இந்து மதத்தில் பிறவிச் சுழற்சிக் கொள்கை
கி. முத்துராமலிங்கம்
இந்தியத் தத்துவ மரபுகள்
1) சாருவாகம்
- இறை மறுப்புக் கொள்கைகளைக் கொண்டவை
- கடவுள், பிறவிச் சுழற்சி ஆகியவற்றை மறுக்கிறது.
- உலக இன்பத்தை முதல் நிலைப்படுத்துகிறது.
- நிலம், நீர், தீ, வளி ஆகிய மூலக்கூறுகளின் கலப்பால் உருவானதே இவ்வண்டம் என்பது இதன் அடிப்படை.
- பொருள்களின் இயல்பு, அவற்றுள் கலந்துள்ள மூலப்பொருள்களின் அளவிற்கேற்பவே அமையும்.
- பருப்பொருள் சார்ந்தது. அதாவது, பொருள் முதல் வாதத்தை முன்னெடுக்கிறது.
- பொது நிலையில் நாத்திகம் என அறியப்படுகிறது.
2) ஆசீவகம்
- ஒருவருக்கு நடக்கும் நன்மை தீமை அனைத்தும் முன்னமே நிர்ணயிக்கப்பட்டது. ஒருவரால் விதியை மாற்ற முடியாது.
- ஒருவர் தான் ஏற்கனவே செய்த கருமத்தின் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். அதை மாற்ற முடியாது.
- வீடுபேறு அடையும் வரை உயிர்கள் பிறப்பெடுக்கும். வீடுபேறடைந்த உயிர்கள், மறுபடியும் பிறப்பெடுக்கும்.
- மறுபிறவிக் கொள்கையின் தொடக்கம்.
3) சமணம்:
- ஒருவர் தான் ஏற்கனவே செய்த கருமத்தின் பலனை, அவர் துறவறத்தின் மூலம் நீக்க முடியும். மேலும், துறவறத்தின் மூலம் புதிய கருமபலன் உருவாகுவதையும் தடுக்க முடியும்.
- வீடுபேறு அடையும் வரை உயிர்கள் பிறப்பெடுக்கும். வீடுபேறடைந்த உயிர்கள், மறுபடியும் பிறப்பெடுப்பதில்லை.
- மனித ஆன்மாவைத் தவிர வேறு கடவுள் இல்லை
- கடுந்தவம், பட்டினி போன்றவற்றின் மூலம் நிர்வாண நிலையை அடைவது(இறப்பிற்குப் பின் ஆன்மாவானது பெறும் எல்லையற்ற ஆனந்தமே நிர்வாண நிலையாகும்).
- கடவுள் மறுப்புக் கொள்கை
4) பெளத்தம்
- கடவுளின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
- அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது.
5) இந்து மதம்:
- மேல் உள்ள கேள்விகளுக்கு விடை சொல்ல வேண்டிய நெருக்கடி இந்து மதப் பெரியவர்களுக்கு இருந்தது.
- இப்போது இந்து என்னும் பெயர் பற்றிய கேள்வி இங்கே வந்து விடுகிறது.
- இந்து மதம் என்னும் பெயர் 1794க்குப் பிறகு தான் இங்கே நிலை நிற்கிறது. அதற்கு முன்பு சைவம், வைணவம் என்று இரண்டு தான்!
- சைவ, வைணவத்தின் எழுச்சி – பக்தி இயக்கத்தில் இருந்து தொடங்குகிறது.
- காரைக்கால் அம்மையார் தொட்டு, நாயன்மார், ஆழ்வார்கள் வழி பக்தி இயக்கம் உருவாகிறது.
- சமணம், பெளத்தம் ஆகியன கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாக நிற்க, சைவமும் வைணவமும் கடவுள் கோட்பாட்டை முன்னிறுத்துகின்றன.
படைப்புக் கோட்பாட்டின் முன் நிற்கும் கேள்விகள்:
- படைப்புக் கோட்பாட்டில் வரும் போது
- நல்லவர்கள் வீழ்வதும் கெட்டவர்கள் வாழ்வதும் ஏன் நடக்கிறது?
- ஒருவர் பிறக்கும் போதே குறைகளுடன் பிறப்பதற்குக் காரணம் என்ன?
என்பன போன்ற நாத்திக சமயங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய நெருக்கடி இயல்பாகவே வந்து விடுகின்றது. நாத்திக சமயங்கள் மிக எளிதாக, இவற்றிற்கு எல்லாம் காரணம் – பிறவிச் சுழற்சி தான் – முற்பிறவியில் செய்ததற்கு ஏற்ப இந்தப் பிறவி அமைந்திருக்கிறது எனச் சொல்லி விட்டார்கள்.
ஆனால், இங்கிருந்த ஆன்மீகப் பெரியவர்களுக்கு அந்த விடையில் உடன்பாடு இல்லை. ஏன் என்றால், அந்த விடையே குழப்பமானதாகவும் கேள்விக்குரியதாகவும் இருந்தது.
பிறவிச் சுழற்சிக் கொள்கையில் வரும் கேள்விகள்:
- மற்ற உயிரினங்களும் மனிதர்களும் சமமா?
- டார்வினின் கொள்கையுடன் பிறவிச் சுழற்சிக் கொள்கை இங்கே உடன்படுகிறது.
- மனித உயிர் மரத்தின் உடலிலும் மரத்தின் உயிர் மனித உடலிலும் இணைவது எப்படி?
- இந்த இணைப்பு எப்போது தோன்றும்?
- இது அறிவியலுக்குப் பொருந்துமா?
- முந்தைய பிறவியின் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப அடுத்த பிறவி வருகிறது என்றால், முதல் பிறவி எவ்வாறு வந்தது? அதற்கு முந்தைய பிறவி இல்லையே?
- உயிர் முதலில் தோன்றியது எப்படி?
- உடல் முதலில் தோன்றியது எப்படி?
- உயிர் முதலில் உடலுடன் இணைந்தது எப்படி?
விடை சொல்லும் இந்து மதம்:
இந்தக் கேள்விகளை எழுப்பிய இந்து மதமாகிய சைவமும் வைணவமும் – படைப்புக் கொள்கையை முன்னிறுத்தின.
பிறக்கும் போதே வருவது – பிறவிப் பாவம் – ஜென்ம வினை – சஞ்சித கர்மா
பிறப்பில் நாம் செய்வது – தன் பாவம் – கர்ம வினை – ஆகாமி கர்மா
பிரார்த்த கர்மா, ஆகாமி கர்மா, சஞ்சித கர்மா
நம் முன்னால் இருக்கும் கேள்வி என்ன?
இந்து மதம் பிறவிச் சுழற்சிக் கொள்கையைச் சொல்கிறதா இல்லையா என்பது தான்! அல்லவா! அதற்கு உறுதியான விடை – இல்லை என்பது தான்!
ஆமாம்! இந்து மதம் பிறவிச் சுழற்சிக் கொள்கையைச் சொல்லவே இல்லை! இப்படிச் சொன்னால் உடனே, “நீங்கள் சொல்வது சரி தான்! பிறவிச் சுழற்சிக் கொள்கை என்பதும் படைப்புக் கொள்கை என்பதும் ஒன்றுக்கொன்று முரணானது. எனவே இந்து மதம், அல்லது சைவம், வைணவம் ஆகிய இரண்டும் – பிறவிச் சுழற்சிக் கொள்கையைச் சொல்லவே முடியாது” என்று உடனே உங்களால் ஒத்துக் கொள்ள முடியுமா? அப்படி ஒத்துக் கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.
சமய இலக்கியங்கள் பலவற்றில் பிறவிச் சுழற்சிக் கொள்கை இருப்பது போலத் தோற்றத்தைப் பன்னெடுங்காலமாகப் பதிய வைத்திருக்கிறார்கள். அந்தத் தோற்றம் ஒரு கானல் நீர் என்பதைத் தெளிவாகச் சொல்வது தான் இந்த உரையின் நோக்கம். அதே நேரம், இந்த உரையில் எதையும் வற்புறுத்தப் போவதில்லை.
நமக்கு ஆசான் திருவள்ளுவர்.
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்கிறார் திருவள்ளுவர். அந்தக் கண்ணாடி வழியே தான் எதையும் நாம் அணுக வேண்டும்.
சில பாடல்களும் புரிதல்களும்:
கேள்வி #1:
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.”
என்று ஒவ்வொரு பிறவியைப் பற்றியும் தெளிவாகச் சொல்கிறாரே!
விடை:
இந்தப் பாடலையே கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போமே! புல்லாகி – புல் ஓர் உயிரினம், பூடு – ஓர் உயிரினம், புழு, மரம், பறவை, பாம்பு – இவை எல்லாம் உயிரினங்கள் தாம்! சிக்கலில்லை. நீ சொல்வது போல, ஒவ்வொரு ஜென்மத்தையும் இவை சொல்கின்றன என்று நினைக்கத் தோன்றுகிறது. அதன் பிறகு, “கல்” என்று சொல்கிறாரே மாணிக்கவாசகர் – கல்லுக்கு உயிர் உண்டா? உயிரே இல்லாத ஒன்றை எப்படி மாணிக்கவாசகர் இங்கே பாடினார் – கொஞ்சம் சிந்திப்போமே!
இன்னும் கொஞ்சம் அகச் சான்றைப் பாருங்கள்!
“தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லல் அறுத்(து) ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்”
இறைவன் பிறவித்தளையை நீக்கி விட்டான் என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். இதைப் பல இடங்களில்,
“கறந்த பால் கன்னலோடு நெய் கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்”
என்று பிறப்பை அறுப்பது இறைவன் தான் என்று தொடர்ந்து பதிவு செய்கிறார். அதாவது, இறையடியாராக ஆகி விட்டால், பிறவித் தளை தொடராது என்பது அவர் தம் கருத்து. இது பிறவிச் சுழற்சிக்கொள்கைக்கு எதிரானது அல்லவா?
துறவிகள் பிறப்பினை நீக்கும் வல்லமை பெற்றவர்கள்.
கேள்வி: இது மாணிக்கவாசகர் கருத்து என்பது சரி! அதற்காக, இந்து மதமே இப்படிச் சொன்னதாக ஒத்துக் கொள்ள முடியுமா?
விடை: முடியும். திருமந்திரத்தில் திருமூலர்,
“பிறப்பறியார் பலபிச்சை செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வமும் பெறுவர்
மறுப்பில ராகிய மாதவஞ் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றோரே.”
சாத்திர மோதுஞ் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவிப் பார்வை பசுமரத் தாணிபோ
லார்த்த பிறவி யகல விட்டோடுமே.”
என்று உள்ளே நோக்கினால், பிறவி அகன்று போகும் என்று பாடுகிறார். வள்ளலார் இராமலிங்க அடிகள்,
எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி – 16
என்று தம்முடைய அகவலில் பாடுகிறார்.
கேள்வி:
ஒரு வாதத்திற்குப் பிறவிச் சுழற்சிக் கொள்கையை இந்த வரிகள் சொல்லவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் இந்த வரிகளுக்கு நீங்கள் சொல்லும் பொருள் என்ன?
விடை:
நல்ல கேள்வி! இதற்கு நீங்கள் கொஞ்சம் திருவள்ளுவரிடம் பேச வேண்டும். அப்போது தான் தமிழர் ஆன்மீகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
பிறப்பு அறுக்கல் – பிறப்பை அறுப்பது
என்று திருவள்ளுவர் இரண்டு இடங்களில் சொல்கிறார் திருவள்ளுவர்.
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகை (345)
பிறவிச் சுழற்சிக் கொள்கையின்படி எல்லோருமே பிறவி நீக்கத்துக்காக முயற்சி எடுத்துப் பிறவி நீக்கம் பெற வேண்டும். பிறவி நீக்கம் அடைந்தமையை இறப்பிற்குப் பின்னரே அறிய முடியும். உலகில் பிறந்து பிறவிக்குட்பட்டு வாழும்பொழுதே “நான் பிறவி நீக்கத்தை அடைந்து விட்டேன்” என யாரும் சொல்ல முடியாது. பிறவி நீக்கத்திற்கான முயற்சியில் ஈடுபட்டவர் என்ற அளவே, அவர்களுக்கோ மற்றவர்களுக்கோ அறியக்கூடியதாகும்.
பிறப்பெடுத்து அதில் வாழ்ந்து கொண்டிருக்கும்பொழுதே பிறப்பறுக்கல் உற்றார் என்பது பொருந்தாக் கருத்தல்லவா?
அடுத்தது, துறவிகள் மட்டுமே ‘பிறப்பறுக்கல் உற்றார்’ என்றால், இல்லறத்தார் பிறவிச் சுழலில் சிக்கித் தவிர்ப்பார்களே என்றாகி விடுகிறது அல்லவா?
தலைமுறைக் கொள்கை:
பிறவியைத் துண்டிக்கும் நிலையை அடைந்தவர்க்கு – மகன், பேரன் என்ற பிறவித் தொடர்பு ஏற்படாதவாறு துறவு நிலையை ஏற்றமையால் பிறவி, அதாவது தலைமுறை துண்டிக்கப்பட்டு விட்டவர்க்கு மற்ற தொடர்ப்பாடு எவன்கொல்? அவர்களுக்குத் தம்முடைய உடம்பு கூட மிகைப் பொருளாகவே தோற்றமளிக்கும்.
அடுத்த திருக்குறள்
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும் (343)
உலகப் பற்றுதல் நீங்கும்பொழுதே பிறப்பு துண்டிக்கப்படும். இதற்குப் பிறவிச் சுழற்சியின்படி பொருள் கொண்டால், பற்று நீங்கும்பொழுதே பிறவிச் சுழற்சி அறுபடும்.
பற்றற்ற உள்ளம் ஏற்படல் – பற்றற்ற உள்ளம் தோன்றியதால் பிறப்பறுத்துத் துறவறத்தை மேற்கொள்ளல் – துறவறத்தை மேற்கொண்டமையால் நிலையாமையை உள்ளபடி உணர்தல்.
கேள்வி: நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், திருவள்ளுவரே பல இடங்களில் எழுபிறப்பு, எழுமை, என்னும் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறாரே!
விடை: சரி தான், அந்தத் திருக்குறள்களில் எல்லாம், மேலே சொன்ன தலைமுறைக் கொள்கையைப் பொருத்திப் பாருங்கள். தலைமுறைக் கொள்கை சரியாகப் பொருந்துவதை நீங்கள் பார்க்கலாம்.
ஒரு திருக்குறளை உங்களுக்குப் புரிவதற்காகச் சொல்கிறேன்.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின் (62)
பழி இல்லாத நல்ல பண்புடைய மக்களைப் பெற்றால் பல பிறப்பிலும் தீயவை தீண்டமாட்டா.
பிறவிச் சுழற்சிக் கொள்கைப்படி கொண்டால், நல்ல பிள்ளைகளைப் பெற்றால் பல்லாயிரம் பிறவிகளிலும் பழிபிறங்கா. பிறவிச் சுழற்சிக் கொள்கைப்படி தந்தையின் செயலுக்கும் மகன் செயலுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. அவரவர் பழவினையே அவரவரை நடத்துவதாகும். ஆகவே, பண்புடைய மக்கள் தகப்பன் வினையை மாற்ற முடியும் என்ற கருத்துப் பிறவிச் சுழற்சிக் கொள்கைக்கு முரண்பட்டதாகும். ஆகவே, திருவள்ளுவர் இக்குறட்பாவையும் பிறவிச் சுழற்சிக் கொள்கையின் அடிப்படையில் கூறியிருக்க முடியாது. ஆகவே, தலைமுறைக் கொள்கை அடிப்படையில் நோக்குவோம்.
தலைமுறைக் கொள்கை:
பழி பிறங்காப் பண்புடை மக்கட்பெறின் எழுபிறப்பும். அதாவது, பல தலைமுறைகளிலும் தீயவை தீண்டா.
கேள்வி: பிறகேன் பிறவிச் சுழற்சிக் கொள்கை நிலைபெற்று நிற்கிறது!
விடை:
இது முழுக்க முழுக்க அரசியல். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக மனு நூல் கொள்கை மெல்ல மெல்ல நிலை பெற்று வந்திருக்கிறது. ‘நான் ஏன் உயர்ந்த சாதியில் பிறந்திருக்கிறேன் தெரியுமா? நீ ஏன் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்திருக்கிறாய் தெரியுமா?’ ஏனென்றால், ‘நான் போன பிறவியிலேயே கூடிய வரை புண்ணியங்கள் சேர்த்து விட்டேன். நீ போன பிறவியில் பாவம் செய்தாய்! இந்தப் பிறவியில் அனுபவிக்கிறாய்’ என்று பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் சாதி ஏற்றத்தாழ்வுக் கருத்துக்குப் பிறவிச் சுழற்சிக் கொள்கை சூழ்ச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது. வர்ணாசிரமம், சனாதன தர்மம், மனுதர்மம் என்று இந்தச் சாதி ஏற்றத்தாழ்வுக்கொள்கைக்குப் பல பெயர்கள் இருக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.