தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலை – ஒரு எதிர்வினை

(1) இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரணம், அந்தக் கட்சியின் எதிர்காலத்தை நிச்சயமற்றதாக்கி இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தவர் மாவை சேனாதிராஜா. அதற்கு முன்னர் 10 ஆண்டுகள் அவர் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்திருந்தார்.

இரா. சம்பந்தன் உயிருடன் இருந்த கால கட்டத்திலேயே தமிழரசுக் கட்சிக்குள் குழப்பங்கள் மேலோங்கத் தொடங்கி இருந்தன. சம்பந்தனின் மரணத்துக்குப் பின்னர் அக்குழப்பங்கள் உச்சக்கட்டத்தை அடைந்து, தமிழரசு கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகும் நிலை ஏற்பட்டது.

இந்தச் சூழலின் விளைவாக, மாவை சேனாதிராஜா கட்சியின் தலைவராக இருந்து வழிநடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நியாயத்தின்படி செயற்படுவதா அல்லது அநீதிக்குத் துணை போவதா என்ற சிக்கலான சூழலில், அவர் காணப்பட்டார்.

பதில்: “அந்தக் கட்சியின் எதிர்காலத்தை நிச்சயமற்றதாக்கி இருக்கிறது” என்பது என்னவிதமான ஆரூடம்? கிளி சோதிடமா? இதஅக இன் அகவை 75. கட்சி கட்டுக் கோப்புடன் இருக்கிறது. அதற்குள் இருந்து கொண்டு குடைச்சல் கொடுப்பவர்கள் விலத்தப்படுவார்கள். விலத்தப்பட்டுள்ளார்கள். இரா சம்பந்தன் 2014 க்குப் பின்னர் எந்தப் பதவியிலும் இருக்கவில்லை. கட்சி யாப்பில் இல்லாத அரசியல் குழுவுக்கு தலைவராக மட்டும் இருந்தார். இந்தப் பதவி சேனாராசாவுக்கும் வழங்கப்பட்டது. கட்டுரையாளர் (முகிலன்) எதை நியாயம் என்கிறார்? எதனை அநீதி என்கிறார்? ஒருவர் 10 ஆண்டுகள் தலைவராக இருந்தது போதாதா? கட்சியின் யாப்பு தலைவர் பதவி குறைந்தது ஓர் ஆண்டு கூடியது இரண்டு ஆண்டு என்று சொல்கிறது!

(2) ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு அவர் ஆதரவளிக்க முனைந்தது, கட்சிக்குள் அவருக்கு எதிரான அணியை கோபப்படுத்தியது. அதன்விளைவாக பொதுத்தேர்தலில் அவர் ஓரம் கட்டப்பட்டார்.

பதில்: இப்படி எழுத கட்டுரையாளருக்கு வெட்கம் இல்லையா? சனாதிபதித் தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்திக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என மத்திய குழு முடிவு செய்தது. கட்சீயின் முடிவை மாவை சேனாதிராசா வவுனியாவில் வைத்து அறிவித்தார். பின்னர் யாழ்ப்பாணம் திரும்பும் வழியில் கிளிநொச்சியில் இறங்கி தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து நடந்த கூட்ட மேடையில் ஏறி அரியநேத்திரனுக்கு ஆதரவாகப் பேசினார். இது என்னவிதமான முரண்பாடு? கட்சியின்  கட்டுப்பாட்டை தலைவரே மீறினார். அப்படி மீறியது சரியா? அழகா? வேறு எந்தக் கட்சியின் தலைவர் இப்படி கோமாளித்தனமாக நடந்து கொள்வார்? தேர்தலில் வாக்களித்த போது ஒரு வாக்கு சஜீத் பிரேமதாசா, இரண்டாவது வாக்கு தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன், மூன்றாவது வாக்கு இரணில் விக்கிரமசிங்க என வாக்களித்தார். இது அப்பட்டமான கோமாளித்தனம். இப்படி எல்லாம் நடந்தும் பொதுத் தேர்தல் அறிக்கை அவரது வீடு தேடிச் சென்று  கட்சித் தலைவர்கள் அவரிடம் கொடுத்தார்கள். அவர் ஓரம்கட்டப்படவில்லை. அவராகவே ஒதுங்கிக் கொண்டார்.

(3) கடைசியில் அவரிடம் இருந்து தலைமைப் பதவியும் பறித்தெடுக்கப்பட்டது. அவரது விருப்பத்துக்கு மாறாக பறித்தெடுக்கப்பட்ட தலைமைப் பதவி தொடர்பாக, ஏற்பட்ட அழுத்தங்கள், அதனைத் தொடர்ந்து கட்சியின் ஒரு பகுதியினர் அவர்மீது ஏற்படுத்திய நெருக்கீடுகளின் தாக்கத்தினால், அவரது மரணம் நிகழ்ந்திருப்பதாக பரவலான கருத்து நிலவுகிறது.

பதில்: பதவி பறித்தெடுக்கப்படவில்லை. சேனாதிராசாவே பொதுத் தேர்தலில் தனது மகன் கலையமுதன், சம்மந்தி சசிகலா, கே.வி.தவராசா, சரவணபவன் போன்றவர்களுக்கு நியமனம் வழங்கவில்லை என்ற கோபத்தில் தனது பதவியை இராசினாமா செய்திருந்தார். இவர் பரிந்துரை செய்த வேட்பாளர்கள் பின்னர் கட்சிக்கு எதிராக சுயேட்சைகளாகப் போட்டியிட்டார்கள். சசிகலா சனநாயக ததேகூ இன் சார்பில் போட்டியிட்டார். இதன் மூலம் இவர்களுக்கு கட்சி வேட்பாளர் மனு கொடுக்க மறுத்தது முற்றிலும் சரி என்பது எண்பிக்கப்பட்டது.

(4) தமிழரசுக் கட்சிக்காக நீண்டகாலம் உழைத்த, அகிம்சைப் போராட்டத்தில் பங்கெடுத்த, அதற்காக நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்த, ஆயுதப் போராட்ட காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய, போருக்குப் பின்னரான கால கட்டத்தில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இயங்கிய, தலைவர் என்ற வகையில் மாவை சேனாதிராஜா தமிழ் மக்களால் மதிக்கப்படுபவர்.

பதில்: ஒரு காலத்தில் அப்படியான ஒரு நிலை இருந்தது உண்மையே. பிற்காலத்தில் இல்லை. சேனாதிராசா தமிழ் மக்களால் மதிக்கப்படுவர் என்பது சரியானால் அவர் ஏன் 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 5 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்?

 (5) அவரது பிற்கால அரசியல், கட்சிக்குள் அவரது ஆளுமை கேள்விக்குள்ளாக்கப் பட்டமை போன்றவை, மாவை சேனாதி ராஜா தொடர்பான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தாலும், நீண்டகால நோக்கில் தமிழ்த் தேசிய அரசியலுக்கு, அவரது பங்காண்மையை யாரும் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது.

அவரது அரசியல் எதிரிகளும்கூட, இரங்கல் குறிப்பில் தமிழ் மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்த தலைவர் என்பதை விட்டுக் கொடுக்காமல் பதிவு செய்திருக்கின்றனர்.

ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈபிடிபியின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தபோது, தமிழரசுக் கட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முன்னின்று வழிநடத்தியவர் மாவை சேனாதிராஜா.

அதன்விளைவாக அவர் தீவகத்தில் வைத்து ஈபிடிபியினரால் தாக்கப்பட்டு தலையில் படுகாயம் அடைந்திருந்தார்.

அப்படி அவருடன் எதிரும் புதிருமாக அரசியல் செய்த டக்ளஸ் தேவானந்தாவும் கூட, மாவை சேனாதிராஜாவின் அரசியல் பாதையை, மதிப்புடன் நினைவு கூர்ந்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கவும் கூட அதனை நினைவுபடுத்தி இருக்கிறார்.

பதில்: மாவை சேனாதிராசாவை தீவகத்தில் வைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய டக்லஸ் தேவானந்தாவுக்கு செத்த வீட்டில் மரியாதை. ஆனால் இதஅக இன் மத்திய குழுவைச் சார்ந்த 18 பேர் மாவை சேனாதிராசாவின் குடும்பத்தால் அவமதிக்கப்பட்டார்கள். அவர்களை கொலையாளிகளாகச் சித்தரித்து பதாதை கட்டினார்கள். இது மாவை சேனாதிராசாவின் குடும்பத்துக்கு பெரிய அவமானம் ஆகும். கீழ்த்தரமான செயலாகும். ஆமா இல்லையா?

(6) இரா. சம்பந்தன், சுமந்திரன், நீலன் திருச்செல்வம், ஆனந்தசங்கரி போன்ற தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் சிங்களத் தலைமைகளுடன் எப்போதும் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தவர்கள். தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக் கொண்டாலும், இவர்களின் செயல்பாடுகள் “முற்றும் முழுதாக தமிழ்த் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டதாக இருந்திருக்கவில்லை என்பது வெளிப்படை.”

பதில்: இதுவொரு விசர்த்தனமான விமரிசனம். மற்றவர்களை விடுங்கள் சுமந்திரன் இரண்டு முறை நா.உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.  இரா சம்பந்தன் ஐந்து முறை திருகோணமலை நா.உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இரா. சம்பந்தனது செயல்பாடும் “முற்றும் முழுதாக தமிழ்த் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டதாக இருந்திருக்கவில்லை என்பது வெளிப்படை”  என்பது சரியான பார்வையா? அல்லது காமாலக் கண்ணால் பார்க்கப்படும் பார்வையா? சம்பந்தன் எந்தக் கட்டத்திலும் தமிழர்களது அடிப்படை கோட்பாடுகளான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைகளை விட்டுக் கொடுக்காதவர். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்மக்களுக்குரிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையின் கீழ அவர்களது மரபுவழி நிலப்பரப்பான வடக்கு – கிழக்கில் ஒரு இணைப்பாட்சி அரசை நிறுவ வேண்டும் அது தமிழ்மக்களது அடிப்படை உரிமை என நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஓயாது ஒழியாது குரல் கொடுத்தவர். இவற்றை மறுக்கும் கட்டுரையாளர் வி.புலிகளின் போலி முகவர் போல் தெரிகிறது. தெரியாமல்தான் கேட்கிறேன் நீலன் திருச்செல்வம் எதற்காகக் கொலை செய்யப்பட்டார்? அவரும் பேராசிரியர் ஜிஎல்  பீரிசும் வரைந்த பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற யாப்பு வரைவுதான் எழுதப்பட்ட யாப்புகளில் மிகச் சிறந்தது என்று அன்டன் பாலசிங்கம் அவர்களே பாராட்டியிருக்கிறார்.

(7) ஆனால், மாவை சேனாதிராஜாவின் அரசியல் அத்தகைய விமர்சனங்களுக்கு உட்பட்ட ஒன்று அல்ல. அவர் இலங்கையில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுடன் நெருக்கங்களைப் பேணி வந்த ஒருவர்
அல்ல. அப்படியிருந்தும், தமிழரசுக் கட்சிக்குள் மாவை சேனாதிராஜாவின் வகிபாகத்தை கேள்விக்குள்ளாக்கி, அவரைக் குறை மதிப்புக்கு உட்படுத்த வைத்தோர் இரா. சம்பந்தன் போன்றோர்தான்.

பதில்: மாவை சேனாதிராசா இணைப்பாட்சி வேண்டாம் தனித் தமிழீழம்தான் வேண்டும் என்று குரல் கொடுத்தவரா? மாவை சேனாதிராசாவும் இரா சம்பந்தனும் கட்சியின் கொள்கை, கோட்பாட்டில் முரண்பட்டவர்கள் இல்லை. அவலை நினைத்து உரலை இடிக்க வேண்டும்.

(8) தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது சுமந்திரனின் கை ஓங்கத் தொடங்கியிருக்கிறது. மாவை சேனாதிராஜாவை தள்ளி வைத்துவிட்டு கட்சியைக் கைப்பற்றி விடுவதற்கான முயற்சியில் அவர்கள் முன்னோக்கிச் சென்றிருக்கின்றனர். கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து மாவை சேனாதிராஜா நீக்கப்பட்டதுடன், சிவிகே சிவஞானம் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பதில்: மீண்டும் மீண்டும் ஒரு பொய்யைச் சொன்னால் அது மெய்யாகிவிடாது. மாவை சேனாதிராசா கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. அவர் தலைவர் பதவியில் இருந்து விலகுவாதாக அனுப்பிய விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரண்டுக்கும் வேற்றுமை இருக்கிறது.

(9) ஏற்கனவே, பதில் பொதுச் செயலாளராக சத்தியலிங்கம் பணியாற்றுகிறார். சுமந்திரன் பேச்சாளராகப் பணியாற்றுகிறார். இந்த மூவரும் ஒரே அணியில் இருப்பதால் மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டோர் ஓரம் கட்டப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பதில்: ஒரு அரசியல் கட்சி ஒரு ஊர்ச்சங்கம் போன்றதல்ல. இதஅக  வலுவான  சனநாயக உட்கட்டமைப்பு கொண்ட அரசியல் கட்சி.  மூலக் கிளைகள் தொடங்கி மத்தியகுழு வரை தேர்தல் மூலமே எல்லோரும் தெரிவு செய்யப்படுகிறார்கள்.  பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம், சுமந்திரன் இருவரது பதவியும் கட்சியின் யாப்புக்கு அமையவே நியமிக்கப்பட்டுள்ளார்கள். இப்போது பதில் தலைவராக சிவஞானமும் பதில்  பொதுச் செயலாளராக சுமந்திரனும் மத்தியகுழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நியமனங்கள் கட்டுரையாளரின் வயிற்றெரிச்சலை அதிகரிக்கச் செய்யப் போகிறது.

(10) அவரை நம்பி, அவருக்குப் பின்னால்  அரசியல் செய்து கொண்டிருந்தோர், இப்பொழுது நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அவர்களின் எதிர்கால அரசியல் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் தற்போதைய தமிழரசுக் கட்சிக்குள் ஆதிக்கம் பெற்றிருப்போர், கட்சியின் நலனைப் பற்றியோ, தமிழ்த் தேசிய நலனைப் பற்றியோ சிந்திக்கக்கூடியவர்கள் அல்ல. இது தமிழ் மக்களுக்குத் தெரிந்த உண்மை.

பதில்: இது யதார்த்தத்தின் அடிப்படையில் அல்லாது வயிறெரிச்சல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. தனது வயிறெரிச்சலை மக்கள் தலையில் சுமத்துகிறார். பாடுபட்டவனுக்கே நிலம் என்பது போல கட்சிக்கு யார், யார்  உளப்பூர்வமாக உழைக்கிறார்களோ அவர்கள் கட்டுப்பாட்டுக்குள்தான் கட்சி இருக்கும். இது இதஅக க்கு மட்டுமல்ல ஏனைய கட்சிகளுக்கும் பெரும்பாலும்  பொருந்தும்.

(11) அப்படியானால் எப்படி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு எட்டு ஆசனங்களை தமிழ் மக்கள் கொடுத்தனர் என்ற கேள்வி எழலாம். தேசிய மக்கள் சக்தியை எந்த நம்பிக்கையில் தமிழ் மக்கள் தெரிவு செய்தார்களோ, அர்ச்சுனா இராமநாதன் மீது அவர்கள் எப்படி நம்பிக்கை வைத்தார்களோ, அதுபோலத்தான், இதுவும்.

பதில்: தமிழ்மக்களது நம்பிக்கைக்கு உரிய கட்சியாக இதஅக தொடர்ந்து இருக்கிறது. தேசியக் கட்சிகளின் வாக்குகள் பிரிந்தது தோல்விக்குக் காரணம். ஆனால் மட்டக்களப்பில் இதஅக தனித்துப் போட்டியிட்டு 3 இருக்கைகளைப் பிடித்தது. மொத்த வாக்குகள் 96,975  ஆகும்.   தேசிய மக்கள் சக்தி, அர்ச்சுனா போன்றோருக்கு மக்கள் அளித்த ஆதரவு வானவில் போன்றது. அது தோன்றி மறையும். எதிர்துவரும் உள்ளாட்சித் தேர்தல் அதனை எண்பிக்கும்.

(12) தமிழரசுக் கட்சி பல அரசியல் தவறுகளை இழைத்திருக்கிறது. அந்தத் தவறுகளை திருத்திக்கொண்டு பாடங்களைக் கற்றுக் கொண்டு தமிழ் தேசிய அரசியலுக்கு தலைமை தாங்க வேண்டும் என்பதில்
யாருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது.

தமிழரசுக் கட்சியுடன் வன்மையாக மோதிக்கொண்டிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்கூட, அந்தக் கட்சி தமிழ்த் தேசிய அரசியலுக்கு அவசியமானது என்பதை வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழ் தேசிய அரசியலில் உள்ள எந்த ஒரு கட்சியும் தமிழரசுக் கட்சியை வெறுக்கவோ ஒதுக்கித் தள்ளவோ விரும்பவில்லை.

ஏனென்றால் தமிழரசுக் கட்சியின் 75 ஆண்டு பாரம்பரியம், அதன் போராட்ட வரலாறு என்பன அவ்வாறான ஒரு நிலையைப் பற்றி சிந்திக்ககூடிய நிலையைத் தோற்றுவிக்கவில்லை.

ஆனால் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய அரசியல் நலனையும் கவனத்தில் கொள்ளவில்லை, தமிழ் மக்களின் நலன்களையும் கவனத்தில் கொள்ளவில்லை.

வரலாற்றிலிருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டு அது முன்னோக்கி நகர்வதற்கும் முற்படவில்லை.

கட்சியைக் கைப்பற்றுவதற்குப் போட்டி போடுகின்றவர்கள்,இதன் ஊடாக அடைய நினைக்கின்ற தலைமைத்துவ இலக்கை இலகுவாக எட்டி விடலாம். ஆனால் அதனை தமிழ் மக்கள் அங்கீகரிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது.

ஏனென்றால் இன்று தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய அரசியலில் மிகமோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. குறிப்பாக மாவை சேனாதிராஜாவின் மரணத்தையடுத்து இடம்பெற்ற சம்பவங்
கள் அனைத்தும் அந்தக் கட்சிக்குள் எந்த அளவுக்கு வெறுப்புணர்வும் குரோதங்களும் மேலோங்கி இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

பதில்: ஆங்கிலத்தில் இப்படியான புகழ்ச்சியை இடதுகை பாராட்டுக்கள் (left-handed compliments)  என்பார்கள். இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டும் என்றால் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை போன்றது. இதஅக கடந்த பல ஆண்டுகளாக வீரியத்துடன் செயலாற்றவில்லை என்பது ஓரளவு உண்மைதான். அதற்கான காரணம் மாவை சேனாதிராசாவின் பலவீனமான தலைமை. அவரது பதவி ஆசை. இதஅக இன் தேசிய மநாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடக்க வேண்டும். கூடினால் இரண்டு ஆண்டுகள். ஆனால் மாவை சேனாதிராசா தனது பத்தாண்டு காலத் தலைமையில் ஒரேயொரு மாநாட்டைத்தான் கூட்டியிருக்கிறார். அவரது கடைசிக் காலத்தில் அவரது உடல் நலம் இடம் கொடுக்காத நிலையிலும் 2020 இலும் 2024 இலும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் போக ஆசைப்பட்டார். இவ்வளவிற்கும் அவர் மொத்தம் 25 ஆண்டுகள் 7 மாதங்கள் 8 நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். கடந்த நொவெம்பர் மாதத்தில் தனக்கு ஓராண்டு காலமாவது தேசியப் பட்டியல் மூலம் நா.உறுப்பினர் பதவியைத் தரும்படி  கெஞ்சினார்.  இதைக் கேட்டு நாங்கள் வெட்கித்துப் போனோம். இந்தப் பதவி ஆசைதான் அவரது உள்ள நலத்தையும் உடல் நலத்தையும் பாதித்தது. அவர் மறையும் போது அகவை 82. தனது தலைவர் பதவியை 2016 இல் இன்னொருவரிடம் பாரம் கொடுத்திருந்தால் அவர் இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகள் ஆவது வாழ்ந்திருப்பார். இந்தப் பிழையை இரா சம்பந்தனும் விட்டிருந்தார். உடல் நலம் கெட்டுப் போன பின்னரும் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தார். பதவி விலகுமாறு கட்சி கேட்டும் அவர் விலகவில்லை.

(13) இத்தகைய விரோதங்களும் குரோதங்களும் தமிழ் மக்களின் நலன்களை உறுதி செய்வதற்கு ஒருபோதும் உதவப் போவதில்லை.

சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளிடம் இருந்து தமிழ் தேசிய அரசியலை பாதுகாத்துக் கொள்வதற்கும், உரிமைகளையும் உரித்துக்களையும் தக்கவைத்துக் கொள்வதற்கும் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், உள்விரோதங்களும் குரோதங்களும் ஒட்டுமொத்த சமூகத்தையும் சீர்குலைத்து விடும்.

அத்தகைய ஒரு நிலைக்குள், தமிழ் மக்களை தமிழரசுக் கட்சி கொண்டு சென்று விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. மாவை சேனாதிராஜாவின் மரணத்துக்குப் பிறகு இடம்பெற்றுவரும் சம்பவங்கள்,
முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் எல்லாமே தமிழ்த் தேசிய அரசியலின் சீர்குலைவை வெளிப்படுத்துகின்றன.

இப்படிப்பட்ட நிலையில் சிங்கள பௌத்த தேசியவாதக் கட்சிகள், வடக்குக் கிழக்கை ஆக்கிரமிப்பது என்பது இலகுவானதாகி விடப்போகிறது.

பதில்: கடைசிக் காலத்தில் மாவை சேனாதிராசா கட்சிக்குப் பாரமாக – பலரும் பார்த்து பரிகசிக்கும் ஒருவராக இருந்தார். இதனால் கட்சியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. இனி வீடு சுத்தப்படுத்தப் படும்.  வீட்டுக்குள் அடைந்துவிட்ட குப்பைகள் படிப்படியாக அகற்றப்படும். கட்சி வினைத்திறனோடு இயங்கும். கவலற்க.

About VELUPPILLAI 3316 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply