“பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்” / பகுதி 01
Kandiah Thillaivinayagalingam
முகவுரை
“நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த
மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத்
துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்.” [மகாகவி பாரதியார்-]
ஒரு மனிதன் தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் , ஒவ்வொரு நாள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ,முடிவற்ற பல நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டு அதனால் ஆளப்படுகிறான்.
நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம். அது அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக இல்லாத இடத்து மூடநம்பிக்கை (Superstition) யாகிறது.
“யானையின் பலம் தும்பிக்கையிலே
மனிதனின் பலம் நம்பிக்கையிலே”
என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள். மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தானே இயங்குகிறது? நம்பிக்கைகள் தாமே மனிதனை இயக்குகின்றன? இதை எவராலும் மறுக்க முடியாது?இயற்கையின் புதிரான செயல்களை உணர இயலாத நிலையிலும், திடீர் நிகழ்வுகளுக்குச் காரணம் அறியாத நிலையிலும், மனிதமனம் தன்போக்கில் பதிவுசெய்து கொண்ட காரண காரியங்களே நம்பிக்கைகள்’ ஆகும்.
நம்பிக்கைகளின் நம்பகத் தன்மை, செயல்பாடு இவற்றின் அடிப்படையில் நம்பிக்கைகளை நம்பிக்கை(Belief) , திட நம்பிக்கை (Faith), மூட நம்பிக்கை (Superstition) என்று வகைப்படுத்தலாம்
காரண காரியத் தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை நம்பிக்கை (Belief) என்றும், நிச்சயம் பலன் உண்டு என்ற உறுதியான நம்பகத் தன்மையைக் கொடுப்பதைத் திட நம்பிக்கை (Faith) என்றும் (நான் நன்றாகத் தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று உறுதியாக நம்புவது), காரண காரியம் அறியப் படாத நிலையில் உள்ளதை மூட நம்பிக்கை (Superstition) என்றும் குறிப்பிடுவதுண்டு.
பெரும்பாலும் மூடநம்பிக்கைகளின் பூர்வீகம் ஏதேனும் ஒரு அறிவுரை சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், சில அந்த வகைகளில் அடங்காது என்பதும் கண்கூடு. சொல்லப்பட்ட சமூக, கலாச்சார, நிகழ்வுப் பின்னணியில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்காமல் அதற்கு ஒரு பிரபஞ்ச அங்கீகாரம் கொடுக்கும்போது மூட நம்பிக்கைகள் விஷ விதைகளாகி விடுகின்றன.
வெவ்வேறு கலாச்சாரம் [பண்பாடு] வழிவழி வந்த மாறுபட்ட மூட நம்பிக்கைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக, ரோம,கிரேக்க நாகரீக மக்கள், இயற்கை நிகழ்வுகள் கடவுளின் செயலே என நம்பினர். அதனால் ஏற்பட்ட கடவுள் மேல் உள்ள பயமே [deisidaimonia: in a good sense reverencing god or the gods, pious, religious in a bad sense superstitious religious or The fear of supernatural powers] , ரோமர்கள் மூட நம்பிக்கை எனக் கருதியது.
மேற்குலக சில நம்பிக்கைகள் உண்மையிலே பெரும் அழிவை ஏற்படுத்தயுள்ளது.இங்கிலாந்தில் பூனை ஒரு சூனியகாரியாக கருதியது [cats were witches] , அதனால் பூனைகளை சாக்கொண்டது /அழித்தது ,எலி தனது தொகையை பெரும் அளவு அபிவிருத்தி செய்ய உதவியது.இதனால் 1665-1666இல் கொள்ளை நோய் [Plague /பிளேக்நோய்.] வந்து 100,000 மக்களை பலி கொண்டது எல்லோருக்கும் இன்னும் நினவு இருக்கலாம்? மேலும் மேற்குலகில் முதலிடம் வகுப்பது இலக்கம் 13 ஆகும், அதனுடன் வெள்ளி கிழமை சேர்ந்தால் அது மேலும் மோசமாகிறது. அப்படியே விரலை குறுக்கே வைப்பதும் [“crossing fingers”], சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பதும் ஆகும்.
பொதுவாக பல மூட நம்பிக்கைகள் சமயத்துடன் தொடர்புடையவை .உதாரணமாக தாயத்து [Talisman / மந்திரக்காப்பு] கட்டுதல் போன்றவையாகும் . இந்தியாவிலும் மற்றும் தமிழர்களுக்கிடையில் நிலவும் பொதுவான மூட நம்பிக்கைகளை நாம் சங்க பாடல்களில் காணக்கூடியதாகவும் உள்ளது.
ஒரு மனிதனுக்கு நீரழிவு நோய் இருப்பதை அறிய [screening diabetes] எப்படி இரத்த பரிசோதனை செய்கிறோமோ அப்படியே ஒரு தமிழ் குடும்பத்தில், கல்யாண பொருத்தம், இருவரினதும் சாதகம் பரிசோதனை [horoscope matching] மூலம் அறியப்படுகிறது. இந்த சோதிடம் [astrology] பிள்ளைக்கு பெயர் வைப்பதில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறது.
முன்னோர்கள் காலத்தின் தேவை கருதி சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திருக்கிறார்கள். உதாரணமாக இரவில் வீட்டை கூட்டுதல் நல்லதல்ல என்பதால். காரணம் வெளிச்சம் குறைவான படியால் பெறுமதியான சிறிய பொருட்களையும் தெரியாமல் எறிந்து விட சந்தர்ப்பம் அதிகம் என்பதால்.அது போல, இரவில் நகம் வெட்டக் கூடாதும் ஆகும்.
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”
என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும்.தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும் போலும்? . இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) “பித்து” வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !! எப்படியாயினும் சங்க காலத்திலேயே தமிழன் இதை,இப்படியான மூட நம்பிக்கைகளை நம்ப தொடங்கி விட்டான்.
ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந்தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது.இடைக்காட்டுச்சித்தர் தன் ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர், “6௦” ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார்.பெண்பால் சோதிடர்கள் கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர் என்று சங்க பாடல் கூறுகிறது .மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் நம்பினர் .
“வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி”– பட்டினப்பாலை.
இப்படியாக இன்னும் கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டுநம்பிக்கைகளுடனும் மனிதன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி 02 தொடரும் [முகவுரை தொடர்கிறது]
—————————————————————————————————————-
“பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்” / பகுதி 02
ஊருக்கே குறி சொல்கிறது பல்லி, என்று நம்புகிறவார்கள் அந்தப் பல்லியே தன்னுடைய எதிர்காலம் தெரியாமல் தான் கழுவு நீர்ப் பானையில் தவறி வீழ்கிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள். மேலும் “பூனை குறுக்கால போனால் போகிற காரியம் சரிவராது” என்று சொல்லுவாங்க. அது பூனை பயத்தில் அல்லது ஏதாவது ஒன்றை பிடிக்க ஓடுது. அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம். பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தானே கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறானே.வேடிக்கையாக இல்லையா?
இப்ப இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “தும்மலை” [sneeze] ப்பற்றி வள்ளுவர் கூறுவதை கேளுங்கள் :
“நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்”- குறள் 1203
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?. விக்கலும் [hiccough] அப்படியே. அவரைப்பற்றி யாரோ கதைக்கிறார்கள் அல்லது நினைக்கிறார்கள் என்பார்கள்.இப்படி சொல்வதன் மூலம் தூர வசிப்பவர் ஒருவரின் அல்லது தூர பயணம் செய்துகொண்டு இருப்பவர் ஒருவரின் ஞாபகத்தை வைத்திருப்பதற்கு உதவும் என்பதாலே. ஆனால் நாளடைவில் அது மூட நம்பிக்கையாக மாறிவிட்டது.
“சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது கெட்டநிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது” ம் அப்படியே .அதாவது ஏணியின் கீழாக நடக்கும் போது தவறுதலாக ஏணியை தட்டிவிட்டால் மேல் இருப்பவர் அல்லது அவர் வைத்திருக்கும் ஆயுதங்கள் கை நழுவி, கீழால் நடப்பவரின் மேல் விழலாம் என்பதால் ஆகும். இது ஒரு பகுத்தறிவு சிந்தனையே. ஆனால் நாளடைவில் அதுவும் மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. அவ்வளவுதான்!
“மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும்நம்பிக்கையாக இருந்திருக்கிறது.”
பேய் பற்றிய நம்பிக்கைகள் ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன. சுடுகாட்டில் பேய் மகள் இருப்பாள் என்றும் சுடுகாட்டிற்குப் போனால், அதைத் திரும்பிப் பார்க்காமல் வர வேண்டும் என்றும், போர்க்களத்தில் காயமடைந்து உயிர் நீக்கப் போகும் வீரர்களைச் சுற்றிப் பேய்கள் நிற்கும் என்றும் தமிழர்கள் நம்பினார்கள். கலிங்கத்துப்பரணி முதலிய பரணி வகை
இலக்கியங்களில் இவை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன. சங்ககால நூல்களில் புறம் 356, 363 குறுந்தொகை 231 முதலிய பாடல்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. பேயும் தீய சக்திகளும் தாக்காமல் தடுக்க ஐயவி எனப்படும் வெண்கடுகை
நெருப்பில் இட வேண்டும், மணி அடிக்க வேண்டும், வேப்பிலையைப் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தகவல்களை அரிசில் கிழாரும் (புறம் 281), வெள்ளி மாறனாரும் (புறம் 296) தருகின்றனர்
“வேப்பமர உச்சியில் நின்னு
பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க – உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே – நீ
வெம்பி விடாதே”
[பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
படம்: அரசிளங்குமரி, 1957]
இவை எல்லாத்தையும் விட ,”பன்றியே” சகுனம் பார்த்ததாக ஒரு போடு போட்டுவிட்டார் பாண்டிய மன்னர் ஒருவர் . எப்படி இருக்குது மூட நம்பிக்கை. இதோ அந்த சங்க கால பாடல்:
[புலவர் -உக்கிரப் பெருவழுதி] / ( நற்றிணை – 98. (குறிஞ்சி)]:
“எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ம்மம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன் ……”
[பொறி அமைக்கப்பட்ட புனத்தில் மேய்வதற்காகச் சிறிய கண்களைக் கொண்ட பன்றி ஒன்று வருகிறது. அது முள் போன்ற பிடரி மயிரைக் கொண்டிருந்தது. அது நுழையும் போது ஒரு குறித்த திசையிலிருந்து பல்லி கத்தியது. உடனே பன்றி நின்றது. ஏதோ ஒரு நுண் உணர்வு. அது திரும்பாமலேயே அப்படியே பின்னோக்கி மெதுவாக நகர்ந்து சென்று அதன் பின்னர் தப்பிச்சென்று விட்டது.]
நம் நாட்டில் அறிவுக்குக் கொடுக்கும் இடத்தைவிட, உணர்வுக்கே மிகுதியான இடம் தருகின்றனர் .உதாரணமாக குடும்பத்தில் ஒரு பெண் சொல்லுகிறாள்:
“மாமி ! இரவு விடியற்காலம் எனக்குக் கனவு ஒன்று வந்தது. நம் வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது!”
இதற்கு மாமி கூறுகிறாள்:
“அடி, விவரம் கெட்டவளே, சீக்கிரம் உன் மகள் பூப்பு [பெண்மை] அடைந்து அமர்வாள்! அதிலும் நீ விடியற்காலையில் கண்ட கனவு! இன்னும் இரண்டொரு நாளில் நடக்கும்!”
இறுதியாக சங்க கால உரையாடல் ஒன்று :
தோழி [தலைவியை பார்த்து ]:
“அவன்தான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றானே. அப்படியிருக்கும்போது நீ பொறுமையாக இல்லாமல் துடிப்பது ஏன்? “
தலைமகள் [தோழியிடம்]:
“தோழி! இதனைக் கேள். அவன் நாள்தோறும் பொய் சொல்வதில் வல்லவன். அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான். மகிழ்ச்சியோடு அவனைத் தழுவினேன். விழித்துப் பார்த்தபோது நான் படுத்திருந்த மெத்தையைத் தடவிக்கொண்டிருந்தேன். வண்டு உண்டபின் குவளை மலர் உணர்ச்சி இழந்து / சாய்ந்து ஏக்கத்தோடு கிடப்பது போலத் தனித்தவளாய்க் கிடந்தேன்”.
“கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுற மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே”
[குறுந்தொகை 30 ]
நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
அடுத்த அடுத்த இதழ்களில் பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகளை ஒவ்வொன்றாக விபரமாக ,கூடிய வரை ” பழ மொழிகள் + சங்க இலக்கியம்” துணையுடன் பார்ப்போம்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி 03: “ஆடி மாதம்” தொடரும்
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 03
“ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!”
[நவாலியூர் சோமசுந்தரப்புலவர்]
தை மாதம் அறுவடைக்குப் பின்பான காலம். இம் மாதம் கல்யாண மாதம் எனவும் கருதப்படுகிறது. கல்யாணம் செய்ய ஏங்கும் மணமாகா ஆடவர் , விடலை இருவரும் திருப்ப திருப்ப சொல்லும் கூற்று
“தை பிறந்தால் வழி பிறக்கும்”
ஆகும். அதேவேளை ஆடி மாதம் கல்யாணம் தடை செயப்பட்ட மாதமாக கருதப்படுகிறது.
தமிழ் இந்துக்களால் ஆடி மாதம் அமங்கலமான [an inauspicious month] மாதமாக கொள்ளப்படுகிறது. ஆனால் சக்தி வழிபாட்டிற்கு இது மங்கலமான ஒன்றும் ஆகும். ஆடி பிறப்பு என்பது ஆடி மாத பிறப்பை குறிக்கும் ஒரு பண்டிகை. சுற்றத்தாருடனும் நண்பர்களுடனும் கொழுக்கட்டையும், ஆடிக் கூழும் பகிர்ந்து கொண்டாடப்படுகிறது. மணமாகா இளம் பெண்கள், குறிப்பாக ஆடி செவ்வாய் தோறும் அம்மனை / சக்தியை விரதம் இருந்து வழிபட்டு தமக்கு நல்ல கணவர் / வாழ்க்கைத் துணைவர் அமைய அம்மனின் திருவருள் / பாக்கியம் வேண்டுகிறார்கள்.
‘சுப காரியங்கள் நடத்தக் கூடாது’, ‘புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது’,
என ‘கூடாது’ களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு ‘கூடாது’
‘ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும்.’
என்ற நம்பிக்கை!
‘ஆடிப் பிள்ளை தாய்மாமனை ஆட்டிப் படைக்கும்’ என்றும்,
‘ஆடியில பிறந்த ஆம்பளைப் பிள்ளை ஆருக்கும் அடங்காது’ என்றும் வேறு பழ மொழிகள் கூட சொல்லி வைத்துள்ளார்கள்.
ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். அது வீட்டுக்கு ஆகாது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதேபோல ஆடியில் எதைச் செய்தாலும் அது ஆடிப் போகும் என்பதும் இன்னொரு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆடியில் குடி போக மாட்டார்கள், எந்த நல்ல காரியத்தையும் நம் மக்கள் செய்ய மாட்டார்கள்.
ஆகவே தான் இந்த மாதத்தில் சமயம் சம்பந்தமான பல பல விழாக்கள் ஆலயத்தில் நடைபெறுகின்றன [ஆடி பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், .. என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். ].
மற்றும் ஆடி மாதம் குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த மாதத்தில்தான் விதை விதைப்பார்கள். அதாவது “ஆடிப் பட்டம் தேடி விதை” என்று முன்னோர்கள் கூறியதற்கேற்ப கிராமப்புறங்களில் பயிரிடும் வேலைகள் படு மும்முரமாக நடைபெறும். இதனால்த்தான் மறைமுகமாக கல்யாணம் போன்ற விழாக்கள் நடைபெறுவதை தவிர்க்கிறது [ஆன்மிகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதற்கு இடையூறாக மற்ற சுபவிசேஷங்கள் இருந்துவிடக் கூடாது. அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க போலும்!] .
இதன் மூலம் அதி உச்சி கோடை மாதங்களான சித்திரை, வைகாசி ஆனி மாதங்களில் பிள்ளை பிறப்புகளை நிறுத்துகிறது / குறைக்கிறது . இது ஏன் என்றால் ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். கடும் வெயில் காலத்தில் பிள்ளை பிறந்தால் அது குழந்தைக்கும், தாய்க்கும் பல சுகவீனங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைதான் காரணம். அதோடு அம்மை போன்ற நோய்கள் பரவும் காலமும் கூட. கோடை வெயிலை சமாளிப்பது பெரியவர்களுக்கே சிரமமாக இருக்கும் போது பச்சிளம் குழந்தை தாங்குமா?
அதனால்தான் அக்காலத்தில் ஆடிமாதத்தை தவிர்க்க சொன்னனார்கள் போலும் . மற்றும்படி ஒன்றும் இல்லை. மற்றும்படி சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் பிரச்சினை குடும்பத்துக்கு ஆகாது என்பதெல்லாம் மூடநம்பிக்கை தான். நல்லதை சொன்னால் நாம கேட்க மாட்டோமே. அதனால்த்தான் குடும்பத்துக்கு ஆகாது அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க போலும்! . அது மட்டும் அல்ல நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்களைச் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான். அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான் இதற்கு காரணம்.
இது பொதுவான மத நம்பிக்கை. மற்றபடி ஆடியில் கர்ப்பம் தரித்தால், சித்திரையில் பிள்ளை பிறக்கும், அதனால் கெட்டது நடக்கும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை. இதற்கும், அறிவியலுக்கும் தொடர்பே இல்லை. வெயில் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அசவுகரியமாக இருக்கும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் மிக மிக குறைவு என்பதையும் வெப்பத்தை தணிக்கும் குளிரூட்டிகள் போன்ற வசதிகள் இல்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
ஆடி மாதம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் மாதம். வெயில், காற்று இரண்டுமே அதிகம் இருக்கும். மழையும் நினைத்த நேரங்களில் எல்லாம் பெய்யும். சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் பரவும் நோய்களுக்கும் குறைவே இல்லை. மேலும் யாருக்கும் வியாதிகள் பரவக் கூடாது என்பதற்காகத் தான் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவார்கள். கூழ் உடம்பிற்கு குளிர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலங்களில் உடல்நலம் கருதி பல்வேறு பிரிவு மக்களும் இவ்வுணவை உண்ணத் துவங்கியுள்ளனர். யாழ்ப்பாணம், இலங்கையில் கூழ் தயாரிப்பிற்கு பெயர் போன இடமாகும்.
இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்:
ஆடிப்பட்டம் தேடிவிதை
[உழவர்கள் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கலாம்.. காலம் அறிந்து பயிர்செய்ய. இப்பொழுது வைத்தால் தானே தை மாதம் அறுவடை செய்ய முடியும்!]
ஆடிக்காற்றில் அம்மி(மை)யும் பறக்கும்
பொருள்:
வழக்கத்தில் உள்ளது – ஆடி மாதம் காற்று பலமாக வீசும். கடினமான பொருளான அம்மியும் பறந்து விடும்.
உண்மையான விளக்கம் – சித்திரை மாதம், வைகாசி மாதம் வெயில் காலம். அக்னி நட்சத்திரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் பலருக்கும் அம்மை நோய் ஏற்படும். அது ஒரு நோய்த்தொற்று. எனவே வீட்டில் ஒருவருக்கு வந்தால் கூட, பலருக்கும் வரும் அபாயம் உண்டு. ஆனி, ஆடி மாதத்தில் தட்பவெப்பநிலை மாறிவிடும். அம்மை நோயும் ஏற்படாது. தொற்றும் இருக்காது என்பதால் ஆடிக் காற்றில் அம்மை பறந்து போய்விடும் என்று கூறி, நாளடைவில் திரிந்து இருக்கலாம்?
அந்த காலத்தில், ஆடி மாதத்தில் திருமணம் செய்தால் , குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்க வாய்ப்புள்ளது என்றும், சித்திரை கோடை காலம் என்பதாலும், குழந்தைக்கு பல தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பெரியவர்கள் சொன்னார்கள். அது அன்று ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுதான்.
ஆனால் இந்த காலத்தில் அப்படி இல்லை . நம்மை எந்த அளவு வெப்ப நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என்பது நமக்குத் தெரியும் , அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகளும் இன்று உள்ளது. ஆனால் இன்றும் இதைக் காரணமாக கூறிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது.
திருமணம் பற்றிய கருத்து இப்படி என்றால், இன்னும் ஒரு படி நம்முடைய ஆள்கள் அதிகமாக சென்று நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை. ஆடி மாதத்தில். உதாரணமாக , புது வீடு செல்லக் கூடாது. பழைய வீட்டிலிருந்து காலி பண்ணக் கூடாது போன்றெல்லாம் சொல்லிக் கொண்டு இன்னும் நடை முறை படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். வீட்டிற்கு குடி புகுவதற்கும், ஆடிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். அறியாமை என்ற ஒரு வார்த்தையை நம்முடைய அகராதியிலிருந்து அகற்று முடியாது என்பது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதே சமயத்தில் அந்த நம்பிக்கைகள் எதனால் கடைபிடிக்க பட்டன என்பதன் ஆணி வேரை புரிந்து கொள்ளவும் வேண்டும்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி / Part – 04:”தும்மல் / விக்கல் / கண் வெட்டசைவு / உள்ளங்கை அரித்தல் ” தொடரும்
Kandiah Thillaivinayagalingam
விருப்பம்
கருத்திடுக
பகிர்க
Leave a Reply
You must be logged in to post a comment.