ஜனாதிபதி நிதியை ஏப்பம் விட்ட முன்னாள் இந்நாள் பிரதிநிதிகள்….!
சிவலிங்கம் சிவகுமாரன்
20 Dec, 2024
ஜனாதிபதி நிதியமானது ஏழை மக்களின் மருத்துவ உதவிகளுக்கு மாத்திரம் நிதியை வழங்கும் ஒரு அமைப்பல்ல…மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு புலமை பரிசில், மஹாபொல, வறுமை ஒழிப்பு , நாட்டுக்கு சேவையாற்றியவர்களை கெளரவித்தல், மதசீர்திருத்த பணிகள், பெரஹர இப்படி பிரிவுகளில் நிதியை வழங்கும் பிரிவாகும். இதற்கான நிதியானது பொது மக்கள் ,தனிநபர்களின் நன்கொடைகள் , அதிர்ஷ்ட இலாப சீட்டுகளை விற்பனை செய்யும் சபைகள் வழங்கும் நிதி, ஜனாதிபதியின் சொந்த நிதி இப்படி கிடைக்கின்றன.
2005 ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை மருத்துவ செலவீனங்களுக்காக ஜனாதிபதி நிதியைப் பெற்ற அரசியல்வாதிகளின் பெயர்கள் தேசிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றில் கூறப்பட்டன. இதில் இப்போது பலர் உயிருடன் இல்லை. ஆனால் சிசிச்சைகளுக்கேற்ப ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய ஆகக் கூடிய தொகை ஐந்து தொடக்கம் ஆறு இலட்சமாக இருக்கும் போது, முன்னாள் பிரதமர் தி.மு.ஜெயரட்ண மூன்று கோடியும் கெஹலிய ஒன்றரை கோடியும் எடுத்துள்ளனர். அதாவது பாராளுமன்ற காலம் முழுக்க இவர்கள் நோயில் வாடியுள்ளனரா? மறுபடி எவ்வளவு தொகையை இவர்கள் நிதியத்துக்கு வழங்கியுள்ளனர்? இவர்களுக்கு இந்த தொகையை ப் பெற அனுமதி அளித்தது யார்?
உண்மையில் ஜனாதிபதி நிதியத்தை கண்காணிப்பதற்கு ஒரு கட்டுப்பாட்டு குழு உள்ளது. ஜனாதிபதி இதற்கு தலைவராவார். குழுவில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர் உட்பட மேலும் ஒரு உறுப்பினர் இருப்பார். இவர்களின் ஆலோசனை மற்றும் அனுமதியுடனேயே நிதி விடுவிக்கப்படுகின்றது.
ஆகையால் இதில் எதிர்க்கட்சித் தலைவரும் பொறுப்பு கூற வேண்டியவர்களாவர். 2010–2015 வரை பிரதமராக இருந்தவர் தி.மு.ஜெயரட்ண. ஜனாதிபதி மகிந்த. ஆகவே ஜெயரட்ண மூன்று கோடி நிதியை எடுப்பதில் பிரச்சினைகள் இருந்திருக்காது.
2012ஆம் ஆண்டு கெஹலிய ஊடக அமைச்சராக இருந்தார். அவுஸ்திரேலியா மெல்பேர்னில் தனது மகனின் சிகிச்சைக்காக சென்றிருந்த போது , தான் தங்கியிருந்த ஹோட்டலின் மூன்றாம் மாடியிலிருந்து விழுந்து கால் முறிவு ஏற்பட்டதற்கு அவர் ஜனாதிபதி நிதிய பணம் மாத்திரமன்றி ஹோட்டலின் மீதும் வழக்கு தொடர்ந்து நட்டஈட்டை கேட்டவர். எதற்காக கீழே விழுந்தார் என்றெல்லாம் கேட்கக் கூடாது. ராஜித சேனாரட்ணவும் ஒரு கோடி ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதிகளாக இருந்த மகிந்த, மைத்ரிபால சிறிசேன ஆகியோரும் பிரதமராக இருந்த ரணிலும் இதற்கு பதில் கூற வேண்டியவர்கள். 2019 இற்குப்பிறகு நிதியத்தின் தலைவர்களாக இருந்த கோட்டாபய மற்றும் ரணில் விக்ரமசிங்கவும் பதில் கூற வேண்டும். ஜனாதிபதியாக ரணில் இருந்த போது பிரதமராக இருந்தவர் தினேஷ் குணவர்தன. 2022 செப்டெம்பரில் இருந்து 2024 செப்டெம்பர் வரை பிரதமர் அலுவலகத்தின் மருத்துவ பிரிவு செலவீனம் 1 கோடியே 21 இலட்சமாக காணப்பட்டுள்ளது. தினேஷ் இரண்டு வருடங்களும் மருத்துவமனையில் இருந்து கொண்டா நிர்வாகம் பார்த்தார்? இதுவும் ஒரு வகை நூதன கொள்ளை தான்.
ஜனாதிபதி நிதியமானது 1978 ஆண்டின் 7 ஆம் இலக்கச் சட்டத்தால் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்ட நிறுவனமாகும். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஐயவர்த்தனவின் பதவியேற்பை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஆரம்ப வைபவத்தின்போது பொதுநலவிரும்பிகளின் நிதிசார் பங்களிப்புடன் ரூபா 237,120/- ஐ கொண்ட ஆரம்ப மூலதனத்தினால் ஜனாதிபதி நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. இது ஜனாதிபதியின் நிதியம் எனக் குறிக்கப்படுவதுடன் முகாமைசெய்து சட்ட ஏற்பாடுகளுக்கமையச் செயற்படுவதற்காக அதிமேதகு சனாதிபதிக்கு சட்டத்தால் அதிகாரமளிக்கப்படுகின்றது. அரசின் கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் வருடாந்தம் ஜனாதிபதி நிதியத்தின் கணக்குகள் கணக்காய்வு செய்யப்படும்.
குறிக்கோள்கள்
- வறுமை ஒழிப்பு.
- கல்வி அல்லது ஞானத்தின் வளர்ச்சி.
- மதங்களின் எழுச்சிக்கு பங்களிப்பு செய்தல்.
- நாட்டுக்கு சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கல்.
- ஜனாதிபதி மற்றும் ஆட்சிமன்றக்குழு குழுவின் கருத்துப்படி, பொதுமக்களின் நலனுக்கான பணிகளைச் செய்தல்.
செயல்பாடுகள்
- பல்வேறு நோய்களுக்கான மருத்துவ உதவி.
- மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வறுமை ஒழிப்புத் திட்டம்.
- மஹாபொல புலமைப்பரிசில் திட்டம்.
- க.பொ.த (உ/த) விசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல்.
- க.பொ.த (சா/த) விசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கு (உ/த) கற்பதற்காக புலமைப்பரிசில் வழங்குதல்.
- மத சீர்திருத்தம் மற்றும் கட்டுமான பணிகளுக்காக மானியங்கள் வழங்குதல்.
- ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ‘பெரஹெரா’ மற்றும் பிற கலாச்சார நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்குதல்.
- தனிநபர்களின் நலனுக்காக ஜனாதிபதி நிதியம் என்ற பெயரில் அரசு வங்கிகள் மற்றும் பொது அறங்காவலர் திணைக்களத்தில் பராமரிக்கப்படும் கணக்குகள்.
- ஜனாதிபதி மற்றும் செயற்குழுவின் விருப்பப்படி வழங்கப்படும் நன்மைகள்.
நிதி மூலங்கள்
- அபிவிருத்தி லொத்தர்சபை.
- பொதுமக்கள் நன்கொடைகள்.
கடந்த காலங்களில் இவ்வாறு நிதியை பெற்றவர்களின் விபரங்களை கடந்த வாரம் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் வெளியிட்டார். வறுமை நிலையிலுள்ள மக்களுக்காகவும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவுமே ஜனாதிபதி நிதியம் உள்ளதாக சபையில் அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன ஒருகோடி ருபாவும், கெஹலிய ரம்புக்வெல்ல ஒரு கோடி10 இலட்சம் ரூபாவும் பெற்றுள்ளதுடன் பீ.ஹரிஷன், பியசேன கமகே, மனோஜ் சிறிசேன, பி.தயாரட்ன, முத்துக்குமாரன, வாசுதேவ நாணயக்கார, சரத் அமுனுகம, எஸ்.பி. நாவின்ன ஆகியோரின் பெயர்கள் அதில் காணப்படுகின்றன. அந்த வகையில் தயாசிறி ஜயசேக்கர, பியல் நிசாந்த டி சில்வாவா, சுசில் பிரேமஜயந்த, இசுறு தேவரப் பிரிய, ஜகத் குமார ஆகியோரின் பெயர்கள் அதில் உள்ளன.
ஜயலத் ஜயவர்தன 10 இலட்சம் ரூபாவும், நாமல் குணவர்தன 10 இலட்சம் ரூபாவும், விதுர விக்கிரமநாயக்க 10 இலட்சம் ருபாவும் பெற்றுள்ளதுடன் ஜோன் அமரதுங்க 40 இலட்சம் ரூபாவும், ஏக்கநாயக்க 48 இலட்சம் ரூபாவும், ஜயந்த வீரசிங்க 90 இலட்சம் ரூபாவும் நிதியை பெற்றுள்ளனர்.
இவர்கள் இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் எந்த பிரிவில் என்ன வகையில் இதனைப் பெற்றுள்ளனர்?இவர்கள் பணம் இல்லாதவர்களா? ஜனாதிபதி நிதியத்திலிருந்து குறித்த தொகை பணம் இந்த அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டதால் நோயால் பாதிக்கப்பட்டு நிதிக்கு விண்ணப்பித்து காத்திருந்து இறுதியில் மரணத்தைத் தழுவிய அப்பாவி மக்கள், குழந்தைகள், சிறுவர்கள் எத்தனைப் பேர் என்று தெரியவில்லை…. இவர்களில் எத்தனைப் பேர் ஒரு சதமாவது நிதியத்துக்கு திருப்பி வழங்கியுள்ளனர்? இப்படியானவர்களை மன்னிக்க முடியுமா?
Leave a Reply
You must be logged in to post a comment.