சிறிலங்கா, சீனா பக்கம் சாயாமல் இருப்பதற்கு இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறது!

இலங்கை சனாதிபதி அனுர குமார திசநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இருவரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கை பற்றி அரசியல் வட்டாரங்களிலும் ஊடகங்களிலும் சொல்லாடல் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் இலங்கையின் ஆட்சித் தலைவர் அனுர குமார திசநாயக்க இடையில் நடந்த பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து வெளியான கூட்டறிக்கை பற்றி ஊடகங்களில் காரசாரமான விவாதம் நடந்து வருகின்றன. அரசியல் யாப்பில் உள்ள 13 ஏ முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் அதில் ஏன் கூட்டறிக்கையில் இடம்பெறவில்லை என்ற கேள்வி பூதாகாரமாக எழுந்துள்ளது. மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும்  கூட்டறிக்கையில் எந்தக் குறிப்பும் இல்லை. அது மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை.  தமிழ்நாட்டு   மீனவர்களுக்கும் வட இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும்  இடையிலான சிக்கல் பற்றிக் குறிப்பிடும் போதும் தமிழ் என்ற சொல் தவிர்க்கப்பட்டுள்ளது. இரண்டு பக்கத்து மீனவர்கள் என்று மொட்டையாகக் குறிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிரதமர் மோடியும் ஆட்சித் தலைவர் அனுர குமார திசநாயக்கா இருவரும் கடந்த டிசெம்பர் 16, 2024 அன்று  நடந்த  ஊடக சந்திப்பில் இந்தியப் பிரதமர் மோடி “We hope that the Sri Lankan government shall fulfil the aspirations of the Tamil people. And that they shall fulfil their commitment towards fully implementing the Constitution of Sri Lanka and conducting the Provincial Council Elections”  எனக் கூறியிருந்தார்.

 அதாவது “தமிழ் மக்களின் வேட்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகின்றோம். இலங்கை அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.  பிரதமர் மோடி   இந்தியில் பேசியதை இந்திய வெளியுறவு அமைச்சு ஆங்கிலத்தில் (India – Sri Lanka Joint Statement: Fostering Partnerships for a Shared Future) மொழிபெயர்த்து  வெளியிட்டுள்ளது.

1987-89 ஜேவிபி புரட்சி அல்லது 1989 புரட்சி மக்கள் விடுதலை முன்னணியால் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி ஆகும். முதலாவது ஆயுதக் கிளர்ச்சி போலவே இதுவும்  தோல்வியில் முடிந்தது.  முதலாவது  இலங்கை சுதந்திரக் கட்சி அரசுக்கு எதிரான 1971 கிளர்ச்சி,  இரண்டாவது  ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு எதிரான(1987–1989) கிளர்ச்சி ஆகும்.

இரண்டு கிளர்ச்சிகளும் இலங்கையில் ஒரு சோசலிச அரசை நிறுவுவதை  நோக்கமாகக் கொண்டிருந்தன.   முதலாவது  புரட்சிபோல் அல்லாது 1987 முதல் 1989 வரையான இரண்டாவது ஆயுதப் புரட்சி மிகவும் தீவிரமாக இருந்தது. ஜேவிபி தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் இராணுவம், இராணுவ முகாம்கள் மீது திடீர்த் தாக்குதல்கள்,  குண்டுத் தாக்குதல்கள், படுகொலைகள், பொதுச் சொத்துக்களுக்கு தீவைத்தல்,  தங்களது கட்டளைகளுக்குப் பணிய மறுத்த பொதுமக்கள்  மீது தாக்குதல் எனத் தென்னிலங்கை முழுதும் பரவலான   பலமுனை ஆயுதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதே நேரத்தில் இலங்கை அரசாங்கம் கிளர்ச்சியை அடக்க கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் எதிர்வினையாற்றியது. இந்தக் கால கட்டத்தில் 60,000க்கும் அதிகமான இளைஞர்கள் கொல்லப்பட்டனர், கடத்தப்பட்டனர் அல்லது காணாமல் போயினர் என தெரிவிக்கப்படுகின்றது.

முதல் தாக்குதல் 1987 ஏப்ரில் 15 அன்று, கண்டி பல்லேகலையில் உள்ள இராணுவ முகாமை ஜேவிபி யின் இராணுவப் பிரிவான தேசபிரேமி ஜனதா வியபாரய (Deshapremi Janatha Vyaparaya) மேற்கொண்டது.  இந்தத் தாக்குதல் சாந்த பண்டார மற்றும் பிரேமகுமார் குணரத்தினம் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது, இந்தத் தாக்குதலில் பன்னிரண்டு 56 தாக்குதல் துப்பாக்கிகள், ஏழு துணை இயந்திர துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளைக் கைப்பற்றப்பட்டன.

1987 மே 26 அன்று, இலங்கை இராணுவம்  விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்து தமிழ்ப் போராளிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் அரசாங்க கட்டுப்பாட்டை மீண்டும் நிறுவும் நோக்கத்துடன்  “விடுதலை நடவடிக்கை”(“Operation Liberation”) தொடங்கியது. இருப்பினும், இந்த இரண்டாம் கட்ட விடுதலை நடவடிக்கை  பூமாலை நடவடிக்கை என்ற பெயரில்   இந்தியா மேற்கொண்ட தலையீடு காரணமாகக் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1987 யூலை  29 இல் கொழும்பில் இந்திய – இலங்கை உடன்படிக்கை  கையெழுத்திடப்பட்டது. அடுத்த நாளே இந்திய அமைதி காக்கும் படையின் (IPKF) முதல் துருப்புக்கள் வட இலங்கையில் தரையிறக்கப்பட்டது.

இந்திய விரிவாக்கத்தை எதிர்ப்பதைத் தனது மூலோபாயக் கோட்பாடகக் கொண்ட ஜேவிபி க்கு  இந்திய – இலங்கை உடன்படிக்கை இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்தானதைத் தொடர்ந்து   அரசுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. அரசுக்கு உள்ளேயும் அந்த உடன்பாட்டிற்கு  எதிர்ப்பு வலுத்தது. பிரதமர் இரணசிங்க பிரேமதாச, தேசிய பாதுகாப்பு அமைச்சர்  லலித் அத்துலத்முதலி, தீவிர சிங்கள – பவுத்த பேரினவாதியான சிறில் அமைச்சர் இந்திய – இலங்கை உடன்பாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

13 ஏ சட்ட திருத்தம் – அதன் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபை – இந்த இரண்டும் அனுர குமார திசநாயக்கா அவர்களும் அவரது ஜேவிபி கட்சியும் கடுமையாக எதிர்த்த சட்ட திருத்தமாகும். சரியாகச் சொன்னால் ஜேவிபி கட்சியின் அரசுக்கு எதிரான இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சிக்கு முக்கிய ஏதுகளில் 13ஏ சட்ட திருத்தத்துக்கும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளும்  காரணமாகும்.

எனவே 13ஏ சட்ட திருத்தம் ஜேவிபி க்கு ஒவ்வாத (alergy) ஒன்றாகும். 13 ஏ சட்ட திருத்தத்தை எதிர்த்து போராடிய ஜேவிபி உறுப்பினர்களில் சிலர் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள். இதன் காரணமாகவே தேர்தல் காலத்திலும் அனுர குமார திசநாயக்கா 13 ஏ பற்றி மூச்சு விடவில்லை. மாகாண சபை பற்றியும் எதுவும் பேசவில்லை. நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு வரைவை முன்நகர்த்தப் போவதாக  மட்டும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

த மிழர்களுக்கு இருக்கிற சிக்கல் பொருளாதாரச் சிக்கல் அதனை நிவர்த்தி செய்து விட்டால் அவர்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்பது ஜேவிபி இன் சித்தாந்தமாகும். அதாவது தமிழர்களுக்கு மூன்று நேர உணவும்   வேலை வாய்ப்பும் கொடுத்துவிட்டால் வேறு எதைப்பற்றியும் – அரசியல் உரிமைகள் பற்றி – பேச மாட்டார்கள் என அனுர குமார திசநாயக்காவும் அவரது ஜேவிபி கட்சியும் நினைக்கிறது.
புதிய அரசியல் யாப்பு – நல்லாட்சி காலத்து யாப்பு வரைவை வைத்து இயற்றப்படும் – என தேசிய மக்கள் சக்தி சொன்னாலும் அது நடைபெறுமா என்பது கேள்விக்குறி ஆகும்.

362 Sri Lankan Marxist Party Stock Photos, High-Res Pictures ...

ஏற்கனவே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதச் சட்டத்தை இல்லாது செய்வோம் என்று வழங்கிய உறுதி மொழியை இந்த அரசு இன்று காற்றில் பறக்க விட்டுவிட்டது. சட்டத்தில் பழுதில்லை, அதனை அரசியல் காரணங்களுக்குப் பயன்படுத்தியதே பிழை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் கொடுக்கிறார். புதிய விளக்குமாறு நன்றாகக் கூட்டும் என்பார்கள். ஆனால் இலங்கையில் அப்படி எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.

மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில்  இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை அடுத்து  இந்திய – சிறிலங்கா இரண்டும் கூட்டாக விடுத்த அறிக்கையில் 13ஏ, மாகாண சபைக்கான தேர்தல், தமிழ் என்ற சொல் என எதுவும் இடம்பெறாததில் எந்த வியப்பும் இல்லை.  இவை விடுபடப்படுவதற்கு சிறிலங்கா தரப்பின் எதிர்ப்பே காரணமாகும்.

சிலர் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியதை வைத்து ஆறுதல் அடையப் பார்க்கிறார்கள். அதாவது “தமிழ் மக்களின் வேட்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகின்றோம். இலங்கை அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” என்று பிரதமர் கூறியதை வைத்து ஆறுதலை அடையப் பார்க்கிறார்கள். பிரதமர் மோடி இந்தியில் பேசியதை இந்திய வெளியுறவு அமைச்சு ஆங்கிலத்தில் (India – Sri Lanka Joint Statement: Fostering Partnerships for a Shared Future) எனத் தலைப்பிட்டு கடந்த டிசெம்பர் 16, 2024 அன்று வெளிவந்தது.

இலங்கையோடு நட்புறவா?  இலங்கைத் தமிழர்களின் அரசியல் வேட்கைகளா? எனக் கேட்டால் இந்தியாவின் பதில் இலங்கையோடான நட்புறவுதான் முக்கியம் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கும். இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இந்தக் கால கட்டத்தில் இந்தியா வாய்வழி இலங்கைத் தமிழர்களது வேட்கைகள் பற்றி அவ்வப்போது சொன்னதே அல்லாமல் நடைமுறையில் ஒன்றும் நடை பெறவில்லை.  இலங்கை அரசுக்கு எந்த அரசியல் மற்றும்  பொருளாதார அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. இந்திய இராசதந்திரிகள் 13 ஏ சட்ட திருத்தம் பற்றிச் சொல்வதெல்லாம் “Much water has flown under the bridge” என்பதுதான். அதாவது, கணிசமான  காலம்  கடந்துவிட்டது மற்றும் கடந்தகால நிகழ்வுகள், குறிப்பாக கருத்து வேறுபாடுகள் அல்லது சிக்கல்கள், இனி முக்கியமானவை அல்ல. கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும்” என்று சொல்வதாகும்.

இந்தியா இன்று மூன்று திசைகளிலும் பகை நாடுகளால் சூழப்பட்டுள்ளது. கிழக்கில் சீன மக்கள் குடியரசு, மேற்கில் பாகிஸ்தான், வடக்கில் நேப்பாளம் தெற்கில் மாலைதீவு, வங்காள தேசம் போன்ற நாடுகளோடு இந்தியாவின் இராசதந்திரவு உறவு  நன்றாக இல்லை. எஞ்சியிருப்பது சிறிலங்காதான்.  ஆனால் அந்த நாடும் இன்றைய இடதுசாரி  ஆட்சியின் கீழ் சித்தாந்த ரீதியாக சீனா பக்கமே சாய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜேவிபி கட்சிக்கும் இடையே இன்று நேற்றல்ல 1971 முதல், ஜேவிபி யுடன் சீனா ஒரு நல்ல உறவைக் கொண்டிருந்தது, அதை அவர்கள் இன்றும் பேணி வருகின்றனர். ஜேவிபி யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் உடன்படிக்கை  ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார். அநுரகுமார அக்கட்சியின் தலைவரான பின்னரும் இதே உடன்பாடு பேணப்பட்டு வருகிறது.  சீனா தனக்கும் ஜேவிபிக்கும் இடையிலான உறவைக் காட்ட அதிக முயற்சி எடுக்கவில்லை. ஆனால் அண்மையில் South China Morning Post இல் வெளியான  ஒரு கட்டுரையிலிருந்து, சீனா ஜேவிபி – என்பிபி  மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது.

ஜேவிபி வெளியுலகுக்கு சனநாயக முகத்தைக் காட்ட முயன்றாலும் அந்தக் கட்சி அடிப்படையில்  ஒரு பாரம்பரிய கம்யூனிஸ்ட்  கட்சிக் கொள்கைகளை கடைப்பிடிக்கிறது. கட்சியின்  கட்டமைப்பு, அதன் ஒழுக்கக் கட்டுப்பாடு ஒரு அசல் கம்யூனிஸ்ட்  கட்சியின் கட்டமைப்பு, ஒழுக்கக் கட்டுப்பாட்டை ஒத்ததாக இருக்கிறது. அதன் கொடி சிவப்பு நிற சுத்தியல் – அரிவாள். கட்சியின் உச்சகட்ட அதிகாரம் அரசியல் குழுவின் கையிலேயே இருக்கிறது. குறிப்பாகச் சொன்னால் அதன் பொதுச் செயலாளர் கையில் இருக்கிறது. ஜேவிபி கட்சியின் தலைமையகத்தில் கம்யூனிஸ தத்துவத்தின் ஞானத் தந்தையர்களான  கார்ல் மார்க்ஸ், பிரட்ரிக் ஏன்ஜெல்ஸ், விளாடிமிர் லெனின் ஆகியோரின் உருவப்படங்கள் காட்சியளிக்கின்றன!

This image has an empty alt attribute; its file name is image-44.png

ஜேவிபி இன் ஆட்சியில் சிறிலங்கா  சீனா பக்கம் சாயாமல் இருப்பதற்கு இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறது. அனுர குமார திசநாயக்காவுக்கு அளிக்கப்பட்ட சிவப்புக் கம்பள வரவேற்கு அதனைக் காட்டுகிறது.

 எனவே இந்தியா இலங்கைத் தமிழர்களது மீட்பர்  என எண்ணுவது அல்லது நம்புவது  யதார்த்தமாக இருக்காது. ஒவ்வொரு நாடும் தனது  கொந்த அரசியல், பொருளாதார, பாதுகாப்பு  நலன்களுக்கே முக்கிய இடம் கொடுக்கிறது. இந்தியா இந்த விதிக்கு விலக்கானது அல்ல. இப்படி எழுதுவதால் இந்தியாவை பகைக்க வேண்டியதில்லை. இன்றைய இந்தியாவை முழுதும் நம்பமுடியாது என்பதுதான்.

About editor 3244 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply