அயோத்திதாசப் பண்டிதரின் பகுத்தறிவுவாத பௌத்தம்
வெ.வெங்கடாசலம்
05 ஆகஸ்ட் 2014
“நம்முடைய சங்கத்தின் சத்தியதன்ம போதமோவென்னில், ஒவ்வொரு மனிதனும் நீதிநெறி வாய்மெயில் நிலைத்து மெய்ப்பொருளுணர்ந்து தீவினைகளை ஒழித்து பிறவியின் துக்கத்தை ஜெயிக்க வேண்டும் என்பது கருத்தும் சத்திய சாதனமுமாகும்” -க. அயோத்திதாசர்
இயற்கை சக்திகளான இடி, பெருமழை, வெள்ளம் போன்றவற்றைக் கண்டு பயந்து நடுங்கிய ஆதி மனிதன், இவற்றை எல்லாம் கண்ணுக்குப் புலப்படாத ஏதோவொரு மாயசக்தி அந்தரத்திலிருந்து இயக்குவதாக நம்பினான். அந்த சக்திக்குப் பணிந்து வழிபடுவதால் அதன் கோபத்தைத் தணித்து அவ் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தப்பித்து வழலாம் என்ற நம்பிக்கையிலிருந்து மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை உருவானது என்கின்றனர் லோகாயதவாதிகள். மதம் என்றால் அது கடவுள் வழிபாடு, சடங்குகள், பிரார்த்தனைகள், மந்திர தந்திரங்கள், பேய் -பிசாசு-ஆவிகள் பற்றிய கதைகள் என்ற மூட நம்பிக்கைகளாலான சமூக நிறுவனமாக கருதப்படுகிறது.

“மனிதனின் குறுகிய எண்ணங்களிலிருந்து மதம் பிறந்தது” என்றார் ஏங்கல்ஸ். இயக்க இயல் பொருள்முதல் வாதம் எனப்படும் மார்க்சிய மெய்ஞ் ஞானம் ‘மதம் மக்களுக்கு அபின்’, ‘மதம் என்பது ஆன்மீக பெரும்போதை’, ‘மதம் என்பது ஆன்மீக ஒடுக்கு முறையின் வடிவம்’ என்றெல்லாம் மதங்கள் குறித்து வரையறை செய்து வைத்திருக்கிறது. மதவாத சிந்தனைகள்/செயல்பாடுகள், கடவுள் நம்பிக்கை ஆகியவற்றை பகுத்தறிவுக்கு ஒவ்வாத பிற்போக்கு வாதம்/ கருத்து முதல்வாத சிந்தனை என்று புறந்தள்ளுகிறது பொதுவுடைமை சித் தாந்தம். என்றால், சமூக அறிவியல் விஞ்ஞானம் என்று போற்றப்படும் மார்க்சியம் உலகெங்கும் பரவி வலுப்பெற்று வந்த பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய காலங்களிலும் பிற்பகுதியிலும் தென்னிந்திய சமூக சீர்திருத்தவாதிகளின் முன் னோடியாய் எழுச்சிப் பெற்ற அயோத்திதாசப் பண்டிதர் ‘புத்த மதம்’ என்னும் ஒரு மதத்தைத்தானே உயர்த்திப் பிடித்திருக்கிறார்! இந்திய சமூக வரலாற்று இயக்க வியல் அறிஞர்களுள் முக்கியமானவரும், அரசியல்/பொருளியல்/சட்டவியல் நிபுணருமான புரட்சி யாளர் அம்பேத்கரும் அயோத்திதாசரைத் தொடர்ந்து புத்த மதத்தைத்தானே பின் பற்றினார்!! எனில் இவர்களது புத்த மத சிந்தனைகள்/ செயல்பாடுகள் கருத்து முதல்வாத சிந்தனை அல்லது பிற்போக்கு வாதம் என்ற சட்டகத்துக்குள் அடங்கும் தன்மை கொண்டவைதானா என்ன? இது போன்று எழும் கேள்விகளுக்கு பொதுப்புத்தியில் வரையறுக்கப்பட்டுள்ள மதம் என்னும் சொல்லாக்கத்துக்கான பொருள் கௌதம புத்தரால் அருளப்பட்ட புத்த தம்மம் என்னும் புத்த மதத்துக்கு பொருந்துவதில்லை என்பதையும் புத்த தம்மத்தைப் பின்பற்றிய அயோத்திதாசரும் அம்பேத்கரும் கருத்து முதல்வாத சிந்தனையா ளர்கள் அல்ல, பகுத்தறிவுவாத-பொருள் முதல்வாத சிந்தனையாளர்களேயாவர் என்பதையும் இக்கட்டுரை வழியாக இயன்ற அளவுக்கு காண்போம்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டுகளின் மத்திய காலங்களில் தோன்றி ஆறு ஆண் டுகளின் தியான வலிமையின் மூலம் போதி மரத்தின் கீழ் பெற்ற ஞானத்தால் புத்தர் அருளிய புத்த தம்மமானது சமூகம் அர்த்தப்படுத்திக்கொண்டுள்ள மதம் என்னும் வகைப்பாட்டுக்குள் அடங்காமல் அறிவு, அன்பு, அறம், சீலம், நீதிநெறி போதிக்கும் மென்மையானதொரு மார்க்கமாக தனித்து நிற்கிறது. கடவுள்/ ஆன்மா/ மறுபிறப்பு/ விதி என்று பிற மதங்களால் கற்பிக்கப்பட்டுள்ள மூடநம்பிக் கைகளை மறுதலித்து எழுந்த பகுத்தறிவு மையமாகவே பௌத்த சமயம் விளங்கு கிறது. ஆகவே உலகளவில் பெரும் மதங்கள் எனப்படும் கிறித்துவம்/இஸ்லாம் மற்றும் பிற மதங்களின் தோற்றம், வளர்ச்சி, வரலாறுகளின் மூலம் மார்க்சியம் போன்ற முற்போக்கு சித்தாந்தங்கள் கண்டறிந்த அனுபவங்களின் சாயல் பண்டைய இந்திய மதமான பௌத்தத்தின் மேல் இல்லை என்பதிலிருந்து மதம் என் பது பற்றிய மார்க்சியத்தின் கருதுகோள் பௌத்தத்திற்குப் பொருந்தாமல் போகி றது. மார்க்சியம் அறிந்த மதங்களின் வரலாறு என்பது வன்முறைகள் மூலமும் சிந்தப்பட்ட இரத்தப் பெருக்கின் மீதும் தம்மை நிறுவிக் கொண்ட வரலாறாகவே இருந்து வந்துள்ளது. இந்த வகையில் புத்த மதம் அல்லது மார்க்கமானது உல கின் மற்றெந்த மதங்களினின்றும் வேறுபட்டு வன்முறைக்கு அப்பாற்பட்ட அற நெறியை/அஹிம்சையை போதிக்கும் நீதிநெறி மார்க்கமாக விளங்குகிறது.
பறையர்களை சாதி பேதமற்ற திராவிடர்கள் என்றழைத்த அயோத்திதாசர் பௌத்தத்தை அவர்களது பூர்வ மதம் என்றார். பௌத்தம் பார்ப்பனர்களின் இருப்புக்குச் சவாலாய் இருந்தது என்பதாலும் அப்பௌத்தத்தை கைகளில் ஏந்தி பாதுகாத்து வந்தவர்கள் பறையர்கள் என்பதாலும் அவர்கள்மீது பகைமைப் பாராட்டிய பார்ப்பனியம் பெரும் சூழ்ச்சிகள் வகுத்து பறையர்களை தீண்டத் தகாதவர்களாக ஆக்கியது என்றார். அம்பேத்கரும் கூட மகர்கள் நாக வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்; பார்ப்பனியத்துக்கும் பௌத்தத்துக்குமான போட்டியில் பௌத்தம் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்றார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டுகளில் பார்ப்பனியம் வென்று மேலாதிக்கம் பெற்றதுடன் தீண்டாமையும் தோற்றம் கொண்டதாக வரலாற்றுச் சான்றாதாரங்களுடன் நிறுவும் அயோத்திதாசரும் அம்பேத்கரும் இவ்வகையில் வழக்கொழிந்துபோன பௌத்தம் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று செயல்பட்டனர்.
முன்னொரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் மதமாக பௌத்தம் இருந்தது என்னும் ஒற்றைக் காரணத்தை முன் வைத்துவிட்டு ஏதோ பிதுரார்ஜித உரிமையுணர்வோடு மட்டுமே பண்டிதரும் அம்பேத்கரும் பௌத்த மதத்தின் மீட்டுருவாக்கம் கோரினர் என்று நினைப்பது அறிவாகாது. மாறாக பௌத்தத்தின் சத்தரும /பஞ்சசீல/எண்வழி கோட்பாட்டுகளும் சிந்தனைகளும் புத்த பகவானால் பகுத்தறிவு அடிப்படையில் வடிவமைக்கப்பட்டவை என்பதாலும் பௌத்தம் அடிப்படையிலேயே சாதி மறுப்புக் கொள்கையுடையது என்பதாலும் யாவரையும் சமமாக பாவிப்பது/ சமத்துவக் கண்கொண்டு அணுகுவது என்பன போன்றவை பௌத்தத்தின் அடிநாதமாக விளங்குகின்றன என்பதாலுமே அச்சமயத்தால் ஈர்க்கப்பட்டனர் என்பதுவே சரி. அயோத்திதாசர்/அம்பேத்கர் ஆகிய இவ்விருவரும் இந்தியச் சமுதாயத்தில் நிலவும் பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் இந்து மதத்தின் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் சமய அங்கீகாரத்தோடு எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் பௌத்தத்திற்குள் அமைந்திருப்பதாக நம்பினர். “வாழ்நிலை மற்றும் இருத்தலியல் தேவைகளுக்கு அனுசரணையான கருத்துக்களை பௌத்தத்திலிருந்து மறுவிளக்கம் செய்யும் முயற்சியும் முக்கியத்துவம் பெற்றது. இம் முயற்சிகளில் ஒன்றாக க.அயோத்திதாசரின் பௌத்தம் அமைந்தது. பார்ப்பனியத்துக்கு மாற்றாக, எதிர் மதமாக, சாதி பேதமற்ற அறநெறியாக ஒரு பௌத்த மதத்தை சரித்திரத்தையும் புனைவையும் கலந்து கட்டி எழுப்பினார்” என்னும் ராஜ்கௌதமன் கூற்றில் மாற்றியமைக்கப்பட்ட ஒரு பௌத்தத்தை அயோத்திதாசர் கட்டி எழுப்பினார் என்னும் பொருள் உள்ளடங்கியிருக்கிறது.
“இந்துக்களென்போர் சாதி பேதமென்னுங் கொடுஞ்செயலையே பீடமாகக் கொண்டொழுகுகிறவர்கள். பௌத்தர்களோ சாதிபேதமென்னுங் கொடுஞ்செயல் அற்று அன்பையே பீடமாகக் கொண்டொழுகுகிறவர்கள்” என்று இந்து மதத்தையும் பௌத்தத்தையும் கோட்பாட்டு அடிப்படையில் வேறுபடுத்திக் காட்டுகிறார் அயோத்திதாசர். பிற மதங்கள் கடவுள்/ ஆன்மா/மறுபிறப்புப் பற்றி அலட்டிக்கொண்டிருக்க புத்த மதம் அறிவு/அன்பு/சமத்துவம் என்பவற்றை போதிக்கிறது. ஒரு மனிதன் மகிழ்வான வாழ்க்கையை அடைவதற்கு இம்மூன்று கோட்பாடுகளும் அவசியமாகின்றன என்கிற வகையில் இவை என்னைப் பெரிதும் கவர்ந்தன என்றார் அம்பேத்கரும்.
பிற்போக்கு இந்து மதமும் பகுத்தறிவுவாத பௌத்தமும்:
சமத்துவம்/ சகோதரத்துவம்/ சுதந்திரம் என்னும் உயரிய நோக்கங்களாலான புத்த மதம் ஒரு சாதி மறுப்பு சமயமாகவும் விளங்குகிறது என்பதாலேயே சாதி பேத மதமான இந்து மதத்தினின்று வேறுபட்டு தனித்து நிற்கிறது. பிளவுவாத/ பிரிவினைவாத சித்தாந்தமான பார்ப்பனியத்தால் வடிவமைக்கப்பட்ட இந்து மதமும் அதன் கோட்பாடுகளும் எவ்வெவ்வகையில் புத்த சமய கொள்கைகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன என்பதை அயோத்திதாரின் மொழியாக்கத்திலேயே இங்கு காண்போம். அவர் சொல்கிறார்:
“இந்துக்கள் என்போர் அவரவர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள அவரவர்கள் தேவதைகளைத் தொழுது அவர்களுக்குப் பூசை, நெய் வேத்தியஞ்செய்து வந் தால் மோட்சமும் சுகமும் உண்டென்பார்கள். பௌத்தர்களோ சன்மார்க்க அடிப்படையில் சீலத்தைப் பின்பற்றி ஒழுக்கத்தில் நிலைப்போர்க்கு முத்திய சுகமுண்டென்பார்கள்.
இந்துக்கள் என்போர் அவர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள வேதத்தை நம்பு வதுடன் சாதியாசாரம் சமயசாரத்தில் லைத்திருக்க வேண்டுமென்பார்கள். பௌத்தர்களோ தங்களது பௌத்த போதாகமத்தின்படி பாவச் செயல்களை அகற்றி, நன்மெய்க் கடைபிடித்து இதய சுத்தி உடையவர்களாகி சருவ சீவகர்கள் மீதும் அன்பு பாராட்ட வேண்டும் என்பார்கள்.
இந்துக்களென்போர்களுக்கு தங்கள் சாதியாசாரங்களுக்குத் தக்க சாதிப் பெயரும் தொடர் மொழியும் இருப்பதுடன் நெற்றியிலும் கழுத்திலும் சமய சின் னங்களாகும் விபூதி, திருமண், உருத்திராட்சம் முதலியன இருத்தல் வேண்டும்.
பௌத்தர்களோ சகல மக்களையும் சோதிரரென பாவித்து சகலரும் ஒற் றுமெயின் வாழ்க்கைப் பெற விரும்புதலும், பஞ்ச பாதகங்களை அகற்றி வாழ்தலே பௌத்த சின்னமென்று எண்ணி பஞ்சசீலத்தையே தியானமாகக் கொண்டு அம் மேறை நடப்பார்கள்”
இந்து மதம் கடவுள்/ மோட்சம்/சொர்க்கம் என்னும் மூடநம்பிக்கைகளைக் கண்மூடிக் கொண்டு பின்பற்றும் மதமாக இருக்கிறது; சாதியப் பிரிவினைகளை தனது பிரதானக் கோட்பாடாகக் கொண்டிருக்கிறது; மத அடையாளங்களை நெற்றியிலும் கழுத்திலும் சுமந்துகொண்டு திரியும் ஒரு பிற்போக்கு மதமாக உள்ளது என்பதை விளக்குகின்றன மேற்காணும் அயோத்திதாசரின் குறிப்புகள். அதே சமயம் மனிதர்களை சதுர் வர்ணங்கள் /சாதிகள் என்று பிளவுபடுத்தும் இந்து மத நம்பிக்கைகளுக்கு நேர் விரோதமான சகோதரத்துவத்துவ அடிப்படையில் அன்பின் வழிப்பட்ட மக்கள் ஒற்றுமையை போதிக்கிறது புத்த தம்மம் என்பதை யும் குறிப்பிட்டுக் காட்டுகிறார் பண்டிதர்.
தீண்டப்படாதவர்களும் பின்தங்கிய வகுப்பினரும் படிநிலை அடிப்படை யில் அமைந்த சாதிய வுஏற்றத்தாழ்வுகளை இந்து மதம் தனது சித்தாந்தமாகக் கொண்டு கடைப் பிடிப்பதால் இம் மதத்தை எதிர்க்கின்றனர். அறிவுத்துறை பெரிதும் வளர்ச்சி யடைந்துள்ள இன்றைய கட்டத்தில் இந்த வகுப்பினர் இந்து மதத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள் என்ற அம்பேத்கர் இந்து மதத்தை வெறுத்தொதுக்கிய அவர்கள் மூன்று காரணங்களுக்காக பௌத்தத்தை விரும்புகின்றனர் என்றார். அவை:
1) பௌத்தம் இந்தியாவுக்கு அந்நியமான மதமல்ல.
2) பௌத்த மத்தின் மிக முக்கியமான சித்தாந்தம் சமூக சமத்துவமாகும். இதைத்தான் அவர்கள் விரும்புகின்றனர்.
3) பௌத்தம் பகுத்தறிவு சார்ந்த மதம். அதில் மூட நம்பிக்கைகளுக்கு இடமில்லை.
தீண்டப்படாதவர்கள் பௌத்தம் விரும்புவதற்கான காரணங்களை இவ்வாறு எடுத்துக் காட்டிய அம்பேத்கர் 1956, மே-24ல் பம்பாய் நரே பூங்காவில் நடை பெற்ற மாபெரும் கூட்டத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின்போது புத்த மதம் இந்து மதத்தினின்று பகுத்தறிவுவாத அடிப்படையில் மேம்பட்டது என்பதற்கு ஆதாரமாக கீழ்வரும் வாதங்களை முன்னிறுத்தினார். அவை:
1) இந்து மதம் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறது. புத்த மதத்துக்கு கடவுள் இல்லை.
2) இந்து மதம் ஆன்மா என்று ஒன்று இருக்கிறது என்று நம்புகிறது. புத்த மத சித்தாந்தத் தின் படி ஆன்மா இல்லை.
3) இந்து மதம் சதுர் வர்ணத்தையும் சாதி அமைப்பு முறையையும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் புத்த மதத்தில் சதுர் வர்ணியத்துக்கும் சாதி அமைப்பு முறைக்கும் இடமில்லை.
புரட்சியாளர் அம்பேத்கார் இந்து மதத்தினின்று பௌத்தத்தை வேறுபடுத் திக் காட்டி அதன் முற்போக்கு சித்தாந்தத்தை 1956களில் விளக்கியது போலவே அயோத்திதாசர் 1910களிலேயே விளக்கமளித்துள்ளார். வகுப்புவாரி பிரதிநித் துவம் கோரியது, அரசியல்/கல்வி/வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு வேண்டியது, கல்வி பெறுவதற்கு சிறப்பு சலுகைகள், பொதுசொத்துக்களில் தமக்கான பங்கு/பொது இடங்களில் தலித் மக்கள் புழங்குவதற்கான சிவில் உரிமைகள் கோருதல் என்று தலித் மக்கள் முன்னேற்றத் துக்காக சிந்தித்ததிலும் தலித்துகளுக்கான அரசியல்/சமூக நல அமைப்புகள் தோற்றுவித்து மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தியதிலும் சாதி ஒழிப்புப் போராளியாக எழுச்சிப் பெற்றதிலும் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் முன்னோடியாகத் திகழ்கிறார் அயோத்திதாசர் என்றால் அது மிகையாகாது. அதே வேளையில் தலித் மக்கள் இந்து மதத்தின் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை அடைவதற்கான வாய்ப்புகள் நிறைந்துள்ள ஒரு மார்க்கமாக பௌத்தத்தைத் தேர்வு செய்ததிலும் பண்டிதர் அம்பேத்கருக்கு முன்னோடியாகவே விளங்குகிறார் என்பதும் மனதில் கொள்ளத்தகுந்தது.
அயோத்திதாசரின் மாற்றியமைக்கப்பட்ட பௌத்தம்:
புத்த மதத்தின் சாதி பேதமற்ற சகோதரத்துவம் குறித்து கீழ்வருமாறு எடுத்துரைக் கிறார் அயோத்திதாசர்: “புத்த மதத்தில் சாதி பேதமில்லதிருக்க வேண்டுமென்று போதித்துள்ள கட்டளைப்படிக்கு பலவகை கால்வாய்களில் ஓடிவரும் அசுத்த சலங்களெல்லாம் சமுத்திரத்தில் விழுந்து சுத்தமடைவதுபோல் பார்ப்பனனென்பவன் வந்தாலும், நாயுடு என்பவன் வந்தாலும், முதலி என்பவன் வந்தாலும் அவர்களை வேறு சாதி என்று வித்தியாசம் பாராமலும் சத்துருக்களென்று சங்கைக்கொள்ளாமலும் தன்னவர்களைப்போல ஆதரித்து சுத்த இதய முண்டாகச் செய்வார்களே அல்லாது இன்ன சாதி இனிய சாதி என்று புறங்கூறி தள்ளமாட்டார்கள்”(காண்க:அயோத்திதாசரின் புத்தர் என்னும் இரவு பகலற்ற ஒளி) பௌத்தத்தின் சகோதரத்துவ/சமத்துவ சிறப்புகளை மேற்கண்ட வகையில் புரிந்துகொண்ட பண்டிதர் தமிழகத்தில் கட்டி எழுப்பிய தமிழ்ப் பௌத்தத்தை பகுத்தறிவுவாத பௌத்தம் என்று சொல்லத் துணிகிறோம் நாம். “வழக்கமான பௌத்த வரலாற்றிலிருந்து விலகித் தாசர் பழந்தமிழ் இலக்கியங்கள், நிகண்டுகள், பௌத்த சமய நூல்கள், செவிவழிக் கதைகள், பழமொழிகள் ஆகியவற்றை மறு வாசிப்பு செய்து பௌத்த தன்மத்தை வாழ்ந்து வீழ்ந்த பறையரின் பூர்வ மதமாக, பாதிக்கப்பட்டோரின் மதமாக கட்டி எழுப்ப முயன்றார். இது அவரது தனித் தன்மை” எனும் ராஜ் கௌதமன் அவர்களது கூற்றும் இங்கு நினைவுக் கூறத் தகுந்தது.
அயோத்திதாசர் இங்கு கட்டியமைத்த பௌத்தம் மரபான பௌத்தத்தின் சாயல் கொண்ட முற்போக்கான பௌத்தமாகும். பகவன் புத்தர் இறந்து நூற்றுப் பத்தாண்டு கள் கழிந்தபின் புத்த மதத்தில் நுழைந்துவிட்ட புதிய பழக்க வழக்கங்களை மறுக்கும் பொருட்டு 700 பிக்குகள் கொண்ட மாநாடு கூடியது என்று சொல்லப்படுகிறது. அதன்பின் புத்த மதம் ஹீனயாணம்(தேரவாதம்)/மகாயாணம் என்று இரண்டு பிரிவுகளாக உடைந்ததாகவும் மரபான பௌத்தத்தைப் பின்பற்றியவர்கள் ஹீனயாண பௌத்தர்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மகாயாண பௌத்தம் புத்தரை கடவுள் நிலைக்கு கொண்டுசென்றது; கடவுள்/ஆன்மா/மறுபிறப்பு கொள்கைகள் மீது நம்பிக்கைக் கொண்டு செயல் பட்டது; சாதி மறுப்பை வற்புறத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது. “இலங்கைத் தீவிலே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் நாளது வரையில், பழைய தேரவாத பௌத்தம் நிலைப்பெற்றுள்ளது. இத்தீவிலேயும் கி.மு. முதல் நூற்றாண்டிலே புதிய கொள்கைகள் பௌத்த மதத்தில் புகத் தொடங்கின” என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி. பவுத்தம் மற்றும் இலங்கை பௌத்த வரலாற்றுப் பின்னணி இவ்வாறிருக்க 1898ல் கர்னல் ஆல்காட் துரையுடன் இலங்கை சென்று பௌத்தம் தழுவிய அயோத்திதாசர் இலங்கை பௌத்தத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்ட புதிய பௌத்தத்தை தமிழகத்தில் நிறுவ முயன்றிருக்கிறார்.
“அயோத்திதாசரின் பவுத்தம் தனித்தன்மை மிக்கது. இலங்கை சென்று பவுத்தம் தழுவி திரும்பிய அவர் ஈழ பவுத்த சாயலை பின்பற்றாமல் முற்றிலும் புதிய வழியை தேர்வு செய்தார். தமிழ் மரபிலிருந்து பௌத்த விளக்கங்களை வழங்கிய அயோத்திதாசர் சமயம் என்பதற்கு தேவையான கதையாடல்களை மறுகண்டுபிடிப்பு செய்தார் ,…சென்னையில் தலைமை சாக்கைய பௌத்த சங்கத்தை அமைத்து அதன் கிளைகளை யும் அமைக்கத் தொடங்கினார். பவுத் தத்தை இந்துக்களல்லாத பஞ்சமர் களுக்கான நிரந்தர சமயமாக நிறுவன ரீதியில் நிறுவிட அவர் ஓயாமல் உழைத்தார்…வழிபாட்டு மையம், வழிபாட்டு முறைகள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சடங்குகள், பள்ளிகள், சுடுகாடு, தனியான சமய நூல் என்று அவர் அதற்கான வழிமுறைகளை அந்தக் கிளைகளில் செயற்படுத்தினார். இந்த வழிமுறைகளை அவர் மரபான பௌத்தத்தி லிருந்து எடுக்க வில்லை. ஏற்கனவே தமிழகத்தில் புழக்கத்திலிருந்த பண்பாட்டு அம்சங்களிலிருந்து எடுத்துப் புனரமைத்தார்” எனும் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களது கூற்று பண்டிதர் இங்கு மாற்றியமைக்கப்பட்ட பௌத்தத்தை நிறுவ முயன்றார் என்னும் கருத்துக்கு ஆதாரமாக நிற்கிறது. மேலும் பண்டிதரின் பௌத்தம் தனிப்பட்டது என்பதை நிறுவுவதற்கு அவரது காலத்தில் சென்னையில் இயங்கிய மகாபோதி சங்கத்துடன் அவருக்கு இருந்த முரண்பாட்டையும் சான்றாக கொள்ளலாம்.
அயோத்திதாசரின் பௌத்தம் சாதி எதிர்ப்பு பௌத்தமாகும் என்பதுடன் சாதி அழித்தொழிப்புக்கு காது கொடுக்காத வேறெந்த சிந்தனையையும் செயல் பாட்டையும் அது தயவு தாட்சண்யமின்றி நிராகரித்தது அல்லது பொருட்படுத்த வில்லை என்றும் சொல்லலாம். இலங்கை தர்மபாலா முயற்சியால் சென்னையில் துவக்கப்பட்ட மகாபோதி சங்கம் சாதி மறுப்பு கொள்கையற்றது என்று கடுமை யான விமர்சனங் களை முன்வைத்துள்ளார் பண்டிதர். அச்சங்கத்தின் பிற்போக்கு கோட்பாடுகளைக் கண்டித்துவிட்டு பண்டிதரின் சமகாலத்து பவுத்த சிந்தனை யாளராக/ செயற் பாட்டாளராக விளங்கிய பேரா.லட்சுமி நரசு அவர்களும் அம் மகா போதி சங்கத்தி னின்று வெளியேறினார். மகாபோதி சங்கத்தை நூதன பௌத்தம் என்று விமர்சனம் செய்த பண்டிதர் “இந்துக்களின் செய்கையை விடாதவர்களும் சாதிபேதத்தை உடையவர்களுமாகிய இருவர்கள் வெளித்தோன்றி யாகங்கள் பௌத் தர்களாகி விட்டோம் மற்றவர்களையும் பௌத்தர்களாக்க வந்துள்ளோமென இரண்டு பௌத்த சங்கங்களை ஏற்படுத்திக் கொண்டு அக் கூட்டங்களில் தங்கள் சாதி சம்பந்தப்பட்ட ஒருவரேனுமின்றி சாதி பேதமில் லாமற் சேரிகளில் வாழ்ந்திருந்தவர் களையே அதில் அங்கங்களாகச் சேர்த்துக் கொண்டு நூதன பௌத்தம் பிரசங்கித்து வருகிறார்கள்” ( அ.சிந்தனைகள்-II,பக்:441)என்றார்.
“புத்த பகவானின் சிலைகளை சங்கங்களில் வைக்கக்கூடாது, மறுபிறவி என்பதுங்கிடையாது, கன்மமுங்கிடையாது, மனிதன் எப்போது மரித்துவிடுகிறானோ அதுதான் அவனுக்கு முடிவு. மற்றோர் சுகம் யாதுங்கிடையாதென புத்த தன்மத்திற்கு எதிரிடையாய் அபுத்த தன்மமாம் நூதன பௌத்தம் போதிக்கின்றார்கள். அதனால் புத்த தன்மமே மாறுபடுவதுடன் அதனைக் கேட்போர்கள் மனிதன் மரிப்பதே முடிவாதலின் மனம் போனவாறு கொலை செய்தல் பாபமென்னை, குடித்து சுகித்தால் பாபமென்னை, அன்னியன் தாரத்தை இச்சித்தால் பாபமென் னை, அன்னியன் பொருளை அபகரித் தால் பாபமென்னை, பொய் சொன்னால் பாபமென்னை என்னும் உச்சாக முண்டாகி தானும் கெடுவதுடன் தன்னை அடுத் தோரையுங் கெடுத்து தேசத்தையும் சீரழித்து இராஜ விசுவாசத்தையும் கெடுப் பதற்கு தடையிராது” என்றார். மேலோட்டமாய் பார்ப்பதற்கு மகா போதி சங்கம் சிலை வணக்கம் கூடாது என்றும் மறுபிறவி-கன்மம் கிடையாது என்றும் சொல்வது முற்போக்கான சிந்தனையைக் கொண்டது என்பது மாதிரியான தோற்றம் தரக்கூடும். ஆனால் அதன் கருத்துக்களை பகுத்தறிவுவாத பவுத்தத்தின் நோக்கு நிலையிலிருந்து அவதானிக்கும்போது மகாபோதி சங்கத்தின் பொய்த்தோற்றமும் பிற்போக்கு வாதமும் துலக்கமாகிறது.
கடவுள் இல்லை:
முகம்மது நபி, இயேசுநாதர் போன்றவர்கள் போல் புத்தர் கடவுளின் தூதராக பூமியில் அவதரித்தவர் இல்லை. அவர் தம்மை கடவுள் என்று எங்கும் சொல்லிக் கொள்ளவு மில்லை. அவர் மனிதராகப் பிறந்து, மனிதனாக வளர்ந்து ஞானம் பெற்று புத்தர் என்ற மெய்ஞ்ஞான நிலையை அடைந்தவர். ஞானம் அடைந்தால் சாதாரண மனிதரும் புத்தர் என்ற நிலையை அடையலாம் என்பது பௌத்த தருமத்தின் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும். புத்தர் போதித்த தருமத்தை மதம்/ சமயம் என்றழைப்பதைக் காட்டிலும் அறநெறி, வாழ்க்கைமுறை, மார்க்கம், தருமம் என்று குறிப்பிடுவதே சரியாகும். தனது சீடர் ஆநந்தரைப் பார்த்து “ஆநந்தா உங்களுக்கு நீங்களே விளக்காய் இருங்கள்” என்றதன் மூலம் மனிதன் தன் விடுதலையை தானே கண்டடைந்தாக வேண்டுமே தவிர வேறு ஒருவர் மூலம் தனது மீட்சியைப் பெற முடியாது என்றார் புத்தர். மனிதன் தன் துக்கங்களை உணர்ந்து, துக்கத்துக்கான காரணங்களை உணர்ந்து, துக்க நிவாரணம் பெற்று, துக்க நிவாரண மார்க்கம் கண்டடைந்து மகிழ்வான வாழ்க்கையைப் பெற வேண்டும் என்பதுவே பௌத்த தருமத்தின் குறிக்கோள்.
இந்த உலகத்தை கடவுள் படைத்தார்; எங்கெங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறார் கடவுள்; காலங்கள் கடந்து, என்றென்றைக்கும் நீடித்து நிலைப் பவர் கடவுள்; சர்வ வல்லமையும் கொண்ட கடவுளால் முடியாதது என்று ஒன்று மில்லை என்றெல்லாம் பழமைவாதத்தால்/ஆன்மீகத்தால் முன்னிறுத்தப்படும் கடவுளை புத்த மதம் ஏற்பதில்லை. கடவுள் மறுப்பு சிந்தனையை பகுத்தறிவு வாத/பொருள்முதல்வாத சிந்தனை என்று மார்க்சிய/பெரியாரிய அறிவுஜீவிகளால் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் கடவுளை/சாதியை மறுக்கும் பௌத்தம் அறிவியல் பூர்வமான மதம் என்று சொல்லப்படுகிறது. புத்தரின் போதனைகளில் மேற்கண்ட நவீனப் போக்குகள் நிறைந்துக் காணப்படுவதை அறிந்து, அம்மதத் தில் பார்ப்பனிய/இந்து மத பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக உள்ள சிந்தனைகளைக் கிரகித்துக்கொண்டுதான் அதன்பால் மிகுந்த ஆர்வம் கொண்ட அயோத்திதாசர்.
கடவுள் என்னும் சொல்லின் பொருள் பயன் என்பதாகும் என்றார். “ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை/போதியங்கிழவனை பூமிசை யொதுங்கினை” என்னும் சூளாமணி இலக்கிய வரிகளை எடுத்துக்காட்டி “இல்லந்துறந்து கட வுளானானென்னும் மொழியின் ஆதரவால் நன்மெய்க் கடைபிடித்த மகாஞானி கள் ஒவ்வொருவருக்கும் கடவுள் என்னும் பெயர் பொருந்தி நிற்கின்றது” என்று கடவுள் பற்றிய மற்றபிற மதங்களின் கதையாடல்களை புரட்டிப் போடுகிறார் அயோத்திதாசர்.
“ஓர் கடவுளில்லாமல் உலகம் உண்டாச்சுதா, குயவனில்லாமல் பாண்டம் உண்டாச்சுதா என வினவுவதும் உண்டு. அங்ஙணம் வினவுவோர் குயவனுக்கு மண் காரணமா யிருந்தது போல் கடவுளுக்குக் காரணம்(அதாவது பிரபஞ்சத்தை யும் உலகத்தையும் உயிர்களையும் கடவுள் படைத்தார் என்றால் கடவுளை யார் படைத்தார்? என்னும் கேள்வியாகும் இது) எதுவெனக் கண்டறிவாரேல் சிருட்டிகள் உண்டா இல்லையா என்பது செவ்வனே விளங்கும்…. அல்லது கடவுள் என்னும் மொழிக்கும் சிருட்டிகள் என்னும் மொழிக்கும் பொருள் பொருந்துமா என உசாவுவரேல் பொருந்தாது பொருந்தாதென்பதும் சிறந்து விளங்கும்” என்று கடவுள் நம் பிக்கைமீது விவாதம் தொடுக்கும் பண்டிதர் “கடவுள் என்னும் பொருளறிந்தோன் நீதியினாலும் நெறியினா லும் வாய்மெயினாலும் அதனை விளக்குவான். கடவுளென்னும் பொருளறியாதோன் கடவுள் எங்கும் நிறைந்திருக்கின்றான், அவனுக்கு எல்லாம் தெரியும் என்று தம்பட்ட மடிப்பான். ஆனால் அன்னியனுடைய பொருளை அபகரிக்கும் காலத்தும், அன்னியன் மனைய்வியை இச்சிக்குங் காலத்தும், அன்னியனை வஞ்சிக்குங்காலத்தும் எங்கும் நிறைந்த கடவுள் எல்லா மறியுங் கடவுள் பார்ப்பா னென்னுஞ் சிந்தனாச் செயலுண்டோ, இல்லை” எனும் பண்டிதர் மனிதன் கடவுள் நம்பிக்கையை தனது சுயநலத்துக்கு பயன்படுத்துவதையும் கடவுள் ஒருவர் இருந்தால் இதையெல்லாம் பொறுத் துக்கொண்டு சும்மா இருக்கமாட்டார் அல்லவா என்ற தொனியிலும் பேசி கடவுள் பற்றிய மூடநம்பிக்கையை அம்பலப்படுத்துகிறார். .
கடவுள் என்னும் சொல்லுக்கு நன்மை என்று பொருள் வழங்கியவர்களும் பௌத்தர் களே என்றும் ஆதி புத்தரின் ஆயிரக்கணக்கான பெயர்களுள் கடவுள் என்ற பெயரும் ஒன்றாகும் என்றும் “ஆனால் கடவுளென்னும் ஓர் உருவம் கட் டைத்தடிபோல் சட்ட திட்டமக்க உட்கார்ந்துகொண்டு உலகத்தை சிருஷ்டிப்பவர் ஒருவர் இருக்கின்றார் என்னில் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” பௌத்தர்கள் என்றும் தமது கடவுள் மறுப்புக் கொள்கையை தெளிவுபட எடுத்துரைக்கிறார் பண்டிதர்.
“மாற்றமே உலகின் நியதி. எல்லாப் பொருள்களும் உயிர்களும் அந்த விதிக்கு உட்பட்டு மாறிக்கொண்டேயிருக்கின்றன். எனவே உலகம் சம்பவங்களின் பிரவாகமாக இடையீடில்லாத நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றது” என்பதுவே பௌத்த தருமத்தின் உலக இயக்கத்தின் பற்றிய கோட்பாடு என்று பா.ராமஸ்வாமி சொல்வதுப்போல சமூக விஞ்ஞானம் எனப்படும் மார்க்சியம் தோன்றும் முன்பே அதன் புகழ் வாய்ந்த வாக்கியமான ‘மாறுதல் என்பது ஒன்றே மாறாதது’ என்னும் சொல்லைப் பிரயோகித்து அதற்கான விளக்கங்களை முன் வைத்திருக்கிறது பௌத்தம். உலக இயக்கம் என்பது இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டதுவே தவிர எவ்வகையிலும் கடவுள் என்னும் இல்லாத ஒன்றுடன் சம்பந்தபட்டது அல்ல என்ற அறிவியல் பூர்வமான விளக்கத்தை பௌத்தத்தில் காணமுடிகிறது.
ஆன்மா என்று ஒன்று இல்லை:
ஆன்மா என்பது மனிதனுக்குள் குடிகொண்டிருக்கும் ஓர் அரூபம் என்கிறது ஆன்மீகம். பிறக்கும்போதே உடலுடன் ஒட்டிப்பிறந்துவிடும் ஆன்மா இறக்கும் போது உடலைவிட்டு நீங்கிவிடுகிறது; ஆன்மா அழிவற்றது-என்றென்றும் மாறாதது; ஆன்மாவை ஐம்புலன் களால் உணர முடியாது என்றெல்லாம் ஆன்மா குறித்த நம்பிக்கைகள் மதங்களால் உருவாக்கப்பட்டுள்ளன இத்தகைய பிற்போக்குக் கருத்துக்களின்/மூட நம்பிக்கை களின் பிறப்பிடமாக-காப்பாளனாக விளங்குகிறது இந்து மதம் என்பதும் நாமறிந்ததே. ஆன்மா பற்றிய மேற்படி கருத்துக்களை மறுக்கிற பௌத்தம் மனித வாழ்வு என்பது ‘பஞ்சஸ்கந்தங்களின் (உருவம், உணர்வு, அறிவு, கருத்து, நிலைமை) வினையாற்றல் என்கிறது. ஒருவன் இறந்த பிறகும் ஆன்மா என்ற ரூபத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறான் என்ற ஆன் மீக வாதத்தை விஞ்ஞான அறிவுக்கு புறம்பானது என்று அதனை அலட்சியப் படுத்துகிறது பௌத்தம்.
“ஆன்மமென்னும் மொழி மகடபாஷையின் உற்பவமேயாம்.ஆன்மமென்பதின் பொருள் புருஷ்னென்(உடல்-க.ஆர்.)னப்படும்…பஞ்சஸ்கந்தங்கள் சரிவர அமைந்து மானிட னெனப் பாடியாடி உலாவும் புருஷ வடிவிற்கு ஆன்மனென்றும் ஆத்துமனென்றும் வழங்கலாயினர்”(அ.சிந்தனைகள்-II, பக்:433) என்கிறார் அயோத்திதாசர்.
“ஆன்மா பற்றிய பௌத்த விளக்கத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியான மாற்றம், மாற்றங்களுக்கிடையே தொடர்ச்சி, காரண-காரிய இயைபு ஆகியவை குறித்த விளக்கங்களை அறிந்து கொண்டால் பிறப்பு-இறப்பு என்ற மாற்றங்களுக்கு இடையே தொட்ர்கின்ற வினை-வினைப்பயன் என்ற காரண-இயைபினைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம். இதனை அறிவியல் பூர்வமாக லட்சுமி நரசு விளக்குகிறார்” என்றும் ” நிலையாமை என்ற பௌத்த கருத்தினை நரசு பௌதீக அறிவியல் துணையோடு விளக்க முற்படுகிறார். அகண்ட பிரபஞ்சத்தில் எதுவும் நிலைத் ததன்று எல்லாவித இருத்தல்களும் ஓர் இடைவிடாத சுழற்சியே-தொடர்ச்சியான ஓட்டமே. எல்லாமே தொடர்ந்து மாறுகின்றன. எதுவும் அதுவாக என்றும் இருப்பதில்லை மாறுவது என்பது விதி விலக்கன்று. அதுவே விதி. இதனை பௌதீகத்தின் அடிப்படைக்கொண்டு நரசு நிறுவ முயலுகிறார்” என்றும் ராஜ்கௌதம்ன் பண்டிதரின் சமகாலத்து பௌத்த சிந்தனையாளர் பேரா.லட்சுமி நரசுவின் ஆன்மா பற்றிய பௌத்த நோக்கிலான அணுகுமுறையை விளக்குகிறார்.
“அகம் அல்லது ஆன்மா என்றென்றும் நிலையாய் உள்ளதென்னும் நம்பிக்கையானது தவறான எண்ணங்களுள் பெருந்தவறானதென்றும், எல்லா பிரமைகளுள்ளும் இது மிகவும் வஞ்சிக்கத்தக்கதென்றும் அறிந்தொழுக வேண்டும். அப்பிரமையை உடையவர்கள் துக்க சாகரத்தினின்று கரையேற மாட்டார்களென்று சத்தருமம் போதிக்கின்றது” புத்தர் அருள் அறம் என்ற தமது நூலில் ஆன்மா குறித்து இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் ஜி. அப்பாதுரையார் அவர்கள். அப்பாதுரையார் அயோத்திதாசரின் நேரடி சீடராக இருந்தவர் என்பதும் கோலார் தங்க வயல் தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தின் உப தலைவராக இருந்து பணியாற்றிவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆன்மா பற்றிய லட்சுமி நரசு வின் அப்பாதுரையாரின் மேற்காணும் முற்போக் குக் கருத்துக்கள் யாவும் அயோத் திதாசரது பகுத்தறிவுவாத பௌத்த சிந்தனைகளின் பிரதிபலிப்புகள் எனலாம்.
பௌத்தத்தின் பார்வையில் மறுபிறப்பு-முக்தி-மோட்சம்:
மறுபிறப்பு, கர்மவினை, முக்தி, மோட்சம் என்பவை சம்பந்தமாக உலகின் பல்வேறு மதங்களும் வேதங்களும் இந்து மதமும் ஏற்படுத்தி வைத்துள்ள புரிதல்களை நிராகரிக்கிறது பௌத்தம். மனிதன் செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப மனிதனாகவோ விலங்காகவோ அல்லது பிற உயிரங்களாகவோ மறுபிறப்பு எடுக்கின்றான் என்பது இந்து மதம் உள்ளிட்ட பிற மதங்களின் நம்பிக்கை. இந்து மத நம்பிக்கையின்படி அவரவரின் கர்ம பலன்களுக்கு ஏற்ப மறுபிறப்பின் தன்மை அமைகிறது எனப்படுகிறது. ஆனால் பௌத்தம் மனிதனின் எண்ணங்கள் /காரி யங்களினால் விளையும் பலன்களையே அவனது மறுபிறப்பாக கொள்கிறது. அவனது செய்வினைகள் தன் மீதும் தன்னைச் சார்ந்தவர்கள் மீதும் ஏற்படுத்தும் தொடர் விளைவுகளை மறுபிறப்பு என்கிறது பவுத்தம்.
“தனது பேராசையால் ஒருவனைக் கெடுத்து துன்பப் படுத்திய தீவினை யானது இவனை விடாது துன்பப்படுத்துவதற்கு பின் தொடர்ந்தே நிற்குமென்று கூறியுள்ள கட்டளையாம் விதியை உணராது செய்த தீவினையின் பலனை அனுபவிக்குங்கால் என் தலைவிதி, நான் முன் செய்த தீவினை என்று கட்டளை விதிக்கு மீறி நடந்த செயலை ஓதி துக்கிக்கின்றான்…ஆதி கட்டளையை மீறாமலும் தீவினைக்கு உட்படாமலும் இருப்பானாயின் அதன் சுக விருத்தியால் என் தலைவிதி என்னும் சொல் நீங்கி பூர்வ புண்ணியமென்று கொண்டாடுவான்” (அ.சிந்தனைகள்-II,பக்:37) பண்டிதரின் இக்கூற்றில் உள்ளீடாக படிந்துள்ள மறு பிறப்பு/விதிப்பயன் என்பது பற்றிய கண்ணோட்டம் பிற மதங்களின் நம்பிக்கைகளின்று மாறுபட்டது.
”இறப்பு என்பது மனம், உடல் ஆகியவற்றின் கலைவு. ஆயினும் இறந்த மனிதன் தனது வினைகளில் தொடந்து வாழுகிறான். ..வினைகள் அவனது குழந்தைகள் போன்றவை. அவனது சித்தத்திற்கு அப்பாலிருந்து அவை வாழ் கின்றன. எங்கெல்லாம் ஒருவனின் எண்ணங்களும் பேச்சுக்களும் செயல்களும் பிறருடைய மனங்களில் தம்மையே பதிவு செய்கின்றனவோ அங்கெல்லாம் அவன் மறுபிறவி எடுக்கிறான். மறு அவதாரம் செய்கிறான். ஒருவனுடைய வினைகள் அவனுக்கு முன்னின்று தொடர்ந்து வந்து அவன் வாழும் சமூகத்தில் பிறாரிடம், அவனது சந்ததிகளிடம் சேகரமாகின்றன-மறுபிறவி எடுத்துத் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கின்றது” மறுமலர்ச்சி பௌத்த சிந்தனையாளர் லட்சுமி நரசு அவர்களது மறுபிறவி பற்றிய இக்கூற்றை தமது அயோத்திதாசர் ஆய்வுகள் என்ற நூலில் ராஜ்கௌதமன் எடுத்துக்காட்டுகிறார்.
இந்திய வேதங்களும் இந்து மதத்தின் புராணங்களும் ‘முக்தி’ என்பதை பௌத்தம் ‘பரிநிருவாணம்’ என்கிறது. இந்து மதத்தின் வரையறைபடி முக்தி என்பது ‘விகார உணர்ச்சிகளிலிருந்து விடுதலை: பரம்பொருளோடு ஐக்கியம்’ என்பதாகிறது எனும் பா.ராமஸ்வாமி “சுவர்க்கமும் நரகமும் எங்கோ இருப்பதாக வும் ஒவ்வொருவரும் இறந்தபிறகு அவற்றில் ஒன்றை அடைவர் என்றும் கூறாமல் இந்தப் பிறவியிலேயே இங்கேயே நிருவாணம் அடைய முடியும் என்று பௌத்த தருமம் கூறுகின்றது…ஆசா பாசங்கள் யாவும் அகன்று நான் என்ற ஆணவம் அறவே அழிந்து மன விகாரங்கள் அனைத்தும் ஒடுங்கி சகல உயிர்களிடத்திலும் கருணை பெருகி, அவற்றிற்கு அப்பால் பாவ புண்ணியங்கள் பற்றிய கருத்தும் அவிந்து சித்தத்தில் தன் சிந்தனையேயில்லாத சாந்தி நிலையே நிருவாணம் எனலாம்.
உடலோடு இருக்கும்போழுதே இந்த நிலையை அடைவார்கள். பின்னாலும் உயிர் வாழ்ந்திருத்தல் கூடும்.அதற்குக் காரணம் முந்திய வினைப்பயனில் எஞ்சியுள்ள பகுதியே” என்று இந்துத்வா முக்தி நிலைக்கான விளக்கங்களிலிருந்து மாறுபட்டு இயக்க இயல் கண்ணோத்துடன் பரிநிருவானம் என்பதை பௌத்தம் அணுகுவதாக விளக்கமளிக்கிறார் பா.ராமஸ்வாமி.
அநித்யம், அநாத்துமம் என்பதுவே பௌத்த தத்துவத்தின் மையக்கரு. அனுபவம்/அநுமானம் (இதனை காண்டல்/கருதல்-என்கிறார் ஜி.அப்பாதுரையார்) என்பதுவே மனிதனின் அறிவுக்கு ஆதாரம் என்பதை அநித்யம்-அநாத்துமம் என்று சொல்லப் படுகிறது. உலக இயற்கைக்கும் மானுடத்தன்மைக்கும் மீறியதாக எந்தவொரு செயலையும் பண்பையும் காண்பதில்லை பௌத்தம். பிற மதங்கள் கடவுள்/புனர் ஜன்மம் என்பது குறித்தெல்லாம் பிற்போக்கான கதைகள் புனைந்து மக்களது மனங்களில் வேரூன்றச் செய்தன. அத்தகைய மூடநம்பிக்கை மூடை களை தத்துவ விளக்கங்களால் அவிழ்த்துக்கொட்டி அம்பலப்படுத்திவிட்டு இயற்கை விதிகளை சார்ந்தது மனிதனின் வாழ்வு என்பதை நிரூபித்தது என்பதாலேயே பௌத்தம் பகுத்தறிவை மையமாகக் கொண்டது என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞான தொழில் நுட்பம் வளர்வதற்கு மார்க்சியம் தோன்றியதற்கும் ஈராயிரமாண் டுகளுக்கு முன்பே இயக்கவியல் பொருள் முதல்வாத சிந்தனையாளராக தோன் றியவராக இருக்கிறார் புத்தர் என்பதையே இதுவரைக்கும் நாம் கண்ட விவாதங் கள் எடுத்துரைக்கின்றன.
மதம் மக்களுக்கு அவசியம்:
சத்தரும கொள்கையின்படி காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களிலிருந்து விடுபட்டு, பஞ்சசீலம் ஏற்று, எண்வழிகளைப் பின்பற்றி, பற்று எனும் அவாவை விட்டோழித்து, பிறவி துன்பங்களிலிருந்து விடுதலை பெற்ற மகிழ்வான/அமைதியான வாழ்க்கையை அடையுமாறு போதிக்கிறது பௌத்தம். அதன் வழியில் வன்முறை/புரட்சி/இரத்தம் சிந்துதல் என்பவற்றை விரும்பாத அறம்-அஹிம்சை வழியிலான சாதிபேதமற்ற சமுதாய மாற்றத்தை வழக்கொழிந்துபோன பௌத்தத்தை மீட்டெடுத்து மறு உருவாக்கம் செய்வதன் மூலம் உருவாக்க முடியும் என்று அதையொட்டியே சிந்தித்தும் செயல்பட்டும் வந்துள்ளார் அயோத் திதாசர். இவ்வகையில் அயோத்தி தாசரின் பௌத்தத்தை பகுத்தறிவுவாத பௌத்தம், மாற்றியமைக்கப்பட்ட பௌத்தம், அறிவுவழி பௌத்தம், மறுமலர்ச்சி பௌத்தம், சாதி விடுதலை பௌத்தம் என்றெல்லாம் பேசுகிறொம் நாம். தமிழகத் தில் மட்டுமல்லாமல் இந்தியாவெங்கும் வழக்கொழிந்து போன பழங்காலத்து மதம் என்று பௌத்த மதம் மதிப்பிடப்படுகிறது. ஆனால் பண்டிதர் தமிழ் மக்களின் வாழ்வியல் அம்சங்களில், வழிபாட்டு முறைகளில், கலாச்சார-பண் பாட்டு நிகழ் வுகளில் வாழ்ந்துகொண்டிருப்பதாக கருதினார். அப் பவுத்தம் பூரணமாக மீட்கப்பட்டு தமிழ்ச்சமூகத்தில் நிறுவப்படுவதன் மூலம் பார்ப்பனிய மேலா திக்கத்துக்கும் இந்து மதத்தின் சாதிய கெடுபிடிகளுக்கும் ஒரு முடிவு கட்டிவிட முடியும் என்றும் திடமாக நம்பி அவ்வழியில் செயலாற்றினார். சாதியத்துக்கும் தீண்டாமைக் கும் காரணமான வேர்களைக் கண்டறிந்து அவற்றைக் களைவதன் மூலம் திட்ட வட்டமானதொரு சாதியற்ற-சமுத்துவ சமுதாயத்தை படைப்பது என்ற செயல் தந்திரம் பண்டிதரின் பௌத்த மீட்டுருவாக்கக் கோட்பாட்டின் உள்ளீடாகும். இதுபோன்ற ஆழமான புரிதல்களிலிருந்துதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பௌத்தம் என்ற மதத்தின் தேவையை அறிமுகப்படுத்தினார் அயோத்திதாசர்.
மதமாற்றம் என்பதை சமூக அணுகுமுறை, ஆன்மீக அணுகுமுறை என்னும் இரண்டு அம்சங்களில் அணுக வேண்டும் என்றார் அம்பேத்கர். அம்பேத்கருக்கு அரை நூற்றாண்டுக்கும் முன்பே மேற்படி அம்சங்களின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மதமாக பௌத்தத்தை அணுகியிருக்கிறார் பண்டிதர். இந்து மதத்தின் சாதிய/தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான அவரது குரலை சமூக அணுகுமுறை சம்பந்தப்பட்டது என்றும் புத்தரின் கோட்பாடுகள்/ போதனைகளைப் பின்பற்றி பவுத்த அமைப்புகள் நிறுவி பவுத்த மீட்டுருவாக்கம் சார்ந்து செயலாற்றியதை ஆன்மீக சம்பந்தப்பட்டதாகவும் கொள்ளலாம்.
”சந்தர்ப்பக் கேடாக நான் இந்துவாக பிறந்துவிட்டேன்; ஓர் இந்துவாக பிறந்துவிட்ட நான் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன்” என்ற அம்பேதக்ர் அம்மதத்தை விட்டு வெளியேறி பௌத்தம் தழுவுமாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அழைப்பு விடுத்தார். முழு மனித வாழ்வைப் பெறவும், சமூக விடுதலையும் சமத்துவமும் அடையவும், சமமாக நடத்தப்படவும் சமவாய்ப்பு வழங்கப்படவும் முன் வருவதுமான ஒரு மதத்துக்கு மாறுங்கள் என்று கேட்டுக் கொண்ட அம்பேத்கர் “மதமாற்றம் என்பது நம்மைப் பொருத்தமட்டில் நம் சமுதாயத்தின் வளமான எதிகாலத்தை நிர்ணயிப்பாதா யிருப்பதால் மதமாற்றத்தை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றார். மதமாற்றம் குறித்து அயோத்திதாசர் தமது தனிச்சிறப்பான சொல்லாக்கங்களால் மூலம் வழங்கியுள்ள பௌத்த சமய/ சித்தாந்த கதையாடல்கள், அம்பேத்கர் மதமாற்றம் குறித்து முன் வைத்துள்ள கதையாடல்களோடு பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்து நிற்பதை இவ் விருவரையும் ஆழ்ந்து வாசிப்பதிலிருந்த்து அறிந்துணரலாம்.
அயோத்திதாசரும் அம்பேத்கரும் மதம் மக்களுக்கு அவசியம் என்ற கண்டறிதல் களிலிருந்து பவுத்த சமயத்தை தலித் மக்களுக்கு வழங்கினர். மக்களுக்கான மதத்தின் தேவையை “மனிதனுக்கு மதம் அவசியம் என்பது வெறும் மத விளக்கத்தால் மட்டுமல்ல, மக்கள் சமுதாயத்தை செயலாட்சிக்கு உட்படுத்தவும் விதி முறைகளின் மூலம் கட்டுப்படுத்தவுமான பின்னணியை உடையதாகும்” என்றார் அம்பேத்கர். அதே சமயத்தில் மதம் என்னும் சமூக நிறுவனமானது சமுக மேம்பாட்டுக்கும் தனி மனிதனின் மகிழ்வான வாழ்வுக்கும் வாய்ப்புகளை வழங்குவதாகவும் இருக்க வேண்டும் என்றார். பண்டைய காலந் தொட்டு நாளதுவரைக்கும் சமய சித்தாந்த/ செயல்பாடுகளுக்குப் பழகியே பரிணாம் அடைந்து வந்துள்ள இந்தியச் சமுதாயத்தின் சிக்கல்களை புத்த மதம் என்னும் அறிவுவாத சமயத்தின் அங்கீகாரத்துடன் எதிர் கொண்டு சரிகட்டுவது என்னும் செயல்திட்டம் அயோத்தாசருடையது. இந்த அடிப்படையில் மரபாண பௌத்தத்திலிருந்து தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த அதியற்புத பணியாகும் அவரது சமய பணி. ஏற்கனவே பவுத்தத்திற்குள் நுழைந்து படிந்துவிட்டிருந்த குறைந்தபட்ச மூடநம்பிக்கைகளையும் பிற்போக்குத் தனங்களையும் உதறிவிட்டு மரபாண பவுத்தத்தின் பகுத் தறிவு சிந்தனைகளின் துணையோடு சாதி பேதங்களை புறக் கணிக்கும் சமத்துவ பகுத்தறிவுவாத பௌத்தத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தமிழ்ச் சமூகத்தும் வழங்கினார் க.அயோத்திதாசப் பண்டிதர்.
துணை நின்ற நூல்கள்:
1) அயோத்திதாசர் சிந்தனைகள், தொகுப்பு-I மற்றும் தொகுப்பு-II- ஞான.அலாய்சியஸ்
2) புத்தர் அருள் அறம்-ஜி.அப்பாதுரையார், தொகுப்பு:ஸ்டாலின் ராஜாங்கம், ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை-24
3) புத்தர் அருள் அறம் எனும் ஜி.அப்பாதுரையாரின் நூலுக்கான பதிப்புரை -ஸ்டாலின் ராஜாங்கம்
4) க.அயோத்திதாசர் ஆய்வுகள்-ராஜ் கௌதமன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
5) பௌத்தமும் தமிழும்-மயிலை சீனி. வேங்கடசாமி, செண்பகா பதிப்பகம், சென்னை
6) புத்தமும் அவர் தம்மமும்-டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், தமிழில்: பெரியார் தாசன், பவுத்த ஆய்வு மையம், சென்னை
7) பௌத்த தருமம்-பா.இராமஸ்வாமி, சந்தியா பதிப்பகம், சென்னை.
8) புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்வும் பணியும்-வெளியீடு: NLC எஸ்சி/எஸ்டி பணியாளர்கள் நலச்சங்கம், நெய்வேலி.
9) மதத்தைப் பற்றி…-வி.இ. லெனின், தமிழாக்கம்:ஏ. சீனிவாசன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14
– வெ.வெங்கடாசலம்முந்தைய கட்டுரை: ஆண்ட பரம்பரைக் கனவில் இன்பம் காணும் இடைநிலைச் சாதிகள் முந்தையஅடுத்த கட்டுரை: வேட்டி கட்டும் வீரர்கள்அடுத்த
பௌத்தம் குறித்த ‘விடுதலை’ இதழின் கட்டுரைக்கு மறுப்பு
சட்வா சாக்யா பிரிவு: கட்டுரைகள் வெளியிடப்பட்டது: 07 நவம்பர் 2016
டாக்டர். அம்பேட்கர் 1956 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான மக்களுடன் புத்த மதம் தழுவினார். இந்த நிகழ்வின் 60 ஆம் ஆண்டினை நினைவு கூறும் விதமாக நாடு முழுவதும் ஆங்காங்கே பட்டியிலின மக்கள் குழுக்களாக இந்து மதத்தை துறந்து பௌத்தம் ஏற்று வருகின்றனர். இதனை ஒட்டி சென்னையில் கடந்த அக்டோபர் 16 அன்று ’47 டாக்டர்கள்’ மற்றும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மொத்தமாக பௌத்தம் தழுவினர். சிறப்பான இந்த நிகழ்வில் மதிப்பிற்குரிய தலித் முரசு ஆசிரியர் திரு. புனித பாண்டியன் அவர்கள் ‘நான் இந்துவாக சாகமாட்டேன்’ என்ற தலைப்பில் டாக்டர். அம்பேட்கரின் பல்வேறு கட்டுரைகளை மொழியாக்கம் செய்து புத்தகமாக வெளியிட்டார். மேலும் பாபாசாகேபின் புத்தக தொகுதிகளை தமிழில் படிக்க ஏதுவாக மக்கள் மருத்துவர்கள் அமைப்பின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட ‘BLUE BUDDHA’ என்ற ஆன்டிராய்டு செயலியும் வெளியிடப்பட்டது. இந்திய அளவில் அறிவுச்சமூகத்தில் பெரும் தாக்கத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது.
மேற்கண்ட நிகழ்வு தொடர்பாக ‘விடுதலை’ இதழ் குழப்பமான பொருள் படும்படி தலையங்கம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.
இக்கட்டுரையானது அந்த தலையங்கத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலும் சரியான புரிதலை ஏற்படுத்துவதன் மூலம் குழப்பங்களை நீக்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது.
1. இந்தியாவில் தற்போது பட்டியல் சாதியினர் என்று அறியப்படும் மக்கள் உண்மையில் யார் என்ற கேள்வி மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் அவர்கள் யார் என்றே தெரியாமல் அவர்களுடைய பிரச்சினைக்கான தீர்வினை யாரும் முன் மொழிய இயலாது. மனிதன் குழுக்களாக வாழ ஆரம்பித்த பின்பு தீடீரென ஒரு பிரிவினரை மட்டும் பிரித்து ஊருக்கு வெளியே அனுப்பி இருக்க இயலுமா? அப்படி பிரித்து இருந்தாலும் எந்த எந்த காரணிகளை வைத்து அவ்வாறு அவர்களை பிரித்து இருக்க இயலும் ?
இதனையே வேறு வகையில் கேட்டால் ஒரு குறிப்பிட்ட பிரிவினை மட்டும் இந்த இந்த வேலைகளை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்து இருக்க இயலுமா? அப்படியே பிரித்து இருந்தாலும் எந்த காரணிகளை (factor) வைத்து அவர்களை மட்டும் தனியாக பிரித்து இருக்க இயலும் ? கூடுதலாக இது இந்தியா முழுவதும் எப்படி ஒரே மாதிரி ஒவ்வொரு கிராமத்திலும் முறையாக நடந்து இருக்க இயலும் ?? இந்த கேள்விகள் தீண்டாமை ஒழிப்பு குறித்து சிந்திக்கும் ஒவ்வொருவரும் அவசியம் சிந்திக்க வேண்டியதாகும்.
2. பாபாசாகேப் டாக்டர். அம்பேட்கர் இதனை ஆராய்ந்து கண்டறிவதில் மிகவும் தீர்க்கமாகவும் உறுதியாகவும் இருந்தார். இதனை ஒட்டி அவர் பல ஆராய்ச்சி கட்டுரைகளை பல்வேறு தலைப்புகளில் வெளியிட்டும் உள்ளார்.
அவைகளின் படி இந்தியாவின் பட்டியிலின மக்கள் என்று இப்போது வகைப்படுத்தப் பட்டு இருப்பவர்கள் அனைவரும் கி. பி இரண்டாம் நூற்றாண்டு வரை புத்தரின் தம்ம வழியை பின்பற்றி வந்தவர்கள் என்பதை அவர் நிறுபித்துள்ளார்.
3. புத்தர் கி. மு ஐந்தாம் நூற்றாண்டில் அரச வம்சத்தில் பிறந்தவராவார். அவர் அப்போது இந்திய சமூகத்தில் நிலைபெற்று இருந்த சதுர்வர்ண கேட்பாடு முறைகளையும், ஆண் பெண் சமத்துவமற்ற நிலையையும் தீவிரமாக எதிர்த்தார். மேலும் யாகம், சடங்குகள், விலங்குகளை கடவுளுக்கு யாக குண்டத்தில் பலியிடுதல், பார்பன உயர்வு நிலை ஆகிய வற்றை எதிர்த்தார். அதனை நாடு முழுவதும் பிரச்சாரமும் செய்தார். சமூகத்தை நல்வழிப்படுத்தும் பஞ்சசீல கொள்கையையும் பகுத்தறிவை மேம்படுத்தும் எட்டு வழி பாதையுயும் (8 fold path) பிரச்சாரம் செய்தார். எதனையும் ஆய்வறிந்து மட்டுமே ஏற்க வேண்டும் என்பதே அவரின் உறுதியான கருத்தாக இருந்தது. மேலும் ஆன்மா மறு பிறப்பு ஆகியவற்றையும் மறுத்தார். கர்ம வினைகளை மறுத்ததன் மூலம் ஒருவர் ஒரு சாதியில் பிறப்பது அவரின் பூர்வ கர்மத்தின் அடிப்படையில்தான் என்ற மோசடியான கருத்தையும் மறுத்தார்.
4. புத்தரின் காலத்திற்கு பிறகு அவரின் கருத்துக்கள் உலகம் முழுவதும் பல்வேறு மன்னர்களால் எடுத்து செல்லப்பட்டது. மேலும் பௌத்தமே நாட்டின் சிவில் சட்டமாக வும் இருந்தது. சதுர்வர்ணம் , பார்பணிய உயர்வு நிலை ஆகியவை ஏறக்குறைய அழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. மௌரிய பேரரசு தான் இந்தியாவின் பொற்காலம் என்று டாக்டர். அம்பேட்கர் இதனை விளக்கும் போது குறிப்பிடுகிறார்.
5. இந்நிலையில் கி்பி இரண்டாம் நூற்றாண்டில் மௌரிய பேரரசின் வழியில் வந்த அரசரை புஷ்யமித்திர சுங்கன் எனும் அவரின் சொந்த பார்ப்பன படைத்தளபதி கொன்று ஆட்சியை வஞ்சகமாக கைப்பற்றி கொள்கிறான்.
6. சுங்கனின் ஆட்சி காலத்தி்ல் மீண்டும் சதுர்வர்ணம் சிவில் சட்டமாக ஆக்கப்படுகிறது. புத்த விகார்கள் இந்து கோவில்களாக ஆக்கப்படுகின்றன. புத்தர் சிலைகள் வேடமிடப் பட்டு விஷ்ணுவாக சித்தரிக்கப்படுகிறது. பார்பன உயர்வு நிலையும் சதுர்வர்ண கேட்பாடுகளும் மீண்டும் நாட்டில் நிலைநிறுத்தப்படுகிறது. புத்த பிக்குகள் கொல்லப் படுகின்றனர். புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள சிலை புத்தர் சிலையாகும். ஐயப்பன் கோவில் உண்மையில் ஒரு புத்தவிகார் என்று கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் ஒப்புகொண்டுள்ளது.
7. இந்த சூழலில் சுங்கனின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று சதுர்வர்ணத்தை ஏற்றுகொண்டு ஊருக்குள் வாழ்வது இல்லையெணில் சமத்துவத்தை ஏற்றுகொண்டு புத்தரின் வழியில் ஒதுக்கப்பட்டு வாழ்வது.
8. இவ்வாறு சதுர்வர்ணத்தை ஏற்க இயலாது என்று இந்தியா முழுவதும் உரக்கக் கூறியவர்கள் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டனர். தாக்கப்பட்டனர். தொழில்கள் புரிய அனுமதி மறுக்கப்பட்டனர். முடிவில் தீண்டதகாதவர்களாக ஆக்கப்பட்டனர்.
சதுர்வர்ணத்தை ஏற்று கொண்டோர் மீண்டும் பார்பனிய உயர்வை ஏற்றுகொண்டு ஊருக்குள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களே தற்போது பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அறியப்படுவோர் ஆவர்
9. நான்கு வர்ணத்தில் கூடுதலான ஒன்றாக ஐந்தாவதாக இவர்கள் பஞ்சமர்கள் என்று சேர்க்கப்பட்டனர். பஞ்மர்கள் என்பவர்கள் பஞ்ச சீலத்தை பின்பற்றி வாழ்ந்தவர்கள் என்று பொருள்படுகிறது. அவர்ணா என்றும் வட இந்தியாவில் அழைக்கப்படுகின்றனர். அதாவது வர்ணங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பொருள்படுகிறது.
10. காலப்போக்கில் தங்களது சொந்த அடையாளங்கள் முழுவதும் அழிந்த நிலையில் பஞ்சமர்கள் இந்துக்களை சார்ந்து வாழ வேண்டியதாகிவிட்டது. இவ்வாறான கலாச்சார சார்பு நிலை வெளிப்புறமாக (objective) அவர்கள் மீது தீண்டாமையை கொண்டு வந்தது.
கோவிலுக்கு வரமாட்டோம் என்பது காலப்போக்கில் கோவிலுக்குள் விடமாட்டோம் என்பதாக ஆகியது.
11. பிரிட்ஷ் ஆட்சிகாலத்தில் பட்டியல் சமூகத்தினரை பல கேள்விகளை கொண்டு அடையாளம் கண்டு வகைப்படுத்தினார்கள். அவற்றில் முக்கியமானது பார்பன உயர்வு நிலையை ஏற்று கொள்ளாதவர்கள் என்பதும் பசு மாடு புனிதமானது என்பதை மறுத்தவர்கள் யார் யார் என்பதாகும்.
12. மேற்கண்டவாறே பட்டியல் சாதியினர் என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. ஆக இவர்கள் அனைவரும் பூர்வீக பௌத்தர்கள் தான் என்பது தெளிவான உண்மையாகும். மேலும் இவர்கள் பௌத்த மதத்தை சார்ந்தோர் என்பதால் தான் இழி தொழிலுக்கு தள்ளப்பட்டார்களே ஒழிய மாறாக இழி தொழில் செய்ததால் தான் தீண்டதகாதவர் களாக ஆக்கப்பட்டனர் என்பது வடிகட்டிய பொய் ஆகும். ஏனெனில் எப்படி ஒரு பிரிவு மட்டும் நாடு முழுவதும் இழி தொழிலை விரும்பி ஏற்றுகொண்டிருக்கும் என்பது சாதாரணமான கேள்வியாகும்??
13. ஆக இந்த வரலாற்றை நிறுபித்த டாக்டர். அம்பேட்கர் தீண்டாமை ஒழிய மீண்டும் புத்த மதம் திரும்புவதே ஒரே வழி என்று பிரகடணப்படுத்தினார்.
கலாச்சாரத்திற்கு இந்துக்களை சார்ந்திருக்கும் வரை தீண்டாமை தொடரும் என்பதால் பூர்வீக கலாச்சாரத்தை கட்டமைக்க கோரினார். அவ்வழியில் பௌத்தம் திரும்பினார்.
14. பௌத்த மதமாற்றம் என்பது ஒவ்வோரு பட்டியலின மனிதனையும் இந்து சதுர்வர்ண கோட்பாடுகளிலிருந்து மனதளவில் விடுவித்து உற்சாகத்தை வழங்குகிறது. மேலும் இந்துக்கள் வேறு ஒரு மதத்தை சார்ந்தவர்களை உயர்வாகவே தாழ்வாகவே கருத இயலாது எனும் அடிப்படையில் தீண்டாமையிலிருந்து விடுவிக்கிறது. மேலும் இந்து மதத்தில் எந்த ஆதரவும் இல்லாமல் நிற்கும் அவர்களுக்கு உலகம் முழுவதுமுள்ள பௌத்தர்களின் ஆதரவையும் பெற்று தருகிறது.
15. தேசிய குற்றபதிவுகளின் படி ஒவ்வொரு வருடமும் இரண்டு லட்சம் வன்முறைகள் தலித்துகளுக்கு எதிராக நடைபெறுகிறது. இவர்கள் அனைவரும் இந்துக்களாக இருப்பதால் சர்வதேச சமூகம் அதனை கண்டு கொள்வதில்லை. ஏனெனில் இது இந்து மதத்தின் உட்சாதி பிரச்சினை. குடும்ப தகராறு. ஆனால் இந்திய பட்டியல் சமூகத்தினர் மொத்தமாக புத்த மதம் திரும்பினால் ஒவ்வொரு வருடமும் இரண்டு லட்சம் வன்முறை களை இந்துக்கள்-பௌத்த மதத்தினருக்கு எதிராக நடத்த இயலுமா எனில் சத்தியமாக முடியாது என்பதே பதில். அவ்வாறு ஒரு வேளை நடந்தால் அதற்கு அரசு சர்வதேச சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டும்.
அதற்கு ஒரு முடிவு கிட்டும்.
இவ்வாறு ஏன் பௌத்தம் திரும்ப வேண்டும் என்பதை பாபாசாகேப் ஆயிரக்கணக்கான பக்கங்களில் விவரித்துள்ளார். அவை அனைத்தையும் இந்த கட்டுரையில் வெளிப்படுத்திவிட வேண்டும் என்பது ஆசையாக இருந்தாலும் அது நடைமுறை சாத்தியமில்லாமல் இருக்கிறது. சாதி இந்துக்கள் மதம் என்ற பலத்தில் நிற்கின்றனர். பட்டியிலின மக்கள் அதனை எதிர்கொள்ள அவர்களுக்கு தேவை அதே பலம் தான். அது வேறு ஒரு மதம் தான். எதிர் தரப்பு மதம் எனும் ஆயுதத்துடன் நிற்கும் போது பட்டியலின மக்களை மட்டும் மதங்களை துறக்க சொல்வது அவர்களை நிராயுதபாணியாக மாற்றுவதே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.
17. இவ்வாறு தீண்டாமை என்ற பிரச்சினையில் எந்த ஆய்வும் செய்யாமல் விடுதலை இதழ் கட்டுரையை தீட்டியுள்ளது வருந்ததக்கது. மதம் வேறு மார்க்கம் வேறு என்று பாடம் எடுக்கிறது. அதற்கான வித்தியாசத்தை தயவு செய்து அவர்களே விளக்க வேண்டும் என்று நாங்கள் பணிவுடன் கோருகிறோம்.
18. நாத்திகம் என்பது எவ்வகையிலும் பட்டியிலின மக்களுக்கு பயன்படாது. பல மதங்களை சார்ந்த நாத்திகர்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் அந்த அந்த மதத்தை சார்ந்தவர்களவே அறியப்படுகின்றனர். பட்டியிலின மனிதன் ஒருவன் தன்னை நாத்திகராக அடையாளப்படுத்தி்கொள்வது அவர் தன்னை ஒரு இந்து என்றே சமூகத்தில் அடையாளப்படுத்தி கொள்வதாகும். அவர் தீண்டாமையிலிருந்து அதன் மூலம் ஒரு போதும் தப்ப இயலாது. மேலும் கடவுள் இல்லை என்பதை பரப்புவது முக்கியமா அல்லது தீண்டாமையிலிருந்து விடுபடுவது முக்கியமா எனில் தீண்டாமையிலிருந்து விடுபடுவதே ஒவ்வொரு பூர்வீக பௌத்தருக்கும் முக்கியமான ஒன்றாகும் . அதற்கு இந்து கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு சொந்த கலாச்சாரத்தை கட்டமைப்பது முக்கியமாகும். தலித் மக்கள் முழுவதும் இந்து மதத்திலிருந்து வெளியேறும் போது தங்களுக்கு கீழ் யாரும் இல்லாமையால் பிற்படுத்தப்பட்டவர்கள் தங்களுக்கு மேல் யாரும் இருக்க இயலாது என்று பார்பன உயர்வை மறுப்பார்கள். இது ஒன்றே சாதியை அழித்தொழிக்க ஒரே வழி. மாறாக இந்துவாக இருந்து கொண்டே அதனை சீர்படுத்த முயல்வது தலித் மக்களுக்கு தேவையற்ற ஒன்றாகும்.
19. உலகில் நாத்திகர்கள் அதிகமாக உள்ளது ஸ்கேண்டிநேவியன் நாடுகளில் ஆகும். இங்கு குறிப்பிட தக்க விடயம் அங்கெல்லாம் யாரும் நாத்திகத்தை பரப்பவில்லை என்பதும் அதற்கென ஏதும் அமைப்புகள் அங்கு இயங்கவில்லை என்பதும் ஆகும்.
அங்கு கடவுள் மறுப்பு தானாக மலர்ந்துள்ளது. ஏனெனில் மனித வளர்ச்சி குறியீட்டில் (human developmental index) அந்த நாடுகள் முதல் பத்து இடத்தில் உள்ளன. மனிதனின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி பிரச்சினையற்ற சமூகம் உருவாகும் போது கடவுள் அங்கு தானாக தேவையில்லாமல் போய்விட்டார்
ஆனால் இதற்கு மாறாக இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் கடவுள் மறுப்பை திணிப்பது பிரச்சாரம் செய்வது தோல்வியில் தான் முடியும். சில தலைமுறைகளாக பெரியாரிய அமைப்பில் உள்ள எங்கள் அமைப்பை சார்ந்த மருத்துவர் ஒருவர் புதிய தலைமுறைகள் வரும் போதும் குடும்பத்தில் திருமணம் நடந்து புதிய நபர்கள் வீட்டுக்கு வரும் போதும் இந்து கடவுள்கள் தானாக தங்கள் வீட்டுக்குள் வந்து விட்டதாகவும் அதனை தங்களால் தடுக்க இயலவில்லை என்றும் எங்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இதற்கு காரணம் நாத்திகம் என்பது வெறும் எதிர்ப்பு நிலை ஆகும். அதற்கென ஏதும் பண்பாடு இல்லை. மாறாக இந்து பண்பாடுகளை எதிர்ப்பதில் அது முடிவடைந்து விடுகிறது. ஆனால் மனிதனின் இயல்பான தேவை குழுவாக உணர்வதாகும். அவர்களுக்கு பண்பாடு , கலாச்சார நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் இயல்பாக தேவைப்படுகிறது. அண்ணல் அம்பேட்கர் மனிதனுக்கு மதம் தேவை என்று ஒரே வரியில் இதனை பிரகடணபடுத்துகிறார். மேலும் அந்த மதம் மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் வாழ்க்கையை சுலபமாக்க வேண்டும் என்றும் கூறுகிறார் . இவ்வாறான காரணத்தினால் பாபாசாகேப் புத்த மதம் தழுவினார். அனைத்து பட்டியின மக்களையும் புத்த மதம் தழுவ கோரினார்.
20. விடுதலையின் தலையங்கத்தில் தேவையிலாமல் இலங்கை பிரச்சினையை குறிப்பிட்டு உள்ளார்கள். அது ஒரு மதப்பிரச்சினை அல்ல மாறாக இனப்பிரச்சனை. இல்லை எனில் சிங்களர்களை பௌத்தர்களாக காணும் திராவிடர் கழகம் தமிழர்களை இந்துவாக காணுகிறதா என்பதையும் விளக்க வேண்டும். அப்படியெனில் இந்துக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கிறதா என்பதையும் விளக்கவேண்டும். !
கூடுதலாக இலங்கையில் தமிழ் பேசும் பட்டியிலன மக்களை தமிழ் பேசும் சாதி இந்துக்கள் கொடுமைபடுத்துவதை எப்படி தடுப்பது என்பதையும் விளக்க வேண்டும். பெரும்பாலான ஆயுத போராட்டங்கள் இவ்வாறே முடிந்து போனதே உலகின் வரலாறு. அதற்கு விடுதலைப்புலிகளும் விதிவிலக்கல்ல. எனவே இதில் மதத்தை இட்டுகட்டி இழுப்பது வஞ்சகமானது. இந்து முண்ணனி தமிழர் பகுதிகளை பௌத்தமயமாக்கு வதை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. ஆனால் இங்கு இந்தியாவில் புத்தமதம் இந்துமதத்தில் அடங்கியது என்று கதை விடுகிறது. இது குறித்தும் தி. க தங்கள் நிலைப் பாட்டை விளக்க வேண்டும். உலகில் இதுவரை 5000 போர்கள் ஏறக்குறைய நடந்துள்ளன. இவற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கைப் பிரச்சினையை மட்டும் மதத்தோடு தீவிரமாக தொடர்பு படுத்துவது இந்துத்துவ சதியாகும்.
மேலும் ஒன்னறை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு திராவிடமே காரணம் எனும் தமிழ் தேசியவாதிகளின் அவதூறு குற்றச்சாட்டுக்கும் விடுதலை ஏடு பதில் அளித்தால் மகிழ்ச்சி.
இலங்கை இனப்பிரச்சினையை விட ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் வன்முறை களை சந்திக்கும் தலித்துகளின் பிரச்சினை மிக மிக மிக மிகப்பெரியது என்பதையும் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இலங்கை இனப்பிரச்சினை சில லட்சம் மக்களுக்கானது. எனினும் அதனை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது கண்டிக்க தக்கது. ஆனால் இந்திய பூர்வீக பௌத்தர்களின் பிரச்சினை 30 கோடி மக்களுக்கானது என்பதை மறந்துவிட கூடாது. இவ்வாறு 30 கோடி தலித்மக்கள் தினம் தோறும் சந்திக்கும் தீண்டாமையை பாபாசாகேபின் வழியில் எதிர்கொள்ளும் போது அதனை இந்த பிரச்சினைக்கு சிறிதும் தொடர்பற்ற இலங்கை பிரச்சினையோடு இணைந்து பேசுவது, குறுக்கே நிற்பது சிறிதும் நியாயமற்றது. பட்டியலின மக்கள் இந்தியா முழுவதும் வாழ்கின்றனர் பல்வேறு மொழி பேசுகின்றனர். இவர்கள் அனைவருக்கு மான தீர்வாக பௌத்தம் முன் வைக்கப்படும் போது ஒரு பிராந்திய பிரச்சினையை மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் தோள்களின் மீதே ஏற்றி அதற்கும் பதில் சொல் என்று கேட்பது சிறிதும் நியாயமற்றது. ஆகவே பகுத்தறிவாளர்கள் இதன் பின் உள்ள நியாயத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்
2009 க்கு பிறகு 2013 ல் நடந்த சர்வதேச புத்த மாநாட்டிற்கு சென்ற ஆசிரியர். திரு. வீரமணி அவர்கள் பௌத்ததை பகுத்தறிவாளர்கள் ஏற்பதாக உரையாற்றி வந்துள்ளார். ஆனால் இப்போது விடுதலை ஏடு பௌத்த மத மாற்றத்திற்கு எதிராக கட்டுரை எழுதுவது முரணாக உள்ளது. அண்ணல் அம்பேட்கரை புகழ்ந்துவிட்டு அவரின் வழியை ஏற்க மாட்டோம் என்பது பல்வேறு அமைப்புகளின் நிலைப்பாடு ஆகும். அதே வழியில் திராவிடர் கழகமும் செயல்பட கூடாது.
இந்துத்துவ அடிப்படைவாதம் நம்மை சுழ்ந்து மொத்தமாக வீழ்த்தக் காத்திருக்கும் சூழலில் முற்போக்கு அமைப்புகளுக்குள் விரிசலை ஏற்படுத்தும் வேலையை நாம் அனைவரும் செய்யாமல் இருப்பதே நம் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதாகும். அதுவே மக்கள் மீது அக்கறையுள்ள தேசபக்தி்யாளர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதும் ஆகும்.
– டாக்டர் சட்வா சாக்யா
https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31752-2016-11-07-01-59-41
Leave a Reply
You must be logged in to post a comment.