
சனவரி 25, 2025
மீனா இளஞ்செழியன்
தலைவர்
ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக் குழு
அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
அன்புடையீர்
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அதன் திசை திருத்த ஒரு அவசர வேண்டுகோள்! – ஒரு எதிர்வினை
“இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அதன் திசை திருத்த ஒரு அவசர வேண்டுகோள்!” என்று தலைப்பிட்டு சனவரி 17 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழு குழு உறுப்பினர்களுக்கு நீங்கள் எழுதிய நீண்ட கடிதம் எமது பார்வைக்குக் கிடைத்தது. இது தொடர்பாக கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உங்களுக்குப் பதிலளிக்க விரும்புகிறது.
(1)ஈழத் தீவில், ஈழத் தமிழர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப் பெரிய முக்கியமான அரசியல் கட்சியாக இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி (இ.த.அ.கட்சி) நமது மக்களின் அரசியல் சுதந்திரத்தையும் விடுதலையையும், உரிமையையும் நோக்கி வழிநடத்தும் பொறுப்பு வாய்ந்த நிலைப்பாட்டில் இன்று உள்ளது. ஆனால் கட்சியின் சமீபத்திய முடிவுகளும் திசைகளும் எங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் உணர்ச்சிகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்க வேண்டிய இ.த.அ.கட்சி, சர்வதேச மேடையில் நமது பிரச்சனைகளை எடுத்துச்செல்லுவதற்கான முக்கிய வாய்ப்புகளை தவறவிட்டதோடு மட்டுமன்றி, நமது மக்களின் உண்மையான விருப்பங்களையும் அபிலாசைகளையும் பிரதிநிதித்துவப்படுத்த முயன்றவர்களைக் கூட தண்டித்ததாகவே தோன்றுகிறது.
பதில்: உங்களது அமைப்புப் பற்றி இப்போதுதான் நாம் கேள்விப்படுகிறோம். ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு என்ற நீண்ட பெயரை வைத்திருக்கும் நீங்கள் யார், யாரை சார்பு படுத்துகிறீர்கள் என்பது தெரியவில்லை. அமெரிக்காவில் தமிழ்நாட்டுத் தமிழர்கள்தான் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். எது எப்படியிருப்பினும் ஈழத்தமிழர் சிக்கல்கள் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் கரிசனையை வரவேற்கிறோம். உங்களுடைய அதரவு எங்களுக்குத் தேவை.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 75 ஆண்டுகால வரலாறு உண்டு. டிசெம்பர் 18, 1949 இல் இதஅ கட்சி மறைந்த தந்தை எஸ்ஜேவி செல்வநாயகம் அவர்களால் தொடக்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டதற்கு முக்கிய காரணம் பத்து இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிக்கப்பட்டதே. இந்த வரலாறு உங்களுக்குத் தெரியும் என நம்புகிறோம். அன்று முதல் இன்றுவரை பெரும்பான்மை ஈழத்தமிழர்களை இதஅக சார்பு படுத்தி வருகிறது. அதனை நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள்.
“தமிழர்களின் உணர்ச்சிகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்க வேண்டிய இ.த.அ.கட்சி, சர்வதேச மேடையில் நமது பிரச்சனைகளை எடுத்துச்செல்லுவதற்கான முக்கிய வாய்ப்புகளை தவறவிட்டதோடு மட்டுமன்றி……….” எனக் குற்றம் சாட்டுகிறீர்கள். இந்தக் குற்றச்சாட்டில் பொருள் இல்லை. ஈழத்தமிழரது சிக்கலை நீங்கள் குறிப்பிடும் “சர்வதேச மேடையில்” எடுத்து வைத்தது இதஅக தான். இன்றல்ல 2012 தொடக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எமது சிக்கல்கள் இன்றுவரை பேசுபொருளாக வைத்திருப்பது இதஅக தான். 2011 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதக் கடைசியில் இதஅக இன் தூதுக்குழு அமெரிக்க இராசாங்க அமைச்சு அதிகாரிகள், அதன் துண செயலாளர் போன்றவர்களோடு நடத்திய பேச்சு வார்த்தைகளின் விளைவாகத்தான் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஐநாமஉபேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேறியது. அதன் பின் இன்றுவரை பல தீர்மானங்கள் “அதிகாரப்பரவலாக்கல், மனித உரிமைகளின் பாதுகாப்பு, மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை “மீளாய்வு” செய்தல், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மத சுதந்திரத்தினை மதித்தல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களைப் பாதுகாத்தல், போர்க்குற்ங்கள் தொடர்பாக விசாரணை, குடிசார் அரசாங்கம் இராணுவமயமாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” தொடர்பாக ஐநாமஉ பேரவை பல தீர்மானங்களை நிறைவேற்றிவருகின்றது. உண்மை இப்படியிருக்க “சர்வதேச மேடையில் நமது பிரச்சனைகளை எடுத்துச்செல்லுவதற்கான முக்கிய வாய்ப்புகளை தவறவிட்டதாக” எப்படி நீங்கள் குற்றம் சாட்டமுடியும்? ஒன்றில் உங்களுக்கு வரலாறு தெரியவில்லை. அல்லது தெரிந்தும் வேறு உள்நோக்கோடு பொய் சொல்கிறீர்கள்.
“நமது மக்களின் உண்மையான விருப்பங்களையும் அபிலாசைகளையும் பிரதிநிதித்துவப்படுத்த முயன்றவர்களைக் கூட தண்டித்ததாகவே தோன்றுகிறது” என்பது எந்த அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டு. அதனை எமது மக்கள் எண்பித்துள்ளார்கள். எமது மக்களின் தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு தமிழ்ப் பொதுவேட்பாளரை தேர்தலில் நிறுத்தி மூக்குடைபட்டவர்களைத் தாங்கிப் பிடிக்கிறீர்கள்? நீங்கள் யாரின் தூண்டுதலில் இந்தக் குற்றச்சாட்டை வீசுகிறீர்கள்?
சனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் படுதோல்வி அடைந்துள்ளதை மக்கள் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. தமிழர்தாயகம், தமிழ்த் தேசியம், தமிழ் மக்களது தன்னாட்சியுரிமை இந்த மூன்றையும் இதஅக கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக இதஅக வலியுறுத்தி வருகிறது. அதனை மீண்டும் “சர்வதேசத்துக்கு” எண்பிக்க நினைப்பது விடப் பரீட்சை, அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது என இதஅக சொன்னது. அது சரியென்பது தேர்தல் முடிவுகள் எண்பித்தது.
இது தொடர்பான உண்மைத் தரவுகளை https://nakkeran.com/…/duty-dignity-and-discipline…/ என்ற இணையதளத்தில் பதிவைப் படித்து அறியவும்.
(2) 2024, செப்டம்பர் 21-ஆம் தேதியன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்களின் ஒரு பகுதி இணைந்து ஈழத் தமிழர் அபிலாசைகளையும், விருப்பங்களையும் உலகிற்கு காட்ட ஒரு பொதுத் தமிழ் வேட்பாளராக கௌரவ அரியநேத்திரனை நிறுத்தினர். அவர் 226,343 வாக்குகளைப் பெற்று ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தினார். அதன் பின் 2024, நவம்பர் 14-ஆம் தேதியன்று நடைபெற்ற சிறீலங்கா பாராளுமன்றத் தேர்தலில் இ.த.அ.கட்சி 257,813 வாக்குகளைப் பெற்று 8 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கையகப்படுத்தியது. இரு தேர்தல்களிலும் தமிழ்மக்கள் சார்பாக இருபகுதிகளுக்கும் கிடைத்த வாக்குகள் ஏறத்தாழ சமனாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த முடிவுகள் நமது தமிழ் மக்களின் அரசியல் தீர்மானத்தையும் வலிமையையும் பிரதிபலிக்கின்றன.
பதில்: நீங்கள் கணக்கில் சக்கட்டை போல் தெரிகிறது. நீங்கள் குறிப்பிடும் அரியநேத்திரன் வட கிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தில் 2 ஆம் இடத்திலும், இன்னொரு மாவட்டத்தில் 3 ஆம் இடத்திலும் எஞ்சிய 3 மாவட்டங்களிலும் 4 ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டார். அவருக்கு விழுந்த வாக்கு விழுக்காடு 21.54 மட்டுமே! முழு இலங்கை அளவில் விழுந்த வாக்குகள் 1.70 விழுக்காடு.
(3) ஆனால் அப்படியிருந்தும், ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை பூரணமாக பிரதிநிதிப்படுத்தும் கௌரவ அரியநேத்திரன் அவர்களை இ.த.அ.கட்சியிலிருந்து நீக்கியிருப்பது குறித்து நாம் அறிந்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களால் அவருக்கு வழங்கப்பட்ட ஆணையையும் அங்கீகாரத்தையும் கருத்தில் கொண்டு, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பதில்: “ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை பூரணமாக பிரதிநிதிப்படுத்தும் கௌரவ அரியநேத்திரன்” என்பது நல்ல பகிடி. தனது சொந்த மாவட்டத்தில் 4 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டவர் “ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை பூரணமாக பிரதிநிதிப்படுத்தும்” பேர்வழியா?
(4) இப்போது இ.த.அ.கட்சிக்குள் இருக்கும் சில தமிழ்த் தேசிய விரோத சக்திகளின் செயல்பாடுகள் எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. இந்த சக்திகளின் செயற்பாடுகள், எமது மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக இருப்பது மட்டுமன்றி, எமது மக்களை சிங்களவர்களின் ஆதிக்கத்தின் கீழ் நிரந்தரமாக அடக்குவதற்கும் பங்களிக்கின்றது.
பதில்: நீங்கள் யாரோ ஒருவர் அல்லது சிலரது வெற்றுக் கூக்குரலை வாந்தி எடுத்துள்ளீர்கள். கட்சிக்குள் இருப்பவர்கள் தமிழ்த் தேசிய விரோதிகளா அல்லவா என்பதை கட்சிதான் முடிவெடுக்கும். எமது மக்களது அபிலாசைகள் எது என்பது எமக்கும் தெரியும். அதனை நீங்கள் தீர்மானிக்க முடியாது. அப்படிச் செய்வது போப்பாண்டவரை விட நான் சிறந்த கிறித்தவன் என்று சொன்னவன் கதை போன்றது.
(5) கடந்த தேர்தல்களில் எமது மக்களின் தீர்ப்பை இ.த.அ.கட்சி மதிக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். எமது மக்களின் ஆணையையும் அங்கீகாரத்தையும் பெற்றவர்களை நீக்குவதும், எமது மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர்களுக்கு புதிய பதவிகளை உருவாக்கி வழங்குவதும், எம்மால் பெரிதும் மதிக்கப்படுகின்ற கட்சியின் எதிர்காலத்திற்கும், எமது மக்களின் எதிர்காலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் இம் முடிவுகளை மீள்பரிசோதனை செய்யுமாறு தயவாக வேண்டுகின்றோம்.
பதில்: மேலே உள்ள கேள்வி 4 க்கு எழுதியுள்ள பதிலைப் படிக்கவும். எமது மக்கள் இதஅக க்கு மொத்தம் 2,57,813 வாக்குகளை அளித்துள்ளார்கள். நாடாளுமன்றத்தில் 8 இருக்கைகளுடன் 3 ஆவது பெரிய கட்சியாக விளங்குகிறது. நீங்கள் “எமது மக்களின் தீர்ப்பை இ.த.அ.கட்சி மதிக்க வேண்டும்” என்கிறீர்கள். மாறாக நீங்கள்தான் மக்களின் தீர்ப்பை ஏற்க அல்லது ஒத்துக்கொள்ள மறுக்கிறீர்கள். இது அப்பட்டமான சனநாயக மறுப்பாகும்.
(6) கட்சியினதும் மக்களினதும் எதிர்காலம் கருதி, இ.த.அ.கட்சியின் உறுப்பினர்கள் துரித நடவடிக்கை எடுத்து, கட்சியியை சரியான திசையில் திருப்ப வேண்டும் என நாம் விரும்புகிறோம். இ.த.அ.கட்சி சிங்கள ஆதிக்கத் தூதர்களின் பிரதிநிதித்துவமாக இல்லாது, வடக்கு-கிழக்கு ஈழத்தமிழர்களின் உண்மையான பிரதிநிதித்துவமாக மாற வேண்டும். மேலும், கட்சி புதிய அறிவாற்றல் கொண்ட உறுப்பினர்களை வரவேற்று, கட்சியின் திசை, பாதை, இலட்சியம் என்பன மீளாய்வு செய்யப்பட்டு, சீர்திருத்தி செயல்பட வேண்டும் என நாம் விரும்புகிறோம்.
பதில்: இதஅக சரியான பாதையில் செல்கிறது. உங்களுக்குத்தான் மாலைக் கண், யதார்த்தைப் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். மற்றவர்களது ஏவல் பிசாசு போல் நடந்து கொள்கிறீர்கள். இதஅக ஒரு சனநாயக அமைப்பு. பொதுச் சபை, மத்திய குழு, அரசியல் குழு எனப் பல குழுக்கள் உண்டு. முடிவுகள் பேசி, ஆராய்ந்து கிட்டத்தட்ட ஒருமனதாக எடுக்கப்படுகின்றன. அதில் இருப்பவர்களை நீங்கள் கொச்சைப்படுத்த நினைக்கிறீர்கள். இது உங்களுக்கு வேண்டாத திருப்பணி.
(7) 1619 இல் ஐரோப்பிய படையெடுப்புகள் தொடங்கியதிலிருந்து கடந்த 405 ஆண்டுகளாகவும், அத்துடன், கடந்த 76 ஆண்டுகளாக சிங்களவர்களின் அடக்குமுறை அதிகார ஆட்சியின் கீழும், தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்களின் தாயகத்தில் அந்நியர்களால், ஈழத்தமிழர்கள் இரண்டாம் மூன்றாம்தர பிரசைகளாக்கப்பட்டு, அவர்களின் தாயக பண்பாட்டு நினைவாலயங்கள் அழிக்கப்பட்டு அவர்கள் துன்புறுத்தப்பட்டு, ஒரு இனஅழிப்பின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். தீவு முழுவதையும் சிங்கள பௌத்த தீவாக மாற்றும் முயற்சியில் சிங்களத் தேசம் இடைவிடாது ஓய்வின்றி உழைத்துவருகின்றது. அதனை நிறுத்தத் தவறுவோமாயின், எமது தாயகம் எம்மிடம் இருந்து பறிபோவது நிச்சயமாகி வருகின்றது! இவ்விதமான அபாயகர அழிவைநோக்கி இருக்கும் நிலையில் உள்ள தமிழ் தேசத்தை சரியாக வழிநடத்தும் பாரிய பொறுப்பை இ.த.அ.கட்சி கொண்டுள்ளது. எம்மை அடக்கி ஒடுக்கி அழித்துக் கொண்டிருக்கும் சிங்களத் தேசத்திடமிருந்து நீதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வீணானது என்று நாங்கள் நம்புகிறோம்.
பதில்: அடுத்த முறை எழுதும் போது வரலாற்றைப் படித்துவிட்டு எழுதவும். 1619 இல் ஐரோப்பிய படையெடுப்புகள் தொடங்கவில்லை. அதற்கு முன்னரே தொடங்கிவிட்டது. 1619 இல் யாழ்ப்பாண இராச்சியம் தனது இறைமையைப் போர்க்களத்தில் இழந்தது. இழந்த இறைமையை மீட்க இதஅக அறவழியில் பல போராட்டங்களை நடத்தி வருகிறது. “தீவு முழுவதையும் சிங்கள பௌத்த தீவாக மாற்றும் முயற்சியில் சிங்களத் தேசம் இடைவிடாது ஓய்வின்றி உழைத்துவருகின்றது” என்பது உண்மைதான். காரணம் இலங்கையின் ஆட்சி அதிகாரம் 75 விழுக்காடு கொண்ட சிங்களப் பெரும்பான்மையினரின் கையில் இருக்கிறது. எனவே சிங்கள அரசை எதிர்த்து 11 விழுக்காடு தமிழ்மக்கள் போராடுவது என்பது எளிதான காரியம் அல்ல. மேலும் தமிழ்மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து கொண்டு போகிறது. இலட்சக் கணக்கில் தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள். இப்போதும் புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் இரண்டில் தமிழர்கள் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஒன்றில் மட்டும் முதலிடம். இருந்த போதும் தமிழ்மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இலங்கையில் இனச் சிக்கல் ஒன்று இருக்கிறது என்பதை இப்போது ஏறக்குறைய எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். “எம்மை அடக்கி ஒடுக்கி அழித்துக் கொண்டிருக்கும் சிங்களத் தேசத்திடமிருந்து நீதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வீணானது என்று நாங்கள் நம்புகிறோம்” என்பது சரிதான். அதற்காக கையைக் கட்டிக் கொண்டு உடம்பைப் போர்த்தி மூடிக் கொண்டு கட்டிலில் படுத்து உறங்க முடியுமா? தமிழ்மக்களுக்குரிய தீர்வை அறவழியில் பெரும்பான்மை சிங்களத் தலைவர்களோடு பேசித்தான் பெறவேண்டும். அதுதான் யதார்த்தம். வேறு வழியிருந்தால் சொல்லுங்கள்!
(8) இன்று, எமது ஈழப்போருடன் சம்பந்தப்பட்ட தமிழின அழிப்புக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்ற பிரச்சினை, சர்வதேச அரங்கில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் முன்னுள்ளது. அத்துடன், சர்வதேச சட்டம், விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளின் பிரகாரம், ஈழத் தமிழர்கள் காலனித்துவ-நீக்கம், சுயநிர்ணயம் மற்றும் பூரண சுதந்திரம் ஆகியவற்றுக்கு உரித்துடையவர்கள். அரசியல் தீர்வை நோக்கிய எமது மூலோபாயம் இவற்றை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்பதை இ.த.அ.கட்சி உறுதி செய்ய வேண்டும்.
பதில்: தொடக்கத்தில் “சர்வதேச மேடையில் நமது பிரச்சனைகளை எடுத்துச்செல்லுவதற்கான முக்கிய வாய்ப்புகளை (இதஅக) தவறவிட்டு விட்டது என்று எழுதிவிட்டு இப்போது “சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன்தான் தமிழர்களுக்கு நீதியும் நியாயமுமான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்” என்கிறீர்கள். இது முன்னுக்குப் பின் முரணானது.
(9)தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு எமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிப்பதனூடாக எட்டப்படும் தீர்வே நிரந்தரமாக அமையும். அதன் ஒரு பொறிமுறையாக, தமிழ் மக்களிடையே சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் ஒரு சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பினூடாகவேதான் ஓர் நிரந்தர அரசியல் தீர்வினை அடையமுடியும் என்பதை நாம் திடமாக நம்புகின்றோம். உலகெங்கிலும் உள்ள பல மோதல்கள் சர்வதேசத்தினால் நடாத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.
எனவே, இ.த.அ.கட்சி, நமது பிரச்சனையை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கும், சர்வதேச சமுதாயத்தை விழிப்புணர்வு செய்வதற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இ.த.அ.கட்சி இந்த உரிமைகளுக்காக முழு அளவில் ஆதரவு வழங்கி, அமைதியான, ஜனநாயகமான, சட்ட பூர்வமான சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பு உட்பட நமது மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ.த.அ.கட்சி தனது கடந்த கால நடவடிக்கைகளை மறுமதிப்பீடு செய்வதற்கும், அதன் போக்கை சரிசெய்வதற்கு தேவையான மாற்றங்களைச் செய்வதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எமது மக்கள் அவர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் மற்றும் பூரண சுதந்திரத்திற்கான பாதையில் அவர்களின் உரிமைகளை வெற்றிகொள்ளும் தலைமைத்துவத்திற்கு தகுதியானவர்கள்.
பதில்: இதஅக ஒரு பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற முறையில் நடவடிக்கைகள் தீர ஆராயப்பட்டே முடிவுகள் எட்டப்படுகிறது. இருந்தும் இலங்கை மீதான ஐநாமஉ பேரவையின் அதிகாரம் மட்டுப்படுத்தவை. இலங்கை ஐநா சபையின் உறுப்பு நாடு. உறுப்பினர்களின் இறையாண்மை சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் ஐநாசபை அதன் உறுப்பு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு உறுப்பு நாட்டின் நடவடிக்கைகள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் என்றால் ஐ. நா. பாதுகாப்பு சபை தலையிட முடியும். அண்மையில் ஐநாசபையின் 51-1 தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரதித்தது நினைவு இருக்கலாம்.
இதஅக யைப் பொறுத்தளவில் பிரிக்க முடியாத, பிளவு படுத்த முடியாத இலங்கைக்குள் தமிழ் மக்கள் வரலாற்று அடிப்படையில் வாழ்ந்து வரும் இணைந்த வட கிழக்கில் தங்களைத் தாங்களே ஆட்சி செய்யக் கூடிய வகையில் – தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கக் கூடிய வகையிலும் மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டு தமிழ் மக்களுக்கு இருக்கும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைப்பாட்சித் தீர்வை வழங்க வேண்டும். என்பதே இதஅக இன் தொடக்கம் தொட்டு முன் வைக்கப் படும் வேண்டுகோளாக இருதுக்கிறது.
தமிழரசுக் கட்சி சரியான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் திசைதிருப்ப வேண்டிய அவசியமில்லை. ஆனால் கட்சிக் கட்டுப்பாட்டை அப்பட்டமாக மீறியவர்கள் மீது – அரியேந்திரன் உட்பட – கட்சி நடவடிக்கை ஏற்கனவே எடுத்துள்ளது. எஞ்சியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே நீங்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.
உங்களிடம் இருந்து ஆக்க பூர்வமானெ ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. அவை சுயாதீனமாக இருக்க வேண்டும். இதஅக இன் பகைவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அவை இருக்கக் கூடாது.
மேலும் விளக்கம் தேவை என்றால் தயவு செய்து அறியத்தரவும். நன்றி.
கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
படி: பொதுச் செயலாளர், இதஅக வவுனியா
இதஅக மத்திய குழு உறுப்பினர்கள்
Leave a Reply
You must be logged in to post a comment.