மாமனிதர் தோழர் நல்லகண்ணு
பழ. நெடுமாறன்
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவரும் பொது வாழ்வில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை என்பவைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துவரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா வருகிற 29.12.2024 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிறது. தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் தமிழறிஞர்கள், கவிஞர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள், கல்வியாளர்கள் உட்பட பலரும் பங்கேற்கின்றனர்.
இவ்விழாக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், அய்யாவின் நூற்றாண்டு விழாவையொட்டி எழுதிய கட்டுரை கீழே தரப்படுகிறது.
· இந்தியாவின் வடக்கே கான்பூர் நகரில் 1925ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி அமைக்கப்பட்டது.
· அதே நாளில் இந்தியாவின் தென்கோடியான தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் தோழர் ஆர். நல்லகண்ணு பிறந்தார்.
· தமிழரான சிங்காரவேலர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நூற்றாண்டு விழா நடைபெறும்போது தமிழரான தோழர் டி. இராசா அதன் பொதுச் செயலாளராகத் திகழ்வதும், தமிழ்நாட்டில் இக்கட்சியை வேரூன்றச் செய்த தியாகச் செம்மல் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறுவதும் தற்செயலானது அல்ல. வரலாற்றுக் கரங்களினால் பொறிக்கப்பட்ட அழிக்க முடியாத பட்டயங்களாகும்.
· ந.இ. இராமசாமி – கருப்பாயி இணையர்கள் பெற்றெடுத்த எட்டு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்த புரட்சிக் குழந்தை தோழர் நல்லகண்ணு ஆவார்.
· பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பாரதியார் பாடல்களில் உள்ளத்தைப் பறிகொடுத்தார். செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார், தீரர் சத்தியமூர்த்தி, தியாகசீலர் முத்துராமலிங்கத் தேவர், தியாகி சோமயாசுலு போன்றவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டு தனது தேசப் பற்றினை வளர்த்துக்கொண்டார்.
· நெல்லை இந்துக் கல்லூரியில் புலவர் வகுப்பில் சேர்ந்தார். ஆனால் பாதியில் கல்வியை நிறுத்திவிட்டு 1946ஆம் ஆண்டு மக்களுக்காகத் தொண்டாற்றும் மனிதநேயராக மாறினார்.
· நாங்குநேரி வட்டத்தில் 1947ஆம் ஆண்டு மே தின கொண்டாட்டத்திற்கு இளைஞரான நல்லகண்ணு விவசாயிகளைத் திரட்டி வெற்றிகரமாக நடத்தியதைக் கண்டு வெகுண்டெழுந்த நிலவுடமையாளர்கள் ஏவிய குண்டர்களால் தாக்கப்பட்டு முதல் தியாகத் தழும்பை ஏற்றார்.
சித்ரவதைகளும் – சிறையும்
· 1948ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநாட்டில் “ஆயுதம் ஏந்தியப் புரட்சி நடத்தவேண்டிய தருணம் பிறந்துவிட்டது” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்டது. நாடெங்கும் கம்யூனிஸ்டுத் தோழர்கள் வேட்டையாடப்பட்டனர்.
· 20.12.1949 அன்று தலைமறைவாக இருந்த நல்லகண்ணுவை காவல்படை கைது செய்து அவரது கை, கால்களில் விலங்கு பூட்டி அழைத்துச் செல்லும் வழியில் சாலையோரத்தில் படுக்க வைத்து உடலை மிதித்துத் துன்புறுத்தினர். அப்போது அவரது மீசையை வெண்புகை சுருட்டின் நெருப்பினால் பொசுக்கித் துடிதுடிக்க வைத்தனர். அத்தனை கொடுமைகளையும் அவர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 27.
· தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுத் தோழர்கள் பலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது அரசைக் கவிழ்க்கச் சதி செய்ததாக வழக்குகள் தொடுக்கப்பட்டன. நெல்லை சதி வழக்கில் கே. பாலதண்டாயுதம், ப. மாணிக்கம், ஐ. மாயாண்டி பாரதி உட்பட பலரோடு ஆர். நல்லகண்ணு அவர்களும் குற்றம் சாட்டப்பட்டார். 3 ஆண்டுகளுக்கு மேல் விசாரணை நடத்தப்பட்ட சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைத்துத் தோழர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
· மதுரைச் சிறையில் நிர்வாகத்தின் அனுமதியுடன் கம்யூனிஸ்டுகள் நூலகம் ஒன்றினை உருவாக்கியிருந்தார்கள். 340 நூல்களைக் கொண்ட அந்த நூலகத்திற்குப் பொறுப்பாளராகத் தோழர் நல்லகண்ணு செயற்பட்டார்.
· அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு நாடெங்கும் மூண்டெழுந்த மக்கள் இயக்கத்தின் விளைவாக நெல்லை சதி வழக்கில் தண்டிக்கப் பெற்றவர்களில் தோழர் நல்லகண்ணு அவர்களைத் தவிர மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
· வெடிகுண்டு வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மதுரைச் சிறையில் 5 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனையை அனுபவித்து மொத்தம் 7 ஆண்டு காலம் சிறையிருந்து 1956ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் அன்றுதான் அவர் விடுதலையானார்.
· தமிழக கம்யூனிஸ்டுகளில் அதிக காலம் சிறையில் இருந்தவர்கள் என்னும் பெருமையினை தோழர் பாலதண்டாயுதம், நல்லகண்ணு ஆகியோர் பெற்றனர்.
· சிறைவாசிகளுக்கு அலுமினியப் பட்டையொன்றில் கைதி எண்ணும், விடுதலை செய்யப்பட வேண்டிய ஆண்டும் குறிக்கப்பட்டிருக்கும். தோழர் நல்லகண்ணுவின் கைதி எண். 9658 ஆகும்.
முதல்வர் காமராசருடன் சந்திப்பு
· சிறையிலிருந்து விடுதலையானதும் மற்ற தோழர்களின் விடுதலைக்காக முதலமைச்சர் காமராசரைச் சந்திக்க விரும்பினார் தோழர் நல்லகண்ணு. இந்த சந்திப்புக்கு சட்டமன்ற கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவராக இருந்த தோழர் பி. இராமமூர்த்தி ஏற்பாடு செய்தார். இருவருமாக முதல்வரைச் சந்தித்தனர். சிறையிலிருக்கும் கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டுமென தோழர் நல்லகண்ணு வேண்டிக்கொண்டார். மாநில அரசின் சட்டத்திற்குட்பட்டு தண்டிக்கப்பட்டுச் சிறையிலிருக்கும் தோழர்களை விடுதலை செய்ய முதல்வர் காமராசர் ஒப்புக்கொண்டார். மத்திய சட்டபடி தண்டிக்கப்பட்டுச் சிறையிலிருக்கும் தோழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. அது மத்திய அரசுக்கே உள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ஆனாலும், அத்தோழர்கள் அனைவருக்கும் சிறையில் பி வகுப்பு கொடுக்க முதல்வர் காமராசர் ஆணைப் பிறப்பித்தார்.
கோயில் நுழைவுப் போராட்டம்
· 1920களிலேயே தமிழ்நாட்டில் ஆலய நுழைவுப் போராட்டங்கள் வெடித்தெழுந்தன. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கோயில் நுழைவுப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் நடத்தினர். இப்போராட்டத்திலும் தோழர் நல்லகண்ணு முன்னின்றார்.
கடனா நதி அணைப் போராட்டம்
· நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் பொதிகையில் உற்பத்தியாகி தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கடனா நதியில் அணை கட்டவேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் நடத்திய போராட்டத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் தோழர் நல்லகண்ணு அம்பாசமுத்திரம் வட்ட அலுவலகத்திற்கு முன்னால் 24.07.1966ஆம் நாளில் உண்ணாநோன்புப் போராட்டத்தை மேற்கொண்டார். கட்சித் தலைவர் தோழர் மணலி கந்தசாமியை அழைத்துப் பேசிய அரசு கடனா நதியில் அணை கட்ட வாக்குறுதி அளித்தது. இதை ஏற்று 04.08.1966ஆம் நாளில் தோழர் நல்லகண்ணும் மற்ற தோழர்களும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர். அவர் நடத்திய போராட்டத்தின் விளைவாக கடனா நதி மீது அணை நிமிர்ந்து நிற்கிறது. அணை நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்யும் மக்கள் உள்ளங்களில் அவர் குடிகொண்டுள்ளார்.
மணல் கொள்ளை எதிர்ப்பு
· தமிழக ஆறுகளில் குவிந்திருக்கும் மணல் கொள்ளையடிக்கப்பட்டு ஆறுகள் கட்டாந்தரையாகி புதர்கள் வளர்ந்து மண்டிக் கிடக்கின்றன. இதன் விளைவாக நிலத்தடி நீர் வற்றிப்போனது. பாலங்களும் அணைகளும் இடிந்து சரிகின்றன. விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை, இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார் தோழர் நல்லகண்ணு. நீதிமன்றம் அவரைப் பாராட்டியதோடு, ஆய்வுக் குழு ஒன்றினை அமைத்து மணல் கொள்ளை குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு பணித்தது.
குடும்பம்
· 1958ஆம் ஆண்டில் தனது 33ஆவது வயதில் திருமதி ரஞ்சிதம் அம்மையாரோடு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தார். மத வேற்றுமைகளை கடந்து இப்புரட்சித் திருமணம் நடைபெற்றது. சமய வேலியைக் கடந்து இலட்சிய இணையராக வாழ்ந்த இவர்களின் மூத்த மகள் காசி பாரதி தலைமையாசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றார். இரண்டாவது மகள் மருத்துவர் ஆண்டாள் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
· கணவரை கட்சித் தொண்டிற்கு முழுமையாக ஒப்படைத்துவிட்டு குடும்பச் சுமையைத் தானே ஏற்ற ரஞ்சிதம் அம்மையார், தமது இரு மகள்களையும் பொறுப்பாக வளர்த்து சிறப்பான கல்வி பெற வைத்து சிறந்த பணிகளில் அமர வைத்திருப்பது அவருடைய தொலைநோக்கையும், கல்விப் பயிற்சியின் மேன்மையையும் காட்டுகிறது. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்ற பாவேந்தரின் வரிகளுக்கு இலக்கணமாக இக்குடும்பம் திகழ்கிறது.
· தனது கணவருக்கும் புதல்விகளுக்கும் செய்யவேண்டிய கடமைகளையெல்லாம் நிறைவேற்றி பேரன் பேத்திகளையெல்லாம் கண்டு மகிழ்ந்த ரஞ்சிதம் அம்மையார் 01.12.2017 அன்று மறைந்த போது தோழர் நல்லகண்ணு நிலைகுலைந்து போனார். பொது வாழ்விலும் சொந்த வாழ்விலும் அனைத்துவகையிலும் தோள்கொடுத்த வாழ்க்கைத் துணை நல்லாளின் மறைவு அவரை மிகவும் வாட்டியது. ஆனாலும் அந்தப் பெருந்துயரத்தை வெளிக்காட்டாமல் நெஞ்சத்திலேயே அடக்கிக் கொண்டு தனது கடமைகளைத் தொடர்ந்தார்.
பதவியை நாடா பெருந்தகையாளர்
· இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக 1992 முதல் 2005 ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் தொண்டாற்றினார். இரண்டு முறை மட்டுமே ஒருவர் செயலாளர் பொறுப்பு வகிக்க முடியும் என்ற கட்சியின் சட்ட விதியை இவருக்காக அனைத்திந்திய மாநாடே திருத்தி 4 முறை பதவி வகிக்க வைத்தது. மாநிலச் செயலாளராக அவர் பதவி வகித்தபோது விரும்பியிருந்தால் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ, நாடாளுமன்ற மேலவைக்கோ போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், தனது கட்சி வெற்றிபெற வேண்டும் என்பதையே முதன்மையாகக் கருதினாரே தவிர, தனக்குப் பதவி வேண்டுமென ஒருபோதும் எண்ணியதில்லை.
· கட்சி பதவிகளைத் தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தப் பதவியையும் வகிக்காமல் மக்களுக்காகத் தொண்டாற்றித் தனக்கும் தனது கட்சிக்கும் தோழர்களுக்கும் பெருமைத் தேடித் தந்த சிறப்புக்குரியவர் தோழர் நல்லகண்ணு ஆவார்.
சமுதாய ஒற்றுமைத் தூதர்
· 1995ஆம் ஆண்டு தென் தமிழ்நாட்டில் சாதிய மோதல் என்னும் நெருப்பு புயல்வேகத்தில் பரவியது. ஒட்டப்பிடாரம் வட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களும், தேவர் மக்களும் அந்தப் பெரு நெருப்பில் சருகானார்கள். வாழ்நாள் முழுவதிலும் சாதி, சமய பேதமின்றி தான் வாழ்ந்தது மட்டுமல்ல, மற்றவர்களையும் வாழ வைத்த பெருமைக்குரியவர் தோழர் நல்லகண்ணுவின் மாமனார் அன்னாசாமி. அவர் வாழ்ந்த மருதன் வாழ்வு கிராமத்திலும் சாதி மோதல் மூண்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அவர் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறார். சாதிக் கலவரத்தால் அக்கிராமத்தில் அச்சமும் ஆவேசமும் ஒன்றையொன்று மிஞ்சியிருந்த சூழலிலும் தன்னம்பிக்கையோடு தன் வீட்டில் படுத்திருந்தார் அன்னாசாமி. 80 வயதான முதியவர் என்பதைக்கூட பாராமல் எதிர் இனத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக அவருடைய மனைவியின் கண் முன்னரே அவரை வெட்டிச் சாய்த்துவிட்டனர். எந்த மக்களுக்காக அவர் பாடுபட்டாரோ அந்த மக்களைச் சேர்ந்த வெறியர்கள் சிலர் முன்பின் சிந்திக்காது இக்கொடுஞ் செயலை நிறைவேற்றிவிட்டனர்.
· மாமனாரின் கொலைச் செய்தி கிடைத்தவுடன் அளவிலா துன்பத்துடன் விரைந்து வந்த தோழர் நல்லகண்ணு அவர்கள் மாமனாருக்குச் செய்யவேண்டிய இறுதி கடமைகள் முடிந்தவுடன் கலவரப் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் தொண்டில் ஈடுபட்டார். மோதிக்கொண்ட இரு சாதியினரிடையே அமைதியை நிலவச் செய்யவும், ஒற்றுமையை நிலைநிறுத்தவும் தொடர்ந்து தொண்டாற்றினார். தனது மாமனாரைப் படுகொலை செய்தவர்கள் என யாரையும் அவர் வெறுத்தொதுக்கவில்லை.
சோவியத் பயணம்
· 1973ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் சென்று மூன்று மாதங்கள் வரை தங்கியிருந்து அந்நாட்டின் வியக்கத்தக்க வளர்ச்சி குறித்தும், லெனின் கண்ட சோவியத் சமுதாயத்தின் சிறப்பு குறித்தும் பல்வேறு தேசிய இனங்களும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் உண்மையான ஒருமைப்பாட்டு உணர்வுடன் ஒன்றிணைந்து வாழ்வதை நேரில் கண்டும், அளவற்ற மனநிறைவுடன் நாடு திரும்பினார்.
அமெரிக்காவில் கண்டவை
· தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி வரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் சிறப்புத் தொண்டினைப் பாராட்டும் வகையில் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளிவிழா மாநாட்டில் விருது வழங்கப்பட்டது. அமெரிக்கா சென்ற அவர் சிகாகோ நகருக்குச் சென்று அங்கு மே தின விடுமுறை அளிக்கப்படவேண்டும் என்று நடைபெற்ற போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மே தின தியாகிகள் நினைவிடத்தையும், விவேகானந்தர் உரை நிகழ்த்திய மண்டபத்தையும், ஆபிரகாம்லிங்கனின் நினைவிடத்தையும் மட்டுமே பார்த்தார்.
பெற்ற நிதி யாவும் கட்சிக்கே
· தோழர் நல்லகண்ணு அவர்களின் 80ஆவது பிறந்தநாள் விழா சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.
· கட்சித் தோழர்களிடம் திரட்டப்பட்ட 1கோடி ரூபாய்கள் அவருக்கு அன்று வழங்கப்பட்டது. அந்த ஒரு கோடியை அப்படியே கட்சி நிதிக்கு அவர் அளித்துவிட்டார்.
· அதே விழாவில் மாணவர் நகலக உரிமையாளர் திரு. அருணாசலம் அவர்கள் மகிழுந்து ஒன்றினை தோழர் நல்லகண்ணு அவர்களுக்குப் பரிசாக முதலமைச்சர் மூலம் வழங்கினார். அதையும் கட்சியின் பொறுப்பில் ஒப்படைத்தார். அந்த மகிழுந்து கட்சி அலுவலகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தோழர் நல்லகண்ணு வெளியில் செல்ல விரும்பும்போது மட்டும் அது அனுப்பப்பட்டு வருகிறது.
விருதுகளுக்குப் பெருமை தந்த விருதாளர்
அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
2007ஆம் ஆண்டு தமிழக ஆளுநர் அளித்த “சக யோகி புரஸ்கார்” விருது.
2008ஆம் ஆண்டு தமிழக அரசு “அம்பேத்கர்” விருது வழங்கியது.
2008ஆம் ஆண்டு பொதுநல அமைப்பின் சார்பில் “காந்தியன்” விருது வழங்கப்பட்டது.
2009ஆம் ஆண்டில் திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் கவி சேத்ரா அமைப்பு “இலக்கியப் பேராசான் ஜீவா” விருதை வழங்கியது.
வடசென்னை காங்கிரசுக் குழுவின் சார்பில் காந்திய விருதும், 1 இலட்ச ரூபாய் பண முடிப்பும் வழங்கப்பட்டன. ஆனால், அவர் அதை தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்திற்கு அளித்தார்.
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு “காயிதே மில்லத்” விருது வழங்கப்பட்டது. காந்தியடிகளின் பேரன் திரு. கோபாலகிருஷ்ண காந்தி வழங்கினார். விருது தொகையான ரூபாய் 21/2 இலட்சத்தையும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கே அவர் வழங்கிவிட்டார்.
2009ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் நாள் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டில் அதன் தலைவர் பழ. நெடுமாறன் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு “உலகப்பெருந்தமிழர்” விருதினை வழங்கினார்.
தமிழக அரசின் சார்பில் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 2023ஆம் ஆண்டில் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு “தகைசால் தமிழர்” விருதினையும், 10இலட்சம் ரூபாய்களையும் அளித்தார். அத்தொகையுடன் தனது சார்பில் 5000ரூபாய்களையும் சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக அவரிடமே திருப்பிக் கொடுத்தார்.
ஈழத் தமிழர் பிரச்சனை
· 2009ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இராணுவம் பெரும் தாக்குதலை நடத்தி 50,000த்திற்கும் மேற்பட்ட தமிழர்களை படுகொலை செய்தபோது அதற்கெதிராக தமிழகத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் பல்வேறு கட்சிகளை ஒன்றுதிரட்டி மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திய இந்த அமைப்பை நிறுவுவதிலும் மட்டுமல்ல, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு ஐதராபாத்தில் நடைபெற்ற போது ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஆதரவாக அங்கு தீர்மானம் நிறைவேற்றுவதிலும் தோழர் நல்லகண்ணு முன்னின்றார்.
· தோற்றத்திலும் வாழ்க்கையிலும் மட்டுமல்ல எளிமை, மேடை பேச்சிலும் எளிமை, எழுத்திலும் எளிமை என வாழ்க்கை நெடுகிலும் எளிமையாகவே வாழ்ந்துவரும் தோழர் நல்லகண்ணு எழுதிய
நூல்கள் வருமாறு-
தியாகத் திருவுருவம் பி. சீனிவாசராவ் வீணாதிவீணன் கதை
விடுதலைப்போரில் விடிவெள்ளிகள் இரு உலகங்கள்
இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி சூத்திரதாரி
பாட்டாளிகளை பற்றிப் பாடிய பாவலர்கள் கங்கை–காவிரி இணைப்பு
அமெரிக்கப் பொதுச் சட்டம் (PL 480) பிறந்த கதை
உலக வங்கியின் உண்மை உருவம்
கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக ஜனசக்தி இதழில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நம்பிக்கை ஒளிவீசும் கலங்கரை விளக்கம்
· பொதுவாழ்வில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை என்பவைகளுக்கு எடுத்துக்காட்டாக தோழர் நல்லகண்ணு திகழ்கிறார்.
· பொதுவாழ்வில் மேற்கண்ட கோட்பாடுகள் சரிந்துகொண்டிருக்கிற இக்காலகட்டத்தில் அனைவருக்கும் நம்பிக்கை தரும் கலங்கரை விளக்கமாக இன்றும் திகழ்ந்து வருபவர் தோழர் நல்லகண்ணு.
· தன் இனத்து மக்களையே எதிர்த்துப் போராடி அடித்தட்டு மக்களைத் தட்டி எழுப்பி சமூகநீதியை நிலைநாட்டத் தொடர்ந்து போராடி வருபவர்.
· அடுக்கடுக்காக வார்த்தைகளை அள்ளி வீசி மக்களைக் கவரும் பேச்சாற்றலோ அல்லது ஆரவார நடையில் எழுதும் எழுத்தாளரோ அல்லர். ஆனாலும் தமிழக அரசியலில் சனநாயக உயர் பண்புகளின் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் என அனைவராலும் போற்றப்பட்டு வருகிறார்.
· “புரட்சிக்கும் புரட்சிகர இயக்கத்துக்கும் உழைத்த உழைப்பு ஒருபோதும் வீணாவதில்லை” என மாமேதை லெனின் கூறியதற்கு எடுத்துக்காட்டாக நம்முன்னர் நடமாடும் மாமனிதராகத் திகழ்கிறார்.
· இந்த மாமனிதர் வாழும் காலத்திலேயே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.
Leave a Reply
You must be logged in to post a comment.