குறுந்தொகை – முன்னுரை

குறுந்தொகை

Monday, April 13, 2015

தமிழ் மொழியின் தொன்மை

இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம். தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல்[1]. அந்த நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர், “என்ப”, “மொழிப”, ”கூறுப”, “என்மனார் புலவர்” என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார்.  இதிலிருந்து, தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன.

அகத்திணையும் புறத்திணையும்

பாடல்களை அகத்திணைப் பாடல்கள் புறத்திணைப் பாடல்கள்  என்று இருவகையாகத் தொல்காப்பியம் பிரிக்கிறது. திணை என்ற சொல் ‘நிலம்’, ‘இடம்’, ’குடி’, ‘ஒழுக்கம்’, ‘பொருள்’ என்ற பல பொருட்களையுடைய ஒருசொல். தமிழ் இலக்கியத்தில் திணை என்ற சொல் ‘பொருள்’ என்பதைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அகம், புறம் என்று பிரிப்பது தமிழ் இலக்கண மரபு. ஒருஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் பொழுதும், அவர்களின் திருமணத்திற்குப் பிறகும், தங்கள் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவையாகையால், அவை அகப்பொருள் எனப்படும். அகப்பொருளைப்பற்றிப் பாடும் பாடல்கள் அகத்திணையில் அடங்கும். காதலைத் தவிர வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். போர், வீரம், வெற்றி, புகழ், கொடை, நிலையாமை முதலிய பொருட்களை மையமாகக்கொண்ட பாடல்கள் புறத்திணையில் அடங்கும்.

சங்க இலக்கியம்

சங்க காலம் என்பது கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை என்பதைப் பொதுவாகப் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்கின்றனர்.[2] சங்க காலத்தில் இருந்த இலக்கியம் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால மன்னர்கள்  புலவர்களுக்கு ஆணையிட்டனர். அதற்கேற்ப, சங்க காலத்தில் இருந்த பாடல்களில் நீண்ட பாடல்களாக இருந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, புலவர்கள் பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் பத்து நூல்களாக்கினார்கள். மூன்று முதல் 140 அடிகளுடைய  பாடல்களில் சிறந்தவற்றை எட்டு நூல்களாகத் தொகுத்தார்கள். எட்டுத்தொகை என்ற சொல் இந்த எட்டு நூல்களையும் குறிக்கிறது. பத்துப்பாட்டில் அடங்கிய பத்து நூல்களும் எட்டுத்கொகையில் அடங்கிய எட்டு நூல்களும் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்கள் தொகுக்கப்பட்ட காலத்தைப் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலம் கி.பி. முதல் அல்லது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று பேராசிரியர் மு. வரதராசன்[3] குறிப்பிடுகிறார். எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு அல்லது எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஈவா வில்டன் கருதுகிறார்.[4]

பத்துப்பாட்டு

கீழ்வரும் பாடலில் பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்பாலை கடாத்தொடும் பத்து.

பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்து நூல்களும் ஆற்றுப்படை[5] என்னும் வகையைச் சார்ந்தவை. இந்த ஐந்து ஆற்றுப்படை நூல்களும் மதுரைக் காஞ்சியும் புறத்திணையைச் சார்ந்தவை. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு மற்றும் பட்டினப்பாலை ஆகியவை அகத்திணையைச் சார்ந்தவை. நெடுநல்வாடை அகத்திணையைச் சார்ந்ததா அல்லது புறத்திணையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்குரியது. பத்துப்பாட்டில் உள்ள பாடல்களுள் முல்லைப்பாட்டு 103 அடிகளை உடைய மிகச் சிறிய பாடலாகும்; மதுரைக் காஞ்சி 782 அடிகளை உடைய மிகப் பெரிய பாடலாகும்.

எட்டுத்தொகை நூல்கள்

 நற்றிணைகுறுந்தொகைஐங்குறுநூறுபதிற்றுப்பத்துபரிபாடல்கலித்தொகைஅகநானூறுபுறநானூறு ஆகிய எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்று அழைக்கப்படுகின்றன.   கீழ்வரும் பாடலில் எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம்
என்றுஇத்திறத்த எட்டுத் தொகை.

எட்டுத்தொகை நுல்களில், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்து நூல்களும் அகத்திணையைச் சார்ந்தவை. புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து ஆகிய இரண்டும் புறத்திணையைச் சார்ந்தவை. அகமும் புறமும் கலந்தது பரிபாடல்.

எட்டுத்தொகையில் அடங்கிய ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்ட செய்யுள்களின் தொகுப்பு. இத்தொகையுள் ஏறத்தாழ 2436 பாடல்களை  ஏறத்தாழ 473 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற் புலவர்களும் உள்ளனர். ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்களின் எண்ணிக்கை 102.

சங்க காலத்துக் காதல் வாழ்க்கை

சங்க காலத்துக் காதல் வாழ்க்கையைத் தொல்காப்பியம் களவு  கற்பு என்று இரண்டாகப் பிரிக்கிறது. திருமணத்திற்குமுன் ஆணும் பெண்ணும் சந்தித்துப் பழகி, காதலித்து, உள்ளம் ஒருமித்துத் தங்கள் காதல் வாழ்க்கையைத் தொடர்வது களவொழுக்கம் என்றும் திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்து இல்லறம் நடத்துவது கற்பொழுக்கம் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

களவொழுக்கம்அகத்திணை இலக்கியங்களில் காதலர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றிப் பாடும் பொழுது அவர்களின் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. அவர்கள் தலைவன் தலைவி என்றே அழைக்கப்படுகிறார்கள். தலைவனும் தலைவியும் சந்திப்பதுதான் அவர்களின் களவொழுக்கத்தின் ஆரம்பம். அவர்கள் சந்திப்பு ஊழ்வினைப் பயனால் நடைபெறுவதாகக் கருதப்பட்டது. முதன்முதலாகத் தலைவியைக் கண்டவுடன் தலைவன் அவள் அழகில் மயங்கி, அவள் மானுடப் பெண்ணா அல்லது தெய்வலோகத்துப் பெண்ணா என்று ஐயுறுவான். பின்னர், அவள் தன் கண்களை இமைப்பது, அவளுடைய கால்கள் தரையில் படிந்திருப்பது, அவள் சூடிய மாலையில் உள்ள மலர்களில் வண்டு மொய்ப்பது, அவள் கண்கள் மருட்சியால் சுழல்வது, அவள் முகத்தில் அச்சம் தோன்றுவது  போன்ற நிகழ்ச்சிகளை வைத்து அவள் மானுடப் பெண்தான் என்று தன் ஐயம் தெளிவான். அடுத்து, தலைவனும் தலைவியும் தங்கள் பார்வையைப் பறிமாறிக்கொள்வர். அவர்களின் கண்களிரண்டும் அவர்களது உள்ளன்பை வெளிப்படுத்தும். “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல (குறள் – 1100)” என்று வள்ளுவர் கூறுவது போல், அவர்கள் தங்கள் கண்பார்வையினால் ஒருவர் குறிப்பை மற்றவர்அறிந்துகொள்வார்கள். தலைவன் மனத்தால் குறித்த குறிப்பை, தலைவியின் கண்களும் கருத்தும் ஏற்றுக்கொள்ளுமாயின், அந்நிலை தொடங்கி அவர்களின் களவொழுக்கம் தொடரும். தலைவி  தன்னை விரும்புகிறாள் என்ற குறிப்பை அறிந்தவுடன் தலைவன் அவளை அணுகி, அவளோடு பேசிப்பழக விரும்புவான். இந்த முதல் சந்திப்பும் அதில்  நடைபெறுகின்ற நிகழ்வுகளும் இயற்கைப் புணர்ச்சி  என்று அழைக்கப்படுகிறது.

இயற்கைப் புணர்ச்சியின்பின் தலைவன் முன்னர்த் தான் தலைவியைக் கண்ட இடத்திற்குச் சென்று அவளோடு பேசிப் பழகுவது இடந்தலைப்பாடு என்னும் பெயர் பெறும். தலைவியை மீண்டும் சந்தித்ததால் தலைவன் மிகுந்த மகிழ்ச்சி அடைவான். அவள் தினைப்புனத்தைக் காக்கும் பொழுது அவளுடன் இருந்து கிளிகளை வெருட்டுவான்; அவளுக்கு பாவை செய்து கொடுப்பான்; அவளுக்கு மலர் சூட்டியும், தொய்யில்[6] எழுதியும் அவளோடு நெருங்கிப் பழகுவான்.

தலைவனும் தலைவியும் தங்கள்  காதலைத் தொடர்வதற்குத் தலைவியின் தோழி பலவழிகளிலும் உதவி செய்வாள். அவர்கள் பகலில் சந்திப்பதற்குப் பாதுகாவலான இடம் ஒன்றைத் தோழி தலைவனுக்கு அறிவிப்பாள். அவர்கள் பகலில் சந்திக்கும் இடத்திற்குப் பகற்குறி என்று பெயர். அவர்கள் பகலில் சந்திக்கும் இடம் பாதுகாவலானாதாக இல்லாமல் இருந்தால் அல்லது தடை ஏற்பட்டால், தோழி வேறோரு இடத்தை அறிவிப்பாள். இது பகற்குறியிடையீடு எனப்படும்.

களவொழுக்கம் நடைபெறும் காலத்தில்,  தலைவன் இரவில் கழியும் காடும் கடந்து தலைவியின் வீடு சென்று தான் வந்ததைச் சில குறிப்பினால் புலப்படுத்துவான். தலைவனும் தலைவியும் இரவில் சந்திக்கும் இடத்திற்கு இரவுக்குறி என்று பெயர். இந்த இடம் தலைவியின் வீட்டுக்கு அருகில், வேலிக்கு வெளியே இருக்கும். வீட்டிலிருந்து தலைவி அல்லது தோழி பேசினால் அவர்கள் பேச்சு தலைவனின் காதுகளில் கேட்கும் அளவுக்கு அந்த இடம் அருகில் இருக்கும். சில சமயங்களில் தலைவன் தலைவியினது வீட்டுக்கு வந்து அவள் வீட்டில் உணவின் பொருட்டுத் தங்கியிருக்கும் விருந்தினர்களுள் ஒருவனாகப் புகுந்து உணவருந்தித் தலைவியையும் கண்டு செல்வான். தலைவன் இரவில் வரும்பொழுது தேரில் வருவதும் உண்டு. அவன் தன் மார்பில் சந்தனம் பூசியும், முத்துமாலை ஆகியவற்றை அணிந்துகொண்டும் வருவான். தலைவியின்மீதுள்ள அன்பால், அவளைக்காண்பதற்கு, மிகுந்த ஆர்வத்துடன், காட்டில் உள்ள புலி, கரடி முதலிய கொடிய விலங்கினங்களுக்கும், இருளுக்கும், இடைவிடாது பெய்யும்  இடியுடன் கூடிய பெருமழைக்கும் அஞ்சாமல் தலைவன் இரவில் வருவான். தலைவன் இவ்வாறு இரவில் வரும்பொழுது, சில சமயங்களில் தலைவியைக் காண இயலாமலும் இருக்கும். அவன் வருத்தத்தோடு திரும்பிச் செல்வான். இரவுக்குறியில் தலைவியைக் காண முடியாமல் தடைப்படுவது இரவுக் குறியிடையீடு என்று அழைக்கப்படுகிறது.

களவொழுக்கம் கற்பொழுக்கத்தில் நிறைவு பெற வேண்டும் என்பதுதான் சங்க காலத்தில் தமிழர்களின் குறிக்கோளாக இருந்தது. அதனால்தான், களவொழுக்கம் இரண்டு மாதங்கள்  மட்டுமே நீடிக்க வேண்டும் என்ற ஒருமரபு இருந்ததாகத் தெரிகிறது[7]. களவொழுக்கத்தில் இருக்கும் ஆண்மகன், தன் சுற்றத்தாருடன் அவனுடைய காதலியின் வீட்டுக்குச் சென்று தலைவியின் பெற்றோர்களிடம் தலைவியைத் தனக்குத் திருமணம் செய்விக்க வேண்டுமென்று கேட்பதும், அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கித் தலைவியின் பெற்றோர்கள் அவளை அவனுக்குத் திருமணம் செய்விப்பதும் வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது.

களவொழுக்கத்தில் தலைவனும் தலைவியும் அளவளாவி வரும் காலத்தில்,  சில சமயங்களில் தலைவியைச் சந்திக்க இயலவில்லை என்றால், தலைவன் மனம் வருந்தி,  உடல் வலிமை குன்றிச் சோர்வடைவான். அவன் மனம் நொந்து உடல் சோர்வோடு இருப்பதை அறிந்த அவன் தோழன் (பாங்கன்) அவனுடைய நிலைக்குக் காரணம் என்னவென்று வினவுவான். தலைவன் தான் ஒரு பெண்ணைக் கண்டு அவள் அழகில் மயங்கி, அவளோடு பழகியதையும், அவளைச் சில நாட்களாகக் காண இயலாததையும் பாங்கனிடம் கூறுவான். பாங்கன் தலைவனின் நிலையைக் கண்டு வருந்துவான். அவனுக்கு அறிவுரை கூறுவான். ”நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு (குறள் – 784)” என்ற குறளுக்கேற்ப, தலைவனை இடித்துரைக்கவும் பாங்கன் தயங்க மாட்டான். தலைவன் மீண்டும் தலைவியைச் சந்திப்பதற்குப் பாங்கன் தன்னால் இயன்ற உதவியைச் செய்வான். இவ்வாறு பாங்கன் உதவியால்  தலைவன் தலைவியைச் சந்திப்பது  பாங்கற்கூட்டம் எனப்படும். பாங்கரில் சிலர் பார்ப்பனராக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைக் கண்டு அவள்மீது காதலுற்ற தலைவன், தலைவியைச் சந்தித்து அவளோடு அளவளாவுவதற்குத் தலைவியுடைய தோழியின் உதவியை நாடுவான். தோழியின் உதவியோடு தலைவன் தலைவியைச் சந்திப்பது பாங்கியிற்கூட்டம் எனப்படும்.

களவொழுக்கத்தின் பொழுது, சில சமயங்களில், தலைவியின் அருமையைத் தலைவன் உணர வேண்டும் என்பதற்காகவும், தலைவனின் மனவுறுதியைத் தான் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், தலைவன் தலைவியைச் சந்திப்பதற்குத் தோழி இடையூறாக  இருப்பாள். அவன் தலைவியைக் காணவேண்டும் என்று வேண்டினால் அவன் வேண்டுகோளை தோழி மறுப்பாள்.  அவன் ஆர்வத்தோடு கொண்டுவரும் மலர்களைத் தோழி ஏற்க மறுப்பாள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தலைவன், தான் மடலேறப்போவதாகத் தோழியிடம் கூறுவான். காதலன் தன் உடம்பில் சாம்பலைப் பூசிக்கொண்டு, தலையில் எருக்கம் பூவாலான மாலையை அணிந்துகொண்டு, காதலியின் உருவம் வரைந்த படத்தில் அவள் பெயரை எழுதிக்கொண்டு, அப்படத்தைக் கையிலேந்தி, பனங்கருக்கால்  செய்யப்பட்ட குதிரை போன்ற உருவத்தின்மீது ஏறி அமர்ந்துகொண்டு, அவனை ஊர்ச்சிறுவர்கள் ஊர்வலமாகத் தெருத்தெருவாக இழுத்துச் செல்லும் நிகழ்வு மடலேறுதல் என்று அழைக்கப்பட்டது. மறைமுகமாக இருந்த காதலர்களின் காதல், காதலன் மடலேறுவதால் ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியவரும். அதனால், அவன் காதலி அவனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்போஅல்லது அவள் பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கும் வாய்ப்போ கிடைக்கும். மடலேறுதல் என்பது ஒரு நாணத் தகுந்த இழிந்த செயலாகக் கருதப்பட்டது. தலைவன் ”மடலேறுவேன்” என்று சொல்லும் பாடல்கள் மட்டுமே சங்க இலக்கியத்தில் அதிகமாகக் காணப்படுன்றனவே தவிர, ஒருசில பாடல்களில் மட்டுமே, தலைவன் மடலேறியதாகக் கூறப்பட்டுள்ளது.[8]

களவொழுக்கத்தின் பொழுது, தலைவனை சந்திக்க வாய்ப்பில்லாமல் இருந்தால், தலைவி மனம் வருந்தி உடல் மெலிவாள், தலைவியின் தோற்றத்தில் வேறுபாடுகளைக் கண்ட தலைவியின் தாய், அவற்றிற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக குறிசொல்லும் பெண்டிரை அழைத்துத் தன் மகளின் நோய்க்கு என்ன காரணம் என்று கேட்பாள். குறிசொல்லும் பெண்டிர் கட்டுவிச்சி அல்லது அகவன் மகளிர் என்று அழைக்கப்பட்டனர். கட்டுவிச்சி, தலைவியின் உடலில் தோன்றிய வேறுபாடுகளுக்குக் காரணம் முருகக் கடவுள் என்றும் முருகனுக்கு வழிபாடு நடத்தினால், தலைவி நலமடைவாள் என்றும் கூறுவாள். முருகனை வழிபடும் பூசாரியை அழைத்து முருகனுக்கு வழிபாடு (பூசை) நடத்துவதற்குத் தலைவியின் தாய் ஏற்பாடு செய்வாள். பூசாரி வேலன் எனப்படுவான். அந்தப் பூசையின் பொழுது, வழிபாட்டுக்காக ஒரு களம் அமைத்துத் தலைவியின்  கழுத்தில் வெள்ளெருக்கு மாலையும், கடம்பு மாலையும் அணிவிப்பது வழக்கம். வேலன், ஒரு ஆட்டை முருகனுக்குப் பலிகொடுத்து, அந்த ஆட்டின் குருதியைத் தலைவியின் நெற்றியில் தடவியும், குருதியில் கலந்த தினையை வீடு முழுதும் தூவியும்  முருகனைக் கூவி அழைத்து ஆவேசக் கூத்து நடத்துவான். இந்த வழிபாடு வெறியாட்டு அல்லது முருகாற்றுப்படுத்தல் என்று அழைக்கப்படும்.

களவொழுக்கம் கற்பொழுக்கத்தில் நிறைவு பெறுவதுதான் சங்ககாலத்துத் தமிழர்களின் மரபு. தலைவியின் களவொழுக்கத்தைத் தோழி தக்க சமயத்தில், தனது தாய்க்குத் தெரிவிப்பாள்.  தோழியின் தாய் அந்தச் செய்தியைத்  தலைவியின் தாய்க்குத் தெரிவிப்பாள். பின்னர் பெற்றோர்களின் ஒப்புதலுடன் தலைவிக்கும் தலைவனுக்கும் திருமணம் நடைபெறும். களவொழுக்கத்தைத்  தக்க சமயத்தில் வெளிப்படுத்தித் திருமணத்திற்கு வழிவகுப்பது அறத்தொடு நிற்றல் எனப்படும். தோழி அறத்தொடு நின்று தலைவியின் காதலை வெளிப்படுத்தாமல்  இருக்கும் பொழுது,  தலைவியின் தாய் வெறியாட்டு நடத்தும் முயற்சிகளை மேற்கொள்வாள். அப்பொழுது,  தாய் வெறியாட்டு நடத்துவதால் பயனில்லை என்பதை உணர்ந்த தோழி, அறத்தொடு நிற்க முன்வருவாள்.

களவொழுக்கத்தின் பொழுது, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்ப்பாடு, பகற்குறி, இரவுக்குறி, பாங்கன் கூட்டம், பாங்கியற் கூட்டம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றுத் தலைவனும் தலைவியும் தொடர்ந்து வரும் காதல் வாழ்க்கைக்கு ஒரு முடிவு வேண்டும். அவர்கள் வாழ்க்கை முழுவதையும் களவொழுக்கத்திலேயே கடத்த முடியாது. ஊரார் கூறும் பழிச்சொற்கள், தலைவன் இரவில் வருவதால் அவனுக்கு நேரக்கூடிய துன்பங்கள், தலைவியின் காதலைப் பற்றித் தெரிந்தால் அவளுடைய தாய் அவளை வீட்டில் காவலில் வைத்தல் (இற்செறிதல்) போன்ற பல இன்னல்களாலும் இடையூறுகளாலும் தலைவியும் தோழியும் வருத்தமடைவார்கள். இந்தச் சூழ்நிலையில், தோழி, தலைவனைச் சந்தித்துத் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு குறிப்பாக உணர்த்துவாள். இங்ஙனம், தோழி, தலைவியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தலைவனை வேண்டுவது வரைவு கடாவுதல் எனப்படும். தலைவன் சம்மதித்தால் திருமணம் நடைபெறும். தோழி அறத்தொடு நிற்பதால், தலைவியின் காதலைப் பற்றித் தெரிந்துகொண்ட பெற்றோர்கள் அவளுடைய திருமணத்திற்கு ஏற்பாடு செய்வார்கள். தோழி அறத்தொடு நின்ற பிறகு, தலைவியின் திருமணத்திற்குப் பெற்றோர்கள் சம்மதிக்காவிட்டால், அது தலைவியின் கற்புக்கு இழுக்கு என்ற காரணத்தால், அவர்கள் திருமணத்திற்குச் சம்மதிப்பது வழக்கம்.

சில சந்தர்ப்பங்களில், தலைவியின் பெற்றோர்களுக்கு அஞ்சி, தோழி அறத்தொடு நிற்கத் தயங்குவாள். அதனால், தலைவியின் காதல் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கும். தலைவியை வேறொருவனுக்குத் திருமணம் செய்விக்கும் முயற்சிகளில் தலைவியின் பெற்றோர்கள் ஈடுபடுவார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், தலைவனும் தலைவியும், எவருக்கும் தெரியாமல், இரவிலே தலைவனின் ஊருக்குச் சென்று திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையைத் தொடங்குவார்கள். தலைவனும் தலைவியும் பெற்றோரைப் பிரிந்து, அவர்களுக்குத் தெரியாமல், தலைவனின் ஊருக்குச் செல்வது உடன்போக்கு எனப்படும்.  உடன்போக்கிலும் திருமணம் நடைபெறும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே

புணர்ந்து உடன்போகிய காலையான.               (தொல்காப்பியம் – 1089)

தலைவனோடு சென்று திருமணம் செய்துகொண்டு வாழ்வதைத் தலைவி விரும்பினாலும், அவளுக்கு இயற்கையாக உள்ள  நாணத்தாலும் அச்சத்தாலும் தலைவனோடு உடன்போவதற்குத் தயங்குவாள். அதுபோன்ற சூழ்நிலையில், தோழி தலைவிக்கு ஆதரவாக இருந்து அவளை உடன் போவதற்கு ஊக்குவிப்பாள்.

களவொழுக்கத்தின் முடிவில் நடைபெறும் திருமணமும் பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்ட திருமணமும் சங்க காலத்தில் வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது. சங்ககாலத்திற்கு முன்பு – தொல்காப்பியரின் காலத்திற்கும் முன்பு – தமிழ்ச் சமுதாயத்தில், ஆண்பெண் உறவில் ஒழுக்கக்கேடான  செயல்களைச் சிலர் மேற்கொண்டதால், சமுதாயத்தில் தலைவர்களாக இருந்தவர்கள், திருமணம் என்ற ஒரு சடங்கை நிலைநாட்டினார்கள் என்பது தொல்காப்பியத்திலிருந்து தெரிகிறது.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.                  (தொல்காப்பியம் – 1391)

ஒருபெண்ணோடு களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்த பிறகு, “இவளை நான் அறியேன்” என்று அவளோடு தொடர்பு கொண்டிருந்த ஆண் கூறுவது பொய் எனப்படும். ஒருத்தியை மணமுடித்த பிறகு, வேறு ஒருத்தியைத் திருமணம் செய்துகொள்வது, காதலியையோ அல்லது தன் மனைவியையோ கைவிடுதல், துன்புறுத்தல் போன்ற செயல்கள் வழு எனப்படும். ஐயர் என்பது சமுதாயத்தலைவர் ஊர்ப்பெரியோர் போன்றவர்களைக் குறிக்கும். கரணம் என்பது பலருக்கு முன்னிலையில் ஒருபெண்ணை, அவள் பெற்றோர் ஒரு ஆணுக்குத் திருமணம் செய்துவைக்கும் சடங்கைக் குறிக்கிறது. சங்க காலத்தில் திருமணங்கள் வைதிக முறைப்படி இல்லாமல் பெற்றோர்களாலும் மற்ற பெரியோர்களாலும் நடத்தப்பட்டன என்பது அகநானூற்றுப் பாடல்களிலிருந்து (பாடல்கள் 86, 136) தெரியவருகிறது.

கற்பொழுக்கம்திருமணத்திற்குப் பிறகு தலைவனும் தலைவியும் அன்போடும் அறத்தோடும் நடத்தும் இல்லற வாழ்க்கைமுறை கற்பொழுக்கம் என்று அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியத்தில் அகத்திணையைச் சார்ந்த பாடல்களின் எண்ணிக்கை 1862, இதில் களவொழுக்கத்தைச் சார்ந்த பாடல்களின் எண்ணிக்கை 882; கற்பொழுக்கத்தைப் பற்றிய பாடல்களின் எண்ணிக்கை 980.

இல்லற வாழ்க்கைக்கு  இன்றியமையாதது பொருள். பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்வது வழக்கம். அரசன் ஏவிய பணிகளைச் செய்வதற்காகவும், போருக்காகவும், கல்விக்காகவும் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்வதும் உண்டு. தலைவன் பிரிந்து செல்லும்பொழுது, தலைவிக்குத் தன் அன்பை வெளிப்படுத்தி, ஆறுதல் கூறுவதற்காகத் தலைவன் தான் பிரிந்து செல்வதற்குக் காலம் தாழ்த்துவதையும், செல்வதைத் தவிர்ப்பதையும் தொல்காப்பியம் செலவழுங்குதல் என்று குறிப்பிடுகிறது. 

கணவனை மட்டுமே காதலித்து மற்றொரு ஆண்மகனை  மனதாலும் நினைக்காத மாண்புடன் கூடிய கற்புநெறி பெண்களிடத்தில் இருந்தாலும், சில ஆண்கள், பரத்தையரோடு தொடர்புகொண்டு, சிலகாலம் தன் மனைவியைப் பிரிவதும் சங்க காலத்தில் வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது. ஆண்கள் கற்புநெறியிலிருந்து தவறிப் பரத்தையரோடு தொடர்புகொள்வதைச் சங்க காலத் தமிழ்ச் சமுதாயம் கண்டித்ததாகத் தெரியவில்லை. பரத்தையர் தொடர்பை முதன்முதலாக வன்மையாகக் கண்டித்தவர் திருவள்ளுவர் என்பது குறிப்பிடத் தக்கது.  இவ்வாறு, பிரிந்து சென்ற தலைவன் திரும்பிவரும் வரை தலைவி தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொண்டு இருப்பதும், தலைவன் திரும்பிவருவதாக சொல்லிச் சென்ற காலத்தில் வரத் தவறினால்,  தலைவி மனம் வருந்தி, உடல் மெலிந்து, பசலையுற்றுத் துன்புறுவதும்,  தலைவன் வந்த பிறகு அவனோடு ஊடுவதும் (விளையாட்டுக்காகக் கோபித்துக்கொள்வதும்) கற்பொழுக்கத்தைப் பற்றிப் பாடப்படும் பாடல்களின் மையக்கருத்தாக அமைந்திருக்கும்.

அகத்திணையைப் பற்றித் தொல்காப்பியத்திலிருந்து சில கருத்துகள்

ஏழு திணைகள்

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் 

முற்படக் கிளந்த எழுதிணை என்ப.            (தொல்காப்பியம் – 947) 

அகத்திணையைச் சார்ந்த திணைகளை கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை  என்று ஏழுதிணைகளாகத் தொல்காப்பியம் பிரிக்கிறது. முதலாவதாகக் கூறப்பட்ட கைக்கிளை என்பது ஒருதலைக் காதலையும், இறுதியில் கூறப்பட்ட பெருந்திணை என்பது பொருந்தாக் காதலையும் குறிக்கிறது. இடையில் உள்ள ஐந்து திணைகள்  – முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்து திணைகள் – அன்புடன் கூடிய காதல் வாழ்க்கையைப் பற்றிப் பாடுவதற்கு ஏற்ற திணைகளாகவும் கருதப்பட்டன.

மூன்றுவகைப் பொருள்கள்

காதல் வாழ்க்கையைப் பற்றிப் பாடப்படும் அகத்திணைப் பாடல்களில் மூன்று வகையான பொருள்களைப் பற்றிப் பாடலாம் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அவை முதற்பொருள், கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் என்று அழைக்கப்படுகின்றன.

முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே

நுவலுங் காலை முறைசிறந் தனவே

பாடலுள் பயின்றவை நாடுங் காலை                            (தொல்காப்பியம் – 949)

அகத்திணைப் பாடல்களில் வரும் பொருள்களை ஆராயுமிடத்து முதற்பொருள், கருப்பொருள் உரிப்பொருள் என்ற மூன்று பொருள்கள் வரும். இவை ஒன்றோடு ஒன்று சிறந்தவையாக அமையும். முதலைவிடக் கரு சிறந்தது; கருவைவிட உரி சிறந்தது.

முதற்பொருள் என்பது நிலத்தையும் காலத்தையும் குறிக்கிறது.

முதலெனப் படுவது நிலம்பொழுது இரண்டின்

இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே.                   (தொல்காப்பியம் – 950)

தமிழகத்தின் நிலப்பரப்பைத் தொல்காப்பியம் ஐந்தாகப் பிரிக்கிறது. அவை முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம் நெய்தல் என்று அழைக்கப்படுகின்றன. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்றும், மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் மழையின்மையால் வறட்சி அடைந்தால் அந்தப் பகுதியைப் பாலை என்றும், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்றும் அழைக்கப்பட்டன. காலத்தைப் பெரும்பொழுது, சிறுபொழுது என்ற இரண்டு பிரிவாகப் பிரிப்பது வழக்கிலிருந்தது. பெரும்பொழுது என்பது ஒரு ஆண்டின் ஆறு பிரிவுகளாகிய இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி மாதங்கள்), முதுவேனிற் காலம் (ஆனி, ஆடி  மாதங்கள்), கார்காலம் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்),  குளிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்), முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்), மற்றும் பின்பனிக்காலம் (மாசி, பங்குனி மாதங்கள்)ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒரு ஆண்டை ஆறு பிரிவுகளாகப் பிரிப்பதைப் போலவே, ஒரு நாளை ஆறு பிரிவிகளாகப் பிரிப்பதும் வழக்கிலிருந்தது. ஒருநாளின் ஆறு பிரிவுகள் சிறுபொழுது என்று அழைக்கப்பட்டன. ஒரு நாளின் சிறுபொழுதுகள்: வைகறை (இரவு 2 மணி முதல் காலை 6 மணிவரை), விடியல் (காலை 6 மணி முதல் 10 மணிவரை), நண்பகல் (காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை), எற்பாடு ( மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிவரை), மாலை(மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை), யாமம் (இரவு 10 மணி முதல் இரவு 2 மணிவரை). கீழே உள்ள அட்டவணையில் ஒவ்வொரு திணைக்கும் உரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளன.

திணைபெரும்பொழுதுசிறுபொழுது
குறிஞ்சிகுளிர்காலம், முன்பனிக்காலம்யாமம்
முல்லைகார்காலம்மாலை
மருதம்ஆறு காலமும்வைகறை, விடியல்
நெய்தல்ஆறு காலமும்எற்பாடு
பாலைமுதுவேனில், பின்பனிநண்பகல்

கருப்பொருள்: கருப்பொருள் என்ன என்பதற்குத் தொல்காப்பியம் விளக்கம் அளிக்கிறது.

தெய்வம் உணாவே மாமரம் புள்பறை 
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருஎன மொழிப.         (தொல்காப்பியம் – 964)

தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் (பண்) ஆகியவையும் பிறவும் கருப்பொருள்கள் எனப்படும். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், மற்றும் நெய்தல் ஆகிய நிலங்களுக்கு, அங்கு வளரும் மரம், செடி, கொடிகளும், விலங்குகளும், வாழும் மக்களும், வணங்கப்படும் தெய்வங்களும் அந்த நிலத்திற்கு உரிய கருப்பொருள்களாகக் கருதப்பட்டன. நிலங்களும் அவற்றிற்குரிய  சில கருப்பொருள்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

               ஐவகை நிலங்களும் அவற்றிற்குரிய சில கருப்பொருள்களும்

கருப்பொருள்குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்பாலை
தெய்வம்முருகன்திருமால்இந்திரன்வருணன்கொற்றவை
விலங்குயானை, புலிகரடிமான், முயல்எருமை, நீர்நாய்முதலைசுறாமீன்வலிமையற்றயானை, புலி
உணவுதினை, மூங்கில்நெல்வரகுநெல்உப்பும் மீனும் விற்று வாங்கிய உணவுவழிப்பறி செய்த உணவுப் பொருள்
மரம்வேங்கை, கோங்கு, தேக்கு, அகில்கொன்றை, குருந்துமருது, காஞ்சிபுன்னை, கைதைபாலை, இருப்பை, கள்ளி, சூரை
பறவைமயில், கிளிகானாங் கோழிஅன்னம், அன்றில்,கடற்காக்கைகழுகு, பருந்து
பறைவெறியட்டுப் பறை, தொண்டகப் பறைஏறுகோட் பறைநெல்வரிப்பறைநாவாய்ப்பறைஆறலைப்பறை
தொழில்தேன் எடுத்தல்நிரை மேய்த்தல்உழவுமீன் பிடித்தல், உப்பு விளைத்தல்வழிப்பறி செய்தல்
பண்குறிஞ்சிப் பண்சாதாரிப் பண்மருதப் பண்செவ்வழிப் பண்பாலைப் பண்
பூவேங்கைப் பூ, காந்தள் பூ, குறிஞ்சிப் பூமுல்லை, பிடவு, தளவுதாமரை,செங்கழு நீர்நெய்தல்மராஅம் பூ

உரிப்பொருள்: ஒவ்வொரு வகை நிலத்திற்கும் குறிப்பிட்ட கருப்பொருள்கள் இருப்பதைப் போல், உரிப்பொருள்களும் வகுக்கப்பட்டுள்ளன.

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் 
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை 
தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே. (தொல்காப்பியம் – 960)

புணர்தல் என்பதற்கு கூடுதல் அல்லது சேர்தல் என்று பொருள். இது இயற்கைப் புணர்ச்சி, உள்ளப் புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி என்று மூன்று வகைப்படும். இயற்கைப் புணர்ச்சி என்பது ஒரு ஆணும் பெண்ணும் ஊழ்வினைப் பயனால் சந்தித்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்பார்வையினால்  தம் விருப்பத்தைப் பரிமாறிக் கொள்வது. பின்னர் ஒருவரோடு ஒருவர் பழக ஆரம்பித்து உள்ளம் ஒருமிப்பது உள்ளப் புணர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. உள்ளப் புணர்ச்சிக்குப் பிறகு, காதலன் காதலியின் உடலைத் தொடுதல், கூந்தலைத் தடவுதல், தோளைத் தழுவுதல் போன்ற செயல்களைச் செய்து காதலியிடம் தன் அன்பை வெளிப்படுத்துவதற்குப் பெயர் மெய்யுறு புணர்ச்சி.  திருமணமாகாத ஆணும் பெண்ணும் மெய்யுறு புணர்ச்சியில் ஈடுபட்டாலும், அவர்களிடையே உடலுறு புணர்ச்சி (உடலால் ஒன்றுகூடி மகிழ்தல்) இருந்ததாக சங்க இலக்கியத்தின் அகத்திணைப் பாடல்களில் எந்தக் குறிப்பும் இல்லை என்பது பல தமிழறிஞர்களின் உறுதியான கருத்து. மூதறிஞர், முனைவர் வ. சுப. மாணிக்கம் அவர்கள் சங்க இலக்கியத்தின் அகத்திணைப் பாடல்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து “தமிழ்க் காதல்” என்ற ஒரு நூலை இயற்றியுள்ளார். அந்த நூலில்[9] சங்க காலத்தில் காதலர்களிடையே, உடலுறவு இல்லை என்று கூறும் அறிஞர்களின் கருத்தை அவர் மறுக்கிறார். குறுந்தொகையில் உள்ள சிலபாடல்களை நடுநிலையில் இருந்து ஆராய்ந்தால், சங்க காலத்தில், திருமணமாகாத காதலர்களிடையே உடலுறவு இருந்திருக்கலாம் என்று பொருள்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பது அவர் கருத்து.

பிரிதல்  என்பது களவொழுக்கத்தில், காதலன் தன் காதலியைவிட்டுத் திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகப் பிரிவதையும்,  கற்பொழுக்கத்தில் கணவன், பொருளுக்காகவும், போருக்காகவும், கல்விக்காகவும், அரசன் ஏவிய பணிகளுக்காகவும், பரத்தையோடு தொடர்பு கொள்வதற்காகவும்  தன் மனைவியை விட்டுப் பிரிவதையும்  குறிக்கிறது. பிரிதல் என்பது தலைவன் தலைவியைவிட்டுச் சில மாதங்கள் பிரிந்திருப்பதைக் குறிக்கிறதே ஒழிய நிரந்தரமான பிரிவைப் பற்றியது அன்று. எல்லாச் சூழ்நிலைகளிலும் பிரிந்தவர் மீண்டும் கூடுவது இலக்கிய மரபு.  உடன்போக்கின் பொழுது காதலர்கள் தங்கள் பெற்றோரையும் உற்றோரையும் விட்டுப் பிரிந்து செல்லும் உடன்போக்கும் ஒருவகைப் பிரிவாகக் கருதப்பட்டது.

இருத்தல் என்பது காதலன் தன் காதலியைவிட்டுப் பிரிந்திருக்கும் பொழுதும், கணவன் மனைவியை விட்டுப் பிரிந்திருக்கும் பொழுதும், காதலி அல்லது மனைவி வருத்தத்தோடு, அந்தப் பிரிவின்போது,  பொறுமையுடன் தன் காதலன் (கணவன்) வரவுக்காகப் காத்திருத்தல்.

இரங்கல் என்பது தன் காதலன் (கணவன்) குறிப்பிட்ட  காலத்தில் வரத் தவறியதால், மனம் வருந்தி, உடல் மெலிந்து, அழுது தன் வருத்தத்தை வெளிபடுத்துவதைக் குறிக்கிறது.

ஊடல் என்பது கணவன் மீது ஏதாவது ஒரு காரணதிற்காக மனைவி விளையாட்டுக்காக கோபமாக இருப்பதைக் குறிக்கிறது. கணவன் பரத்தையரோடு தொடர்புகொள்வதுவே ஊடலுக்கு முக்கியமான காரணம் என்று அகத்திணைப் பாடல்களில் இருந்து தெரிகிறது.

குறிஞ்சித்திணைக்குப் புணர்தலும், பாலைத்திணைக்குப் பிரிதலும், முல்லைத்திணைக்கு இருத்தலும்,  நெய்தற் திணைக்கு இரங்கலும், மருதத்திணைக்கு ஊடலும் உரிப்பொருள்கள் என்று தொல்காப்பியம் கூறுகிறது. புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்,  ஊடல் மட்டுமல்லாமல் அவற்றோடு  தொடர்புடைய கருத்துகளும் நிகழ்வுகளும்(நிமித்தங்களும்) முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய திணைகளுக்கு உரிய உரிப்பொருள்களாகும்.

ஒவ்வொரு அகத்திணைப் பாடலும், கைக்கிளை, முல்லை,குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை ஆகிய திணைகளில் ஏதாவது ஒன்றைச் சார்ந்ததாக இருக்கும். அப்பாடல் எந்தத் திணையைச் சார்ந்தது என்பதை அதிலுள்ள முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருளைக் கொண்டு முடிவு செய்ய வேண்டும். ஒரு பாடலில் முதற்பொருளும், கருப்பொருளும் உரிப்பொருளும்  இருந்தால், முதற்பொருளைக் கொண்டு, அது எந்தத் திணையைச் சார்ந்தது என்று முடிவு செய்ய வேண்டும்.  ஒருபாடலில் முதற்பொருள் இல்லாமல் கருப்பொருளும் உரிப்பொருளும் மட்டும் இருந்தால் கருப்பொருளை வைத்துத் திணையை முடிவு செய்ய வேண்டும். அகத்திணையிலுள்ள எல்லாப் பாடல்களிலும் உரிப்பொருள் கண்டிப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் முதற்பொருளும் கருப்பொருளும் குறிப்பிடப்படவில்லை. பாடலின் மையக் கருத்து  ஒருதலைக் காதலாக  இருந்தால், அப்பாடல் கைக்கிளையைச் சார்ந்தது என்றும், பொருந்தாக் காதல் மையக் கருத்தாக இருந்தால் அப்பாடல் பெருந்திணையைச் சார்ந்தது என்றும் திணை குறிக்க  வேண்டும்.

அகத்திணைப் பாடல் மரபுகள்

உலகத்தாருடைய பழக்க வழக்கங்களைக் கூறுவது உலகியல் வழக்கு என்றும், உலகியல் வழக்கிலிருந்து பெறப்பட்ட உயர்ந்த கருத்துகளைச் சுவைபடத் தொகுத்து வழங்குவது நாடக வழக்கு என்றும் அறிஞர் கூறுவர். அகத்திணைப் பாடல்கள் அனைத்தும் நாடக வழக்கைச் சார்ந்தவை. அவை காதல் வாழ்க்கையின் பல  உயர்ந்த கூறுபாடுகளையும், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருளோடு கலந்து, கற்போர் உள்ளத்தைக் கவரும் வகையில் கற்பனையோடும் கவிதை நயத்தோடும் இயற்றப்பட்டவை. ஒவ்வொரு பாடலும், எவராவது ஒருவர் கூற்றாக இருக்கும். அவருடைய கூற்றுக்கு, முதற்பொருள், கருப்பொருள் ஆகியவை  ஏற்ற பின்னணியாக அமைந்து பாடலின் உரிப்பொருளை அறிந்துகொள்வதற்கு உதவி செய்கின்றன.  களவொழுக்கத்தின் பொழுது கூற்று நிகழ்த்துவோர் பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலித்தாய், தலைவன், தலைவி ஆகிய அறுவர் என்றும், கற்பொழுக்கத்தின் பொழுது, மேற்கூறிய அறுவரோடு, பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் ஆகிய ஆறுவரும் கூற்று நிகழ்த்துவர் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது.[10]  மற்றும் இந்தப் பன்னிருவரும் எந்தெந்த சூழ்நிலையில் எத்தகைய செய்திகளைக் கூறுவர் என்பதும் தொல்காப்பியத்தில் மிக விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. குறுந்தொகையில், இற்பரத்தை, கண்டோர், காதற் பரத்தை, செவிலித்தாய், தலைவன்,  தலைவி, தோழி, பரத்தை, பாங்கன் ஆகிய ஒன்பது பேருடைய கூற்றுக்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

இற்பரத்தை: சங்க இலக்கியத்தில், திருமணம் செய்துகொள்ளாத பரத்தையர் குலப்பெண் ஒருத்தி, ஒரு ஆடவனோடு (தலைவனோடு) மட்டும் உறவுகொண்டு, மற்ற பரத்தையரோடு வாழாமல், தலைவனின் ஊரில் உள்ள இல்லத்தில் இருத்தித்  தலைவனால் அவன் மனைவியைப்போல் பேணப்பட்டவள் இற்பரத்தை என்று அழைக்கப்பட்டாள்.

கண்டோர்: தலைவனும் தலைவியும் உடன்போக்கில் காட்டு வழியில் செல்லும் பொழுது அவர்களைச் சந்திக்கும் மனிதர்கள் கண்டோர் என்று அழைக்கப்படுவர்.

காதற் பரத்தை: காதற் பரத்தை என்பவள் பரத்தையின் மகளாய்ப் பிறந்து தலைவனது காதலுக்கு உரிமை கொண்டு அவனையே சார்ந்திருப்பவள்.

செவிலித்தாய்:    தோழியின் தாயை செவிலித்தாய் என்றும் தலைவியின் தாயை  நற்றாய் என்றும் குறிப்பிடுவது வழக்கம். செவிலித்தாயும் நற்றாயும் தோழியர் என்று இலக்கண நூல்கள் கூறுகின்றன. செவிலித்தாய் தலைவியை மிகுந்த அன்போடு பாதுகாத்தும், அவளுக்கு வேண்டிய உணவு கொடுத்தும், இரவுக் காலத்தில் தன் அருகிலே உறங்கச்  செய்து காவல் புரிபவள். தலைவி தலைவனோடு உடன்போனால், இவள் வருந்தித் தலைவியைத் தேடிச் செல்வாள். திருமணத்திற்குப் பிறகு தலைவி எங்ஙனம் குடும்பம் நடத்துகிறோளோ என்று தலைவியின் தாய் கவலைப்படும் பொழுது, இவள் போய்த் தலைவியைக் கண்டு, தலைவி  இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு இருப்பதைத் தலைவியின்  தாய்க்குத் தெரிவிப்பாள்.

தலைவன்: தலைவன் என்பவன் கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றில் சிறந்தவன்; உயர்குடியில் பிறந்தவன்; செல்வம் மிகுந்தவன். இவன் தலைவியோடு நெருங்கிய நட்பும் அன்பும் உடையவன். தலைவனை, “பெருமையும் உரனும் ஆடூஉ மேவன” என்று தொல்காப்பியம்[11] கூறுகிறது. ”பெருமை என்பதற்கு அறிவு, ஆற்றல், புகழ், கொடை ஆராய்ச்சி, பழிபாவங்கட்கு  அஞ்சுதல் ஆகிய பெருமைக்குரிய குணங்கள் என்றும், உரன் என்பதற்குக் கடைப்பிடியும் நிறையும் கலங்காது துணிதலும் முதலிய வலிமையின் பகுதி” என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்[12].

தலைவி: தலைவனைப் போலவே தலைவியும் அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றுள் சிறந்தவள். அவள் பெண்களுக்கு உரிய அச்சம், நாணம், மடம் போன்ற நற்பண்புகள் உடையவள். செல்வச் சிறப்புள்ள குடியில் பிறந்தவள். தலைவியின் சிறப்பைப் பற்றிக் கூறும் பொழுது, தொல்காப்பியர்,

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்    

என்று குறிப்பிடுகிறார். கற்புடைமை, அன்புடைமை, தன் குலத்திற்கேற்ற நல்லொழுக்கம், மென்மைச் சாயலுடன் கூடிய பொறுமை, மனத்தைக் கட்டுப்படுத்தும் நிறை, முடியாத பொழுதும் இயன்றவரை விருந்தோம்பல் செய்தல், சுற்றத்தாரைப் பாதுகாத்தல் மட்டுமல்லாமல், மற்றும் பல  நற்குணங்கள் அனைத்தும் பொருந்தியவள் தலைவி என்பது தொல்காப்பியரின் கருத்து.

 தோழி: தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கையில் தோழிக்குப் பெரும்பங்கு உண்டு. தலைவியின் செயல்கள் அனைத்தையும் இவள் அறிந்தவள். இவள் தலைவனும் தலைவியும் சந்திப்பதற்கு உதவி செய்வாள். சில சந்தர்ப்பங்களில், தேவைக்கேற்ப, அவர்கள் சந்திக்கும் இடத்தை மாற்றிப் பாதுகாவலான வேறு இடத்தில் அவர்கள் சந்திப்பதற்கு வழிவகுப்பாள்.  தலைவி தலைவனைப் பிரிந்து வருந்தும் பொழுது அவளுக்கு ஆறுதல் கூறுவாள். தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடச் சென்றிருக்கும் பொழுது தலைவியின் வருத்தம் அளவுக்கு மீறியதாக இருந்தால் தலைவியைக் கடிந்துரைப்பாள். தலைவியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தலைவனிடம் மறைமுகமாகவும் நேரிடையாகவும் கூறுவாள். தலைவியின் காதலைத் தக்க சமயத்தில் தன் தாயிடம் வெளிப்படுத்தித் தலைவியின் திருமணத்திற்குத் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்வாள். தலைவனும் தலைவியும்  உடன்போவதுதான்  சரியான செயல் என்று எண்ணினால், தோழி, தலைவியைத் தலைவனோடு உடன்போவதற்கு ஊக்குவிப்பாள். இவள் தன்னலம் சிறிதுமின்றித் தலைவன் தலைவி ஆகிய இருவரின் நலத்தை மட்டும் கருதிப் பலவகை இடுக்கண்களுக்கிடையும் திறமையுடன் செயல் புரிந்து வாழ்பவள். தொல்காப்பியர் தோழியை, “ஒன்றித் தோன்றும் தோழி” என்கின்றார்.

 பரத்தை: ஆடலிலும் பாடலிலும் வல்லமை பெற்று , தம் அழகாலும் இளமையாலும் ஆடவர்களைக் கவர்ந்து, அவரால் பெறும் இன்பத்தையும் பொருளையும் விரும்பி, ஆடவர் பலரோடும் தொடர்புகொள்ளும் மகளிர் பரத்தையர் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டனர்.

பாங்கன்: பாங்கன் என்பவன் தலைவனுக்குத் தோழனாக இருப்பவன். தலைவன் தலைவியோடு களவொழுக்கத்தில் காதலிக்கும் பொழுது, இவன் தலைவனுக்கு உற்ற துணையாக இருந்து அவன் செயல்களில் உதவி புரிபவன், தலைவன் தலைவியைச் சந்திக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் பொழுது, இவன் தலைவனை கடிந்துரைக்கவும் தயங்க மாட்டான்.

உள்ளுறை உவமம், இறைச்சி

சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்களில் அகத்திணைப் பாடல்களைவிடப் புறத்திணைப் பாடல்கள் புரிந்துகொள்வதற்கு எளியவை. பாடலில் உள்ள அருஞ்சொற்களுக்குப் பொருள் தெரிந்துகொண்டு, பொருள்கொள்ளும் முறையையும் புரிந்துகொண்டால், புறத்திணைப் பாடல்களை ஓரளவுக்கு எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.  ஆனால், பல அகத்திணைப் பாடல்களில், வெளிப்படையாகத் தோன்றும் பொருளுக்கும் அப்பால் ஒருபொருள் அமைந்திருக்கும். இவ்வாறு, பாடலில் மறைமுகமாகப் புலவர் குறிப்பாக உணர்த்தும் பொருளைப் புரிந்துகொண்டால்தான், அப்பாடலில் உள்ள கவிதை நயமும், புலவரின் கற்பனைத் திறனும்  அறிந்து அப்பாடலின் முழுமையான சுவையை உணர்ந்து மகிழ முடியும். பாடலில் கூறவந்த கருத்தை மறைமுகமாக  கூறுவதற்குப் புலவர்கள் கையாளும் உத்தி உள்ளுறை உவமம், இறைச்சி என்று இருவகைப்படும்.

உள்ளுறை உவமம்: ஒருபாடலில், புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், ‘பொருள்’அல்லது ‘உவமேயம்’ எனப்படும். அப்பொருளை விளக்கவோ, அழகுபடுத்தவோ அவர் இயைத்துக் கூறும் மற்றொரு பொருள்’உவமை’ அல்லது ‘உவமானம்’ எனப்படும். “தாமரை போன்ற முகம்” என்று புலவர் கூறினால், புலவர் விளக்கக் கருதிய பொருள் முகம். ஆகவே, “முகம்” உவமேயம். முகத்தை விளக்குவதற்கு, புலவர் முகத்திற்குத் தாமரையை ஒப்பிடுகிறார். இங்கு, தாமரை உவமை. புலவர் உவமையை மட்டும் கூறி அவர் விளக்க விரும்பிய பொருளை மறைமுகமாக நமது கற்பனைக்கு விட்டுவிட்டால் அது உள்ளுறை உவமம்.

குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்திணைப் பாடல்களில் தெய்வம் ஒழிந்த ஏனைய கருப்பொருள்கள் மூலம் உள்ளுறை உவமத்தைப் புலவர்கள் பயன்படுத்துவார்கள். உள்ளுறை உவமத்தில், உவமை மட்டும் வெளிப்படையாகக் கூறப்பட்டு, புலவர் கூறக் கருதிய பொருள் குறிப்புப் பொருளாக அமைந்திருக்கும். கீழ்வரும் குறுந்தொகைப் பாடலில் புலவர் உள்ளுறை உவமத்தைப் பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.  

பலவும் கூறுஅஃது அறியா தோரே 
அருவி தந்த நாட்குரல் எருவை 
கயம்நாடு யானை கவள மாந்தும் மலைகெழு நாடன் கேண்மை
தலைபோ காமைநற்கு அறிந்தனென் யானே.          (குறுந்தொகை – 170)

அருஞ்சொற்பொருள்நாள் குரல் = புதிய கொத்து; எருவை = கொறுக்காந்தட்டை (நாணல்); கயம் = குளம்; நாடும் = ஆராயும்; கவளம் = வாயளவு கொண்ட உணவு; மாந்துதல் = உண்ணுதல்; கெழு = பொருந்திய;கேண்மை = நட்பு; தலைபோகாமை = கெடாமை; நற்கு = நன்கு.

உரைதோழி! அருவியால் விளைந்த, புதிய கொத்தாக இருக்கும் கொறுக்காந்தட்டையை, ஆழமான நீர்நிலையை ஆராய்கின்ற யானை, கவளமாக உண்ணும். அத்தகைய, மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனது நட்பு, கெடாமையை நான் நன்றாக அறிவேன். அதனை, அறியாதவர்கள்தான் பலவிதமாகப் பேசுவார்கள்.

விளக்கம்தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான்தலைவி தனிமையில் வருந்துவாள் என்று எண்ணித் தோழி அவளைக் காணவந்தாள். ”தலைவர் உன்னைவிட்டுப் பிரிந்திருப்பதால் பலரும் பலவிதமாகப் பேசுகிறார்கள்அதைப் பற்றி நீ கவலைப் படாதே” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்தலைவி, “எங்கள் காதல் விதிவசத்தால் தோன்றியதுஅதற்கு என்றும் அழிவில்லையார் எதை வேண்டுமானலும் பேசட்டும்அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை” என்று தோழியிடம் கூறுகிறாள்குளத்தை நாடிச் செல்லும் யானை, எவ்வித முயற்சியும் இல்லாமல், அருவியின் நீரால் விளைந்த கொறுக்காந்தட்டையை உண்டதைப் போல, விதிவசத்தால் தலைவனும் தலைவியும் காதலித்தார்கள் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம். இங்கு, அருவி ஊழ்வினைக்கும், அருவியின் நீரால் விளைந்த கொறுக்காந்தட்டை ஊழ்வினையால் தோன்றிய காதலுக்கும், யானை கொறுக்காந்தட்டையை உண்டது தலைவனும் தலைவியும் அந்தக் காதலில் இன்புற்றதற்கும் உவமைகள். ஆனால், இப்பாடலில் இவ்வுவமைகள் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. அதனால், இது உள்ளுறை உவமம் ஆயிற்று.

இறைச்சி”இறு” என்னும் பகுதியின் அடியாகப் பிறந்து, இறைச்சி என்னும் சொல் ’தங்குதல்’ என்னும் பொருளுடையது. உள்ளுறையில் உவமை மட்டும் கூறப்பட்டிருக்கும்.  அதிலிருந்து உவமேயப் பொருளைக் குறிப்பால் அறிந்துகொள்ள வேண்டும். சில இடங்களில், உள்ளுறை உவமத்துக்கு அப்பாலும் அதோடு தொடர்புடைய ஒருபொருள் தங்கி இருக்கும், அது இறைச்சி என்று அழைக்கப்படுகிறது. இறைச்சியும் உள்ளுறை உவமத்தைப் போலவே, அகப்பொருள் பாடல்களில் தெய்வம் ஒழிந்த ஏனைய கருப்பொருள்கள் மூலம் பிறக்கும். உரிப்பொருளுக்குப் புறத்ததாகிய பறவை, விலங்குகள்போன்ற உயிரினங்களின் செயல்கள் மூலம் உரிப்பொருளுக்குத் தொடர்புடைய ஒரு குறிப்பை இறைச்சி உணர்த்தும். தலைவியும் தோழியும் தலைவனின் கொடுமையைப் பற்றிக் கூறும் இடங்களிலும்,  தம் காதல் உணர்வை இயற்கை உயிர்களில் காணும்போதும் இறைச்சி பயன்படுத்தப்படுகிறது. கீழ்வரும்  பாடலில் இறைச்சிப் பொருள் இருப்பதைக் காணலாம்.

நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர் 
பிடிபசி களைஇய பெருங்கை வேழம் 
மென்சினை யாஅம் பொளிக்கும் 
அன்பின தோழியவர் சென்ற வாறே.                 (குறுந்தொகை – 37)

அருஞ்சொற்பொருள்நசை = விருப்பம், அன்பு; நல்கல் = அன்போடு அளித்தல்; பிடி = பெண்யானை; களைஇய = நீக்குவதற்காக; பெருங்கை = பெரிய துதிக்கை; வேழம் = யானை (இங்கு ஆண்யானையைக் குறிக்கிறது); மென் = மெல்லிய; சினை = கிளை; யாஅம் = யா = ஒருவகை மரம்; பொளித்தல் = கிழித்தல், உரித்தல்.

உரைதோழி, தலைவர் நின்பால் மிகவும் அன்புடையவர், நீ விரும்புவதை அவர் செய்வார். அவர் சென்ற வழி,  பெரிய துதிக்கையையுடைய ஆண்யானை, மெல்லிய கிளைகளை உடைய யாமரத்தைப் பிளந்து பெண்யானையின் பசியை அன்போடு களையும் இடமாக உள்ளது.  

விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “தலைவன் உன்மீது மிகவும் அன்புடையவன். தலைவன் சென்ற வழியில் ஆண்யானைகள் பெண்யானைகளின் பசியைப் போக்கி அவற்றை அன்போடு பாதுகாப்பதைக் கண்ட தலைவன் தன் கடமையை உணர்ந்து உன்னிடம் விரைவில் வருவான்” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். ஆண்யானை அன்போடு தன் பெண்யானையின் பசியைப் போக்குவது போல் தலைவனும் தலைவியின் விருப்பத்திற்கு இணங்கி விரைவில் வருவான் என்று யானையின் செயலை உவமையாகக் கூறாமல் குறிப்பாகக் கூறியதனால் இது இறைச்சி ஆயிற்று.

உள்ளுறை உவமத்தில் உவமேயப் பொருளுக்கு ஏற்ற உவமை குறைவின்றி முழுமையாக அமைந்திருக்கும். இறைச்சியில் அவ்வாறு அமைந்திருக்காது. சில சமயங்களில், உள்ளுறை  உவமத்திற்கும் இறைச்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு பாடலின் பொருளை நுணுக்கமாக ஆராய்ந்து அறிபவர்களுக்கு மட்டுமே நன்கு விளங்கும்.

குறுந்தொகையைப் பற்றிய சில செய்திகள்

குறுந்தொகை பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகைநூல். இந்நூலைத் தொகுக்குமாறு ஆணையிட்ட மன்னர் யார் என்பது தெரியவில்லை. இதில் ஆசிரியப்பா என்ற வகையைச் சார்ந்த 402 பாடல்கள் உள்ளன. இவற்றுள், 400 பாடல்கள் நான்கு முதல் எட்டு அடிகளைக் கொண்டவை. பாடல்கள் 301, 397 ஆகிய இரண்டு மட்டும் ஒன்பது அடிகளைக் கொண்டவை. இந்நூலில் முதலாவதாக உள்ள பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய கடவுள் வாழ்த்து. இப்பாடலில் அவர் முருகக் கடவுளை வாழ்த்திப் பாடுகிறார். இந்நூலில், கடவுள் வாழ்த்தும், குறிஞ்சித் திணையைச் சார்ந்த 147 பாடல்களும், பாலைத்திணையைச் சார்ந்த 90 பாடல்களும், நெய்தல் திணையைச் சார்ந்த 71 பாடல்களும், மருதத்திணையைச் சார்ந்த 48 பாடல்களும், முல்லைத்திணையைச் சார்ந்த 45 பாடல்களும் உள்ளனன. குறுந்தொகையில் உள்ள 402 பாடல்களைப் பாடிய புலவர்கள் 205 பேர்[13]. அவற்றுள் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை பதின்மூன்று; பெயர் தெரியாத புலவர்களின் எண்ணிக்கை பத்து. சில புலவர்களின் இயற்பெயர் தெரியவில்லை. அவர்கள் இயற்றிய பாடல்களில் உள்ள சொற்றொடர்களே அவர்களின் பெயர்களாக உள்ளன.

முதன்முதலில் குறுந்தொகைக்குஉரை எழுதியவரின் பெயர் பேராசிரியர். ஆனால், அவர் குறுந்தொகையில் உள்ள முதல் 380 பாடல்களுக்கு மட்டுமே உரை எழுதினார். நச்சினார்க்கினியர் என்பவர் குறுந்தொகையில் உள்ள மற்ற இருபது பாடல்களுக்கும் உரை எழுதி, பேராசிரியர் உரையுடன் சேர்த்தார். அந்த உரை இப்பொழுது கிடைக்கவில்லை. சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த குறுந்தொகைப் பாடல்கள் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது, பல சுவடிகளை ஆராய்ந்து பார்த்து, முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன் என்பவர், தான் எழுதிய புதிய உரையோடு குறுந்தொகையை 1915 – இல் பதிப்பித்தார். பின்னர், உ.வே. சாமிநாத ஐயர், இரா. ராகவ ஐயங்கார், பெருமழைப் புலவர் சோமசுந்தரனார், முனைவர் தமிழண்ணல், ச. வே சுப்பிரமணியன், புலியூர் கேசிகன், துரை. இராசாராம் ஆகியோரும் வேறு பலரும் தங்கள் உரைகளை வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் வாழும் வைதேகி ஹெர்பர்ட் என்ற அம்மையார் சங்க இலக்கியத்தில் அடங்கிய பதினெட்டு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தைச் சார்ந்த ராபர்ட் பட்லர் (Robert Butler) என்பவர் குறுந்தொகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதிலுள்ள பாடல்களுக்குச் சிறந்த விளக்கமும் அளித்துள்ளார். ஃபிரான்சு நாட்டைச் சார்ந்த ஈவா வில்டன் (Eva Wilden) என்ற அம்மையார் குறுந்தொகையின் பாடபேதங்கள் அனைத்தையும் ஆய்வுசெய்து ஒருசிறந்த மொழிபெயர்ப்பையும் அரிய விளக்கங்களையும் மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளார்.


[1] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் 5

[2] டாக்டர் பூவண்ணன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் – 14

[3] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் – 28

[4] Eva Wilden, குறுந்தொகை, பக்கம் – 1

[5] வள்ளல் ஒருவரிடம் தன் வறுமையைப் போக்கும் வளங்களைப் பெற்றுவந்த ஒருவர். கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலியோரை அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று தொல்காப்பியம் கூறுகிறது.

[6] தொய்யில் என்பது மகளிரின் மார்பகங்களில் சாந்தினால் வரையப்படும் கோலம்.

[7] டாக்டர் ந. சுப்பு ரெட்டியார், தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, பக்கம் – 67

[8] . மூதறிஞர் வ. சுப. மாணிக்கம், தமிழ்க் காதல், பக்கம் 53-54

[9] வ. சுப. மாணிக்கம், தமிழ்க் காதல், பக்கம் – 43

[10] தொல்காப்பியம், பாடல்கள் 1445, 1446

[11] தொல்காப்பியம், பாடல் 1044

[12] ந. சுப்பு ரெட்டியார், “தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை”, பக்கம் – 51

[13] குறுந்தொகைப் பாடல்களைப் பாடியவர்களின் எண்ணிக்கை 203 என்று டாக்டர் மா. ராசமாணிக்கனார் கூறுகிறார். புலவர்களின் பெயர்களில் உள்ள பாடபேதம் இந்த எண்ணிக்கை வேறுபாட்டிற்குக் காரணமாக இருக்கலாம். (பேரா. காவ்யா சண்முகசுந்தரம், சங்க இலக்கிய வரலாறு, மா. ரா. களஞ்சியம் – பக்கம் 120 – 124)

Posted by முனைவர். பிரபாகரன் at 5:34 PM 

Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Labels: குறுந்தொகை – முன்னுரை

1 comment:

  1. UnknownOctober 21, 2015 at 5:36 AMஇந்தப் பாடலில் இறைச்சி மட்டும் தான் இருக்கிறது என்று முதலில் நினைத்தேன்Reply

https://www.blogger.com/comment/frame/4663394474994898414?po=3065047236671988277&hl=en&blogspotRpcToken=1566992#%7B%22color%22:%22rgb(34,%2034,%2034)%22,%22backgroundColor%22:%22rgb(255,%20255,%20255)%22,%22unvisitedLinkColor%22:%22rgb(204,%20102,%2017)%22,%22fontFamily%22:%22Arial,%20Tahoma,%20Helvetica,%20FreeSans,%20sans-serif%22%7D

Subscribe to: Post Comments (Atom)

About Me

முனைவர். பிரபாகரன்இவர் தமிழ் நாட்டில் கணிதத்துறையில் B.Sc, M.Sc ஆகிய பட்டங்கள் பெற்றார். சில ஆண்டுகள், தமிழ்நாட்டில் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றியபின், இவர் அமெரிக்காவில் கணினித்துறையில் M.S, Ph.D.,MBA ஆகிய பட்டங்கள் பெற்றார். அமெரிக்காவில் தனியார் நிறுவனங்களிலும், NASA, US Army ஆகிய நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் பணி புரிந்து ஓய்வு பெற்றார். இவர் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழரின் நலம் ஆகியவற்றில் மிகவும் ஈடுபாடு உடையவர். இவர் அமெரிக்காவில் பல அமைப்புக்களில் பொறுப்பான பதவிகள் வகித்து, தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சிக்கும் பணிபுரிந்தவர். இவர், அமெரிக்காவில் திருக்குறள், புறநானூறு, குறுந்தொகை ஆகிய நூல்களுக்கு, மாநாடுகள் நடத்தியுள்ளார். இவர் அமெரிக்காவில், திருவள்ளுவர் சிலையை நிறுவினார். 2010ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுக் கட்டுரை வழங்கினார். இவர் புறநானூறு, குறுந்தொகை ஆகிய சங்க இலக்கியங்களுக்கு விளக்கவுரைகளை வெளியிட்டிருக்கிறார். அண்மையில், The Ageless Wisdom என்று ஆங்கிலத்தில் திருக்குறளைப் பற்றி ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். இவர் திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களை மேலை நாடுகளில் பரப்புவதைத் தன் குறிக்கோளாகக் கொண்டவர்.

View my complete profile

Blog Archive

https://nallakurunthokai.blogspot.com/2015/09/blog-post_10.htmlSimple theme. Powered by Blogger.

About editor 3270 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply