காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தான்!
நக்கீரன்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான கேள்விக்கு கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மிக அலட்சியமாகவும் ஆணவத்தோடும் பதில் அளித்துள்ளர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளார்.
“போர் முடிவடைந்து 15 ஆண்டுகளாகின்றன. எனவே காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இனியும் வருவார்கள் என்று நம்ப முடியாது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தான். இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர். தமது பிள்ளைகளை ஒரு சில அதிகாரிகளிடம் ஒப்படைத்த மக்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்கின்றனர். இதன் பின்னணியை தேடிப்பார்க்கும் போது, அங்கும் முந்தைய ஆட்சியாளர்கள் உள்ளனர்.
“எனவே, மே 18, 2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்தவுடன் 14 அம்சக் கோரிக்கையை நாங்கள் முன்வைத்தோம். அதாவது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைத்து முழுமையான விசாரணைகள் ஊடாக உண்கைமளை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தோம். இம்முறை தேர்தல் அறிக்கையில் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும், அது சார்ந்த வழக்குகளை விசாரிக்கவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் உறுதியளித்துள்ளோம்.
“காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரையில் யாருக்கும் தெரியாது. பாதிக்கப்பட்ட மக்களின் உடல் காயங்களுக்கு மருந்து போடலாம். ஆனால் உளக் காயங்களுக்கு மருந்து போட இயலாது. போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்றன. எனவே காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இனியும் வருவார்கள் என்று நம்ப முடியாது” எனப் பதிலளித்துள்ளார்.
“தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு தீர்வு வழங்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால் இந்த அரசு பதவிக்கு வந்த சொற்ப நாட்களில், அமைச்சரவை பதவியேற்று சில நாட்களிலேயே ஒரு தமிழ் அமைச்சரால் இப்படியொரு கூற்று வெளியிடப்பட்டது எமக்கு அதிர்ச்சியளிக்கின்றது” எனவும் லீலாவதி ஆனந்த நடராசா தெரிவித்துள்ளார்.
“முன்னைய அரசின் ஊழல்கள், மனித உரிமை மீறல்கள், அதிகார அத்து மீறல்கள், வீண்செலவு போன்றவற்றை தோண்டி எடுத்து ஒரு புது யுகத்தை மலரச் செய்யப் போவதாக உறுதிகள் வழங்கி ஆட்சிக் கட்டில் ஏறியவர்கள் இப்போது தட்டை மாற்றி “போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்றன. எனவே காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இனியும் வருவார்கள் என்று நம்ப முடியாது” என அமைச்சர் சந்திரசேகர் கூறுகிறார்.
மக்கள் விடுதலை முன்னணிக் (ஜேவிபி) கிளர்ச்சிகள் மற்றும் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உட்பட, உலகில் மிக அதிக எண்ணிக்கையில் வலிந்து காணாமல் போன நாடுகளில் இலங்கை ஒன்றாகும். ஆட்சி மாற்றத்துக்கு முந்தைய அரசாங்கங்கள் பல தசாப்தங்களாக காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தவோ அல்லது பொறுப்பாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடரவோ மறுத்து வந்துள்ளன. காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் (ஓஎம்பி) வழக்குகளை விசாரிப்பதில் கிட்டத்தட்ட எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. பாதிக்கப்பட்டவர்களால் பரவலாக நம்பப்படவும் இல்லை. விக்கிரமசிங்க நிர்வாகத்தால் முன்மொழியப்பட்ட உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரப்பெல்லை ஜேவிபி கிளர்ச்சியின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளடக்கப்படவில்லை. பல பாரிய புதைகுழிகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் முறையாக விசாரிக்கப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் அறிக்கையில் “சமூக நீதியை நிலைநாட்டுவதே எங்கள் அரும்பணியின் பிரதான எதிர்பார்ப்பாகும். அனைவருக்கும் சம வாய்ப்புகள் மட்டுமின்றி நியாயமான விளைவுகளையும் அனுபவிக்கும் சமுதாயத்தை நாங்கள் நோக்காகக் கருதுகிறோம். வர்க்கம், இனம், மதம், மொழி, சாதி, இருப்பிடம் அல்லது பாலினம் என்ற வேறுபாடுகள் இல்லாமல், ஒவ்வொரு தனிமனிதனும் நிறைவான வாழ்க்கையை வாழவும், சமமான நிலையில் சமூகத்தில் பங்கேற்கவும் கூடிய சமூகத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோளாகும். வாய்ப்புகள், வளங்கள் மற்றும் சலுகைகள் நியாயமாக பங்கிடப்படும் ஒரு சமூகத்திற்காக நாங்கள் பாடுபடுகிறோம்.” இதனை நம்பியே சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் தேசிய மக்கள் சக்தியை நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற வைத்தார்கள்.
போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் வேறு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் வேறு. இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகவே தாய்மார்கள் கடந்த 8 ஆண்டுகளாக தெருவில் இறங்கி வெய்யிலிலும் மழையிலும் போராடி வருகிறார்கள்.
மே 17 அன்று போர் முடிந்த கையோடு 12,000 மேற்பட்ட போராளிகள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார்கள். ஒரு தொகையினர் வட்டுவாகலில் இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவிடம் சரணடைந்தார்கள். பல போராளிகளை அவர்களது தாய்மார்கள் வவுனியா யோசேப் இராணுவ முகாமில் கையளித்தார்கள்.
இந்தப் போராளிகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? அவர்கள் உயிருடன் இல்லை என்றால் அவர்களைக் கொன்றது யார் என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் இறுக்க வேண்டும். முதலில் மே 17, 2009 மாலை வட்டுவாகலில் சரணடைந்த போராளிகள், போராளிகளது குடும்பங்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
18 மே 2009 அன்று காலை முதல் முள்ளிவாய்க்காலில் சிக்குப்பட்டிருந்த தமிழ்மக்களை சரண் அடையுமாறு இலங்கை இராணுவம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்த வண்ணம் இருந்தது. பொதுமக்கள் ஒரு பக்கமும் போராளிகள் இன்னொரு பக்கமும் சரணடையுமாறு கேட்கப்பட்டனர்.
பாலசிங்கம் நடேசன் (அரசியல் பிரிவுத் தலைவர்) அவரது துணைத் தலைவர் சீவரத்தினம் புலித்தேவன் மற்றும் கேணல் இரமேஷ் (சமாதான அலுவலகம்) உட்பட 300 போராளிகள் வெள்ளைக் கொடியுடன் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவிடம் மே 18, 2009 காலை அன்று சரண் அடைந்தார்கள். அதற்கு முன்னர் மே 14, 2009 இல் நடேசன் ஐக்கிய நாடுகள் சபை, நோர்வே அரசு, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு பேசினார்.

மகிந்த இராசபச்ச மற்றும் பசில் இராசபக்ச ஆகியோர் நடேசனும் மற்றவர்களும் வெள்ளைக் கொடியுடன் குறிப்பிட்ட இடத்தில் சரணடையலாம் எனத் தெரிவித்தார்கள். இந்தச் சரண் மூன்றாவது தரப்பின் கண்காணிப்பில் இடம்பெற வேண்டும் என்ற நடேசனின் வேண்டுகோள் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. நடேசனும் மற்றவர்களும் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது பிரிவிடம் சரண் அடைந்தார்கள். இவர்கள் எல்லோரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இலங்கை இராணுவம் எஞ்சியிருந்த வி.புலிகளையும் சண்டையில் கொன்றுவிட்டதாக அறிக்கை விட்டது. சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொல்லுமாறு 58 ஆவது படைப் பிரிவின் தளபதியான சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச அறிவுறுத்தியதாக அப்போதைய இலங்கை இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா கூறினார். (https://en.wikipedia.org/wiki/White_Flag_incident)
அதே நாள் (மே 18, 2009) மாலை வட்டுவாகல் பாலத்தில் எழிலன், யோகி, பாலகுமார், கவிஞர் இரத்தினத்துரை உட்பட 110 க்கும் மேற்பட்ட இரண்டாவது மட்ட வி.புலித் தலைவர்கள் அதே 58 ஆவது படைபிரிவினர் இடம் சரண் அடைந்தார்கள். இப்படிச் சரணடைந்தவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் ஒரு று விசாரணை என்று சொல்லி இபோச பேருந்துகளில் இராணுவம் அழைத்துச் சென்றது. அப்படி அழைத்துச் சென்றவர்களின் பட்டியலை அடிகளார் யோசேப் பிரான்சிஸ் என்பவர் தயாரித்திருந்தார். பின்னர் அவரும் துணைக்குப் போராளிகளோடு பேருந்தில் பயணம் மேற்கொண்டார். பின்னர் அவரும் வலிந்து காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
சரணடைந்த போராளிகளை இராணுவம் அழைத்துச் சென்றதை அவர்களது துணைவியர், உறவினர்கள் எனப் பலர் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் கண்கண்ட சாட்சிகள். எடுத்துக்காட்டாக திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் எழிலன் அழைத்துச் செல்லப்பட்டதற்கு அவரது மனைவி அனந்தி சசிதரன் கண்கண்ட சாட்சியாக இருக்கிறார். (இலங்கை இறுதிப்போரில் ‘புலிகள்’ ராணுவத்திடம் சரணடைந்தனரா? முன்னாள் ராணுவ அதிகாரி வெளியிடும் புதிய தகவல்கள் – BBC News தமிழ்)
சரணடைந்த அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். புழுதியில் எரி காயங்களோடு கிடந்த நடேசன், புலித்தேவன், கேணல் இரமேஷ் ஆகியோரது சடலங்கள் காணொளி மூலம் வெளிவந்தன. (http://anyflip.com/upzk/udkk/basic)
மனிதவுரிமைக்கான யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர் அமைப்பு (UTHR-J ) தனது அறிக்கையில் சரணடைந்த முக்கிய தலைவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டது. அதில் கரிகாலன் (கிழக்கு மாகாண அரசியல் பிரிவின் தலைவர்) லோறன்ஸ் திலகர் ( தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர்) தங்கன் (அரசியல் பிரிவின் துணைப் பொறுப்பாளர்) இளம்பரிதி (முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரசியல் பிரிவின் பொறுப்பாளர்) எழிலன் (முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர்) பாப்பா (முன்னாள் வி.புலிகளின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர்) பூவண்ணன் (வி.புலிகளின் நிருவாக பிரிவின் பொறுப்பாளர்) ஞானம் (பன்னாட்டு அரசியல் அமைப்பின் பொறுப்பாளர்) மற்றும் தமிழினி ( மகளிர் அரசியல் பிரிவின் தலைவி) ஆகியோரது பெயர்கள் அந்தப் பெயர்ப் பட்டியலில் காணப்பட்டன.
தேசியத் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரன் மற்றும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாப்பாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல அவரது வாரிசுகளையும் உயிரோடு விடக் கூடாது என்பதில் அரச தரப்பு, குறிப்பாக கோத்தபாய, குறியாக இருந்தார்.
12 யூன் 2009 அன்று ஏசியன் ரிபுயூன் (The Asian Tribune) – அன்றைய இராசபக்ச ஆட்சியின் ஊதுகுழல் – ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் வி.பாலகுமார் உட்பட யோகரத்தினம் யோகி (வி.புலிகளின் முன்னாள் பேச்சாளர் ) பேபி சுப்பிரமணியன் (வி.புலிகளின் கல்வித்துறைப் பொறுப்பாளர்) லோறன்ஸ் திலகர் ( தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர்) இளம்பரிதி (முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரசியல் பிரிவின் பொறுப்பாளர்) கரிகாலன் (கிழக்கு மாகாண அரசியல் பிரிவின் தலைவர்) மற்றும் பெயர் தெரியாத மூவர் காவல்துறையின் விசாரணை வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள் என ஏசியன் ரிபுயூன் எழுதியிருந்தது.
06 ஓகஸ்ட் 2009 இல் லங்கா காடியன் (Lanka Guardian) இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் எடுத்த ஒரு படத்தை வெளியிட்டிருந்தது. அதில் பாலகுமார் மற்றும் அவரது மகன் ஒரு மரத்தின் கீழ் போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்திருந்தார்கள். அதன் பின்னணியில் சீருடை அணிந்த இராணுவத்தினர் காணப்பட்டார்கள்.
சிறிலங்காவின் மூத்த அமைச்சர் ஒருவர் (டியூ குணசேகரா) தெரிந்தோ தெரியாமலோ வி.பாலகுமார், யோகரத்தினம் யோகி மற்றும் மூத்த வி.புலித் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் இராணுவ பாதுகாப்பில் இருந்தபோது கொல்லப்பட்டார்கள் எனச் சொன்னார்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடையச் செல்லு முன்னரே வி.புலிகளால் எரிக் சொல்கெயம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகத் தெரிகிறது.
மே 19, 2015 இல் யஸ்மின் சூக்கா (International Truth & Justice Project – Sri Lanka) சரணடைந்த பின்னர் காணாமல் போன விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளிகளது பெயர்ப் பட்டியலை வெளியிட்டிருந்தார். அவரால் வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:
1) ஆதவா ( செயற்பாடு தெரியாது)
2) அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
3) அம்பி ( செயற்பாடு தெரியாது)
4) அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),
5) ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)
6) பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),
7) பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),
8) V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )
9) Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)
10) பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )
11) பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )
12) பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)
13) பாபு ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),
14) பாபு இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )
15) பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)
16) பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)
17) பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )
18) Lt.Col.சந்திரன் ( இராணுவ் புலனாய்வு)
19) எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )
20) எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )
21) வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )
22) கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)
23) கரிகரன் ( செயற்பாடு தெரியாது)
24) இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )
25) இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)
26) இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)
27) இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
28) இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
29) இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)
30) இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )
31) இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
32) இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)
33) இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)
34) இசைபிரியா ( ஊடக பிரிவு)
35) ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)
36) ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )
37) காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)
38) கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)
39) கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)
40) கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)
41) கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )
42) கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)
43) கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
44) குயிலன் ( இராணுவ புலனாய்வு)
45) குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)
46) குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)
47) குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)
48) லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )
49) மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )
50) மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )
51) மலரவன் (நிர்வாக சேவை )
52) மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)
53) மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)
54) மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )
55) மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )
56) மோகன் அங்கிள் (கடற்புலிகள் )
57) முகிலன் (இராணுவ புலனாய்வு)
58) முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )
59) நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)
60) நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )
61) நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )
62) நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )
63) நேயன் (புலனாய்வு)
64) நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )
65) நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய் )
66) நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)
67) நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )
68) பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )
69) பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)
70) Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)
71) Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)
72) பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)
73) பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
74) பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)
75) புலித்தேவன் (சமாதான செயலகம்)
76) புலிமைந்தன் (யோகியின் சாரதி)
77) புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )
78) புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)
79) ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)
80) ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )
81) ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)
82) புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)
83) Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)
84) Col.ரமேஸ்(மூத்த இராணுவ தளபதி)
85) ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)
86) ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )
87) ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)
88) S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)
89) சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)
90) சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)
91) செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )
92) சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)
93) சின்னவன் (புலனாய்வு)
94) சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)
95) Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)
96) Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)
97) திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)
98) திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )
99) துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)
100) வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)
101) வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)
102) Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)
103) Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)
104) வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)
105) வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)
106) வினிதா (நடேசனின் மனைவி )
107) வீமன் (கட்டளை தளபதி)
108) விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)
109) யோகன் / சேமணன் (அரசியல் துறை)
110) யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்) (https://www.colombotelegraph.com/index.php/disappearances-in-custody-six-years-ago-today/)
ஆக சரணடைந்த வி.புலிப் போராளிகள் இலங்கை இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டுப் பின்னர் கொலை செய்யப்பட்டார்கள். அதற்கான கண்கண்ட சாட்சியங்கள், சூழ்நிலை ஆதாரங்கள், காணொளி, ஒளிப்பட ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் இலங்கை இராணுவமோ தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை இலங்கை அரசிடம் சரணடைந்தார்கள் எனப் பச்சைப் பொய் சொல்கிறது.
சரணடைந்த வி.புலிகளை படுகொலை செய்த இலங்கை இராணுவ தளபதிகள் போர்க் குற்றவாளிகள். அவர்களை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் (அய்சிசி) அல்லது நீதிக்கான பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
“காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தான். இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும் இருக்கின்றனர்” என கடற்றொழில் அமைச்சர் – ஒரு தமிழ் அமைச்சர் – இராமலிங்கம் சந்திரசேகர் கொஞ்சமும் வெட்கமோ, துக்கமோ, இரக்கமோ இல்லாமல் முகத்தில் அறைந்தது போல் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இராணுவத்திடம் தாங்கள் ஒப்படைத்த பிள்ளைகளைத் திருப்பித் தாருங்கள் என வீதியில் இறங்கிப் போராடி வரும் தாய்மார்களுக்கு உலகம் நீதி வழங்கப்பட வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.