யார் தமிழர்?
“தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும்” என்ற முழக்கம் இன்று தமிழ்நாட்டில் சற்றே பரவலாக ஒலித்து வருகிறது. இதனை ஒட்டியும் வெட்டியும் ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு முழங்குவோர் பெரும்பாலும் இந்திய அரசு குறித்தோ இந்திய அரசமைப்பு குறித்தோ இந்தக் கருத்தை முன்மொழிய முற்படுவது கூட இல்லை. மாநில அரசாங்கத்தை மையப்படுத்தியே தமிழன் ஆள வேண்டும் என்கிறார்கள். நெருங்கிப் பார்த்தால் இது வெறும் முதலமைச்சர் பதவிக்கான முழக்கமே என்று தெரிய வரும். ஆள்வது என்றால் என்ன? இறுதி நோக்கில் முதலமைச்சர் பதவியின் உள்ளடக்கம் என்ன? போன்ற வினாக்களுக்கு விடை காண்பது ஒருபுறமிருக்க, வேறு பல காரணங்களுக்காகவும் கூட தமிழ்த் தேசியம் விடை காண வேண்டிய முகன்மைக் கேள்வி ஒன்று மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது: யார் தமிழர்?
இந்த வினாவில் தமிழர் என்ற சொல்லை எவ்வாறு புரிந்து கொள்கிறோம்? தமிழ் பேசுகிறவர் என்றா? தமிழ் மரபினர், அதாவது பரம்பரைத் தமிழர் என்றா? தமிழ்நாட்டில் வாழ்கிறவர் என்றா? தமிழர் என்ற சொல்லுக்கு இப்படிப் பல வகையிலும் பொருள் கொள்ளலாம் என்பது உண்மைதான். ஆனால் இங்கு நாம் அரசியல் நோக்கில் யார் தமிழர்? என்ற வினாவிற்கு விடை காண வேண்டியுள்ளது. ’தமிழன் (அல்லது தமிழச்சி) ஆள வேண்டும்’ என்ற குறுகிய நோக்கம் கடந்து, தமிழ்த் தேசிய விடுதலைக்கான அணிதிரட்டல் என்ற விரிந்த நோக்கம் கருதியும் இந்தத் தெளிவு நமக்குத் தேவைப் படுகிறது.
இந்த வாக்குவாதத்தில் அடிக்கடி மேற்கோளாக எடுத்துக் காட்டப்படும் பாவேந்தர் வரிகள்: “எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே!” யார் தமிழர் என்ற வினாவிற்கே இவ்வாறு விடை கிடைத்து விட்டது போல் காட்ட முற்படுகிறார்கள். எங்கு பிறப்பினும் என்றால் என்ன பொருள்? தமிழ்நாட்டில் பிறப்பினும், தமிழீழத்தில் பிறப்பினும், சிங்கப்பூரில் அல்லது மலேசியாவில் பிறப்பினும், மொரீசஸ் அல்லது பிஜித் தீவுகளில் பிறப்பினும், அமெரிக்கா அல்லது பிரித்தானி யாவில் பிறப்பினும், இப்படி உலகின் எந்த மூலையில் பிறப்பினும் தமிழன் தமிழனே என்றாகிறது.
அப்படியானால் தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும் என்ற முழக்கத்தின் படி இந்தத் தமிழர்களில் யார் வேண்டுமானாலும் கோட்பாட்டளவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகலாம், அப்படித்தானே? தென்னாப்பிரிக்கா அல்லது மொரிசஸ் தமிழர் தமிழே தெரியாதவராக இருந்தாலும் அவர் பிறப்பால் தமிழர் என்பதால் தமிழ்நாட்டை ஆளத் தகுதி உடையவராகிறார். ஒருவர் தமிழ் கற்றுத் தமிழ் மொழிக்காகவும் தமிழினத்துக் காகவும் உழைத்திருப்பினும் அவர் பிறப்பால் தமிழர் அல்லர் என்றால் தகுதியிழந்து விடுவார், சரியா?
முதலமைச்சர் பதவி கிடக்கட்டும், விரிந்த பார்வையில் தமிழ்த் தேசியப் புரட்சிக்காக உலகெங்கும் தமிழராகப் பிறந்த அனைவரையும் அணிதிரட்ட வேண்டும், வெறும் ஆதரவு தெரிவிப்பது போதாது, அவர்களும் முனைப்புடன் பங்கேற்கும்படிச் செய்ய வேண்டும் என்றாகிறது. தமிழ்நாட்டிலேயே பிறந்திருப்பினும் பிறப்பால் அயலார் என்றால், தமிழ்த் தேசியத்திற்காக உழைத்திருப்பினும் அவரை ஒதுக்கி விட வேண்டும், சரியா?
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்ற வரையறையைப் பயன்படுத்தி, யார் தமிழர்? என்ற வினாவிற்கு விடை காண முடியாது. தென் அமெரிக்கத் தீவு நாடொன்றில் ஒரு தமிழர் அதிபராகவே தேர்ந்தெடுப்படலாம். அவர் தமிழ் மரபில் வந்தவர் என்பதால் பிறப்பால் தமிழர், ஆனால் தமிழ் தெரியாத தமிழர். சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் அயலுறவுத் துறை அமைச்சர் ஆகலாம், குடியரசுத் தலைவரே ஆகலாம். அவர் பிறப்பால் தமிழர், பேசும் மொழியாலும் கூடத் தமிழர் என்பதில் ஐயமில்லை. அவர் சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்திருப்பினும் தமிழர்தாம். ஆனால் யார் தமிழர்? என்ற வினாவிற்கு விடையாக அவரையோ இவரையோ முன்னிறுத்த முற்பட்டால் மீளவொண்ணா முரண்பாடுகளில் சிக்கிக் கொள்வோம்.
தமிழர் யார்? அரசியல் நோக்கில் இந்த வினாவுக்கு விடையளிக்க வேண்டுமானால் தமிழர் என்பதைத் தமிழ்த் தேசிய இனம் என்று புரிந்து கொள்ள வேண்டும். தேசிய இனம் என்பது ஒரு குமுக வகையினமே தவிர இயற்கை வகையினம் அன்று. பொதுவாக மொழி, புலம், பண்பாடு, பொருளியல் ஆகிய அடிக்கூறுகள் வரலாற்று வழியில் கூடிப் படிமலர்ச்சி அடைந்து ஒரு குமுகாயமாக நிலைத்திருக்கும் போது தேசிய இனம் உருவாகி தேசமாக வளர்ச்சி பெறுகிறது. வரலாற்று வழியில் என்பது கவனத்திற்குரியது. நாம் எடுத்துக் காட்டிய புறக் கூறுகள், அகக் கூறுகளில் ஒன்று மிகலாம், ஒன்று குறையலாம். இந்தப் பொதுக் கூறுகள் அல்லாத தனிக் கூறுகளும் வந்து சேரலாம். தேசிய இன, தேச மலர்ச்சியைத் தேங்கிய குட்டையாக அல்லாமல் பாய்ந்தோடும் ஆற்றுப்பெருக்காகப் பார்க்க வேண்டும்.
வட அமெரிக்கத் தேச உருவாக்கத்தில் ஆங்கிலம் முதலான பல்வேறு மொழிகளும் ஆப்பிரிக்கர் உள்ளிட்ட பல்வேறு மரபினங்களும் வரலாற்று வழியில் கலந்தன.
தென் ஆப்பிரிக்க நிலப் பகுதி வரலாற்றுப் போக்கில் ஆப்பிரிக்கர் (கருப்பர்), ஆசியர் (பழுப்பர்), ஐரோப்பியர் (வெள்ளையர்), கலப்பினத்தவர் ஆகிய நான்கு மரபினங்களின் வாழ்விடமாயிற்று. இவர்கள் பல்வேறு மொழிகள் பேசினர். ஆப்பிரிக்கர்கள் மட்டுமே 13 பழங்குடிகளாகப் பிரிந்திருந்தார்கள். ஒவ்வொரு பழங்குடிக்கும் ஒரு திசைமொழி. இந்தத் திசைமொழிகள் முழு அளவில் மொழிகளாக வளர்ச்சி பெறுமுன்பே, அயலாதிக்கம் குறுக்கிட்டு விட்டது. வெள்ளை நிறவெறி இனஒதுக்கலை எதிர்த்து விடுதலைக்காகப் போராட வேண்டிய தேவை அவர்களை ஒன்றுபடத் தூண்டிய போது ஆங்கிலமே அவர்களுக்குப் பொதுமொழியாயிற்று. ஆப்பிரிக்கர்கள் தமக்குள் ஒன்றுபடுவதற்கு மட்டுமல்ல, ஆசியர்கள், கலப்பினத்தவர், நிறவெறிக்கு எதிரான வெள்ளையர்கள் ஆகிய பிற மரபினத்தவரோடு ஒன்றுபடுவதற்கும் ஆங்கிலமே ஊடகமாயிற்று. தேச உருவாக்கத்தில் தேசியப் போராட்டம் ஒரு முகன்மைப் பங்கு வகிப்பதற்கு தென் ஆப்பிரிக்கா சிறந்த சான்று. அந்தப் போராட்டத்துக்கும் ஒரு பொதுமொழி தேவைப்பட்டது.
யூதச் சமயத்தினர் ஓர் இனமாகத் தம்மை உணர்வதற்கு அவர்கள் மீதான செமித்திய எதிர்ப்புப் பாகுபாடும் ஒடுக்குமுறையும் காரணமாயின. அவர்களுக்கென்று தாயகம் காணும் சயோனிசக் கொள்கையும் இயக்கமும் பிறந்தன. ஆனால் யூதர்கள் பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களாய் இருந்ததால் இஸ்ரேல் என்றொரு நிலப்பரப்பைத் தமக்கான தாயகமாக இனங்கண்டதோடு, ஒரு பொதுமொழியும் தேவைப்படுவதை உணர்ந்து தங்கள் சமய மொழியாகிய ஹிப்ரூவைப் புதுமப்படுத்தித் தமக்கான தேசிய மொழி ஆக்கிக் கொண்டார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பின் யூதர்களுக்கான தேசமாக இஸ்ரேல் உருவான போது அவர்களின் தேசிய மொழியாக ஹிப்ரூ வளர்த்தெடுக்கப்பட்டது. ஈண்டு நான் இஸ்ரேலின் வரலாற்றுப் பங்கு, பாலத்தீனர்கள் தாயகம் இழந்த பெருந்துயர், நடுக்கிழக்கில் வல்லரசியங்களின் திட்டங்கள் பற்றியெல்லாம் பேசவில்லை. தாய்மொழியல்லாத பொதுமொழிக்கு எடுத்துக்காட்டாக மட்டுமே இஸ்ரேலைச் சுட்டுகிறேன், வேறொன்றுமில்லை.
ஒரு தேசிய இனம் அல்லது தேசம் என்பதற்கான அடிக்கூறுகளில் ஒன்றாகக் குறிக்கப்பெறும் மொழி என்பது தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது பொதுமொழியாக இருந்தால் போதுமானது என்பதற்கான சான்றுகளைத்தான் மேலே குறிப்பிட்டோம். தமிழ்த் தேசிய இனத்துக்கான வரையறை யில் நம் பொதுமொழி தமிழே என்பதில் மறுபேச்சுக்கே இடமில்லை. நம்மில் பெரும்பாலார்க்குத் தமிழே தாய்மொழி என்பதும் நல்வாய்ப்பே. வேறு சிலர்க்கு வீட்டுத் தாய்மொழி வேறாக இருப்பினும் தமிழ் பொது மொழியாக இருந்தால் போதும், அவர்களும் தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களே. இந்தப் பொருளில் அவர்களும் தமிழர்களே. அவர்கள் வீட்டில் வேறு மொழி பேசுவதைக் குற்றமாகக் கருதுவதற் கில்லை. அயல்நாடுவாழ் தமிழர்கள் தமிழை மறக்காமலிருந்தால் அதை நாம் பெருமையாகக் கருதும் போது தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியார் தத்தமது தாய்மொழியை மறக்காமலிருப்பது எப்படிக் குற்றமாகும்?
ஆகவே தமிழ்நாட்டில் தமிழை வாழ்வியல் ஊடகமாகக் கொண்டவர்கள், தமிழ் நிலத்தில் நெடுங்காலமாக நிலைத்து வாழ்பவர்கள், தமிழர் நாம் என்ற உணர்வோடு தமிழ்ப் பண்பாட்டில் கலந்திருப்பவர்கள், தமிழ்த் தேசத்தின் பொருளியல் வாழ்வில் பங்களிப்பவர்கள் – – இவர்கள் அத்தனைப் பேரும் தமிழர்களே! அதாவது தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களே! இவர்களுக்கிடையே தூய தமிழர்கள், கலப்புத் தமிழர்கள் என்று பாகுபடுத்துவது குமுக அறிவியலுக்கும் குடியாண்மைக் கொள்கைக்கும் முரணானது. இது முற்றினால் இனவாதமாகும் ஆபத்துண்டு.
தமிழரல்லாத பிற மொழியார் எல்லைப் பகுதிகளில், அரிதாக உட்பகுதிகளிலும் கூட, சேர்ந்து வாழ்வதாலும் தாயகத்துடன் கொள்வினை கொடுப்பினையும் கொடுக்கல் வாங்கலுமாக உயிரோட்டமான உறவு கொண்டிருப்பதாலும், வேறு காரணங்களாலும் தமிழினத்தோடு இரண்டறக் கலவாது நின்றால், அப்படி நிற்கும் வரை, தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் ஆவர். தமிழர் தாயகத்தில் சிறுபான்மை இனத்தவர்க்கான உரிமைகள் அவர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும்.
கர்நாடகத்தில் தமிழ்ச் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பது போல், தமிழ்நாட்டில் கன்னடச் சிறுபான்மையினர்க்காகவும் நாம் குரல்கொடுக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் சிறுபான்மை யினரும் பங்கு பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் அடிமைக் கங்காணிகளின் அதிகாரமல்லாத அதிகாரத்துக்கான பதவிப் போட்டியின் கோணத்திலிருந்து அணுகாமல் தமிழ்த் தேசியப் புரட்சிக் கண்ணோட்டத் தில் அணுகுவோமானல், தமிழர் யார்? என்ற வினாவிற்கு இயன்ற வரை விரிந்தளாவிய விடை தர இயலும். தமிழ் மக்களைக் குறுகிய நோக்கில் பிரித்துப் பிளவுபடுத்திக் குமுகியல் கருதாமல் குருதி ஆய்வு செய்யும் இனவாதத்தைப் புறந்தள்ளி, தமிழ்த் தேசிய விடுதலையில் புறஞ்சார் அக்கறை கொண்ட அனைத்துக் குமுக ஆற்றல்களையும் உள்ளடக்கும் படியான இலக்கண வரையறைதான் இன்று தேவைப்படுகிறது.
தியாகு, பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
Leave a Reply
You must be logged in to post a comment.