மாவை…. போராளியாக எழுந்து அரசியல்வாதியாக வீழ்ந்தவர்!

மாவை…. போராளியாக எழுந்து அரசியல்வாதியாக வீழ்ந்தவர்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் அந்திமகால அரசியல் போன்று அவரின் மறைவுக்குப் பின்னரான நாட்களும் மலினமான அரசியல்வாதிகளினால் கையாளப்பட்டு இறுதிப் பயணம் பெருந்துயராக முடிந்திருக்கின்றது. கடந்த ஆண்டு மறைந்த தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரான இரா.சம்பந்தனை விட அதிக காலம் நேரடி அரசியல் போராட்டக் களத்தில் பயணித்தவர் மாவை சேனாதிராஜா. அறுபது ஆண்டுகளுக்கும் மேலான அவரின் தமிழ்த் தேசியப் பயணத்தில் முதல் முப்பது ஆண்டுகள் உணர்வு மிக்க போராளியாகவும், இறுதி முப்பது ஆண்டுகள் பதவி, பகட்டுக்காக அலைந்து அதனாலேயே தன்னுடைய போராளி அடையாளத்தை இழந்த அரசியல்வாதியாகவும் நினைவுகூரப்படுவார். 

தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் அதிக காலம் தலைவராகவும், செயலாளராகவும் செயற்பட்டவர் மாவை மாத்திரமே. தமிழரசின் நிறுவனரான தந்தை செல்வா கூட, மாவை அளவுக்கு அதிக காலம் எந்தப் பதவியையும் கட்சிக்குள்ளும் பாராளுமன்றத்துக்குள்ளும் வகித்தவர் அல்ல. தமிழர் விடுதலைக் கூட்டணி (மே, 1972இல்) தோற்றுவிக்கப்பட்டது முதல் தமிழரசுக் கட்சி உறங்கு நிலைக்குச் சென்றது. அது உறங்கு நிலையில் இருந்த காலத்திலும் அதன் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளில் மாவை இருந்திருக்கிறார். 2004 பொதுத் தேர்தல் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால், தமிழரசுக் கட்சியும் அதன் வீட்டுச் சின்னமும் மீண்டும் செயற்பாட்டுத்தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. தங்களின் சொல்பேச்சினைக் கேட்கும் ஒருவராக மாவை இருப்பார் என்கிற நம்பிக்கையினாலும், தந்தை செல்வாவினால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையிலும் தமிழரசினையும், வீட்டுச் சின்னத்தையும் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தலுக்கான கட்சியாக தேர்வு செய்தார். இல்லையென்றால், 2004 பொதுத் தேர்தலில்  கூட்டமைப்பின் தேர்தல் கால கட்சியாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸோ அல்லது முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கமொன்றின் சின்னமோ அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால், தமிழரசுக் கட்சியின் மீது எந்தவித அரசியல் கறுப்பு வரலாறுகளும், படுகொலை அடையாளங்களும் இல்லை என்கிற காரணமும், “…மாவை அண்ணன் எங்களின் ஆள், அவர் நாங்கள் சொன்னால் கேட்பார்…” என்கிற எண்ணமும்தான் கிளிநொச்சியில் இருந்து, கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக வீட்டுச் சின்னம் அறிவிக்கப்பட காரணமானது. மீள உயிர்ப்பிக்கப்பட்ட தமிழரசின் தலைவராக சம்பந்தன் இருந்தாலும், அவர் மீது புலிகளுக்கு பெரிய நம்பிக்கைகள் இருக்கவில்லை. ஆனால், கூட்டணியின் செயலாளர் நாயகமான வீ.ஆனந்தசங்கரி போன்று, புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்கமாட்டேன் என்று சம்பந்தன் அறிவிக்காததனால், அவர் தமிழரசின் தலைவரானார். அதுபோல, கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் புலிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஆனால், தமிழரசுக் கட்சியின் மீள் வருகைக்கான காரணங்களில் மாவையின் புலிகளின் தலைமைக்கான விசுவாசம் முக்கிய காரணமாகும். அதனை தவிர்த்துவிட்டு, கூட்டமைப்பின் அரசியலையோ, இன்றைய தமிழரசுக் கட்சியின் நிலைபெறுகையையோ  பேச முடியாது. எந்த வரலாறும் காய்தல் உவர்த்தல் இன்றி பதிவு செய்யப்பட வேண்டும். அதுதான், எதிர்கால வெற்றிகளுக்கான படிப்பினைகளை வழங்கும். அந்த நிலைப்பாட்டில் இந்தப் பத்தியாளர் உறுதியாக இருக்கின்றார். அதனால்தான், மாவை தொடர்பிலான இந்தப் பத்தியிலும், தமிழ்ப் பொதுப்புத்தியில் உள்ள ஒருவரின் மறைவுக்குப்   பின்னரான நாட்களில் அவர் தொடர்பிலான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு, புகழுரைகளை மாத்திரம் பேச வேண்டும் என்கிற நிலைப்பாட்டினை நிராகரித்து நின்று இந்தப் பத்தி எழுதப்படுகின்றது. 

தந்தை செல்வாவின் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கான அர்ப்பணிப்பைக் கண்டு, தமிழரசுக் கட்சியில் ஓர் ஆக்ரோசமான இளைஞனாக இணைந்த மாவை, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் அதிக காலம் சிறையில் இருந்தவர். ஏழு ஆண்டுகள் வரையில், பல சிறைகளிலும் அரசியல் கைதியாக வழக்கு விசாரணைகளின்றி கழித்திருக்கிறார். அதுபோல, இலங்கை பாதுகாப்பு படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி, உடல் முழுவதும் மாறா வடுக்களைப் பெற்ற போராளி. 2001 பொதுத் தேர்தல் பரப்புரைக்காக தீவகத்தை நோக்கிச் சென்ற கூட்டமைப்பின் குழுவினர் மீது ஊர்காவல்துறை நாரந்தனை பகுதியில் வைத்து, ஈபிடிபியின் ஆயுதக் கும்பல் தாக்குதல்களை நடத்தியது. இதில், கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன்போது, மாவை சேனாதிராஜா தலையில் வெட்டுக்காயத்துக்கு உள்ளானார். என்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட இன்னும் 17 பேர் படுமோசமான காயங்களுக்கு உள்ளானார்கள். இப்படியாக அவர் அரச படைகளினதும், அவர்களின் துணைக்குழுக்களாக இயங்கிய ஈபிடிபி உள்ளிட்டவற்றின் தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கியிருக்கிறார். ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் மாவை, ஒரு பதவிக்காக ஆலாய் பறந்த அரசியல்வாதியாக மாறிப்போனார். அதற்காக அவர் தன்னுடைய போராளி நிலையில் இருந்து யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கீழிறங்கினார். கட்சியின் சிதைவுகளுக்கும் ஒரு காரணமாகிப் போனார். தமிழரசுக் கட்சி இன்றைக்கு இரண்டாக பிளவுபட்டிருக்கின்றது. செங்குத்துப் பிளவைச் சந்திக்கவில்லை என்றாலும், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் அளவுக்கு தமிழரசுக் கட்சியின் பிளவு வளர்ந்துவிட்டது. அந்தப் பிளவை, இப்போதைக்கு சரி செய்யவும் வாய்ப்பில்லை. அந்தப் பிளவை, அதிகரிக்கும் செயற்பாடுகளை மாவையின் இறுதி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தவர்களும், அவர்களின் தொண்டர்பொடிகளும்கூட செய்துவிட்டனர். 

மாவை, கட்சிக்கும் அவர் ஏற்ற தலைமைக்கும் கேள்விகளுக்கு அப்பாலான விசுவாசத்தினை கடந்த காலங்களில் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். ‘தம்பி சேனாதி…’ என்ற சம்பந்தனின் அழைப்பில் மாவை முழுவதுமாக இணங்கிப் போய்விடுவார். வடக்கு முதலமைச்சர் பதவி மீது தீராக் காதல் கொண்டிருந்தாலும், சம்பந்தனின் விருப்பம் சி.வி.விக்னேஸ்வரன் நோக்கியது என்ற காரணத்துக்காக மாவை, அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதில் அவருக்கு வருத்தம் இருந்தாலும் ‘…சாம் அண்ணன் கேட்கும் போது, எப்படி மறுப்புச் சொல்ல முடியும்..’ என்ற மாவையின் கட்சித் தலைமைக்கான இறுதி அர்ப்பணிப்புப் பற்றி எல்லோரும் சிலாகிப்பது உண்டு. சம்பந்தன் வாழும் காலம் வரையில், மாவை அவரின் சொற்களை பெரிதாக மீறியதில்லை என்பது உண்மை. ஆனால், அதுதான் அரசியல்வாதியாக அவரின் தோல்விகளுக்கும் காரணமானது. மாவை எப்போதுமே, யாரோ ஒருவர் வழிநடத்த அந்தத் தடங்களை கேள்விகள் இன்றி பின்தொடரும் ஒருவராகவே இருந்திருக்கிறார். அவர் ஒரு தலைமைத்துவ பாத்திரம் இல்லை. தமிழரசுக் கட்சியின் செயலாளர்  என்பது, நிர்வாக ரீதியில் தலைவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் பதவிதான். ஆனால், அதன் செயற்பாட்டுத் தன்மை என்பது தலைவருக்கான அதிகாரங்களை பல இடங்களில் தாண்டியது. அப்படித்தான் அந்தக் கட்சியின் யாப்பு வரையறுத்திருக்கின்றது. ஆனால், அந்த அதிகாரங்களை மாவை செயலாளராக செயற்பட்ட காலத்தில் ஒருபோதும் பயன்படுத்தியிருக்கவில்லை. சம்பந்தன் என்ன சொல்கிறாரோ, அதனையெல்லாம் ஒரு உதவியாளர் போல நின்று செய்திருக்கின்றார். ஆனால், கட்சியின் செயலாளர் பதவிக்கான அதிகாரம் எப்படிப்பட்டது என்பதை, 2020 பொதுத் தேர்தலில் மாவை தோல்வியடைந்ததும் உணர்ந்து கொண்டார். கட்சியின் தலைவராக மாவை இருந்த போதிலும், கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு அவரின் விருப்பினை மீறி, கட்சியின் முடிவெடுக்கும் தலைமையாக அப்போது இயங்கிய சம்பந்தன் – எம்.ஏ.சுமந்திரன் இணை, கலையரசனை நியமித்தது. அந்த நியமனத்தினை அன்றைய செயலாளர் சி.துரைராஜசிங்கம் தேர்தல் திணைக்களத்துக்கு அறிவித்தார். அந்த அறிவிப்பு, கட்சியின் தலைவரை மீறி செய்யப்பட்டது என்ற விடயம் அப்போது மேலழுந்தது. ஆனால், அந்தத் தீர்மானத்தினை சட்டரீதியாகவோ, நிர்வாக ரீதியாகவோ சவாலுக்கு உள்ளாக்கும் அதிகாரம், தலைவராக மாவைக்கு இருக்கவில்லை. அப்போதுதான், அவர் கட்சியின் யாப்பு யாருக்கு என்ன அதிகாரங்களை வழங்கியிருக்கின்றது என்பதை உணரத் தொடங்கினார். ஆனால், அப்போது காலம் அவரிடத்தில் இருந்து அரசியலை கிட்டத்தட்ட முழுவதுமாக பிடுங்கி விட்டிருந்தது. 

‘தந்தை செல்வா, அண்ணன் அமீர், சாம் அண்ணா…. தம்பி சுமந்திரன்’ என்று அவரை யாராவது ஒருவர் கையைப் பிடித்து வழிநடத்துவதற்கு தேவையாக இருந்தது. முடிவெடுக்கும் அதிகாரமுள்ள தலைமையாக அவர் ஒருபோதும் செயற்பட்ட அனுபவம் இல்லாததால், அவரின் இறுதிக் காலத்தில் யார் யாரோவெல்லாம் அவரை கையாளத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான், அவரின் இறுதிக்கால அரசியல் வாழ்வு பெரும் இழுபறிகள் நிறைந்ததாக மாறியது. இந்தப் பத்தியாளர் 2015க்குப் பின்னரான காலத்தில் மாவையை காட்டமாக விமர்சித்திருக்கிறார். அதிலும், 2020 தேர்தல் காலம் தொடங்கி, அவர் மறையும் வரையிலான காலத்தில் அவரின் அரசியல் நடவடிக்கைகள் என்பது, தமிழரசுக்   கட்சியை மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய அரசியலையும் பின்நோக்கி இழுத்துவிடும் வேலைகளினால் நிரம்பியது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும், பொதுத்   தேர்தல் காலத்திலும் அவரின் அரசியல் நடவடிக்கைகள் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத அபத்தங்களினால் நிரம்பியிருந்தது. இவ்வாறான நிலை, அவரின் மீதான மதிப்பை முழுவதுமாக கீழிறக்கியது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அவரின் நிலைப்பாடுகளை மீறி கட்சி ஒரு தீர்மானத்தை எடுத்தது. அந்தத் தீர்மானம் அவருக்கு உவப்பானது இல்லை என்றாலும், கட்சியின் முடிவுக்கு அவர் கட்டுப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் கட்சியின் தீர்மானத்தை ஊடக மாநாடு நடத்தி அறிவித்துவிட்டு, சில மணிநேரங்களிலேயே, இன்னொரு தரப்பினரின் மேடையில் ஏறி, கட்சியின் முடிவை நிராகரிக்கும் முகமாக பேசியமை எல்லாமும் கட்சி மீதான மதிப்பை பலமாக இறக்கம் செய்தது. அத்தோடு, பொதுத் தேர்தல் காலத்தில், கட்சியின் தலைமைப் பதவியை துறந்தமை கட்சி மீதான மக்கள் அபிமானத்தை கனதியாக குறைக்க காரணமானது. இந்த இரு முடிவுக்குப் பின்னால், வேறு நபர்களும் தரப்புக்களும் இருந்தன என்பது தொடரும் வாதம். ஆனால், நீண்ட நெடிய காலம் தமிழ்த் தேசிய அரசியலில் நீடித்துவிட்ட ஒருவர், மற்றவர்கள் நீட்டும் இடங்களில் எல்லாம் கையெழுத்திடவோ, பேசவோ செய்கிறார் என்றால், அவரின் தனியாளுமைக்கு என்ன மதிப்பு? பொதுத் தேர்தல் காலத்தில் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு, தேர்தல் முடிந்ததும் இராஜினாமாக் கடிததத்தை மீளப்பெற   முயன்றமை எல்லாமும் அவரின் மீதான மதிப்பை காவு வாங்கியது. இறுதியில், அவரின் இறந்த உடலை வைத்து, சில தரப்புக்கள் செத்தவீட்டு அரசியலை நடத்தியமையோடு, மாவை என்ற ஒரு மூத்த முன்னாள் போராளியின் வரலாறு முடிந்து போயிருக்கிறது. 

தமிழரசுக் கட்சியின் நீண்டகாலத் தலைவரின் உடல், அந்தக் கட்சியின் கொடியினால் போர்த்தப்பட்டாலும் கட்சியின் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்ல, இறுதி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தவர்கள் முயலவில்லை.  கட்சியின் பதில் தலைவர் உள்ளிட்ட பதினெட்டுப் பேர்தான், மாவையின் மரணத்துக்கு காரணம் என்ற பனர்கள் கட்டப்பட்டன. பேஸ்புக்கில் போலிக் கணக்குகளிலும் எழுதப்பட்டன. இறுதி அஞ்சலி செலுத்த வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழரசுக் கட்சிக்காரர்கள் பலர், இடம் பொருள் தெரியாத சில காவாலிகளினால் சாவு வீட்டில் இடைமறிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டார்கள். ஆனால், முரண் நகை என்னவென்றால், நாரந்தனையில் வைத்து மாவையின் தலையில் வெட்டிய ஈபிடிபி அமைப்பின் தலைவரோ, அந்த இயக்கத்தினரோ இறுதி அஞ்சலி செலுத்த எந்தவித இடையூறும் இன்றி அனுமதிக்கப்பட்டார்கள். அதுபோல, மாவையின் கட்சிக்காரர், முன்னாள் சக பாராளுமன்ற உறுப்பினர், இந்நாள் சம்பந்தியான மாமனிதர் ரவிராஜின் கொலையின் சூத்திரதாரிகள், ராஜபக்ஷக்கள். அவர்களின் ஆட்சியில் வேட்டையாடப்பட்டவர்களில் முக்கிய தமிழ்த் தேசிய ஆளுமை, ரவிராஜ். ஆனால், அவரின் குடும்பத்தினருக்கோ, மாவையின் இறுதி நிகழ்வை ஒருங்கிணைத்த சிவஞானம் சிறீதரனுக்கோ, நாமல் ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்த வருவது பிரச்சினையில்லை. நாமலுக்கு நோகாமல் சிரித்துப் பேசி, வழி அனுப்பி வைக்கும் அளவுக்கு அரசியல் நாகரீகம் தெரிந்திருக்கின்றது. ஆனால், சொந்தக் கட்சிக்காரர்களை, கொலைகாரர்களாக சித்தரித்து செய்யப்பட்ட இழிநிலை அரசியலைப் புறந்தள்ளி, அனைவரையும் ஒன்றிணைந்து, மூத்த தலைவரான மாவையின் இறுதி நிகழ்வினை நடத்தி முடிப்பதில்தான் அவர்களுக்கு சிக்கல் இருந்திருக்கின்றது. 

மாவை என்ற அரசியல்வாதியின் பயணத்தினை காலத்துக்கு காலம் யாரோ ஒருவர் வழிநடத்தியிருக்கிறார். அப்படித்தான், அவரின் இறுதி நாட்களும் இறுதிப் பயணமும்கூட யார் யாரோ, தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக இழுத்து பறித்து நடத்தி முடித்திருக்கிறார்கள். காலம் அவரை பலமாக அலைக்கழித்திருக்கின்றது. அந்த அலைக்கழிப்பில் இருந்து அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார். இனியாவது அவரது ஆன்மா ஆழ்ந்து உறங்கட்டும். மூத்த முன்னாள் போராளிக்கு அஞ்சலிகள்.

-காலைமுரசு பத்திரிகையில் பெப்ரவரி 09, 2025 வெளியான பத்தி.

About VELUPPILLAI 3316 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply