1.5 ஏக்கர், ஆண்டுக்கு ரூ.3 லட்சம்… நாட்டுக் காய்கறிகள், கிழங்குகள், கீரைகள்… சாகுபடி+விதை உற்பத்தி
24 May 2025

காய்கறிகளுடன் விஜய்…
மகசூல்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தெத்துவாசல்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விஜய். பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார். 1.5 ஏக்கரில் உணவுக் காடு அமைத்து… நாட்டுக்காய்கறிகள், கிழங்குகள் மற்றும் கீரை வகைகள் சாகுபடி செய்து வரும் விஜய்… விதை விற்பனையி லும் ஈடுபட்டு கணிசமான லாபம் பார்த்து வருகிறார்.
இவர், பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். 25.09.2022 தேதியிட்ட இதழில், ‘செவ்வாழையில் செழிக்கும் லாபம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், வாழை சாகுபடி குறித்த தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். தற்போது, இவர் மேற்கொண்டு வரும் நாட்டுரக காய்கறிகள், கிழங்குகள் மற்றும் கீரை சாகுபடி குறித்து அறிந்துகொள்ள மீண்டும் சந்தித்தோம்.
அறுவடைப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த விஜய், நம்மை கண்டதும், மகிழ்ச்சியுடன் வரவேற்று, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். “நாங்க விவசாய குடும்பம். எங்களுக்கு 2.5 ஏக்கர் நிலம் இருக்கு. 5 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் அப்பாதான் விவசாயத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தார். ரசாயன உரங்கள் பயன்படுத்திதான் பயிர் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தார். நான், பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சுக்கிட்டு இருக்கும்போது, சமூக ஊடகங்கள்ல வெளியான நம்மாழ்வார் ஐயாவோட வீடியோக்கள் என் கவனத்தை ஈர்த்துச்சு. இயற்கை விவசாயத்தோட அவசியம் பத்தி, அவர் சொன்ன கருத்துகள், என் மனசுல மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துனுச்சு. அதை நோக்கி பயணிக்க ஆரம்பிச்சேன்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை யில நடந்த இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு பயிற்சியில கலந்துகிட்டேன். அதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டம், கடவூர்ல உள்ள வானகம் பண்ணையில 3 நாள்கள் பயிற்சி எடுத்துக்கிட்டேன். திண்டுக் கல் மாவட்டம், நிலக்கோட்டையில உள்ள வள்ளுவம் இயற்கை வேளாண் பண்ணையில 60 நாள்கள் தங்கியிருந்து, உழவு முதல் அறுவடை வரையிலான அனைத்து விதமான பணிகள்லயும் ஈடுபட்டு களப்பயிற்சி பெற்றேன்.

பட்டப்படிப்பு முடிச்சதும், இயற்கை விவசாயத்துல ஈடுபடப் போறேன்னு சொன்னதும், என் அப்பா-அம்மா ரெண்டு பேரும் பதறிப்போயிட்டாங்க. ‘இதுக்காகவா நாங்க வருஷத்துக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல செலவு பண்ணி உன்னை பி.இ படிக்க வச்சோம். நீ, பெரிய அளவுல ஏதாவது கம்பெனி தொடங்கணும்ங்கறதுதான் எங்களோட கனவு. நம்மகிட்ட இரண்டரை ஏக்கர்தான் நிலம் இருக்கு. இதுல நீ விவசாயம் பண்ணி, முன்னேற வாய்ப்பே இல்லை’னு சொன்னாங்க. ஆனா, என்னோட முடிவுல நான் ரொம்பவே உறுதியா இருந்தேன்.
ரசாயன விவசாயத்துல தர்பூசணி சாகுபடி செஞ்சுகிட்டு இருந்த 10 சென்ட் பரப்பை மட்டும் என்னோட பொறுப்புல ஒப்படைச்சு, “இதுல 10,000 ரூபாய்க்கு மேல லாபம் பார்த்துக்கிட்டு இருக்கோம். நீ இயற்கை விவசாயத்துல எந்தப் பயிரை வேணும்னாலும் சாகுபடி செய். ஆனா, பத்தாயிரம் ரூபாய்க்குக் கீழே, ஒரு ரூபாய் வருமானம் குறைஞ்சாகூட, விவசாயத்தை விட்டுட்டு, நீ போயிடணும்’னு அப்பா சொன்னார். அந்த நிபந்தனைக்கு ஒத்துக்கிட்டு, 10 சென்ட் பரப்புல பாகல், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை பயிர் செஞ்சேன். பஞ்சகவ்யா, மீன் அமிலம், அமுதக்கரைசல், தேமோர் கரைசல் உள்ளிட்ட இடுபொருள்கள் கொடுத்தேன். நான்கு வகையான காய்கறிகளுமே நல்லா விளைஞ்சது. அதேசமயம்… முள்ளங்கி மற்றும் வெண்டை செடிகள்ல பூச்சித்தாக்குதல் அதிகமா இருந்துச்சு. கொத்தவரையில எறும்புத் தாக்குதல் இருந்துச்சு. வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிச்சேன். முள்ளங்கியிலயும் கொத்தவரையிலயும் இருந்த பாதிப்புகள் சரி ஆயிடுச்சு. ஆனா, வெண்டையில இருந்த பூச்சிகள் கட்டுப்படவே இல்லை.

நான் தோட்டத்துல இல்லாத நேரத்துல, என் அப்பா, வெண்டை செடிகள் மேல, ரசாயன பூச்சிக்கொல்லி தெளிச்சிட்டார். இந்த விஷயம் எனக்குத் தெரிய வந்ததும், நான் ரொம்பவே நொந்துபோயிட்டேன். இந்த ஊரை விட்டே போயிடுறேன்னு அழுதுகிட்டே சொன்னேன். ‘தெரியாமல் தவறு பண்ணிட்டேன். இனிமே இந்தத் தோட்டத்துப் பக்கமே வரமாட்டேன்’னு சொல்லி, அப்பா என்னை சமாதானப்படுத்தினார்.
ரசாயன பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட, வெண்டை செடிகள்ல இருந்து காய்கள் பறிக்கக் கூடாதுனு கண்டிப்போடு சொல்லிட் டேன். பாகல், கொத்தவரை, முள்ளங்கி விற்பனை மூலம் 15,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சது. அப்பா, அசந்துபோயிட்டார். இயற்கை விவசாயம் செய்ய, கூடுதலா 50 சென்ட் நிலம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். மொத்தம் 60 சென்ட் பரப்புல காய்கறிகள் சாகுபடி செஞ்சேன். நல்ல விளைச்சல் கிடைச்சது. ஆனா, விற்பனை செய்ய சிரமப்பட்டேன். தஞ்சாவூர் மற்றும் கந்தர்வக்கோட்டையில நடக்கும் வாரச் சந்தைகள்ல கடைபோட்டு, ‘இது, இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்டவை’னு ஒரு போர்டு வச்சு, என்னோட காய்கறிகளை விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். மக்கள் ஆர்வத்தோடு வாங்கினாங்க. அக்கம் பக்கத்து கடைக்காரங்க, என்னைவிட குறைவான விலைக்கு காய்கள் விற்பனை செஞ்சாலும்கூட, மக்கள் அதை வாங்காமல், என்னோட கடைக்கு அதிகமா வந்தாங்க. சாயந்தரம் 4 மணிக்கு கடை போட்டா, அதிகபட்சம் 9 மணிக்குள் என்னோட காய்கள் முழுமையா வித்து தீர்ந்துடும். இதைப் பார்த்து, பக்கத்துக் கடைக்காரங்க ஆச்சர்யப்பட்டாங்க’’ எனத் தெரிவித்தவர்… 1.5 ஏக்கர் பரப்பில் உணவுக்காடு அமைத்து, நாட்டு ரக காய்கறிகள், கிழங்குகள் மற்றும் கீரை வகைகள் சாகுபடி செய்வது குறித்துப் பேசினார். “அப்பாவோட ஒத்துழைப்பால், இயற்கை விவசாய சாகுபடி பரப்பைப் படிப்படியா அதிகரிச்சுக்கிட்டே வந்தேன். ஒரு கட்டத்துல, எங்க குடும்பத்துக்குச் சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தையுமே இயற்கை விவசாயத்துக்கு மாத்திட்டேன். வீரிய ரக காய்கறிகள், செவ்வாழை, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செஞ்சேன்.

மா, பலா, வாழை…
இந்த நிலையிதான், இரண்டரை வருஷத்துக்கு முன்னாடி… தண்ணீரைச் சிக்கனப்படுத்தும் நோக்கத்தோடும், வருஷம் முழுக்க பல வகையான உணவுப்பொருள்கள் கிடைக்கும் வகையிலயும் 1.5 ஏக்கர்ல உணவுக்காடு அமைக்கத் திட்டமிட்டேன். 70 தென்னை, 40 மா, 30 பலா, 60 நெல்லி, 25 சப்போட்டா, 40 கொய்யா, 15 நெல்லி, 8 முள் சீத்தா, 7 நாட்டு சீத்தா, 5 ராம் சீத்தா கன்றுகள் நட்டேன். வேலி ஓரத்துல மகோகனி, தேக்கு, கயா, செம்மரம், குமிழ்தேக்கு உள்ளிட்ட 80 மரக்கன்றுகள் நட்டேன். இந்த மரங்களுக்கு இடையில, ஊடுபயிரா, அரை ஏக்கர்ல பூவன், ரஸ்தாலி, ஏலக்கி, மொந்தன், கற்பூரவள்ளி, செவ்வாழை உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த 400 வாழை மரங்கள் பயிர் செஞ்சுகிட்டு இருக்கேன். இழப்பு போக, சுமார் 350 தார்கள் விற்பனைக்கு ஏத்த வகையில நல்லா தரமா கிடைக்கும். ஒரு தாருக்கு சராசரியா 400 ரூபாய் விலை கிடைக்கும். ஒரு வருஷத்துக்கு 400 தார்கள் விற்பனை செய்றது மூலம், 1,40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். வாழைக்குனு தனியா எந்தவித பராமரிப்பும் தேவைப்படுறதில்ல. தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம்கூட கிடையாது. மற்ற பயிர்களுக்கு கொடுக்குற இயற்கை உரங்கள் மற்றும் தண்ணில வாழை நல்லா செழிப்பா விளைஞ்சு, தரமான தார்கள் கிடைக்குது.
70 சென்ட் பரப்புல பலவிதமான நாட்டுக் காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் பயிர் செஞ்சுகிட்டு இருக்கேன். காய்கறிகளைப் பொறுத்தவரைக்கும், மதனப்பள்ளி தக்காளி, சிவப்புக் காட்டுத் தக்காளி, மஞ்சள் காட்டுத் தக்காளி, காசி தக்காளி, பச்சைநிற வெண்டை, சிவப்பு வெண்டை, சிவப்பு உருட்டு வெண்டை, மர வெண்டை, யானை தந்த வெண்டை, நீள கொத்தவரை, பலக்கிளை கொத்தவரை, மணப்பாறை கத்திரி, இலவம்பாடி முள் கத்திரி, வெள்ளைக் கத்திரி, காந்தாரி மிளகாய், கறுப்பு மிளகாய், பச்சை மிளகாய், வெள்ளரி, பூசணி, சுரை, அவரை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்றேன். இதைத் தவிர, மஞ்சள், இஞ்சி, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, மரவள்ளி உள்ளிட்ட கிழங்கு வகை பயிர்களும் சாகுபடி செய்றேன். 30 சென்ட் பரப்புல செங்கீரை, சிறுகீரை, புதினா, கொத்தமல்லி, புளிச்சக்கீரை, சிவப்புத் தண்டுக்கீரை, பச்சை தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, பசலி உள்ளிட்ட 12 வகையான கீரை சாகுபடி செய்றேன்” என்றவர், நிறைவாக வருமானம் குறித்து பேசினார்.

விற்பனை…
“பலவிதமான காய்கறிகள், கிழங்கு வகைகள் மற்றும் கீரை விற்பனை மூலம், வருஷத்துக்கு 1,65,000 வருமானம் கிடைக்குது. நாட்டுரக காய்கறி விதைகள் மற்றும் கீரை விதைகளைப் பரவலாக்கம் செய்யணும்ங்கறது என்னோட முதன்மையான நோக்கம். வருஷத்துக்கு தலா 20 கிலோ காய்கறி விதைகளையும், கீரை விதைகளையும் உற்பத்தி செய்றேன். இதுல ஒரு பகுதியை நாட்டு காய்கறி விதைகளைப் பயிர் செய்றவங்ககிட்ட பகிர்ந்துக்குறேன். மீதியை 50 கிராம், 100 கிராம் விதைகளாக பாக்கெட் போட்டு வெளியில விற்பனை செய்றேன். அதன் மூலம், வருஷத்துக்கு 60,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆக, இந்த 1.5 ஏக்கர் உணவுக்காட்டுல உற்பத்தி செய்யக்கூடிய வாழைத்தார்கள், பலவிதமான நாட்டுக் காய்கறிகள், கிழங்குகள், கீரை வகைகள், காய்கறி விதைகள் மற்றும் கீரை விதைகள் மூலம் வருஷத்துக்கு 3,65,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. களையெடுப்பு, இடுபொருள், அறுவடைக்கூலி உள்ளிட்ட எல்லா செலவுகளும் போக, வருஷத்துக்கு 3 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது. பழ மரங்கள் இப்பதான் காய்ப்புக்கு வர ஆரம்பிச்சிருக்கு” எனத் தெரிவித்தார்.
தொடர்புக்கு: விஜய்,
செல்போன்: 63749 43575

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு…
“இயற்கை விவசாயம் எந்தளவுக்குக் கைகொடுக்கும்னு என் குடும்பத்தினர் ஆரம்பத்துல சந்தேகப்பட்டாங்க. இதுல நான் நிறைவான லாபம் எடுத்து, சாதிச்சு காட்டினதுனால… இப்ப என் அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாருமே பங்களிப்பு செய்றாங்க. இயற்கை விவசாய பயிற்சி, பாரம்பர்ய உணவுத் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அவங்களும் என் கூட ஆர்வமா வர்றாங்க” என்கிறார் விஜய்.
கைகொடுக்கும் பவர் வீடர்…
“டிராக்டர் பயன்படுத்தி, உழவு செஞ்சா, மண் இறுகிப்போயிடும். அதனால, ஆரம்பத்துல பல மாதங்கள் உழவு ஓட்டாமலே விட்டுட்டேன். களைகள் மண்டிப்போய், காடு மாதிரி ஆயிடுச்சு. இதை அப்படியே விட்டா, பயிர்களோட வளர்ச்சி பாதிக்கும்ங்கறதுனால, 1,30,000 ரூபாய்க்கு பவர் வீடர் வாங்கி, தேவைக்கு ஏற்ப, உழவு ஓட்டிக்கிறேன். டிராக்டரோடு ஒப்பிடும்போது, பவர் வீடரோட எடை மிகவும் குறைவு. இயற்கை இடுபொருள் தேவைக்காக, உம்பளச்சேரி மாடு வளர்க்குறேன்” என்கிறார் விஜய்.
இடுபொருள் மேலாண்மை…
இயற்கை இடுபொருள் பயன்படுத்துவது குறித்து பேசிய விஜய், “மண்ணை வளப்படுத்த… 3 மாதங்களுக்கு ஒரு முறை, 300 லிட்டர் தண்ணீர்ல 5 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து பாசன நீர்ல விடுவேன். 200 லிட்டர் தண்ணீர்ல 20 கிலோ கடலைப்புண்ணாக்கு கலந்து 24 மணிநேரம் ஊற வச்சு, அதோடு 3 லிட்டர் பஞ்சகவ்யா, 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து மூணு மாசத்துக்கு ஒரு தடவை பாசனநீர்ல கலந்து விடுவேன். இலைவழி ஊட்டமா, 20 நாள்களுக்கு ஒரு முறை, 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மி.லி வீதம் மீன் அமிலம் கலந்து தெளிப்பேன். பயிர்கள் பூக்கும் தருணத்துல, 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வீதம் தேமோர் கரைசல் கலந்து தெளிப்பேன். பூச்சித் தாக்குதல் ஏற்படாமல் தடுக்க, வருமுன் காப்போம் நடவடிக்கையா, 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிப்பேன். பூச்சித்தாக்குதல் தென்பட்டால், 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டியும், 300 மி.லி இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் கரைசலும் கலந்து தெளிப்பேன்” என்றார்.
செலவு குறைவு…
“விவசாயத்துல நிறைவான லாபம் பார்க்க, அதிக மகசூல், கூடுதல் விலை உள்ளிட்டவைகளை மட்டுமே அதிகம் நம்பியிருக்க கூடாது. இயன்றவரைக்கும் செலவுகளை கட்டுப்படுத்தணும். காய்கறி மற்றும் கீரை சாகுபடிக்கு நான் பயன்படுத்தக்கூடிய பஞ்சகவ்யா, மீன் அமிலம், தேமோர் கரைசல், மூலிகைப் பூச்சி விரட்டி உள்ளிட்ட இடுபொருள்களுக்கு அதிகம் செலவாகாது. புண்ணாக்கு உள்பட அனைத்து இடுபொருள்களுக்கும் சேர்த்து, தெளிப்புக்கூலி உள்பட அதிகபட்சம் 15,000 ரூபாய் தான் செலவாகும். பெரும்பாலும் களையெடுக்குறதில்ல. அறுவடை உள்ளிட்ட பணிகளை நானும் என் குடும்பத்தினருமே செஞ்சுடுவோம். எங்க உடல் உழைப்புக்கான ஊதியத்தை கணக்குப் பார்த்தோம்னா கூட, இந்த 1.5 ஏக்கருக்கு, ஒரு வருஷத்துக்கு 50,000 ரூபாய்தான் செலவாகும். ஆக, மொத்த செலவு 65,000 “ என்கிறார் விஜய்.
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
https://cdn.vuukle.com/widgets/emotes.html?version=3.13.4https://cdn.vuukle.com/widgets/index.html?version=3.37.6
Leave a Reply
You must be logged in to post a comment.