சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை
தி. திபாகரன்,M.A.
27-03-2025.
இலங்கையின் படைத்துறை சார்ந்த நான்கு யுத்தக் குற்றவாளிகள் மீது பிரித்தானிய அரசு தடை விதிப்பு! என்றவுடன் பிரித்தானியா அரசு தனது இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை மாற்றிவிட்டது என்று அர்த்தப்படக்கூடாது. ஆயினும் இத்தடையானது இலங்கை அரசின் மேற்குலகம் சார்ந்த ராஜதந்திர நடவடிக்கை களுக்கு ஒரு தோல்வியாகவும், தமிழ் மக்களுடைய சர்வதேச அரசியல் நடவடிக்கைகளில் ஒரு மைல்கல்லாகவும் அமைந்துள்ளது என்பது உண்மைதான். இந்நிலையில் ஈழத் தமிழரின் சர்வதேச அரசியல் நகர்வு மற்றும் சர்வதேச உறவு முறைமை எத்தகையது என்பது பற்றி சற்று பார்த்து விடுவோம்.
நாடுகளை நாடுகளால் கையாள்வதற்கு பெயர்தான் சர்வதேச உறவுகள்(International relations). சர்வதேசம்(International) என்ற ஒரு வெறும் வார்த்தை சர்வதேச அரசியல்(International Politics) ஆகிவிடாது. சர்வதேசமாக காணப்படும் 196 நாடுகள் அனைத்தையும் தமது தேவை கேட்டவாறு எந்த நாட்டை அணி சேர்த்து, எந்த நாட்டை ஓரம்கட்டி, எந்த நாட்டை கையாண்டு, எந்த நாட்டை பயன்படுத்தி, தமக்கான வெற்றியை ஈட்டுவது என்பதுதான் சர்வதேச உறவுகள் ஆகும்.
சர்வதேசம் என்பது ஒரு புனிதப்பதம் கிடையாது. அது நாடுகளை அணிகளாக வகுத்து தனது தேவைக்கு ஏற்றவாறு கையாளுகின்ற வித்தைகள் மூலமே சர்வதேச உறவுகள் என்ற பரிமாணத்தை அடைய முடிகிறது. அதாவது சர்வதேசம் என்பது ஒரு நீதிமானாக, கற்பகதருவாய், ஒரு காமதேனுவாய் கேட்கும் வரமெல்லாம் தரவல்ல ஒன்றல்ல. அது பரஸ்பர நலன்களின் அமைவிடம்.
சர்வதேச உறவில் நல்லதும் கெட்டதும் கொண்ட, கொலையும் கொள்ளையும் நிறைந்த, சூதும் வாதம் மிக்க, தீட்டும் துடக்கும் உள்ள, எதிரும் புதிருமான, நட்பும் பகையும் நொதுமலும் கொண்ட, புகழ்ச்சியும், இகழ்ச்சியும், வஞ்சகமும், சூழ்ச்சியும், பொறாமையும், ஏற்றத்தாழ்வும் மேலாதிக்க அகங்காரமும் மிக்க, அவரவர் நலன்களை அடைவதற்காக எந்த நியாய தர்மங்களையும் புறந்தள்ளும் சுயநலன்களின் ஒட்டுமொத்த வடிவமாக, இலகுவில் பகுத்தாய்ந்திட முடியாத ஒரு வினோதமான கூட்டுக் கலவையைக் கொண்ட அரசியல் ஆடுகளமாகவே சர்வதேச அரசியல் முறைமை(International Political system) வடிவம் பெற்று இருக்கிறது.
இத்தகைய சர்வதேச ஆடுகளத்தில் சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி, அறிவியலை தந்திரமாக உபயோகித்து அந்த ஆடுகளத்தில் சாகச வித்தைகாட்ட வல்லவர்கள் மட்டுமே வெற்றி வாகை சூடுகின்றனர். ஒவ்வொரு நாட்டுக்கும் அவையவை சார்ந்த நிலையிலிருந்து அவற்றுக்குரிய வாய்ப்புகளும், நடைமுறைகளும், செய்முறை உத்திகளுமே அவரவர் தகுதிக்கேற்ற பங்கையும், பாத்திரத்தையும் நிர்ணயம் செய்கின்றது.
ஈழத் தமிழர்களுடைய கோரிக்கைக்கு இணங்க யுத்த குற்றவாளிகளுக்கு பிரித்தானியாவில் முதற்கட்டமாக தடைவிதித்து இருக்கிறது. என்பதற்காக பிரித்தானியா தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றி விட்டது என்று அர்த்தப்படக்கூடாது. அவ்வாறு பிரித்தானியா இலகுவில் இலங்கை சார்ந்த தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றி விடவும் முடியாது.
பிரித்தானியாவை பொறுத்தளவில் அரசுகளை பகைப்பதில்லை என்பதுவே இலங்கை சார்ந்த வெளியுறவுக் கொள்கையாக இருக்கிறது. இதுவே பிரித்தானியாவின் குடியேற்ற வாதத்திற்கு உட்பட்ட 51 பொதுநலவாய நாடுகளையும் பகைக்காது தான் ஆளுமை செலுத்தக்கூடிய வெளியுறவுக் கொள்கையைத்தான் கொண்டுள்ளது.
எனவே அரசுகளைப் பகைப்பதில்லை என்பது பிரித்தானிய அரசின் வெளியுறவு கொள்கை. இலங்கை அரசு பிரித்தானிய மற்றும் மேற்குலக அரசுகளின் நண்பன். ஆயினும் தமக்கு சாதகமற்ற அரசாங்கங்கள் இலங்கையில் உருவாகின்றபோது இலங்கைக்கு இருக்கின்ற நெருக்கடிகளுக்குள்ளால் அந்த அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கோ, அல்லது அவர்களை தமக்குச் சார்பான வழிக்கு கொண்டு வருவதற்கு மனித உரிமைகள் பற்றி பேசுவது, நிதி உதவிகளை வரையறை செய்வது, ஐ எம் எப் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களை கொண்டு நிபந்தனைகளை விதிப்பது, வரி விதிப்பு ,வரிவிலக்கு ஊடாகவோ கட்டுப்படுத்துவர். அதையும் விஞ்சிச் செல்கின்றபோது போர்க்குற்றம், மனிதவுரிமை மீறல், இனப்படுகொலை போன்ற விவரங்களை கையில் எடுத்து அழுத்தங்களை பிரயோகித்து அந்த குறிப்பிட்ட நாடுகளை தமது வழிக்கு கொண்டு வருவதுதான் நடைமுறையாக உள்ளது.
இவ்வாறு இலகுவில் புரியமுடியாத புதிராக வடிவம் பெற்றுள்ள ஒரு அரசியல் உறவு முறமைக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் சர்வதேச அரசியற் சூழலில் அரசற்ற ஈழத் தமிழர்கள் தங்களுடைய விடுதலைக்கான பயணப்பாதையில் சர்வதேச அரசுகளை கையாள்வது என்பதும், தமக்கு ஆதரவாக அவர்களை திரட்டுவது என்பதும் இலகுவில் அடையப்படக்கூடிய விடயம் அல்ல. உலகளாவிய அரசியலில் அரசுக்கும் அரசுக்குமான உறவுகளே பலமானவை. அவ்வாறே ஐ.நா மன்றம் கூட அரசுகளுக்கான அமையமே யன்றி தேசிய இனங்களுக்கான அமையம் அல்ல. இன்றைய உலகில் இரண்டாயிரத் துக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இந்த பூமியில் நிலை பெற்றிருக்கின்ற போதும் 200க்கு குறைவான அரசுகள்தான் இறைமையை கொண்ட நாடுகளாக இந்தப் பூமியில் இருக்கின்றன.
ஆகவே அரசுக்கும் அரசுக்குமான உறவின் பலமும், அவர்களுக்கிடையிலான பரஸ்பர கூட்டுறவும், ஒத்துழைப்பும் பலமானதாகவும், இலகுவில் முறிக்கப்பட முடியாததாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் ஈழத் தமிழர்களுடைய சர்வதேச அரசியல் என்பது அரசற்ற இனம் என்ற வகையிலும், அவர்களுடைய சனத்தொகை, பரம்பலால், தாயக நிலப்பரப்பின் அளவாலும் சிறியது என்ற அடிப்படையில் பாதகமான பக்கங்கள் உள்ளது. இருப்பினும் உலகளாவிய அரசியலில் தமிழர் தாயகத்தின் அமைவிடம் இந்து சமுத்திரத்தின் மத்திய பாகத்தில் அமைந்துள்ளது என்ற அடிப்படையில் தமிழர் தாயகத்திற்கான கேந்திரத் தன்மை மிக உயர்வாக இருப்பதுதான் ஈழத்தமிழர்கள் சர்வதேச அரசியலில் பங்கையும், பாத்திரத்தையும் வகிக்க உதவுகிறது. இந்த சாதகத் தன்மையே இன்றைய சர்வதேச அரசியலின் ஆளுகைப் போட்டியில் ஈழத்தமிழர் தமது பங்கையும் பாத்திரத்தையும் வகிக்கவும், தமக்கான நலன்களை அடைவதற்கான ஒரே ஒரு முதுசமாகவும், ஈழத்தமிழரின் பலமாகவும் அமைந்திருக்கிறது.
இன்றைய உலகளாவிய அரசியலில் ஒற்றை பொருளாதார மையத்தில் இரண்டு அரசியல் அதிகாரமையங்கள் அல்லது சக்தி அணிகள் தோன்றிவிட்ட நிலையில் ஈழத் தமிழர்களின் அமைவிடம் சார்ந்து என்றும் இல்லாத அளவுக்கு தமிழர்தாயகம் முக்கியத்துவத்தை பெறத் தொடங்கிவிட்டது. இந்நிலையிற்தான் ஈழத்தமிழர் பிரச்சினை சர்வதேச முக்கியத்துவத்தை வகிக்க தொடங்கியுள்ளது. இத்தகைய பின்னணியில் இந்து சமுத்திரத்தின் ஆதிக்க வலுச்சமநிலையை பேணுவதற்கு இலங்கை தீவு உலகின் பலம் வாய்ந்த நாடுகளுக்கு அவசியமாகிறது. அதே நேரத்தில் இலங்கை தீவு அண்மைக்காலமாக சீனா தலைமையிலான அதிகாரம் மையத்தை நோக்கி நகர்வதனால் இலங்கை அரசின் மீது மேற்குலகம் சற்று கொதிப்படைந்தே உள்ளது. இந்த மேற்குலக அணிக்குள்ளேதான் இந்தியாவும் உள்ளடங்குகிறது என்பதையும் கவனத்தில் கொள்க.
ஆகவே இன்றைய இலங்கையின் அரசியலில் இடதுசாரிகள் அதிகாரத்தை பெற்றதன் விளைவு அது மேலும் சீன நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஆகவே இலங்கையை கட்டுப்படுத்தவும், அதற்கு கடிவாளம் இடவும் மேற்குலகத்திற்கு ஈழத்தமிழர்களுடைய பிரச்சனையை கையிலெடுத்து ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை யுத்தக் குற்றம் என்ற வகுதிக்குள் எடுத்து இலங்கை அரசை கட்டுப்படுத்த முனைகின்றது. இதன் ஆரம்பமாக அமெரிக்கா கனடா ஆகிய நாடுகள் ஏற்கனவே இலங்கையினுடைய முன்னாள் ராணுவ தளபதிக்கும் மற்றும் ராணுவ முக்கியஸ்தர்களுக்கும் யுத்தம் குற்றம் இழைத்தவர்கள் என்ற அடிப்படையில் தடை விதித்து இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சிதான் இப்போது அனுகுமாரா அரசும், என்.பி.பி அரசாங்கமும் மேற்குலகத்தின் பிடியை அறுத்துக் கொண்டு சீனாபக்கம் செல்கின்ற போது அவர்களுக்கு ஒரு மூக்கணாம் கயிறு கட்ட வேண்டியதேவை மேற்குலகத்தவருக்கு எழுந்துள்ளது.
அதே நேரத்தில் இனப்படுகைக்குள்ளான ஈழத் தமிழர்களுக்கு நீதிகோரி புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச அரசியல் பரப்பில் சக்திவாய்ந்த நாடுகளில் தமது அரசியல் வேலைத்திட்டங்களை சளைக்காது தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளனர். அந்த அடிப்படையில் இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை பிரித்தானிய அரசு, தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பிரித்தானியாவிலுள்ள அரசியல் கட்சிகளுடன் இணைந்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், இளையோர்கள், ஊடகங்கள், ஊடகவியலாளர், அரசியல் செயற்பாட்டாளர் என பல்வேறுதரப்பட்ட தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களின் தொடர் செயற்பாடுகளும், போராட்டங்களும் இலங்கைக்கு எதிரான சர்வதேச பரிமாணம் ஒன்றை நோக்கி தள்ளினார்கள்.
ஆகவே மேற்குலகத்தவர்களுக்கு இலங்கையை கட்டுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதே நேரத்தில் புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கையை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய தேவை உள்ளது. இரு தரப்பினருடைய தேவைகளும் சந்திக்கும் சந்திப்புள்ளியில் அதாவது புலம்பெயர் தமிழர்கள் உந்தித் தள்ளிய போர்க்குற்றவாளிகளை இப்போது மேற்குலகம் இழுக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது உள்ளே இழுத்து அவர்களுக்கு கடிவாளம் இட்டிருக்கிறார்கள் என்று சொல்வதே பொருத்தமானது. ஈழத் தமிழர் தள்ளியதை பிரித்தானியா இழுத்துக் குற்றவாளி கூடைக்குள்ளே வீழ்த்தியிருக்கிறார்கள் அவ்வளவுதான்.
இத்தகைய பின்னணியிற்தான் இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இராணுவ தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா 24 மார்ச் 2025 பயணத்தடை விதித்துத்துள்ளது.
யுத்த குற்றவாளிகள் மீது பிரித்தானியாவில் தடை விதிக்கப்படும் என்ற உத்தரவாதத்தினை பிரித்தானியாவின் முக்கிய அரசியல் கட்சிகளும் பிரமுகர்களும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கியிருந்தனர். எனினும் இந்த அந்த முடிவு ஒரு வருட காலமாக இழுத்தடிப்பைச் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த இழுபறி நிலைக்குகான காரணம் ““புவிசார் அரசியல்““ என்றே பிரித்தானிய வெளியுறவுத்துறை சார்ந்தவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
அடிப்படையில் இலங்கைத்தீவில் தனது புவிசார் அரசியலை நிர்ணயம் செய்கின்ற சக்தியாக இந்தியா இருக்கிறது என்பதை ஈழத் தமிழர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் அமைந்துள்ள புள்ளியாகவே இலங்கைத்தீவு உள்ளது. எனவே இலங்கையில் ஏற்படுகின்ற எத்தகைய மாற்றங்களும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. எனவே இலங்கை அரசியலின் மாற்றங்களை இந்தியா கவனிக்கவும், கட்டுப்படுத்தவும், நிர்ணயம் செய்யவும் பின்நிற்கப் போவதில்லை. இஸ்ரேலுக்கு எவ்வாறு அமெரிக்கா இருக்கிறதோ அவ்வாறு ஈழத் தமிழர்களுக்கு மேற்குலகத்தைக் காட்டிலும் இந்தியாவே அருகில் இருப்பதனாலும், எட்டுக்கோடி தமிழர்கள் இந்தியாவில் இருப்பதாலும் இந்தியாவின் அனுசரணை ஈழத் தமிழர்களுக்கு அவசியமானது.
எனவே ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டப்பாதையில் இந்தியாவை எமக்க சாதகமாக மாற்றி அமைக்க வேண்டியது தவிர்க்கப்பட முடியாத ஒரு நிபந்தனையாக,, நியதியாக உள்ளது என்பதையும் ஈழத் தமிழர் கருதிக் கொள்ள வேண்டும். இன்றைய உலக அரசியல் ஆதிக்க போட்டியில் புவிசார் அரசியல் முக்கிய நிர்ணய சக்தியாக உள்ளது. அது உக்ரைனாக இருக்கலாம், தாய்வானாக இருக்கலாம், பலஸ்தீனமாக இருக்கலாம், எமது தமிழீழமாக இருக்கலாம் புவிசார் அரசியல் நிபந்தனையையும், நிர்ணயத்தையும் நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்று அனுசரித்துத்தான் ஆக வேண்டும்.
இத்தகைய சர்வதேச அரசியல் நகர்வு விருப்பு வெறுப்புகளை கடந்து ஈழத்தமிழருடைய சுயநிர்ணய உரிமை என்ற ஒரே இலக்கிற்காக தமிழர்கள் ஒவ்வொரு நாடுகளையும் அந்தந்த நாடுகளின் இயல்புக்கும், நிலைமைக்கும், நடைமுறைக்கும் ஏற்ற வகையில் தனித்தனியான கொள்கைகளை வகுத்து வெற்றிக்கான மூலபாயத்தை வகுக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
ஆகவே கொள்கையும், நடைமுறையும் வெவ்வேறு கோணத்தில் இருக்கின்ற போது நடைமுறைகளுக்கூடாக கொள்கையை மாற்றி அமைப்பதற்கான மூலோபாயங்களை முற்றிலும் அறிவியல் பூர்வமாக வகுத்து செயற்பட வேண்டும். எனவே பிரித்தானிய வெளியுறவு கொள்கையை தமிர்களுக்கு சார்பாக மாற்றுவதற்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இப்போது இலங்கைக்கு எதிராக பிரித்தானியா எடுத்து வைத்த முதல் அடியை தமிழ் மக்கள் ஒரு படிக்கலாக பயன்படுத்தி சர்வதேச அரசியலில் மேல் நோக்கி ஏறவேண்டும்.
சரியான பார்வை. இன்றைய புவிசார் அரசியலில் பிரித்தானியா போன்ற நாடோ அல்லது ஐநாமஉ பேரவையோ நேரடியாகத் தலையிட முடியாது. தார்மீக அடிப் படையில் இவை அழுத்தங்கள் கொடுக்கலாம். ஆனால் கடிக்காது.
பிரித்தானியாவின் நடவடிக்கை வாக்கு வங்கி அரசியல் சார்ந்தது. இன்று தமிழர் வாக்குகள் பிரித்தானிய அரசியல் கட்சிகளுக்கு தேவைப்படுகிறது. இது மறுக்க முடியாதது. அதே நேரம் ஒரு கசப்பான உண்மை. இந்தப் பிரயாணத் தடை என்பது கொசு கடித்தது போன்றது. உளவியல் ரீதியாக சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவ்வளவுதான். கனடாவிலும் இதே நிலமைதான். கனடாவும் இராணுவத் தளபதிகள் மீது பிரயாணத் தடை விதித்துள்ளது. அதற்குக் காரணம் பிரித்தானிய போல் வாக்கு வங்கி அரசியல்தான். சில தொகுதி களில் தமிழர்களது வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது. கனடா இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்ற தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. ஆனால் அதற்கு சட்ட வடிவம் இல்லை. சட்ட வலு இல்லை.
உத்தியோகப்பற்ற முறையில் கனடா, இலங்கை இனப்படுகொலையில் ஈடுபட்டது எனச் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டாது. தமிழர்கள்தான் கனடா தமிழர்களுக்கு ஆக ஏதோ வெட்டிப் புடுங்கி வேரோடு சாய்த்துவிட்டதாக பகற் கனவு காண்கிறார்கள்.
ஈழத் தமிழர் சிக்கலில் இந்தியாவின் வகிபாகம் முக்கியம்தான். இலங்கையை ஒரு எல்லைக்குள் வைத்திருக்க ஈழத்தமிழர்களை அது அவ்வப்போது பயன்படுத்துமே ஒழிய அவர்களது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முன்வராது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு 13ஏ. 1987 இல் எழுதப்பட்ட இலங்கை – இந்திய உடன்பாடு முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை தவறியபோது -மீறியபோது – இந்தியா மூச்சே காட்டவில்லை.
இந்திய அரசியலில் இந்திமொழி பேசும் அரசியல்வாதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய அரசு தமிழ்நாட்டை பகை மாநிலமாகவே பார்க்கிறது. தமிழர்களை பகைவர்களாகவே பார்க்கிறது. இந்தியைத் திணிப்பதில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் வி. புலிகளை தடை செய்வதற்கு சொல்லப்படும் காரணங்களில் ஒன்று ஈழமும் தமிழ்நாடும் சேர்ந்து ஒரு அகண்ட தமிழகத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு. . இலங்கை வரும் பிரதமர் மோடி இலங்கை – இந்தியாவுக்கும் இடையில் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கை செய்யவிருப்பது தமிழர்களது ஆதரவு மேற்கொண்டு அதற்குத் தேவையில்லை என்பதை காட்டுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.