தைப்பொங்கல், திருவள்ளுவர் பிறந்த நாள், திருவள்ளுவராண்டுத் தொடக்கம் தமிழர்களது முப்பெரும் விழாக்கள்
நக்கீரன்
உலகில் தோன்றிய ஒவ்வொரு நாகரிகம் மற்றும் பண்பாட்டில் மக்கள் ஒன்று அல்லது அதற்கு மேலாகவும் சில நாட்களை விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சிறப்பாக உழவுத் தொழில் செய்வோர் அறுவடை நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இன்றும் மேற்குலக நாடுகளில் அறுவடை நாள் Thanks Giving Day என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர்கள் ஆண்டில் முக்கியமாக மூன்று விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர். அவை தைப் பொங்கல், சித்திரைப் புத்தாண்டு மற்றும் தீபாவளியைக் ஆகியனவாகும். இதில் சித்திரை முதல் நாள் தமிழ் இந்துக்களின் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. சிங்கள மக்களது மூதாதையர்கள் ஆன நாகர்கள் கிமு 3 ஆம் நூற்றாண்டில் புவுத்தத்தை தழுவதற்கு முன்னர் வேதநெறியைப் (இந்து மதத்தை) பின்பற்றுபவர்களாக இருந்தார்கள். அதன் காரணமாவே சித்திரை முதல் நாளை சிங்கள பவுத்தர்களும் ஆண்டுப் பிறப்பாகாக் கொண்டாடி வருகிறார்கள்.
தீபாவளி நாளைக் கொண்டாடும் வழக்கம் எப்போது தொடங்கப்பட்டது என்பது தெரியவில்லை. இது ஒரு வடநாட்டு இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை என்பது மட்டும் தெரிகிறது. தீபாவளி இராமன் 14 ஆண்டு வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பிய நாள் என்றும், திருமால் நரகாசுரன் என்ற திராவிடனைக் கொன்ற நாள் என்றும் சமணர்களின் கடைசி தீர்தங்கரான வர்த்தமான மகாவீரர் அவர்கள் பாவாபுரி நகரத்திலே வீடு பேற்றினை அடைந்து நாள் என்றும் கூறுகின்றனர். தமிழ் வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டு வரை தீபாவளி குறித்த குறிப்புகள் ஏதும் கிடையாது.
தமிழர்கள் கொண்டாடும் இந்த மூன்று விழாக்களிலும் பொங்கல் விழாவே சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல், உழவர்கள் வயலில் விளைந்த நெல்லை அறுவடைசெய்து அரிசியாக்கி உற்றார், உறவினர்களோடு பொங்கி உண்டு மகிழும் நாளாகும். நெல் விளைச்சலுக்குக் காரணமாக இருந்த சூரியனுக்கும் நன்றி நவிலும் நாளாகும்.
இன்று நாம் பின்பற்றும் 60 ஆண்டுமுறை அறிவியல் அடிப்படை அற்றது. தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு முரணானது. தமிழினத்துக்கு ஏற்பட்ட அழிவையும் இழிவையும் எண்ணிப் பார்த்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்து மூன்று முக்கிய தீர்மானங்களை எடுத்தார்கள்.
தமிழ்ப் புத்தாண்டு
1. தை முதல் நாள் திருவள்ளுவர் பிறந்த நாள். அதையே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் எனக் கொள்வது.
2. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது.
3. திருவள்ளுவர் காலம் கிமு 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31 யைக் கூட்டினால்) என்று கொள்வது.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. இந்த முடிவை எடுத்தவர்களில் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க. சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப்பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
அதன் பின் 1937 டிசெம்பர் 26 இல் திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. மறைமலை அடிகளார், பி.டி. இராசன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும் பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் பறைசாற்றியது. தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் சான்றுகளுடன் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், பொங்கலே தமிழர் விழா என்று அறுதியிட்டுப் பேசினார்.
இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் “மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்“ என்று விளக்கம் கொடுத்தார்.
1969 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது.
1971 இல் கலைஞர் கருணாநிதி ஆட்சி திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையை 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் அரசிதழிலும் வெளியிட்டது.
1981 முதல் எம்ஜிஆர் ஆட்சி அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றுமாறு ஆணை பிறப்பித்தது.
2008 சனவரி 28 இல் கலைஞர் கருணாநிதி இன் திமுக ஆட்சியில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றும் அதுவே திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் எனவும் சட்ட சவையில் தீர்மானம் நிறைவேற்றி அது சட்டமாக்கப்பட்டது.
2011 மே இல் மீண்டும் ஆட்சியைப் பிடித்த செல்வி ஜெயலலிதா 2008 இல் திமுக ஆட்சி இயற்றிய சட்டத்தை இல்லாது செய்து சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார். மீண்டும் 2021 இல் ஆட்சியைப் பிடித்த திமுக அரசு அந்தச் சட்டத்தை அப்படியே விட்டுவிட்டது.
எனவே தை முதல் நாளை திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாகவும் சித்திரை முதல் நாள் தமிழ் இந்துக்களின் புத்தாண்டுத் தொடக்கமாகவும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தை முதல்நாளை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படை இருக்கிறது.
தை முதல் நாள் (January 13/14/15) நாள் ஞாயிறு தனது தென்திசைச் செலவை (தட்சிணாயனம்) முடித்துக் கொண்டு தனு இராசியில் இருந்து விலகி – மகர இராசியில் உட்புகுந்து வடதிசைச் செலவை (உத்தராயணம்) தொடங்குகிறது. ஆனால் வானியல் அடிப்படையில் ஞாயிறின் வடதிசைச் செலவு டிசெம்பர் 21 இல் (Winter Solstice) தொடங்குகிறது.
புவி ஞாயிறை ஒரு நீள்வட்டத்தில் (elliptic) சுற்றிவருகிறது. இது எமது கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றுவது போன்ற தோற்ற மயக்கத்தை (illusion) ஏற்படுத்துகிறது. ஒரு வட்டத்துக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. அதன் தொடக்கம் எந்தப் புள்ளியிலும் தொடங்கலாம். எந்தப் புள்ளியிலும் முடியலாம். ஞாயிறின் வடதிசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசிக்கு (பாகை 300) உட்புகும் நாளும் (மகரசங்கராந்தி) வானியல் அடிப்படையில் ஆனதுதான்.
புவி தனது அச்சில் சுழலும் போது ஞாயிறு – நிலா இரண்டின் ஈர்ப்பாலும் அதன் நடுப்பகுதி புடைத்து துருவங்கள் சிறிது தட்டையாக இருப்பதாலும் அதன் அச்சில் தளம்பல் (wobble) ஏற்பட்டு சுற்றும் வேகம் குறைகிறது. இதனால் புவியின் அச்சு ஆண்டொன்றுக்கு 50.26 ஆர்க் வினாடிகள் (20 மணித்துளி 14 வினாடி) மேற்குத் திசையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. 71.6 ஆண்டுகளில் இந்த வேறுபாடு 1 பாகை (ஒரு நாள்) ஆகக் கூடிவிடும். இந்தப் பின்னேகலை (Precession of Equinoxes) நட்சத்திரத்தை வைத்து ஆண்டைக் கணிக்கும் இந்திய சோதிடர்கள் கணக்கில் எடுப்பதில்லை. வானியலாளர்களும் மேற்குலக சோதிடர்களும் இந்தப் பின்னேகலைக் கணக்கில் எடுக்கிறார்கள். இதனால் மேற்குலக இராசிச் சக்கரம் நகர்ந்து (Moving zodiac – நாயன) கொண்டிருக்கிறது. இந்திய சோதிட இராசிச் சக்கரம் நகராமல் (Fixed Zodiac – நிராயன) இருக்கிறது.
மேற்குலக – இந்திய பஞ்சாங்கம் இரண்டுக்கும் இடையே காணப்படும் அயனாம்ச வேறுபாடு கடந்த 2000 ஆண்டுகளாக திருத்தப்படவில்லை. இதனால் பருவகாலங்கள் 24.5 நாட்களால் பிந்திப் போகின்றன. அயனாம்ச வேறுபாட்டைத் திருத்தி இருந்தால் சித்திரைப் புத்தாண்டு வேனில் பருவம் தொடங்கும் மார்ச்சு 20 – 21 ஆம் நாள் கொண்டாடப் பட்டிருக்கும்.
இந்த அயனாம்ச வேறுபாட்டை கணக்கில் எடுக்காததால் காலக் கணிப்பு தவறிவிட்டது என்ற உண்மை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மகாகவி பாரதியார் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. தென்னாட்டுப் பஞ்சாங்கக் கணிப்பாளர்கள் கிபி ஏழாம் நூற்றாண்டில் வராகமிகரர் வகுத்துக் கொடுத்த காலக்கணிப்பை அப்படியே இன்றும் பின்பற்றி வருகின்றனர். அதனால் 24.12 நாட்கள் காலக்கணிப்பில் பிற்பட்டதாகி இருக்கிறது.
இராசி சக்கரத்தில் முதல் இராசியான மேட (ஆடு) இராசியில் ஞாயிறு நுழைகின்ற தொடக்கமே (ஏப்ரில் 14) சித்திரைப் புத்தாண்டாகும். பஞ்சாங்கத்தில் இதனை வேனில் காலத்தின் தொடக்கம் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் வானியல் அடிப்படையில் மார்ச் 20 அல்லது 21 இல் இடம்பெறும் வேனில் சமயிரவு (Spring Equinox) நாளில் தொடங்கிவிடுகிறது. இந்த சமயிரவு நாள் என்பது ஞாயிறு தனது வட செலவின் (உத்தராயணம்) போது வான் நடுக்கோட்டை (Celestial equator) கடக்கும் நாளாகும்.
மேடம் முதல் மீனம் வரை உள்ள 12 இராசிகளில் ஒரு வேனில் சமயிரவு நாளில் தொடங்கி அடுத்த வேனில் சமயிரவு வரை உள்ள 365 நாட்கள், 5 மணி, 48 நிமிடம், 45 செக்கன் ஒரு சராசரி சூரிய (வெப்ப மண்டல) ஆண்டாகும்.
பஞ்சாங்கக்காரர்கள் வானத்தில் உள்ள சித்திரை (Spica ) நட்சத்திரத்தை ஞாயிறு கடந்து மறுபடியும் தொடங்கிய அதே கோட்டில் வந்து சேருவதை ஒரு நட்சத்திர ஆண்டாகக் கொள்கிறார்கள். இதன் சராசரி காலம் 365 நாட்கள், 6 மணி, 9 நிமிடம், 10 செக்கன் ஆகும். இரண்டுக்கும் இடையில் ஓர் ஆண்டில் 20 நிமிடம் 25 செக்கன் (50.3 ஆர்க் செக்கன்) வித்தியாசம் ஏற்படுகிறது.
இந்திய சோதிடம் பருவகாலங்களை, சம பகல்இரவு நிகழ்வுகள் மற்றும் கடகக் கோடு மகரக் கோடு புள்ளிகளை கணக்கில் எடுப்பதில்லை. இதனால் சமய விடுமுறைகள், கிரிகைகள், திருவிழாக்கள், யாகப்பலிகள் பிழையான நாட்களில் அனுட்டிக்கப்படுகின்றன.
ஏப்ரில் 14 அன்று ஞாயிறு கிபி 285 ஆம் ஆண்டில் வேனில் சமயிரவாக இருந்த அதே புள்ளியை கடந்து செல்கிறது. இதுபோல் ஞாயிறு எல்லா நட்சத்திரக் கூட்டங்களையும் கடந்து போகும்போது வேனில் சமயிரவு கிபி 13,460 ஆண்டில் செப்தெம்பர் 23 இல் இடம்பெறும். அப்போது புவியின் வான்அச்சு இப்போதுள்ள துருவநட்சத்திரத்துக்குப் பதில் வேகா (Vega) என்ற விண்மீனை நோக்கியிருக்கும்.
சோதிடர்களைக் கேட்டால் சூரியன் புவியைச் சுற்றி வருவதாகவே சொல்வார்கள். அதன் அடிப் படையிலேயே சாதகம் கணிக்கப்படுகிறது. உண்மையில் புவி தான் சூரியனை சுற்றி வருகிறது. புவி தனது அச்சில் சுற்றும் அதே வேளை சூரியனையும் ஒரு நீள் வட்ட வடிவமான ஓடு பாதையில் சுற்றி வருகிறது. புவி தனது அச்சில் தன்னைத் தானே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் சுழல்கிறது. ஒரு முறை புவி சூரியனை சுற்றி வர 365.26 நாட்களை எடுக்கிறது.
சனவரி 3 இல் பூமி சூரியனுக்கு அண்மையில் (147.3 மில்லியன் கிமீ) காணப்படுகிறது. யூலை 4 இல் பூமி சூரியனுக்கு தொலைவில் (152.1 மில்லியன் கி.மீ.) காணப்படுகிறது. ஆனால், பருவ மாற்றத்துக்கு பூமியின் தொலைவு காரணமல்ல. அதேபோல் கோள்கள், நட்சத்திரங்களும் காரணமல்ல. புவியின் அச்சு ஓடு பாதையின் செங்குத்துக் கோட்டிற்கு 23.45 பாகை சரிந்து காணப்படுகிறது. இந்தச் சாய்வில் மாற்றம் ஏற்படுவதில்லை. இதுவே பருவ மாற்றங்களுக்குக் காரணமாகும்.
பருவ மாற்றங்கள்
வடகோளத்தில் செப்டம்பர் 22 அல்லது 23 (இலையுதிர் சமபகல் இரவு வடதுருவம் ஞாயிறுக்கு அண்மையாகவோ, தொலைவாகவோ இல்லாமல் இருக்கும். அதேபோல் வடகோளத்தில் மார்ச்சு 20 அல்லது 21 (வேனில் சமபகல் இரவு) வடதுருவம் ஞாயிறுக்கு அண்மையாகவோ தொலைவாகவோ இல்லாமல் இருக்கும். இந்தச் சமபகல் இரவு குறுக்குக் கோட்டில் எங்கிருந்தாலும் வேறுபடாது. இந்த வேனில் சமபகல் இரவு நாளே வடகோளத்தில் வேனில் காலத் தொடக்கமாகும். அஃதாவது மார்ச்சு 20 அல்லது 21 வேனில் காலத் தொடக்கமாகும்.
எனவே ஞாயிறு சித்திரை முதல் நாள் (ஏப்ரல் 13 அல்லது 14) மேஷ இராசியில் அசுவினி நட்சத்திரத்தில் புகுகிறது (வானியல் கணிப்பின்படி ஞாயிறு வான் நடுக்கோட்டைக் கடக்கும் நாள் ஏப்ரல் 19 ஆகும்) என்பது சரியான கணிப்பு. ஆனால் வேனில் (வசந்த) காலம் ஏப்ரல் 14 இல் தொடங்குகிறது என்பது பிழையான கணிப்பு. வேனில் காலம் மார்ச் 20 அல்லது 21 இல் தொடங்குகிறது என்பதுதான் சரி! மேலே சொல்லியவாறு மாறி வரும் பருவங்களுக்கும் கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புவி தனது அச்சில் அதன் ஓடு பாதைக்கு 23.45 பாகை சரிந்திருப்பதே பருவங்கள் ஏற்படுவதற்குக் காரணமாகும்.
சித்திரைப் புத்தாண்டுக்கு வானியல் அடிப்படை இருப்பது போலவே தை புத்தாண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. தை முதல் நாள் சூரியன் தனது தென்திசை பயணத்தை முடித்துக் கொண்டு தனு இராசியில் இருந்து விலகி, வடதிசைப் பயணத்தை மகர இராசியில் இருந்து தொடங்குகிறது.
மேலே கூறியவாறு பூமி சூரியனை ஒரு நீள் வட்டத்தில்சுற்றி வருகிறது. இது நமது கண்களுக்கு சூரியன் புவியைச் சுற்றுவது போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. ஒரு வட்டத்துக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. அதன் தொடக்கம் எந்தப் புள்ளியிலும் தொடங்கலாம். சூரியனின் வடதிசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசிக்கு (பாகை 270) உட்புகும் நாளும் (மகர சங்கராந்தி) வானியல் அடிப்படையில் ஆனதுதான்.
புவி தனது அச்சில் சுழலும்போது சூரியன் – நிலா இரண்டின் ஈர்ப்பாலும் அதன் நடுபகுதி புடைத்து துருவங்கள் சிறிது தட்டையாக இருப்பதாலும் அதன் அச்சில் தளம்பல் ஏற்பட்டு சுற்றும் வேகம் குறைகிறது. இதனால் புவி தனது பாதையில் ஆண்டொன்றுக்கு 50.26 ஆர்க் வினாடிகள் (20 மணித்துளி 14 வினாடி) மேற்குத் திசையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
71.5 ஆண்டுகளில் இந்த வேறுபாடு 1 பாகை (ஒருநாள்) ஆகக் கூடிவிடும். இப்படி பின்னுக்குத் தள்ளப்படுவதை, ஆண்டைக் கணிக்கும் இந்திய சோதிடர்கள் கணக்கில் எடுப்பதில்லை. வானியலாளர்களும் மேற்குலக சோதிடர்களும் இதை கணக்கில் எடுக்கிறார்கள். இந்திய பஞ்சாங்கங்களில் கடந்த 2000 ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் இந்த கால வேறுபாடு திருத்தப்படவில்லை.
இதனால் பருவ காலங்கள் பிந்திப் போகின்றன. இந்த வேறுபாட்டைத் திருத்தி இருந்தால் சித்திரைப் புத்தாண்டு வேனில் தொடங்கும் மார்ச்சு 20-21 ஆம் நாள் கொண்டாடப்பட்டிருக்கும். இது போலவே ஏனைய விழாக்கள் பிழையான திகதியில் கொண்டாடப்படுகின்றன. இன்னும் 11.232 ஆண்டுகளில் புவியின் சம பகல் இரவு பின்னேகல் காரணமாக வேனில் சமபகல் இரவு துலா இராசியில் 0 பாகையில் சூரியன் புகும். அதாவது மேற்குல சோதிடத்தில் மார்ச்சு 20-21 இல் மேட இராசியில் சூரியன் புகும்போது இந்திய சோதிடத்தில் அதே சூரியன் துலா இராசியில் புகும். இரண்டும் எதிரெதிராக 180 பாகையில் இருக்கும்! பனி காலம் கோடை காலமாகவும் கோடைகாலம் பனிக் காலமாகவும் (வடகோளத்தில்) மாறி விடும்!
இங்கே சொல்லப்பட்ட காலக் கணிப்புக்கள் புவியின் வடகோளத்துக்குத்தான் பொருந்தும். புவியின் தென் கோளத்துக்குப் பொருந்தாது. பருவகாலங்கள் எதிர்மாறாக இருக்கும். எடுத்துக்காட்டாக கனடாவில் பனிகாலம் (டிசெம்பர் 20 – மார்ச் 20 ) என்றால் அவுஸ்ரேலியாவில் கோடை காலம் (டிசெம்பர் 1 முதல் பெப்ரவரி 28) ஆக இருக்கும். அதைத் தொடர்ந்து மார்ச் 1 முதல் மே வரை இலையுதிர்காலம், பின்னர் யூன் 1 முதல் ஆகஸ்ட் வரை குளிர்காலம், இறுதியாக செப்டம்பர் 1 முதல் நவம்பர் இறுதி வரை வேனில் காலம்.
முப்பெரும் விழாக்களான தைப்பொங்கல், திருவள்ளுவர் பிறந்த நாள், திருவள்ளுவராண்டுத் தொடக்கம் ஆகியவற்றை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.
Leave a Reply
You must be logged in to post a comment.