பெளத்தமும் சிங்களமும்
September 9, 2010
- கருத்துக்கள உறுப்பினர்கள்
(சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எழுதியது இது. 2000 ஆண்டு நோர்வேயின் சமரச முயற்சியைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள நோர்வே நாட்டுத் தூதரகத்தின் முன்பு சமாதானத்திற்கு எதிராக சிங்களப் பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது புத்தன் எங்கே! சிங்களப் பிக்குகள் எங்கே! என மனத்தில் ஏற்பட்ட கேள்வியைத் தொடர்ந்து எழுதிய ஒன்று இது. தற்போது ஈழத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் விடுதலைப் போரைச் சிதைத்திருந்தாலும் பெளத்தமும் சிங்களமும் அப்படியேதான் இருக்கின்றன.)
கி.மு 260, மௌரியப் பேரரசின் மூன்றாவது அரசன் மாமன்னன் அசோகன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்தான். கலிங்க நாடு (தற்போதைய ஒரிசா மானிலம்) மிகப் பெரிய நிலப்பரப்பையும் படைபலத்தையும் கொண்ட நாடு கலிங்கத்தின் வெற்றி அசோகனின் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. தன் கனவை நனவாக்கும் பொருட்டு தன் பாரிய படையுடன் கலிங்கத்திற்குள் புகுந்தான் அசோகன். பெரும்போர் மூண்டது பல்லாயிரக்கணக்கான வீரர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டனர் குருதி ஆறாக ஓடியது ஈற்றில் கலிங்கம் அசோகனிடம் வீழ்ந்தது. வெற்றிக்களிப்பில் மிதந்தவன் அன்று மாலை போர்க்களத்தைப் பார்வையிடச் சென்றான். அங்கு அவன் கண்ட காட்சிகள் அவனை நிலைகுலையச் செய்தன, அறுபட்ட தலைகளையும், வெட்டுண்டு சிதறிக்கிடக்கும் உடலுறுப்புக்களையும், உயிரற்ற உடல்களையும் அவைமீது அழுது ஆராற்றும் தாய்மார்களையும்; பெண்களையும் கண்டான்.
போர் எவ்வளவு கொடியது என்பதை அவன் கண்ட காட்சிகள் அவனக்கு உணர்த்தின. இவ்வளவு பெரிய அழிவுக்குத் தான் காரணமாகிவிட்டேனே என மனம் வருந்தினான் அன்றிலிருந்து அவனால் ஒரு கணம் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஓடிச் சென்று புத்த துறவி ஒருவரின் பாதங்களில் அடைக்கலம் புகுந்தான். அவருடைய போதனைகளை ஏற்று அவரின் மார்க்கத்தைத் தழுவிக்கொண்டான். அன்றிலிருந்து அவன் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகியது போரை வெறுத்தான் சமாதானத்தை விரும்பினான் நாடுகளுக்கிடையே அன்பும் நட்புறவும் பேணப்பட வேண்டுமேயன்றி போரும் பகையும் கூடாதென்று தீர்மானித்தான் அது மட்டுமல்ல தான் செய்த தவறை வேறு எவரும் செய்யக் கூடாதெனும் முடிவுக்கு வந்தான், நாடுகளுக்கிடையே அன்பையும் அறத்தையும் தழைக்கச் செய்யும் நோக்கோடு தான் தழுவிய அப்புதிய மார்க்கத்தை பாரெங்கும் பரப்பத் தொடங்கினான் அசோகன். புத்தரால் தோற்றுவிக்கப்பட்டு அசோகனால் பரப்பப்பட்ட உயரிய மார்க்கம்தான் பௌத்தம். ஆம் பௌத்தம் மதமல்ல அது ஒரு மார்க்கம் அன்பின்மீதும் அறத்தின்மீதும் கட்டியமைக்கப்பட்ட மார்க்கம் மதமென்றால் கடவுளைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும் கடவுளையே காட்டாத பௌத்தம் எவ்வாறு மதமாகயிருக்க முடியும்?
பௌத்தத்தை ஆய்வு செய்து பின்னாளில் அம் மார்க்கத்தைத் தழுவிக்கொண்ட அண்ணல் அம்பேத்கர் கூறுகையில் புத்தரின் போதனைகளும் மார்க்கமும் தவறாக பல நாட்டவர்களால் கடைப்பிடிக்கப் பட்டுவிட்டதென்றும், கடவுளை மறுத்த புத்தரை கடவுள் அவதாரமாகவே கருதிவிட்டார்கள் என்கிறார்.
பௌத்தம் ஒரு மார்க்கம்தான், என்றாலும் மக்களின் மன எண்ணப்படி மதமாக எடுத்துக் கொண்டாலும,; தமிழர்களைப் பொறுத்தவரை இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் போல் பௌத்தமும் தமிழர்களுக்கு அந்நிய மதம்தான். பண்டைய தமிழர்களின் வழிபாடு இயற்கையோடு இணைந்திருந்ததேயன்றி மதப்பேதங்கள் இருக்கவில்லை என்பதை சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. அதிலும் குறிப்பாக போரில் வீரமரணம் அடைந்தவர்களை வழிபட்டார்கள்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
எனும் வள்ளுவரின் வாக்குப் படி நல்ல முறையில் வாழ்ந்து மடிந்த தம் முன்னோர்களை வணங்கும் நடுகல் முறையே பரவலாகக் கணப்பட்டது. அதேசமயம் பௌத்தத்தின் எழுச்சி எவ்வித மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதையும் பௌத்தம் தமிழர்களால் எவ்வாறு கையாளப் பட்டது என்பதையும் அதே பௌத்தம் சிங்கள இனவாதிகளால் எவ்வாறு கையாளப்பட்டது என்பதையும் பார்ப்போம்.
பௌத்தத்திற்கு முன் கி.மு. 15 ஆம் நூற்றாண்டளவில் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஹைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் பண்பாட்டு படை எடுப் பாளர்களான ஆரியர்கள். இவர்களின் வருகையால் ஏற்கனவே சிந்து சமவெளி நாகரிகத்தை அமைத்து மேம்பாட்டுடன் வாழ்ந்த தமிழர்களின் பண்பாடும் நாகரிகமும் சிதைவுற்றது. ஆரியர்களின் வரவுக்குப் பின் அவர்களின் வேதமதமாகிய ஆரிய மதம் பரவத் தொடங்கியது. பிறப்பினால் ஏற்றத் தாழ்வுகளையும் யாகமெனும் பெயரில் உயிர்க்கொலைகளையும் நியாயப் படுத்திய இம்மதம் திராவிட மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது. ஆரிய திராவிட மோதல்கள் அக்காலத்தில் ஏராளமாக நடந்திருக்கின்றன. தமிழுலகத்தை எடுத்துக்கொண்டால் பண்டைய தமிழிலக்கியங் களில் ஆரிய எதிர்ப்புக்கள் கணிசமாகவே காணப் படுகின்றன.
இவ்வேளையில் மனிதநேயமே சிறந்தது, உயிர்க் கொலை கூடாது, மனிதரில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிப்பது கயமைத்தனம் போன்ற உயரிய கோட்பாடுகளுடன் உருவாகிய பௌத்தம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பௌத்தத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தர் திராவிட இனத்தில் தோன்றிய ஓர் ஆரிய எதிர்ப்பாளரே, இவர் தமிழ் படித்தார் என்பதை வடமொழி நூலான ‘லலித விஸ்தரம்’ கூறுகிறது. வடநாட்டில் செல்வாக்குப் பெற்ற பௌத்தம் தென்னாட்டிலும் பரவியது ஏற்கனவே வைதீகப் புரட்டல்களால் வெறுப்புற்றிருந்த தமிழர்களை பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது. பெருவாரியான தமிழர்கள் பௌத்தத்தைத் தழுவிக் கொண்டார்கள். சங்க காலத்திற்குப் பின் தமிழில் தோன்றிய பெருவாரியான இலக்கியங்களான ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் போன்றவற்றில் சமணத் துறவிகளுக்கு அடுத்து பௌத்தர்களின் பங்கே காணப்படுகின்றது.
இவற்றுள் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை முழுக்க முழுக்க பௌத்த நெறிகளை உள்ளடக்கிய ஒன்றாகவே அமைந்துள்ளது. மணிமேகலை எனும் இளம் பெண்துறவியின் வாழ்க்கையை வைத்தே இக்காப்பியம் அமைக்கப்பட்டுள்ளது. மனிதனால் எதைத் தாங்கினாலும் பசியைத் தாங்கமுடியாது அதனால்தான் பண்டைய தமிழர்கள் பசியைப் பிணி என்று அழைத்தனர் அவ்வகையில் இளம் வயதில் துறவறம் மேற்கொண்ட மணிமேகலை, மக்களின் பசிப் பிணியைப் போக்கி சென்ற இடமெல்லாம் அன்பையும் அறத்தையும் போதித்து இறுதியில் பௌத்த நெறிப் படி மடிகிறாள். மதுரையைச் சேர்ந்த சீத்தலைச் சாத்தனார் எனும் தமிழ்ப்புலவரால் இயற்றப்பட்ட, தமிழர்களின் கலை பண்பாட்டுக் கருவூலமான இக்காப்பியத்திற்கு நிகரான ஒரு பௌத்த நெறிக் காப்பியம் உலகில் வேறு எந்த மொழிகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைப் போன்று ஈழத்திலும் ஏராளமான தமிழர்கள் பௌத்தத்தைத் தழுவிக் கொண்டார்கள் அதனால்தான் தமிழீழ மண்ணில் பல பௌத்த சின்னங்களும் விகாரைகளும் இருக்கின்றன இந்த உண்மை தெரியாமல் பௌத்த சின்னங்களும் விகாரைகளும் இருப்பதால் ஒட்டு மொத்த இலங்கையும் தங்களுக்குத்தான் சொந்தம் என்கிறது சிங்களம். ஆனால் உண்மை என்ன? இலங்கைத் தீவானது ஒரு காலத்தில் தமிழர்களுக்குத்தான் சொந்தமாய் இருந்தது என்பதுதான் வரலாறு.
சிங்களவர்களே இலங்கையின் தொன் குடிகள், தமிழர்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்த அந்நியர்கள், வந்தேறு குடிகளான தமிழர்களுக்கு தனி நாடு எதற்கு என்று இலங்கையில் உள்ள சிங்களக் கட்சிகளும் ஊடகங்களும் ஆண்டாண்டு காலமாகக் கருத்து தெரிவித்து வருகின்றன. எது நடந்ததோ அதுதான் வரலாறு. தன்னை நியாயப்படுத்துவதற்காக வரலாற்றைத் திரித்து வருகிறது சிங்களம். இலங்கையின் தொன் குடிகள், யார்? ஏன்ற வினாவுக்கு வரலாறு என்ன விடையளிக்கிறது என்று பார்ப்போம்.
கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்து நாட்டின் ரோயல் சொசைட்டி உறுப்பினராக இருந்த பி.எல். ஸ்கிலேட்டர் என்ற உயிரியல் அறிஞர் கடல் கொண்ட கண்டம் ஒன்று இருந்தது என்றும் அதற்கு லெமூரியா என்றும் பெயர் சூட்டினார். இக்கூற்று பல வரலாற்று அறிஞர்களால் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளை உற்று நோக்கையில் லெமூரியாவானது குமரிக்கண்டம், குமரிநாடு, நாவலந்தீவு போன்றவற்றை உள்ளடக்கிய ஒன்றாகத் தெரிகிறது. இதில் வரும் குமரிக் கண்டத்தில்; ஈழமும் தமிழகமும் ஒரே நிலப்பரப்பைக் கொண்டு இருந்தன. பின்னாள்களில் ஏற்பட்ட கடல்கோள்களினால் இரண்டும் தனித்தனியே பிரிந்தன. பல வரலாற்று ஆசிரியர்களால் ஆய்வு செய்து கூறப்பட்ட இவ்வுண்மை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
‘பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை யாண்ட தென்னவன் வாழி!
ஈழத்தோடு இணைந்திருந்த தென்பாண்டி நாடு தமிழ் பேசும் மக்களைக் கொண்ட நாடு, ஈழத்தின் ஆதி குடிகளான வேடர், நாகர், இயக்கர் ஆகியோர் பேசிய மொழி தமிழ்தான் என்றும் கூறப்படுகிறது அதன் பின் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் கழித்து கி.மு 6 ஆம் நூற்றாண்டில் ஆரிய இளவரசன் விசயனின் வருகையிலிருந்தே சிங்களவரின் வரலாறு தொடங்குகிறது, சிங்களவர்கள் வந்தேறு குடிகள்தான் என்பதை சிங்களவர்களாலே போற்றிக் கொண்டாடப்படும் மகாவம்சமே பின் வருமாறு கூறுகிறது.
‘வங்க நாட்டு இளவரசியான சுபதேவி ஒரு நாள் அரண்மனையை விட்டு வெளியேறி லாலா எனும் நாட்டை அடைந்தபோது அங்கு மனிதர்களைக் கொன்று தின்னும் சிங்கன் என்பவன் அவளைக் கடத்திக் கொண்டு போய் குகை ஒன்றில் அடைத்து வைத்தான் பகலில் வெளியில் போய் மனிதர்களை வேட்டை ஆடுவதும் இரவில் குகைக்குள் வந்து சுபதேவியுடன் காலம் கழிப்பதுமாய் இருந்து வந்தான், நாளடைவில் இருவருக்கும் சிங்கபாகு சிங்கவல்லி என ஓர் ஆணும் ஒரு பெண்ணுமாய் இரு குழந்தைகள் பிறந்தன. சிங்கபாகு வளர்ந்து பெரியவனானதும் தன் தந்தையைக் கொன்று விட்டு தாயையும் தங்கையையும் கூட்டிக்கொண்டு தன் பாட்டனின் நாடான வங்கத்திற்குச் சென்று அங்கு தன் தங்கை சிங்கவல்லியையே பட்டத்து அரசி ஆக்கி நாட்டை ஆண்டு வந்தான் அவர்களுக்கு 32 பிள்ளைகள் பிறந்தன அவர்களுள் மூத்தவனான விசயனை இளவரசனாக்கினர். விசயன் பெரியவனானதும் பல தீய செயல்களில் ஈடுபட்டதால் அவனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் அவனது தந்தை சிங்கபாகு நாடு கடத்தினான். விசயனும் அவனது தோழர்களுடன் பல நாள்கள் கடலில் அலைந்து இறுதியில் இலங்கைத் தீவை வந்தடைந்தான், அங்கு இயக்க இனத்தைச் சேர்ந்த இளவரசி குவேனியை மணம் முடித்தான் அவனது தோழர்களும் இயக்க இனத்தைச் சேர்ந்த பெண்களை மணம் முடித்தனர்’
இவ்வாறே இலங்கையில் சிங்களவர்; குடியேறினர். ஆரியர்கள் எந்த நாட்டில் குடியேறுகிறாகளோ அந்த நாட்டு மண்ணின் மக்களை சூழ்ச்சியால் வென்று தங்கள் வழி இன மொழிப் பண்பாட்டைத் திணிப்பது வழக்கம் ஈழத்திலும் அவ்வாறே நடந்தது அதற்குப் பின்பும் பெருவாரியான ஆரியக் கூட்டங்கள் ஈழத்தில் வந்து குடியேறியதாக மகாவம்சம் கூறுகிறது. விசயனின் வருகைக்கு முன் ஒட்டு மொத்த இலங்கையும் ஒரு காலத்தில் தமிழர்களுக்குத்தான் சொந்தமாய் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் சிங்கள அரசு ஒரு முத்திரையை வெளியிட்டது. விசயன் கப்பலில் இருந்து இறங்குவது போலவும் இளவரசி குவேனி அவனை வரவேற்பது போலவும் அம்முத்திரை சித்தரிக்கப்பட்டிருந்தது. தன்னையும் அறியாமல் உண்மையைக் கக்கிவிட்ட சிங்கள அரசு அவசர அவசரமாக முத்திரையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
விசயன் ஈழத்தில் நிலையான சிங்கள ஆட்சியை ஏற்படுத்தி அமைதியக வாழ்ந்த தமிழர்களுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினான் இருந்தபோதிலும் தமிழ் சிங்கள மோதல்கள் அப்போது இருந்ததற்கான சான்றுகள் இல்லை. கி.மு 2 ஆம் நூற்றாண்டில் தமிழ் அரசன் எல்லாளனுக்கும் சிங்கள அரசன் துட்டகாமினிக்கும் இடையில் நடைபெற்ற போர்களில் இருந்தே சிங்கள இனவாதம் தமிழர்கள் மேல் வளர்க்கப்பட்டு இருத்தல் வேண்டும் அதுமட்டுமல்லாது இப்போர்களில் பௌத்தமும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. போர்கள் கூடது என்பதற்காக அசோகனால் பரப்பப்பட்ட பௌத்தம் தமிழர்களுக்கெதிரான போரில் துட்ட காமினியால் பயன்படுத்தப்பட்டது. இன்றும் சிங்கள பிக்குகள் துட்டகாமினியை தங்கள் வரலாற்று நாயகனாகக் காண்பதுடன் பெரும்பாலான சிங்களவர்களுக்கு காமினி என்ற பெயர் இருப்பதன் வழியாக இந்த உண்மையத் தெரிந்து கொள்ளலாம். இலங்கை வரலாற்றில் எல்லாளன் – துட்டகாமினி போர் மிக முக்கிய ஒன்றாகக் கருதப் படுகிறது. கி. மு 205 முதல் அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த தமிழ் வேந்தன் எல்லாளன். இலங்கைத் தீவை நீதி நெறி தவறாமல் 44 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அதன்பின் கி. மு 161 இல் துட்ட காமினியால் தந்திரமாகக் கொல்லப் பட்டு வீரமரணம் எய்தினான், அப்போது எல்லளனுக்கு வயது அறுபதைத் தாண்டி விட்டதென்பதும் துட்டகாமினி முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மன்னன் ஒருவனை தந்திரத்தால் வெற்றி கண்ட இப் போரை சிங்கள வரலாற்றாசிரியர்கள் புனிதப் போர் என்று குறிப்பிட்டுள்ளனர். இவர்களால் வெற்றி கொள்ளப் பட்ட எல்லாளன் பௌத்தத்தையும் போற்றி மதித்த பெருமகன் என்பதை மகாவம்சமும் குறிப்பிடத்தவறவில்லை. அதன்பின், தமிழ் அரசர்களுக்கும் சிங்களஅரசர்களுக்கும் தொடர்ந்து போர்கள் நடந்த வண்ணம் இருந்தன, தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர்கள் சிங்களஅரசர்களை அடக்கியாண்டார்கள் என்று வரலாறு கூறுகிறது. அப்போதெல்லாம் பெரும்பாலான தமிழர்கள் பௌத்தத்தையே தழுவியிருந்திருக்க வேண்டும்.
ஒரு காலத்தில் இந்திய முழுவதும் செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்தம் பின்னாள்களில் மாபெரும் வீழ்ச்சி கண்டது, இதன் விழ்ச்சிக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன பௌத்தத்தின் பிராமண எதிர்ப்புக் கொள்கைகளும், சாதியத்திற்கு எதிரான சமரசப் போக்கும் வேத மதத்தையும் அதன் வைதீகப் புரட்டல்களையும் ஆட்டம் காணச் செய்தது. இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள் பௌத்ததுக்குள் புகுந்து அங்கேயும் தங்கள் வர்ணாசிரமக் கொள்கைகளைப் பரப்பி புத்தரும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று என்பது போன்ற கட்டுக்கதைகளைப் பரப்பி இறுதியில் பௌத்தத்தை இந்தியாவை விட்டே துரத்தி விட்டார்கள் இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியவில் இல்லாமல் ஏனைய ஆசிய நாடுகள் முழுவதிலும் இருப்பதற்கு இதுவே காரணமாகக் கருதப் படுகிறது.
7 ஆம் நூற்றாண்டில் நாயன்மார் காலத்தில் தமிழகத்தில் பக்தி இயக்கம் தோன்றியபோது சைவம் மாபெரும் எழுச்சியுற்றது. சைவத்தின் எழுச்சி தமிழர்களை சைவத்தின்பால் கொண்டு சென்றது. ஈழத்தில் சிங்களத்தின் பால் தமிழர்களுக்கு ஏற்பட்ட மொழி இனம் சார்ந்த கருத்து வேறுபாடுகளும் பௌத்தத்தைச் சிங்களம் பயன்படுத்திய விதமும் தமிழர்களுக்கு பௌத்தத்தின் மேல் ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். நாளடைவில் பௌத்தம் தமிழர்களை விட்டுச் சென்று விட்டது. இன்று பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள் சைவத்தையே தங்கள் சமயமாகக் கொண்டிருக்கிறார்கள் அதே சமயம் பௌத்தம் சிங்கள இனத்தை ஆட்கொண்டது.
அடுத்து சிங்களவர்களால் கற்பிக்கப்படும் மற்றுமொரு வரலாற்றுப் பொய் கௌதம புத்தர் இலங்கைக்குச் சென்று சிங்களவர்களுக்கு தேரவாத பௌத்தத்தைப் போதித்தார் என்பதாகும். புத்தர் இலங்கைக்குச் சென்றதற்கு எந்த விதமான வரலாற்றுக் குறிப்பும் இல்லை. ஒருவேளை அப்படி அவர் சென்றிருந்தாலும் அவர் வாழ்ந்த காலத்தில் சிங்கள இனம் தோன்றியிருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கௌதம புத்தர் கி.மு. 563 இல் பிறந்து கி.மு. 483 இல் தனது 80 வது வயதில் இறந்தார் என்று வரலாறு கூறுகிறது. கி.மு. 260 இல் நடந்த கலிங்கப் போருக்குப்பின், அப்போருக்குக் காரணமாக இருந்த மாமன்னன் அசோகனே பௌத்தம் உலகெங்கும் பரவுவதற்கு காரணமாக இருந்தான். கி.மு. 247 இல் தேவநம்பிய திசனின் ஆட்சிக்காலத்தில் அசோகனின் மகன் மகிந்தனால் பௌத்தம் முதன் முதலாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கையின் புராதன வரலாற்று நூலாகிய மகாவம்சம் கூறுகிறது. அதாவது புத்தர் இறந்து 236 ஆண்டுகளுக்குப் பிறகே பௌத்தம் இலங்கைக்கு வருகிறது. வரலாற்றுச் சான்றுகள் இவ்வாறு இருக்கும்போது புத்தார் தங்களுக்கு பௌத்தத்தை நேரடியாகவே கற்பித்தார் என்று கூறுவது வரலாற்றைத் திரிக்கும் முயற்சியே.
அசோகப் பேரரசின் காலத்தில் இலங்கைத் தீவில் வடமொழி, பாளிமொழி, கலிங்கமொழி, தமிழ் மொழி அனைத்தையும் கலந்த ஒரு புதிய மொழி உருப்பெற்று வளரத் தொடங்கியது அந்தப் புதிய மொழியையே பிற்காலத்தில் இளவரசன் விசயனோடு இணைத்து சிங்கள மொழி என அழைத்தனர். ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் இன்று மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளனர்.
1833 ஆம் ஆண்டு தனித்தனியாக இருந்த தமிழ் அரசையும் சிங்கள அரசையும் கோல்புறூக்-கமரோன் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின்படி ஆங்கிலேயர்கள் ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள். அப்போது மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்பில் தமிழர்கள் இலங்கைத் தீவின் 35 விழுக்காடு நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டிருந்தனர். 1995 இல் வெறும் 17 விழுக்காடு நிலப்பரப்பே தமிழர்களுக்கு சொந்தமாக இருந்தது. 1833 இற்கும் 1995 இற்கும் இடைப் பட்ட நூற்றி அறுபத்து ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் 50 விழுக்காடு நிலப் பகுதியை சிங்களவர் கைப்பற்றி உள்ளனர். ஓட்டு மொத்த இலங்கையையும் சிங்களவருக்குச் சொந்தமாக்க வேண்டும் என்ற நோக்கோடு கடந்த 50 ஆண்டுகளாக இன அழிப்பை திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது சிங்களம்.
உயிர் வாழ விரும்பினால் தமிழா! உனக்காக ஒரு நாட்டை உருவாக்கிடு என்று உறைப்பாக உணர்த்தியதே சிங்கள அரசுதான். ஓவ்வொரு தாக்கத்திற்கும் அதற்குச் சமமான எதிர்த்தாக்கம் இருக்கும் என்றார் நியுட்டன். ஆம், ஜார் மன்னனின் அடக்குமுறை ரஷ்யாவில் வர்க்கப் போராட்டத்திற்கு வித்திட்டது. சிங்கள அரசின் அடக்குமுறை ஈழப் போராட்டத்திற்கு வித்திட்டது.
1948 இல் ஆங்கிலேயேரிடமிருந்து இலங்கை விடுதலை பெற்றவுடன் இலங்கையின் ஆட்சியதிகாரம் முழுவதும் சிங்களவர் கைக்குச் சென்றது, இதன் காரணமாக தமிழர்களுக்கெதிரான சிங்கள பௌத்த பேரினவாதம் பல மடங்கு தீவிரமடைந்தது. புத்தரின் போதனைப்படி உள்ளத்தில் அன்பையும் பார்வையில் அருளையும் நடத்தையில் கண்ணியத்தையும் கொண்டவர்களைப் பௌத்த பீடங்களில் சேர்க்காமல் கொலை வெறி கொண்டு கத்தி, கடப்பாரையோடு அலையும் சிங்களக் காடையர்களும் குண்டர்களும் பௌத்த பீடங்களில் பிக்குகளாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். புத்தம் சரணம் கச்சாமி தானம் சரணம் கச்சாமி என்று கூறுவதற்குப் பதிலாக யுத்தம் சரணம் கச்சாமி இரத்தம் சரணம் கச்சாமி எனக் கூறி தமிழர்களை வேட்டையாட அலைந்தனர். சிங்கள மக்கள் மத்தியில் இவர்களுக்கு இருந்த செல்வாக்கும் அதிகாரமும் இலங்கை அரசியலையே தங்கள் கைக்குள் போட்டுக் கொள்ள அனுமதித்தது.
1957 ஆம் ஆண்டு இலங்கைத் தலமை அமைச்சர் பண்டாரநாயக்காவிற்கும் தந்தை செல்வாவிற்கும்மிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிவிடும் என அறிந்து ஏராளமான பிக்குகள் பண்டாரநாயக்காவின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தனர் அதனைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டு சோமராமதேரோ என்ற பிக்குவால் பண்டாரநாயக்கா சுட்டுக் கொல்லப் பட்டார். மற்றும் 1958 1983 களில் நடைபெற்ற தமிமினப் படுகொலைகளையும் திட்டமிட்டு நிறைவேற்றியது சிங்கள அரசு, அதன் தூண்டு கோலாக பௌத்த பீடங்களே துணை நின்றன. இன்று நோர்வே நாட்டின் உதவியுடன் ஏற்படும் சமாதான முயற்சிகளுக்கு சிங்கள பௌத்த பீடங்களே மாபெரும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன 2000 ஆம் ஆண்டு நோர்வே அரசு தன் சமாதான முயற்சியைத் தொடங்கியபோது நோர்வே நாட்டுத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் தமிழ் விரோதப் போக்கைக் காட்டிக் கொண்டர்கள் சிங்களப் பிக்குகள். சமாதானத்திற்காகவும், போரின்றி மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் மார்க்கம் கண்ட புத்தபிரானின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்களாகத் தங்களைக் கூறிக் கொள்பவர்கள் இன்று சமாதனத்திற்கு எதிரியாகப் போர்க் கொடி தூக்கி நிற்கிறார்கள்.
பொதுவாக மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது மதங்கள் அனைத்தும் அன்பையே போதிக்கின்றன அவற்றைப் புரிந்து கொள்ளாத மக்களின் மனம்தான் வெறித்தனமான வன்முறைகளில் ஈடுபட வைக்கிறது என்று. இக்கருத்தை முழுவதுமாக நிராகரித்துவிடவும் முடியாது அதேசமயம் முழுவதுமாக ஏற்றுக் கொண்டுவிடவும் முடியாது ஏனெனில் புனித நூல்கள் என்று கூறப்படும் மத நூல்களில் கூறப்பட்டுள்ள விடயங்களைச் சற்றும் சிந்தித்துப் பார்க்காமல் அப்படியே பின்பற்றுவதாலே மதப் பூசல்கள் ஏற்படுகின்றன. உண்மையில் மதங்களில் திருத்தம் செய்வதற்கு ஏராளமான விடயங்களும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செய்திகளும் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் இப்படி ஒரு குற்றச்சாட்டைப் பௌத்தத்தின் மேல் சுமத்த முடியாது. பகுத்தறிவுக்குப் புறம்பான எந்தக் கருத்தையும் புத்தர் கூறவில்லை, மற்ற மதங்கள் எல்லாம் மனிதனுக்குக் கடவுளைக் காட்ட முயற்சித்த போது புத்தர் மட்டுமே மனிதனுக்கு மனிதத்தைக் காட்ட முயற்சித்தார் பௌத்தத்தில் கடவுளும் இல்லை ஆன்மாவும் இல்லை சொர்க்கமும் இல்லை நரகமும் இல்லை புத்தர் தன்னைக் கடவுள் அவதாரமாகவோ அல்லது கடவுளின் தூதராகவோ காட்டிக் கொள்ளவில்லை.
தன்னுடைய ஞானத்தைத் அவர் தன்னிடம் இருந்தே பெற்றார் அவருக்கு கடவுளோ அல்லது வேறு ஆவிகளோ வந்து ஞானம் கொடுக்கவில்லை அவர் தன் வாழ்நாளில் அற்புதம் என்று சொல்லி எந்த ஒரு செயலையும் செய்துகாட்டவில்லை. அப்படியானால் பௌத்தம் எதைத்தான் கூறுகிறது ? பகுத்தறிவு, இன்னா செய்யாமை, வாய்மை, கொல்லாமை, ஒழுக்கம், நல்லூக்கம், நல்லுறுதி போன்றவற்யையே புத்தர் அதிகமாகப் போதித்தார் அன்பின் ஆணிவேரையே தொட்டவர் புத்தர் ஆறறிவுள்ள மனிதனில் தொடங்கி புழு, பூச்சி போன்றவற்றின் உயிரையும் தன்னுயிரினும் மேலாக மதித்தவர்.
அவரது அருள் ததும்பும் பார்வையும் புன்னகை பூத்த முகமும் இனிமை கொண்ட பேச்சுக்களும் மானுடத்தின் மீது அவர் காட்டிய மாறாப் பற்றும் கல்நெஞ்சர்களையும் கண்ணீர் விடவைத்தது போர் வெறியர்களையம் சமாதான விரும்பிகளாக மாற்றியது புல்லரையும் நல்லோராக்கியது புத்தரின் மார்க்கத்தில் சாதிகளுக்கு இடமில்லை குலப் பேதங்களுக்கு இடமில்லை அதனால்தான் தாழ்த்தப்பட்ட இந்துவாகப் பிறந்து சொல்லணாத் துன்பங்களுக்கு ஆளான அண்ணல் அம்பேத்கர் தன் சமுகத்தைச் சேர்ந்த 54 ஆயிரம் தாழ்த்தப்பட்ட தோழர்களுடன் இந்து மதத்தை விட்டு விலகி பௌத்தத்தைத் தழுவிக்கொண்டார். பௌத்தத்தில் அன்பே கடவுள் அதுவே உயிர், அதுவே வாழ்க்கை, அதுவே மூச்சு, அதுவே முக்தி. பௌத்த மதம் என்று சொல்வதைக் காட்டிலும் பௌத்த நெறி அல்லது மார்க்கம் என்று சொல்வதே சாலப் பொருந்தும்.
மனிதராகப் பிறந்த புத்தர் மனிதராகவே மறைந்தார் இதுவே பௌத்தத்தின் சிறப்பு. அப்பேர்ப் பட்ட பௌத்தத்தைக் கடைப் பிடிப்பவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் இலங்கையில் நடத்திய ஓர் இனப் படுகொலை போல் வேறு எவரும் நடத்தியதில்லை. தமிழனின் கண்ணைத் தோண்டி எடுத்து கீழே போட்டு காலால் நசுக்கிய வரலாறும், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளிருந்த சிசுவை வெளியில் தூக்கிப் போட்ட வரலாறும், பெண்களின் மார்பகங்களை அறுத்து வீதியில் போட்ட வரலாறும் இலங்கையைத் தவிர வேறு எங்கும் நடக்கவில்லை. ஆரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அல்லல் பட்ட ஈழத்தமிழர்களைக்கு விடிவேதும் வந்துவிடக் கூடது என்பதற்காக சிங்கள பௌத்த பீடங்களும் பேரினவாத சக்திகளும் சிங்கள அரசுடன் கைகோர்த்து நிற்கின்றன.
இன்று தங்களைவிட்டால் பௌத்தத்தைக் காக்க வேறுயாருமில்லை என்று கூறித்திரியும் சிங்கள பௌத்த பீடங்கள் பௌத்தத்தைக் காக்க சிங்களத்தை விட்டால் வேறு வழி இல்லை என்பது போலவும் சிங்களத்தைக் காக்க பௌத்தத்தை விட்டால் வேறு வழி இல்லை என்பது போலவும் சிங்கள மக்கள் மத்தியில் தீவிரவாதத்தை வளர்த்து புத்தர் காட்டிய மனிதநேயத்தையும் அன்பையும் குழிதோண்டிப் புதைத்து வருகின்றனர். ஆனால் பௌத்தம் சன்மார்க்கம் மிக்க மார்க்கம் அது தமிழர்களாலும் போற்றிவளர்க்கப் பட்டிருக்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.