அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! ஒரு எதிர்வினை
நக்கீரன்
அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! என்ற தலைப்பில் ரி. திபாகரன் ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அதனை தமிழ்வின் வெளியிட்டுள்ளது. இதஅக வசை பாடுவதையே, குறிப்பாக ஆ. சுமந்திரனை, வசைபாடுவதையே சிலர் தமது முழுநேர திருப்பணியாகக் கொண்டுள்ளார்கள். அதில் இந்த கட்டுரையாளரும் ஒருவர்.
ஊடக தொழுநோயாளி கந்தையா பாஸ்கரனின் கட்டுப்பாட்டில் உள்ள ஐபிசி நிறுவனத்தின் கீழுள்ள இணைய தளங்கள் முன்னாள் நா.உ ஆ. சுமந்திரனுக்கு எதிராகவும் இந்நாள் நா.உ சி. சிறிதரன் சார்பாகவும் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது தெரிந்ததே. அதன் நீட்சியாக ரி. தயாபரன் என்ற ஒரு பரதேசி எழுதிய கட்டுரையை தமிழ்வின் வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் பொய்யும் புனையுரையும் தாராளமாக விதைக்கப்பட்டுள்ளது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
அவரது கட்டுரைக்கு எனது எதிர்வினை பின்வருமாறு.
(1) முள்ளிவாய்க்காலுக்கு பின்னான ஈழத் தமிழர்களின் அரசியல் தற்போது என்றுமில்லாத அளவு சீரழிவையும், சீர்குலைவையும் சந்தித்திருக்கிறது.
இதனை இந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனக்கு எதிராக சதிவலை பின்னப்பட்டிருப்பதாகவும், இந்தச் சதிநடவடிக்கைகளுக்கு பின்னால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.சுமந்திரன் இருப்பதாகவும், தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை நாடாளுமன்றத்திடம் அதற்கான விசாரணை ஒன்றை நடத்துமாறு விண்ணப்பித்துள்ளார்.
இதிலிருந்து தமிழர் அரசியல் தமிழ் மக்களை மாத்திரமல்ல தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத கையறு நிலைக்குச் சென்று விட்டதனை வெளிக்காட்டி நிற்கிறது.
பதில்: நா.உ சிறிதரன் இப்போது அல்ல கொஞ்சக் காலமாக இதஅக க்குள் தனக்கு எதிராக சதிவலை பின்னப்படுவதாக ஒப்பாரி வைத்துக் கொண்டு திரிகிறார். அவர் சதிவலை என்று குறிப்பிடுவது கடந்த சனாதிபதி தேர்தலில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, தான் தோன்றித்தனமாக, தன்னிச்சையாக சனநாயக ததேகூ யும் தமிழ்ப் பொதுக் கட்டமைப்பும் சேர்ந்து இறக்கிய பா. அரியநேத்திரனை பகிரங்கமாக ஆதரித்ததுதான் காரணம். அரியநேத்திரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மாலை போட்டு மரியாதை செய்தார். வெற்றிபெற வாழ்த்தினார். இதஅக இன் மத்திய குழு சனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என முடிவு செய்தது. இது அவசரக் கோலத்தில் எடுத்த முடிவல்ல. மத்திய குழு ஒருமுறைக்கு நான்கு முறை கூடி தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுயேட்சை வேட்பாளர் இரணில் விக்கிரமசிங்க அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளை அலசி ஆராய்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை சிறிதரன் மட்டுமே எதிர்த்தார். அது தொடர்பாக பேசிய அவர் “இதஅக ஒரு வரலாற்றுப் பிழையை இழைத்துவிட்டதாக” தெரிவித்தார். இப்படி கட்சிக் கட்டுப்பாட்டை அப்பட்டமாக மீறிய சிறிதரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இதஅக முடிவு செய்ததையே “சதிவலை பின்னப்படுவதாக” அவரும் அவரது ஆதரவாளர்களும் பரப்புரை செய்து வருகிறார்கள். இதஅக சனநாயக மரபைப் பேணும் கட்சி. கட்சி யாப்பை மீறி நடப்பவர்கள் மீது – அவர்கள் யாராக இருந்தாலும் – ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது சதிவலை அல்ல. அது கட்சியின் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் காக்கும் முயற்சி.
முதல் தமிழ் எதிர்கட்சி தலைவர்
2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்களின் ஒற்றைத் தலைமையின் கீழ் தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயக வழியில் ஒன்று திரட்டி தமிழர் தேசம் ஒருமித்ததாக தமது வாக்குகளை விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிகளாக ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து தமிழ் தேசியத்தை ஜனநாயக வழிமுறையில் இந்த உலகிற்கு வழிகாட்டி இருந்தனர்.
1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி ஈழத் தமிழர் அரசியலின் தமிழ்த் தேசியத்தை தலைமை தாங்குகின்ற கட்சியாக உருவெடுத்தது. 1977ஆம் ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அன்று தமிழ் மக்கள் பெறக்கூடிய 18 ஆசனங்களை பெற்றுக் கொண்டது.
இதனால் தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலைக்கு மாறியது. அ.அமிர்தலிங்கம் முதன்முறையாக தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலைக்கு வந்தார்.
பின்னர் தமிழர் தாயகத்தில் ஆயுதப் போராட்டத்தின் அதிவேக வளர்ச்சியும் எழுச்சியும் தமிழர் விடுதலைக்கான நம்பிக்கையை ஊட்டியதனால் ஜனநாயக வழியில் நாடாளுமன்ற அரசியல் தமிழ் மக்களுக்கு எந்த உரிமைகளையும் பெற்றுக் கொடுக்காது என்ற அடிப்படையில் ஆயுதப் போராட்டமே தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு உச்சகட்ட வளர்ச்சி அடைந்து 2002இல் இலங்கையில் சமபலம் கொண்ட இரண்டு ராணுவங்கள் உள்ளன என்ற நிலையில் இலங்கை அரசுடன் ரணில்-பிரபா ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.
அந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஜனநாயக அரசியல் பலத்தை வெளிக்காட்டுவதற்கு ஒரு ஜனநாயக தேர்தலை எதிர்கொண்டு அதில் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய ஒரு காலச்சூழல் ஏற்பட்டு இருந்தது.
பதில்: கட்டுரையாளர் அவலை நினைத்து உரலை இடிக்கிறார். 2004 இல் நடந்த தேர்தல் முறையாக நடக்கவில்லை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வட – கிழக்கில் கள்ள வாக்குகள் ஏராளமாகவும் தாராளமாகவும் போடப்பட்டன. இறந்தவர்கள் எழுந்து வந்து வாக்களித்தார்கள். புலம்பெயர்ந்தவர்களும் இலண்டன், கனடாவில் இருந்து கொண்டு வாக்களித்தார்கள். அண்மையில் சிறிதரன் தான் மட்டும் 75 வாக்குகளைப் போட்டதாக மார் தட்டிக் கொண்டார். 2004 இல் நடந்த தேர்தலில் செல்வராசா கஜேந்திரன் அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் 112, 077 ஆகும். ஆனால் அடுத்து 2010 இல் நடந்த தேர்தலில் கட்டுக்காசை இழந்தார். அவர் மட்டுமல்ல 2004 இல் 68,240 வாக்குகள் பெற்று பத்மினி சிதம்பரநாதன், 60,770 வாக்கள் பெற்ற கஜேந்திரகுமார் ஆகியோரும் கட்டுக்காசை இழந்தார்கள். இதன் மூலம் 2004 இல் நடந்த தேர்தல் ஒரு மோசடித் தேர்தல் என்பது எண்பிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் பற்றிக் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியம் வட கிழக்கில் முறையான தேர்தல் நடைபெறவில்லை என கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எந்தக் கட்சியிலும் அவ்வப்போது எட்டப்பர்கள் தோன்றுவது வழக்கமாகும். இதஅக இதற்கு விதிவிலக்கல்ல.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
அத்தகைய ஒரு சூழலில் முன்னாள் ஆயுதப்போராட்ட இயக்கங்களையும், மிதவாத அரசியல் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜனநாயக அரசியலுக்கான முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை காட்டி தேர்தலில் போட்டியிட வைக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் இலங்கை தீவுக்குள் பெறக்கூடிய அதிஉச்ச நாடாளுமன்ற உறுப்புரிமை 22, பெற்றுக் கொள்ள முடிந்தது. இரண்டாவது தடவையாக தமிழ்க்கட்சி ஒன்று எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரும் வாய்ப்பையும் அது கொடுத்தது.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் தேசியக் கட்சி ஒன்று இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற நிலைக்கு வந்த தருணங்களை உற்று அவதானிக்க வேண்டும்.
இந்த இரண்டு காலப்பகுதியிலும் தமிழ் மக்களுடைய எழுச்சியும், தமிழ் மக்களுடைய தேசிய ஒருமைப்பாடுமே இலங்கை அரசியலில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற நிலையில் ஏறி அமர்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத்தான் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்க் கட்சிகள் பலமாக இருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்தக் கட்சிக்குள் இலங்கை அரசினால் உடைவுகளை ஏற்படுத்துவதற்கான பல்வேறு சதி வேலைகள் நடைபெற்று இருப்பதையும் அவதானிக்க முடியும்.
1977ஆம் ஆண்டு தேர்தலின் பின் தமிழ்த்தேசிய தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ராஜதுரை வெளியேற்றுவதற்கான சதி வேலைகளில் உள்ளக முரண்களும் அதேநேரத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ராஜதந்திரமும் தொழில்பட்டிருக்கிறது.
உள்முரண்கலுக்குள்ளால் ராஜதுரை வெளியேற்றப்பட்டமை அவர் நாடாளுமன்றத்தில் வகை செய்யப்பட்டு இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அமைச்சுப் பதவி பெறவேண்டிய நிர்பந்தத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இங்கே ராஜதுரை சுத்தமானவர் என்று நியாயப்படுத்துவதோ அல்லது அவர் துரோகம் இழைத்தவர் என்று நிறுவுவதோ இங்கே நோக்கமல்ல.
பதில்: வி.புலிகள் ததேகூ உருவாக்கினார்கள் என்பது அப்பட்டமான பொய். இந்தக் கோபெலஸ் பொய் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது. வி.புலிகள் செய்யாததை செய்ததாகச் சொல்வது அந்த அமைப்பை கொச்சைப்படுத்துவதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001 அக்டோபரில் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரு பொதுக் குடையின் கீழ் போட்டியிடுவதற்காக உருவாக்கப்பட்டது. 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (அ.இ.த.கா), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) ஆகிய கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ] இக்கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாததால், 2001 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மொத்தாம் 348,164 வாக்குகள் (3.89%) பெற்று நாடாளுமன்றத்தில் 225 இல் 15 இடங்களைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் வி.புலிகள் ததேகூ யை ஆதரிக்கவில்லை. அதே நேரம் தேர்தல் நடைபெறுவதைத் தடுக்கவில்லை. பார்பையாளராக இருந்து விட்டார்கள். 2002 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்தான் வி.புலிகள் ததேகூ நா.உறுப்பினர்களை வன்னிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். 2004 இல் வி.புலிகள் ததேகூ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டு வந்து விட்டார்கள். இதுதான் வரலாறு.
ஆனால் த.தே.கூ உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்தது. புலிகளின் “விடுதலைப் போராட்டத்தை” அங்கீகரித்து, அவர்களே இலங்கைத் தமிழரின் ஏகோபித்த பிரதிநிதிகள் என அறிவித்தது. இது அக்கூட்டமைப்புக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தியது. வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் சிலர் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால், 2004 தேர்தலில் தமது சின்னத்தைப் பயன்படுத்த ஆனந்தசங்கரி நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு பெற்றார். இதனால், கூட்டமைப்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை மீளக் கொண்டு வந்தார்கள்.[17] 2004 தேர்தலில், கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டது. தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கஜேந்திரகுமார் கேட்டபோது அதனை வி. புலிகள் புறம்தள்ளினார்கள்.
ஒழுக்கக் கேடுகள்
மாறாக அன்றைய காலச் சூழலில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளை அல்லது தனிநபர் ஒழுக்க கேடுகளை மிகச் சரியாக கையாளாமல், சரியான நேரத்தில் சரியானதும் பொருத்தமானதுமான முடிவுகளை எடுக்காததன் விளைவே இத்தகைய சீரழிவுக்கு காரணமாக அமைந்தது. அதேபோல விடுதலைக் கூட்டணி சரியான அரசியல் முடிவுகளை எடுக்காமல் தமிழ் மக்களுக்கு விரோதமான தமிழ் மக்கள் விரும்பத்தகாத மாவட்ட அபிவிருத்தி சபை தீர்வுக்கு சென்றமை மூலம் அமிர்தலிங்கத்திற்கு எதிரான குரல்கள் யாழ்ப்பாணத்தில் ஓங்கி ஒலிக்க தொடங்கியது.
யாழ். பல்கலைச் சமூகமும் எதிர்நிலை முன்னெடுத்ததன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி அதிவேகமாக தமிழ் மக்களிடமிருந்து ஆதரவை இழந்தது.
அதேபோலத்தான் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 22 ஆசனங்களை கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2010இல் 15ஆக குறைந்து 2020இல் 13 ஆகிய இன்று தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் பத்து ஆசனங்களை மாத்திரமே கொண்டுள்ளன. இத்தகைய வீழ்ச்சிக்கு காரணங்கள் என்ன? அதனை தமிழ் அரசியல் தலைமைகள் சரியாக கையாண்டனவா? என்பதுவே முக்கியமானது.
2009க்கு பின்னர் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களை அரசியல் ரீதியாக தோற்கடிப்பதற்கு சிங்கள பேரினவாதம் தமிழ் அரசியல் கட்சிகளை உடைப்பதற்கான சதி வேலைகளை செய்தது. அந்த சதி வேலைகளில் ஒரு பகுதிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அரசின் முகவர்கள் பலர் உள்நுழைக்கப்பட்டார்கள்.
அவ்வாறு உள்நுழைந்த சிங்கள அரசின் கையாட்கள் கூட்டமைப்புக்குள் இருந்த தமிழ் தேசியம் பேசுகின்ற பலரையும் வெளியேற்றுவதற்கான வேலி வெட்டி, வாய்க்கால் வெட்டி, பொறி கிடங்கு வெட்டி சதி வேலைகளில் ஈடுபட்டார்கள். அதனால் கூட்டமைப்பிலிருந்து தமிழ் காங்கிரஸ் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய தளத்தில் நின்ற பலரும் வெளியேறினார்.
இறுதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து தமிழரசு கட்சி தனியாகவும் ஏனையவை தனித்தனியாகவும் பிரிந்து போயினர். பிரிந்தவர்களும் பின்னர் பல துண்டுகளாக சிதறுண்டு போயினர்.
பதில்: இனச் சிக்கலுக்கு மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை தீர்வாக தவிகூ ஏற்றுக் கொண்டதன் மூலம் அமிர்தலிங்கத்திற்கு எதிரான குரல்கள் யாழ்ப்பாணத்தில் ஓங்கி ஒலிக்க தொடங்கியது என்பது உண்மையே. ஏற்கனவே கூறியவாறு 2004 இல் நடந்த தேர்தல் முறையாக நடந்த தேர்தல் இல்லை. அதன் காரணமாகத்தான் இருக்கைகளின் எண்ணிக்கை 22 இல் இருந்து 15 ஆகக் குறைந்தது. 2009 க்குப் பின்னர் “அந்த சதி வேலைகளில் ஒரு பகுதிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அரசின் முகவர்கள் பலர் உள்நுழைக்கப்பட்டார்கள்” என்பதில் உண்மையில்லை. புதிதாக சிறிதரனும் சுமந்திரனும் உள்வாங்கப்பட்டார்கள். அவர்கள் அரசின் முகவர்கள் அல்லர்.
பொதுவேட்பாளர்
தற்போது தமிழரசு கட்சிக்குள்ளே இருக்கின்ற தமிழ் தேசியம் பேசுபவர்களும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து செயல்பட வல்லவர்களையும் தமிழரசு கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய விருப்பினை, தேசிய அபிலாசைகளை நிறைவு செய்வதற்கான பயணப் பாதையில் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தமிழ் புத்திஜீவிகளும், அரசியல் அறிஞர்களும், சிவில் சமூகங்களும் எடுத்த முடிவுக்கு பொது வேட்பாளராக அரியநேத்திரன் தமிழரசு கட்சியிலிருந்து தேர்தலில் போட்டியிட்டார்.
தமிழரசு கட்சியின் பல முக்கியஸ்தர்களும் பொது வேட்பாளருக்கு ஆதரவாக களத்தில் இறங்கி செயல்பட்டனர். இப்போது அவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கும், அரசியலில் இருந்து ஒதுக்குவதற்கும் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பெயரில் சதி வேலைகள் சுமந்திரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
இந்த சதி நடவடிக்கையில் சுமந்திரனுடன் கட்சியின் பதில் செயலாளராக கடமை ஆற்றுகிற சத்தியலிங்கம் பதில் தலைவராக கடமையாற்றும் சி வி கே சிவஞானமும் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இந்த அணியினரே தற்போது தமிழரசு கட்சியின் மத்திய குழுவையும் தமது கட்டுப்பாட்டுங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
சிங்கள தேசத்தின் உளவாளிகளாக தொழிற்படும் புல்லுருவிகள் தமது அரசியல் நாசகார சதி வேலைகளில் கணிசமான முன்னோறியது மாத்திரமன்றி தமிழரசு கட்சியை தனது கட்டுப்பாட்டுங்கள் கொண்டு வருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து தற்போது வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதற்கு நல்ல உதாரணம் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கட்சியின் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னம் அவரை தலைவர் பொறுப்பை ஏற்க விடாமல் அதனை தடுப்பதற்கான வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதை நிலுவையில் நிறுத்திவிட்டார்கள். கட்சியின் தலைவர் தேர்தல் முறையற்ற தேர்தல் என்று கூறும் அளவிற்கு சென்றிருக்கிறார்கள்.
இப்போது அதையும் கடந்து நாடாளுமன்றத்தில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசாரணையை செய்ய வேண்டுமென விண்ணப்பித்து நிற்க வேண்டிய ஒரு துப்பாக்கிய நிலையில் சிறிதரன் இருப்பதை பார்க்கின்ற போது தமிழ் தேசியத்தை தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கின்ற நாசகாரிகள் கை ஓங்கியிருப்பதை உணர முடிகிறது.
இங்கே தமிழரசு கட்சிக்கு தலைமை தாங்கிய சம்மந்தன், சேனாதிராஜா ஆகிய இரண்டு தலைவர்களும் சரியான நேரத்தில் சரியான முடிவை கடந்த காலத்தில் எடுத்திருந்தால் இந்தப் புல்லுருவிகள் இன்று தான்தோன்றித்தனமாக அரசியல் அடாவடித்தனங்களில் ஈடுபட்டு தமிழரசுக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் வெளியேறி இருக்க மாட்டார்கள்.
பதில்: “அரியநேத்திரன் தமிழரசு கட்சியிலிருந்து தேர்தலில் போட்டியிட்டார்” என்பது பச்சைப் பொய். ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால் அது உண்மையாகிவிட முடியாது. அரியநேத்திரன் இதஅக க்கு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி – கட்சிக் கட்டுப்பாட்டைத் துச்சமாக மதித்து – பொது வேட்பாளராகப் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தார். தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்பதுதான் இதஅக தொடங்கிய கால முதல் தனது வேட்கைகளாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வேட்கைகளுக்காக 1956 ஆண்டு தொடக்கம் பெரும்பான்மை தமிழ் மக்கள் ஆதரவாக வாக்களித்து வருகிறார்கள்.
“தமிழ் புத்திஜீவிகளும், அரசியல் அறிஞர்களும், சிவில் சமூகங்களும் எடுத்த முடிவுக்கு பொது வேட்பாளராக அரியநேத்திரன் தமிழரசு கட்சியிலிருந்து தேர்தலில் போட்டியிட்டார்” என்பது ஏற்கனவே சொன்னது போல கலப்படமற்ற பொய். சரி போகட்டும். “தமிழ்த் தேசத்தின் திரட்சியை” எண்பிக்க வெளிக்கிட்ட கட்சிகளும் குடிசார் அமைப்புக்களும் சாதித்தது என்ன? அரியநேத்திரன் வட கிழக்கில் 218,479 (14.03 விழுக்காடு வாக்குகளை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார். குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொண்டார். தனது சொந்த மாவட்டம் மட்டக்களப்பு உட்பட கிழக்கு மாகாணத்தில் 4 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அதனை கீழ்க்கண்ட அட்டவணை 1 காட்டுகிறது.
அட்டவணை 1

அதே சமயம் இதஅக ஆதரித்த சஜித் பிரேமதாச வட கிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் முதல் இடத்துக்கு வந்து 676, 681 (43.09 விழுக்காடு) பெற்றார். அது மட்டுமல்ல தென்னிலங்கைக் கட்சிகளான தேசிய மக்கள் சக்தி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் விக்கிரமசிங்க இருவரும் தமிழ்பொது வேட்பாளரைவிட 383,116 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார்கள்.இதைவிட வெட்கக்கேடு வேறு இருக்கிறதா? அரியநேத்திரனுக்கு 218,479 வாக்குகள் கிடைத்தது என்று ஆர்ப்பரிப்பது அரசியல் நாணயமா?
அட்டவணை 2

கட்சிக்குள்ளான முரண்பாடுகள்
இப்போது எஞ்சி இருப்பவர்களையும் வெளியேற்றுவதற்கான அனைத்து சதிகளும் அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. இது ஆபத்தான ஒரு போக்கு. எனவே இத்தகைய நடைமுறை தொடர்ந்தும் இடம் பெறுவதை தமிழ் மக்கள் வேடிக்கை பார்த்திருக்கக் கூடாது.
தமிழ் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தமது பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பது என்பது இவர்களைப் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பதற்கு அல்ல. தமிழ் மக்கள் ஒருவரை வாக்களிக்கிறார் என்றால் அது தமிழ் மக்களுடைய விடுதலை சார்ந்தும், தமிழ் மக்களுடைய உரிமை சார்ந்தும் தமிழ் மக்களுக்காக போராடுவதற்கு அவர்களுக்கு ஒரு அனுமதி பத்திரத்தை வழங்குவதாகவே அமைகிறது.
ஆனால் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுடைய நலன் சார்ந்த, தமிழ் மக்களுடைய உரிமை சார்ந்த பேசாமல் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள், வசதி வாய்ப்புகளை கோரியே அதிகம் பேசி இருக்கிறார்கள்.
இதன் விளைவு காலத்துக்கு காலம் ஒருவர் தவறிழைத்தார் என்று இன்னொருவரை தெரிவு செய்வதன் மூலம் தமிழர் தரப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைப் பெற்றவர்கள் தமிழர் தரப்பில் புதிய பணக்காரர்களாக உருவெடுத்தமைதான் நடந்தேறியுள்ளது. இதன் விளைவுகள்தான் தமிழர் தாயகத்தில் நாடாளுமன்ற ஆசனத்தை குறிவைத்து எண்ணற்ற சுயேட்சை குழுக்கள் தோற்றம் பெற்று இருக்கின்றன. இவையும் தமிழ்த் தேசியத்தை சிதைப்பதிலும், உடைப்பதிலும் இப்போது முனைப்பு காட்டுகின்றன.
தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கேட்டும், தமிழ் மக்களுக்கு நீதி கேட்டும், தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை கேட்டும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய நேரத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தன்னை பாதுகாப்பதற்கு சிங்கள நாடாளுமன்றத்திடம் விசாரணை நடத்தக் கோரும் அளவிற்கு தமிழ் கட்சிகளுக்குள் இருக்கிற முரண்பாடுகள் முற்றி நாடாளுமன்றம் வரை சென்று விட்டது.
இச்சூழமைவில் தமிழரசு கட்சியின் உண்மையான விசுவாசிகளும், தமிழ் தேசியத்தை தம்முயிராக போற்றும் தமிழ் மக்களும், புத்திஜீவிகளும், சிவில் சமூகங்களும் பொறுமை காக்காமல் தமிழ்த் தேசியத்தை மீள நிலைநாட்டுவதற்கு கட்சிகளையும், மக்களையும் ஒன்று திரட்டி ஒரு குடைக்கீழ் அணி சேர்ப்பதன் மூலமே தமிழ் கட்சிகளுக்குள் ஊடுருவியிருக்கும் புல்லுரிவுகளை வெளியேற்றி துரத்தியடித்து தமிழ்த் தேசியக் கட்டுமானத்தை புணர் நிர்மாணம் செய்ய முடியும். அதுவே இன்றைய காலத்தின் உடனடித் தேவையும் ஆகும்.
பதில்: ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. இதஅக ஒரு சனநாகக் கட்சி. கட்சி முடிவுகள் நீண்ட கலந்துரையாடலுக்குப் பின்னரே எடுக்கப்படுகிறது. அப்படி எடுக்கும் முடிவுகளை விமர்ச்சிப்பது உள்நோக்கம் கொண்டது. இருந்தும் “தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கேட்டும், தமிழ் மக்களுக்கு நீதி கேட்டும், தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை கேட்டும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய நேரத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தன்னை பாதுகாப்பதற்கு சிங்கள நாடாளுமன்றத்திடம் விசாரணை நடத்தக் கோரும் அளவிற்கு தமிழ் கட்சிகளுக்குள் இருக்கிற முரண்பாடுகள் முற்றி நாடாளுமன்றம் வரை சென்று விட்டது” என்பது சரியே. இது தொடர்பாக கட்சி சிறிதரன் மீது காட்டமான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன். சிறிதரனுக்கு என்ன பேச வேண்டும் எங்கே பேச வேண்டும் என்பது தெரியுதில்லை. இதஅக பொறுத்தளவில் இப்போது சிறிதரன் தொண்டைக்குள் சிக்கிய முள்!
Leave a Reply
You must be logged in to post a comment.