிலிருந்து பிரிந்தன.

“கன்னடமும், களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்

உன் உதிரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்”

என்று பேரா. சுந்தரம் பிள்ளை அவர்கள் கூறியது பழந்தமிழைப் பொறுத்தவரையில் உயர்வு நவிற்சி அல்ல, உண்மை.

பழந்தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும் உள்ள வேறுபாடு மிகச்சிறிய அளவினதே ஆகும். இலத்தீன் மொழிக்கும், இத்தாலியம், பிரெஞ்சியம், ஸ்பானியம், போர்த்துக்கீசியம் முதலிய மொழிகட்கும் இடைப்பட்ட உறவே தமிழுக்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய திராவிட மொழிகட்கும் இடைப்பட்ட உறவாகும்.

தமிழ் அல்லாத ஒரு மொழி திராவிட மொழிகளுக்குத் தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததே இல்லை. தமிழர்கள் புது கற்காலத்திலிருந்தும் அதற்கு முன்பிருந்தும் வந்த மக்களின் நேர் வழித் தோன்றிய ஓர் இனத்தாரே என்று இராமச்சந்திர தீட்சிதர் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளார். (PRE-HISTORIC SOUTH INDIA- P.246) எனப் பாவாணர் மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்திய துணைக் கண்டத்தில் 73 மொழிகள் திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் இலக்கிய வழக்கும் பேச்சு வழக்கும் உள்ள மொழிகளாகும். மற்றவையாவும் வெறும் பேச்சு வழக்கில் உள்ள மொழிகளே. பேச்சு மொழிகளாக இருப்பவையின் பழமையை அறியச் சான்று எதுவும் கிடைப்பதில்லை. இலக்கியம் அமைந்த நான்கு மொழிகளும் வெவ்வேறான கால வரலாறுகளைக் கொண்டுள்ளன. இந்த நான்கு மொழிகளில் தமிழ் மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ளது. அந்த இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன்பு பல நூற்றாண்டுகளாக பேச்சு மொழியாகத் தமிழ் இருந்திருக்கவேண்டும்.

தொல்காப்பியர் காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற திராவிட மொழிகள் எதுவும் தோன்றவில்லை. தொல்காப்பியர் குறிப்பிடும் திசைச் சொற்கள் தமிழின் கிளை வழக்குச் சொற்களே. இக்கிளை மொழிகள் பின்னர் தனித்தனி மொழிகளாக உருப்பெற்றன.

திசைச் சொல் என்பது செந்தமிழ் நிலத்தில் வழங்காது கொடுந்தமிழ் நிலங்களில் மட்டும் வழங்கிய சொற்களும், சொல் வழக்குகளுமேயாகும். எனவேதான், பாவாணர் “முற்கால கொடுந்தமிழ்களே பிற்கால திராவிட மொழிகளாக உருப்பெற்றன என்று கூறியுள்ளார். தமிழ் அல்லாத திராவிட மொழிகளெல்லாம் பழைய கொடுந்தமிழ்களே என்றும் பாவாணர் உறுதியாகக் கூறுகிறார். மேலும், கிறித்துவுக்கு முன்பு தமிழைத் தவிர வேறு திராவிட மொழிகள் எதிலும் இலக்கியம் உருவாகவில்லை.

திராவிட மொழிகளில் இலக்கியங்கள் தோன்றிய காலங்களைப் பற்றி அறிஞர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். கி.பி. 700ஆம் ஆண்டளவில் திரிபாதி சந்தத்தில் கப்பே அரிபட்டா என்பவர் கன்னடத்தில் எழுதிய பாடல்கள் மிகப் பழமையானவை. மேலும் இன்று கிடைத்துள்ளவற்றில் நிருபதுங்க அமோக வர்சா என்னும் அரசனால் கி.பி. 850 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட கவிராஜ மார்க்கம் என்னும் கன்னட நூலே பழமையானது. கி.பி. 900ஆம் ஆண்டில் சிரவணபெலகுளாவைச் சேர்ந்த பத்ரபாகுவின் வாழ்க்கையை விளக்கும் வகையில் சிவகோட்டி ஆச்சாரியார் எழுதிய வட்டராதனே என்னும் நூல் அடுத்ததாக உள்ள பழமையான நூலாகும்.

எனவே, வேங்கடத்திற்கு வடக்கே வழங்கும் திரவிட மொழி தெலுங்கே. அதனால் அதைத் தமிழர் வடகு என்றனர். பின்னர் அது திரிந்து வடுகு என்றாயிற்று.  கி.பி. 11ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே தெலுகு என்ற சொல் வழக்கத்தில் இல்லை. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தெலுங்கு பூமி பாலுரு’, ‘தெல்கரமாரி’, ‘தெலிங்ககுலகால’ போன்ற குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. கி.பி 11ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே தெனுகு’ என்ற சொல் வழக்கில் வரத்தொடங்கியது. கி.பி. 1100ஆம் ஆண்டில் தெலுங்கின் முதல் இலக்கியமாகக் கருதப்படும் நன்னய்யரின் மகாபாரதம் எழுதப்பட்டது. இவரது காலத்திற்குப் பிறகு திக்கன்னா, எர்ரன்னா போன்ற பல புலவர்களால் தெலுங்கு இலக்கியம் செறிவடைந்தது. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் சிறீநாதர் என்பவர் பிரபந்த இலக்கியத்தைப் புகழ்பெறச் செய்தார்.

சங்க காலத்திலிருந்தே தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகத் திகழ்ந்தது. மூவேந்தர்கள் ஆண்டனர். சேரர்களின் வரலாற்றுப் பெருமையைப் பாடிய சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தும் மற்றும் செந்தமிழின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றிய சிலப்பதிகார காப்பியமும் சேர நாட்டில்தான் பிறந்தன. வடமொழித் தாக்கத்தின் விளைவாகச் சேர நாட்டுத் தமிழ் மலையாளமாக மாறிப்போனது.

மலையாள மொழியைக் குறித்து முதன்முதலில் ஆய்வு செய்தவர் அறிஞர் கால்டுவெல் ஆவார். மலையாளம் தமிழின் ஒரு பிரிவு மொழி என அவர் கருத்துத் தெரிவித்தார். மலையாள அறிஞரான ஏ.ஆர். இராசராச வர்மா என்ற அறிஞரும் இதே கருத்தைத் தெரிவித்தார். இவருடைய கருத்தின்படி மலை நாட்டில் பேசப்பட்டு வந்தது தமிழேயாகும். தமிழ்மொழி செந்தமிழ், கொடுந்தமிழ் என இரண்டு வகையாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பல வகை கொடுந்தமிழ்களில் ஒன்றுதான் மலையாளமாக உருமாறியது. மலை நாட்டில் வழங்கி வந்த கொடுந்தமிழே சமற்கிருதத்தின் தாக்கத்தினால் தனிமொழியானது என்பது இராசராச வர்மாவின் கருத்தாகும். மலையாள மொழியில் சமற்கிருத சொற்களின் பயன்பாடு அதிகரித்தது. இப்போதைய மலையாள எழுத்து முறை துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

மலையாள இலக்கியத்தின் தொடக்கக் காலம் தமிழ், சமற்கிருத மொழிகளின் கலப்பினால் பிறந்த நாடோடிப் பாடல்களே ஆகும். பாட்டிலக்கியத்தில் மிகப் பழமையானது சீராமன் என்பவர் எழுதிய இராம சரிதம் ஆகும். 12ஆம் நூற்றாண்டில் இந்நூல் எழுதப்பட்ட காலத்திலேயே வைகாசி சுதந்திரம் என்னும் மணிப்பிரவாள நூல் எழுதப்பட்டது. கேரள காவிய மரபு செருச்சேரி என்பவரால் எழுதப்பட்ட கிருஷ்ண காதை ஆகும்.

மொழி வளர்ச்சி வரலாற்றில் தாய்மொழியிலிருந்து பிரிந்து தனிமொழியாக வடிவம் பெறும் நிலையை மொழிச் சிதைவுக் காலம் என்பார்கள். மலையாள இலக்கண ஆசிரியரான இராசராச வர்மா கி.பி. 14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மலையாள மொழி இந்த சிதைவு கால நிலையைத் தாண்டவில்லை என்று கூறுகிறார். சாகித்திய அகாதெமி விருதுபெற்ற மலையாள அறிஞரான குஞ்சன் பிள்ளை, இக்காலத்தைத் தமிழ்ச் சிதைவுக் காலம் என்று குறிப்பிட்டிருக்கிறார் எனத் தமிழறிஞர் முனைவர் இரா.கு. ஆல்துரை கூறுகிறார்.

தமிழ் அல்லாத பிற திராவிட மொழிகளில் இலக்கிய நடைக்கும் பேச்சு நடைக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகளைக் காட்டிலும் தமிழில் இலக்கிய நடைக்கும் பேச்சு நடைக்கும் இடையே காணப்படும் மிகுதியான வேறுபாடு தமிழின் சொல்வளம், செந்தமிழின் பல்வேறு வகைப்பட்ட இலக்கண வடிவங்கள், இன்றைய திராவிட மொழிகளைக் காட்டிலும் பழந் திராவிட மொழிகள் தமிழோடு பெருமளவில் ஒத்து வருவது, திராவிட மொழிகளில் காணப்படும் வேர்ச் சொற்களும் சொல்லுருவங்களும் தமிழ்ச் சொற்களின் சிதைவுகளாக இருப்பனவாகும், பழந்தமிழில் குறைந்தளவே வடசொல் இருப்பது, அவ்வட சொற்களும் உருமாற்றி வழங்குவது ஆகியவற்றைத் தமிழின் தொன்மைக்குச் சான்றுகளாக கால்டுவெல் சுட்டிக்காட்டுகிறார்.

மேனாட்டு அறிஞர்களான யமனோ, பரோ ஆகியோர் தொகுத்த திராவிட சொற் பகுப்பு அகர முதலியில் வேர் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட 4,570 சொற் பகுப்புகளில் 3750க்கும் மேற்பட்ட சொற் பகுப்புகளில் தமிழ் வேர்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. இது திராவிட மொழிக் குடும்பத்தில் பெரும்பான்மையான சொற்களின் வேர் மூலங்களைத் தமிழ் தாங்கி நிற்பதைக் காட்டுகிறது என்றும் அறிஞர் ஆல்துரை சுட்டிக்காட்டுகிறார்.

திராவிட குடும்ப மொழிகளில் முதன்முதலாகத் திருந்திய தன்மையை எய்தியது தமிழ். சொல்வளம் மிக்க மொழி இது. பழமைத் தன்மை பலவற்றை உள்ளடக்கிய மொழி இது. ஆகையால், திராவிட குடும்ப மொழிகளுள் தலைமையிடத்தில் வைத்துப் பார்க்கத்தக்கது தமிழ் என கால்டுவெல் கூறியிருக்கிறார். இவை போன்ற அறிஞர் பெருமக்களின் கூற்றுகள் திராவிட மொழிக் குடும்பத்தின் மூல வேர்களைத் தமிழ் தாங்கி நிற்கிறது என்பதை விளக்குகிறது.

தமிழுக்குத் தமிழ் என்னும் பெயர் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே அமைந்துவிட்டது, இன்று வரையிலும் இம்மொழியின் பெயர் தமிழ் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் தமிழிலிருந்து பிரிந்து சென்ற மொழிகள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. இவ்வாறு பிரிந்து சென்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது தமிழ் நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளது. அக்காலம் நெடுகிலும் தமிழ் என்றே தொடர்ந்து வழங்குகிறது. தமிழின் தாய்மைப் பண்பை இது காட்டுகிறது.

About VELUPPILLAI 3397 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply