
சனவரி 30, 2025
இரங்கல் அறிக்கை
மாவை சேனாதிராசா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பம், உற்றார், உறவினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
உலகமே ஒரு நாடக மேடை எல்லா ஆண்களும் பெண்களும் அதில் வெறும் நடிகர்கள். காட்சிகளில் தோன்றி மறைகின்றவர்கள். இலங்கைத் தமிழர்களின் அரசியல் அரங்கில் 6 தசாப்தங்களுக்கு மேலாக வலம் வந்த ஒரு தலைவன் இன்றில்லை. எல்லோராலும் மாவை அண்ணர் என்று அன்போடு அழைக்கப்பட்ட சோமசுந்தரம் சேனாதிராசா அவர்கள் இயற்கை எய்தி விட்டார்.
தனது 19 ஆவது அகவையில் தந்தை செல்வநாயகம் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1961 இல் நடத்திய மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார். அன்று தொடங்கிய அவரது அரசியல் பயணம் அவர் கண் மூடும் வரை தொடர்ந்தது.
ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஐந்து முறை (2000 – 2015) நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு மொத்தம் 31 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகப் பணியாற்றியவர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக 10 ஆண்டுகள் அதன் தலைவராக 10 ஆண்டுகள் இருந்திருக்கிறார்.
மாவை சேனாதிராசா கனடாவுக்குப் பலமுறை வந்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதம் வட அமெரிக்காவுக்கு செலவு செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவில் இருந்தவர். அங்கு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சின் துணைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளோடு நடந்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு வருகை தந்தார். அவரோடு வருகை தந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நா.உறுப்பினர் ஆ. சுமந்திரன் ஆகிரோருக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கனடா ஐய்யப்பன் கோவில் மண்டபத்தில் ஒழுங்கு செய்த பொதுக் கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து நடந்த இரவு விருந்திலும் கலந்து கொண்டார்.
2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் கனடியத் தமிழர் பேரவை நடாத்திய நடைப்பயணத்திலும் அதனைத் தொடர்ந்து நடந்த தமிழ்த் தெருவிழாவிலும் விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல் நலம் குன்றிக் காணப்பட்டாலும் அரசியலில் இருந்து ஓய்வு பெற அவர் விரும்பவில்லை. இன்று இயற்கை அவருக்கு நிரந்தர ஓய்வை அளித்துள்ளது.
நமது தாயக மக்கள் பொருளாதார மற்றும் சமூகச் சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். இதில் காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் போனோர்,
அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், போதை மருந்துப் பாவனை, வழிபாட்டுச் சுதந்திரம், பொருளாதார நலிவு போன்றவை உள்ளடங்கும். இவற்றுக்குத் தீர்வு காணத் தொடர்ந்து போராடுவதே அவருக்கு நாம் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்.
அமரர் மாவை சேனாதிராசாஅவர்களை இழந்து வாடும் அவரது குடும்பம், உற்றார், உறவினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கனடா தேசியக் கூட்டமைப்பு
Leave a Reply
You must be logged in to post a comment.