மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்?

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்?

  • 18 பிப்ரவரி 2025

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என இந்தியாவின் மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க. போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்?

மத்திய அரசு, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு விடுவிக்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க மறுத்துவருகிறது. இந்த நிதியை விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிவருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேசம் வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் அந்த நிதியை விடுவிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

“புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை. தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பி.எம். ஶ்ரீ பள்ளிகள் (PM Shri) மட்டுமல்ல, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக வேறு பல பிரச்சனைகளும் (தமிழக அரசுடன்) இருக்கின்றன.”

”அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர். தமிழக மக்களின் நலன்களை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த நாடும் தேசியக் கல்விக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டபோதும் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? அந்த கொள்கைகள் தமிழ் மொழிக்கு எதிராக இருக்கின்றனவா? பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் மொழி, கல்வியில் பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதை அவர்கள் எதிர்க்கின்றனரா? தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக அவர்கள் மக்களை குழப்புகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. உங்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுத் தேர்கின்றனர். பிறகு, ஏன் அந்த கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது?” என்று கேள்வியெழுப்பினார் தர்மேந்திர பிரதான்.

அவரது இந்தப் பேட்டி தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி கே. பழனிச்சாமி உள்ளிட்ட பல தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். செவ்வாய்க் கிழமையன்று இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்த மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.

இது மறைமுகமாக இந்தியைத் திணிப்பதற்கான ஒரு வழியாகவே மாநிலத்தில் பார்க்கப்படுகிறது. இந்தியை அரசுப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக கற்றுக் கொடுக்கும் முயற்சிகளை பல ஆண்டுகளாகவே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது.

தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் குறிப்பிடும்போது, 1930களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும் 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமுமே பொதுவாக பேசப்பட்டாலும் தமிழ்நாட்டில் பல தருணங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் துவக்கம்

தமிழ்நாடு இந்தித் திணிப்பை எதிர்ப்பது ஏன்?
படக்குறிப்பு,சென்னையில் அன்மைந்துள்ள தக்ஷிண பாரத் இந்தி பிரசார சபா வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலை.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தியை பரவலாக்கும் முயற்சிகள் 1918ல் துவங்கின.

சென்னை மாகாணத்திலும் தென்னிந்தியாவில் இருந்த சமஸ்தானங்களான பங்கனப்பள்ளி, கொச்சின், ஹைதராபாத், மைசூர், புதுக்கோட்டை, சந்தூர், திருவாங்கூர் ஆகிய பகுதிகளிலும் இந்தியை பரப்பும் நோக்கத்தோடு சென்னை நகரத்தில் தக்ஷிண பாரத இந்தி பிரசார சபா 1918ல் மகாத்மா காந்தியின் முயற்சியில் துவங்கப்பட்டது.

1927ல் இதன் தலைவரான மகாத்மா காந்தி, இறுதிவரை அந்தப் பதவியில் நீடித்தார். 1935வாக்கில் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த ஆறு லட்சம் மாணவர்கள் அங்கு இந்தி கற்றுக்கொண்டிருந்தனர் என்கிறது பேராசிரியர் அ. ராமசாமி எழுதிய Struggle for Freedom of Languages in India நூல்.

அந்தத் தருணத்தில் தென்மாநிலங்களில் மாணவர்கள் தாமாக முன்வந்து இவ்வளவு பரவலாக இந்தியை கற்றுக்கொள்வது பிரச்னையாகவில்லை.

மொழிப்போர் வரலாறு

1935 இந்திய சட்டத்தின் கீழ், 1937ல் மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 159 இடங்களைப் பிடித்து வெற்றிபெற்றது. சி. ராஜகோபாலச்சாரியார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜூலை 14ஆம் தேதி அவர் பதவியேற்றுக்கொண்டார்.

இதற்குப் பிறகு ஆகஸ்ட் பத்தாம் தேதியன்று சென்னையில் ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர், பள்ளிக்கூடங்களில் இந்தி படிப்பது கட்டாயமாக்கப்படும் என அறிவித்தார்.

இதற்கு தமிழ்நாட்டில் சில இதழ்களும் சில காங்கிரஸ் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதற்குப் பிறகு நடந்த போராட்டங்களை விரிவாக விவரிக்கிறது Struggle for Freedom of Languages in India நூல்.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி, திருச்சி துறையூரில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய சி.என். அண்ணாதுரை, இதனைக் கண்டித்தார். அடுத்தடுத்து காரியங்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தன.

அதே நாளில் கட்டாய இந்தியை எதிர்ப்பது குறித்து கரந்தை தமிழ்ச் சங்கத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. செப்டம்பர் ஐந்தாம் தேதி சென்னையில் நடந்த கூட்டத்திலும் கட்டாய இந்தியை எதிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார் அண்ணா.

அக்டோபர் 4ஆம் தேதி கோகலே ஹாலில் நடந்த கூட்டத்தில் பேசிய மறைமலை அடிகள், தமிழின் இலக்கியச் சிறப்பையும் இந்தியையும் ஒப்பிட்டு, தமிழைக் காப்பாற்ற வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு மாநாடுகள் நடத்தப்பட்டு இந்தியை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு இந்தித் திணிப்பை எதிர்ப்பது ஏன்?
படக்குறிப்பு,இந்தி மொழியை கட்டாயமாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினார் ராஜாஜி.

ஆனாலும் இந்தியை கட்டாயமாக்கும் திசையில் தொடர்ந்து செயல்பட்டார் ராஜாஜி. 1938-39ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது 125 மேல்நிலை பள்ளிகளில் இந்தியைக் கற்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

சட்டமன்றத்தில் இருந்த நீதிக் கட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இருந்தாலும் 20,000 ரூபாய் இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி மெட்ராஸ் அரசு வெளியிட்ட ஆணையில், மேல்நிலைப்பள்ளியின் முதல் மூன்று வகுப்புகளில் (6,7,8) ஹிந்துஸ்தானி கட்டாயமாக்கப்படும் எனக் கூறப்பட்டது.

கன்னடம் பேசும் பகுதிகளில் 4 பள்ளிகள், மலையாளம் பேசும் பகுதிகளில் 7, தெலுங்கு பேசும் பகுதிகளில் 54, தமிழ் பேசும் பகுதிகளில் 60 பள்ளிகள் என 125 பள்ளிகள் இதற்கென தேர்வுசெய்யப்பட்டன.

இதையடுத்து, இந்தப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களைச் சேர்க்காமல் வேறு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டுமென பெற்றோருக்கு இந்தி எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மே மாத இறுதியில் சோமசுந்தர பாரதியார் தலைமையில் சென்னை மாகாண இந்தி எதிர்ப்பு சங்கம் உருவாக்கப்பட்டது. இதில் கி.ஆ.பெ. விசுவநாதம், பெரியார், உமா மகேஸ்வரன், டபிள்யு.பி.ஆர். சௌந்தரபாண்டியன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 1938ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி, ஸ்டாலின் ஜெகதீசன் என்பவர் முதல்வரின் இல்லத்தின் முன்பாக உண்ணாவிரதத்தைத் துவங்கினார்.

ஜூன் 1ஆம் தேதி ஈழத்து சிவானந்த அடிகள் தலைமையில் தி. நகரிலிருந்து முதல்வரின் இல்லம் வரை ஊர்வலமாகச் சென்று, அங்கே போராட்டம் நடத்தினர். பல்லடம் பொன்னுச்சாமியும் அன்று உண்ணாவிரதத்தைத் துவங்கினார்.

இதற்குப் பிறகு கட்டாய இந்தி தொடர்பாக மாகாண அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டது. அந்த விளக்கத்தில் “இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் நமது மாகாணத்திற்கு உரிய இடத்தைப் பெற, நம்முடைய படித்த இளைஞர்கள், இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியை அறிந்திருப்பது அவசியம். அதனால்தான் பள்ளிகளில் இந்துஸ்தானி அறிமுகப்படுத்தப்பட்டது” என அந்த விளக்கம் கூறியது.

இருந்தபோதும் இந்தி கற்பிக்கப்படும் பள்ளிக்கூடங்களுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன. இதில் கலந்துகொண்ட தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்குப் பிறகு ராஜாஜி செல்லுமிடங்களில் எல்லாம் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டப்பட்டது.

தமிழ்நாடு இந்தித் திணிப்பை எதிர்ப்பது ஏன்?

பல இடங்களிலும் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடந்துவந்த நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி சென்னையில் சி.என். அண்ணாதுரை கைதுசெய்யப்பட்டு அவருக்கு நான்கு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

டிசம்பர் மாதத்தில் பெரியார் கைதுசெய்யப்பட்டு, அவருக்கு ஒன்றரை மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த நடராசன் என்பவரது உடல்நிலை மோசமடைந்து, 1939 ஜனவரி 15ஆம் தேதி மருத்துவமனையில் காலமானார்.

மார்ச் மாதம் 11 ஆம் தேதி இதேபோல தாளமுத்து என்பவரும் காலமானார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த முதல் இருவர் இவர்கள்தான்.

1939ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி மேலும் 100 பள்ளிகளில் இந்தியைக் கற்பிக்கப்போவதாக அறிவித்தது மாகாண அரசு.

இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் துவங்கியது. போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் அமைச்சரவைகள் ராஜினாமா செய்தன.

அக்டோபர் 30ஆம் தேதி ராஜாஜியும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 1939 நவம்பரில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் 100 பள்ளிகளில் கட்டாய இந்தியை அறிமுகப்படுத்தும் திட்டத்தை நவம்பர் 27ல் சென்னை மாகாண ஆளுநர் ரத்துசெய்தார். ஆனால், ஏற்கனவே இந்தியைக் கற்பித்துவந்த 125 பள்ளிகளில் அது தொடர்ந்ததால், போராட்டங்களும் தொடர்ந்தன.

பிறகு, ஒரு கட்டத்தில் கட்டாய இந்தி கற்பிப்பதை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் வைசிராய் ஒப்புக்கொண்டார். 1940 பிப்ரவரி 21ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கட்டாய இந்தி ரத்து செய்யப்படுவதாகவும் விரும்பியவர்கள் வேண்டுமானால் படிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

இரண்டாவது இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

இரண்டாவது உலகப் போர் முடிந்த பிறகு மத்திய மற்றும் மாகண சட்டமன்றங்களுக்கு 1946ல் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றது.

முதல்வராக பதவியேற்ற டி. பிரகாசம் ஓர் ஆண்டிற்குள்ளேயே பதவி விலகினார். இதற்கடுத்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தார். 1948ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பள்ளிக்கூடங்களில் இந்தி கற்பிப்பது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது மாகாண அரசு.

ஆனால் இந்த முறை, தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்பை மனதில் கொண்டு ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது, சென்னை மாகாணத்தில் இருந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் பகுதிகளில் இந்தி கட்டாயப் பாடமாகவும் தமிழகப் பகுதிகளில் விருப்பப் பாடமாகவும் இந்தி அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதற்கு காங்கிரஸ் தலைவர்களும் தேசிய அளவிலான ஊடகங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து தமிழ்நாட்டிலும் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டது.

இதையடுத்து மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கின. இந்த முறை போராட்டத்தின் தலைமை நிர்வாகியாக சி.என். அண்ணாதுரை நியமிக்கப்பட்டார்.

பெரியாரை அழைத்து, முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பேசினார். ஆனால், அதில் பயன் ஏதும் ஏற்படவில்லை. ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்தி எதிர்ப்புப் போராட்டம் துவங்கியது. பெரியார், அண்ணா உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி சென்னைக்கு வந்தபோது அவருக்குக் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. முதல்வர் ஓமந்தூரார், கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் ஆகியோருக்கும் கறுப்புக் கொடி காட்டப்பட்டது.

1948 செப்டம்பர் 13ஆம் தேதி ஹைதராபாத் மீது இந்திய அரசு போலீஸ் நடவடிக்கையை தொடங்கியபோது சென்னை மாகாணத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பிறகு, அக்டோபரில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மீண்டும் தொடர முடிவுசெய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் 144 தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு, இது தொடர்பான போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பலர் கைதுசெய்யப்பட்டனர். இருந்தாலும் இந்தி கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்களை முற்றுகையிடுவது நீடித்துவந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜர் ஒரு கருத்தை வெளியிட்டார்.

“பள்ளிக் கூடங்களில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து” என்றார் அவர். இந்நிலையில், 1949ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓமந்தூரார் பதவி விலகினார். இதையடுத்து, பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயப் பாடமாக இருந்தது விலக்கிக்கொள்ளப்பட்டது. போராட்டமும் முடிவுக்கு வந்தது.

தமிழ்நாடு இந்தித் திணிப்பை எதிர்ப்பது ஏன்?

இந்தியைக் கட்டாயமாக்கும் மூன்றாவது முயற்சி

ஓமந்தூராருக்குப் பிறகு பி.எஸ். குமாரசாமி ராஜா முதல்வரானார். அவரது அமைச்சரவையில் மாதவ மேனன் கல்வி அமைச்சராகப் பதவியேற்றார். 1950 மே இரண்டாம் தேதி, பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இந்த முறையும் சி.என். அண்ணாதுரை இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். மிகப் பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்தப்போவதாகவும் அறிவித்தார். ஆனால், விரைவிலேயே காங்கிரஸ் அரசு இந்த முடிவிலிருந்து பின்வாங்கியது. பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயமாக்கும் உத்தரவை ஜூலை 27ஆம் தேதி திரும்பப் பெற்றுக்கொண்டது.

பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயமாக்குவதற்கு நடந்த முயற்சிகள் இதோடு முடிவுக்கு வந்தன. இதற்குப் பிறகு ஆட்சி மொழியாக இந்தியை இந்திய அரசு முன்வைத்தபோது, மீண்டும் ‘இந்தி திணிப்புக்கு எதிரான’ போராட்டம் வெடித்தது. அரசமைப்புச் சட்டத்தை மையமாக வைத்து இந்தப் போராட்டங்கள் வெடித்தன.

இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்குவதை எதிர்த்த போராட்டம்

இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் ஆங்கில வடிவத்தை அதிகாரபூர்வமான அரசியலமைப்பு சட்டமாக வைக்காமல், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை அதிகாரபூர்வமான அரசமைப்புச் சட்டமாக்க முயற்சிகள் நடந்ததை கிரான்வில் ஆஸ்டின் எழுதிய The Indian Constitution: Corner Stone of a Nation நூல் விவரிக்கிறது.

அந்த நூலில் உள்ள தகவல்களின்படி, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை இந்தியில் மொழிபெயர்த்து, அதனையே அடிப்படையான அரசமைப்புச் சட்டமாக வைத்துக்கொள்ளும் திட்டத்தை முன்மொழிந்தார் அரசமைப்புச் சட்ட அவையின் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத்.

1948ஆம் ஆண்டு கோடை காலத்தில் இந்தி மொழிபெயர்ப்பு நேருவிடம் அளிக்கப்பட்டது. “அதிலிருக்கும் ஒரு வார்த்தையும் எனக்குப் புரியவில்லை” என ராஜேந்திர பிரசாத்துக்கு கடிதம் எழுதினார் நேரு. முழுக்க முழுக்க சமஸ்கிருதமயமாக்கியதால்தான் அது யாருக்கும் புரியவில்லையென இந்தி ஆதரவாளர்கள் பிறகு குற்றம்சாட்டினார்கள்.

இருந்தாலும் இந்தி அரசமைப்புச் சட்டத்தை அதிகாரபூர்வமாக்கும் முயற்சிகள் தொடரவே செய்தன. ஒரு கட்டத்தில் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, ”தென்னிந்தியாவில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு இது உதவிகரமாக மாறிவிடும்” என்றார்

விரைவிலேயே இந்த விவகாரம் ராஜேந்திர பிரசாத்துக்கும் நேருவுக்கும் இடையிலான போட்டியாகவே மாறியது. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டமும் பிறகு இந்தியில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டமும் அதிகாரபூர்வமானதாக இருக்கலாம் என்று ஒரு யோசனையை முன்வைத்தார் ராஜேந்திர பிரசாத். ஆனால் இது ஏற்கப்படவில்லை. ஆங்கில வடிவமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதற்கு நடுவில் இந்தியாவின் தேசிய மொழி எது என்பது குறித்த பிரச்னை அரசமைப்பு அவையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இந்தியை தேசிய மொழியாகவும் தேவநகரியை தேசிய எழுத்தாகவும் அங்கீகரிக்க வேண்டும் என இந்தியின் ஆதரவாளர்கள் கூறினார்கள்.

ஆனால், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். முடிவில், இந்தி இந்தியாவின் அலுவல் மொழியாக அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக விளங்கும் என்றும் அதன் பின்னர் இந்தி மொழி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தி எதிர்ப்பு

இந்தியாவின் புதிய அரசமைப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஆகவே அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றுக் கொண்டபடி 1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் சூழல் ஏற்பட்டது.

இது இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, 1965க்குப் பிறகும் ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக விளங்கச் செய்வதற்கான சட்டம் ஒன்று 1963ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

The Official Languages Act, 1963 என்ற இந்தச் சட்டம், 1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்குப் பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடரலாம் எனக் குறிப்பிட்டது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.என். அண்ணாதுரை, ‘தொடரலாம்’ எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, ‘தொடரும்’ (may என்பதற்குப் பதிலாக Shall) எனக் குறிப்பிட வேண்டும் என்றார். இருந்தபோதும் அந்தச் சட்டம் 1963ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி நிறைவேறியது.

இந்தச் சட்டத்தில் திருப்தியடையாத தி.மு.க., இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆயத்தமானது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17ஐ எரிக்கும் போராட்டங்களையும் நடத்த ஆரம்பித்தது.

தலைவர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டார்கள். அண்ணாவும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தத் தருணத்தில் திருச்சி ரயில் நிலையத்திற்கு முன்பாக சின்னச்சாமி என்பவர் ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்று கூறியபடி தீக்குளித்து உயிரிழந்தார். 1964ஆம் வருடம் முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன.

1964ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி, “அரசமைப்புச் சட்டம் குறிப்பிட்டபடி ஜனவரி 26ஆம் தேதி முதல் இந்தி, இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாகும். இந்தியுடன் ஆங்கிலமும் தொடர 1963ஆம் ஆண்டின் சட்டம் வழிசெய்தாலும், 1965 ஜனவரி 26ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தின் எல்லா அலுவல்களுக்கும் இந்தியே பயன்படுத்தப்படும்” என்றது அந்த அறிவிப்பு.

இதையடுத்து அந்த தினத்தை துக்க தினமாக கடைபிடிக்கப்போவதாக அறிவித்தது தி.மு.க.

ஜனவரி 25ஆம் தேதி தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டார் அண்ணா. மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். சென்னைக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேப்பியர் பூங்காவுக்கு அருகில் திரண்டு, முதலமைச்சர் எம். பக்தவத்சலத்தைச் சந்திக்க புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர்.

ஆனால், அவர் மாணவர்களைச் சந்திக்க விரும்பவில்லை. அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மாணவர்கள் மாலையில் மெரீனாவில் திரண்டு இந்தி புத்தகங்களை எரித்தனர். மதுரையில் ஊர்வலமாகச் சென்ற மாணவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தைத் தாக்கினர்.

1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டக் காட்சி.
படக்குறிப்பு,1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டக் காட்சி.

டி.எம். சிவலிங்கம் என்பவர் கோடம்பாக்கத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரைத் தொடர்ந்து கீழப்பழுவூர் சின்னச்சாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன் என பலரும் தற்கொலை செய்துகொண்டனர்.

ஜனவரி 27ஆம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் ராஜேந்திரன் என்ற மாணவர் உயிரிழந்தார். பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. ரயில்கள் நிறுத்தப்பட்டன. பல இடங்களில் பேருந்துகள் எரிக்கப்பட்டன. மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பிப்ரவரி 11ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான சி. சுப்பிரமணியமும் ஓ.வி. அளகேசனும் ஆங்கிலமே தொடர வேணடுமெனக் கூறி ராஜினாமா செய்தனர்.

மாணவர்களின் போராட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துவந்த நிலையில், அதனை நிறுத்த முடிவுசெய்தார் அண்ணா. மாணவர் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். முதலில் அதனை ஏற்காத மாணவர்கள், பிறகு அரை மனதுடன் அதனை ஏற்றுக்கொண்டனர்.

இந்த கட்டத்தில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் இறங்கிவந்தார். பிப்ரவரி 11ஆம் தேதி வானொலியில் உரையாற்றிய பிரதமர், “மக்கள் எவ்வளவு காலம் வேண்டுமோ அவ்வளவு காலத்திற்கு ஆங்கிலத்தை ஒரு மாற்று மொழியாக வைத்திருக்க விரும்புகிறேன். ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக வைத்திருக்கும் முடிவை நான் இந்தி பேசும் மக்களிடம் விடாமல், இந்தி பேசாத மக்களிடம் விடப்போகிறேன்” என்று குறிப்பிட்டார்.

இந்த உறுதி மொழியையடுத்து போராட்டம் கட்டுக்குள் வர ஆரம்பித்தது. பிப்ரவரி 12ஆம் தேதி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை காலவரையின்றி ஒத்திவைத்தனர். ஓ.வி. அளகேசனும் சி. சுப்பிரமணியமும் தங்கள் ராஜினாமாவை திரும்பப் பெற்றனர். மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.

1986ஆம் ஆண்டு போராட்டம்

1986ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமரான ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

அதன்படி நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் துவங்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்பதால் தி.மு.க. அதனைக் கடுமையாக எதிர்த்தது. நவம்பர் 17ஆம் தேதி அரசமைப்பு சட்டத்தின் 17வது பிரிவை தி.மு.கவினர் எரித்தனர். தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படாது என வாக்குறுதி அளித்தார் ராஜீவ் காந்தி. இதற்குப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிக்கூடங்கள் அனுமதிக்கவேபடவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

About VELUPPILLAI 3345 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply