கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? – 5 அரிய தகவல்கள்

எழுதியவர்,ரக்ஷனா ரா
- 25 பிப்ரவரி 2025
வானியல் துறை, பல சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளின் வரலாற்றைக் கொண்டது.
அதில் கிடைத்த பல்வேறு கண்டுபிடிப்புகள் தற்போதும் பயன்பாட்டில் இருக்கின்றன. அத்தகைய வானியல் துறையின் அதிமுக்கியமான கண்டுபிடிப்பாக இன்றளவும் கருதப்படுவது, தொலைநோக்கி.
கலிலியோ தனது அசாதாரண கண்டுபிடிப்புகளால் அறிவியல் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இருந்தாலும், அவரது வாழ்க்கைப் பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.
- ஆப்பிள் தலையில் விழுந்ததால் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்பது பாதி மட்டுமே உண்மை – எப்படி?
- ஏசுவின் முன்தோல், நெப்போலியனின் அந்தரங்க உறுப்பு, ஐன்ஸ்டீனின் மூளை – இவற்றைக் காண மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?
- கலிலியோ: பூமி சூரியனை சுற்றுவதாக சொன்ன விஞ்ஞானி திருச்சபையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?
நிலவின் கறைகள்
கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில், இந்தப் பிரபஞ்சத்தில் இருவிதமான பொருட்கள் இருப்பதாகக் தெரிவித்தார். ‘அதில் ஒன்று வான்பொருட்கள் (Celestial). மற்றொன்று நிலம்சார் பொருட்கள் (Terrestrial). வான்பொருட்கள் என்பது வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றைக் குறிக்கும். நிலம்சார் பொருட்கள் என்பது பூமியைக் குறிக்கும்.’
‘பூமி, ஒரு தனிமமாக மாறும் தன்மை கொண்ட ஒரு பொருள் என்றும், நிலவு, நட்சத்திரங்கள் போன்ற வானியல் பொருட்கள் நிலையான கோளங்கள் போல இருக்கும்’ என்றும் அவர் கருதினார்.
அவற்றில், வெறும் கண்களால் பார்த்தால்கூட நிலவின் மேற்பரப்பு ஒரே மாதிரியாக வெள்ளை நிறத்தில் இல்லாமல், ஆங்காங்கே கருமையான திட்டுகளைக் காண முடியும். பூமியின் தூய்மையற்ற தன்மையால்தான் இதுபோன்ற இருண்ட கருமைத் திட்டுகள் நிலவில் உருவாகின்றன என்று அரிஸ்டாட்டில் கூறினார்.
ஆனால், தனது தொலைநோக்கி மூலமாக நிலவை ஆராய்ந்த கலிலியோ, நிலவில் வேறு ஏதோ அமைப்புகள் இருந்ததாக உணர்ந்தார். நிலவில் தென்பட்ட இந்த நிழல்களைப் போன்ற அமைப்பு சூரிய ஒளி படும் கோணத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்ததை அவர் கவனித்தார். இது பூமியில் படும் சூரிய ஒளிக்கேற்ப நிழல் உண்டாவதை ஒத்திருந்தது.
ஆகையால் இந்த நிழல்கள் நிலவில் உள்ள குன்றுகளால்தான் உருவாகின்றன என்று கலிலியோ கண்டுபிடித்தார். நிலவில் உள்ள குன்றுகள் பற்றி முதன்முதலாக பலூடார்ச் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தாலும், நிலவில் சமமான நிலப்பரப்பு இல்லை என்றும் அதில் குன்றுகள் இருக்கின்றன என்றும் ஆதாரத்துடன் நிரூபித்தவர் கலிலியோ.
- பாரசூட் முதல் கலங்கரை விளக்கம் வரை – சொந்த கண்டுபிடிப்புகளாலேயே கொடூரமாக உயிரிழந்த 5 விஞ்ஞானிகள்13 பிப்ரவரி 2025
- ‘மத உணர்வை விட பொறுமையின்மை, கபடம், ஒழுங்கின்மையைப் பார்த்தேன்’, கும்பமேளா குறித்த மகாத்மா காந்தியின் பதிவுகள் சொல்வது என்ன?12 பிப்ரவரி 2025
வியாழனை வலம் வரும் நான்கு பெரிய துணைக்கோள்கள்

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் அறியப்படுகிறது. வியாழன் கோளைச் சுற்றி 95 நிலவுகள் இருப்பதாக சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) தெரிவிக்கின்றது.
இதில் மிகப்பெரியதாக அறியப்படும் நான்கு நிலவுகளை கண்டுபிடித்தவர் கலிலியோ. அதனால் அயோ, யூரோபா, கேனிமீட், காலிஸ்டோ ஆகிய நான்கு நிலவுகளும் ‘கலிலியன் மூன்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த நான்கு நிலவுகளும் தொலைநோக்கியில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வானியல் பொருட்கள் ஆகும்.
கடந்த 1610 ஆம் ஆண்டு வியாழனை சுற்றி மூன்று ஒளிரும் புள்ளிகளை கலிலியோ பார்த்துள்ளார். அவற்றை நட்சத்திரங்கள் என்று எண்ணிய அவர், அவற்றைப் பல நாட்கள் கண்காணித்துள்ளார்.
அப்போது, வானத்தில் இருக்கும் மற்ற நட்சத்திரங்கள் அனைத்தும் வேறு திசையில் நகர்வதையும் இந்த மூன்று புள்ளிகள் மட்டும் எதிர்த் திசையில் நகர்வதையும் அவர் கவனித்தார்.
அதேபோல இந்த மூன்று நட்சத்திரங்கள் மட்டும் வியாழனுக்கு நெருக்கமாகவே இருப்பதையும் கலிலியோ உணர்ந்தார். திடீரென்று இந்தக் கூட்டணியில் நான்காவதாக ஒரு நட்சத்திரத்தை அவர் கண்டார். அந்த மூன்று நட்சத்திரங்கள் வெளிப்படுத்திய அதே குணாதிசயத்தையே இந்தப் புது நட்சத்திரமும் வெளிப்படுத்தியது. ஆனால் அடிப்படையில் ஒரு நட்சத்திரத்துக்கு இருக்கும் இயல்பான குணாதிசயங்கள், இந்த நான்கு வானியல் பொருட்களிடமும் காணப்படவில்லை.
பிறகு அதே ஆண்டு ஜனவரி 15ஆம் தேதியன்று, வியாழனின் நெருக்கத்தில் இருந்த நான்கு ஒளிரும் புள்ளிகளும் நட்சத்திரங்கள் இல்லை என்றும் அவை வியாழனின் நிலவுகள் என்றும் அவர் கண்டுபிடித்தார்.
வானியல் பொருட்கள் பெரும்பாலானவை பூமியைச் சுற்றி வரவில்லை என்ற கோப்பர்நிக்கஸின் கோட்பாட்டுக்கு கலிலியோவின் இந்தக் கண்டுபிடிப்பு வலுவான ஆதாரமாக இருந்தது.
- இந்திய வரலாற்றையே மாற்றிய ‘நாகா சாதுக்கள்’ – கையில் வாளுடன் நிர்வாண கோலத்தில் வலம் வரும் இவர்கள் யார்?8 பிப்ரவரி 2025
- திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025
கலிலியோவிடம் மன்னிப்பு கேட்ட திருச்சபை

பூமியில்தான் இயேசு பிறந்தார் என்பதால், இந்தப் பிரபஞ்சத்தில் பூமிதான் மையமாக இருப்பதாகவும் அதைச் சுற்றியே சூரியன் உள்பட அனைத்துக் கோள்களும் சுற்றுவதாகவும் கத்தோலிக்க திருச்சபை கருதியது.
அந்தக் கோட்பாட்டைச் சந்தேகிக்கும் வகையில் பூமி உள்பட அனைத்துக் கோள்களுமே சூரியனைச் சுற்றித்தான் வலம் வருகின்றன என்று அறிவியல்ரீதியாக ஒரு வலுவான கோட்பாட்டை முன்வைத்தார் நிக்கோலஸ் கோப்பர்நிகஸ். அதைத் தனது தொலைநோக்கி மூலமாக வான்பொருட்களை ஆராய்ந்து உண்மையென நிறுவியவர் கலிலியோ கலிலி.
கோப்பர்நிகஸின் கோட்பாடுதான் வானியல் செயல்பாடுகளை விளக்குவதற்கான ஒரே வழி எனக் கூறுவது கடவுளின் சக்தியைக் குறைத்து மதிப்பிடுவதாகும் என்று விசாரணையின்போது வாதிடப்பட்டதாக கிரிகோரி டபுள்யு.டாவ்ஸ் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
வழக்கு விசாரணையில், கலிலியோவின் வாதங்கள் நேர்மையற்றவை என்று அப்போது முடிவானது. ஆனால் அவரது இந்தக் கூற்று சரி என்று சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகு கத்தோலிக்க திருச்சபை ஒப்புக்கொண்டது.
கடந்த 1992ஆம் ஆண்டு இரண்டாம் போப் ஜான் பால், பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பைத் தள்ளுபடி செய்தார், நீதி தவறியதற்காக திருச்சபை கலிலியோவிடம் மன்னிப்புக் கேட்டது.
- ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025
- ஹிட்லரின் யூத படுகொலை மையமாக திகழ்ந்த ‘அவுஷ்விட்ஸ்’ வதை முகாம் எவ்வாறு இயங்கியது?28 ஜனவரி 2025
பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்

திருச்சபைக்கு எதிரான தனது கருத்துகளால், கலிலியோவின் கண்டுபிடிப்புகள் மறைக்கப்பட்டன. அதனால் 1642ஆம் ஆண்டு அவரின் மறைவுக்கு பிறகு அவரது உடலை மிகவும் ரகசியமாக நோவிட்டியேட் தேவாலயத்தில் அடக்கம் செய்தனர்.
கலிலியோவின் அபிமானியாக இருந்த வின்சென்ஜோ விவியானி, அவருக்கு ஒரு நினைவு மண்டபம் நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். ஆனால் திருச்சபையால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு நினைவிடம் ஒன்றை நிறுவ அவர்கள் தயக்கம் காட்டினார்கள்.
அதற்குப் பின்னர் இந்த வழக்கை விசாரித்த கிராண்ட் டியூக், கலிலியோவுக்கு நினைவிடம் ஒன்றை நிறுவினார். 1737ஆம் ஆண்டு கலிலியோவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்டு சான்டா க்ரோஸ் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது அவரது உடலில் இருந்து அவரது விரல்கள் மற்றும் முதுகுத் தண்டு மட்டும் தனியே எடுக்கப்பட்டன.
பல்வேறு முறை கைமாறிய அவரது முதுகுத் தண்டின் ஒரு பகுதி அவர் ஆசிரியராகப் பணியாற்றிய படுவா பல்கலைக்கழகத்தில் 1823ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆண்டன் பிரான்செஸ்கோ கோரியால் எடுக்கப்பட்ட கலிலியோவின் விரலை பிப்லியோடெகா லாரன்சியானாவின் நூலகர் ஏஞ்சலோ எம். பாண்டினி வாங்கினார். பிறகு, இந்த விரல் அந்த நூலகத்தில் நீண்ட காலம் காட்சிப்படுத்தப்பட்டது.
பின்னர் 1841ஆம் ஆண்டு ஸ்டோரியா நேச்சுரல்லில் திறக்கப்பட்டிருந்த ட்ரிப்யூனா டி கலிலியோவுக்கு (அவருடைய பங்களிப்பைப் பாராட்டி கட்டப்பட்ட அருங்காட்சியகம்) அவரது விரல் கொண்டு வரப்பட்டது. பின்னர் 1927ஆம் ஆண்டில் இத்தாலியில் உள்ள மியுசியோ கலிலியோ என்ற வரலாறு மற்றும் அறிவியலுக்கான அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டது.
- ‘உலகிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில்தான் இரும்பு பயன்பாடு தொடங்கியது’ – இரும்புக் காலம் ஏன் முக்கியம்?25 ஜனவரி 2025
- நாகரிக வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்குள்ளேயே வேறுபாடுகள் இருந்தனவா?27 ஜனவரி 2025
தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் யார்?

தொலைநோக்கியை முதலாவதாகக் கண்டுபிடித்தவர் கலிலியோ இல்லை என்று சொன்னால் நம்ப முடியுமா?
ஆம். தொலைநோக்கியின் கண்டுபிடிப்பைப் பலர் சொந்தம் கொண்டாடினாலும் அதை முதன்முதலில் வடிவமைத்தது ஹான்ஸ் லிப்பெர்ஷே. இவர் ஒரு ஜெர்மன்-டச் வம்சாவளியைச் சேர்ந்த கண்ணாடி வடிவமைப்பாளர். அவர் வடிவமைத்த அந்தக் கருவிக்கு கிஜ்கர் என்று பெயரிட்டார்.
கிஜ்கருக்கான முப்பது ஆண்டு உரிமத்தைத் தனக்கு வழங்க வேண்டும் என்று டச் அரசிடம் அவர் கோரிக்கை வைத்தார். ஆனால் இதே காலகட்டத்தில் வாழ்ந்த மற்ற விஞ்ஞானிகளும் இதேபோன்ற ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளதால் ஹான்ஸ்க்கு உரிமம் வழங்க டச் அரசு மறுத்துவிட்டது.
தொலைவில் உள்ள பொருட்களை அருகில் தெரியும்படி காட்டக்கூடிய கருவியைப் பற்றி கலிலியோவுக்கு தெரிய வந்தது. அவரும் அதேபோன்ற ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். இதுவே முதல் தொலைநோக்கியாகக் கருதப்படுகிறது.
மற்றவர்கள் உருவாக்கிய தொலைநோக்கியின் கண்ணாடியைவிட கலிலியோவின் கண்ணாடி மிகவும் தெளிவாக இருந்தது. ஏனென்றால் அவர் கண்ணாடி இழைக்கும் வழிமுறையை மிகவும் சிறப்பாகப் பின்பற்றினார்.
இவர் கண்டுபிடித்த 8 powered தொலைநோக்கியில் தொலைவில் இருக்கும் பொருட்கள் 20 மடங்கு நெருக்கமாகக் காணப்படும். அதுதான் அவரது வானியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
Leave a Reply
You must be logged in to post a comment.