பௌத்த தேசியவாதத்தை முன்னிலைப்படுத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ், முஸ்லிம் சமூகங்களை இலக்குவைக்கின்றன

image

(நா.தனுஜா)

ஜனாதிபதியின் கொள்கையில் சிங்கள பௌத்த தேசியவாதமும் இராணுவயமாக்கலும் இரு பிரதான கூறுகளாகக் காணப்படுவதுடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற சிங்கள பௌத்த தேசியவாதத்தை மையப்படுத்திய அரசியல் செயற்பாடுகள் ஏற்கனவே இன, மதரீதியாக பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு ஓரங்கப்பட்டப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் சமூகங்களை இலக்குவைப்பவையாக அமைந்துள்ளன என்று அமெரிக்க காங்கிரஸின் டொம் லான்ரோஸ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இவ்வாறானதொரு பின்னணியில் அமெரிக்கா இலங்கைக்கு ‘நிபந்தனைகளற்ற’ ஆதரவை வழங்கக்கூடாது என்று வலியுறுத்திய அவர், சர்வதேச நீதிப்பொறிமுறை, மக்னிற்ஸ்கி சட்டப்பயன்பாடு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 7031 (சி) சரத்தின் கீழான தடை போன்ற பல்வேறு வழிமுறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்கு அவசியமான ஒத்துழைப்பை அமெரிக்க வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல்’ தொடர்பில் தகவல்களைத் திரட்டுவதற்கான விசாரணையொன்று அமெரிக்க காங்கிரஸின் டொம் லான்ரோஸ் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கடந்த வாரம் நடத்தப்பட்டது.

அவ்விசாரணைகள் டொம் லான்ரோஸ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதித்தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களான ஜேம்ஸ் பி.மெக்கோவேர்ன், கிறிஸ்டோபர் எச்.ஸ்மித் மற்றும் டெபோரா ரோஸ் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது. அதில் முன்னிலையாகி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை தொடர்பில் சாட்சியமளிக்கையிலேயே அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கம் உள்ளடங்கலாக பல்வேறு அரசாங்கங்களும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்குத் தவறியிருப்பதுடன் அதன் விளைவாக குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

அதேபோன்று இலங்கையில் பொலிஸாரினால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் என்பன அதிகரித்துள்ளன. மக்கள் மத்தியில் தமக்குக் காணப்படும் ஆதரவை இழந்துவிடுவோம் என்ற அச்சமும், பெரும்பான்மையினரல்லாத சமூகங்களின் கோரிக்கைகள் வெகுவாகக் கருத்திலெடுக்கப்படுகின்றன என்ற நிலைப்பாடு ஏற்பட்டுவிடக்கூடும் என்ற எண்ணமுமே கடந்த அரசாங்கங்கள் போர்க்குற்றங்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தாமைக்கான காரணமாக அமைந்திருக்கக்கூடும்.

அதன் விளைவாக சிங்கள பௌத்த தேசியவாதத்தை அடிப்படையாகக்கொண்ட பெரும்பான்மைவாதப்போக்கு இலங்கையில் நிலைகொண்டிருப்பதை ஏற்றுக்கொள்வதற்கு அரசு மறுப்பதுடன் ஏனைய சமூகங்கள் மீதான அடக்குமுறைகள் மிகச்சாதாரணமானவையாகவும் மாற்றப்பட்டுவிட்டன. குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு என்பது இலங்கையில் நிரந்தரமானதொன்றாகவே மாறிவிட்டது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்காத, ஏதேச்சதிகாரப்போக்கிலான தற்போதைய அரசாங்கம், குறைந்தபட்சம் அனைத்துத்தரப்பினரையும் உள்வாங்கக்கூடிய வகையிலான பொதுக்கொள்கையை வகுப்பதற்கும் ஆட்சிநிர்வாகத்தை முன்னெடுப்பதற்குமான முயற்சிகளைக்கூட மேற்கொள்ளவில்லை. மாறாக அரசாங்கம் சிறிதாகவும் பெரிதாகவும் தமக்குக் கிடைக்கக்கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது பெரும்பான்மைவாத இயல்பை மீண்டும் நிரூபிக்கும் விதமாகவே செயற்படுகின்றன.

ஜனாதிபதியின் கொள்கையில் சிங்கள பௌத்த தேசியவாதமும் இராணுவயமாக்கலும் இரு பிரதான கூறுகளாகக் காணப்படுவதுடன் அவை தீர்மானங்களை மேற்கொள்வதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் பெரிதும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

வெறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையிலான சிங்கள பௌத்த தேசியவாதத்தை மையப்படுத்திய அரசியல் செயற்பாடுகள் ஏற்கனவே இன, மதரீதியாக பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் சமூகங்களை இலக்குவைக்கின்றது.

இந்த சிங்கள பௌத்த தேசியவாதம் மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றின் ஓரங்கமாக, பௌத்த சின்னங்கள் காணப்பட்டதாகக்கூறி தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

எதுஎவ்வாறெனினும் அரசாங்கத்தினால் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய வகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மிகச்சொற்பளவான நடவடிக்கைகளும் ஏனைய தரப்புக்களின் அழுத்தத்தின் விளைவானவையேயாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தக்கவைத்துக்கொள்ளல் ஆகியவற்றை அதற்கான உதாரணங்களாகக் குறிப்பிடமுடியும்.

மேலும் நாட்டில் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி சுருக்கமடைந்திருப்பதுடன் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு உள்ளாகக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பெருமளவிற்கு இராணுவமயமாக்கப்பட்டிருப்பதுடன் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இராணுவத்தினரின் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.  

அடுத்ததாகப் ‘போதைப்பொருளுக்கு எதிரான போரில்’ பல்வேறு சட்டவிரோத படுகொலைகள் இடம்பெற்றிருப்பதுடன் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய பெரும் எண்ணிக்கையானோர் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மேலும் இலங்கையில் நடைமுறையிலுள்ள ‘கட்டாய போதைப்பொருள் புனர்வாழ்வளித்தல்’ முறைமையானது மனித உரிமைகள் நியமங்களை மீறுவதாக அமைந்துள்ளது. இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் போதைப்பொருள் புனர்வாழ்வளிப்பு நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் உடலியல் மற்றும் உளவியல் ரீதியான வன்முறைகளுக்கு முகங்கொடுப்பதுடன் அவர்கள் முறையற்ற விதத்தில் நடாத்தப்படுகின்றார்கள்.

அதேபோன்று பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்தும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக தீவிரவாத மற்றும் அடிப்படைவாத சிந்தனையுடைவரகள், அத்தகைய செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பது குறித்து கடந்த மார்ச் மாதம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டல்களைக் குறிப்பிடமுடியும்.

இவ்வாறாதொரு பின்னணியில் அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஆதரவென்பது ‘நிபந்தனைகளற்றதாக’ இருக்கக்கூடாது. மாறாக அது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஃ1 தீர்மானத்திற்கு அமைவானதாகவே காணப்படவேண்டும். அதேபோன்று சர்வதேச நீதிப்பொறிமுறை, மக்னிற்ஸ்கி சட்டப்பயன்பாடு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 7031 (சி) சரத்தின் கீழான தடை போன்ற பல்வேறு வழிமுறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்கு அவசியமான ஒத்துழைப்பை அமெரிக்க வழங்கவேண்டும். மேலும் இனப்பிரச்சினைக்கான அடிப்படைக்காரணத்தைக் களையக்கூடியவாறான அரசியல் தீர்வை அடைந்துகொள்வதற்கும் ஆதரவு வழங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

பௌத்த தேசியவாதத்தை முன்னிலைப்படுத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ், முஸ்லிம் சமூகங்களை இலக்குவைக்கின்றன – அம்பிகா சற்குணநாதன் சாட்சியம் | Virakesari.lk

About editor 3244 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply