இலங்கை இந்திய மீனவர்களும் கச்சத்தீவும்

ஏப்பிரில் 06-2025

இலங்கை இந்திய மீனவர்களுடைய பிரச்சனைக்கு, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தது தான் காரணம் என்று இன்று வரை தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் கூறி வருகிறார்கள். அண்மையில் கூட தமிழக அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. தமிழக முதலமைச்சர் இந்தியத் தலைமை அமைச்சருக்கு இது தொடர்பாக கடிதம் கூட எழுதி இருக்கிறார்.

கச்சத்தீவை மீட்டுவிட்டால் இந்திய இலங்கை மீனவர் பிரச்சனை தீர்ந்துவிடுமா ? என்றால் நிச்சயமாக இல்லை. அது இன்னும் அதிகமாகும் என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

கச்சத்தீவு இராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தூரத்திலும் இலங்கையின் ஆள்புல எல்லையான நெடுந்தீவில் இருந்து 10.5 கடல் மைல் தூரத்திலும் இருக்கிறது. தலைமன்னாரில் இருந்து அது 18 கடல் மைல் தூரத்தில் இருக்கிறது.

இது மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை என்ற இரண்டு கடல் பகுதிகளையும் இனணக்கும் இணைப்பு புள்ளியிலும் இருக்கிறது.

28.06.1974 அன்று இந்திய இந்தியத் தலைமையமைச்சர் இந்திராகாந்திக்கும், இலங்கைத் தலைமை அமைச்சர் சிறிமாவோ பண்டாரநாயகாவுக்கும் இடையில் இந்த கச்சத்தீவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழக மீனவர்கள் கச்சத்தீவின் மேற்கு கரை வரையில் சென்று மீன் பிடிக்கலாம் என்றும், தங்களது வலைகளை கச்சத்தீவில் உலர வைக்கலாம் என்றும், அங்கு தங்கி இளைப்பாறலாம் என்றும் இந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக 1974 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் ஸ்வரன்சிங் 1921 ம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கடல் எல்லை சட்டத்தின் கீழ் தமிழக மீனவர்கள் கச்சதீவின் மேற்குகரை மேற்கு பகுதியிலும் இலங்கை மீனவர்கள் கச்சதீவின் கிழக்குக் கரையிலும் மீன் பிடித்ததை சுட்டிக்காட்டினார். அத்தோடு கச்சத்தீவுக்கும் இந்திய நிலப்பரப்புக்கும் உள்ள தூரம் அதிகம் என்றும் , இலங்கை நிலப்பரப்புக்கும் கச்சத்தீவுக்கும் இடையில் உள்ள தூரம் குறைவு என்றும் அவர் கூறினார். அதாவது கச்சத்தீவில் இருந்து இந்திய கடற்பரப்பு 12 கடல் மைல் தூரத்தை கொண்டதாகவும், இலங்கை கடற்பரப்பு 10.5 கடல் மைல் தூரத்தை கொண்டதாகவும் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த தூரம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரத் திலிருந்தும் இலங்கையில் நெடுந்தீவிலிருந்தும் கணக்கிடப்பட்டது. ‘கச்சத்தீவு இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உரியது,அது அநியாயமாக இலங்கைக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டுவிட்டது’ என்று வாதாடுபவர்கள் இலங்கையின் கடல் எல்லையை தலைமன்னாரில் இருந்து கணக்கிடுகிறார்கள். நெடுந்தீவை அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை.

தமிழக மீனவர்களும் இலங்கையின் வடபகுதி மீனவர்களும் பல நூற்றாண்டுகளாக இந்த கடற்பரப்பில் மீன் பிடித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடையில் கொள்வனவு கொடுப்பனவு என்று நீண்ட உண்மையான தொப்புள் கொடி உறவு இருந்து வந்திருக்கிறது. அவர்கள் ஒருவரையொருவர் விரோதிகளாகவோ எதிரிகளாகவோ ஒரு போதும் பார்த்ததில்லை.

இந்த மீனவர்களது பிரச்சனை என்பது கச்சத்தீவில் இருந்து ஆரம்பிக்கவில்லை. அது மீன்பிடித் தொழில் வணிகமயமானதிலிருந்து ஆரம்பிக்கிறது.

தமிழகம் 1,076 கி.மீ. நீளமுடைய கடற்கரையை கொண்டது. தமிழககடலோரத்தில் 14 மாவட்டங்களும், 15 துறைமுகங்களும் இருக்கின்றன. தமிழகத்தில்10.48 லட்சம் பேர் பெருங்கடல் பரப்புக்கு சென்று மீன்பிடிக்கும் உரிமைகளையும், 3.60 லட்சம் பேர் உள்நாட்டு மீனவர்களுக்கான உரிமத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

2019-20-ம் ஆண்டில் தமிழகத்தின் மொத்த மீன் உற்பத்தி 7.57 லட்சம் தொன் ஆகும்

2020-21-ம் ஆண்டில் தமிழகம் 1.10 லட்சம் தொன் கடல் பொருட்கள் ஏற்றுமதி மூலமாக 5 ஆயிரத்து 565 கோடி ரூபா அன்னிய செலாவணியை பெற்றது.

தற்போது மீன்பிடி தொழில் பெரு வணிகமாக முன்னேற்றம் அடைந்த நிலையில், தமிழகத்தின் மீன் கருவாடு உட்பட்ட கடற் பொருட்களின் ஏற்றுமதி அளவு உச்சத்தை எட்டியிருக்கிறது. 2021-22-ம் ஆண்டில் கடல் பொருட்கள் ஏற்றுமதி மூலமாக தமிழகம்10 ஆயிரத்து 635 கோடி ரூபாவை அன்னிய செலாவணியாக பெற்றிருக்கிறது.

இலாப வேட்டையை குறியாகக் கொண்ட கடற்தொழில் பெரு வணிக அமைப்பு தான் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கான அடித்தளமாகும்.இதை தமிழக அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லையா அல்லது புரிந்து கொண்டு புரியாதவர்கள் மாதிரி நடிக்கிறார்களா என்பது தெரியவில்லை ?

கடற்தொழில் பெரு வணிக நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலகப் பெரும் முதலாளித்துவத்தின் நீலப்புரட்சி திட்டத்தின் படி அதிக இலாபத்தை தரும் வகையில் ,கடலில் நிலத்தடி இழுவைப்படகு முறையிலான தொழில்நுட்பம் 1980 ளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனால் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக ,பாரம்பரியநாட்டுப்படகு மீனவர்களேயாகும். அவர்கள் இன்று மீன்பிடி கூலிகளாக மாற்றப்பட்டு விட்டார்கள். மீன்பிடித் தொழில் என்பது மீனவர்களின் கைகளிலிருந்து பெரு முதலாளிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது. இந்த பெரு முதலாளிகள் இன்றைக்கு மீனவர்கள் அல்லாத வேலை இழந்த கிராமப்புற நகர்ப்புற மக்களையும் மீன்பிடி கூலிகளாக மாற்றிவிட்டார்கள்.

அதே நேரம் 1980 லிருந்து 2009 வரையிலான யுத்த காலகட்டத்தில் தமிழக மீனவர்கள் மத்தியிலும் கரையோர மீனவ கிராமங்களிலும் விடுதலைப்புலிகளுக்கு இருந்த ஆதரவுத்தளத்தை சிதைப்பதற்காக சிறிலங்கா கடற்படையினர், இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை தாக்கி இருக்கிறார்கள், கொலை செய்திருக்கிறார்கள். அவர்களதுபடகுகளை மூழ்கடித்து இருக்கிறார்கள். கச்சத்தீவுக்கும் அதை அண்டிய கடற்பரப்புக்கும் அதாவது இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்ட கடற்பரப்புக்கு அவர்கள் செல்வதற்கும் ஸ்ரீலங்கா கடற்படை தடை விதித்தது. ஜே ஆர் ஜெயவர்த்தனவிலிருந்து ராஜபக்சாக்கள் ரணில் வரையிலான அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் தமிழக மீனவர்களுக்கும் இலங்கையின் வடபகுதி மீனவர்களுக்கும் இருந்த தொப்புள் கொடி உறவை தயவு தாட்சண்யமின்றி அறுத்தெறிவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து இருக்கிறார்கள்.இவையெல்லாம் மறக்க முடியாத சம்பவங்கள். இதில் கூட மிக அதிக அளவுக்கு பாதிக்கப்பட்டது, ஏழை மீனவர்களேயாகும்.

மறுபுறத்திலே இலங்கை மீனவர்களுக்கு கடல் வலய பாதுகாப்பு சட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்து, அவர்களுடைய மீன்பிடி உரிமையை ஸ்ரீலங்கா அரசாங்கம் தடை செய்தது. அவர்களது படகுகள்,படகு இயந்திரங்கள் வலைகள் என்று அனைத்தும் யுத்தத்தில் அழிக்கப்பட்டன. மீன்பிடித் தொழில் என்பது 99 சதவீதம் முடக்கப்பட்டது.

இந்த இடத்திலே நாங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.

அதாவது இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்குரிய கடல் பகுதி என்பது பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவின் ஒரு பகுதியை உள்ளடக்கியது.

பாக்கு நீரிணை (Palk Strait) என்பது தமிழ்நாட்டையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் ஒரு நீரிணையாகும். இது வடகிழக்கே வங்காள விரிகுடாவை, தென்மேற்கே மன்னார் வளைகுடாவையும்இணைக்கிறது. இந்த நீரிணை ஏறத்தாழ 137 கிலோமீட்டர் நீளமும், 53 முதல் 82 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. இந்த நீரிணை இலங்கை இந்திய மக்களுக்கு இயற்கை கொடுத்த கொடை என்று சொல்லவேண்டும். கடல் என்றால் மீன் பிடிப்பதற்கும் போக்குவரத்திற்கும் பயன்படும் பகுதி என்ற அடிப்படையில் தான் சாதாரண மக்களுடைய புரிதல் இருக்கிறது.

ஆனால் மனிதன் உயிர் வாழ்வதற்குரிய ஒட்சிசனை உற்பத்தி செய்வதில் கடலின் பங்கு மிக முக்கியமானது. நமது வளிமண்டலத்தில் நிறைந்திருக்கும் ஒட்சிசனின் பெரும் பகுதி கடலில் இருந்து கிடைத்ததாகும்.

இது கடல் தாவரங்கள் மற்றும் பைட்டோபிளாங்க்டன்(Phytoplankton) எனப்படும் டிரில்லியன் கணக்கான சிறிய ஒரு செல் உயிரினங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது,

ஒளிச்சேர்க்கையின் செயல்பாட்டில், பைட்டோபிளாங்க்டன் நீரில் உச்சி ஒட்சிசனை வெளியிடுகிறது.

பைட்டோபிளாங்க்டன்கள்(Phytoplankton) பார்ப்பதற்கு மிகச் சிறியதாக இருக்கலாம், ஆனால் அவை கடலுக்கும், கிரகத்தின் எஞ்சிய பகுதிகளுக்கும் உயிர்வாழத் தேவையான மிக முக்கியமான உயிரினங்களில் ஒன்றாகும்.

இந்த பொக்கிஷம் நமது பாக்கு நீரிணை கடலில் இயற்கை கொடுத்த கொடையாக நிறைந்திருக்கிறது

பாக்கு நீரிணை ஆழம் குறைவான அகன்ற கண்டத்திட்டுக்களையும் சேறும் மணலும் கலற்த அடித்தளங்களும் இடையிடையே முருகைக்கற்கள் மற்றும் பவளப்பாறைகள் என்பவற்றையும் கொண்டுள்ளது. இவை மீனினங்கள் வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் ஏற்ற உவப்பான தன்மையினை கொண்டுள்ளது

ஆரம்ப காலத்தில் தமிழகத்திலும், இலங்கையின் வடபகுதியில் இருந்த மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையில் மீன்பிடித்ததால் இந்த இயற்கை வளத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மீனவர்களுக்குள்ளும் மோதல்கள் ஏற்படவில்லை. ஆனால் மீன் பிடித்தொழில் நீலப் புரட்சி என்ற பெயரில் பெரு வணிகமயப்படுத்தப்பட்டதும் கடல் வளங்களை ஒட்டு மொத்தமாக சிதைத்து வாரி அள்ளும் வகையில் உலோகக் கம்பிகள் கொண்டு தயரிக்கப்பட்ட அகல சிறகு வலைகள், சுருக்கு மடி வலைகள்,தங்கூசி வலைகள் போன்றவற்றை வகைதொகுதியின்றி பயன்படுத்தப்பட்டன.

இதன் காரணமாக கடல் தாவரங்களும், பவளப் பாறைகளும் , சுண்ணாம்புக் கற்பாறைகளும் கூட இயற்கை சூழலில் இருந்து நகர்த்தப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. இதனால் மீன்களின் இனப்பெருக்கத்திற்கும், பைட்டோபிளாங்க்டன்(Phytoplankton) களின் இனப்பெருக்கத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஸ்ரீலங்கா கடற்படை யுத்தகாலத்தில் கச்சத்தீவுக்கும் அதை அண்டிய இலங்கை கடற்பரப்புக்கும் இந்திய மீனவர்களை அனுமதிக்க மறுத்ததால் இந்த பெரும் கடல் தொழில் வணிக படகுகள் தமிழ்நாட்டு பகுதியில் இருந்த பாக்கு நீரிணையின் கடல்வளத்தை சுரண்டி எடுத்து விட்டன. இதனால் அந்தப்பகுதியில் மீன்களை இல்லை என்று சொல்லும் அளவுக்கு மீன் உற்பத்தி பாதிக்கப்பட்டு விட்டது.

ஆனால் இலங்கை கடல் பகுதியில் இந்த இயற்கையான கடல் வளம் சுரண்டப்படாததால் அங்கு இன்னும் அதிகளவு மீன்கள் இருக்கின்றன .

30 வருட யுத்தத்தில் அனைத்தையும் இழந்த இலங்கையின் வட பகுதி மீனவர்கள் இப்போதுதான் தலை நிமிர ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் எஞ்சியிருந்த தங்கள் சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் மீன்பிடி உபகரணங்களை வாங்கி கடலில் இறங்கி தொழில் செய்ய ஆரம்பிக்கும் போது எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிக்கும் தமிழக கடற்தொழில் பெரு வணிகப்படகுகளால் அவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். இந்தப் படகுகள் இலங்கை தமிழ் மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய கடல் வளத்தை ஒட்டு மொத்தமாக வாரி எடுத்து செல்வதுடன் அவர்களது வலைகளையும் அறுத்துவிட்டு செல்கின்றன . இதனால் ஆயிரக்கணக்கான வட பகுதி மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்கவில்லை. கச்சத்தீவை தாண்டிச் செல்லவில்லை. தங்களது கடற்பரப்பில் , இயற்கைக்கும் கடல் வளத்திற்கும் பாதிப்பு இல்லாத சாதாரண வலைகளை கடலில் வீசிவிட்டு மீன் பிடிக்க காத்திருந்த நேரத்திலேயே ஆயிரக்கணக்கில் வரும் தமிழக படகுகள் அவர்களது வலைகளை அறுத்தெறிகின்றன.

நெடுந்தீவு கடற்பரப்பு , அனலைதீவு கடற்பரப்பு ,மாதகல் கடற்பரப்பு , வல்வெட்டித்துறை கடற்பரப்பு, பருத்தித்துறை கடற்பரப்பு என்று இந்த அத்துமீறல் தொடர்கிறது. யுத்தகாலத்தில் சிறிலங்கா கடற்படை இலங்கையின் வடபகுதி தமிழ் மீனவர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பை விட 500, 600 மடங்கு பாதிப்பை தமிழக கடல் தொழில் பெரு வணிக படகுகளும் அதன் உரிமையாளர்களும் தற்போது வடபகுதி மீனவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.

கச்சத்தீவுக்கும் இந்த கடற்பரப்புக்களில் வந்து இந்திய கடல் தொழில் வணிக படகுகள் மீன்பிடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய கடற்பகுதியில் மீன் வளம் இல்லை, இலங்கை கடல் பகுதியில் மீன் வளம் இருப்பதால் அவர்கள் வருகிறார்கள் என்று தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் அதை நியாயப்படுத்த முனைகிறார்கள். ஆனால் இந்திய பகுதியில் மீன் வளம் இல்லாமல் போனதுக்கும் கடல் வளங்கள் அழிக்கப்பட்டதற்கும் இந்த படகுகளும் இவற்றின் மீன்பிடி முறையும் தான் காரணம் என்பதை இந்த தலைவர்கள் மறந்து விடுகிறார்கள். கடல் கடற்தொழில் முதலாளித்துவத்தின் இலாப வேட்டைக்கு பலியாவது இலங்கையின் வடபகுதி மீனவர்களும், மீன்பிடி கூலிகளாக மாற்றப்பட்ட தமிழக உழைக்கும் மக்களும் மட்டுமல்லாது தமிழக இலங்கை கரையோர கிராமங்களின் எதிர்காலம்தான் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பாக்கு நீரிணையின் கடல் வளம் சிதைக்கப்பட்டால் இந்த கடற்பரப்பு இன்னும் ஒரு 20 வருட காலத்தில் மாசடைந்த கடற்பரப்பாக மாறும். இந்த கடற்பரப்பில் மீன் வளமே இல்லாமல் போகும். அன்று இங்கு கிடைக்கும் மீன்களும் மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றவையாக இருக்கும் நிலை ஏற்படும். தமிழக பகுதிகளிலேயே இராமேஸ்வரத்திலிருந்து காரைக்கால் வரையிலான கரையோர பகுதிகளும், இலங்கையில் நைனா தீவிலிருந்து பருத்தித்துறை முனை வரையிலான கரையோர பகுதிகளும் மிகக் கடுமையான சூழல் மாசுபாட்டை எதிர்கொள்வதோடு மக்கள் வாழ தகுதியற்ற இடங்களாகவும் மாறும் அபாயம் உள்ளது

கச்சத்தீவை மீளப் பெறுவது வருவது என்ற கோஷத்தை விட, கடல் வளம் சூறையாடப்பட்டு கடற் சூழல் மாசு படுத்தப்படும் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி சிந்திப்பதும் , இயற்கை நமக்கு பரிசாக தந்த கடல் வளத்தை பாதுகாத்து அதில் மீன் வளத்தை இயல்பாகவே பெருக்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதும் மிக முக்கியமான விடயமாகும். 12 நாட்டிக்கல் மைல் தூரமே உள்ள, மிகக் குறுகிய கடல் பரப்பில் ஆயிரக்கணக்கான தொழில்முறை விசைப்படகுகள், இழுவைப்படகுகள் தொழில் செய்ய கொடுத்த அனுமதியை மறுபரிசீலனை செய்ததுசெய்து அந்த படகுகள் சூழலுக்கும் பாரம்பரிய மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வங்காள விரிகுடாவிலோ , அல்லது இந்து மாக்கடலிலோ மீன்பிடிப்பதற்கான மாற்று வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டும்தான் இந்த பிரச்சினைக்கான சிறந்த தீர்வாக அமையும்.

About VELUPPILLAI 3345 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply