சுமந்திரனை மட்டும் குற்றஞ்சாட்டுவது சரியாகுமா..?
(12. 01.2025 ஞாயிறு யாழ் தினக்குரல்)
ஏப்ரஹாம் மதியாபரணம் சுமந்திரன் என்ற சட்டவாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சியினுள் ஓர் அரசியல்வாதியாக உள்நுழைக்கப்பட்ட காலந்தொடக்கம் இன்றுவரை அவர் மீதான நேர், எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அரசியல்வாதி என்ற வகையில் இது எவ்வாறு இயல்பானதோ அவ்வாறே எதிர்மறை விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பெரும்பாலும் அவரது அரசியல் எதிராளிகளாக இருப்பதும் இயல்பானதாகும். அதேபோலவே காய்க்கிற மரந்தான் கல்லெறிப்படும் என்பதும் இயல்பானதாகும். ஆனால் தற்போது அவர்சார்ந்த கட்சியினராலேயே அவர்மீது சுமத்தப்படும் எதிர்மறை விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. முன்னர் எதிர்த்தரப்பு அரசியல் வாதிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுதலித்து பேசியதற்கு அப்பால் அவரை உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசியவர்களே தற்போது அதேவகையான குற்றச்சாட்டுகளைக் அவர்மீது சுமத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகத் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர் என்றும் தமிழரசுக்கட்சியை சிதைப்பவர் என்றும் அவர்மீது கூர்மையான குற்றஞ்சாட்டுக்கள் அவர் கட்சித் தலைவர்களாலே முன்வைக்கப்டுகின்றன.

ஓர் அரசியல்வாதி என்ற வகையில் சுமந்திரன் மீதான விமர்சனங்கள் தனியாள் பற்றியதாகவன்றி அவரது அரசியற் கொள்கை மற்றும் அதுசார்ந்த நடத்தைகள் சார்பானதாகவே இருக்க முடியும். பொதுவாழ்வில் ஈடுபடும் ஒருவரின் தனியாள் நடத்தைகளும் சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டுமென்று சமூகம் எதிர்பார்ப்பது இயல்பு. அவ் எதிர்பார்ப்பில் சுமந்திரன் இதுவரை குறைவைத்ததாகத் தெரியவில்லை. அந்த வகையில் சுமந்திரன் மீதான முழுக்குறைபாடுகளும் அவரது அரசியல் செயற்பாடுகள் சார்ந்ததாகவே இருக்கின்றன. இந்த இடத்தில்தான் அவர்மீது தற்போது விமர்சனங்களை முன்வைப்பவர்கள் தொடர்பாகப் பல கேள்விகள் எழுகின்றன.
2010 ஆம் ஆண்டில் சுமந்திரன் தேசியப்பட்டியல் மூலமான பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை சுமந்திரனின் அரசியல் கொள்கையிலும் அதுசார் அணுகுமுறைகளிலும் எந்த மாற்றமுமில்லை. சுமந்திரனின் அரசியல் கொள்கை என்பது இன்றுவரை தமிழரசின் கொள்கையாகவும் 2022 வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாகவுமே இருக்கின்றது. அதற்கு மாறாக இருந்தது என்று இதுவரை அக்கட்சித்தலைவர்கள் யாரும் சுமந்திரன்மீது குற்றஞ் சுமத்தியதாகவோ அன்றி கட்சி நடவடிக்கை எடுத்ததாகவோ ஆதாரங்களில்லை. அதேபோலவே அவரின் அரசியற் செயற்பாடுகள் தொடர்பாக எந்தக் குற்றச்சாட்டுகளும் கட்சியில் முன்வைக்கப்பட்டதாகவோ நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ இல்லை. பங்காளிக் கட்சித் தலைவர்கள் சிலர்கூட அவ்வப்போது பெயருக்குச் சில விமர்சனங்களை முன்வைத்தாலும் ஒற்றுமையைக் குலைக்க விரும்பவில்லை என்ற பெயரில் தங்கள் சௌகரியங்களில் ஊறு ஏற்படுத்த அவர்கள் விரும்பியிருக்கவில்லை என்பதே உண்மை. 2022 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தாலும் கடந்த பாராளுமன்றம் கலைக்கும்வரை கூட்டமைப்பின் பேச்சாளராகவும் தற்போதுவரை தமிழரசுக்கட்சியின் பேச்சாளராகவும் அவரே இருக்கின்றார். அதுமட்டுமன்றி தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத நிலையிலும்கூட தேசிய அரசியலிலும் இராஜதந்திரிகள் மட்டத்திலும் கவனிப்புக்குரியவராகவே உள்ளார்.
யதார்த்தம் இதுவாக இருக்கையில் கட்சியில் முன்னர் ஏற்றிவைத்தவர்களும் போற்றிப் பாடியவர்களும் இப்போது மட்டும் தூற்றி வசைபாட எத்தனிப்பது ஏன்? தொடக்கத்திலிருந்தே இன்றுவரை சுமந்திரன் தான் வரைந்து கொண்ட பாதையில் பயணிக்கும்போது மிக அண்மைக்காலம்வரை கைகட்டியும், கைதட்டியும் வரவேற்று அவருடன் அதேபாதையில் சௌகரியமாகப் பயணித்தவர்கள் இப்போது மட்டும் அவர்மீது கைகொட்டிச் சிரிக்கவேண்டும் என்று மக்களிடம் எதிர்பார்ப்பது ஏன்? இதுவரை சுமந்திரன் தேசத்தின் குரலாகவும், சாணக்கியனாகவும், தியாகியாகதவும் தெரிந்தவர்களுக்கு இப்போது மட்டும் துரோகியாகத் தெரிவது எங்ஙனம்? அவ்வாறாயின் இப்போது தம்மை மாற்றிக் கொண்டவர்கள் அல்லது அவ்வாறு நடிப்பவர்கள் மற்றவர்களா அல்லது சுமந்திரனா? அதனடிப்படையில் விமர்ச்சனத்துக்குரியவர்கள் இப்போது தம்மை மாற்றிக்கொண்டதாகக் காட்டுபவர்களா அல்லது சுமந்திரனா?
சுமந்திரன் தமிழரசுக் கட்சியினதோ அல்லது கூட்டமைப்பினதோ தலைவரல்லர். ஒரு கட்சியின் அல்லது கூட்டணியின் தவறுக்குக் கட்சித்தலைவரும் அதேபோல கூட்டணியின் தவறுகளுக்கு அதன் தலைவரும் பங்காளிகளுமே பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இருக்கும்போது சுமந்திரனை நோக்கி கைநீளுவது ஏன்? சரி கட்சி சார்ந்த முக்கிய பணிகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது என எடுத்துக்கொள்வோம். அவர் அதைச் சரியாகச் செய்யவில்லை அல்லது எதிராகச் செய்துவிட்டார் என்றால் கட்சி என்ற அடிப்படையில் ஒன்று அதன் பின்னர் அப்பொறுப்புக்களை இன்னொருவரிடம் கையளித்திருக்க வேண்டும். மற்றது தவறுக்காக கட்சி உறுப்பினர் என்ற வகையில் அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லையெனில் சுமந்திரன் சொல்லியவையும் செய்தவையும் சரி என்றே கட்சி ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதுதானே பொருள். அதாவது இப்போது அவர்மீது கைசுட்டும் தலைவர்கள் எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டனர் என்பதுதானே உண்மை. சுமந்திரன் தனியாள்.
கட்சிக்குழுக்களில் பலபேர். பலபேர் இருந்தும் தனியொருவனைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் ஒன்று அந்த தனிமனினது நடவடிக்கைகள் சரி என்பது அல்லது அத்தனியொருவனை பலபேர் கொண்ட கட்சியினால் கட்டுப்ப்படுத்த முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்பதுதானே பொருள். அப்படியானால் கட்சிக்கு யாப்பு, பொதுக்குழு, மத்திய குழு, செயற்குழு, தலைவர் இருந்தென்ன பயன்? அப்படியானால் இங்கு குற்றவாளிகள் யார்? மறுபுறத்தில் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகச் செயற்பட்ட போது அல்லது பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு உரிய மதிப்பைக் கொடுக்காதபோது அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன? இங்கு யார் குற்றவாளிகள்?
சுமந்திரன் விடுதலைப்புலிகளுக்கு எதிரான மனப்பாங்கு கொண்டவர் என்பதும் தமிழ்த்தேச நிலைப்பாட்டுக்கு ஆதரவற்றவர் என்பதும் அவரைக் கொண்டுவரும்போது சம்பந்தன், மாவை,வினாயகமூரத்தி உட்பட்ட மூத்த தலைவர்களுக்குத் தெரியாதா? அல்லது இதுவரையான அவரது செயற்பாடுகள் சிறிதரன் உட்பட்ட பிந்திய தலைவர்களுக்கு தெரியாதா? விடுதலைப்புலிகளின் ஆட்கடத்தலையும் விசாரிக்க வேண்டும் எனக்கூறிய சுமந்திரன் மீது வசைபாடியோர் விடுதலைப்புலிகளுக்கு கோவைகள் தூக்கிய சம்பந்தன் பின்னர் அவர்களைப் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாத்த்தை மகிந்த ஒழித்தபடியால்தான் சுதந்திரமாக திருகோணமலுக்குச் செல்ல முடிகிறது என்று சொன்னபோது மௌனிகளாக இருந்தது ஏன்? குறைந்தது தமிழரசுக்கட்சியின் கூட்டத்திலாவது ஒரு கண்டனம் தெரிவிக்கப்பட்டதா? வாக்குகளுக்காகவும் வெளிநாட்டு காசுக்காகவும் புலி ஆதரவு வேடம் தரிப்போரால் அது எப்படி முடியும்? பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் யாராவது அக்கூற்றைச் சம்பந்தன் மீளப்பெறவேண்டும் என்று வலியுறுத்தினார்களா? அவர்கள் எவ்வாறு வலியுறுத்துவார்கள்? அவர்களில் பலர் இன்றும் அதே மனநிலையில் இருப்பவர்களாச்சே. அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோதும் விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்த வேண்டாம் என்று கேட்டதுடன் இராணுவத்தின் கூலிப்படையாகச் செயற்பட்ட தலைவர்கள் இப்போது தமிழ்த்தேசியவாதிகள். ஆனால் சுமத்திரன் மட்டும் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர். வழமைபோலத் தனது விருப்பத்தைக் கட்சியின் முடிவாக எடுத்து ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு வெளிப்படையாகவே ஆதரவளித்த சுமந்திரன் போன்றவர்கள் துரோகிகள். தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்த பொதுவேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கூறிவிட்டு இரகசியமாக ரணிலுக்கு ஆதரவளித்தவர்கள் தேசியவாதிகள். இங்கு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக வெளிப்படையாகக் கதைப்பவர்கள் துரோகிகள். ஆனால் வாயில் தமிழ்த் தேசியமும் மனதாலும் உடலாலும் அதற்கு எதிரான செயற்பாடுகளைக் கொண்டவர்கள் தேசியவாதிகள். இவ்வாறுதான் நாம் ஒருவரைத் தமிழ்த் தேசியவாதியவாதியென்றும் இன்னொருவரை அதற்கு எதிரானவரென்றும் வரைவிலக்கணப்படுத்துகிறோம்.
இதுவரை வெளியிலிருந்து தமிழ்த் தேசியத்தை நேசிப்போர் சுமத்திரனின் அரசியற் செயற்பாடுகள் தொடர்பாக விமர்சித்தபோது மறுத்தான் கொடுத்தவர்கள் அல்லது கண்டும் காணாததுபோல இருந்தவர்கள் தற்போது ஓலமிடுவதற்கான காரணம் சுமந்திரனின் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான நிலைப்பாட்டினால் அல்ல. தங்கள் தங்கள் இருப்புக்கு ஆபத்து வந்துவிட்டது என்பதனால் மட்டுமே. இங்கு சுமந்திரனின் வல்லமையும் அதனால் கவர்கொண்டிருக்கும் தன்முனைப்பும்தான் இவர்களுகழகுப் பிரச்சினையே அன்றி தமிழ்த் தேசியமல்ல. இப்படி ஒருமுறை கற்பனை செய்து பார்ப்போம். சென்றமுறை கலையரசனுக்கு வழங்கிய தேசியப்பட்டியல் நியமனத்தை மாவை சேனாதிராசாவுக்கு வழங்கியிருப்பதுடன் தமிழரசுக்கட்சித் தலைவராக மாவையைத் தொடரவிட்டிருந்தால் அல்லது சிவஞானம் சிறிதரனின் தலைவர் தெரிவை நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தாது அங்கீகரித்திருந்தால் சுமந்திரன் தமிழர்க்கு வேண்டியவர் என்றும் அவர் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவது அவசியம் என்றும் 2015 இல் சம்பந்தன் கூறிய அதே வார்த்தைகளைக் கட்சியிலுள்ள எல்லோரும் கடந்த தேர்தலில் அப்படியே ஒப்புவித்திருப்பர் அல்லவா? தோல்வியடைந்தவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டும் என்று சுமந்திரனின் முன்னைய வார்த்தைகள் இப்போது அவருக்கு எதிராகப் பலராலும் பயன்படுத்தபடுகிறது. ஆனால் அவ்வாறெனில் தந்தை செல்வா, அமிர்தலிங்கம், அண்மைக்காலத்தில் கஜேந்திரகுமார்,சுரேஷ் உட்பட பலர் அரசியலில் தொடர்ந்திருக்க முடியாதே. உண்மையில் அனுர அலை ஒன்று அடித்திருக்காவிட்டால் சுமந்திரனும் இப்போது பாராளுமன்ற உறுப்பினர்தான். சுமந்திரன் மட்டுமல்ல இங்கு யாரும் சுத்தவாளிகள் இல்லை. சுமந்திரன் குற்றவாளியெனில் மற்றவர்களும் குற்றவாளிகளே. இதை மக்கள் அறிவர்.
ஆராய்ந்து பாரத்தால் அனைவருமே கூட்டுக்களவாணிகள்தாம். தம்மால் இயலாததை சுமந்திரனுக்கு தலைப்பாகை கட்டி மாலைபோட்டு வேள்விக்கு அனுப்பியவர்கள்தான் இவர்கள். ஆரம்பத்தில் இவ்வாறு இவர்கள் செய்ததை பின்னர் சுமந்திரன் தானாகவே செய்யத் தொடங்கிவிட்டார். தற்போது தம்மை நல்லவராகக் காட்டவும் தமது இருப்பைத் தக்கவைக்கவும் இப்போது சுமந்திரன் மீது விரல் சுட்டுகிறார்கள் என்பதே யதாரத்தம். சுமந்திரன் கெட்டவர் என்றால் இவர்களும் அத்தகையவர்களே. “ சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றஞ் சாட்டுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா “ என்ற வரிகள் இவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
நடந்த தவறுகளுக்கெல்லாம் ஒருவன்மீது குற்றஞ்சாட்டிவிட்டு தப்பமுனைந்தால் மீண்டும் அத்தவறுகளை இன்னொருவர் செய்வதற்கு வாயப்பு ஏற்படுத்துவதாகவே அமையும். தமிழ்த்தேச அரசியலின் இன்றைய நிலைக்கு அவர் இவர் என்றில்லாது அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்புக்கூற வேண்டும். சுமந்திரன் மட்டுமன்றி அனைத்துத் தலைவர்களும் தம்மை மீளாய்வு செய்யவேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.