பௌத்த மத மறுமலர்ச்சியின் இரண்டாம் காலகட்டம் : 1883 – 1897

இலங்கையின் முதலாவது மதமறுமலர்ச்சிக் காலகட்டத்தில் குறிப்பிட்டுக் கூறவேண்டிய அம்சம் ஒன்றுள்ளது. தமிழர்கள் மத்தியில் உருவாகி இருந்த மதமறுமலர்ச்சி இயக்கம், ஆறுமுக நாவலர் என்று அறியப்படும், கந்தப்பிள்ளை ஆறுமுகப்பிள்ளை என்ற ஆளுமைமிக்க, ஒருவரின் பெயரோடு பின்னிப்பிணைந்தது. அது ஒரு மக்கள் இயக்கமாக அன்றி, ஆறுமுக நாவலரினதும் அவரது சகாக்களினதும் செயற்பாடுகளின் தொகுப்பாகவே அமைந்தது. ஆனால் சைவ மதத்துக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், தமிழுக்கும் வழங்கப்பட்டதால் மொழிசார்ந்த தேசியவாதம் இங்கு உருவானது. 1879 இல், அதாவது 1883 ஈஸ்டர் மதக்கலவரம் வெடிப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், ஆறுமுக நாவலர் காலமான பின்னர் அப்பணி ஏனையோரால் முன்னெடுக்கப்பட்டது. தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அளவுக்கு மொழியார்வமும் பற்றும் சிங்களவர் மத்தியில் வளர்ந்திருக்கவில்லை. அதற்கு மற்றும் சில காரணங்களும் இருந்தன. திருக்குறள் போல ஒரு நூலோ, கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காவியங்களோ சிங்களமொழியில் இருக்கவில்லை. அத்துடன் இலங்கைமீது மேற்கொள்ளப்பட்ட நிலப்பிரபுத்துவகால தென்னிந்தியப் படையெடுப்புகள் அரிதாகவே இடம்பெற்றன; தென்னிந்தியாவுடனான நல்லுறவே பிரதான போக்காக இருந்தது. ஆயினும் தென்னிந்திய அச்சுறுத்தல் ஏற்பட்டபோதெல்லாம், அவற்றுக்கு எதிராக பெளத்தமதத்தின் பெயராலும், சிங்கள இனத்தின் பெயராலும் சிங்களமக்கள் அணிதிரட்டப்பட்டதால் அதன்தாக்கம் மொழித்தாக்கத்தைவிட ஆழமாக வேரிட்டது. அதைவிட உலகில் இன்றுவரை நிலைத்துள்ள பழம்பெரும் மொழிகளில் மூத்தமொழியாகத் திகழும் தமிழ்மொழியைப் போலல்லாது சிங்களமொழி வளர்ச்சிபெற்ற மொழியாக மிகவும் பிற்காலத்தில்தான் உருவானது.

தமிழ்ப்பகுதிகளில் உருவான மத – மொழி மறுமலர்ச்சியின் மற்றுமொரு சிறப்பம்சம் யாதெனில், அது கிறிஸ்தவ மிஷனரிகளுக்கெதிரான செயற்பாடுகளில் தீவிரவடிவம் பெறாமல் மிதவாதத்தன்மை கொண்டதாக இருந்த அதேசமயம், தனது தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதிலும் வெற்றிபெற்றது. இதற்கு தமிழ்ப்பகுதியில் இயங்கிய கிறிஸ்தவ மிஷனரிகள் தமது மதத்தைப் பரப்புவதில் மென்மையான போக்கை கடைப்பிடித்ததும் ஒரு காரணம். 1828 ஆம் ஆண்டு மட்டக்களப்பு செமினரி தனது மாணவர்களுக்கு கந்தபுராணத்தைக் கேலிசெய்யும் விதத்தில் கற்பிக்க முடிவு செய்தபோது, அதற்கு எதிரான கிறிஸ்தவ விமர்சனம் முதற்தடவையாக தமிழ்ப்பகுதியில் வெளிப்பட்டது. பின்னர் நாளடைவில் அது அடங்கிப்போனது.

சிங்களப்பகுதிகளிலே கிறிஸ்தவமதம் பரவுவதைத் தடுப்பதில் மதமறுமலர்ச்சி பெரும் அளவு வெற்றி பெறவில்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் அவர்கள் மத்தியில் உருவான மேட்டுக்குடிகளில், அநேகமாக அனைவருமே கிறிஸ்தவமதத்தைத் தழுவினர். தமிழ்ப்பகுதிகள் அப்படி ஒரு போக்கு இருக்கவில்லை. அதுபோன்றே முஸ்லிம் பகுதியிலும் மேட்டுக்குடிகள் கிறிஸ்தவமயமாக ஆகவில்லை. தமிழ் – இஸ்லாமிய மதமறுமலர்ச்சி இயக்களுக்கிடையே மற்றுமொரு ஒற்றுமையும் இருந்தது. எப்படி தமிழ்ப்பகுதியில் ஆறுமுக நாவலருக்குப் பின்னால் மறுமலர்ச்சி நடவடிக்கை மையம் கொண்டிருந்ததோ, அதேபோல முஸ்லிம்கள் மத்தியிலே முஹம்மது காசிம் சித்திலெப்பை என்ற பெயரைக்கொண்ட சித்திலெப்பை என்பவரை மையமாகக் கொண்டுதான் இஸ்லாமிய மதமறுமலர்ச்சி இயக்கம் உருவானது. இதனைப்போன்று அனைத்துச் சிங்களவர்களையும் ஒன்றிணைக்ககூடிய ஒரு தலைமை இக்காலத்தில் சிங்களப்பகுதியில் அப்போது உருவாகியிருக்கவில்லை.

ஆயினும் பெளத்த மதமறுமலர்ச்சியின் இரண்டாவது காலகட்டம் சில தனிநபர்களை மையமாகக்கொண்டு மக்கள் அடித்தளம் கொண்ட இயக்கமாகப் பரிணமித்தது. பௌத்த மதமறுமலர்ச்சியின் இரண்டாவது காலகட்டம் கேர்ணல் ஹென்றி ஸ்டீல் ஒல்கோட், மெடம் பிளாவட்ஸ்கி, பிற்காலத்தில் அநாகரிக தர்மபால ஆகிய மூன்று ஆளுமைகளைச் சுற்றியே சுழன்றது. இவர்களுள் ஒல்கோட் வகித்த பாத்திரம் முக்கியமானது.

ஆவிகளின் உலகத் தேடலில் பௌத்த மதத்தில் சங்கமித்த அமெரிக்கர்: கேர்ணல் ஹென்றி ஸ்டீல் ஒல்கோட் (Col. Henry Steel Olcott)

1873 ஆம் ஆண்டு நடைபெற்று பிரசித்திபெற்ற பாணந்துறை விவாதம் – அப்போது ஆவிகள்பற்றியும், அப்பாற்பட்ட சக்திகள்பற்றியும், ஆன்மீகம்பற்றியும் அறியமுடியாத உண்மைகளைத்தேடிக் குழம்பிக்கொண்டிருந்த அமெரிக்கரான – கேர்ணல் ஒல்கோட்டின் கவனத்தைக் கவர்ந்தது. வண. ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல தேரர் உட்பட பல முக்கிய பௌத்த துறவிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட விரிவான கடிதப்பரிமாற்றமே அவரை பௌத்தமதம் தொடர்பாக விரிவாக வாசிக்கத்தூண்டியது. இதன்விளைவாகவே அவர் பௌத்த மதத்தைத் தழுவினார்.

கேர்ணல் ஹென்றி ஸ்டீல் ஒல்கோட் 1832 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி அமெரிக்காவின் நியூஜெர்சியிலுள்ள ஆரஞ் (Orange) நகரில் பிறந்தார். புத்தமதத்திற்கு முறையாக மாறிய முதலாவது ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல அமெரிக்கர் இவரே.

அவர் ஒரு பத்திரிகையாளராகவும், விவசாய நிபுணராகவும், காப்பீட்டு (Insurance) வழக்கறிஞராகவும் இருந்தபோதிலும், அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது ஓர் இராணுவவீரனாக இணைந்து கேர்ணலாகப் பதவி உயர்த்தப்பட்டார். பின்னர் முன்கூட்டியே இராணுவசேவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதனையடுத்து பல உயர்மட்டக்குழுக்களில் இடம்பெற்றார். இராணுவ விநியோகங்களில் நிகழ்ந்த ஊழல்குறித்து விசாரித்த குழுக்களிலும், ஆபிரகாம் லிங்கனின் படுகொலையை ஆராய்ந்த குழு உட்பட பல முக்கியமான அரசாங்கக்குழுக்களிலும் அவர் பணியாற்றினார்.

1874 ஆம் ஆண்டில், அவரது வாழ்க்கை ஒரு திருப்பத்தை எடுத்தது. அவ்வாண்டு முதல் அவர் ஆன்மீகத்தில் ஆர்வம்காட்டத் தொடங்கினர். அதீதப் பழங்கால நம்பிக்கையுடன் (Pristine Past), மாயவாதம் (Mysticism), அப்பாற்பட்ட தெய்வீகசக்தி போன்ற ஆவிகளுடன் தொடர்பு கொள்வதற்கான தேடலிலும் (Communion With Spirits And The Paranormal), அமானுஷ்ய சக்தியைப்பெறும் முயற்சியிலும் இறங்கினார். இந்த மாற்றத்தினை ஊக்குவிக்கும் வகையில், அதேவிதமான சிந்தனைகொண்ட ஹெலனா பிளாவட்ஸ்கியுடன் (Helena Blavatsky) ஏற்பட்ட தற்செயலான சந்திப்பு அமைந்தது. ரஷ்யரான பிளாவட்ஸ்கியைச் சந்தித்தபிறகு, புனித ஆத்மாக்கள் பற்றிய அவரது நம்பிக்கை வலுப்பெற்றது. துறவியான பிளாவட்ஸ்கி, தன்னிடம் மந்திரசக்தி இருப்பதாகவும் தான் ஆவிகளுடன் உரையாடுவதாகவும், கேர்ணல் ஒல்கோட் உட்பட இதேகருத்தைக் கொண்டிருந்த பலரையும் நம்பச்செய்தார்; தானும் அவ்வாறே நம்பினார். இவரை நம்பிவந்த பலரின் நோய்கள் ‘புனித ஆவிகளின்’ அருளால் குணமாகின எனப் பரவலாகப்பேசப்பட்டது. இவரது இயற்பெயர் ஹெலினா ஹான் (Helena Hahn). ஹெலினா, 17 வயதில், ரஷ்ய இராணுவ அதிகாரியும் மாகாணத் துணை ஆளுநருமான நிகிஃபோர் வி. பிளாவட்ஸ்கியை (Nikifor V. Blavatsky) மணந்தார். ஆனால் சில மாதங்களுக்குப்பிறகு அவர்கள் பிரிந்தனர். அதன்பின்னர் ஹெலினா பிளாவட்ஸ்கி (Helena Blavatsky) என்ற பெயராலேயே இவர் அறியப்பட்டார்.

கேர்ணல் ஒல்கோட்டும் இவரை நம்பினார். செப்டம்பர் 1874 இல், வெர்மான்ட் பண்ணையில் (Vermont Farm) தொடர்ச்சியாக ஆவிகள் தோன்றுவதாகக்கூறப்பட, ஒல்கோட் அங்குசென்று அதுபற்றி ஆராய்ந்து கொண்டிருந்தபோது, அவர் ஹெலினாவைச் சந்தித்தார். அப்பெண் மாற்றுலகவாசிகளுடன் மாய உரையாடல்கள் நடத்துவதைப்பற்றி பத்திரிகைகளுக்கு ஒல்கோட் பல கட்டுரைகள் எழுதினார். இக்கட்டுரைகள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. இத்தகைய அதீதசக்திகளின் நம்பிக்கைகளுக்கும் மதங்களுக்கும் இடையே தொடர்புகள் இருந்தன. ஆன்மீகத்துக்கும் அதீதசக்திகளின் நம்பிக்கைகளுக்கும் இடையே ஒரு மெல்லிய இடைவெளியே இருந்ததால் கேர்ணல் ஒல்கோட், பிளாவட்ஸ்கி ஆகிய இருவரும் ஆன்மீகத்தேடலிலும் ஈடுபட்டனர். இவர்களை கீழைத்தேச இந்துமதமும், பௌத்தமதமும் கவர்ந்தன. இருவரும் அனைத்து மதங்களின் ஒற்றுமையிலும், ஒவ்வொருவரும் தமது அடுத்தபிறவிக்கு தனித்தனியாகவே பாடுபடவேண்டும் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர். எனவே இவர்கள் சந்தித்த ஒரு வருடத்திற்குள், இருவரும் தங்கள் பொதுவான கண்ணோட்டத்தை ஒரு கூட்டு முயற்சியாக மாற்றினர். 17 நவம்பர் 1875 இல், நியூயோர்க்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 16 பேர் முன்னிலையில் தியோசொபிகல் சொசைட்டியை (Theosophical Society) நிறுவினர்.

1879 ஆம் ஆண்டு எட்வின் அர்னால்ட் (Edwin Arnold) புத்தரைப்பற்றி எழுதிய ‘ஆசியாவின் ஒளி’ (The Light Of Asia) என்ற நூலை வசித்தபிறகு, புத்தமதத்தின் மீதான அவர்களது ஆர்வம் அதிகரித்தது. ஆரம்பத்திலிருந்தே, தியோசொபிகல் சொசைட்டியில் ஆவிகள், ஜோசியம், மறுவுலகம், மாயவாதம் ஆகியவற்றில் நம்பிக்கைகொண்ட ஒரு குழு இருந்தது. அதன் அணிகள் பல ஆண்டுகளுக்குள் வளர்ந்து அதனை ஓர் இயக்கமாக மாற்றியது. இதன் தொடர்பெல்லை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் விரிந்தது. 1879 இன் தொடக்கத்தில் ஒல்கோட்டும், பிளாவட்ஸ்கியும் கீழைத்தேசமதங்கள் பற்றிய பண்டைக்கால ஞானத்தைத்தேடி இந்தியாவின் சென்னை, அடையாறுப்பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். 1882 ஆம் ஆண்டு சென்னையின் அடையாறில் உள்ள தியோசொபிகல் சொசைட்டியின் நிரந்தரத் தலைமையகத்தை நிறுவினர். இவர்களோடு அன்னி பெசன்ட்டு அம்மையார் (Annie Besant) இணைந்தமை இவ்வமைப்புக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. வாரணாசியில் (பனாரஸ்) மத்திய இந்துக் கல்லூரியை நிறுவுவதில் அன்னி பெசன்ட்டுக்கு கேர்ணல் ஒல்கோட் உதவினார்.

கேர்ணல் ஒல்கோட்டும் பிளாவட்ஸ்கியும் இந்தியாவில் ஒரே மாதிரியான பாதையைப் பின்பற்றவில்லை என்றாலும், சில பொதுவான நம்பிக்கைகள் இருவரையும் இணைத்தன. பிளாவட்ஸ்கியைச் சுற்றி ஆவிகளை நம்பும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்தது. இமயமலையில் வசிக்கும் ஆவிகளோடு தான் கடிதத்தொடர்பு கொள்வதாக பிளாவட்ஸ்கி அவர்களை நம்பவைத்தார். ஆனால் கேர்ணல் ஒல்கோட் படிப்படியாக தனது பழைய சுயமாக மாறினார். பல்வேறு சீர்திருத்தப்பணிகளில் ஈடுபட்டார். கல்வியின்மூலமே மக்களின் வாழ்நிலையை மேம்படுத்தி, பௌத்தமதத்தை வளர்க்க முடியும் என நம்பினார். அப்போது இலங்கையில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும் பௌத்தமதப் பீடங்களுக்குமிடையே யாருடைய மதம் உயர்வானது என்ற தர்க்கம் சூடேறிக்கொண்டிருந்தது. பௌத்தமதப் பீடங்களின் கரத்தை வலுப்படுத்துவதையும், தமது தியோசொபிகல் சொசைட்டியை இலங்கையில் நிறுவுவதையும் நோக்கமாகக்கொண்டு மே 16, 1880 ஆம் திகதி கேர்ணல் ஒல்கோட்டும், பிளாவட்ஸ்கியும் கொழும்புக்கு வந்தனர். அவர்களுக்கு அரச வரவேற்பு அளிக்கப்பட்டது. துறைமுகத்தில் கூடியிருந்த ஒரு பெரிய மக்கள் கூட்டம் சாது! சாது! என்று கோஷமிட்டு அவர்களை வரவேற்றது. மே 25 ஆம் திகதி காலியிலுள்ள விஜயானந்த மடாலயத்தில் இவர்களுக்கு சிறப்புவரவேற்பு அளிக்கப்பட்டது. ஒல்கோட்டும், பிளாவட்ஸ்கியும் புத்தர்சிலைக்கு முன்பாக பௌத்தர்களாக மாறினர். அவ்வாண்டு ஜூலை வரை, வண. குணானந்த தேரர் மற்றும் வண. ஹிக்கடுவே சுமங்கல தேரர் போன்ற பல துறவிகளையும், பல முக்கியப் பிரமுகர்களையும் கேர்ணல் ஒல்கோட் சந்தித்தார்.

கேர்ணல் ஒல்கோட், 1880 ஜூன் 17 இல், தனது முதல் வருகையின் போது, பௌத்த தியோசொபிகல் சொசைட்டியை (Buddhist Theosophical Society) நிறுவினார். இது புத்தமதச் சிறுவர்களுக்கு ஆங்கிலமொழி மூலம் கல்வி கற்பிப்பதற்காகப் பிரசாரம் செய்தது. அக்காலகட்டத்தில் மிஷனரிப்பள்ளிகளில் கிறிஸ்தவ மாணவர்கள் மாத்திரமே ஆங்கிலவழியில் கல்விகற்கும் வாய்ப்பைப்பெற்றனர். அவற்றில் பெரும்பாலானவை கிறிஸ்தவ மதகுருமார்களால் நடத்தப்பட்டன.

1880 ஆம் ஆண்டு, 16 வயதுச் சிறுவனாக இருந்தபோது, அநகாரிக தர்மபால ஆகிய டொன் டேவிட் ஹேவவிதாரனவுக்கு, கேர்ணல் ஒல்கோட்டையும், மேடம் பிளாவட்ஸ்கியையும் சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது. அந்தச் சந்திப்பின்விளைவாக, மத வாழ்க்கைக்கு அவர் தன்னை அர்ப்பணிக்கத் தொடங்கினர். 1884 ஆம் ஆண்டு, அவரது தந்தையின் விருப்பத்திற்குமாறாக, மேடம் பிளாவட்ஸ்கியுடன் இந்தியாவின் அடையாறுக்குச் சென்றார். பின்னர் இந்தியாவிலிருந்து திரும்பிய அவர் தியோசொபிகல் சொசைட்டியின் தலைமையகத்தில் வசித்துவந்தார். கேர்ணல் ஒல்கோட்டுடன் பௌத்தமதப் பிரசாரத்துக்குச் செல்வது, அவரது உரையை மொழிபெயர்ப்பது போன்ற பணிகளில் அநகாரிக தர்மபால ஆர்வத்தோடு ஈடுபட்டார்.

1881 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒல்கோட் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்தார். அப்போது வண. குணானந்த தேரருடன் சேர்ந்து, அவர் தானே வடிவமைத்த மாட்டுவண்டியில் எட்டு மாதங்கள் மேற்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவரது மாட்டுவண்டியைப் பார்க்கவும், அவரது கிறிஸ்தவ எதிர்ப்புப் பேச்சுகளைக் கேட்கவும் கிராமவாசிகள் திரண்டனர். ஒரு வெள்ளைக்காரர் தங்களுக்கு ஆதரவாக, பௌத்தமதத்தை ஆதரித்து கிறிஸ்தவமதத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்வது பௌத்தர்களைப் பிரமிக்கவைத்தது. இது அவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. தான் வெளியிட்ட கிறிஸ்தவ எதிர்ப்பு, பௌத்த ஆதரவுத் துண்டுப்பிரசுரங்களையும் அவர் விநியோகித்தார்.

ஜூலை 24, 1881 இல் கேர்ணல் ஒல்கோட் ‘புத்தமதக் கோட்பாடு’ (The Buddhist Catechism) என்ற கையேட்டை எழுதி வெளியிட்டார். இது சிங்களமொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது. இன்னும் பயன்பாட்டில் உள்ள இந்தக் கையேடு 40 பதிப்புகளைக் கடந்து, 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது கத்தோலிக்கர்கள் மற்றும் புரட்டஸ்தாந்தியரின் மதக்கோட்பாட்டு வடிவத்தை ஒத்திருந்தது. ஆனால் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே நாவலர் சைவ வினா – விடை மற்றும் இலக்கண வினா – விடை ஆகியவற்றை எழுதியபோது, இந்த வடிவத்தைப் பின்பற்றியிருந்தார்.

1881 ஆம் ஆண்டின் இறுதியில் கேர்ணல் ஒல்கோட் அமெரிக்கா திரும்பினார். மீண்டும் ஜூலை 18, 1882 அன்று தனது மூன்றாவது சுற்றுப்பயணத்திற்காக இலங்கைக்கு வந்தார். அதற்கு இரண்டு காரணங்கள் வழிவகுத்தன. முதலாவது, அவர் இலங்கையில் உருவாக்கிய பௌத்த தியோசொபிகல் சொசைட்டி செயலற்றுப் போய்க் கொண் டிருந்தது. தேசிய கல்விநிதிக்கு உறுதியளிக்கப்பட்ட 13,000 ரூபாயில், 100 ரூபாய் மாத்திரமே சேகரிக்கப்பட்டிருப்பதை அறிந்து அவர் கவலையடைந்தார். இரண்டாவது, ரோமன் கத்தோலிக்க மிஷனரிகளின் ஒரு குழு, ஒரு புத்த யாத்திரைத்தலத்திற்கு அருகிலுள்ள லூர்து மாதாவின் ஆலயத்தை (Lourdes – Like Healing Shrine) நோயைக் குணப்படுத்தும் ஆலயமாகமாற்றி, கிறிஸ்தவத்தெய்வத்தின் சக்தியை மக்களிடையே நம்பவைக்கும் முயற்சியை மேற்கொண்டது. அது பௌத்தர்களை கத்தோலிக்க மதத்தை நோக்கி ஈர்க்கும் என்று ஒல்கோட் அஞ்சினார். இம்முயற்சியை முறியடிப்பதற்கு, புத்தரின் பெயரால் ஒரு பௌத்தத்துறவி முன்வந்து, புத்தரின் அருளால் குணப்படுத்தல்களைச் செய்யவேண்டுமென்று, ஒல்கோட் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் எந்தப் பௌத்தப்பிக்குவும் முன்வராததனால், அவர் திரும்பிவந்து, அப்பணியை தானே நிறைவேற்ற முடிவுசெய்தார்.

இவ்வாறு கேர்ணல் ஒல்கோட்டின் முதலாவது குணப்படுத்துதல் நிகழ்வு ஆகஸ்ட் 29, 1882 அன்று நிகழ்ந்தது. முற்றிலும் செயலிழந்த கையும், பகுதியளவு ஊனமுற்ற காலும்கொண்ட ஒரு நோயாளிக்கு ஒல்கோட் தனது மயக்கசக்திகளைப் (Mesmerism) பயன்படுத்தி சிகிச்சையளித்தார். அந்நோயாளியின் உடல்நிலை சீரடைந்தது. அன்றிலிருந்து அவர் தனது சொற்பொழிவுச் சுற்றுப்பயணங்களை, குணப்படுத்தும் பணிகளாகவும் மாற்றினார். ஆனால் அதே ஆண்டு தனது ‘மயக்கசக்தி மூலம் நோய்களைக் குணப்படுத்தும்’ நடைமுறையைக்கைவிட்டு கல்வி மேம்பாட்டுப் பணியில் கூடுதலாகக் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இதன்போதுதான், கேர்ணல் ஒல்கோட், சிங்கள – பௌத்தர்கள் மத்தியில், தேசிய அளவில் புகழ்பெற்ற அந்தச் சம்பவம் நடைபெற்றது. அதுதான் மார்ச் 25, 1883 ஈஸ்டர் ஞாயிறு, கொட்டாஞ்சேனைக் கலவரம். இக்கலவரம் பற்றி பூரணவிசாரணை ஒன்றை நடத்துவதற்கு ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு பௌத்தர்கள் ஆளுநருக்கு மனு அனுப்பினர். இதன்பயனாக ஆளுநரினால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இதன்விசாரணை நடைபெறும்போதே, கத்தோலிக்கர்களும் பௌத்தர்களும் ஒருவருக்கெதிராக ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆயினும் நம்பகரமான ஆதாரங்கள் இல்லை என்றுகூறி இறுதியில் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டன.

கத்தோலிக்கர்களுக்கு எதிரான விசாரணையில் நீதி கிடைக்காது என்பது தெளிவாகத் தெரிந்ததும், புத்தபிக்குகளும் பொதுமக்கள் குழு ஒன்றும் கேர்ணல் ஒல்கோட்டை இலங்கைக்குத் திரும்பும்படி அழைப்பு விடுத்தனர். இவ்வழைப்பை ஏற்ற கேர்ணல் ஒல்கோட், ஜனவரி 27, 1884 அன்று, ஜி.டபிள்யூ. லீட்பீட்டருடன் வந்து, ஒரு புத்தபாது காப்புக் குழுவை அமைத்தார். அக்குழு அவரை ஒரு கெளரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுத்ததுடன், தன் பிரதிநிதியாக லண்டனுக்குச்சென்று காலனித்துவ அலுவலகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, நீதிகிடைக்க வழிசெய்யும் அதிகாரத்தை அவருக்கு வழங்கியது.

இது சிங்கள – பௌத்தர்கள் மத்தியில், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு தலைவர் இல்லாத வெற்றிடத்தைக்காட்டியது. அவ்வெற்றிடத்தை நிரப்பக்கூடிய ஒரே ஒருவராக கேர்ணல் ஒல்கோட் மாத்திரமே இருந்தார். அதனை அவர் நேர்மை யோடு செய்தார். முஸ்லிம்களின் நிலைமை இதைவிடப் பலவீனமாக இருந்தது. 1898 பெப்ரவரி 05 ஆம் திகதி சித்திலெப்பை தனது 56 ஆவது வயதில் காலமானபின்னர், நீண்டகாலம் அவர்களிடையே தலைமைத்துவ வெற்றிடம் நீடித்தது. இவர்கள் அரசியலில் ‘அநாமதேயர்களாக’ (Nobodies) இருந்தார்கள். இதற்குமாறாக தமிழ்மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க தலைவர்கள் இருந்தார்கள். அவர்களது பலத்தையும், பலவீனத்தையும் குறித்துப் பின்னர் காணலாம்.

ஒல்கோட் லண்டனுக்குச் செல்வதற்குமுன்னர், உயர்மட்ட புத்ததுறவிகள் குழு ஒன்று கேர்ணல் ஒல்கோட்டுக்கு பௌத்தமுறைப்படி பிரியாவிடை விழாவை நடத்தி வழியனுப்பிவைத்தது. ஒல்கோட் 1884 ஏப்ரலில் லண்டனை அடைந்து, லோர்ட் டெர்பிஸ் (Lord Derbys) உள்ளிட்ட பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளைச் சந்தித்து, அவர்களிடம் ஆறு கோரிக்கைகளை உள்ளடக்கிய ஒரு மகஜரைக் கையளித்தார்.

அக்கோரிக்கைகளாவன:

(1) கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கத்தோலிக்கர்கள் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்,

(2) பௌத்தர்கள் தங்கள் மதத்தைச் சுதந்திரமாகப் பின்பற்றும் உரிமையை உறுதிசெய்ய வேண்டும்,

(3) வெசாக் முழுநிலவு நாள், பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும்,

(4) மத ஊர்வலங்களில் மேளதாளங்களையும் பிற இசைக்கருவிகளையும் பயன்படுத்துவதற்கு எதிரான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும்,

(5) பௌத்தப்பதிவாளர்கள் நியமிக்கப்பட வேண்டும், (6) பௌத்தமதப் பீடங்களுக்குச் சொந்தமான சொத்துகளை (Temporalities) பௌத்தப்பிக்குகள் கட்டுப்படுத்துவதற்குள்ள தடைகள் நீக்கப்படுதல் வேண்டும்.

காலனித்துவ அலுவலகம் கேர்ணல் ஒல்கோட் முன்வைத்த ஆறு கோரிக்கைகளில் இரண்டை வழங்கியது. டிசம்பர் 1884 இல், மத ஊர்வலங்களில் மேளதாளங்களையும் பிற இசைக்கருவிகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கியது அவற்றில் ஒன்று. மேலும், ஏப்ரல் 28, 1885 இல், வெசாக் முழுநிலவு தினத்தை அதிகாரபூர்வ விடுமுறையாகவும் அறிவித்தது.

1884 ஜனவரியில் கேர்ணல் ஒல்கோட் இலங்கை திரும்பியபோது, ஜி.டபிள்யூ. லீட்பீட்டரையும் (G.W. Leadbeater) அழைத்து வந்திருந்தார். அவருடன் ஏ.ஆர். புல்ட்ஜென்ஸ் (A.R. Buultjens) மற்றும் பவுல்ஸ் டாலி (Bowels Dally) ஆகியோரும் இணைந்து பௌத்த பாடசாலைகளின் நிர்வாகத்தை ஒழுங்கமைத்தனர். இவ்வாறு கிறிஸ்தவ மிஷனரிகளின் சவாலை பௌத்தர்கள் எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் ஒரு கல்விவலையமைப்பை உருவாக்குவதில் தியோசொபிகல் சொசைட்டி முக்கிய பங்கு வகித்தது. அது இலங்கையில் பல பௌத்தப் பள்ளிகளைக் கட்டியது. கொழும்பில் உள்ள ஆனந்தா கல்லூரி, கண்டியில் உள்ள தர்மராஜா கல்லூரி, காலியில் உள்ள மஹிந்த கல்லூரி மற்றும் குருநாகலில் உள்ள மலியதேவா கல்லூரி என்பன அவற்றுள் பிரதானமானவை.

1898 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இத்தகைய 103 பி.டி.எஸ். பௌத்தப் பாடசாலைகள் அமைக்கப்பட்டன. அவற்றில் பல, மிஷன் பாடசாலைகளின் பாடவிதானங்களையும், அதேநிர்வாக முறையையும் கொண்டிருந்தன. அவற்றுள் சில பாடசாலைகள் நவீன ஆங்கிலக்கல்வியை வழங்கும் மிஷனரிகளின் சிறந்த பாடசாலைகளுக்கு நிகரான தரத்தில் இருந்தன. இங்கு காலனித்துவ ஆட்சியின்கீழ் நிர்வாக, தொழில்முறை மற்றும் வணிகப்பதவிகளுக்கான பயிற்சியை பௌத்த மாணவர்கள் பெற்றனர். இப்பாடசாலைகள் பௌத்ததன்மை கொண்டவையாக இருந்ததுடன், பாளிமொழியும் அங்கு கற்பிக்கப்பட்டது.

கேர்ணல் ஒல்கோட் பௌத்தமத வளர்ச்சிக்கு ஆற்றிய மற்றுமொரு பங்களிப்பு பௌத்தமதக் கொடியை உருவாக்கியமையாகும். கேர்ணல் ஒல்கோட்டும் ஜே.ஆர். டி சில்வாவும் கூட்டாக வடிவமைத்த இக்கொடி, 1952 ஆம் ஆண்டு உலக பௌத்த மாநாட்டால் சர்வதேச பௌத்தக்கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1884 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தியப்பத்திரிகைகள் சில பிளாவட்ஸ்கியின் மாயாஜால ஆன்மீக நிகழ்வுகளை ஏமாற்றுவேலை எனக் குற்றஞ்சாட்டின. அதன்பின்னர் அவர் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். அங்கும் 1885 ஆம் ஆண்டு லண்டன் உளவியல் ஆராய்ச்சிசங்கம் இவர் தொடர்பான விசாரணை ஒன்றை நடத்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதற்கு ‘ஹாட்சன் அறிக்கை’ (Hodgson Report) என்று பெயர். அது, அவரை ஒரு மோசடிக்காரர் என்று குற்றம் சுமத்தியது. எனினும் இவரது ஆதரவாளர்கள் அக்குற்றச்சாட்டை நிராகரித்து அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

கேர்ணல் ஒல்கோட் பிளாவட்ஸ்கியுடனான நட்பைத் துண்டித்துக்கொள்ளவில்லை. 1891 இல் பிளாவட்ஸ்கி இறந்தபோது, ஒல்கோட் லண்டனுக்குப் பயணம்செய்து அவரது அஸ்தியைப்பெற்று, அதனை அமெரிக்காவிலும் இந்தியாவிலும் கரைத்தார். இருப்பினும், அவர் பகுத்தறிவே உண்மையான நடுவர் என்ற கருத்தில் உறுதியாக இருந்தார். 1906 ஆம் ஆண்டில், தியோசொபிகல் நிறுவனத்தலைவராக நிகழ்த்திய தனது கடைசி உரைகளில் ஒன்றில், அவர் பின்வருமாறு கூறினார்: “எதையும் நம்பாதீர்கள்…. அது ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டதாலோ அல்லது ஒரு முனிவரால் கற்பிக்கப்பட்டதாலோ அல்லது பாரம்பரியத்தால் வழங்கப்பட்டதாலோ அல்லது ஒரு தேவரால் அருளப்பட்டதாலோ, எதையும் நம்பாதீர்கள். எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட விடயம் உங்கள் பகுத்தறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்றதாக இருக்கும்போது மாத்திரம் அதை நம்புங்கள்; நம்பி அதற்கேற்ப செயற்படுங்கள். ”

1906 ஆம் ஆண்டு, கேர்ணல் ஒல்கோட் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லும்போது அவருக்குப் பலத்தகாயம் ஏற்பட்டது. சிறிதுகாலம், ஜெனோவாவில் சிகிச்சைபெற்று குணமடைந்த அவர், அடையாறுக்குத் திரும்பவேண்டும் என்று வலியுறுத்தினார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 17 அன்று அங்கு காலமானார்.

பௌத்த மதமறுமலர்ச்சி இயக்கத்தின் இரண்டாவது காலகட்டத்தில் ஆளுமை செலுத்தியவர்களில் மாபெரும் ஜம்பவானாகத் திகழ்ந்தவர் கேர்ணல் ஒல்கோட். அவருக்கு அடுத்தநிலையில், அவரது சீடரான அநகாரிக தர்மபால வளர்ந்துவந்தார். இவ்விருவருக்குமிடையிலான கூட்டணி ஒரு கட்டத்தில் முறிந்தது. ஏனெனில் இருவரும் இருவிதமான போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தத் தொடங்கினர். அதுகுறித்துப் பின்னர் காணலாம்.

உண்மையில் பௌத்த மதத்துக்கும், பௌத்தர்களுக்கும் கேர்ணல் ஒல்கோட் செய்தசேவை அநகாரிக தர்மபால செய்த சேவையைவிட மிகமிக ஆதிகம். எனினும் சிங்கள – பௌத்த தேசியவாதிகள், அநகாரிக தர்மபாலவையே உயர்த்திப்பிடிக்கின்றனர். கேர்ணல் ஒல்கோட் செய்த சேவைகளுக்குரிய இடம் வரலாற்றில் இவர்களால் மறுக்கப்படுகிறது. எனினும் பௌத்த மதமறுமலர்ச்சி இயக்கத்தின் இரண்டாவது காலகட்டத்தை கேர்ணல் ஒல்கோட்டை ஒதுக்கிவிட்டு எவராலும் பேசவோ, எழுதவோ முடியாது.

எப்படி பௌத்த மதமறுமலர்ச்சி இயக்கத்தின் முதலாவது காலகட்டத்தின் போக்கை 1873 இன் பாணந்துறை விவாதம், 1883 இன் கொட்டாஞ்சேனைக் கலவரம் ஆகிய இரு சம்பவங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றனவோ, அதுபோல பௌத்த மதமறுமலர்ச்சி இயக்கத்தின் இரண்டாவது காலகட்டத்தைப் படம்பிடித்துக் காட்டும் இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றன. அவை: 1896 இல் களுத்துறைக் கோட்டையில் அரசமரம் ஒன்றை வெட்டுவதற்கு எதிரான போராட்டம், 1897 இல் சிலாபம் முஸ்லிம் வர்த்தகர்களுக்கெதிரான கலவரம்.

1896 இல் களுத்துறைக் கோட்டையில் இருந்த அரசமரங்களை வெட்டுவதற்கு எதிரான போராட்டம்

“சிலோனில் (இலங்கையில்) ஒரு மரம் வெட்டப்படுமா? இல்லையா? என்பதைவிட வேறு எந்த ஒரு முக்கியமான விடயத்தைப் பற்றியாவது எம்மால் சிந்திக்கவோ, அறிக்கை எழுதவோ முடியுமா?” என காலனிகளுக்கான பாராளுமன்றத் துணைச்செயலாளர், செல்போர்னின் ஏர்ல் (Earl Of Selborne) எழுதிய ஒரு குறிப்புக் கூறுகிறது. அந்தளவிற்கு, களுத்துறைக் கோட்டையில் இருந்த அரசமரங்களை வெட்டுவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானமானது, 1890களின் நடுப்பகுதியில், இலங்கையை உலுக்கிய ஒரு பிரச்சினையாக இருந்தது.

1886 ஆம் ஆண்டில், களுத்துறைவாழ் பௌத்தர்கள் சார்பில் ‘பொடி சிங்கோ’ என்ற சாமான்யர் ஒருவர் களுத்துறைக் கோட்டை பொதுமைதானத்தில் இருந்த மூன்று அரச மரங்களில் ஒன்றைச் சுற்றியிருந்த ஒரு துண்டுநிலத்தில் சிறிய கல்லறை – வழிபாட்டுத்தலம் (Shrine) ஒன்றைக் கட்டுவதற்கு, அந்நிலத்தைக் குத்தகைக்குத் தருமாறு உள்ளூர் சபையிடம் விண்ணப்பித்தார். அப்போதைய துணை அரசாங்க அதிபர் எச். ஹாலி கேமரூன் (H. Haley Cameron) எந்த ஆட்சேபனையும் கூறாமல் அதற்கான அனுமதியை வழங்கினார். அதைத்தொடர்ந்து, ‘பொடி சிங்கோ’ என்ற சாதாரண மனிதர் அவ்வரச மரத்தின் அடிவாரத்தில் ஒரு சிறிய ஆலயத்தைக்கட்டி வழக்கமான சடங்குகளைச் செய்துவந்தார்.

1890களில் புதிய உதவி அரசாங்க அதிபராக H.W. பிராட்ஹர்ஸ்ட் (H.W. Brodhurst) என்பவர் வந்தார். அவர் பொடி சிங்கோவின் வழிபாட்டுத்தலம் இருப்பதை விரும்பவில்லை. அங்கு வழிபாட்டுக்காக வருவோர்தொகை அதிகரித்து, கோட்டையின் நுழைவாயிலில் சனப்புழக்கம் அதிகரிப்பது, அவரை எரிச்சலடையச்செய்தது. எனவே அவர் பொடி சிங்கோவின் வழிபாட்டுத்தலத்தை அப்புறப்படுத்த விரும்பினார். இதற்கிடையில் 1891 – 1892 ஆம் ஆண்டுகளில், அங்கு முன்னர் இருந்து அழிக்கப்பட்ட – மஹாவம்சத்தில் குறிப்பிடப்பட்டிருந்த – பௌத்த விகாரையை மீண்டும் கட்டுவதற்காக போதி மரத்தைச் சுற்றியுள்ள கால் ஏக்கர் நிலத்தை விடுவிக்குமாறு பௌத்தர்கள் மனுச்செய்தனர். மேற்கு மாகாண அரசாங்க அதிபரான A.R. டாசனின் (A.R. Dawson) ஆதரவுடன், பிராட்ஹர்ஸ்ட் இம்மனுக்களை நிராகரித்தார். அதேசமயம் பொடி சிங்கோவின் வழிபாட்டுத்தலத்துக்கான குத்தகையை முடிவுக்குக்கொண்டுவர அவர் எடுத்த முயற்சிகள் உள்ளூர் சபையால் நிராகரிக்கப்பட்டன.

1894 ஆம் ஆண்டுவரை விகாரையின் நிலத்தின் மீதான உரிமைகோரல்கள் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த பிராட்ஹர்ஸ்ட் பொடி சிங்கோவுக்கு வழங்கப்பட்டிருந்த குத்தகையையும் பொருட்படுத்தாமால் அங்கிருந்த இரண்டு அரச மரங்களையும் வெட்ட உத்தரவிட்டார்.

இதனை ஆட்சேபித்து பிராட்ஹர்ஸ்டின் வீட்டிற்கு வெளியே உள்ளூர்வாசிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனையும் பொருட்படுத்தாமல் அரச மரங்களை அகற்றும் பணி ஆகஸ்ட் 4 ஆம் திகதி தொடங்கியது. இதனை எதிர்த்து, அண்மையில் அங்கு உருவாக்கப்பட்டிருந்த களுத்துறை பௌத்த சங்கத்தின் (Kalutara Buddhist Union) தலைவரும் மருத்துவருமான ஓ.எம். ஒபேயசேகர, ஆளுநர் ஆர்தர் ஹேவ்லாக்கிற்கு (Governor Arthur Havelock) ஒரு தந்தி அனுப்பினார். அந்நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ஆளுநரிடமிருந்து உத்தரவு பறந்தது. அதற்கிடையில் ஒரு அரசமரம் அடியோடு வெட்டப்பட்டுவிட்டது. மற்றைய மரத்தின் ஒரு பகுதி மட்டுமே எஞ்சி இருந்தது.

அவர்கள் அனுப்பிய மனுவில் முன்வைக்கப்பட்ட, அரச மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலிப்பதற்காக ஆளுநர் விசாரணைக்குழு ஒன்றை நியமித்தார். விசாரணையின்போது, அங்கு அப்படி ஒரு விகாரை என்றுமே இருந்ததில்லை என்பதை நிரூபிப்பதற்கான பழைய புவியியல் படங்களைச் சமர்ப்பித்தும், அவ் அரசமரங்கள் ரயில் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்று காரணம் காட்டியும், அரச அதிகாரிகள் அக்கோரிக்கையை முறியடிக்க முயற்சி செய்தனர். இழுபறியான இவ்விடயம் லண்டன் காலனியச் செயலாளர் வரைக்கும் சென்றது. லண்டன் காலனிகள் செயலகம், இது அநாவசியமாக சுதேசிகளின் ஆத்திரத்தைத் தூண்டுகின்ற செயல் என்பதையும், அதிகாரிகள் பொய் கூறுகிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டது. எனினும் அரச மரங்களை வெட்டுவதற்கு, பொதுவான ஒரு தடையை விதிப்பதை அது விரும்பவில்லை. எனவே ஏற்கனவே வெட்டப்பட்ட இரண்டு மரங்களை வெட்டுவதற்கும், வழிபாட்டுத்தலம் அமைந்துள்ள அரசமரத்தை வெட்டாமல் விடுவதற்கும் பரிந்துரை செய்தது.

இணையத்தளத்தில் வாசிப்பதற்கான இணைப்பு முதலாவது பின்னூட்டத்தில் 👇

About VELUPPILLAI 3345 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply