ஒற்றையாட்சி அரசின் தோற்றம் – பகுதி 1
May 4, 2025 | Ezhuna
பேராசிரியர் ஏ.ஜே வில்சன் அவர்கள் (1928 – 2000) உலகறிந்தத அரசியல், பொருளாதார, வரலாற்று அறிஞர்; எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் மருகர். பட்டப்படிப்பின் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்த வில்சன் அவர்கள், அங்கு அரசியல் விஞ்ஞானத்துறையை ஆரம்பித்து, பேராசிரியராகக் கடமையாற்றினார்; பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றினார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்களில் ஒன்றுதான் ‘The Break-up of Sri Lanka: The Sinhalese – Tamil Conflict’ எனும் நூல். இலங்கையின் அரசியல் வரலாற்றின் பல முக்கியமான பக்கங்களை விரிவாகப் பேசும் இந்த நூல், அரசியற் செயற்பாட்டாளர்களுக்கும் அரசியல் வரலாற்றாளர்களுக்கும் ஒரு கைநூலாகக் கொள்ளுமளவுக்கான முக்கியமான விவரங்களைத் தருவதாகவும், இலங்கை இனப்பிரச்சினையின் தீவிரத்தன்மைக்கான அடிப்படைக்காரணிகளைத் தெளிவாக, வரலாற்றுரீதியாக விவரிப்பதாகவும் அமைகின்றது. இந்த நூல் ‘உடைவுண்ட சிறீலங்கா: தமிழ் – சிங்களப் பிளவு’ எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு எழுநாவில் தொடராக வெளிவருகிறது.
ஆங்கில மூலம்: ஏ.ஜே. வில்சன்
இலங்கை பிரித்தானியாவினதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினதுமான இரட்டைக் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி 1802 ஆம் ஆண்டில், முதலாவது பிரித்தானிய முடிக்குரிய காலனியாக மாறியது. அந்த ஆண்டு, ஜனவரி முதலாம் திகதி ஃபிரடெரிக் நோர்த் ஆளுநராகப் பதவியேற்றார். காலனிகளுக்கான வெளியுறவுச் செயலாளர் ஹென்றி டன்டாஸ் – அவருக்கு வழங்கப்பட்ட பிற அதிகாரங்களுடன் மேலாக – சர்ச்சைக்குரிய விஷயங்களில் அவருக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசகர்கள் குழுவொன்றை நிறுவுமாறு அறிவுறுத்தினார். ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்கள் தேவையான சில விதிகளுக்கு உட்பட்டு அப்படியே இருந்தன. வெளியுறவுச் செயலாளர் 1801 மார்ச் 13 அன்று ஆளுநருக்கு அனுப்பிய தனது அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கிறார்:

“அதிக மதிப்புக்காகவும், சிலவேளைகளில் நாட்டில் அதிகளவான திருப்தியை அளிப்பதற்காகவும்….. அனைத்துப் பெரிய முக்கியமான நிகழ்வுகளிலும் நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும். கூடவே இந்த விளக்கத்தின் அனைத்துச் சட்டங்களும் நடவடிக்கைகளும் பிரகடனப்படுத்தப்படுவதற்கும், அவற்றைச் செயற்படுத்துவதற்கும் ஏதேனும் ஒரு வடிவம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இதன்மூலம் அவை கவுன்சிலில் ஆளுநரால் நிறைவேற்றப்பட்டன அல்லது உத்தரவிடப்பட்டன என்பது புரிந்துகொள்ளப்படும்”.
இருப்பினும், “முழுமையான சட்டமன்ற அதிகாரமும் ஆளுநரிடம் மட்டுமே இருக்கவேண்டும்” என்றும், “அதேவேளை உள்நாட்டில் கொண்டுவரப்படும் திருத்தம், ஆட்சிமையத்தின் (அதாவது இங்கிலாந்தின்) உறுதிப்படுத்தல் அல்லது நிராகரிப்புக்கு உட்பட்டது” என்றும் வெளியுறவுத்துறைச் செயலாளர் கவனமாகச் சுட்டிக்காட்டினார். ஆளுநர் தனது ஐந்து ஆலோசகர்களைக்கொண்ட குழுவில் வாக்கெடுப்புக்கான கேள்விகளை வைக்கவோ அல்லது அவர்களின் ஆலோசனையின்படி செயற்படவோ தேவையில்லை; உடன்படாத எந்த உறுப்பினரும் ஒரு நிமிடம்கூட எத்தகைய கருத்து வேறுபாடும் கொள்ளமுடியாது. இதனால் ஆலோசகர்கள் குழு ஓர் ஆலோசனை அமைப்பாக மட்டுமே செயற்பட்டதுடன் ஆளுநருடன் சட்டமன்ற அல்லது நிர்வாக அதிகாரத்தைக் குறைந்தபட்ச அளவுக்குக்கூடப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.
இந்த நேரத்தில் சில சொற்றொடர்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இது ஆளுநரின் முடிவுகளுக்கு மறைமுகமாக அதிகவலுவைக் கொடுப்பதாக அமைந்திருந்தது. முந்தைய ஆட்சியின்கீழ் – அதாவது பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம், பிரிட்டிஷ் அரசாங்கம் என்பவற்றின் இரட்டைக் கட்டுப்பாட்டுடன் இராணுவ ஆட்சி இருந்தபோது – ஆளுநரின் உத்தரவுகள், ‘பிரகடனங்கள்’ (ஒரே ஒரு அதிகாரத்திலிருந்து வெளிப்படும் அறிவித்தல்கள்) என வெளியிடப்பட்டன, ஆனால் முடிக்குரிய காலனி அந்தஸ்தின் வருகையோடு அரசியலமைப்புச் சொற்கள் மாற்றப்பட்டன. ஆளுநரின் முடிவுகள் ‘ஒழுங்குமுறைகள், கவுன்சிலின் ஆணைப்படி’ என்றும் ‘அவரது மேன்மை தங்கிய கட்டளைப்படி’ என்றும் வெளியிடப்பட்டன. ஆனால், இந்த மாற்றம் ஏற்பட்டபோதிலும், சட்டரீதியானதும் அரசியலமைப்பு ரீதியானதுமான நிலைப்பாடு வேறுபட்டதாக இருக்கவில்லை: “இலங்கை ஆளுநர் இன்னமும் அதன் சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தார். ஆயினும், சட்டமன்ற அதிகாரம் பொதுவாக அரசாங்கச் சபையிலுள்ள ஆளுனராலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. இது ஒரு வகையான காலனித்துவ ‘பிரிவி கவுன்சில்’ (தனியுரிமை சபை). எனவே, அனைத்து மைய அதிகாரங்களும் தலைமை நிர்வாகியான இலங்கை ஆளுநரின் கைகளில் குவிந்திருந்தன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1823 இல் ஆளுநர் பார்ன்ஸ் (Barnes) வரையான காலம்வரை பின்பற்றப்பட்ட இந்தக்கொள்கை அனைத்து ஆளுநர்களுக்கும் ஒரே மாதிரியாகவே இருந்தது.
1805 இல், நோர்த் (Frederic North) இற்கு அடுத்ததாகப் பதவிக்கு வந்த தோமஸ் மெயிற்லாண்டின் (Maitland) நியமனம், தனியொரு அதிகாரியின் கைகளில் மேலும் அதிகாரத்தைக் குவிப்பதாக அமைந்தது. காலனித்துவ அலுவலகம் மெயிற்லாண்டை துருப்புகளுக்கான கட்டளைத் தளபதியாகவும், இலங்கையின் ஆளுநராகவும், இலங்கைக்கான தலைமைத் தளபதியாகவும் நியமித்தது. நோர்த் இந்த அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை (அது ஜெனரல் டேவிட் டக்ளஸ் வேமிஸிடம் (Dougla Wemyss) இருந்தது). அவர், தான் கஜானாவின் (அல்லது கருவூலம் – Treasury) காசாளர் பதவிக்குக் குறைக்கப்பட்டதாக புகார் கூறியிருந்தார். இது எதிர்காலத்தில் வந்த ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது. காலனித்துவ அலுவலகத்திடமிருந்து மெயிற்லாண்டிற்கு சிறிய தலையீடு இருந்தது; உள்நாட்டில் காலனிகளுக்கான வெளியுறவுச் செயலாளர் பதவி, யுத்த முயற்சிகளுடன் இணைக்கப்பட்டது. இதன்விளைவாக நெப்போலியனுடன் போரை நடத்துவதில் வெளியுறவுச் செயலாளரின் முயற்சிகள் குவிந்தன. தவிரவும், ஆளுநருக்கு ஆலோசனை வழங்க, உள்ளூர் விவகாரங்கள் தொடர்பான போதுமான அறிவு, வெளியுறவுச் செயலாளருக்கு இருக்கவில்லை. துணைச் செயலாளரான எட்வர்ட் குக், காலனித்துவ அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பெரும்பாலான விஷயங்களில் எந்த தீர்ப்புகளையும் உருவாக்க முடியாது என்றும், ஆளுநர் மெயிற்லாண்ட் சரியானவர் என்று தான் நம்புவதாகவும் ஒப்புக்கொண்டார். இந்தக்கட்டத்தில், விஷயங்களை மேலும் சிக்கலாக்கும் வகையில், செயலாளர் பதவி குறுகிய இடைவெளியில் கைமாறியது.

கவர்னர் மெயிற்லாண்ட் தனது கைகளில் அதிகாரக் குவிப்பை மேலும் அதிகரித்தார். அவர் தீவின் பிரமாண்டமான ஆளுநர் சுற்றுப்பயண முறையைத் தொடங்கினார். அங்கு அவர் தனக்காக விஷயங்களைக் கற்றுக்கொண்டார்; மனுக்களைப் பெற்றார். கூடவே வெளிப்பகுதிகளில் உள்ள விவகாரங்களின் உண்மையான நிலை குறித்த தகவல்களையும் திரட்டிக்கொண்டார். அரசாங்க முகவர்களை மக்களின் உண்மையான பிரதிநிதிகளாகக் கருதுகின்ற நடைமுறை மெயிற்லாண்டால் தொடங்கப்பட்டது. 1808 – 9 ஆம் ஆண்டில், ஆளுநர்கள் (பிற்கால அரசாங்க அதிபர்கள்) தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் வசிப்பவர்களின் தேவைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், வழக்கமான நேரங்களில் சுற்றுகளை மேற்கொள்ளவும், அவர்கள் கவனித்தவற்றை அல்லது அவர்களின் பயணங்களின்போது அவர்கள் பெற்ற எந்த உளவுத்தகவல்களையும் பதிவு செய்யும்படி கேட்டு உத்தரவுகளையும் வழிகாட்டல்களையும் பிறப்பித்தார். இந்தப் பதிவுகளும் உத்தரவுகளும் ‘ஆளுனர்கட்கான சிறந்த வழிகாட்டிகள்’ என்று அழைக்கப்பட்டன. இவ்வாறாக, மையப்படுத்தல் என்பது காலனித்துவ அரசாங்கத்தின் நோக்கமாகவே மாறும்போக்கு அதிகரித்து வந்தது.
1815 இல் நடந்த கண்டி இராச்சியத்தின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், 1831 வரை பிரச்சினைகளைத் தீர்க்காமல் விட்டுவைத்திருந்தது. ஆளுநர் கண்டிப்பகுதிகளை கண்டிய சட்டத்தின்படி, தேவையான மாற்றங்களுடன் ஆட்சி செய்தார். ஆட்சி, ‘சட்ட விதிமுறைகள்’ மூலமாகச் செய்யப்பட்டதாக அல்லாமல், ‘சபையின் ஆணை’ மூலமாகப் ‘பிரகடனம்’ செய்யப்படுவதன் மூலமாக நடந்தது. இருப்பினும், 1831 இல் ஆளுநர் றொபேரட் வில்மோட் ஹோர்ட்டனுக்கு (Sir. Robert Wilmot Horton) ஒரு கமிஷன் வழங்கப்பட்டது. இந்தக் கமிஷன் முதல் முறையாக தீவை ஒன்றாக ஒருங்கிணைத்து, ஒற்றை ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்ததுடன். ஹோர்ட்டனை ‘இலங்கையில் உள்ள எங்கள் குடியேற்றங்களின்’ ஆளுநராகவும், தலைமைத் தளபதியாகவும், ஓர் அரசாங்க ஆலோசனைச்சபையைக் கொண்டவராகவும் இணைத்தது. அவருக்கு, ‘நமது தீவின் ஒழுங்கு, அமைதி, நல்லாட்சி என்பவற்றுக்கான சட்டங்களை உருவாக்கவும், இயற்றவும், நியமிக்கவும், ஆணையிடவும், மேற்கூறிய ‘அரசாங்கக்சபையின் ஆலோசனையுடனும் ஒப்புதலுடனும்’ அதைச் செய்வதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டது. இவ்வாறுதான் தீவின் வெவ்வேறு பிரதேசங்களுக்கென்று அல்லாமல், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த ஒற்றைப் பிரதேசத்திற்கான மையப்படுத்தப்பட்ட அரசியல் ஆட்சிமுறை இலங்கையில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
இதன் பின்னாக வந்ததுதான் கோல்புரூக்-கமரூன் அறிக்கை. லெப்டினன்ட் கேர்ணல் டபிள்யூ.எம்.ஜி. கோல்புரூக், டிசம்பர் 24, 1831 திகதியிடப்பட்ட தனது அறிக்கையின் பிரிவுகளில், மிக இறுக்கமான மையப்படுத்தலைப் பரிந்துரைத்திருந்தார். முழுத்தீவும் ஆளுநராலும், அவரது கவுன்சிலாலும் நிர்வகிக்கப்பட இருந்தது. மாகாணங்களின் எண்ணிக்கை, பதினாறிலிருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டது. ஒவ்வொன்றும் ஒரு அரசாங்க அதிபரின்கீழ்க் கொண்டுவரப்பட்டது. மாகாணங்களின் எல்லைகளை மறுவரையறை செய்ததன் பின்னணியில் இருந்த சிந்தனை, கண்டி மலைவாழ் சிங்களவர்களின் தனிமைப்படுத்தலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அவர்களின் தனித்துவமான தன்மைகள், ஆங்கிலேயர்கள் நினைத்தபடி, ஒரே மாதிரியான தேசத்தையும், ஒரே மாதிரியான நிர்வாக முறையையும் உருவாக்குவதற்கு ஒரு தடையாக அமைந்திருந்தன.
கண்டியச் சிங்களப் பகுதிகளை அவர்களின் பூர்வீகத் தலைவர்களின் செல்வாக்கிலிருந்து விடுவிப்பதில் பிரிட்டன் உறுதியாக இருந்தது என்று குறிப்பிட்டு வரலாற்றாசிரியர் விஜய சமரவீர இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார். கண்டிச் சிங்களவர்களும் தாழ்நிலப் பிரதேசச் சிங்களவர்களும் ஒரே மாதிரியான அமைப்பாக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கோல்புரூக் விரும்பினார். இது கண்டியச் சிங்களத் தலைவர்களின் அதிகாரத்தை நீக்கும் என்பதால், ஒரே மாதிரியான அரசாங்க அமைப்பைக் கொண்டுவரலாம் என்பது கோல்புரூக்கின் தீர்வாகும். கண்டியத் தலைவர்கள் தங்கள் பகுதிகள் தனித்தனியாக நிர்வகிக்கப்பட்டால் அவர்கள் தொடர்ந்து தமது செல்வாக்கைப் பயன்படுத்துவார்கள் என்று அவர் வாதிட்டார்.
நிர்வாகத்தையும் சட்டமன்றக் கவுன்சில்களையும் அமைப்பதற்கான கோல்புரூக்கின் பரிந்துரை மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பங்களிப்பாகும். சட்டமன்றம் ஒரு பரிந்துரைக்கப்பட்ட அமைப்பாக இருக்கும் என்றாலும் காலப்போக்கில் அது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமாகப் பரிணமிக்க இருந்தது. அப்போது அது, தீவின் ஆட்சி குறித்து ஆளுநருக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாக இருந்தது. இருப்பினும், இறுதியில் ஆளுநரே தீவின் அரசாங்கமாகத் தொடர்ந்து இயங்கி வந்தார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், இரண்டு கவுன்சில்களும் விரிவாக்கப்பட்டன. சட்டமன்றம் மேலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. டொனமூர் கமிசனின் பரிந்துரைகள் 1931 இல் நடைமுறைக்கு வரும்வரை, ஏகாதிபத்திய அதிகாரிகள் தேர்தல் கொள்கையைப் படிப்படியாக அறிமுகப்படுத்தினர். ஆனால் சட்டமன்றத்தின் இன அமைப்பில் தாழ்நிலச் சிங்களவர்கள், கண்டிச் சிங்களவர்கள், வடக்கு மாகாணத்தின் இலங்கைத் தமிழர்கள், மேற்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்தவர்கள், இந்தியத் தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் உடன், கூடவே ஐரோப்பியர்களும் என்று சமநிலையைப் பராமரித்தனர். ஆனால் 1912 ஆம் ஆண்டில் ஆளுநர் சேர். ஹென்றி மக்கலம் (Sir. Henry McCallum), 1920 ஆம், 1923 ஆம் ஆண்டுகளில் ஆளுநர் சேர். வில்லியம் மானிங் (Sir William Manning) ஆகியோரால் அரசியலமைப்பில் பழிவாங்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், 1923 ஆம் ஆண்டில் காலனித்துவ அரசாங்கத்தை, சட்டமன்றத்தில் ஒரு சிறுபான்மைச் சூழ்நிலையில் விட்டுச்சென்ற ஆளுநர், தீவின் அரசாங்கத்திற்குத் தொடர்ச்சியான பொறுப்பாளராக இருந்தார்.
1920 ஆம் ஆண்டின் அரச அறிவுறுத்தல்களின் பிரிவு 13, பத்து வகையான மசோதாக்களுக்கு, முக்கியமாக ஏகாதிபத்திய அக்கறைகொண்ட மசோதாக்களுக்கு, தனது ஒப்புதலை வழங்க வேண்டாம் என்று ஆளுநருக்கு உத்தரவிட்டது. தீவின் பொதுநிர்வாக அமைப்பின்மீது அவர் உறுதியான கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டார். மேலும் 1920, 1923 ஆம் ஆண்டுகளில் அரசியலமைப்புகள் அவருக்குச் சில குறிப்பிட்ட மேலதிக அதிகாரங்களை வழங்கின. நாட்டின் அமைதி, ஒழுங்கு, நல்லாட்சி என்பவற்றிற்காக இறுதிச்சந்தர்ப்பத்தில் சட்டம் இயற்றுவதற்கு இந்த அதிகாரம் அவருக்கு உதவியது. உண்மையில், ஒரு நடவடிக்கை ‘மிக முக்கியமானது’ என்று ஆளுநர் கருதினால், ‘சட்டமன்றத்தில் உள்ள சிறுபான்மையினரான பன்னிரண்டு உத்தியோகபூர்வ உறுப்பினர்களின் வாக்குகளுடன் அதைச் அவர் சட்டமாக இயற்ற முடியும்.
1833 ஆம் ஆண்டு கோல்புரூக்கின் சீர்திருத்தங்களுக்கும், 1912 இல் மக்கலம் கொண்டுவந்த அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கும் இடையிலான ஆண்டுகளில், நிர்வாகம், பொருளாதாரம், கல்வி, அரசியல் ஆகிய துறைகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. கோல்புரூக் பொதுச்சேவைகளில் இருந்த பதவிகளைக் குறைக்கவேண்டுமெனப் பரிந்துரைத்தார். காலனித்துவ அரசாங்கம், அதைச் செயற்படுத்தியது. அதாவது மாகாணங்களை மறுவரையறை செய்வதன் மூலமாக – அதுவரை பதினேழாக இருந்த மாகாணங்களை ஐந்தாகக் குறைப்பதன் மூலமாக – அதுவரை தனித்துவமாக இருந்த கண்டியச் சிங்கள மலைவாழ் மக்களின் தனித்தன்மை சிதைந்துபோகும் வகையில், பொதுசேவைகள் அமைப்பை மாற்றி அமைத்தது. இருப்பினும், பெரிய மாகாணங்களாக இருப்பதன் காரணமாக அவற்றின் சட்டபூர்வ பிரதேசங்களும் எல்லைப்பகுதிகளும், புறக்கணிக்கப்படும் நிலை எழுந்தபோது, அவை நிர்வாக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட முடியாதவை என்பது நிரூபிக்கப்பட்டது. இதன் காரணமாக 1873 இல் வடக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு ஒரு புதிய வடமத்திய மாகாணம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1886 இல் ஊவா மாவட்டம் மத்திய மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு ‘ஊவா மாகாணம்’ என்று பெயரிடப்பட்டது. அதன்பின், 1889 இல், சப்ரகமுவ மாகாணம், மேற்கு மாகாணத்திலிருந்து பிரிந்து அது தன்னை ஒரு தனியான மாகாணமாக மாற்றிக்கொண்டது.
கோல்புரூக்கிற்குப் பின்னான ஆண்டுகளில் பொருளாதாரரீதியாகக் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்பட்டன. முதலில் கோப்பியும், பின்னர் தேயிலை, ரப்பர், தென்னை ஆகியவற்றுக்கான தோட்டங்களும் உருவாக்கப்பட்டு அவை புலம்பெயர்ந்த பிரிட்டிஷ் தோட்டக்காரர்களுக்கான வணிகப்பயிர்களாக மாறின. அதைத்தொடர்ந்து இறக்குமதி – ஏற்றுமதி வர்த்தகம், தலைநகரான கொழும்பை தனது செயற்பாட்டிற்கான மையமாக மாற்றிக்கொண்டது. அதற்காக வீதிகளும் மற்றும் ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டு அவை இந்தத் தோட்டங்களை இணைத்தன. இந்த முன்னேற்றங்கள் தனிமைப்பட்டிருந்த கண்டியச் சிங்களவர்களின் தனித்துவத்துள் மேலும் ஊடுருவுவதாய் அமைந்தன. 1848 ஆம் ஆண்டு நடந்த பாரிய கண்டிக்கலவரம், கண்டியின் சிங்களத் தலைவர்கள் தங்கள் தனித்துவத்தை வலியுறுத்துவதற்கான கடைசி முயற்சியாக அமைந்த ஒன்றுதான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், கடைசியாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, இலங்கைத் தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் தீவின் வடக்குப்பகுதி, நாட்டின் பிறபகுதிகளுடன் இணைக்கப்பட்டது. இது முதலில், கொழும்பிலிருந்து இலங்கைத் தமிழர்களின் வடக்குத்தலைநகரான யாழ்ப்பாணத்திற்கும், பின்னர், 1896 – 1903 ஆம் ஆண்டுகளில், தீவின் வடக்கே உள்ள காங்கேசன்துறைக்கும் ரயில் பாதை அமைக்கப்பட்டதன் மூலம் முடிவுக்கு வந்தது.
தொடர்புமுறையில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள், முதலாவதாக, தாழ்நிலச் சிங்கள வர்த்தகர்களுக்கும் கண்டிச் சிங்கள மக்களுக்கும் இடையேயான அதிக வணிகத்தொடர்பைக் குறிக்கின்றன. இரண்டாவதாக, யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கையையும் அவர்கள் அரசாங்க ஊழியர்களாகவோ தொழில்முறைத் தொழில்களில் அல்லது சிங்களப்பகுதிகளில் தொழில்முனைவோராகவோ வாய்ப்புகளைத் தேடத் தொடங்கியதையும் குறிக்கின்றன. குறிப்பாக, இந்த இரண்டு வகையினரும் கொழும்பில்தான் சந்தித்துக் கொள்கின்றார்கள். நாட்டின் அரச நிர்வாகக்குழு, சட்டமன்றக்குழு, காலனிய ஆளுநர் அலுவலகம் என்று எல்லாமே கொழும்பில் இருந்து செயற்பட்டமை காரணமாக, அது நகரத்திற்கு அதிக முக்கியத்துவத்தை அளிப்பதாக இருந்ததுடன், நிர்வாக இயந்திரத்தின் அதிகாரத்தையும் அதிகரிக்கச் செய்தது. இதுதான் கொழும்பு பின்வந்த காலங்களில், தன்னளவில் ஒரு சுயநலப்போக்கை வளர்த்துக் கொள்வதற்கும், மற்றையப் பகுதிகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளத் தயக்கம் காட்டுவதற்கும் வழிவகுத்த போக்குக்கான ஆரம்பமாகவும் அமைந்தது.
கல்வியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. கோல்புரூக்கின் முயற்சிக்குப்பிறகு ஒரு வருடம் கழித்து, இலங்கைத் தீவில் 13,891 குழந்தைகள் பாடசாலைகளில் படித்தனர். ஆனால் முக்கால் நூற்றாண்டுக்குப்பிறகு, அதாவது 1906 இல், ஆகலும் 276,691 பேர் மட்டுமே படிப்பவர்களாக இருந்தனர். 1905 இல் 554 அரச பாடசாலைகளும் 1,582 அரச உதவிபெறும் பாடசாலைகளும் இருந்தன. 1834 ஆம் ஆண்டில் 1,167,700 ஆக இருந்த தீவின் மக்கள்தொகை, 1906 ஆம் ஆண்டில் 3,984,985 ஆக உயர்ந்தது. அதே ஆண்டுகளில், வருவாய் ரூ. 1,145,340 இலிருந்து ரூ. 112,516,914 ஆக அதிகரித்தது. மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டு மையம் கொழும்பிலேயே தொடர்ந்தது இருந்து வந்தது. வேறு பிரதேசங்களிலான மாற்று மையங்கள் வளர்ச்சியுறுவதில் வெற்றிபெறவில்லை
கல்வி வளர்ச்சியும், பொருளாதாரத்தில் ஏற்பட்ட செழிப்பான நிலைமையும் அதிகரித்து வந்தமையானது, பெரும்பான்மைச் சிங்களப் பௌத்தர்கள், சிறுபான்மை இந்துக்கள், முஸ்லிம்கள் மத்தியில் மத மறுமலர்ச்சிக்கான வளர்ச்சியை ஊக்குவித்தது. இனரீதியாகவும் மதரீதியாகவும் பிளவுபட்ட இந்தக் குழுக்களின் பன்முகத்தன்மை கொண்ட கலவையின் காரணமாக இயல்பாகவே எழுகின்ற ஒரு விளைவாகவே, தங்களுக்கான தனித்தனியான செயற்கையான தேசியவாதக் குடை அமைப்புகளின் உருவாக்கம் ஏற்படுகிறது. இந்த நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் எல்லோரும், சொத்துகளைக் கொண்டவர்களும், தொழில்முறைசார்ந்து உயர்நிலையில் உள்ள வகுப்பினர்களாகவுமே இருந்தனர். ஆனால், சமூகத்தின் கீழ்மட்ட அடுக்குகள் இதனால் உடனடியாகப் பாதிப்புக்கு உள்ளாகவில்லை.
கிராமப்புறங்கள் இந்த பரபரப்புக்குள் அகப்படவில்ல. அதற்குப்பதிலாக, தாழ்பிரதேச உற்பத்தியாளர் கூட்டமைப்பு (Low Country Products Association), யாழ்ப்பாணக் குடாநாட்டில் வசதி படைத்த தமிழர்களைக் கொண்ட ‘யாழ்ப்பாண சங்கம்’, ‘சிலாபம் சங்கம்’ (கொழும்புக்கு வடக்கே உள்ள சிலாபம் மாவட்டத்தில் இருந்த பெரும்பாலும் தெங்கு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள்), மேற்கு மாகாணத்தில் உள்ள தொழில்முறை வகுப்பினரையும் வணிக வகுப்பினரையும் உள்ளடக்கிய ‘இலங்கைத் தேசிய சங்கம்’ (Ceylon National Association) போன்ற வணிகத்துடன் சம்பந்தப்பட்ட தொழில்சார் அமைப்புகளால் (1907 இல் ஆரம்பிக்கப்பட்டவை) ‘பிரார்த்தனை’களுக்குப் பதிலாக, கோரிக்கை மனுக்கள், நினைவுச்சின்னங்கள் என்பவை வெளியுறவுத்துறைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 1917 மே 17 அன்று, ‘இலங்கை நிர்வாகத்திலும் அரசாங்கத்திலும் மக்களுக்குப் பயனுள்ள பங்கை வழங்கும் சீர்திருத்தத்தைப் பெறுவதற்கும், அவர்களின் அரசியல், பொருளாதார, சமூகநிலை தொடர்பான கேள்விகளை ஆராய்வதை ஊக்குவிப்பதற்கும்’ என்ற நோக்கங்களுடன் உயர்குடியினர்களது (Ceylon Reform League) ‘சிலோன் சீர்திருத்தக் கழகம்’ என்ற அமைப்புத் தொடங்கப்பட்டது. டிசம்பர் 15, 1917 அன்று, மேற்சொன்ன இந்தக் கழகத்தாலும், சங்கத்தாலும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் குறித்த பொதுமாநாடு கூட்டப்பட்டது. பின்னர் டிசம்பர் 13, 1918 அன்று கொழும்பில் உள்ள பொதுமண்டபத்தில் அரசியலமைப்புச் சீர்திருத்தம் குறித்த இரண்டாவது மாநாடு கூடியது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வெவ்வேறு இனக்குழுக்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த பல்வேறு ஆங்கிலம் படித்த பிரபுக்களின் பரந்த கூட்டணியை உருவாக்குவதில் உச்சத்தை அடைந்தன. இலங்கைத் தேசிய காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட அதன் முதல் அமர்வு, 1919 டிசம்பர் 11 அன்று கொழும்பில் நடைபெற்றது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, இந்த அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நோக்கிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் வசதியான மையமாக கொழும்பு இருந்ததே அதற்கான காரணம்.
குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக மட்டுமே ஒன்றிணைந்திருந்த, தம்மளவில் பிளவுபட்டிருந்த இந்த உயர்தட்டினர்கள் (Elites) கிளர்ச்சி செய்வதற்காக இணங்கிய அடிப்படைக்காரணங்கள் இவை: பொதுச்சேவைகளின் இலங்கைமயமாக்கலைப் பெறுவது; நிர்வாக மற்றும் சட்டமன்றங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்குவது, அதன் விளைவாக ஆளுநரின் அதிகாரங்களைக் குறைப்பது; ஒவ்வொரு இனக்குழுக்களும் (நமது நோக்கங்களுக்காக முஸ்லிம்களின் மதக்குழு உட்பட) ஒப்புக்கொள்ளப்பட்ட பிரதிநிதித்துவப் பங்கைப்பெறும் இனரீதியாகச் சமநிலையான சட்டமன்றம் என்பவை. 1833 முதல் 1931 வரையும் அதற்குப் பிறகும், டொனமூர் அரசியலமைப்பு (1931-47), சோல்பரி அரசியலமைப்பு (1947-8) என்பவற்றின் காலங்களில், உயரடுக்கினர்களுக்கு இடையே இருந்த சர்ச்சை, அரசாங்கத்தின் கட்டமைப்புகள் குறித்ததாக அல்லாமல், பிரதிநிதித்துவத்தின் அளவு குறித்தே இருந்தது.
உண்மையில், இந்தப்போட்டி, பதவிகளையும், அரசு வேலைவாய்ப்புகளில் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளில் ஒரு பங்கைப் பெறுவதற்குமான போராட்டமாகவே இருந்தது. மிகப்பெரிய தொழில்வழங்கும் ‘முதலாளியாக’ இருந்த கொழும்பு, இனங்களுக்கிடையேயான போட்டியின் மையமாக மாறியது.
உள்ளூராட்சி நிறுவனங்களின் மறுமலர்ச்சியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் பலவீனமாக இருந்ததுடன், எவ்வகையிலும் பயனற்றவை என நிரூபிக்கப்பட்டன. அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான செயற்பாட்டாளர்களின் செயலூக்கமின்மையால் இவை பயனற்றுப்போயின. மறுபுறம், காலனித்துவ அதிகாரிகள், இந்த நிறுவனங்களை கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகவே பார்த்தனர். 1866 ஆம் ஆண்டில் கொழும்பிலும், கண்டியிலும், 1867 ஆம் ஆண்டில் காலியிலும், நகராட்சிமன்றங்கள் நிறுவப்பட்டன. கண்டி, காலி ஆகியவை கொழும்புக்குப் பிறகு முக்கியத்துவம் வாய்ந்த நகர மையங்களாக இருந்தன. தவிரவும், 1889 ஆம் ஆண்டில் ஆளுநர் சேர். ஹெர்க்குலஸ் ரொபின்சன் (Sir. Hercules Robinson: 1865-72), கிராமியக்குழுவுக்கான அதரப்பழமையான நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு சட்டத்தை இயற்றினார். மாகாண, மாவட்டப் பாதைகளுக்கான குழுக்கள், உள்ளூர் சுகாதார சபை (Boards) போன்ற பிற உள்ளூர் அமைப்புகள் ஏற்கனவே இருந்தன. 1876 இல், சிறுநகரங்களில் உள்ளூர் சபைகள் நிறுவப்பட்டன. ஆனால் இவை எதுவும் எதிர்பார்த்த பலனைத்தரவில்லை. தெற்கு மாகாணத்திற்கான ஓர் அரசாங்க அதிபர், 1905 ஆம் ஆண்டுக்கான தனது நிர்வாக அறிக்கையில், வேறு பிற விடயங்களுடன் இவ்வாறு குறிப்பிட்டார்:
“பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் தன்மைகொண்ட எந்த நடவடிக்கைகளுக்கும் இலங்கை இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்று நான் அஞ்சுகிறேன். வேட்பாளர்கள் முற்றிலும் பொதுநோக்கங்களுடன் தேர்தலுக்கு வருவது மிகவும் அரிதாக உள்ளது. தவிரவும், சிறந்த வேட்பாளரையோ அல்லது மக்களின் நலன்களைச் சிறப்பாகக் கவனிக்கும் ஒருவரையோ பெறுவதற்காக வாக்காளர்கள் முன்வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக ஆர்வமூட்டப்படுவதும் இல்லை…..”
வெவ்வேறு தேசியக் குழுக்களிடமிருந்து ஓர் இனக்கலவையை உருவாக்கும் முயற்சிகள் பிரித்தானியாவிடம் இருந்தபோதிலும், 1920 – 30 ஆம் ஆண்டுகள் பிரச்சினைக்கான முதல் அறிகுறிகளைக் கண்டன. போட்டியிடும் இனக்குழுக்கள் தங்களுக்கான இடங்களுக்கான இனரீதியான பங்கீட்டில், ஒவ்வொன்றும் கொண்டிருக்க வேண்டிய பங்கு தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டிருந்தன. சிறுபான்மைக் குழுக்கள் சிறப்பாகப் பிரிக்கப்பட்ட சமூகரீதியான வாக்காளர்கள்மூலம் தங்கள் பதவிகளைப் பெறவிரும்பினர். ஆனால் சிங்களப் பெரும்பான்மையினரோ தங்கள் இயற்கையான உரிமையாக, பிராந்தியரீதியான பிரதிநிதித்துவத்தைக் கோரிநின்றனர். போட்டியும் எதிர்ப்புகளும் மிகவும் கூர்மையாகிவிட்டதால், ஆங்கிலேயர்கள் கட்டமைக்க முயற்சித்த ஒற்றையாட்சி அரசியலுக்குள் சிதைந்து கொண்டிருந்த சமூகரீதியாக ஏற்பட்டுள்ள பிரிவுகளை ஒன்றாக வைத்திருக்கும் நோக்குடன், காலனிகளுக்கான மாநிலச் செயலாளர், டெவன்ஷயர் டியூக், 1923 ஜனவரி 11 அன்று இலங்கை ஆளுநர் சேர். வில்லியம் மானிங்கிற்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்:
“காலனியில் நிலவும் நிலைமைகளையும், மக்கள்தொகையின் தொகுப்பையும் கருத்திற் கொண்டு, தொகுதிகளை உருவாக்கும் ஏற்பாடுகள் எதுவாக இருந்தாலும், பிரதிநிதித்துவம் காலவரையின்றி சமூகரீதியாக இருக்க வேண்டும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் பிராந்தியத் தொகுதிகளால் திருப்பி அனுப்பப்பட்ட வடிவத்தில் இருந்தால், அவர்கள் சாராம்சத்தில் சமூகரீதியான பிரதிநிதிகளாக இருப்பார்கள்…”
இதற்கு முன்னரே, 1922 மார்ச் 1 அன்று, ஆளுநர் மானிங் வெளியுறவுத்துறை செயலாளருக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், “எந்தவொரு சமூகமும் தனது விருப்பத்தை, மற்றச் சமூகங்கள்மீது திணிக்க முடியாது” என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். மானிங்கின் அறிவிப்பை, 1930களிலும் 1940களின் முற்பகுதியிலும், இலங்கைத் தமிழர்களும் அவர்களின் முக்கிய அரசியல் கருவியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசினரும் சட்டமன்றத்தில் சமச்சீர் பிரதிநிதித்துவத்திற்காகப் போராடுவதற்கு ஒரு ஆதரவுத்தளமாகப் பயன்படுத்தினர். சட்டமன்றத்தில் 50 சதவீத இடங்கள் சிங்களப் பெரும்பான்மையினருக்கும், மீதமுள்ள 50 சதவீத இடங்கள் சிறுபான்மையினருக்கும் இடையில் பிரிக்கப்பட வேண்டும் என்ற இனரீதியான சூத்திரம் இதுவாகும்.
சிங்களவர்களது தலைமையானது தங்கள் எண்ணிக்கையின் மேன்மையைக் குறைக்கும் எந்தவொரு முயற்சியையும் கடுமையாக எதிர்த்தது. இலங்கை சீர்திருத்தப் பிரதிநிதிகள்குழு, 1923 ஏப்ரல் 12 அன்று வெளியிடப்பட்ட ஒரு குறிப்பாணையில் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியது:
“சட்டமன்றத்தில் சிங்களப் பிரதிநிதித்துவத்தைக் கட்டுப்படுத்தும் ஆளுநர் மானிங்கின் திட்டத்தை, எந்தக் கொள்கையையும் அடிப்படையாகக் கொள்ளாமல், சட்டமன்றத்தில் சிங்களப் பிராந்தியப் பிரதிநிதிகளின் சாத்தியமான ஆதிக்கத்தைத் தடுக்கும் நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ‘அதிகாரச் சமநிலையை’ நிறுவும் முயற்சியாக பிரதிநிதிகள்குழு கண்டனம் செய்கிறது. சில விளங்கிக்கொள்ள முடியாத காரணங்களுக்காக ஏற்படும் இந்தத் தற்செயல் நிகழ்வு, நீதி – நியாயங்களை விலையாகக் கொடுத்தேனும்கூடத் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு பயங்கரமான தீமையாகக் கருதப்படுகிறது.”
சிங்கள இனத்தின், சிறுபான்மையினரை ஏற்றுக்கொள்ளவும் சமரசம் செய்யவும் விரும்பாத போக்கின் மொத்த விளைவுதான், இலங்கைத் தேசிய காங்கிரசின் உடைவு ஆகும். காங்கிரசின் நிறுவனத் தலைவரான சேர். பொன்னம்பலம் அருணாசலம், 1921 இல், இது முக்கியமாக சிங்களவர்களின் ஒரு பகுதியையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், பல்வேறு சமூகங்களுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு உணர்வுகளை அழித்துவிட்டது என்றும்கூறி, அதன் அணியிலிருந்த பதவிகளிலிருந்து வெளியேறினார்.
மீண்டும் தனக்கென ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்னெடுத்த அருணாசலம், சக இலங்கைத் தமிழர்களிடையே, ஒரு பின்னணிப் படையாளாக நின்று எதிர்த்துப் போராட முயன்றார். அவர், 1923 ஆம் ஆண்டு, ‘இலங்கைத் தமிழ் லீக்’ என்ற புதிய அரசியல் அமைப்பை நிறுவியதுடன், தமிழ்ச்சமூகத்தின் அரசியல் பரிணாம வளர்ச்சியில் பின்னாளில் வரப்போகும் அரசியல் நிகழ்வுகளை எதிர்பார்த்து, தன் இலட்சியத்தையும் குறிக்கோளையும் முன்வைத்தார். தனது வாழ்க்கையின் இறுதிக்காலங்களில், ‘தமிழ் லீக்கிற்கு’ அவர் ஆற்றிய உரையில், தமிழ் மக்கள் எதை நோக்கிச் செயற்பட வேண்டும் என்று அவர் நினைத்தார் எனபதை அவர் இவ்வாறு முன்வைத்தார்:
“நாம் இலங்கை முழுவதும் இந்த இலட்சியங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும், பரப்ப வேண்டும், மேலும் தமிழ் ஈழம் என்று நாம் பெருமையாக அழைக்கும் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்க வேண்டும். நாம் ஒரு மக்கள் கூட்டமாக, நமது தனித்துவத்தைப் பாதுகாக்கவும், நமது பாரம்பரியத்திற்கு தகுதியானவர்களாக இருக்கவும் விரும்புகிறோம். நாம் எம்மை ‘மீன், இறைச்சி, கோழி ஆகவோ அல்லது வேறெந்த அர்த்தமற்ற ஒன்றாகவோ’ நம்மை ஆக்கிவிடும் உலோகாயத இச்சைகளால் ஈர்க்கப்படவில்லை. அதற்காக நாம் சுயநலவாதிகளாக இருந்து தமிழ் சமூகத்திற்காக மட்டுமே பாடுபட வேண்டும் என்று அர்த்தமல்ல. தமிழர்களுக்காகச் செய்ததைவிட இலங்கை முழுவதுக்குமான நலனுக்காக நாங்கள் அதிகமாகச் செய்துள்ளோம்… இருப்பினும், நாங்கள் பின்தங்கியவர்களாக இருப்பதைக் கடுமையாக எதிர்க்கிறோம். நாங்கள் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வலிமையுள்ளவர்களாகவும், பொதுநலனுக்காகவும் பாடுபடும் உறுதிகொண்டவர்களாகவும் இருக்க விரும்புகிறோம்.”

இந்த அறிக்கையில் அருணாசலம் தமிழர் அரசியல் ஒற்றுமைக்காகப்பாடுபட்டார் என்பதில் எந்த விதத்திலும் சந்தேகமில்லை. ஆனால், அவர் தமிழ் ஈழம் பற்றிப் பேசிய சூழலைக் கருத்தில்கொண்டு, அவர் உண்மையில் ஒரு தனி இறையாண்மை கொண்ட தமிழ் அரசுக்கு அழைப்புவிடுத்ததாகக் கூற முடியுமா? என்று ஊகிக்க மட்டுமே முடியும் (இந்த வார்த்தைகள், இப்போது இதை எழுதும் நேரத்தில், பரவலாக அறியப்பட்ட தனித் தமிழ் அரசுக்கு முன்மொழியப் பயன்படுத்தப்பட்ட தலைப்பை வெளிப்படுத்துகின்றன). எப்படியிருந்தாலும், ஒப்பீட்டளவிலான தமிழ்ச் சமூகத்தின் செழிப்பும், நடுநிலையான ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து இருப்பதும், இந்தச் சந்தர்ப்பத்தில் பிரிவினைவாதக் கோரிக்கைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கவில்லை.
தொடரும்.
ஒலிவடிவில் கேட்க

About the Author
எஸ்.கே. விக்னேஸ்வரன்
எஸ்.கே. விக்னேஸ்வரன், எழுபதுகளின் பிற்கூறுகளில் சிறுகதை எழுத்தாளராக ஈழத்தின் எழுத்துத்துறைக்குள் அறிமுகமானவர். வடமராட்சியிலுள்ள அம்பன் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதுடன் மட்டுமன்றி, இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். தொண்ணூறுகளில் கொழும்பிலிருந்து வெளியான ‘சரிநிகர்’ வாரப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் கனடாவில் வெளியான ‘தீபம்’ வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர். சரிநிகரில் தொடராக வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு நூலான ‘குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற பெற்றோருக்கான வழிகாட்டிநூல் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்போது தாய்வீடு இதழில் அவரது ‘பதின்ம வயதினருக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சரிநிகரில் வெளிவந்து பாதியில் நின்றுபோன மொழிபெயர்ப்பு நூலான, ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற, மறைந்த மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களது நூல், அண்மையில் வெளியாகியுள்ளது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் (MBA) பட்டம்பெற்ற இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார்.
ஒற்றையாட்சி அரசின் தோற்றம் – பகுதி 3
May 19, 2025 | Ezhuna
பேராசிரியர் ஏ.ஜே வில்சன் அவர்கள் (1928 – 2000) உலகறிந்தத அரசியல், பொருளாதார, வரலாற்று அறிஞர்; எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் மருகர். பட்டப்படிப்பின் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்த வில்சன் அவர்கள், அங்கு அரசியல் விஞ்ஞானத்துறையை ஆரம்பித்து, பேராசிரியராகக் கடமையாற்றினார்; பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றினார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்களில் ஒன்றுதான் ‘The Break-up of Sri Lanka: The Sinhalese – Tamil Conflict’ எனும் நூல். இலங்கையின் அரசியல் வரலாற்றின் பல முக்கியமான பக்கங்களை விரிவாகப் பேசும் இந்த நூல், அரசியற் செயற்பாட்டாளர்களுக்கும் அரசியல் வரலாற்றாளர்களுக்கும் ஒரு கைநூலாகக் கொள்ளுமளவுக்கான முக்கியமான விவரங்களைத் தருவதாகவும், இலங்கை இனப்பிரச்சினையின் தீவிரத்தன்மைக்கான அடிப்படைக்காரணிகளைத் தெளிவாக, வரலாற்றுரீதியாக விவரிப்பதாகவும் அமைகின்றது. இந்த நூல் ‘உடைவுண்ட சிறீலங்கா: தமிழ் – சிங்களப் பிளவு’ எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு எழுநாவில் தொடராக வெளிவருகிறது.
ஆங்கில மூலம்: ஏ.ஜே. வில்சன்
வடக்கு மாகாணத் தமிழர்கள் பங்கேற்றிருந்தால், மாகாணத்திலிருந்து குறைந்தபட்சம் ஒரு தமிழராவது சபையில் இடம் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது என்றாலும் உண்மையில் இது கேள்விக்குரியது. ஏனென்றால், கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு தமிழ் இடங்களுக்கும் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதால், வாரியத்திற்குத் தேர்ந்தெடுக்க இரண்டு கிழக்கு மாகாணத் தமிழர்கள் இருந்தனர். ஆயினும் இந்த இருவரும் அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அமைச்சர்கள் குழுவில் இருந்த அந்த இரண்டு சிறுபான்மை இனப் பிரதிநிதிகளும், அரசியலமைப்பை மேலும் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற ஒருமித்த கோரிக்கையைக் காலனிகளுக்கான வெளியுறவுத்துறைச் செயலாளரிடம் முன்வைக்கும் முயற்சியில், தங்களது சிங்கள சகாக்களுடன் ஒத்துழைக்கவில்லை. எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் சீர்திருத்தப்பட்ட எந்தவொரு அரசியலமைப்பிலும், சிறுபான்மையினருக்குச் சரியான பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதையே இந்த இரண்டு அமைச்சர்களும் உறுதிப்படுத்த விரும்பினர். இத்தகைய மாறுபட்ட கருத்துகளைத் தவிர்க்க, 1936 பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஒரு பரந்த சிங்கள (Pan-sinhala) அமைச்சர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன்மூலம் அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக ஒரு செயற்கையான, பொதுக்கருத்துப் பெற்றுக்கொள்ளப்பட்டது. கூடவே இதன்மூலம், இந்த ‘அகன்ற சிங்கள’ சபையானது, கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட எல்லா வளங்களிலும், பொதுச் சேவைகளுக்கான நியமனங்களிலும் முடிந்தளவுக்குப் பெரும்பான்மை இனத்தவர்களுக்குகே அவை கிடைக்ககக்கூடிய விதத்திலான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. ஆயினும் வெள்ளையர்களுக்கோ, இந்த நடவடிக்கைகள் எவையும் பாரபட்சமானவை என்பதற்கான போதுமான சான்றுகளாகப் படவேயில்லை.
இருப்பினும், பிரச்சினை தொடர்பாக இன்னும் பல அடிப்படையான கேள்விகள் இருந்தன. சர்வஜன வாக்குரிமை, பிராந்தியரீதியாக அமைக்கப்பட்ட தேர்தற் தொகுதிகள் மூலமான சிங்கள இனப் பெரும்பான்மையினரின் ஆட்சி என்பவை அறிமுகப்படுத்தப்பட்டன. இனப் பெரும்பான்மையினரின் பிரதிநிதிகளிடம், சிறுபான்மை இனத்தினரைச் சமரசம் செய்து மீளிணைத்துக் கொள்ளும் அதேவேளை, தங்கள் சொந்தத் தொகுதியினரான பெரும்பான்மை மக்களை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்ற கேள்வி எழுந்தது. சர்வஜன வாக்குரிமை உருவாக்கப்பட்ட ஆண்டுகளில் இந்தப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை; அதற்குப் பதிலாக, 1505 ஆம் ஆண்டு முதல் மேற்கத்தியர்களான போர்த்துகீசியர்கள் வந்ததிலிருந்து காலனித்துவச் சக்திகளின் ஒடுக்குமுறை காரணமாகப் பாதிக்கப்பட்ட சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வைச் சரிசெய்யத் தாம் முயற்சிப்பதாகக் கூறி, சிங்களத் தலைவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வந்தனர். இரண்டு பெரிய இனக்குழுக்களின் உயரடுக்கினருக்கும் இடையேயான ‘சமூக- கூட்டுறவு’ தொடர்பாகச் செய்யப்படும் ஓர் ஆய்வு முயற்சியினூடாக, முன்னர் இருந்த உரசல்களையும், கசப்புகளையும் தடுத்திருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கவே செய்தது. ஆனால், மாறாக, ‘தனித்தனியான சுயாட்சி’யோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் பெரும்பான்மை இன சமூகத்தின் உயரடுக்கினரால் கடுமையாக எதிர்க்கப்படுவதே நடந்தது.
இனரீதியாக ஒரே இனத்தவர்களைக் கொண்ட குழுவை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைச் சிங்கள அமைச்சர்கள் குழு தெரிவித்தபோது, (அதன் நோக்கம் பற்றிய) சந்தேகமோ ஊகிக்கும் திறமையோ அற்ற ஆளுநரான சேர். அன்ரூ கல்டேகொட், அது தொடர்பாக எத்தகைய மறுத்துரைப்புமின்றி வாளாவிருந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம், இந்த அமைச்சர்கள் குழுவின் (1931-6) கோரிக்கைகளை, அவர்களிடையே எந்தவகையான உடன்பாடோ கருத்து ஒருமித்ததன்மையோ இல்லாத காரணத்தால், ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது என்று அவர்கள் கூறினர்.

சோல்பரி கமிஷன், ‘பெரும்பான்மையினரின் செயல், சிறுபான்மையினருக்குத் தீங்குவிளைவிக்கும் வகையில், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு கொள்கையை வெளிப்படுத்தியிருப்பதாகவே குறிப்பிடப்படலாம்’ என்று கூறியது. அதேநேரத்தில் கமிஷனின் உறுப்பினரான சேர். பிரடெரிக் ரீஸ், சில ஆண்டுகளுக்குப் பிறகு, “சிங்களவர்கள் ஆதிக்கத்தையே நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை சிறுபான்மையினர் இயல்பாகவே முன்னெப்போதையும்விட அதிகமாகவே புரிந்துகொண்டிருந்தனர்” என்று குறிப்பிட்டார். தவிரவும், டொன் ஸ்ரிபன் சேனநாயக்காவின் அரசியலமைப்பு ஆலோசகராகச் செயல்பட்ட சேர். ஐவர் ஜென்னிங்ஸ் எழுதினார்: “1936 ஆம் ஆண்டு சிங்களவர்களைக்கொண்ட ‘பரந்த-சிங்கள’ அமைச்சரவையைவிடக் குறைவான, அவர்களைத் திருப்திப்படுத்தும் எதையும் கற்பனை செய்வது கடினம். இவை அனைத்தும், எங்களுக்கு 1921 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் சிதைவுண்டபோது சேர். பொன்னம்பலம் ராமநாதன் வெளிப்படுத்திய கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் விடக்கூடிய நிலைமையைக் கடினமாக்கிவிட்டுள்ளது:

“இந்த [சிங்களத்] தலைவர்கள், அமைச்சகங்கள், அதிக சம்பளம், ஏராளமான ஆதரவுடனான சுயராச்சியம் என்பவற்றிற்கான சாத்தியங்களைக் கண்டபோது, சிறுபான்மைச் சமூகங்கள் போதுமான பிரதிநிதித்துவத்தையும், நிர்வாகத்தில் அவர்கள் பங்குபெற்றுக் கொள்வதையும் தவிர்க்கவே முயன்றனர்.”
1954 இல் சேர் பிரடெரிக் ரீஸ் துல்லியமாக இதுபற்றி இவ்வாறு எழுதினார்: “டொனமூர் ஆணைக்குழுவினர்கள் பிராந்தியப் பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவான ஒரு முடிவுக்கு வந்தததற்கான காரணம், ஒருவகையில் ஒரு பாரம்பரியக் கட்டமைப்பில் மேற்கத்திய யோசனையொன்றின் தாக்கம் எப்படி அமையும் என்பதைப்பற்றிய முழுமையான உணர்திறன் அவர்களிடம் இருக்கவில்லை என்பதாலாக இருக்கக்கூடும்.”
முன்மொழியப்பட்டிருந்த ஒற்றையாட்சி அரசியல்முறைமை காரணமாக ஏற்படக்கூடிய பரந்துபட்ட மக்கள் கிளர்ச்சிகளைச் (அல்லது எழுச்சிகளைச்) சுட்டிக்காட்டக்கூடிய ஏராளமான சான்றுகள் இருந்தபோதிலும், ஏகாதிபத்தியவாத விசாரணை நடுவர் ஒரு மிக இலேசான, ஒருவகை அலட்சியப்போக்கையே கடைப்பிடிக்க விரும்பினார். 1937 நவம்பர் மாதம், காலனிகளுக்கான வெளியுறவுச் செயலாளர் ஓசம்ஸ்பி கோர் (Ormsby Gore), ஆளுநர் கல்டெகட்டிடம், ஏனைய பலவிடயங்களுடன் சேர்த்து (1) மேலதிக விளக்கங்களுக்காக, ஆளுநருக்கான விசேட அதிகாரங்கள் (2) நிறைவேற்றுக்குழுக்களும், மாநில சபைகளும் (3) சிறுபான்மைச் சமூகங்களும் அவர்களின் பிரதிநிதித்துவமும் (4) வாக்குரிமை – ஆகியவற்றையும் கவனத்துக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நேரத்தில் கல்டேகொட் அவர்கள், ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களாலும் அவரது தமிழ் ஆதரவாளர்களாலும் தொடங்கப்பட்டிருந்த சமச்சீரான பிரதிநிதித்துவத்திற்கான (‘ஐம்பதுக்கு ஐம்பது’ என்று அழைக்கப்பட்டது – சட்டமன்றத்தில் 50 சதவீத இடங்கள் சிங்களப் பெரும்பான்மையினருக்கு ஒதுக்கப்படுவதையும், மீதமுள்ள 50 சதவீதம் சிறுபான்மை சமூகங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுவதையும் இது குறிக்கிறது.) பிரசாரத்தின் தாக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பெரும்பான்மைச் சிங்கள இன மக்களின் ‘கோபத்தை’க் கட்டுப்படுத்த இதுவே ஒரே வழி என்று பொன்னம்பலம் நம்பினார். ஆயினும், அவரது இந்தத் கோரிக்கையின் தர்க்கத்தால் கல்டேகொட்டோ அல்லது சோல்பரி ஆணைக் குழுவினர்களோ ஈர்க்கப்படவே இல்லை. கூடவே, இந்த அதிகாரத்தின் ஆணவத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற ஓர் உறுதியான வழியைப் பரிந்துரைப்பதற்கு இந்த ஏகாதிபத்திய நடுவர்களும் தயாராக இருக்கவில்லை. சுதந்திரங்களுக்கான சாசனம், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேணுவதற்கான அதிகபட்சப் பாதுகாப்பு போன்ற விடயங்கள் பயனுள்ள சோதனைகளாக இருந்திருக்க முடியும். ஆனால் கல்டேகொட்டும் சோல்பரி ஆணைக்குழுவினர்களும் வித்தியாசமாகச் சிந்தித்தார்கள். நிறைவேற்றுக்குழு அமைப்பை, சற்று மாற்றியமைக்கப்பட்ட ஓர் அமைச்சரவை அரசாங்கத்துக்கு மாற்றுமாறு, கல்டேகொட் பரிந்துரைத்தார். சமச்சீர்ப் பிரதிநிதித்துவத்திற்கான கோரிக்கைக்கு அவர் தனது முழுமையான எதிர்ப்பையும் தெரிவித்தார். ஆனால், டொனமூர் அரசியலமைப்புக்குப் பின்னான அரசியலமைப்பு உருவாக்குதலில் ஈடுபட்டவர்களுள், ஐம்பதுக்கு ஐம்பது என்ற கோரிக்கைக்குப் பதிலான ஒரு மாற்றாக சிறுபான்மையினது பிரதிநிதித்துவத்தில் ஒரு வகையான அதிகப்படுத்தல் (Weightage) என்ற யோசனையை முதன்முதலில் கொண்டுவந்தவரும் அவர்தான். கல்டேகொட்டின் இந்தப் பரிந்துரை பின்னர் அரசியலமைப்புத் திட்டத்தை வகுக்கும்படி அமைச்சர்கள் குழுவிடம் கேட்கப்பட்டபோது, சேர். ஐவர் ஜென்னிங்ஸ் அவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு மாற்றப்பட்டது. 1943 மே 26 அன்று மாட்சிமை தங்கியவரது (பிரித்தானிய மன்னர்) பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில், அது மாநிலச் சபையின் அதிகாரிகள், சபாநாயகர் அல்லது பிற தலைமை அதிகாரிகளைத் தவிர்த்து, சபையின் உறுப்பினர்களில் 75 சதவீத உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால், அந்தத் திட்டத்தைச் செயற்படுத்த முடியும் என்று பிரித்தானியா ஒப்புக்கொண்டது. இதற்கிடையில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும் மாநில கவுன்சிலின் தலைவருமான சேர். டொன் பரோன் ஜெயதிலகா 1943 இல் புது டில்லியில், இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியாகச் செல்வதற்காகப் பதவி விலகியபோது, ‘பரந்த-சிங்கள’ அமைச்சர்கள் குழுவில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக, இலங்கைத் தமிழரான (சேர். பொன்னம்பலம் அருணாசலத்தின் மகன்) அருணாசலம் மகாதேவா, முதன்மையான இலங்கைத் தமிழ் யாழ்ப்பாணத் தொகுதியின் மாநில சபை உறுப்பினராக, தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாதேவாவின் தெரிவை, அவர்களது மனமாற்றத்திற்கான ஒரு சான்றாகக் கொள்ளமுடியாது. இன ஒற்றுமை தொடர்பான குற்றச்சாட்டைத் திசை திருப்புவதிலேயே சபை ஆர்வமாக இருந்தது.
1943 மே 26 ஆம் திகதியப் பிரகடனத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரையறைகளுக்கு அமைய ஓர் அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் அமைச்சரவை இப்போது இறங்கியது. சேர். ஐவர் ஜென்னிங்ஸ் ஆலோசகராகவும், சட்ட வரைவாளராகவும் செயற்பட்டார். அமைச்சர்களது வரைவுத் திட்டம் (அமர்வு அறிக்கை – XIV, 1944) என்று அழைக்கப்பட்ட அந்த அறிக்கையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பொது ஊழியர்கள், நீதிபதிகள் போன்ற வேலைகளுக்கான ஆட்சேர்ப்பை மேற்கொள்ளவும், நியமிக்கவும் சுயாதீன அமைப்புகள் பொறுப்பாக இருக்கும். இவற்றின்மூலம், சிறுபான்மைச் சமூகங்களுக்கான பல்வேறு பாதுகாப்புகள், அரசியலமைப்பில் எந்தவொரு திருத்தத்தையும் இயற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் ஒரு கடுமையான அரசியலமைப்பு, இனச் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்திற்கான எடையை வழங்கும் பிரதிநிதித்துவத் திட்டம் ஆகியவை இந்த வரைபில் அடங்கியிருந்தன. 101 உறுப்பினர்களைக்கொண்ட இந்தச் சபையில் இலங்கைத் தமிழர்களுக்கு 12-14 இடங்களும், இந்தியத் தமிழர்களுக்கு 10-8 இடங்களும், முஸ்லிம்களுக்கு 6-4 இடங்களும் வழங்கப்பட்டிருக்கும்.
இருப்பினும், சுதந்திரம் அடைந்த சில மாதங்களுக்குள், டொன் ஸ்டீபன் சேனநாயக்காவின் அரசாங்கம் (1947-52) 1948 ஆம் ஆண்டுக் குடியுரிமைச் சட்டத்தையும், 1949 ஆம் ஆண்டு இந்திய மற்றும் பாகிஸ்தானிய குடியிருப்பாளர்கள் (குடியுரிமை) சட்டத்தையும் இயற்றியது. இவை இரண்டும் பிரதிநிதித்துவத்துக்கான நிலைமையை முற்றிலுமாக மாற்றியமைத்தன. சிங்கள அரசியல் விஞ்ஞானி ஐ.டி.எஸ். வீரவர்த்தன, ‘சிறுபான்மையினர்களும் குடியுரிமைச் சட்டமும்’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியர்களின் வாக்குரிமைப் பறிப்பு “அனைத்துச் சிறுபான்மையினருக்கும் மறுக்கப்பட்ட ஓர் உறுதிமொழியே” என்று சரியாகவே குறிப்பிட்டிருந்தார். தவிரவும், “சோல்பரி அரசியலமைப்பின் தார்மீக அடிப்படை ஒற்றையாட்சி அரசாக இருந்து வருகிறது.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வளர்ந்து வரும் அரசியற் சூழ்நிலை குறித்த வீரவர்த்தனவின் யதார்த்தமான மதிப்பீடு இதுவாக இருந்தபோதும், பிரதிநிதித்துவத்தில் அதிக முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பது சிறுபான்மைச் சமூகங்களுக்கு இன்னும் அதிக சிறப்பாக இருக்கும் என்று நம்பிய சோல்பரி ஆணையாளர்கள், உண்மையில் ஏமாற்றப்பட்டிருந்தனர். அவர்களின் அறிக்கையின் பத்தி 270 இல், அவர்கள் இவ்வாறு எழுதினார்கள்:
“இந்தத் திட்டத்தின் செயற்பாட்டை விளக்குவதற்குப் புள்ளிவிவரங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் எங்களுக்கு முன் வந்த பல சாட்சிகளின் உதவியுடன் நாங்கள் அதை ஆராய்ந்தோம். இதன் விளைவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 95 இடங்களில், 58 சிங்கள வேட்பாளர்கள், இலங்கைத் தமிழர்கள் 15, இந்தியத் தமிழர்கள் 14, முஸ்லிம்கள் 8 பிரதிநிதித்துவம் செல்லும் என்றும், 6 பரிந்துரைக்கப்பட்ட இடங்களுடன் 101 பேர் கொண்ட சபையில் 43 பேர்களைக் கொண்ட சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் இருக்கும் என்றும் அதன் பரிந்துரைப்பாளர்கள் மதிப்பிடுகின்றனர்”.
இத்தகைய திட்டத்தின்கீழ், சிறுபான்மையினரின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், சிறுபான்மை குழுக்கள் ஒன்றிணைந்து, இனப் பெரும்பான்மையினர் தங்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்கலாம் என்று நிச்சயமாக வாதிடலாம். சிறுபான்மையினர் ஒற்றுமையாகச் செயற்பட முடிவு செய்திருந்தால், சட்டமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது சிங்களப் பெரும்பான்மைக்குக் கடினமாக இருந்திருக்கும்.
இருப்பினும், இது நடக்கவில்லை. சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில், சிங்களவர்கள்சார்ந்த ‘தேசிய’ கட்சிகள் (சிங்களவர்களைப் பெரும்பான்மையகக் கொண்ட தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் என்று பொருள் கொள்கிறோம்.) இந்தியத் தமிழ் மக்களின் வாக்குரிமையைப் பறித்த பிறகு, அவர்களுக்குச் செல்லவிருந்த 8-14 இடங்களை இணைத்து, பின்னர் இனப் பெரும்பான்மையினருக்குச் சாதகமான வாய்ப்புகளை வழங்கும் சட்டத்தை இயற்றியதற்கான சான்றுகள் உள்ளன.
இது மட்டுமே ஒரு வழியாக இருக்கவில்லை. சோல்பரி கமிஷன், பிரதமரைக்கொண்ட முறைமையிலான ஓர் அரசாங்கத்தினை வழங்கியது. இதன் காரணமாக, ஒரு பிரதமர் அவரின்கீழ் இயங்கும் அமைச்சரவை இலாகாக்கள், பொதுச் சேவைகள், பொதுத் துறைகளுக்கான முக்கியமான நியமனங்கள் உள்ளிட்ட அனைத்தினதும் ஆதரவைப் பெறுகிறார். அவரே, கௌரவங்களும் பட்டங்களும் பதவிகளும் வழங்கும் ஒரு பேரூற்றாகவும் மாறுகிறார். சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த முன்னணி உறுப்பினர்களை, அரசாங்கப் பதவிகளில் இணைத்துக் கொள்வதற்கு இதைவிடச் சிறந்த வழி எதுவும் இல்லை.
இந்தியத் தமிழர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின்கீழ், சிறுபான்மை இனக்குழுக்களுக்கு இருந்த கூடுதல் இடங்களுக்கான ஏற்பாடு இல்லாமலாகிவிட்டது. இது அரசியலமைப்பில் இருந்த, இணக்கப்பாட்டுடன் கூடிய செயற்பாடுகள் மூலமாக உருவாகியிருக்கக்கூடிய, நல்லிணக்கச் சூழலையும் சீர்குலைவுக்கு உள்ளாக்கியிருந்தது. ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ (Westminster) மாதிரியைத் தழுவுவதில் தீவு வெற்றிபெறும் என்று சோல்பரி ஆணையர்கள் நம்பியதற்கு நான்கு காரணங்கள் இருந்தன:
1. அரசியலமைப்பின் பிரிவு 29 (2) ‘அமைச்சரின் வரைவுத் திட்டத்தி’லிருந்து எடுக்கப்பட்டு, சிறுபான்மையினருக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்க ஆணைக்குழுவினர்களால் மறுசீரமைக்கப்பட்டமை. பிரிவு 29 (2) இனை, ஒட்டுமொத்தமாக ஓர் உரிமைகள் குறித்த மசோதா எப்படி இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் பார்த்தால், அது முற்றிலுமே வலுவிழந்த ஒரு வடிவமாகும். இலங்கை நாடாளுமன்றம், வேறெந்த இன, மதக் குழுக்களுக்கும் இல்லாத வகையில், ஒரு குறிப்பிட்ட இன அல்லது மதக் குழுவிற்கு மட்டும் எதிராகவோ பாரபட்சமாகவோ சட்டம் இயற்றுவதைத் தடுத்தது. ஒரு சக்திவாய்ந்த பௌத்த அழுத்தக் குழுவான ‘பௌத்த ஜாதிக பலவேகய’, பிரிவு 29 (2) (d) இன் விதிமுறை, “ரோமன் கத்தோலிக்கர்களின் கருத்துகளைத் திருப்திசெய்வதற்காக இறுதி வரைவின்போது இலேசாகத் திருத்தப்பட்டது’ என்று குற்றம் சாட்டியது. இறுதியாக, பிரிவு 29 (2), 1972 இல் ஒரு புதிய குடியரசுக்கான சுதந்திரமான அரசியலமைப்பு இயற்றப்பட்டபோது நீக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பின் VI ஆம் அத்தியாயத்தில் ‘அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும்’ என்ற அறிக்கை அமுலுக்கு வந்தது. ஆனால் பிரிவு 18 (2) இல் உள்ள ஒரு முழுமையான அறிக்கையால் அதன் மதிப்பு இவ்வாறு குறைக்கப்பட்டது:
அடுத்துவந்த 1978 அரசியலமைப்புச்சட்டமும், உச்சநீதிமன்றத்திற்கு இதேபோன்ற அதிகாரங்களை வழங்கியது (பிரிவுகள் 120-6). கோட்பாட்டளவில், இந்த நீதிமன்றம் 1972-8 அரசியலமைப்பின் போதான நீதிமன்றத்தைவிட, அரசியல் தலையீட்டிலிருந்து அதிகளவு சுதந்திரமாக இருந்தது. இருப்பினும், அடிப்படையில் நீதிமன்றத்தின் முடிவுகள் விவாதத்திற்குத் உள்ளாக்கப்படக் கூடியவையாக இருந்ததன் விளைவாக, நாட்டின் உச்சநீதிமன்றம் அரசியல்ரீதியாக சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிவிட்டிருந்தது.
2. பெரும்பான்மைக் குழுவினரின் தலைவர், இனச் சிறுபான்மையினர்களுக்குச் சாதகமாகச் செயற்படுவார் என்று சோல்பரி ஆணைக்குழுவினர் நம்பிக்கை கொண்டிருந்தனர். உண்மையில், பிரிட்டன், டொன் ஸ்டீபன் சேனநாயக்காவுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளது என்று அவர்கள் நம்புவதற்கான காரணம் அவர்களிடம் இருந்தது. தவிரவும், அவர் இலங்கையில் பிரிட்டிஷ் நலன்களுக்கு ஒரு பாதுகாப்பான நண்பர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். தங்கள் அறிக்கையில் அவர்கள் இவ்வாறு எழுதினர்:
“மேற்கத்திய மாதிரிகளைப்போன்று இலங்கையில் கட்சிகள் உருவாகும்வரை, பெரும்பான்மைக்குழுவின் தலைவர், அரசாங்கத்தை அமைக்கும்போது, சிறுபான்மையினர்களின் பிரதிநிதிகளுக்கு அரசாங்க இலாகாக்களில் ஒரு பகுதியை வழங்குவார் என்றும், அந்தப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில், அவர்களைச் சேர்ந்த குழுவின் அல்லது குழுக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கலந்தாலோசித்துச் செயற்படுவார் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”
சேனநாயக்காவால்கூட தனது அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான பிரதிநிதிகளுக்காக இலங்கைத் தமிழர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்களைக் கொண்ட யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கு வெளியே உள்ள தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தனிநபர்களை (மன்னாரும், வவுனியாவும் – இந்த இரண்டு இலங்கைத் தமிழர்களும் ஒன்றில் விசித்திரமானவர்கள் அல்லது சுயநலவாதிகள்.) இலாகாக்களை ஏற்பதற்காக அவர் நியமித்தார். 1948 ஆம் ஆண்டில், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் சேவைகளைப் பெறுவதில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் 1956 முதல் இன்றுவரை எந்தவொரு இலங்கை அரசாங்கத்திலும், தமிழர் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இலங்கைத் தமிழர்கூட இருக்கவில்லை.1
3. இடதுசாரிக் கருத்துகளின் வளர்ச்சி ஏற்கனவே இன அல்லது மத ஒற்றுமைக்கான ஒரு கரைப்பானாக உள்ளது என்று சோல்பரி ஆணைக்குழுவினர்கள் நம்பினர். ஆயினும், அவர்களின் நம்பிக்கைகளை நனவாக்குவதற்கான எந்த வாய்ப்பும் கிட்டவில்லை. கட்சிகள், இன, மத அடிப்படையில் ஒன்றிணையும் முனைப்பிலேயே இருந்தன; ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி, தமிழ் கூட்டாட்சிக் கட்சி (இப்போதைய தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஓர் அங்கம்), தொழிற்சங்கங்களை அடிப்படையாகக்கொண்ட இந்தியத்தமிழ் அரசியல் அமைப்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவற்றுடன் இன அடிப்படையில் ‘வர்ணம் பூசப்பட்ட’ பல சிறிய கட்சிகள் என்றவகையில் இருந்தமை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இடதுசாரிக்கட்சிகள்கூட சிங்கள – பௌத்த சார்பு நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டிருந்தன; இவற்றில், ஒருகாலத்தில் இனப்பிரச்சினையில் தாராளவாத அணுகுமுறையைக் கொண்டிருந்த ட்ரொட்ஸ்கிச, கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட அடங்கும்.
4. இறுதியாக, பொதுச் சேவைகள் ஆணையகம், நீதித்துறைச் சேவைகள் ஆணையகம், இரண்டாவது சபையான செனட்சபை ஆகியவை, ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட விருப்புரிமை அதிகாரங்களைக்கொண்டு (உள் சுயராச்சியத்தின் வரையறுக்கப்பட்ட கட்டமைப்பில்), சுயாதீனமாக இயங்கும் என நம்பக்கூடிய நியமனங்களைக் கொண்டிருக்கும் என்று சோல்பரி ஆணைக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால், பின்னர் வைற்ஹோல் (Whitehall) இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து இருக்க வேண்டும் என்று முடிவு செய்ததன் காரணமாக, ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், ஒரு மாநிலத் தலைவராக ஆக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் தனது பிரதமரின் ஆலோசனையின்படி வழிநடத்தப்படும் ஒருவராகச் செயற்பட வேண்டியிருந்தது.
இதனால், சோல்பரி ஆணைக்குழுவினால் கற்பனை செய்யப்பட்ட ஒற்றையாட்சி அரசு, தமது தவறான வரலாற்று நியாயங்களின் அடிப்படையில், தமக்கானவை எனக்கருதிய உரிமைகளைக் கோரிநின்ற இனப் பெரும்பான்மையினரிடமிருந்து பெரும் அலைபோலத் திரண்டுவந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, அதன் பாதுகாப்புப் பொறுப்புகளிலிருந்து பறிக்கப்பட்டது. அதன் இடத்தில், முதலில் அமைச்சரவையின் சர்வாதிகாரமும் (1948-77) பின்னர் (ஜனாதிபதி ) நிறைவேற்றதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவரின் (1977) அதிகாரமும் என மாற்றப்பட்டமையானது, இலங்கைத் தமிழ் இனச் சிறுபான்மையினரை, அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பரிச்சயமற்றிருந்த ஒரு பெரும்பான்மை இனத்தவரின் தயவில் இருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டிருந்தது.
ஒற்றையாட்சி அரசின் வரலாற்றுரீதியான தோற்றங்கள், சமூக மட்டத்தில், மொழியின் ஒருமைப்பாட்டையும் மதப் பெரும்பான்மை வாதத்தையும் அங்கீகரிப்பதாகும். பிரிட்டனில் ஒற்றையாட்சி அரசு தோன்றியபோதும் இது நடந்தது. ஆனால் அந்தக்கருத்து காலப்போக்கில் மாற்றமடைந்துள்ளது. ஒற்றையாட்சி அரசு பல சந்தர்ப்பங்களில் மதச்சார்பற்ற கருத்தை ஏற்றுக்கொண்டு, ஒற்றைமொழியைக் கொண்டதாகவோ அல்லது அரசு அங்கீகரித்த ஒரு பெரும்பான்மை மொழிக்குப் பதிலாக, பன்மொழிப் பயிலுகையை ஏற்றுக்கொண்டதாகவோ இருக்கிறது. உண்மையில் ஒற்றையாட்சி அரசின் கருத்து சில சந்தர்ப்பங்களில் கூட்டாட்சி அரசுக்கான விடயங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது. அரசுகளது முயற்சிகளின் முதன்மையான குறிக்கோளாக இருப்பதெல்லாம் தேசிய ஒற்றுமையைப் பேணுவதேயாகும்.
ஏகாதிபத்திய ஆட்சியாளரின் வசதிக்காக, இலங்கை ஒரு மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி நிறுவனமாக மாற்றப்பட்டது. பல ‘இனங்களையும்’, மதங்களையும் கொண்ட அத்தகைய ஓர் அமைப்பை, ஒரு நடுநிலையான ஏகாதிபத்தியசக்தி போன்ற ஒரு வெளியாரின் மேற்பார்வையின்கீழ் ஒன்றாக வைத்திருக்க முடியும் என்றாலும், ஏகாதிபத்தியசக்தி பின்வாங்கியதன் பின்னாக, தனித்துவமான குழுக்களின் ‘இனம்’, மொழி, மதம் போன்ற பாரம்பரியக் கருத்துகள் மீண்டும் தங்களை உறுதிப்படுத்திக்கொள்ளத் தொடங்குகின்றன. வெளியேறும் சக்தியால் விட்டுச்செல்லப்பட்ட மேலோட்டமான தேசிய ஒற்றுமை பராமரிக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் ஆளுமை, அரசியல்ரீதியான இணக்கப்பாடு என்பவை அவசியம். ஆனால் அதற்குப் பதிலாக அதிகாரம் மாற்றப்பட்ட குழுவும் அதன் தலைவர்களும் சிங்கள மன்னர்களின் காலத்திற்குச் செல்ல விரும்பினர். நவீன ஒருமைப்படுத்தப்பட்ட பிரிட்டனை (இதற்கான) ஒரு மாதிரியாகப் பயன்படுத்தினர். இந்தக்கருத்தை வலுப்படுத்த வரலாற்றுரீதியான புராணங்களும் புனைவுகளும் மீண்டும் உருவாக்கப்பட்டன. இருப்பினும், ஆதிகாலம் பன்முகத்தன்மை கொண்டது. மேலும் சிங்கள – பௌத்த இனப் பெரும்பான்மை நவீன உடைகளில் கடந்த காலத்தைப் புதுப்பிக்க முயன்றதுபோலவே, தமிழ் சிறுபான்மையினரும் தம்பங்கிற்கு இலங்கையில் ஒரு காலத்தில் ஒரு தனித்தமிழ் இராச்சியம் இருந்ததை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினர்.
1947 பொதுத்தேர்தலுக்குப் பிறகு, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் காலனிகளுக்கான வெளியுறவுச் செயலாளருக்கு ஒரு தந்தி அனுப்பியது. வேறு பல விடயங்களுடன், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும் கோரிநிற்கும் ஒரு தந்தியாக அது இருந்தது. இந்தக் கோரிக்கையை, தமிழ் காங்கிரஸின் தேசியவாதப் பிரிவின் தலைவராக 1947 நவம்பரில், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மேலெழுந்து வந்தபோது மேலும் தெளிவாக எடுத்துரைத்திருந்தார். அதாவது, ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு வடிவம் ஒன்று உருவாக்கப்படும் போதுதான், தமிழ்ச் சமூகத்தின் கோரிக்கைகள் அதன்கீழ் நிறைவேற்றப்படுதல் சாத்தியமாகும் என்பதுதான் அது.

தமிழ் சமஷ்டிக் கட்சி (Tamil Federal Party) 1949 டிசம்பர் மாதம் முறைப்படி ஓர் அரசியற் கட்சியாகத் தொடங்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1951 ஏப்ரல் 13, 14, 15 ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடந்த அதன் முதலாவது தேசிய மாநாட்டில், முன்வைத்த கோரிக்கைகளில் அது மிகத்தெளிவாக இருந்தது. தனது முதல் தீர்மானத்தில், கனடா, இந்தியா, சுவிட்சர்லாந்து, சோவியத் யூனியன் ஆகிய வெற்றிகரமான ‘பன்முக, பன்மொழி நாடுகள்’ என்ற கவனத்தை மாநாடு ஈர்த்தது. அவை ஒரு கூட்டாட்சி அரசாங்க அமைப்பை நிறுவுவதன்மூலம் தங்கள் ‘சிக்கலான பிரச்சினைகளை’த் தீர்த்துக்கொண்டன. அதுபோலவே ‘தமிழ் மக்களுக்குரிய, சவாலுக்கு இடமில்லாத வகையிலான தேசிய உரிமையையும்’, சிங்கள மக்களுடனான கூட்டாட்சி ஒன்றியத்திற்கான அவர்களுக்குரிய உரிமையையும் விருப்பத்தையும்’ வலியுறுத்தச் செய்ததுடன், அதன்பின் இருபத்தேழு மாதங்களே வாழமுடிந்த டொன் ஸ்ரிபன் சேனநாயக்காவின் ஓர் ‘இறையாண்மை கொண்ட ஒற்றையாட்சி அரசு’ என்ற அவரது செல்வாக்குமிக்கதாக இருந்த கருத்தைச் சவால் செய்யவும், ஒரு புதிய கட்சி எழுந்தது.
அடிக்குறிப்பு
1. 1965-70 இல் பதவியேற்ற அரசாங்கத்தில், டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டணியில் இணைந்த தமிழ் சமஷ்டிக் கட்சி, உள்ளாட்சி அமைச்சராக பணியாற்ற எம். திருச்செல்வத்தை பரிந்துரைத்தது. திருச்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. அல்ல; அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக அவர் செனட்சபைக்கு நியமிக்கப்பட்டார்.
தொடரும்.
Leave a Reply
You must be logged in to post a comment.