எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் !

எஸ்.வி. வேணுகோபாலன்: உங்களுக்குள்ளான இலக்கியத் திறப்பு எந்த வயதில் நிகழ்ந்தது? விவரிப்புக்கு அப்பாற்பட்ட சொல்லொணாத நெருக்கடியின் ஊடே வாசிப்பையும், எழுத்தையும் எப்படி தேர்வு செய்தீர்கள்?
அ. முத்துலிங்கம்: அந்த வயதில் திறப்பு பற்றி யோசித்ததெல்லாம் கிடையாது. பட்டுப்பூச்சி எப்படி பட்டு நூலிழை செய்கிறது? யார் அதற்கு சொல்லித் தந்தார்கள். அப்படித்தான் படிக்க வேண்டும் என்றும், எழுத வேண்டும் என்றும் தோன்றிக் கொண்டே இருந்தது. மற்றவர்கள் கதைகளைப் படிப்பதிலும் பார்க்க ஒரு கதையை உண்டாக்கவே ஆசை. எனக்கு எட்டு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் ஓய்வில் போனபோது அவருக்குப் பிரியாவிடை விருந்து வைத்தார்கள். நான் ஒரு வெண்பா எழுதினேன். மூன்று சிறுவர்கள் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி அதில் தொடர்ந்து எழுதினோம். நாங்களே வாசித்தோம். வாசகரின் எண்ணிக்கை மூன்றைத் தாண்டவில்லை. பள்ளியில் படிக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது. கல்கி ஆசிரியர் எழுதிய ‘மகுடபதி’ நாவலைப் படித்துவிட்டு அவருக்கு அந்த நாவலில் காணப்பட்ட ஒரு பிழையை சுட்டிக்காட்டிக் கடிதம் எழுதினேன். ஆச்சரியம். கல்கி ஆசிரியரே தன் கையெழுத்தில் பிழையை ஏற்றுக்கொண்டு ஒரு தபால் கார்டில் கடிதம் எழுதினார். அந்தக் கார்டை பள்ளிக்கூடத்தில் இருந்த அத்தனை மாணவர்களும், ஆசிரியர்களும் அதிசயமாகப் படித்தார்கள். பின்னர் பள்ளிக்கூட சஞ்சிகையில் ஆசிரியராகக் கடமையாற்றி அதையே தொடர்ந்து பல்கலைக் கழகத்திலும் இலக்கிய மலருக்கு ஆசிரியரானேன். அப்படித் தான் மெல்ல மெல்ல இலக்கிய உலகத்துக்குள் நுழைந்தேன்.
எஸ்.வி. வேணுகோபாலன்: இள வயதிலேயே உங்களுக்கு புத்தகங்கள் படிக்கக் கிடைத்தனவா?
அ. முத்துலிங்கம்: நல்ல கேள்வி. என்னுடைய ஐயா இலக்கியத்துக்கு எதிரானவர். வீட்டிலே இரவலாக வாங்கிய நாவல்களோ, சஞ்சிகைகளோ அவர் கண்ணில் படக்கூடாது. நாவல்கள், படிக்கும் பிள்ளைகளைக் கெடுத்துவிடும் என்று அவர் தீவிரமாக நம்பினார். நான் பல மைல்கள் நடந்துபோய் யாராவது நண்பனிடம் கெஞ்சி வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் எழுதிய ‘திகம்பர சாமியார்’ நாவலை இரவல் வாங்கி வந்து ஐயாவுக்குத் தெரியாமல் கள்ளமாகப் படிப்பேன். எங்கள் வீட்டில் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு ஒரு புத்தகமும் படிக்கக் கிடைக்காது. ஐயா அத்தனை கறார். வீட்டிலிருந்த முக்கியமான ஒரேயொரு புத்தகம் பஞ்சாங்கம். நல்ல நாள் பார்ப்பதற்கும், தீய நாளைத் தவிர்ப்பதற்கும், பல்லி விழுந்த சகுனத்தை அறிவதற்கும் அது பயன்பட்டது. சிறு வயதில் நான் இலக்கியப் புத்தகத்தைக் கண்டதே கிடையாது. எனக்குச் சொந்தமாக ஒரு புத்தகமும் இல்லை. பல வருடங்களுக்குப் பின் என் முதல் சிறுகதை தொகுதி ‘அக்கா’ இந்தியாவில் அச்சடிக்கப்பட்டு, கள்ளத் தோணி மூலம் கடத்தப்பட்டு, என் கையில் 1964ல் கிடைத்தது. அப்பொழுது ஐயா உயிருடன் இருந்தார். ஆனால் அவருக்கு நான் சொந்தமாக ஓர் இலக்கியப் புத்தகத்தை உருவாக்கி விட்டேன் என்பது தெரியாது. ஐயாவின் கடுமையான சட்டங்களை நிராகரித்து அது எங்கள் வீட்டுக்குள் எப்படியோ நுழைந்துவிட்டது.
எஸ்.வி. வேணுகோபாலன்: இருட்டான ஓர் அறையை வர்ணிக்கையில், ‘அந்த அறையைக் கட்டிய காலத்திலிருந்து சேகரித்து வைத்திருந்த இருள்..’ என்று எழுதுகிறீர்கள்… உங்கள் பார்வைக் கூர்மையை அப்படியே எழுத்திலும் கூர்மையாகப் பதிய முடிகிறது….. இத்தகைய விவரிப்பின் ஊற்றுக் கண் எது?
அ. முத்துலிங்கம்: உவமைகள் எழுத்தை சுவாரசியமாக்கும். ஆகவே நான் நல்ல உவமைகளை பழைய இலக்கியங்களில் தேடுவேன். சங்க இலக்கியத்தில் ஓரிடத்தில் ‘வாழைப்பூ சிதறல் போல வளையல்கள் ஒடிந்துபோய் கிடந்தன’ என்று வரும். என்ன அழகான உவமை. திருக்குறளில் எனக்கு ஆகப் பிடித்த ஓர் உவமை உள்ளது. எப்படி அப்படி ஓர் உவமையைச் சொல்ல முடிந்தது என்ற என்னுடைய ஆச்சரியம் மாறவே இல்லை. ‘கண்டது மன்னும் ஒருநாள் அலர் மன்னும் திங்களைப் பாம்பு கொண்டற்று’. அவளை ஒருநாள் பார்த்தேன். அவ்வளவுதான். ஆனால் வதந்தி கணத்தில் உலகம் முழுவதும் பரவிவிட்டது. இந்தக் காலம் என்றால் ரேடியோவில் சொன்னதுபோல, டிவியில் வந்தது போல, முகப்புத்தகத்தில் போட்டதுபோல என்று சொல்லலாம். 2000 வருடங்களுக்கு முன்னர் என்ன உவமை சொல்லலாம். கிரகணம் வந்தால் ஒரே நேரத்தில் பலருக்கும் தெரிந்துவிடுவது போல என்று சொல்கிறார் திருவள்ளுவர்.
எஸ்.வி. வேணுகோபாலன்: உங்களது கட்டுரைகள் கூடச் சிறுகதை வாசிப்பு இன்பத்தை அளித்து விடுகின்றன… ‘உளியின் ஓசை திரைப்படத்தின் கல்லாய் இருந்தேன், சிலையாய் ஏன் வடித்தாய்’ என்ற பாடலை இசைஞானி இளையராஜா இசையில் அருமையாகப் பாடிய தன்யாவை கனடாவில் தற்செயலாகப் பார்த்து நடக்கும் உரையாடலின் பதிவு, வாசகரை மேற்கொண்டு சிந்தனையில் ஆழ்த்தும். இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?
அ. முத்துலிங்கம்: தமிழில் கட்டுரை எழுதுவதென்றால் அது வாசிப்பவர்களுக்குப் புரியாமல் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் மதிப்பாக இருக்கும். அப்படியொரு காலம் இருந்தது. கதை என்றால் அடுத்து என்ன வரும் என்று அறிவதற்காகப் படிப்பார்கள். கட்டுரைகளைப் படிப்பவர்கள் குறைவு. நோர்மன் மெய்லர் என்று ஓர் எழுத்தாளர் அமெரிக்காவில் இருந்தார். அவர் ஓர் உண்மைக் கதையை The Executioner’s Song என்ற தலைப்பில் எழுதினார். இதற்கு புலிட்சர் விருது புனைவுப் பிரிவில் கிடைத்தது. எல்லோரும் மறுப்பு எழுதினார்கள். எப்படி உண்மைக் கதைக்குப் புனைவுப் பரிசு கொடுக்கலாம். அப்படித்தான் புனைவுக் கட்டுரைகள் Creative Non Fiction முதன்முதலாக வெளிவர ஆரம்பித்தன. சுவாரசியம் இல்லாவிட்டால் அதை எழுதி என்ன பயன்? கட்டுரை எழுதத் தொடங்கு முன்னரே அதன் தொடக்கம், முடிவு என்னென்ன என்பதை உறுதி செய்து விடுவேன். சாதாரண விசயத்தையும் அதன் சொல்முறையால் எப்படி சுவாரசியமாக்கலாம் என்று யோசிப்பது முக்கியம். பெரியாழ்வார் ஓர் இடத்தில் சொல்வார் ‘நெய்க்குடத்தில் எறும்பு வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக ஏறுவதுபோல முதுமையில் நோய்கள் உடம்பில் ஏறும்’ இப்படிச் சுவாரசியமாக ஒரு விசயத்தைச் சொன்னால் அதை எப்படி மறக்க முடியும்? இசை மேதை இளையராஜாவின் இசையில் முதலில் பாடிய இலங்கைப் பெண்தான்யா என்பதை பலரும் மறந்துவிட்டார்கள். அந்தப் பெண்ணை ரொறொன்ரோ (டொரொண்டோ) வீதிகளில் தற்செயலாகச் சந்தித்தேன். அவர் கதையைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. அதை வாசகர்களுக்கும் கடத்துவதற் காகப் பதிவு செய்தேன்.
எஸ்.வி. வேணுகோபாலன்: உங்கள் எழுத்துக்கள் அதிகம் படிப்பவனாக என்னைக் கருதிய ஓர் இளைஞர், ‘ஆதிப்பண்பு’ படித்திருக்கிறீர்களா என்று எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கேட்டார். இல்லை என்று தலையாட்டினேன், ஒரு மாதிரி முறைத்துவிட்டு, ‘முதலில் வாசியுங்கள்’ என்று இணைப்பை அனுப்பி வைத்தார்…. அது ஒரு புள்ளிக் கோலம். எங்கெங்கோ தள்ளித் தள்ளி வைக்கும் புள்ளிகளை அநாயசமாக இணைத்து திரு அ முத்துலிங்கம் இழைத்து லயிக்க வைத்து விட்டீர்கள். மகாகவியின், ‘மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?’ என்பதன் எதிரொலி கனடாவில் ஒலிப்பதைக் கேட்க வியப்பாக இருக்கிறது. இப்போதைய மனித வாழ்க்கை ஆதிப் பண்பை இழந்து வருகிறதா?
அ. முத்துலிங்கம்: ஆதிப் பண்பு என்பது என் மருத்துவ நண்பர் ஒருவருக்கு நேர்ந்த உண்மைக் கதைதான். என்னை உலுக்கிய கதைகளில் ஒன்று. கதையை அப்படியே எழுதினால் அது பத்திரிகை கட்டுரை ஆகிவிடும். கற்பனை கலந்து அதற்கு ஒரு சிறுகதை உருவத்தை கொடுத்தேன். அப்பொழுதுதான் அது படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். கனடாவில் ஒரு பிரதேசமான நியூஃபவுண்ட்லாண்டில் கதை நடந்தது. கொடூரமான குளிர் பிரதேசம். பனிப்புயல் அடிக்கும் நேரத்தில் தன் காரில் 60 மைல் தூரத்தில் இருக்கும் தன் இடத்துக்குத் துணிந்து புறப்படுகிறார் என் மருத்துவ நண்பர். அடுத்த நாள் காலை அவர் செய்ய வேண்டிய சிசேரியன் அறுவை சிகிச்சை முக்கியமானது. பனிப்புயல் ஆரம்பமாகிவிட்டது. ரோடு எது, வெளி எது என்று தெரியவில்லை. சுற்றிலும் பனிக்காடு. கார் நழுவி 50 அடிக்குக் கீழே உறைந்துபோன ஓர் ஏரியின் மீது விழுகிறது. மருத்துவர் தலைகீழாகத் தொங்கியபடி மரணத்துக்குக் காத்திருக்கிறார். அந்தப் புயலில் ஒருவரும் வெளியே புறப்பட மாட்டார்கள். அவர் தன் நண்பனை நினைக்கிறார். கொழும்பிலே காத்திருக்கும் காதலியை நினைக்கிறார். அடுத்த நாள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கப் போகும் பெண்ணை நினைக்கிறார். அவர் 50 அடி கீழே கிடப்பதை ஒருவருமே அறிய முடியாது. கறுப்பு கோட் அணிந்த உருவம் ஒன்று கண்ணாடியைத் தட்டுகிறது. தலைகீழாகத் தொங்கும் இவர் கண்ணாடியை உருட்டி உருட்டி இறக்குகிறார். மனிதர் இவரை வெளியே இழுத்து எடுத்து 50 அடி உயரம் பனியிலே காவிப் போகிறார். பனிப்புயலைத் தாங்கும் அவருடைய விசேட வாகனத்தில் இவரை ஏற்றி சூடான கோப்பியைப் பருகக் கொடுக்கிறார். ஒரு வார்த்தை பேசாமல் அவரை மருத்துவமனை குடியிருப்பில் இறக்கிவிட்டுப் புறப்படுகிறார். ‘ஏன் என்னைக் காப்பாற்றினீர்கள். இந்த முயற்சியில் நீங்கள் இறந்திருக்கலாம் அல்லவா?’ என்று நண்பர் கேட்கிறார். அவர் சொல்கிறார் ‘கொலம்பஸ் வருவதற்கு 500 வருடங்களுக்கு முன்னரே நாங்கள் இங்கே வாழ்கிறோம். இந்தக் கடும் குளிரில் இன்றுவரை உயிர் தப்பி வாழும் காரணம் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதுதான். கார் மேல் கீழாகக் கவிழ்ந்து கிடந்ததால் வெளிச்சம் மேலே அடித்தது. விபத்து என்று தெரிந்தது. என்னால் அப்படியே விட்டுவிட்டுப் போக முடியாது. அதுதான் எங்கள் பண்பு. யோசிக்காமல் இறங்கி உங்களைக் காப்பாற்றினேன்.’ நண்பர் கேட்டார் ‘உங்கள் பெயரென்ன?’ அவர் சொன்னார். ‘என் பெயரைத் தெரிந்து என்ன பிரயோசனம். இந்தப் பிரதேசத்தின் ஆதிப் பண்பு முக்கியம். அதை நினைவில் வையுங்கள்.’
எஸ்.வி. வேணுகோபாலன்: அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் சமகால நடப்புகளை உங்களது கதைகள் அரசியல் நையாண்டியின் ஒரு போக்காகப் பேசுவதுண்டு. ‘புவி ஈர்ப்புக் கட்டணம்’ கதை அபாரமானது. எந்த அபத்தமான முறையிலும் குடிமக்களை ஆட்சியாளர்கள் சுரண்ட முடியும் என்பதைப் பேசும் இந்தக் கதையைச் சொல்லத் தூண்டிய விஷயத்தைச் சொல்ல முடியுமா?
அ. முத்துலிங்கம்: இது எனக்கு மிகவும் பிடித்த கதை. பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு எனக்கு புகழ் வாங்கித் தந்தது. இதை ஓர் உலகக் கதை என்று சொல்லலாம். படிக்கப் படிக்க சிரிப்பு வந்தபடியே இருக்கும். மேல் தோலை நீக்கினால் உள்ளே சிறுகதையின் உண்மையான உருவத்தைக் கண்டு பிடிக்கலாம். உலகம் முழுக்க பொதுவான பிரச்சினை ஒன்றை இந்தக் கதை கையாள்கிறது. நான் பல நாடுகளுக்குப் பயணம் செய்து அங்கெல்லாம் பணியாற்றியிருக்கிறேன். மக்களிடம் பலவித சேவைகளுக்கு பணம் அறவிடுகிறார்கள். அதிலே தர்மம் இல்லை. டிவி,தொலைபேசி, மின்சாரம், இணையம், வாயு, காற்று, தண்ணீர் என்று சகலத்து கும் வரி போட்டு மனிதரை வதைக்கிறார்கள். ஒரு நாட்டில் மனிதனிடம் புவியீர்ப்புக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அவன் வரியைக் கட்ட முடியாது என்று வாதிடுகிறான். அது இல்லாமல் என்னால் வாழ முடியும். நீங்கள் அதை வெட்டி விடுங்கள் என்று சவால் விடுகிறான். அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவைப் பார்த்து மனிதன் அலறிக்கொண்டு முழுக் காசையும் கட்டிவிடுகிறான். எழுதி முடித்ததும் நிறைவு தந்த கதை இது… உங்களது பணி நிமித்தம் பல்வேறு நாடுகளில் வசித்த அனுபவத்தின் பெருவெளியாக உங்களது சிறுகதைகள் விரிகின்றன. பாகிஸ்தானில் நிகழும் ஒரு கதையில் அயல் நாட்டுவாசி அங்கிருந்து வெளியேறும் நாளில் டாக்சி டிரைவர் மூலம் ஓர் அதிர்ச்சியான விஷயத்தை அறிய வருகிறான். முற்றிலும் புனைவா அந்தக் கதை?
எஸ்.வி. வேணுகோபாலன்: உஙகள் பணி நிமித்தம் பல்வேறு நாடுகளில் வசித்த அனுபவத்தின் பெருவெளியாக உங்களது சிறுகதைகள் விரிகின்றன. பாகிஸ்தானில் நிகழும் ஒரு கதையில் அயல்நாட்டுவாசி அங்கிருந்து வெளியேறும் நாளில் டாக்சி டிரைவர் மூலம் அதிர்ச்சியான விசயத்தை அறிய வருகிறான். முற்றிலும் புனைவா அந்தக் கதை ?
முத்துலிங்கம்: நான் பாகிஸ்தானில் போய் இறங்கிய பின்னர் வீடு தேட ஆரம்பித்தேன். எங்கே போனாலும் என் முகத்தைக் கண்டவுடன் வீட்டுக்காரர் இல்லை என்று சொல்லிவிடுவார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பல நாடுகளில் வேலை பார்த்திருக்கிறேன். இப்படியான அவமதிப்பு எனக்கு கிடைத்ததே இல்லை. பின்னர்தான் மர்மம் துலங்கியது. என்னை அவர்கள் இந்தியன் என்றே நினைத்தார்கள். இறுதியில் ஒரு வீடு எனக்கு நல்லாய்ப் பிடித்துக்கொண்டது. அந்தப் பகுதி ராணுவத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு மலைச் சரிவில் அழகுணர்ச்சியுடன் கட்டப்பட்டிருந்த வீடு. முன்னால் ஒரு சிற்றாறு ஓடி வீட்டிற்கு வசீகரத்தை தந்தது. எப்படியும் இந்த வீட்டை அடைய வேண்டும் என மனத்திற்குள் நினைத்தேன். முதல் முறையாக தரகர் என்னை ஐக்கிய நாடுகள் சபையில் வேலை பார்க்கிறார். உயர் பதவி வகிப்பவர். ஒரு வருட வாடகையை முன்னதாகவே உங்கள் வங்கியில் கட்டிவிடுவார் என்று அறிமுகப்படுத்தினார். இப்படி பேசிய பின்னர்தான் வீடு கிடைத்தது. நூதனமான வீடு. பூக்கள் நிறைந்த தோட்டத்தின் வழியாக உள்ளே நுழைய வேண்டும். மாடிக்குப் போனால் அங்கேயும் ஒரு பூந்தோட்டம் இருந்தது. இரண்டு காவல்காரர்கள் துப்பாக்கிகளுடன் வீட்டைக் காவல் காத்தார்கள். சலசலவென மெல்லிய ஓசையிடும் ஆறும், பறவைகளும், பூக்களும், மலையும் சூழ அமர்ந்து அருமையான இசை கேட்கலாம். ஒரேயொரு பிரச்சினை. வெளிநாட்டு நண்பர்கள் வீட்டுக்கு வருவார்கள்; உள்நாட்டு நண்பர்கள் வாசல் கேட் மட்டும் வருவார்கள், உள்ளே வர மாட்டார்கள். நாலு வருடங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை. மாற்றல் உத்தரவு வந்தது. வீட்டைக் காலிசெய்து சாமான்களை அனுப்பிவிட்டு வாடகைக் காரில் விமானத்துக்கு புறப்பட்டோம். வாடகைக் கார் சாரதி வீட்டைப் பார்த்து திகைத்து நின்றுவிட்டு ‘இங்கேயா வசித்தீர்கள்?’ என்று கேட்டார். எங்கள் வீட்டுக்குப் பின்புறத்தில் குன்றுபோல இருப்பது உண்மையில் ஆயுதக் கிடங்கு என்றார். அந்தக் கணத்தில் எனக்கு முழுச் சரித்திரமும் புரிந்தது. ஒரு பழைய நண்பருக்கு சமீபத்தில், பல வருடங்களுக்குப் பின்னர், மின்னஞ்சல் செய்து அந்த வீடு பற்றி விசாரித்தேன். அவர் கடந்த பல ஆண்டுகளாக வீடு காலியாகவே இருக்கிறது என்றார். நீண்ட முப்பது வருட காலத்தில் என்னைப்போல மூளை மந்தமான ஒரு மனிதரை வீட்டின் சொந்தக்காரரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எஸ்.வி. வேணுகோபாலன்: வெவ்வேறு சமூகங்களின் சடங்குகள், நம்பிக்கைகள் பற்றியெல்லாம் முழுமையாக உள்வாங்கி இருத்தி உரிய தருணங்களில் படைப்பில் கொண்டு வருகிறீர்கள். சிவபாக்கியம் அம்மா பாத்திரம் இடம் பெறும் ‘கடவுச் சொல்’ கதையைக் கண்ணீர் சிந்தாமல் கடக்க முடிவதில்லை எத்தனை முறை வாசிக்கிற போதும்… யூதர்கள் நம்பிக்கை குறித்த விஷயங்களை எப்படி கண்டடைந்தீர்கள்?
அ. முத்துலிங்கம்: யூதர்களின் சமூகம் பற்றியும், அவர்கள் வாழ்க்கை முறை பற்றியும் நிறையப் படித்திருக்கிறேன். ஆனால் அவர்களுடன் பழகவும், நட்பாக இருக்கவும் கனடா நாட்டிற்கு வந்த பின்னரே முடிந்தது. ஒருநாள் நாங்கள் பழகிய யூத தம்பதி தங்கள் வீட்டுக்கு விருந்து சாப்பிட அழைத்தனர். அவர்கள் அப்படி வேற்றின மக்களை வீடுகளுக்கு விருந்துக்கு அழைப்பதில்லை. எங்களால் நம்ப முடியவில்லை. நானும் மனைவியும் போனோம். மேசை மேலே நிறைய பதார்த்தங்கள் விருந்தாளிகளுக்குக் காத்திருந்தன. அன்றைய விருந்துக்கு இருபது பேர் வருவார்கள் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் மட்டும்தான் விருந்தாளிகள். திக்குமுக்காடிப் போனோம். அவர்களின் உணவுப் பழக்கங்கள் வித்தியாசமாக இருந்தன. எங்களுக்குத் தெரிந்த தமிழ் நண்பரின் மகள் ஒரு யூத குடும்பத்து ஆணை மணமுடித்திருந்தாள். தொடக்கத்தில் அவள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தெரியும். யூத குடும்பத்தில் உள்ள கட்டுப்பாடுகள், விரதங்கள், இவற்றையெல்லாம் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அந்தப் பெண் ஆரம்பத்தில் பல சிரமங்களை உணர்ந்தாலும் சமாளித்து வாழ்க்கையை நல்லபடியாக அமைத்திருந்தாள். சனிக்கிழமை வீடுகளில் சமைக்கக் கூடாது. ஆடு, மாடு, மான், மரை இறைச்சி சாப்பிடலாம். பன்றி ஆகாது. மீன் ஏற்கப்பட்டது, ஆனால் இறால், நண்டு, கணவாய் தடுக்கப்பட்டது. இப்படி பல சட்டங்கள். அவர்கள் பண்டிகைகளும் முக்கியம். யொம்கிப்பூர் பண்டிகை பாவமன்னிப்பு நாள். அன்று நடக்கும் சம்பவம்தான் கதை. இந்தக் கதை ஆங்கிலத்தில் Password என்று மொழிபெயர்க்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
எஸ்.வி. வேணுகோபாலன்: உங்கள் கதைகளில் முக்கிய பேசுபொருள் மீதான குறிப்புகள் சிறப்பிடம் வகிக்கின்றன. ‘சிம்மாசனம்’ சிறுகதையில் வரும் சோமபாலா பாத்திரம், மரங்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் விவரங்கள் அசாத்தியமானவை, இப்படியான குறிப்புகள் தொகுக்க எப்படி சாத்தியமாகிறது உங்களுக்கு?
அ. முத்துலிங்கம்: சிம்மாசனம் என்ற கதையும் உண்மை அனுபவத்திலிருந்து பிறந்ததுதான். ஆறுமாத காலமாக நான் இலங்கையில், ஹிந்தோட்ட என்னுமிடத்தில், ஒட்டுப்பலகை தொழிற்சாலையில் வேலை பார்த்தேன். என்னுடைய முதல் அனுபவம். என் வாழ்க்கையில் நான் அனுபவித்த உச்சமான மகிழ்ச்சிக் காலம் என்றும் சொல்லலாம்.
தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான சிங்கள தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள். ஒரேயொரு தமிழர் அங்கே வேலை பார்த்தார். அது நான்தான்.
பழைய மரங்களைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவை பற்றி அதிகம் தெரிந்தவன் சோமபாலா. ஆனால் அவனுக்குக் கிடைத்த தொழில் மரக்கழிவுகளைக் கூட்டி அள்ளிக் குப்பையில் போடுவதுதான். காரணம் அவன் கின்னர சாதி, ஆகக் கீழானது. அந்தத் தொழிற்சாலையின் அதிபராக வேலை பார்த்தவர் தேவ சாதி. பழைய அரசர்கள் எல்லாம் அந்தச் சாதிதான்.
சோமபாலாவுக்கு மரங்களை வெட்டித் தள்ளுவதும், பலகைகளாக மாற்றுவதும் பிடிக்காது. அதுவும் கலுமெதிரிய மரங்களை வெட்டினால் அழுதுவிடுவான். ஒரு காலத்தில் நூற்றுக்கணக்காக இந்த வகை மரங்களை வெட்டி வெட்டி இங்கிலாந்துக்கு அனுப்பினார்கள். அவற்றில் செய்த தளபாடங்களில் அமர்ந்து வெள்ளைக்காரர்கள் உணவருந்தினார்கள். விலைமதிக்க முடியாத மரங்கள் இவை. உலகத்திலே எங்குமே பார்க்க முடியாது. மினுக்கி மினுக்கி அதிலே முகம் பார்க்கலாம் என்று என்னிடம் புலம்புவான்.
தொழிற்சாலை மேலாளருக்கு ஓர் ஆசை. தன் முன்னோர்கள் ஆண்டதுபோல முடியாவிட்டாலும் சுலுமெதிரிய மரத்தில் ஒரு சிங்காசனம் செய்து அமரவேண்டும். அதைத் திறமாக செய்யக்கூடியவன் கின்னர சாதியைச் சேர்ந்த சோமபாலாதான். என்ன நடந்தது என்பதுதான் கதை.
‘பிள்ளை கடத்தல்காரன்’ சிறுகதை, கனடாவில் நிஜத்தில் நடந்தது என்று ஓர் உரையாடலில் குறிப்பிட்டு இருந்தீர்கள். சிக்கலும் நெருக்கடியுமான வாழ்க்கையை, பத்திரிகை செய்தியை கடந்து உள்ளே போய் விவரிப்பது ஒரு வலி மிகுந்த எழுத்தனுபவம் அல்லவா?
கனடாவில் திரும்பிய பக்கம் எல்லாம் எனக்கு ஒரு கதை கிடைக்கும். புதிதாக கனடாவுக்கு வந்த எனக்கு பார்த்தது எல்லாமே புதினம்தான். மூன்று வயது குழந்தையை பல்கடை அங்காடி ஒன்றில் தனியாக விளையாட விட்டுவிட்டு தாயார் கடைக்குள் போகிறார் சாமான்கள் வாங்குவதற்கு. தாயார் படித்த நாகரிகமான பெண். ஆனாலும் அவருக்கு, தான் செய்த காரியம் பெரிய தவறு என்று தெரியவில்லை. தனியாக நின்று தத்தளித்த குழந்தையை காவலாளியிடம் ஒப்படைக்கிறார் ஒரு தமிழ் அகதி.
தாயார் வருவதற்கு ஒரு மணி நேரம் தாமதமாகிறது. அதற்கிடையில் குழந்தைகள் நலன் காப்பு மையத்தைச் சேர்ந்த பெண்ணும், போலீஸ்காரரும் வந்துவிட்டார்கள். தாயார் தள்ளுவண்டியில் சாமான்களை நிறைத்துக்கொண்டு ஆடி அசைந்து வருகிறார். அவர் அகதியைப் பார்த்து வசை பாடுகிறார். ‘நீ என் குழந்தையை கடத்திவிட்டாய். உன்னைப் பிடிக்காமல் இந்த மூளை கெட்ட போலீசார் என்னைப் பிடிக்கிறார்கள்’ என்று திட்டுகிறார். கனடாவில் படித்து நல்ல வேலையில் இருக்கும் அந்தப் பெண்ணுக்கு கனடாவின் சட்டதிட்டங்கள் தெரியவில்லை.
தன் குழந்தையை காப்பாற்றிய அகதிக்கு நன்றி சொல்லவேண்டும் என்ற சிந்தனை அவருக்கு தோன்றவே இல்லை. போலீஸ்காரர் தாயாரைக் கைது செய்து போனார். குழந்தை சிரித்தபடி குழந்தைகள் நலன் காக்கும் பெண்ணுடன் போனது.
புலம் பெயர்ந்து கனடா வரும் போராளி இளைஞன் ஒருவன், பக்கத்து வீட்டில் ‘துவக்கு’ (துப்பாக்கி) இருக்குமா என்று தன்னுடைய தாயிடம் கேட்கிற இடம் வருகிறது உங்கள் கதை (நிலம் என்னும் நல்லாள்) ஒன்றில்! ‘பக்கத்து வீட்டில் ஏணி கடன் வாங்குவதுபோல் கேட்பாயா?’ என்று தாய் பதில் சொல்வதாக எழுதி இருப்பீர்கள். ஆவேசமிக்க உணர்வுகளோடு இயங்கும் அத்தகைய இளைஞர்கள் அயல் நாடுகளில் எப்படி பொருந்த முடிந்தது, வேறு விதமான வாழ்க்கைக்குள் அவர்கள் நுழைவது சாத்தியமா?
இந்தப் பையன் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே இயக்கத்தில் சேர்ந்துவிட்டான். பெற்றோர் எவ்வளவு மன்றாடியும் அவன் இயக்கத்தைவிட்டு வெளியே வரவில்லை. பெற்றோர் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார்கள். அங்கே பெரும் தொழிற்சாலை தொடங்கி கணவனும் மனைவியும் செல்வந்தருக்கான ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இறுதிப் போரில் மகன் கைது செய்யப்பட்டுச் சிறையில் கிடக்கிறான். பெற்றோரின் முயற்சியால் அவன் கனடாவுக்கு புலம் பெயர்கிறான். பெற்றோரின் செல்வச்செழிப்பான வாழ்க்கை அவனுக்கு அருவருப்பாக இருக்கிறது. எந்த நேரமும் எரிச்சல் வருகிறது. அவனால் அந்த வாழ்க்கையில் ஒட்டவே முடியவில்லை.
சொந்த அனுபவமாக உணரும்படி அமைந்து உங்களது ‘கடவுள் தொடங்கிய இடம்’ நாவலை எழுதி முடித்த மாத்திரத்தில் என்ன உணர்ந்தீர்கள்?
இந்த நாவல் சிறிய நாவல்தான் ஆனால் இதை எழுதுவதற்கு எனக்கு 10 வருடங்களுக்கு மேல் பிடித்தது. பொதுமக்களையும், ஊடகங்களையும், போராளிகளையும் நேர்காணல் செய்தேன். சிங்கள ராணுவத்திலிருந்து வெளியேறிய ஒருவரைக்கூட சந்தித்துத் தகவல்கள் திரட்டினேன். முக்கியமாக ஆட்களை நாட்டைவிட்டுக் கடக்க உதவி செய்த ஏஜெண்ட்கள் சிலரிடமும் பேசினேன். இந்தத் தரவுகளை வைத்து மூன்று நாவல்கள் எழுதலாம். நான் முக்கியமான சம்பவங்களைச் சுருக்கி ஒரு நாவலாகத் தந்திருக்கிறேன். இந்த நாவலை ஆங்கிலத்தில் Where God Began என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழிலும் பார்க்க ஆங்கிலத்திலே அதிக மதிப்புரைகள் வந்தன. அதிலே ஒரு வசனம் எனக்கு பிடித்துக்கொண்டது. நாவலை ஒரு வரியில் சுருக்கியதுபோல இருந்தது. It is a tale of unending state of unknowingness.
சில அகதிகள் சொன்ன வார்த்தைகள் என் மனதைவிட்டு மறையவே இல்லை. ‘அடுத்த நேர உணவு எங்கிருந்து வரும்? தெரியாது. அடுத்த நாள் உயிருடன் இருப்போமா? தெரியாது. ஆனால் எனக்கு ஒரு நாடு இல்லை என்ற வலி மனதை நிறைத்து இருக்கிறது.’
போரிலே இறந்துபோன தன் நண்பனை அவன் இன்னொரு அகதி சொன்னார்: ‘நேர்காணலில் இறந்து போனது தெரியாமல் ஒரு மைல் தூரம் அவர்கள் திருப்பித் திருப்பி கேட்கும் கேள்வி தோளிலே தூக்கி வந்ததை நினைக்கிறான். உன்னுடைய திறமை என்ன?’ நான் சொல்வேன் ‘என் திறமை உயிர் தப்புவது’. அது எத்தனை முக்கியமான திறமை. ஆனால் என்னை நேர்காணல் செய்தவர்களுக்கு அது புரிவதே இல்லை. நான் சொல்வேன் அவனுடைய காதலி பரிசாகத் தந்த ஓடாத கடிகாரத்தை அவள் நினைவாக வைத்திருக்கிறான் . அவள் தற்கொலைப் போராளி என்பது அவள் இறந்த பின்னர்தான் அவனுக்குத் தெரிகிறது. ஒரு நாள் தாய் அவனிடம் கேட்டார். ‘மகனே! சனி ஞாயிறு ஓய்வு நாட்களில் என்ன செய்வீர்கள்?’ அவனுக்கு தலை எல்லாம் பற்றி எரிந்தது. ‘சனி, ஞாயிறா? போராளிக்கா? வாரத்தில் 7 நாட்கள், 24 மணிநேரமும் போர்தான். இவர்களுக்குத் தெரியாதா? இவர்களுக்காகவா நான் உயிரைக் கொடுத்து இத்தனை போராடினேன்.’
அவனால் பெற்றோருடன் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஒரு போராளியின் வாழ்க்கையை உண்மையாகப் படம் பிடித்த கதை.
அகதி வாழ்க்கையின் சவால்களை, அவமதிப்புகளை, ஏக்கப் பெருமூச்சை, உயிர் தரிப்பின் அவஸ்தைகளை, உள்முரண்பாடுகளை, நம்பிக்கையற்ற காத்திருப்பை, துரோகத்தை, எதிர்பாராத ஒரு கணநேர இன்பத்தில் மறக்கத் துடிக்கும் தலைமுறைகளின் சோகத்தை வாசகரும் உங்களது எழுத்தின் சுடரை உற்றுக் கவனிக்கும்போது அந்த சிம்னியின் அடியில் மெல்லக் கரி பூசிக் கொண்டிருப்பதுபோல் துயரம் கவ்வி இருக்கிறது ஒவ்வொரு கதையிலும்… உங்களது அங்கத நடையை மீறி உங்களால் அந்த சோகத்தைக் கடத்த முடிந்துவிடுகிறது. மனிதர்களது பாடுகளைப் பேசியே கதையை நகர்த்தும் இயல்பு எப்படி உருக்கொண்டு விட்டது உங்களுக்குள் ?
சமீபத்தில் ஒரு நண்பர் வெளிநாட்டில் இருந்து கூடிய தபால் செலவில் 700 பக்க நாவல் ஒன்றை அனுப்பியிருந்தார். இருபது பக்கங்கள் படித்தேன். எழுதிய விசயத்தில் புதுமை கிடையாது. எழுத்திலும் புதுமை இல்லை. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ போன்ற பழைய காலத்து வசனங்கள்.ஒரு விசயத்தை புதுமையாகச் சொன்னாலே போதும். நாவலுக்குள் நுழைந்து விடலாம்.
‘யன்னலைத் திறந்து இருட்டை உள்ளே விட்டான்’ என்று ஒரு வசனத்தை சமீபத்தில் ஒரு சிறுகதையில் படித்தேன். வெளிச்சத்தை உள்ளே விடலாம், இருட்டை உள்ளே விடலாமா? புதுமையாகச் சிந்திக்கிறார். படித்தேன், சுவாரசியமாக இருந்தது. இன்னொருவர் இப்படி எழுதினார்: ‘பகல் முடியவில்லை, இரவு தொடங்கவில்லை.’ மாலை என்று எழுதலாமே. ஆனால் அவர் புதுமையாக சித்தரிக்கிறார்.
இன்னொரு புலம்பெயர்ந்த எழுத்தாளரிடம் கனடாவில் அவரை முதன்முதலாக ஆச்சரியப்படுத்தியது என்ன என்று கேட்டேன். அவர் குழந்தைப் பிள்ளையின் குதூகலத்துடன் சொன்னார்: ‘கனடா வங்கிகளில் பேனாக்களை கட்டி வைப்பதில்லை. கையெழுத்து போட்டுவிட்டு பேனாவை வீட்டுக்கு கொண்டுபோய்விடலாம்’ என்றார். அவர் இதுவரை 20 பேனாக்கள் சேர்த்துவிட்டாராம். கனடாவில் பார்க்க எத்தனையோ இருக்கிறது ஆனால் அவர் கண்கள் பார்த்தது இதுதான். இவர் நல்ல எழுத்தாளராக வர வாய்ப்பு இருக்கிறது; அல்லது நல்ல திருடனாக.
பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியும், நகைச்சுவை உணர்ச்சியும் இலகுவாகப் பரவி விரவி இருக்கும் எழுத்து மொழி இருந்தும், கவிதை ஆக்கத்தில் இறங்கியதாக அறியமுடியவில்லை. கவிதைகள் உலகிலும் சஞ்சரிப்பது உண்டா?
இது என்ன கேள்வி? எழுத்தும் பேப்பரும் கண்டுபிடிக்கும் முன்னரே கவிதை இருக்கிறது. என் வாழ்க்கையின் தொடக்கமே கவிதைதான். எட்டு வயதிலேயே வெண்பாவில் ஆரம்பித்து நிறைய எழுதியிருக்கிறேன். ஒன்றுமே பிரசுரமாகவில்லை.
என்னுடைய மகள் பற்றி நான் எழுதிய கவிதை கீழே வருகிறது.
சனிக்கிரகத்தில் 10759 நாட்கள் ஒரு வருடம்.
வியாழனில் 4331 நாட்கள் ஒரு வருடம்.
செவ்வாயில் 687 நாட்கள் ஒரு வருடம்.
பூமியில் 365 நாட்கள் ஒரு வருடம்.
வெள்ளியில் 227 நாட்கள் ஒரு வருடம்.
புதனில் 88 நாட்கள் ஒரு வருடம்.
ஓ, என் அருமை மகளே நீ விடுப்பில் வருவது மூன்றே மூன்று நாட்கள், அதுதான் எனக்கு, ஒரு வருடம்.
வாசிப்பு குறைந்துவிட்டது என்ற ரீதியில் முன்வைக்கப்படும் பொதுவான விமர்சனத்தை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
வாசிப்பு குறைந்துவிட்டதா? இதை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? புத்தகத்தில் படிப்பதுதான் படிப்பா? இப்போதெல்லாம் எப்படியெல்லாம் படிக்கிறார்கள் என்று தெரிந்தால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. அந்தக் காலத்தில் ஒரு புத்தகம் தேவை என்றால் அலையவேண்டும். ஒரு மாதம், மூன்று மாதம் காத்திருக்கவேண்டும்.
இப்பொழுதெல்லாம் அப்படியா? தாமதமில்லாமல் பெற முடிகிறது. புத்தகத்தைப் பற்றி மற்றைய நண்பர்களுடன் உடனுக்குடனே விவாதிக்கலாம்.
இளைய தலைமுறையினர் இணையத்தில் நிறையப் படிக்கிறார்கள். யூ டியூப்கள் இன்னொரு வழி. அருமையான உரைகளைக் கேட்டு அறிவை வளர்க்கிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் முனைவர் பட்டம் செய்யும் ஒரு மாணவி தான் தொடர்ந்து செவிமடுக்கும் ஒரு பேராசிரியருடைய உரையைப் பற்றிச் சொன்னார். இந்தப் பேராசிரியர் இலங்கையைச் சேர்ந்தவர். தன்னுடைய ஆராய்ச்சிக்கு அவருடைய உரை உதவுகிறது என்றார்.
என்னுடன் பேசும் மாணவர்கள் சிலர் தாங்கள் படித்த புத்தகங்கள் பற்றி தொடர்ந்து பேசுகிறார்கள். அவர்களுடைய வாசிப்பு ஆர்வம் எனக்கு புதிதாக இருக்கிறது. இதுதவிர, மொழிபெயர்ப்பு நூல்கள் நூற்றுக் கணக்கில் வெளியாகின்றன. அவற்றையெல்லாம் அவர்கள் படித்து அறிவை வளர்க்கிறார்கள். இன்னும் பல நூல்கள் வெளியாக வேண்டும். அவற்றை புதுப்புது வாசகர்கள் படிக்கவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். சிறைச்சாலையில் உள்ள நூலகத்தில் உங்கள் புத்தகத்தை வாசித்த ஒருவரைக் குறித்து எழுதி இருந்தீர்கள். உங்கள் அனுபவத்தில் வித்தியாசமான வாசகர்கள் என்று நீங்கள் உணர்ந்த தருணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
ஒரு நடுச்சாமம் எனக்கு தொலைபேசி அழைப்பு கொழும்பில் இருந்து வந்தது. அவர் அப்போதுதான் கொடூரமான பூசா சிறையில் சில வருடங்களைக் கழித்துவிட்டு வெளியே வந்திருந்தார். சிறையில் இருந்தபோது சிறை நூலகத்தில் என்னுடைய ஒரு நூலைப் படித்தார். ஆனால் அது முடிவதற்கிடையில் அவரை விடுதலை செய்துவிட்டார்கள். மீதிக் கதையை படிக்க வேண்டும், எங்கே புத்தகம் வாங்கலாம் என்றார். ‘எனக்கு தெரியாது’ என்றேன். அவருக்கு அது பிடிக்கவில்லை.’மிச்சத்தைப் படிக்க நான் மறுபடியும் சிறைக்குப் போகவேண்டுமா?’ என்று கோபமாகக் கேட்டார்.
பல விதமான வாசகர்களை நான் சந்தித்திருக்கிறேன். ஒரு மத்தியான வேளை கனடாவில் ஒரு கடையில் சாமான் வாங்கினேன். 60 வயதான ஒருவர் என்னை அணுகி நான் முத்துலிங்கமா என விசாரித்தார். பின்னர் அவர் காவிவந்த பிளாஸ்டிக் பையைத் திறந்து ஒரு கட்டுத் தாளை எடுத்துக் காட்டினார். என்னுடைய பல சிறுகதைகளை நகலெடுத்து ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தார். ‘எதற்காக இதைக் காவுகிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘எப்போதாவது உங்களைச் சந்தித்தால் காட்டுவதற்கு’ என்றார்.
இன்னொருவர். தமிழ் நாட்டில் வசிக்கும் தீவிர வாசகர்; எழுத்தாளர்; சிறந்த பேச்சாளர். அவரை கனடாவில் உரையாற்றுவதற்கு ஓர் இலக்கிய அமைப்பு அழைத்திருந்தது. அவர் சொன்னார்: ‘வருகிறேன். எனக்கு மூன்று நிபந்தனைகள். நயாகராவை காட்ட வேண்டும். சி.என். கோபுரத்தைக் காட்டவேண்டும். எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தைக் காட்டவேண்டும்.
ஹார்வர்டு தமிழ் இருக்கை நிறுவுவதில் உங்களது தனித்துவ பங்களிப்பு பாராட்டுக்கு உரியது. அதை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சியில் வெற்றியும் கிட்டியது. மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பிஎச்.டி. ஆய்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதா?
உலகின் முதல் இடத்தில் இருக்கும் பல்கலைக் கழகமான ஹார்வர்டில், உலகின் மூத்த மொழியான தமிழுக்கு இடமில்லை. அந்தக் குறையை நீக்க 2015ம் ஆண்டு அமெரிக்காவில் வதியும் மருத்துவர் விஜய் ஜானகிராமனும், மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தமும் ஆளுக்கு அரை மில்லியன் டாலர்கள் நல்கி ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்கள். ஆரம்பத்தில் சிரமம் இருந்தாலும் நிதி வேகமாக வளர ஆரம்பித்தது. தமிழ்நாடு அரசு தன் பங்காக 1.5 மில்லியன் டாலர்களை வழங்கியது. உலகத்தின் பல பாகங்களிலும் இருந்து பணம் திரட்டி தமிழ் இருக்கை நிறுவப்பட்டது. செப்டம்பர் 2022ல், தமிழ் பேராசிரியராக மார்த்தா ஆன் செல்பி நியமனமாகி மாணவர் தேர்வும் தொடங்கியது.
இங்கிலாந்தில் வசிக்கும் பிரகாஷ், சுஜா தம்பதியின் மகள் ஸ்ரீநிதி, புத்தகங்கள்தான் அவரின் உலகம். பிபிசி சானல் 4 நடாத்திய British Child Genius போட்டியில் ஸ்ரீநிதி முதல் பரிசுக்கான கோப்பையை வென்றார்.
சிறு வயதிலிருந்தே ஸ்ரீநிதிக்கு மொழிகள் கற்பதில் ஆர்வம். தானாகவே பிரெஞ்சு, இத்தாலியன், ஜெர்மன் மொழிகளைக் கற்றுக்கொண்டார். London School of Economicsல் தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பாடங்களை எடுத்து B.Sc.(Hons) முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். பின்னர். படிப்பை அதே துறையில் தொடராமல் ஹார்வர்டில் தமிழில் பிஎச்.டி. செய்வதற்கு விண்ணப்பித்து, இடமும் கிடைத்தது. ‘எதற்காக இந்த முடிவு?’ என்றேன்.
அம்மா தமிழ் படிக்கும் ஆசையைத் தூண்டினார். David Shulman எழுதிய Tamil: ‘A Biography’ நூலைப் படித்தேன். தமிழின் தொன்மையையும், ஆழத்தையும் அழகையும் உணர முடிந்தது. படிக்கப் படிக்கப் படிக்க எனக்குப் போதவில்லை. இனி தமிழ்தான் என் உலகம் என்று தீர்மானித்தேன்’ என்றார்..
பொலீவியா நாட்டில் ஓர் அரிய தாவரம் உண்டு. அதன் பெயர் ‘புயா ராய்மொண்டி’ இது நூறு வருடத்துக்கு ஒருமுறை பூக்கும். பச்சை, வெள்ளைப் பூக்கள் செம்மஞ்சள் காம்புகளில் 30 அடி உயரத்துக்கு நிமிர்ந்து நிற்கும். ஒருவர் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இந்தப் பூவை பார்க்க முடியும் என்று சொல்வார்கள்.
ஹார்வர்ட் தமிழ் இருக்கையில் முதலாக மலரும் மாணவிக்காக 388 வருடங்கள் உலகம் காத்திருக்க வேண்டியிருந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.