ரூ.21 லட்சம் லாபம்; உற்சாகமூட்டும் பேராசிரியரின் இயற்கை விவசாயம்!

09 Feb 2025

பண்ணையில் சம்பத்குமார்..

பண்ணையில் சம்பத்குமார்

மகசூல்

‘ரசாயன உரங்கள் போட்டால்தான் பயிர்கள் நன்றாக விளையும். இயற்கை விவசாயத்தில் அப்படி வளர்வதில்லை’ என்று குற்றச்சாட்டுகளுக்கு, அவ்வப்போது இயற்கை விவசாயத்தில் நல்ல மசூலோடு வருமானமும் எடுத்து நிரூபித்து வருகிறார்கள் விவசாயிகள். அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத்குமார் என்கிற இயற்கை விவசாயி, 10 ஏக்கரில் 21 லட்சம் லாபம் எடுத்து வருவது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

10 ஏக்கர் நிலத்தில் தென்னை, மரப்பயிர்கள் உள்ளன. இதில் விளைபவற்றை மதிப்புக்கூட்டல் என்ற மகத்தான தொழில்நுட்பத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்தி சாதனை விவசாயியாக உருவெடுத்துள்ளார். தென்னையில் தேங்காய், இளநீர் என்று வழக்கமான பாதையில் பயணிக்காமல் கொப்பரை, தென்னங்கன்று என்று மாற்றி யோசித்தார். இதேபோல வாழையில் டிரை ஃப்ரூட், சிப்ஸ் என்று தயாரிக்கிறார். இதோடு கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, காங்கேயம் காளைகளுக்கான பராமரிப்பு விடுதி, இடுபொருள் தயாரிப்பு என்று பலவிதத்திலும் பயணிக்கிறார். ‘முயற்சி உடையார்; இகழ்ச்சி அடையார்’ என்பதற்கு ஏற்ப தொடர்ந்து இயற்கை விவசாயத்தைச் சிறப்பாக முன்னெடுத்து வரும் சம்பத்குமாருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் கோவை மாவட்டத்தின் சிறந்த விவசாயிக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டு மாடுகளுடன்
நாட்டு மாடுகளுடன்

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு அடுத்த சிறுகளந்தைப் பகுதியில் ‘பிரகதி இயற்கை வேளாண் பண்ணை’ நடத்தி வரும் பேராசிரியர் சம்பத்குமாரை ஒரு பகல் பொழுதில் சந்திக்கச் சென்றோம். இன்முகத் தோடு வரவேற்றவர், மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார். “இது எங்க பூர்வீக நிலம். அப்பா விவசாயி. நான் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சிட்டு முழு நேரமா கல்லூரி பேராசிரியரா இருந்தேன். அப்பா, ரசாயன விவசாயம் செஞ்சு, ரொம்பவே நஷ்டமாயிட்டார். அதனால நானும் விவசாயத்துக்கு வந்து கஷ்டப்படக் கூடாதுனு என்னை விவசாயத்துக்குள்ள விடல. 2012-ம் வருஷம் அப்பா மறைவுக்குப் பிறகுதான் விவசாயியாக மாறினேன்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா பத்தியும், இயற்கை விவசாயம் பத்தியும் நிறைய படிச்சிருக்கேன். ஈரோடு மாவட்டத்துல நம்மாழ்வார் நடத்திய பயிற்சியில அவரை சந்திச்சேன். அதன் பிறகு வானகத்துக்குப் போயும் பயிற்சி எடுத்தேன். இந்தப் பயிற்சிகள்ல நம்மாழ்வார் அடிக்கடி சொன்னது, ‘விவசாயிகள் ஒரே பயிரை நம்பியிருக்கக் கூடாது. அதுவே சில நேரங்கள்ல அவர்களுடைய சரிவுக்குக் காரணமாயிடும்’ என்பார். அந்த வகையில எங்கப்பா தென்னை விவசாயம் மட்டுமே செஞ்சுகிட்டு இருந்தார்.

நான் விவசாயத்துக்கு வந்த பிறகு, தென்னையில் ஊடுபயிராகப் பப்பாளி, வாழை, மரப்பயிர்கள்னு நட்டேன். உடனடியா, இயற்கை விவசாயத்துக்கு மாறினதால உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப் பட்டுச்சு. தொடர்ந்து முயற்சி செஞ்சோம். நாலு வருஷத்துக்குப் பிறகுதான் லாபம் கிடைக்கத் தொடங்குனுச்சு. ‘இயற்கை விவசாயத்துக்கு மாறினபோது இது வேலைக்கு உதவாது’னு சுத்தியிருக்கறவங்க பெரிய அழுத்தம் கொடுத்தாங்க. நான் அந்த அழுத்தங்களுக்கு இடம் கொடுக்கல” என்று இயற்கை விவசாயத்துக்கு வந்ததைப் பற்றிச் சொன்னவர், பண்ணையில் இருக்கும் பயிர்களைப் பற்றிப் பேசினார்.

நாட்டுக் கோழிகள்
நாட்டுக் கோழிகள்

ஐந்தடுக்கு விவசாயம்…

“‘தோட்டத்துக்குள்ள போனா வானமும் பூமியும் தெரியக் கூடாது. அந்தளவுக்கு அடர் வனமா இருக்கணும்’னு நம்மாழ்வார் ஐயா சொல்வார். அந்த வகையில ஐந்தடுக்கு முறையில விவசாயம் செய்றோம். தென்னந் தோட்டம் முழுவதும் மூடாக்கு போட்டு விடுவோம். மரத்துக்கு மரம் 27 அடி இடை வெளியில் 10 ஏக்கருக்கு 589 மரங்களதான் நட முடியும். நாங்க சில இடங்களல நெருக்கமா நட்டிருக்கிறதால 630 தென்னை மரங்கள் இருக்குது.

முதல் அடுக்கில் தென்னை மகோகனி, இரண்டாவது அடுக்கில் மலைவேம்பு, குமிழ் தேக்கு உள்ளிட்ட மரப்பயிர்கள், மூன்றாம் அடுக்கில் வாழை, பப்பாளி, நான்காம் அடுக்கில் மல்பெரி, கரும்பு முருங்கை, உரக்கொன்றையும், ஐந்தாவது அடுக்கில் மஞ்சள், இஞ்சி, மிளகும் போட்டிருக்கோம். மஞ்சள், இஞ்சி வீட்டுக்குத் தேவையான அளவு மட்டும் வெச்சிருக்கோம். இதுதவிர மா, கொய்யா, பப்ளிமாஸ், தண்ணீர் ஆப்பிள், சிவப்பு செர்ரி, சீனி புளியங்காய், முள் சீத்தா, சீத்தா, ராம் சீத்தா உட்பட 25 பழ மரங்கள சாகுபடி செய்றோம். மிளகு கொடியும் ஊடுபயிரா இருக்குது.

தென்னங்கன்றுகள்
தென்னங்கன்றுகள்

10,000 தென்னங்கன்றுகள் விற்பனை…

எங்க பண்ணையில உழவு ஓட்டி 14 வருஷம் ஆகுது. நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர், மசனோபு ஃபுகோக்கா ஆகியோரோட சிந்தனை அடிப்படையில உழவில்லா வேளாண்மைதான் மேற்கொள்றோம். தென்னை மரங்கள்ல இருந்து நாங்க தேங்காய்கள பறிக்கிறதில்ல. தேங்காய் வெட்டுறதுக்கு, ஒரு காய்க்கு 1.50 ரூபாய் கூலி ஆகுது. 2 லட்சம் காய்கள வெட்டினா, கூலிக்கு மட்டுமே 3 லட்சம் ரூபாய் ஆயிடுது. அதனால, பழுத்து, தானா கீழே விழும் தேங்காய்களை மட்டும் எடுத்துச் சேமிக்கிறோம். இப்படி விழும் தேங்காய்ல ஒரு பகுதியை தென்னங்கன்னு உற்பத்தி செய்றோம். அத இங்க பண்ணையிலேயே வெச்சு விற்பனை செஞ்சிடுவோம். ஒரு தென்னங்கன்னு 100 ரூபாய்னு விற்பனை செய்றோம். கடந்த ஆண்டு மட்டுமே 10,000 கன்னுகள விற்பனை செஞ்சிருக்கிறோம்.

தேங்காயைக் கொப்பரையாக்கி எங்களோட மரச்செக்குல கொடுத்து எண்ணெய் தயாரிக்கிறோம். இயற்கை விவசாயச் சான்றிதழ் பெற்றிருக்கிற தாலயும், பழுத்து விழும் தேங்காய்கள பந்து கொப்பரையாக மாறும் வரை வைத்து விற்பனை செய்றதாலயும் சந்தை விலையைவிட 25 சதவிகிதமும், சாதாரண கொப்பரையைவிட 15 சத விகிதமும் கூடுதல் விலை கிடைக்குது. 1 லிட்டர் தேங்காய் எண்ணெயை 300 ரூபாய்க்கு விக்கிறோம். மாசம் 600 – 800 லிட்டர் எண்ணெய் விற்பனையாகுது. அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கும் எண்ணெயை ஏற்றுமதி செய்றோம். கொப்பரையாக மாதம் 500 கிலோ விற்பனை செய்றோம். தேங்காய் மட்டுமே விற்பனை செய்தால் நஷ்டம்தான் ஏற்படும். இப்படி மதிப்புக்கூட்டுறது மூலமாகத் தென்னை விவசாயம் லாபகரமா இருக்குது.

வாழையில் டிரை ஃப்ரூட்..

பொதுவா, கோடைக்காலத்துல தேங்காய் உற்பத்தி அதிகமாகவும், மற்ற நேரங்கள்ல சற்றுக் குறைவாகவும் இருக்கும். எங்க தோட்டத்துல வருஷம் முழுக்கச் சீரான உற்பத்தி இருந்து கிட்டே இருக்கும். முன்பெல்லாம் எங்க தென்னந்தோட்டத்துல ஆண்டுக்குச் சராசரியா, ஒரு மரத்துல இருந்து 120 தேங்காய்கள் கிடைக்கும். இப்போ சராசரியா ஒரு மரத்துல இருந்து 180 தேங்காய்கள் கிடைச்சுக் கிட்டு இருக்கு. தென்னை மரத்துக்கு வேர் பக்கத்துலயே தண்ணி விடக் கூடாது. ஓலை முடியுற இடத்துல, ஆங்காங்கே குழி வெட்டி தண்ணீர் விடணும். வாஸ்துபடி தோட்டத்துல எருக்கன் செடிகள் இருக்கக் கூடாதுனு சொல்றாங்க. ஆனா, எருக்கன் செடிகள் இருந்தா, மண்ணில் போரான் சத்தை ஊக்குவிக்கும். போரான் சத்து இல்லாவிட்டால், தேங்காய் சரியாக வராது. அதனால் எருக்கன் செடிகளை வளர்க்குறது அவசியம். இல்லையென்றால் போரான் சத்தை மண்ணில் உருவாக்க வேண்டியிருக்கும்” என்று தென்னை விவசாயத்தைப் பற்றிப் பேசியவர் வாழையைப்பற்றித் தொடர்ந்தார். “கற்பூரவள்ளி ரகத்துல 1,400 வாழை மரங்கள வெச்சிருக்கிறோம். வாழையையும் தென்னை மரத்தைப் போலதான். பக்கக் கன்றுகள வெட்டுவதோ, குச்சி வைத்துக் கட்டுறதெல்லாம் இல்ல. தார் மட்டும்தான் வெட்டுவோம். மறுதாம்பு வாழையாக விடுறதால வழக்கமான வாழையைவிட 5 கிலோ குறைவாத்தான் கிடைக்குது. வழக்க மான வாழைத்தார் 25 கிலோ என்றால் இது 20 கிலோதான் கிடைக்கும். ஆனா, நாங்க வருஷத்துக்கு 3 தார் வெட்டுறோம். எப்படின்னா பக்கக் கன்றுகள் எதையும் வெட்டாததால, அது மூலமா தார்கள் கூடுதலா கிடைக்குது.

தென்னை+வாழை
தென்னை+வாழை

1 கிலோ வாழை 40 ரூபாய்க்கு விற்பனை யானால் மட்டுமே சந்தைக்குக் கொடுப்போம். அதுக்குக் கீழே இருந்தா, சோலார் டிரையர் மூலம் வாழையை உலர வெச்சு டிரை ஃப்ரூட்டாகத் தயாரிச்சு கிலோ 500 ரூபாய்னு விக்கிறோம். ஒரு தார் வாழைப்பழத்தை உலர்த்தினா 4 கிலோ டிரை ஃப்ரூட் உற்பத்தி செய்யலாம். டிரை ஃப்ரூட்டில் சாக்லேட் சுவை கலந்தும் விக்கிறோம். இதுதவிர, சிப்ஸ் தயாரிக்கிறோம். இங்கு 365 நாள்களும் வாழை கிடைக்கும். கல்யாண தோரணத்துக்கு வாழை, மூங்கில், இளநீர்னு செட்டாக 2,500 ரூபாய்னு கொடுக்கிறோம்.

மண்புழு உரம்
மண்புழு உரம்

மண்புழு உரம்…

பப்பாளியில் 200, முருங்கையில் 250 மரங்கள் உள்ளன. பப்பாளி உள்ளூர் சந்தைக்குப் போகுது. அதிகம் இருந்தால் மண்புழு உரம், அமுதக்கரைசல் தயாரிக்கப் பயன்படுத்திக்கிறோம். முருங்கை இலை களைக் காய வெச்சு பொடியாக்கி விற்பனை செய்றோம். 1,500 உரக்கொன்றை, 100 மலைவேம்பு, 800 மகோகனி, 400 ஆப்பிரிக்கன் மகோகனி, 70 குமிழ் தேக்கு மரங்கள வெச்சிருக்கிறோம். மிளகுல இப்போதுதான் 2,000 நாற்றுகள கொண்டு வந்து போட்டுருக்கிறோம். தேக்கு, சந்தனம், செம்மரம், இலுப்பை மரங்கள ஆங்காங்கே வெச்சிருக்கிறோம்.

எங்க தோட்டத்தைச் சுற்றி உரக்கொன்றை மரங்களைத்தான் உயிர்வேலியா அமைச்சு இருக்கோம். இது காத்துலு உள்ள நைட்ரஜனை இழுத்து மரம், செடிகளுக்குக் கொடுக்கும். மகரந்த சேர்க்கைக்காக 40 தேன் பெட்டிகள் வெச்சிருக்கிறோம். நாட்டு மாட்டுச் சாணத்தில் மாசம் 2 டன் மண்புழு உரம் தயாரிக்கிறோம்.

அருகிலுள்ள இயற்கை விவசாயிகள்கிட்ட மிளகாய் வாங்கி, சோலார் ட்ரையரில் உலர வெச்சு பொடியாக்கி விற்பனை செய்றோம். எங்க மதிப்புக்கூட்டுப் பொருள்களை ‘குக்கூ’ என்ற பெயர்ல விற்பனை செய்றோம். விரைவில் எங்ககிட்ட தயார் செய்ற பொருள்களை விற்பதற்காக ஒரு கடை திறக்க இருக்கிறோம்.

மாட்டுடன்
மாட்டுடன்

மாடுகள், ஆடுகள், கோழிகள்…

பண்ணையில இயற்கை இடுபொருள்கள அதிக அளவுல தயாரிக்கிறோம். பண்ணைக்குத் தேவையானவை போக மற்றதை விற்பனையும் செய்றோம். மாதம் 1,000 – 1,500 லிட்டர் விற்பனை செய்றோம். அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், மீன் அமிலம்னு கொடுக்கிறோம். பஞ்சகவ்யாவுக்கு நாட்டு மாட்டுச் சாணம், பால், தயிர், நெய், இளநீர், வாழைப்பழம்னு கலந்து மாசம் 20 லிட்டர் தயாரிச்சு கொடுக்கிறோம்.

இங்க பண்ணையில இந்த வேலைகள செய்றதுக்குனு மூணு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இருக்குறாங்க. எந்த மாட்டுல பால் அதிகமா கறக்குதோ, அதுல இருந்துதான் வீட்டுக்குத் தேவையான பால் எடுக்கிறோம். வீட்டுக்குப் பயன்படுத்தியது போகக் கூடுதலா இருக்குற பாலை காய்ச்சி நெய் தயாரிக்கிறோம். காங்கேயம் மாட்டின் நெய்யில் இருந்து மருந்துகூடத் தயாரிக்கிறாங்க. 1 லிட்டர் 2,500 ரூபாய்னு கொடுக்கிறோம்.

100 அடிக்கு 50 அடி பரப்பளவுல கோழி பண்ணை இருக்கு. இங்க பெருவிடை, அசில், கிராமப்பிரியா ரகங்கள்ல 60 கோழிகள் வெச்சிருக்கிறோம். தினமும் 15 – 20 முட்டை கிடைக்குது. ஒரு முட்டை 15 ரூபாய்னு விக்கிறோம். ஆடு, மாடு தீவனங்ளோட கழிவுகள் மற்றும் மக்காச்சோளம், கம்பு, முருங்கை தளைகள கோழிகளுக்கு உணவா கொடுப்போம்.

தேனீப் பெட்டிகள்
தேனீப் பெட்டிகள்

நாய், கீரி தொந்தரவு இருக்கிற தால, வேலி அமைச்சிருக்கோம். கோழிகளுக்கு நிழல் தேவைங்கறதால ஆங்காங்கே நாவல் மரங்கள வெச்சிருக்கோம். 100 அடிக்கு 22 அடி பரப்பளவுல ஆட்டுக் கொட்டகை இருக்கு. மேச்சேரி செம்மறியாடு, பொட்டுக்குட்டி, நாட்டு வெள்ளாடுனு 75 ஆடுகள் வெச்சிருக்கோம். இந்தக் கொட்டகையில் 450 ஆடுகள் வரை பராமரிக் கலாம். சூப்பர் நேப்பியர், சோளத்தட்டு மற்றும் அடர் தீவனம் கொடுப்போம். அருகில் 4 ஏக்கர் நிலத்த குத்தகைக்கு எடுத்துக் கால்நடை களுக்குத் தேவையான தீவனப்புல் வளர்க் கிறோம்” என்றவர், நிறைவாக வருமானம் குறித்துப் பேசினார்.

“விவசாயத்தை வாழ்வியலாகப் பார்ப்ப தோடு, அதைத் தொழிலாகவும் பார்த்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அப்படித்தான் என்னோட பண்ணையில் ஒவ்வொரு விஷயத்தையும் வருமானம் கொடுக்கக் கூடியதா மாத்தியிருக்கேன். வருமான அடிப்படையில சரியான யோசனைகளை முன்னெடுத்து செஞ்சா விவசாயத்துல கண்டிப்பா வெற்றி கிடைக்கும். நான், இப்பவும் ஒரு தனியார் கல்லூரியில கௌரவப் பேராசிரியரா பணி புரிஞ்சுகிட்டுதான் இருக்கேன். ஆனா, விவசாயத்தையும் முன்னெடுத்துக்கிட்டு இருக்கேன்.

இந்தப் பண்ணையில தென்னை, வாழை, ஆடு, கோழி, மாடு, இடுபொருள் உற்பத்தினு 29,40,000 ரூபாய் கடந்த நிதியாண்டுல வருமானமா கிடைச்சது. பண்ணையில வேல செய்றவங்களுக்குச் சம்பளம், மதிப்புக்கூட்டுற துக்கான செலவு, போக்குவரத்துனு இதுல 7,80,000 ரூபாய் செலவாயிருக்கு. அதுபோக இந்த 10 ஏக்கர்ல இருந்து 21,60,000 ரூபாய் லாபமா கிடைச்சது. இன்னும் முன்னெடுக்க வேண்டிய பணிகள் நிறைய இருக்கு. அது செஞ்சா இன்னும் வருமானம் கூடும்.

பண்ணையில் சம்பத்குமார்.
பண்ணையில் சம்பத்குமார்.

‘மண்ணைப் பாதுகாக்க வேண்டும். அதைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது நம் கடமை’னு நம்மாழ்வார் ஐயா சொல்வார். இந்த மண்ணைக் கெடுக்காமல், அதைப் பாதுகாத்து நமக்குத் தேவையான வருமானத்தைப் பெற முடியும். ரசாயன உரங்களோட தேவை இல்லாமலே ஒரு வெற்றிகரமான பண்ணையை நிர்வகிக்க முடியும். அதுக்கு நானே உதாரணம்” என்று சொல்லி விடை கொடுத்தார்.

தொடர்புக்கு, சம்பத்குமார்,

செல்போன்: 94434 43561

காங்கேயம் மாடுகளுக்குக் காப்பகம்!

காங்கேயம் மாடுகளுக்கென்று விடுதியை நடத்தி வருகிறார் சம்பத்குமார். இதுகுறித்துப் பேசியபோது, “காங்கேயம் மாடுகள் அழிஞ்சிடக் கூடாதுங்கறதுக்காக 33 அடிக்கு 67 அடி பரப்பளவுல மாட்டுப் பண்ணை அமைச்சிருக்கிறோம். 5 காங்கேயம் மாடுகள சொந்தமா வளர்க்கிறேன். மீதி மாடுகள் வெளியிலிருந்து வந்தவை. அதையும் பராமரிச்சுக்கிட்டு இருக்கேன். வெட்டுக்குப் போகும் மாடுகள மீட்டு இங்கே பராமரிக்கிறோம். வெளிநாடுகள்ல இருக்கும் சிலர், காங்கேயம் இன மாடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இங்கே மாடுகளை விட்டிருக்காங்க.

நாட்டு மாடுகள்
நாட்டு மாடுகள்

அதேபோல மாடுகளைப் பராமரிக்க முடியாதவங்களும் இங்கே கொண்டு வந்து விடுறாங்க. சிலபேர் மாடு சினையாகலைனாலும் கொண்டு வந்து விடுவாங்க. இங்கே இருக்கும் காளைகள் மூலம் இனப்பெருக்கம் நடக்கும். இந்த மாடுகள பராமரிக்கிறதால எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. எனக்கு மாட்டிலிருந்து சாணம், சிறுநீர் கிடைச்சிடுது. இதன் மூலம் மண்புழு உரம், ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், பஞ்சகவ்யானு இடு பொருள்கள தயாரிச்சுக்கிறேன். 10 மாடுகள்ல தொடங்குனது இப்போது 60 மாடுகள்ல வந்து நிக்குது” என்றார்.

பண்ணையில் உயர்ந்த கரிமச்சத்து!

“இயற்கை இடுபொருள்களைத் தானியங்கி முறையில் சொட்டு நீர்ப் பாசனம் வழியாகப் பாய்ச்சும் தொழில்நுட்பத்தைப் பண்ணையில அறிமுகப்படுத்தியிருக்கோம். இந்தத் தொழில் நுட்பத்தை 250 விவசாயிகளுக்கு அமைச்சும் கொடுத்திருக்கோம். பீஜாமிர்தம் மூலம் விதை நேர்த்தி செய்வது, ஜீவாமிர்தம் மூலம் நல்லது செய்யும் பாக்டீரியாக்களுக்கு உணவளிப்பது, மூடாக்கு மூலம் வாப்சா தொழில்நுட்பம் (மண்ணில் தண்ணீரையும் காற்றையும் சம அளவு நிலைப்படுத்துவது) ஆகியவற்றையும் கடைப்பிடிக்கிறோம். இதை முறையாகச் செய்தாலே எல்லாப் பயிர்களும் நல்லா வளரும்.

இயற்கை உர கரைசல்
இயற்கை உர கரைசல்

முதலமைச்சரின், ‘மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் மூலமாகவும் இயற்கை விவசாயத்துக்கு அரசு உதவி செய்யுது. அங்கக கரிமச் சத்துதான் மண்ணுக்கு உயிர்ச் சத்து. தமிழ்நாட்டில் சராசரியாக மண்ணின் அங்கக கரிமச் சத்து 0.3 விகிதமா இருக்கு. எங்க தோட்டத்திலும் முன்பு இந்தளவுலதான் இருந்துச்சு. இப்போ எங்க தோட்டத்துல மண்ணின் அங்கக கரிமச் சத்து 2.58 சதவிகித மாக உயர்ந்திருக்கு. கிட்டத்தட்ட வனத்துல உள்ள மண்ணுக்கு இணையாகக் கரிம சத்து இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்றாங்க. உழவு ஓட்டாம, டிராக்டர் பயன்படுத்தாம இருந்தால், மண்ணின் அமைப்பு உடைபடாம இருக்கும். இதனாலதான் நாங்க உழவு ஓட்டாமல் மண்ணை அப்படியே விட்டுருக்கோம்.மரங்களைச் சுற்றி ஆங்காங்கே மூடாக்குப் போட்டிருக்கிறோம். அது மட்க மட்க தொடர்ந்து மூடாக்கு போட்டுக்கொண்டே இருப்போம். இதுக்குக் கீழே மண்ணை எடுத்துப் பார்த்தா, ஏராளமான மண்புழுக்கள் இருக்கும்” என்கிறார் சம்பத்குமார்.

ஆட்டுப் பண்ணையில்
ஆட்டுப் பண்ணையில்

மழைநீரைச் சேமிக்கும் மண்புழுக்கள்

“மண்புழுக்கள் சரியாக வேலை பார்த்தால் ஏக்கருக்கு 1 லட்சம் லிட்டர் மழைநீரைச் சேமிக்க முடியும். இது பயிர்களுக்குத் தேவையான மூன்று மாதத்துக்கான தண்ணி கொடுக்கும். தோட்டத்தில் ஆங்காங்கே மூன்றடி ஆழத்துக்குக் குழி வெட்டியிருக்கோம். மழைநீர் வர்றதுக்கு எதிர்த் திசையில் குழி வெட்டியிருக்கோம். இதனால எவ்வளவு மழை பெய்ஞ்சாலும் தண்ணி வெளியில் போகாது. எங்க பண்ணையில 3 போர்கள் இருக்கு. கோடைக்காலத்துல மட்டுமே அதைப் பயன்படுத்துறோம்.நாங்க தென்னைக்குத் தனியாகத் தண்ணி பாய்ச்சுறதில்ல. ஊடுபயிர்களுக்குக் கொடுக்கும் தண்ணியே இதுக்கும் சரியா போயிடுது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகள்ல உள்ள தென்னை மரங்கள்ல, கடந்த ஆண்டு கேரளா வாடல் நோய் பிரச்னை பெரியளவுக்கு இருந்துச்சு. எங்க பகுதியில மட்டுமே 3,000-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டினாங்க. எங்க தோட்டத்துல ஒரு மரம்கூட பாதிக்கப்படல. மண்ணுல உயிரோட்டம் இருந்தால், பயிர்கள்ல நோய்கள் அவ்வளவு எளிதில் தாக்குறதில்ல” என்கிறார் சம்பத்குமார்.

தானியங்கி தொழில்நுட்பத்தில் இயற்கை இடுபொருள்

“பயிர்களுக்குத் தனியா தண்ணி விடுறதில்ல. வாரத்துக்கு ஒரு முறை ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் கலந்த தண்ணியைச் சொட்டுநீர்ப் பாசனம் மூலமா விடுவோம். ஜீவாமிர்தம் தயாரிக்க நாட்டு மாட்டுச் சாணம், சிறுநீர், நாட்டுச் சர்க்கரை, ஏதாவதொரு பயறு மாவு, நிலத்து மண்ணைக் கலந்து ஜீவாமிர்தம் தயாரிப்போம். இதை வடிகட்டி தானியங்கி தொழில்நுட்ப பாசன கருவி மூலமா பயிர்களுக்குக் கொடுக்கிறோம். வாரம் சராசரியாக 2,500 லிட்டர் ஜீவாமிர்தம் தயாரிக்கிறோம். தினசரி 5,000 லிட்டர் அமுதக்கரைசல் தயாரிக்கிறோம். மீன் கழிவு அதற்குச் சமமான நாட்டுச் சர்க்கரை கலந்து மீன் அமிலம் தயாரிக்கிறோம். இதை மாதம் ஒருமுறை கொடுப்போம். மனிதர்களுக்கு எப்படிச் சமச்சீரான உணவு அவசியமோ, அதேபோல பயிர்களுக்கும் சமச்சீரான உணவு கொடுக்கும்போது மகசூல் நல்லா கிடைக்கும்” என்கிறார் சம்பத்குமார்.

ஆட்டுப்பண்ணை
ஆட்டுப்பண்ணை

வேளாண் சுற்றுலா

“எங்க பண்ணையை வேளாண் சுற்றுலா மையமாக மாற்றத் திட்டமிட்டிருக்கோம். மக்கள் பண்ணையில் தங்கிப் பார்வை யிடுவதோடு பழங்களைப் பறிச்சு சாப்பிட்டு, கிணத்துல குளிச்சுப் புத்துணர்வு பெற்று இயற்கை விவசாயத்த பத்தி தெரிஞ்சுக்கலாம். இயற்கை விவசாயம் கற்றுக்கொள்ள விரும்பும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்கி பயிற்சி எடுக்கவும் திட்டமிட்டுருக்கோம். இங்க விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்குப் பயிற்சியும் வழங்குகிறோம். இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றிருக்காங்க. விவசாயம் என்றாலே நஷ்டம் என்று பார்க்கும் பார்வையை மாற்றி, விவசாயம் நல்ல லாபம் தரக்கூடிய தொழில்னு மாத்துறதுக்கு முயற்சி செஞ்சுகிட்டு இருக்கேன்” என்கிறார் சம்பத்குமார்.

https://www.vikatan.com/agriculture/organic-farming/10-acres-profit-of-rs21-lakh-per-annum-organic-farming-by-an-exciting-professor

About VELUPPILLAI 3317 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply