சனிக் கோள் பெயற்சியைக் கண்டு குலை நடுங்கும் இந்துத் தமிழர்கள்

எமது ஞாயிறு குடும்பத்தைச் சுற்றி எட்டுக் கோள்கள் சுற்றி வருகின்றன. அதில் சனிக் கோள் சூரியனின் ஆறாவது கோளாகச் சுற்றிவருகிறது. எமது ஊனக் கண்ணால் பார்க்கக் கூடிய கடைசிக் கோள் சனி மட்டுமே.  அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும். சனிக்கோளின் வானியல் சின்னம், ரோமானிய விவசாயக் கடவுளின் சின்னமான அரிவாள்தான்.

இரவு வானில் சூரியக் குடும்பத்தின் ஆறு கோள்களை வெறும் கண்ணால் எந்த கருவியும் இன்றிப் பார்க்க முடியும்.  நம் மூதாதையர்கள் ஆறாவது இடத்தில் ஞாயிறை வலம் வரும் சனிக் கோள், கண்ணால் பார்க்கும் கோள்களில் இதுதான் தொலைவில் உள்ளது என்பது தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் அதனை ஒரு கோள் என்று கொள்ளாமல் அதற்கு தெய்வீகம் கற்பித்து அதனை வணங்கி வந்தார்கள்.

சனிக்கோள் மஞ்சள் நிறத்தில் மின்னாமல் பளிச்சென்று தெரியும். பூமியிருந்து பார்க்கும்போது வானில் தெரியும் கோள்களில் மூன்றாவது பிரகாசமான கோள் சனி. சனிக்கோளை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதர்கள் பார்த்து வந்திருக்கின்றனர். புராணங்களே  சனியை  உண்மைக்கு மாறாக கருப்பு நிறக் கோளாக சித்தரித்தன. அது உண்மையல்ல.

சனிக் கோள்

சனிக்  கோள்  வியாழனுக்கும், நெப்டியூனுக்கும் இடையில் சூரியனைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது. சனி சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும். சனிக் கோள் 29.5  ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வருகிறது. தன்னைத்தானே சுற்ற 10 மணி, 33 நிமிடங்கள், 38 நொடிகள் எடுக்கின்றன. சனிக் கோள் ஒவ்வொரு இராசி மண்டலத்தைக் கடக்க 2.5 ஆண்டுகள் எடுக்கிறது. இப்படி ஒரு இராசியில் இருந்து அடுத்த இராசிக்குள் இடம்பெயர்வதை சனிப் பெயர்ச்சி  என்று சோதிடர்கள் சொல்கிறார்கள். சனி மட்டுமல்ல ஏனைய கோள்களும் தம் பாட்டுக்கு வெவ்வேறு தூரத்தில் வெவ்வேறு பாதையில், வெவ்வேறு வேகத்தில் சூரியனை சுற்றிவருகின்றன. அதே நேரம் இராசி வட்டத்தையும் சுற்றி வருகின்றன.

சனி கிரகம் A என்ற இடத்திலிருந்து B என்ற இடத்துக்கு நகர்ந்துள்ளது – இதுவே சனிப் பெயர்ச்சியாகும். இப்படத்தில் 1. சூரியன். 2. பூமி.

இராசி வட்டம் (Zodiac) என்பது சூரியனின் (உண்மையில் பூமியின்) சுற்றுப்பாதையில் மேலும் கீழும் காணப்படும் 8 பாகைப் பரப்பில் காணப்படும் விண்மீன்களின் தொகுப்பாகும்.  இந்த இராசி வட்டம் ஒவ்வொன்னும் 30 பாகை கொண்ட  சமமான பிரிவுகளாக இருக்கின்றன. அனைத்துலக வானியல் ஒன்றியம் வானியல் விண்மீன்களை நிலையான வான பகுதிகளாக வரையறுக்கிறது, அவை சோதிட அறிகுறிகளுடன் பொருந்தவில்லை. பன்னிரண்டு இராசி விண்மீன்கள் ஒவ்வொன்றும் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திருக்கும், இந்த பிராந்தியங்கள் வழியாக சூரியனின் பயணத்தைக் குறிக்கின்றன.

ராசி வட்டம்

சனி சூரியனிடமிருந்து 140 கோடி கிமீ (1,400,000,000000 கி.மீ ) தொலைவில் உள்ளது. இது 9 வானியல் அலகு ஆகும். ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள 14.9 கோடி கிமீ தொலைவு ஆகும். சனி இருக்கும் தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தைப் போல சுமார் 9 மடங்கு. சனியின் நடுக்கோட்டு விட்டம் 120,536 கிமீ. பூமியைப் போல சுமார் 10 மடங்கு ஆகும். துருவங்களில் விட்டம் 108,728 கிமீ தான். பூமியை விட 700 மடங்கு பெரியது.  எனவே சனிக் கோளில் 9 பூமிகளை  வரிசையாக நிற்க வைக்கலாம் அல்லது உள்ளே தூக்கிப் போட்டு அடக்கலாம். அவ்வளவு பெரியது. ஆனால் சனிக்கோள் வாயுகளால் நிரம்பியது சனி எனும் கோளானது வாயுவாலானது, பொருண்மையற்றது. தன்னைச் சுற்றி வளையம் கொண்டது. 145 சந்திரன்களைக் கொண்டது. சூரிய மண்டலத்தின் மாய எல்லையாக விளங்குவது. அந்த எல்லையில் நிற்கும்பொழுது அதற்கும் அப்பால் இருக்கும் எல்லையற்ற பிரபஞ்சத்தைக் காட்டுவது. சனிக்கோள் இருக்குமிடத்தில் சூரியனின் கதிர்கள் தேய்ந்து ஆற்றல் இழக்கின்றன.

ஞாயிறு குடும்பம்

சூரியனை சுற்றிவரும் கோள்களில் புதன்வெள்ளிபுவி மற்றும் செவ்வாய் ஆகியன பொதுவாக பாறைகள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றால் உருவானவையாகும். ஏனைய நான்கு புறக்கோள்களும் புவியொத்த கோள்களை விட நிறைமிக்கனவாகும். அவற்றில் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி போன்றவை பெரும்பாலும் ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் வளிமப் பெருங்கோள்கள் (Gas Giants) என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை மீதேன், அமோனியா போன்ற உயர் உருகு நிலை கொண்ட பொருட்களைக் கொண்டுள்ளதால் பனிப் பெருங்கோள்கள் (Ice Giants) என்றும் அழைக்கப்படுகின்றன. 

பூமியைத் தவிர ஏனைய 7 கோள்களும்  உயிரற்றவை. எந்த உயிரினமும் இந்தக் கோள்களில் இல்லை. காரணம் உயிரினத்துக்கு வேண்டிய தண்ணீர், காற்று இந்தக் கோள்களில் இல்லை. சனிக் கோள்  கண்களுக்கு மங்கலாகத் தெரிந்ததால் சனி கறுப்பு நிறம் எனச் சோதிடர்களும் மக்களும் நம்பினார்கள் இந்த நம்பிக்கையால் சனிக்கு  கெட்ட அல்லது தீய பலன்களைத் தரும்  கோள் என்ற பெயர் வந்தது.  ஏழரைச் சனி, மங்கு சனி, பொங்கு சனி, தங்கு சனி மரண சனி பல சனிகள் உண்டு.

சனியின் தீய பலன்களால் பீடிக்கப் பட்டுள்ளவர்கள் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சோதிடர்களும் கோயில் பூசாரிகளும் மூடர்களிடம் இருந்து பணம் வசூலிக்கிறார்கள். பரிகாரம் செய்ய  குழந்தைகள் உண்கிற  பால், தயிர்,  தேன், பழம், இளநீர் போன்றவற்றால் அபிசேகம் செய்து  குழந்தைகள் உண்ணும் உணவை வீணாக்குகிறார்கள். தமிழர்களின்  தாழ்வுக்கு இப்படியான மூடத்தனம் காரணமாக இருக்கிறது. 140 கோடி கிமீ தூரத்தில் உள்ள சனியை மேல் நாட்டு வானியலாளர்கள் விண்கலங்களை அனுப்பி ஆய்வு செய்கிறார்கள்.  ஆனால்  எமது மக்கள் அதைப் பார்த்து வீணாக குலை நடுங்கிச்  சாகிறார்கள்.

சனிக் கோளில் காசினி விண்கலம்

தமிழ்நாட்டுக் கோயில்கள் வாக்கிய பஞ்சாங்க நடைமுறையே  பின்பற்றப்படுகிறது. எனவே மார்ச் 29 திகதி இடம் பெறும் சனிப் பெயர்ச்சி அன்று   திருத்தலங்களான திருநள்ளாறு, பிராணேஸ்வரி உள்ளிட்ட பல கோயில்களில் வாக்கிய பஞ்சாங்க நடைமுறையே பின்பற்றப்படுகிறது.வழமையான பூசைகளே இடம் பெறும். சிறப்புச் புசைகள் இடம்பெறாது.

ஒருவர் பிறந்த இராசிக்கு 1, 2, 12, ஆகிய வீடுகளில் சனி வரும்போது,  ஏழரை சனி நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இரண்டாவது சுற்று நடக்கும் ஏழரைச் சனியை பொங்கு சனி என்றும் அதுவே மூன்றாவது சுற்று நடக்கும் போது மங்கு சனி எனச் சொல்லப்படுகிறது. அதேபோல் இராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம (எட்டில் பாதி)  சனியன்,  இராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்டக சனியாகவும், இராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அட்டம சனியன் என்றும் அழைக்கிறார்கள். இதற்கு அறிவியல் அடிப்படை எதுவும் கிடையாது. ஆனால் ஏழரைச் சனியன், அட்டமத்துச் சனியன் என ஏதாவது ஒரு சனியன் தன்னைப் பிடித்துள்ளதாக  ஒருவன் நம்பினால் அவன் உளவியல் ரீதியாக மெய்யாகவே பாதிக்கப்படுகிறான்.

சனிக்கோள் ஞாயிறைச் சுற்றிவரு 29.5 ஆண்டுகள் எடுக்கின்றது.   பன்னிரண்டு இராசிகளைக் கொண்ட இராசி மண்டலத்தில் ஒவ்வொரு இராசியைக் கடக்க 2.5 ஆண்டுகள் எடுக்கிறது. ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு கோள்கள் இடம் பெயரும் போது அதனைப் பெயர்ச்சி என சோதிடர்கள் கூறுகிறார்கள்.

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் கணிப்பில் மார்ச் மாதம் 29 திகதி சனிக்கிழமை  இரவு 11.01 மணிக்கு சனிக் கோள் கும்ப இராசியில் இருந்து மீன இராசிக்குப் பெயர இருக்கிறது. ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் 2026 மார்ச் 6 ஆம் திகதி புதன்கிழமை சனிப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதாவது இரண்டு பஞ்சாங்களுக்கும் இடையில் சுமார் ஓர் ஆண்டு வித்தியாசம் காணப்படுகிறது. ஏன் இந்த முரண்பாடு?

திருக்கணித பஞ்சாங்கம்  பூமி ஓர் ஆண்டில் சூரியனைச் சுற்றி வரும்  துல்லியமான கால அளவு 365 நாட்கள், 6 மணி, 9 நிமிடம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம்  3 நிமிடத்தை கூட்டி 365 நாட்கள், 6 மணி, 12 நிமிடம் என கணக்கிடுகிறது. இதன் காரணமாக இந்த வித்தியாசம் ஏற்படுகிறது. வானியலாளர்கள் சனிப் பெயர்ச்சி எப்போது இடம்பெறுகிறது என்கிறார்கள்? அவர்களது கணிப்பு திருக்கணித பஞ்சாங்கத்தை ஒத்ததாக இருக்கிறது.

தமிழர்களுடைய வீடுகளில் படிக்கும் அறை, புத்தக அறை எதுவும் கிடையாது. ஆனால் நிச்சயம் பூசை அறை இருக்கும். அறிவு நூல்கள் இருக்காது. புராணங்கள் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக சாதகக் கட்டு இருக்கும். பிள்ளைகளின் திருமணம் என்றால் சாதகத்தை கையில் எடுத்துக் கொண்டு சோதிடர்களிடம் ஓடுகிறார்கள். கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் காணப்படும் கோள்களும் நட்சத்திரங்களும் ஒரு குழந்தை பிறந்த ஆண்டு, மாதம், நாள், நேரம் போன்றவற்றின் அடிப்படையில் வாழ்க்கை அமைகிறது என நம்புகிறார்கள். அவற்றின் அலைகள் நல்லது, கெட்டது, நன்மை, தின்மை போன்றவற்றைத் தீர்மானிக்கிறது என நினைக்கிறார்கள்.

பேரண்டம்

உண்மை என்னவென்றால் கோள்களும் நட்சத்திரங்களும் பூமியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத தொலைவில் உள்ளன. சூரியன் மற்றும் சந்திரன் இரண்டின் ஈர்ப்பு விசை காரணமாக பூமியின் அலைகளில் ஒரு சிறிய விளைவை உருவாகுக்குகின்றன என்பது உண்மைதான். ஆனால் ஏனைய கோள்கள் நட்சத்திரங்கள் அப்படியல்ல.  வெள்ளிக் கோள் பூமிக்கு மிக அருகில் வருவதால் வலிமையுள்ளதாக இருக்கிறது.  இருப்பினும், அதன் அதிகபட்சத்தில் கூட, அதன் செல்வாக்கு சூரியன் மற்றும் சந்திரனை விட 10,000 மடங்கு குறைவாக உள்ளது. இராட்சத கோளான வியாழன் கூட வெள்ளியின் விசையை விட பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான சக்தியையே செலுத்துகிறது. எப்படிப் பார்த்தாலும் பூமியின் அலைகள் மீது கோள்கள் நட்சத்திரங்கள் செலுத்தும் தாக்கம் புலப்படுமாறு இல்லை. (மார்ச் 2025)

About VELUPPILLAI 3345 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply