கம்பரும் அவ்வையாரும்
நடா சுப்பிரமணியம்
அது ஒரு தமிழ் பெரும் சபை.
குலோத்துங்க சோழனின் வழிநடத்தலில் கூட்டப்பட்ட அந்த சபையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர், ஒளவையார் போன்ற பேரறிவு பெற்ற பெரும்புலவர்கள் அமர்ந்திருந்தனர.
சோழனின் அவையிலே கம்பர் பெரிதும் போற்றப்படுபவர். அரசவைக் கவிஞருள் ஒருவராக அதற்குரிய ஆடம்பரங்கள், பொன் அணிகலன்கள் முதலியவற்றுடன் விளங்கியவர். அரசனிடம் தனிப்பட்ட செல்வாக்கும் அவருக்கு இருந்தது.
அதனால், கம்பரைச் சுற்றிப் பலர் அவரைப் போற்றியபடியே இருந்தனர். அவர் எது சொன்னாலும் அதனைப் பாராட்டினர். அதன் சிறப்பை ஆராய்வதுகூட இல்லை. ஒளவையாருக்கு, கம்பரின் அந்த அளவற்ற ஆடம்பரமும், அவரைச் சுற்றியுள்ள போலி புலவர் கூட்டமும் வெறுப்பையே தந்தன.
கவிச்சக்கரவர்த்தி கம்பரின் பாட்டொன்றை மன்னன் வியந்து பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டில் சிறப்பு எதனையும் காணாத ஒளவையார், அந்த உரைகளைக் கேட்டு எள்ளி சிரித்தவண்ணம் இருந்தார். தற்செயலாக அவர் பக்கம் திரும்பிய மன்னனுக்கு, தன் கருத்தை அவர் ஏற்கவில்லை என்பது தெரிந்தது. “தங்கள் கருத்து யாதோ?” எனக் கேட்டான்.
அப்போது, ஒளவையார் “கவிதை ஒன்றைப் பாராட்டும்போது, அதன்கண் அமைந்துள்ள சொல் நயம் பொருள் நயம் ஆகியவற்றையே கருதுதல் வேண்டும். இங்கேயோ கம்பரின் பாட்டு’ என்பதற்காகவே அனைவரும் அதனைப் புகழ்கின்றீர்கள். அந்த நிலைமையை நினைத்து சிரித்தேன், எளிமையும் புலமை நலமும் பெற்றவர்கள் இங்கே எளிதில் பாராட்டுப் பெறுவது நிகழாது. இந்த அவையின் மதிப்புக்கு உரியவர்
ஆவதற்குப் பிறபிற ஆரவாரத் தகுதிகளும் நிறைய வேண்டியதிருக்கின்றது” என்று சொல்லி இந்த செய்யுளை பாடினார்.
‘விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல் நிறைய மோதிரம் வேண்டும்
அரை அதனில் பஞ்சேனும் பட்டேனும் இருந்தால்
அவர் தம் கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று’ .
விரகர் – நலனை எதிர்பார்த்து துதி செய்பவர்
அரை – இடுப்பு (உடலை பாதியாக பிரிக்கும் என்பதால் அரை எனப்பட்டது. எ.கா :அரைஞான் கயிறு)
அரசவைக்குப் பரிசினை நாடி வந்துள்ள புலவரின் அருகே, தந்திரக்காரர்களாக இருவர் அமர்ந்துகொண்டு, அவரைப் புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தப் புலவரது விரல்களுள் நிறைய மோதிரங்கள் விளங்க வேண்டும். அவர் இடுப்பிலே பஞ்சாடையோ பட்டாடையோ கவினுற விளங்குதல் வேண்டும். அங்ஙனமாயின், அவருடைய கவிதை நஞ்சு போல பிறருக்குக் கேடு விளைவிப்பதானாலும், வேம்பினைப் போல கசப்புச் சுவையுடையதாக இருந்தாலும், அதுவே நல்லது என்று இந்த அவையில் ஏற்று போற்ற பெறும்” என்பது பாடலின் பொருள்.
சோழனின் அவை புலமைக்கு மதிப்புத் தரவில்லை; புலவரின் புறத்தோற்றத் தகுதியை நோக்கியே மதிக்கிறது என்றும் உரைத்தார்.
இந்த பாடல் இன்றும் பொருந்துகிறது அல்லவா!
ஒளவையின் இந்தப்பாடலின் கருத்தை ஒத்ததாக இது நிகழ்ந்து ஏறக்குறைய ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பின்வரும் கவிதையை எமக்குத் தந்திருக்கின்றார்….
‘கன்று தான் சிங்கம் என்பான்
கரடிதான் கலைமான் என்பான்
பன்றிதான் யானை என்பான்
பருந்து தான் மஞ்சை என்பான்
அன்றிலே காக்கை என்பான்
ஆமென்பார் சபையிலுள் ளோர்;
வென்றவன் சொல்வ தெல்லாம்
வேதமல் லாமல் என்ன?
பள்ளமே இமயம் என்பான்
பாட்டியே குமரி என்பான்
வெள்ளியே ஈயம் என்பான் ;
வெந்தயம் இனிக்கும் என்பான்;
கள்ளியே முல்லை என்பான்
கண்ணாலே கண்டேன் என்பான்;
உள்ளவன் சொல்வ தெல்லாம்
உண்மையல் லாமல் என்ன?
நதிபோகும் திசையை மாற்றி
நடக்கட்டும் வடக்கே என்பான்
மதியம் தன்வானை விட்டு
மண்ணிலே வீழட்டும் என்பான்
இதுமுதல் கடல்நீ ரெல்லாம்
இனிக்கட்டும் தேன் போல் என்பான்
அதிகாரி போடும் ஆணைக்கு
அடங்காமல் வேறென் செய்ய?
சொல்லுவார் வார்த்தை யாவும்
தொல்புவி ஏற்பதில்லை
செல்வர்கள் வெற்றி பெற்றோர்
தினஏடு கையில் உள்ளோர்
வல்லவர் பதவி கொண்டோர்
வார்த்தையே அரங்கம் ஏறும்
நல்லவர் சொற்கள் ஏறும்
நாளொன்று வருமா தாயே!’
இப்போது மீண்டும் சோழனின் சபைக்கு வருவோம்….
ஒளவையார் பாடிய பாடலும் பேசிய பேச்சும் சோழனைப் பெரிதும் வருத்தின.
கம்பரிடத்தே அளவற்ற அன்பு கொண்டிருந்தவன் அவன். தன் அவையிலேயே, ஒருவர் கம்பரைப் பழிப்பதைக் கண்டு கலங்கினான். பழித்துக் கூறியவரோ நாடனைத்தும் கொண்டாடும் ஔவையார், அதனால் அவரைச் சினந்து கொள்ளவும் முடியவில்லை. அவரைத் தெளிவுபடுத்தவே அவன் விரும்பினான்.
“கம்பர் எனக்கு வேண்டியவர்; இதில் ஐயமில்லை. ஆனால், அவரைப் பாராட்டியது அவருடைய புலமை நுணுக்கத்தை அறிந்து உரைத்ததே ஆகும். மற்றும் தாங்கள் கருதுவதுபோல அவருடைய ஆடம்பரங்களை நினைத்து அன்று.
அவரைப் போலப் பெரிதான காவிய நூலைச் செய்து சிறப்புற்றவர் வேறு யார்தாம் இருக்கிறார்கள்?” என்று வினவினான்.
கம்பருக்கு ஆதரவாகவும் அதேசமயம் ஔவையார் பாரகாவியம் எதுவும் பாடவில்லை என்பதைச் சுட்டியதாகவும் அவன் பேச்சு அமைந்தது.
இதனை செவியுற்ற ஒளவைப் பெண் சும்மா இருப்பாளோ! அவளும் சோழனின் வினாவிற்கு விடையாக பின்வரும் செய்யுளை கூறுகின்றாள்:
‘வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது’
இந்த செய்யுளின் பொருள்:
“சோழனே! தூக்கணாங் குருவியின் கூட்டினைக் கண்டிருப்பாய்.அதனைபோல எவராலாவது ஒரு கூடு கட்ட முடியுமா?
குளவிகள் கட்டும் வலிய அரக்குக் கூட்டினைப்போல எவராலாவது செய்வதற்கு இயலுமா?
பழமையான கரையானின் புற்று எவ்வளவு அழகுடனும் நுட்பமுடனும் அமைந்திருக்கிறது!
தேனீக்கள் கட்டும் கூடுகளிலேதான் எத்தனை அமைப்பு நுட்பம் விளங்குகிறது!
சிலந்தியின் வலையைப்போல எவராலாவது ஒரு வலை பின்னிவிட முடியுமோ?
இவற்றை யாராலுமே செய்யவியலாதுதான். அதனால், அவற்றையே தொழில்நுட்பத்தில் தலைசிறந்தவை என்று பாராட்டலாமோ?
அதற்கு அதனதன் கூட்டினைக் கட்டுதல் எளிது; அஃதன்றி, வேறு எதுவுமே அவற்றுக்குத் தெரியாது.
அதனைப்போலவேதான் கவிதையும். ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொன்று எளிதாயிருக்கும்.
கம்பர் விருத்தப் பாவில் வல்லவரானால், வெண்பாவில் புகழேந்தியார் இருக்கிறார். உலாவில் நம் ஒட்டக்கூத்தர் வல்லவர். இப்படி ஒவ்வொரு துறையிலும் வல்லவர் உளர்.
அந்தந்த வல்லமையினை அறிந்துதான் பாராட்டுதல் வேண்டும்! அதுதான் சிறப்பு. “அஃதல்லாமல், ஒரு துறையிற் சிறந்தவரையே எல்லாம் அறிந்தவராகக்
கொண்டு, அளவுக்கு மீறிப் பாராட்டுதல் கூடாது. அவரும் அனைவரினும் பெரியவர் என்று செருக்குறுதலும் தவறு.
ஒவ்வொருவருக்கும் பிறராற் செய்யவியலாத ஒன்றை எளிதாகச் செய்வதற்கு இயலும். இதனை உணர்ந்து அடங்கியிருப்பதுதான் புலமை உடையவரின் பண்பு” என்றனர்.
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் – யாம்பெரிதும் வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது. “தூக்கணாங் குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் யாவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிவீர்களாக” என்பது பொருள்.
ஔவையாரின் பாடற்கருத்தினை அந்த அவையாலும், கம்பர், சோழன் ஆகியோராலும் மறுக்க முடியவில்லை. எப்படியோ தன்பால் வளர்ந்துவிட்ட கம்பர் மீதுள்ள அளவற்ற அன்புதான், அவரை அளவுக்கு மீறிப் போற்றுமாறு செய்தது என்பதனைச் சோழனும் உணர்ந்தான்.
அதனால் புலவர்கள் பலர் புண்பட்டிருப்பர் என்பதனையும், தன்மீதுள்ள அச்சத்தாலேயே அதுவரை ஏதும் கூறாதிருந்திருக்க
வேண்டும் என்பதையும், அதன்பின் அவன் தெரிந்து கொண்டான்.
(பி.கு: வேறு தளங்களில் படித்தவற்றை தொகுத்து தந்தது)

Leave a Reply
You must be logged in to post a comment.