இலண்டன் சைவக் கோயில்கள் அள்ளிக் கொடுத்த போது ரொறன்ரோ கோயில்கள் கிள்ளியும் கொடுக்கவில்லை!
திருமகள்
தென் தமிழீழத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு வெள்ளத்தினால் பல இலட்சம் தமிழ்மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அந்த மக்களுக்கு லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியம் அள்ளிக் கொடுத்த போது கனடாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் கிள்ளியாவது கொடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்ல?
அத்துடன், ஒரு வாய் சோற்றுக்கு அல்லல்பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. குடிசைகள் வெள்ளத்தில் அள்ளுப்பட்டுப் போயின. மக்கள் தங்களது ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடையை இழந்தனர். தொண்ணூறு விழுக்காடு வேளாண்மை தண்ணீருக்குள் மூழ்கியது.
இந்த மக்களுக்கு சிங்கள அரசு போதிய இடருதவியை வழங்க முன்வராத நிலையில் புலம்பெயர் தமிழர்களது உதவியை நாடப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனித்தம்பி யோகேஸ்வரன், பா. அரியேந்திரன், பொன். செல்வராசா ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்யுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்கள்.
இதற்கு செவிசாய்த்த புலம்பெயர் அமைப்புக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி செய்தன. கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கம் 33 லட்சம் ரூபாயைத் திரட்டி மூன்று மாவட்டங்களுக்கும் பிரித்துக் கொடுத்தது. மன்னார் மாவட்டத்துக்கு மேலதிகமாக ரூபாய் 116,500 கொடுத்து உதவியது.
இந்த 33 லட்சம் ரூபாயில் இங்கு மருத்துவர் வி. சாந்தகுமார் தலைவராகக் கொண்டு இயங்கும் மருத்துவர் சங்கம் வழங்கிய 9,000 டொலர்களும் அடங்கும்.
ஐயப்பன் ஆலயம் அர்ச்சனை மூலம் கிடைத்த 1,000 டொலர்களை கொடுத்து உதவியது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 8,000 டொலர்கள் கொடுத்து உதவியது.
இவற்றை விட வேறு அமைப்புக்கள், குறிப்பாக இங்குள்ள சைவக் கோயில்கள் எந்த நிதியுதவியையும் செய்யவில்லை.
இப்படியான பணியில் முன்னுக்கு நிற்கும் றிச்மென்ட பிள்ளையார் கோயில் அறங்காவலர் அவை இம்முறை கையை விரித்துவிட்டது.
கர்ணனொடு கொடை போயிற்று, உயர் கம்பநாடானுடன் கவிதை போயிற்று என்பது போல இந்தக் கோயில் அறங்காவலராக இருந்து மறைந்த நா. சிவலிங்கம் அவர்களோடு கொடை போயிற்று.
சுனாமி பேரழிவின் போது ஒரு லட்சம் டொலர்களை இந்தக் கோயில் அன்பளிப்புச் செய்தது.
கனடா கந்தசாமி கோயில் 3,000 டொலர் நிதி திரட்டியது. அதனை சிறெப் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளது. சிறெப் திரட்டிய அல்லது கொடுத்த நிதிபற்றிய விபரம் தெரியவில்லை.
இதே வேளை லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியம் (The Federation of Saiva (Hindu) Temples U.K.) மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மூலம் இடர் உதவி நிதி அளித்துள்ளது.
இவ்வகையில் 25.01.2011 ஆம் திகதி அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவில் வந்தாறுமூலை மேற்கு பகுதி மக்கள் பெரும் வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டமையால் 398 குடும்பங்களுக்கு 4,80,000 ரூபாய் பெறுமதியான சமையல் பாத்திர உதவிகள் வழங்கப்பட்டன.
கோறளைப்பற்று பிரதேசத்தின் சுங்கான்கேணி கிராம அதிகாரி பிரிவில் 500 குடும்பங்களுக்கு 4,25, 000.00 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. இதில் அரிசி சீனி மா சோயா இறைச்சி உருளைக்கிழங்கு பருப்பு தேயிலை அங்கர் போன்றவை அடங்கும்.
இந்து இளைஞர் பேரவைக்கு மட்டக்களப்பு நா.உ. யோகேஸ்வரன் தலைவராக இருக்கிறார். அண்மையில் கூட இந்து இளைஞர் பேரவை கட்டைபறிச்சானில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள சம்பூர் கடற்கரைச்சேனை நவரெத்தினபுரம் கூனித்தீவு சூடைக்குடா போன்ற ஊர் மக்களுக்கு 26.02.2011 ஆம் திகதி அன்று லண்டன் சைவத்திருக்கோயில் ஒன்றியத்தின் நிதி உதவி மூலம் உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.
மடடக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 480 இந்து சமய குருமாருக்கு தலைக்கு உரூபாய் 2,500 (மொத்தம் ரூபாய் 12,00,000) கொடுக்கப்பட்டது.
லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியத்தில் மொத்தம் 10 கோயில்கள் மட்டும் இருக்கின்றன. இருந்தும் இந்த ஒன்றியம் மொத்தம் 57, 864 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் சேர்த்து அதனை மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிக்குடி காப்பகக் கணக்கு எண் 190 – 165 – 0200914 க்கு வரவு வைத்தது.
இலங்கை ரூபாயில் இதன் பெறுமதி 103,34,000. இதில் ஆகக் கூடியதாக லூஷியம் சிவன் கோயில் 17,000 பவுண்ட்சும், ஈலிங் கங்கா துர்க்கை அம்மன் கோயில் 15,249 பவுண்ட்சும் அன்பளிப்புச் செய்தன.
இவற்றோடு கனடா கோயில்களை ஒப்பீடு செய்தால் இதில் இருபதில் ஒரு பங்கு கூட சேர்க்கவில்லை. இராமகிருஷ்ண மடத்துக்கு அனுப்புகிறோம். நேரடியாக அனுப்புகிறோம். அப்படி இப்படி என்று சொல்லித் தட்டிக் கழித்துப் போட்டன.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய அருட்பெரும் சோதி தனிப் பெரும் கருணை வள்ளலார் வழிவந்த கனடா சைவ மக்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லது படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா, நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே என்ற திருமூலர் திருமந்திரத்தையாவது எண்ணிப் பார்க்க வேண்டாமா?
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம்விலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (பாத்திரம் பெற்ற காதை:92:96)
Leave a Reply
You must be logged in to post a comment.