இனச் சிக்கலை இணைப்பாட்சி அரசியல் யாப்பு மூலம் தீர்த்து வைக்க தேமச உளமார முன்வர வேண்டும்
நக்கீரன்
“மகா பாதகர்களான மகிந்த, கோட்டா, மைத்திரி, ரணில் ஆகியோருக்கு காட்டாத கடும் எதிர்ப்பை தமிழ் அரசியல் வாதிகள் அநுர குமாரவின் அரசிற்கு காட்டுவது ஏன்?” இந்த வரிகள் இந்த வாரம் வெளிவந்த கனடா உதயன் பத்திரிகையின் தலையங்கத்தின் தலைப்பாகும்.
” மகா பாதகர்களான மகிந்த, கோட்டா, மைத்திரி, ரணில் ஆகியோருக்கு காட்டாத கடும் எதிர்ப்பை தமிழ் அரசியல் வாதிகள் அநுர குமாரவின் அரசிற்கு காட்டுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்புவது ஏன் என்பது விளங்கவில்லை. உண்மையில் அதற்கான பதில் அதே தலையங்கத்தில் காணப்படுகிறது. தென்னிலங்கையில் மார்க்சீசம் பேசிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சரி, ரொஸ்க்கீசம் பேசிய இலங்கா சமஜமாஜிக் கட்சி பின்னாளில் அப்பட்டமான இனவாதத்தைக் கக்கின வரலாறு உண்டு. அதனை நாம் மறக்க முடியாது.
தனிச் சிங்களத்தை எதிர்த்த இந்தக் கட்சிகள் – இரண்டு மொழி ஒரு நாடு, ஒரு மொழி இரண்டு நாடு – என ஐம்பதுகளில் வீரம் பேசிய இந்தக் கட்சிகள் பின்னர் தனிச் சிங்களச் சட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களது முதுகில் குத்தினார்கள். இந்த இடத்தில் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப்பார்ப்பது நல்லது.
சிங்கள பௌத்த இனவாதத்தின் இடுகுறியான சிங்களம் மட்டும் சட்டத்திற்கு தமிழ் மக்கள் காட்டிய எதிர்ப்புக் காரணமாக அன்றைய பிரதமர் பண்டாரநாயக்க அவர்கள் தந்தை செல்வநாயகத்தோடு ஒரு உடன்படிக்கையை எழுதிக் கொண்டார். ஆனால் அந்த உடன்பாட்டிற்கு எதிராக சிங்கள – பவுத்த இனவாதிகள் காட்டிய எதிர்ப்புக் காரணமாக அந்த உடன்படிக்கை கிழித்து எறியப்பட்டது. அந்த உடன்படிக்கை கிழித்து எறியப்பட்டது. இதனை அடுத்து தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகம், 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி முதன்முறையாக வடக்கில் தமிழ் அரசை அறிவித்தார்.
சமஜமாஜி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கிய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் “சமகி பெரமுன” அரச படைகளை அனுப்பி தமிழரசுக் கட்சி நடத்திய சட்ட மறுப்புப் போராட்டத்தை முறியடித்தது.
இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சி செய்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் அரச அடக்குமுறையைக் கருத்திற் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி தமிழரசுக் கட்சியோடு கைகோர்த்தது. 1965 இல் டட்லி சேனநாயக்க பிரதமராகி தமிழ் கட்சிகளின் உதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தார். எதிர்க்கட்சிகள் இந்த அரசாங்கத்தை ஏழு பேர் கொண்ட கூட்டணி என்று கேலி செய்தன. அதற்கு முன்னோடியாக 1965 இல் டட்லி – செல்வா உடன்படிக்கை எழுதப்பட்டது. டட்லி – செல்வா என அழைக்கப்பட்ட இந்த உடன்படிக்கைக்கு எதிராக, சுதந்திரக் கட்சி, இலங்கா சமசமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ் கட்சி கூட்டணி “டட்லிகே படே – மசாலா வடே” என கத்திக்கொண்டு நாடு தழுவிய ஊர்வலங்களை நடத்தியது. கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற இந்தக் கூட்டமைப்பினரின் ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் தம்பராவே இரத்னசார தேரர் கொல்லப்பட்டார். இறுதியில் இந்த உடன்படிக்கை யூலை 1968 இல் முறிக்கப்பட்டது.
எனவே கடந்த காலங்களில் தங்களை சோசலீச சிந்தனையாளர்கள், இடதுசாரிப் போக்குடையவர்கள் என்று சொல்லிக் கொண்ட கட்சிகள் தமிழ்மக்களை ஏமாற்றின. இன்று அந்தக் கட்சிகள் ஏறக்குறைய காணாமல் போய்விட்டன.
இந்தப் பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசையும் தமிழ் மக்கள் சந்தேகக் கண்களோடு பார்ப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இலங்கா சமஜவாதக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட தேசிய மக்கள் சக்தியின் அச்சாணியாக விளங்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) அடிநாள்த் தொட்டு சிங்கள – பவுத்த பேரினவாதத்தை கக்கும் கட்சியாகவும் தமிழின – தமிழ்த் தேசிய – எதிர்ப்புக் கட்சியாகவும் நடந்து வந்துள்ளது.
போர்க்காலத்தில் 60,000 சிங்கள இளைஞர்களை இராணுவத்துக்கு சேர்த்தது, 2006 இல் வட கிழக்கு இணைப்பை உச்ச நீதிமன்றம் சென்று துண்டித்தது, சுனாமி காலத்தில் வெளிநாட்டு உதவிநிதியை வி.புலிகளுடன் பங்கிட்டுக் கொள்வதை எதிர்த்து சந்திரிகா குமாரதுங்காவின் ஆட்சியில் இருந்து வெளியேறியது இப்படி ஜேவிபி கட்சிக்கு ஒரு கறைபடிந்த வரலாறு உண்டு. இருந்தும் தேர்தல் காலத்தில் இனவாதம், மொழிவாதம் மற்றும் மதவாதத்துக்கு எதிராக ஜேவிபி தலைவர்கள் எழுப்பிய குரலை தமிழ் மக்களில் ஒரு சாரார் நம்பி அந்தக் கட்சிக்கு வாக்களித்தார்கள்.
கடந்த ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தல் சரி, நாடாளுமன்றத் தேர்தல் சரி இரண்டிலும் நாட்டில் புரையோடிப் போய்விட்ட இனச் சிக்கல் தொடர்பாக எந்தவொரு உறுதிமொழியையும் தேசிய மக்கள் சக்தி வழங்கவில்லை. 13ஏ தொடர்பாக அதன் தேர்தல் அறிக்கையில் நேரடியாக எந்தக் குறிப்பும் இல்லை. நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட வரைவு யாப்பு முன்னகர்த்தப் போவதாக மட்டும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
ஜேவிபி யை ஒரு இடதுசாரி அரசியல் கட்சி என்று வருணிக்கப் பட்டாலும் அடிப்படையில் அதுவொரு சிங்கள – பவுத்த பேரினவாதக் கட்சி என்பதே அதன் வரலாறாக இருக்கிறது. ரோகண விஜயவீர கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கட்சி “தேசிய இரட்சிப்பு முன்னணி” என்ற பெயரில் தேர்தல் அரசியலுக்குத் திரும்பியது. 1994 நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கிய சிங்கள – பவுத்த தேசியவாத இலங்கைச் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளித்தது. 2004 இல், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் ஒரு உறுப்பாக அரசாங்கத்துடன் இணைந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா “13 ஆவது திருத்தச் சட்டமும் அதிகாரப் பகிர்வும் வடக்கு மக்களுக்கு அவசியமானவை அல்ல, அவர்களுக்கு அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வே அவசியமாக உள்ளது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த விடயங்களை பயன்படுத்தி வருகின்றனர்’’ என்று அவர் பொதுவெளியில் தெரிவித்துள்ளார். இது போன்ற கருத்தை அமைச்சரவைப் பேச்சாளர் விஜித்த ஹேரத்தும் கூறியிருக்கிறார்.
மேலும் போர்க்காலத்தில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக இராணுவ அதிகாரிகள் எவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் எனத் திட்டவட்டமாக தேமச கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் (ஐநாமஉபேரவை) பேரவை நிறைவேற்றிய தீர்மானம் 50/1 நிராகரித்துள்ளார்கள். அதேபோன்று ஐநாமஉ பேரவையின் சர்வதேச விசாரணைக் கோரிக்கையையும் புறந்தள்ளியுள்ளார்கள். சுருங்கச் சொன்னால் அதி தீவிர சிங்கள – பவுத்த கடும்போக்காளரான மகிந்த இராசபக்ச அவர்களது பேரினவாத கோட்பாட்டையே எழுத்துப் பிசகாமல் அனுர குமார திசநாயக்க அவர்களின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பின்பற்றுகிறது – பின்பற்றும் – எனக் கொள்ளலாம். ஒரு வாதத்துகுகு அந்தக் கட்சி ஒரு இடதுசாரிக் கட்சி என்று வைத்துக் கொண்டாலும் நாட்டில் ஒரு இனச் சிக்கல் இருப்பதை அது ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
ஆனால் உண்மையான இடதுசாரி நோக்கு இனச் சிக்கல் அல்லது தேசியச் சிக்கல் இரண்டு காரணங்களால் தோன்றுகிறது. ஒரு பேரரசில் உள்ள முதலாளிகள் தமது பொருளாதார நலன்களின் அடிப்படையில் பிற நாடுகளைத் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வரும் நிலையில் அந்நாடுகள் உரிமைக்காகப் போராடும் போது தேசியப் பிரச்சினை எழுகிறது. மற்றொன்று, ஒர் அரசு தேசியமாக உருவாகின்ற போது ஒரேஅரசின் கீழ் உள்ள பேரினத்தைச் சார்ந்த முதலாளிகள் தமது பொருளாதார விரிவாக்கத்தின் காரணமாக மற்ற சிறிய தேசியத்தின் பண்பாடு, கல்வி, நீதி, பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றை ஒடுக்கும் போது ஏற்பபடுகிறது.
ஜேவிபி கட்சி நீண்ட காலமாகவே அதிகாரப் பகிர்வை எதிர்த்து வருகிறது. மாகாண சபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் கையளிக்கப்படும் என்பது பற்றி சனாதிபதி அனுர குமார திசநாயக்க மவுனம் சாதிக்கிறார். சனாதிபதி தேர்தல் பரப்புரைக் காலத்திலும் இன்றைய சனாதிபதி அனுர குமார திசநாயக்க தமிழர்களுக்குத் தேவை மூன்று வேளை உணவு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அவற்றைவிட வேறு தேவைகள் இல்லை என்ற பொருள்பட தேர்தல் மேடைகளில் பேசியிருந்தார்.
தேமச ஒரு இடதுசாரிக் கட்சி. அவர்களது சித்தாந்தத்தின் படி எல்லாச் சிக்கல்களுக்கும் பொருளாதரமே மூல காரணம், அதனைத் தீர்த்து வைத்தால் இனச் சிக்கல் மட்டுமல்ல ஏனைய சிக்கல்களும் தாமாகவே தீரும் என்பதுதான். ஆனால் உலக வரலாறு இது கனவுலகக் கோட்பாடு எனச் சொல்கிறது.
சோவியத் ஒன்றியம் 1991 இல் கரைந்து போன போது அதில் இருந்த 15 நாடுகளும் இனவழி பிரிந்து மொழிவழி ஒன்று கூடித் தனித்தனி நாடுகளாக உருப்பெற்றன. யூகோசிலாவிக்கிய குடியரசும் 1991-1996 காலப் பகுதியில் இன, மொழி அடிப்படையில் 6 நாடுகளாக தோற்றம் பெற்றன. இந்த வரலாற்று உண்மையை – அது சொல்லும் பாடத்தை – தேமச, குறிப்பாக ஜேவிபி வசதியாக மறந்து விட்டது.
அதனால் தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம், அவர்களுக்குத் தனித்த மரபுவழித் தாயகம், தனித்த மொழி, தங்களைத் தாங்களே ஆளும் உரிமை உண்டு என்பதை ஏற்க ஜேவிபி மறுக்கிறது. இனப் பிரச்சனை தொடர்பாக ஜேவிபி கட்சி மகிந்த இராசபக்சவின் சிங்கள – பவுத்த மேலாண்மைக் கொள்கையையே பின்பற்றுகிறது எனலாம்.
தேமச சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு “ஊழலை ஒழிப்போம். ஊழல்வாதிகளைச் சிறையில் அடைப்போம்” என்ற முழக்கம் முக்கிய காரணம். ஆனால் இதில் கூட சனாதிபதி அனுர குமார திசநாயக்கா சறுக்கி வருவது தெரிகிறது. இலங்கைத் தமிழ்த் தேசியம் முதலாளித்துவ சிந்தனை படைத்தது அல்ல. அது இடதுசாரி அரசியலுக்கு எதிரானதும் அல்ல. ஆனால் அந்த இடதுசாரி அரசியல் தூய்மையாக இருக்க வேண்டும்.
கனடா உதயன் தலையங்கத்துக்கு அந்த ஏட்டின் பத்தி எழுத்தாளர் நிலாந்தன் அதே இதழில் தக்க பதில் அளித்துள்ளார். “பொருளாதார நெருக்கடியின் மூல காரணத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் ஒரு வகையில் இனவாதம்தான்” என்கிறார்.
“இப்பொழுது அனுர வந்திருக்கிறார். இன முரண்பாடுகள் இல்லை என்று சொல்லுகிறார். அது தவறு. இன முரண்பாடுகள் எப்படி இல்லாமல் போயின? தமிழ்ப் பகுதிகளில் அவருடைய வேட்பாளர்களுக்குக் கிடைத்த வெற்றியை வைத்து அவ்வாறு கூற முடியாது. இனமுரண்பாடு எங்கிருந்து தோன்றியது? தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக, தேசமாக ஏற்றுக்கொண்டு பல்லினத்தன்மை மிக்க ஒரு நாட்டைக் கட்டி எழுப்பத் தயாரில்லை என்பதுதான் இன முரண்பாட்டின் வேர். எனவே இன முரண்பாட்டைத் தீர்ப்பது என்பது நாட்டின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ளும் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களைச் செய்வதுதான். ஆனால் அதைச் செய்வதற்கு அனுர தயார் இல்லை.
அனுரவின் இடத்தில் யார் இருந்தாலும் அதைச் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இனப் பிரச்சினைதான் நாட்டைக் கடனாளியாக்கியது என்ற விடயத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு காரணம், ஊழலும் முறைகேடும் என்றுதான் அவர்களிற் பலர் கூறி வருகிறார்கள். சிங்களப் புத்திஜீவிகளில் பெரும் பகுதியினரும் அப்படித்தான் கூறி வருகிறார்கள். பொருளாதார நெருக்கடியின் மூல காரணத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் ஒரு வகையில் இனவாதம்தான்.
ஆனால் இப்பொழுது இனப்பிரச்சினையில் கை வைத்தால், அதாவது ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் கை வைத்தால், அது இளம் அரசாங்கத்தைக் கவிழ்த்து விடும் என்று ஒரு விளக்கம் கூறப்படுகிறது. எனவே பொருளாதார நெருக்கடியை ஓரளவுக்குத் தணித்தபின், ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் இனப்பிரச்சினையில் கை வைக்கலாம் என்றும் ஒரு விளக்கம் கூறப்படுகிறது. இது வண்டிலுக்குப் பின் மாட்டைக் கட்டும் வேலை. நோய்க்கு உரிய உள்மருந்தை எடுக்காமல், வலி நிவாரணிகளை மட்டும் வழங்கும் ஓர் அரசியல்.
எனவே இந்த இடத்தில் மாற்றத்தைச் செய்ய அனுரவால் முடியாது. அவருக்குக் கிடைத்த வெற்றியின் கைதி அவர். அந்த வெற்றியை மீறி அவர் சிந்திக்க முடியாது. அதனால்தான் கவர்ச்சியான சுலோகங்களை முன்வைக்கின்றார். நாட்டைச் சுத்தப்படுத்தப் போவதாகக் கூறுகிறார். ஆனால் நாட்டின் உண்மையான கறை அப்படியே இருக்கத்தக்கதாக அதன் விளைவாக வந்த கறைகளை அகற்றுவது என்பது வலி நிவாரணி அரசியல்தான். எனவே நாட்டைச் சுத்தப்படுத்துவது என்றால் இனப்பிரச்சினை என்ற கறையை அகற்ற வேண்டும். அங்கிருந்துதான் சிறீலங்காவைக் கிளீன் பண்ணத் தொடங்க வேண்டும்.” (பக்கம் 12)
தமிழ்மக்கள் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை எதிர்ப்பதும், எதிர்க்காமல் விடுவதும் தேசிய இனச் சிக்கல் தொடர்பாக அது மேற்கொள்ளும் அணுகுமுறையைப் பொறுத்தது. இனச் சிக்கலை இணைப்பாட்சி அரசியல் யாப்பு மூலம் தீர்த்து வைக்க தேசிய மக்கள் சக்தி உளமார முன்வருமேயானால் தமிழ் மக்களது ஆதரவு அந்தக் கட்சிக்கு இருக்கும்!
பந்து ஆளுவோர் பக்கம் கிடக்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.