தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்’ – 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்’ – 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கி தீர்ப்பு

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்

8 ஏப்ரல் 2025

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. குறிப்பாக, ஆர்.என்.ரவி ஆளுநரான பிறகு அந்த மோதல் இன்னும் தீவிரமானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வருவதாக ஆளும் திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

அந்த வகையில், ஆளுநர் நிலுவையில் வைத்துள்ள, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

“10 மசோதாக்களையும் நிலுவையில் வைத்திருப்பது சட்டப்பிரிவு 200-க்கு எதிரானது மற்றும் பிழையானது. நீண்ட காலமாக மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. பஞ்சாப் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சரியல்ல. ஆகவே, உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களும் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று அறிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்

தமிழ்நாடு அரசு முன்வைத்த வாதம் என்ன?

வழக்கு விசாரணையின் போது, மாநில அரசின் சார்பில் வாதாடிய ராகேஷ் திவேதி சில விஷயங்களை முன்வைத்தார்.

“மத்திய அரசின் அதிகார வரம்பில் உள்ள விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்றினால் அதை நிராகரிப்பதற்கு ஆளுநருக்கு உரிமை உள்ளது. ஆனால், மாநில பட்டியலில் உள்ளவற்றுக்காக நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

சட்டமன்றத்தில் அனைத்தையும் ஆராய்ந்து மசோதா நிறைவேற்றப்படுவதாகக் கூறிய ராகேஷ் திவேதி, “ஆளுநர் நிராகரிக்க வேண்டும் என்பதற்காக மசோதா அனுப்பி வைக்கப்படுவதில்லை. ஆனால், எந்த விளக்கமும் கொடுக்காமல் நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல” என வாதிட்டார்.

“மாநில அமைச்சரவையின் அறிவுரைகளின் படியே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்” எனவும் தமிழ்நாடு அரசு தனது வாதத்தை முன்வைத்தது.

அப்போது நீதிபதிகள், “ஆளுநர் விளக்கம் அளிக்காமல் திருப்பி அனுப்பினால் அவர் மனதில் என்ன உள்ளது என எப்படி அறிந்து கொள்ள முடியும்?” எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், 2023 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு மசோதாக்கள் அனுப்பப்பட்ட பிறகு தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இரண்டு ஆண்டுகளாக மசோதாக்கள் ஆளுநரிடம் உள்ளதா? ஒப்புதல் அளிக்க முடியாது என அவர் எப்போது உணர்ந்தார்? ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா என்று நீதிபதிகள் கேட்டனர்.

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்

ஆளுநர் தரப்பு வாதங்கள் என்ன?

ஆளுநர் சார்பாக வாதிட்ட அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, “அனைத்து சூழ்நிலைகளிலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்றார்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, அதிருப்தியை தெரிவிப்பது என நான்கு அதிகாரங்கள் ஆளுநருக்கு உள்ளதாகவும் அவர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

‘மாநில அரசின் மசோதாக்களில் சில முரண்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் அரசும் ஆளுநரும் இணைந்து முடிவெடுக்கும் வகையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்’ எனவும் ஆளுநர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு ஆளுநரை மாநில அரசு கேட்கலாமே தவிர, இது எந்த வகையிலும் மாநில உரிமைகளைப் பறிப்பது அல்ல எனவும் ஆளுநர் தரப்பில் வாதிடப்பட்டது.

“சட்டவிதிகளுக்கு எதிராக இருந்தது”

துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் தலையீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஆளுநர் தரப்பு, துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் நடைமுறை, மத்திய சட்டவிதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக வாதிட்டது.

அதேநேரம், மத்திய சட்டவிதிமுறைகளுக்கு எதிராக மாநில அரசின் நடவடிக்கை இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “அரசுக்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். மசோதா விவகாரம் தொடர்பாக ஆளுநர் முட்டுக்கட்டை போட முடியாது” எனத் தெரிவித்தனர்.

ஆனால், ஆளுநர் தரப்போ, “மசோதாவை திருப்பி அனுப்பினாலோ அல்லது நிராகரித்தாலோ அதற்கான காரணத்தை தெளிவாக சுட்டிக் காட்ட வேண்டும் என்ற அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால், அதைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்பதாக இல்லை” என ஆளுநர் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

தீர்ப்பை வழங்கிய போது உச்ச நீதிமன்ற நீதிபதி பர்டிவாலா கூறுகையில், “தன்னிச்சையான அதிகாரம் (absolute veto) என்ற கருத்துக்கு அரசியலமைப்பில் இடமில்லை. ஆளுநருக்கு மசோதா அனுப்பப்படும் போது, அரசியலமைப்புப் பிரிவு 200-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

“ஆளுநர் நேர்மையுடன் செயல்படவில்லை. மசோதாக்கள் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பதற்கு ஆளுநருக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. பிரிவு 200-ன் கீழ் தன்னிச்சையான அதிகாரம் என்பது அனுமதிக்கப்பட முடியாதது. மாநில சட்டமன்றத்தால் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் போது அந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியாது என்பது பொது விதியாக உள்ளது.

இரண்டாவதாக அனுப்பப்பட்ட மசோதா முதலில் அனுப்பியதிலிருந்து வேறுபடும் போதுதான் இதற்கு விதிவிலக்கு உள்ளது. மசோதாக்களை நிறுத்தி வைக்கும் போதோ அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பும் போதோ ஆளுநர் அம்மசோதா மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். மசோதாக்களை நிறுத்தி வைப்பது அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்புவது என்பது, மாநில அரசின் முடிவுக்கு முரணானதாக இருந்தால், ஆளுநர் அதுகுறித்து அதிகபட்சம் மூன்று மாத காலத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.” என்று நீதிபதி பர்டிவாலா குறிப்பிட்டார்.

“ஆளுநர் ஒரு மாநில அரசின் நலன் மற்றும் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பது பொது விதியாக உள்ளது. (இந்திய அரசு சட்டம்) 1935-ன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு விருப்புரிமையும் அரசியலமைப்பை செயல்படுத்தும் போது இல்லாமல் ஆகிறது. ஆளுநர் ஒரு மாநிலத்தின் நலன் மற்றும் மாநில அரசின் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் கூறுகிறோம். சட்டப் பிரிவு 200ன்கீழ் அவருக்கு என தனிப்பட்ட விருப்புரிமை எதுவும் இருக்க முடியாது” என்றார் நீதிபதி பர்டிவாலா.

இந்த வழக்கில் பி.ஆர்.அம்பேத்கரின் வார்த்தைகளை நீதிபதி ஜே.டி.பர்டிவாலா மேற்கோள் காட்டியுள்ளார். ‘ஓர் அரசியல் அமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துகிறவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாக அமையும்’ என்ற வார்த்தைகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 மசோதாக்கள் என்ன?

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்

வழக்கின் பின்னணி

தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 22 மசோதாக்கள் மீது ஆளுநர் மாளிகை எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தது.

இதேபோல பஞ்சாப் மாநிலத்தில் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையிலான அரசுக்கும் இடையில் மோதல் நீடித்து வந்தது.

இதையடுத்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதற்குப் பிறகு, இதே போன்ற வழக்குகளை தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களும் தொடர்ந்தன. இந்த வழக்குகளை ஒட்டுமொத்தமாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ஆளுநர்கள் இதுபோலச் செயல்படுவது, “நெருப்போடு விளையாடுவதைப் போல” என்று 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்த வழக்கு அந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், அதற்கு முன்னதாக நவம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இருந்து 10 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

நவம்பர் 20ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது அந்த மசோதாக்கள் மீண்டும் ஆளுநர் மாளிகையிலேயே இருக்க வேண்டும் எனக் கருதிய தமிழ்நாடு அரசு உடனே சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி அந்த 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது.

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி ஸ்டாலின் கருத்து

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்ப்பு குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளதாகக் கூறினார். மேலும், “ஒரு முறை ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றினால், ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என அரசியல் சாசனத்தில் உள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த ஆளுநர் தனக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறி வந்தார்.” என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பைக்குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின்,” தமிழ்நாடு அரசின் வாதத்திலிருந்த நியாயத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்ட விரோதம் எனவும், ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாகவும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு போராடியது, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

About VELUPPILLAI 3345 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply