தமிழிசைப் பாடல்களில் சந்தக் குழிப்பு – தோற்றமும், வளர்ச்சியும்


தமிழிசைப் பாடல்களில் சந்தக் குழிப்பு – தோற்றமும், வளர்ச்சியும்

               ஜான்சன் விண்ணாய்வு நிலையம், ஹூஸ்டன், அமெரிக்கா

1.        இசை இலக்கணத்தில் சந்தம்

சங்க காலத்திலேயே இயற்கை தான் இசையைத் தோற்றுவிக்கும் முதல் ஆசிரியன் என்று கண்டு பாடியுள்ளனர். மூங்கில் துளையில் காற்று, அருவி, வண்டுகள், பறவைகள் சங்கீதம் பாடும். ஓசை ஒலி உடையது இயற்பா, இசை ஒலி உடையது இசைப்பா என்று இலக்கணம் வகுத்தனர். சங்கீதத்தின் பல கூறுகளைத் தொல்காப்பியத்தில் காண்கிறோம். வண்ணம் என்று தொல்காப்பியர் சந்தத்தைக் குறிப்பிடும் 44 இடங்கள் அமைந்துள்ளன.   ‘வண்ணங்கள் என்பன சந்த வேறுபாடுகள்’ எனப் பேராசிரியர் உரை தந்துள்ளார். வண்ணம் தூய தமிழ்ச்சொல் தான். நிறம் எனப் பொருள்படும் வர்ணம் என்ற வடசொல் அன்று. பகு-/வகு-, பழுதி/வழுதி, பால்/வால், பாடிவாசல்/வாடிவாசல், பயலை/வயலை இத்தகைய சொல்லிணைகள் போல, பண்-  பண்ணம்/வண்ணம் என்னும் சொல்முதல் பகரம் வகர எழுத்து மாற்றம் இது. காரைக்கால் அம்மையார் பண்களில் அமைத்தும், ஏழு சுரங்களைக் குறித்தும், இசைக்கருவிகளைத் தொகுத்தும் பாடினமையால், தமிழிசையின் தாய் எனப் புகழ்பெறுகிறார்.

வண்ணம் நூறும் பலவும் ஆகி வேறுபடினும், தொல்காப்பியச் சூத்திரத்தின் இருபதுள் அடங்கும் என்பார் பேராசிரியர். மனஸ்/மனம், தபஸ்/தவம் போல, சந்தஸ்/ சந்தம். சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப்பாடல்கள் அனைத்தும் சந்தப் பாடல்கள். சந்தத் தமிழின் தந்தை இளங்கோ அடிகள் பாடிய கந்துகவரி தமிழின் முதல் சந்தப்பாடல். இதே திசிரநடைச் சந்தத்தில் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம், சிவவாக்கியம், கம்பனின் ‘உறங்குகின்ற கும்பகன்ன’ பாடியுள்ளனர்.‘சந்தம் மலி பாடல்’, ‘சந்தமே பாட வல்ல தமிழ் ஞான சம்பந்தன்’, ‘சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை எனப் பரவு பாடல்’ இவ்வாறு எல்லாம் பக்தி இலக்கியக் காலத்திலே, சந்தஸ் வடசொல் சந்தம் தொல்காப்பியரின் வண்ணம் தமிழ்ச்சொல்லுக்கு நேர் ஆகிறது. சிந்தாமணி, சூளாமணி, கம்பன் என காப்பியங்களில் சிலப்பதிகாரத்தின் சந்தப் பாடல் மரபு தொடர்ந்துள்ளது. பரணி நூல்களில் சந்த அமைப்பு பெரிதாகி இருக்கிறது.

2.        ஒலிக்குறிப்பாக இயற்கைச் சந்தம்

  தும்பி போன்ற வண்டுகள் , தேனீக்கள் இசை முரல்வன. இந்த உயிரிகளுக்கு அளி (Bees) என்பது சங்ககாலப் பொதுப்பெயர். ‘அளிவழக்கம்’ என்று அளிகள் பாடுவதைப் பரிபாடலில் பார்க்கிறோம். தென்னா, தெனா என வண்டுகள் முரலுவதால், தென்னானே, தேன்னானே என நாட்டார் இசையில் சந்தத்தைப் பாடுகின்றனர். தென்னாதெனா என இசை பாடும் தேனீக்கள் மலரில் இருந்து எடுத்துக் கூட்டில் சேர்ப்பதற்குத் தேன் என்ற பெயர் பிறந்தது. இதுவே, தே(ம்)/தீ(ம்) = இனிமை என்ற பொருள் பெறக் காரணம் ஆயிற்று: தேம்பாகு (தேன்பாகு) இனிய பாகு. தேனளிகள் போன்றவை எழுப்பும் இசையைப் பக்தி இலக்கியங்கள் முறையாகத் தொகுத்துள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

தென்ன (4)

தென்ன என வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள் – நாலாயிரம்:682/3

தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு திருவயிந்திரபுரமே – நாலாயிரம்:1149/4

தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை – நாலாயிரம்:1375/4

தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும்  – நாலாயிரம்:1756/4

தென்னா (2)

தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து – நாலாயிரம்:3209/3

தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே – நாலாயிரம்:3961/4

தெத்தென (1)

தெத்தென இசை முரல் சரிதையர் திகழ்தரும் அரவினர் – தேவாரம்-சம்:3714/3

 தெத்தே (2)

தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே – தேவாரம்-சம்:2249/4

தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர் – தேவாரம்-அப்:166/2

தேத்தென (2)

தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து – தேவாரம்-அப்:785 /3

தேத்தெத்தா என்ன கேட்டார் திரு பயற்றூரனாரே – தேவாரம்-அப்:323 /4

தெத்தெனா (1)

தென்னா என்னும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவாரம்-சுந்:1027/4

தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடி சில் பூதமும் நீரும் – தேவாரம்-சுந்:16/1

தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம் – தேவாரம்-சம்:1536/3

தென்னென (2)

தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் – தேவாரம்-சம்:1150/3

தென்னென இசை முரல் சரிதையர் திகழ்தரும் மார்பினில் – தேவாரம்-சம்:3717/3

சங்க காலச் சேரர் தலைநகர் கரூர். இந்த ஆய்வு முடிபு “சேரன் செங்குட்டுவன்”, “வஞ்சி மாநகர்” என்ற இரு புகழ்பெற்ற நூல்களில் சங்க இலக்கியத்தை முழுதும் ஆய்ந்து ஒரு நூற்றாண்டு முன்னரே நிறுவப்பெற்றது. பின்னர் கரூரில் நடந்த தொல்லியல் ஆய்வுகள், நாணயவியல் சங்க காலச் சேரர் தலைநகர் வஞ்சி என்பது கரூர் தான் என உறுதிப்படுத்தின. கொங்கர் கோன், கொல்லி காவலன் என்றெல்லாம் தன்னைக் கூறும் குலசேகர ஆழ்வார் காலம் ஈறாக, கரூர் சேரர் தலைநகராக இருந்தது. பின்னர் சோழர்கள் எழுச்சியால், சேரர் தலைநகர் தாராபுரம், கொச்சிக்கு இடம்பெயர்ந்தது. இந்தியாவின் செம்மொழிகள் இரண்டு: (1) தமிழ் (2) வடமொழி. பன்னிரண்டு ராசிகளில் முதலாவதாக, மேட மாதப் பௌர்ணமியில் சித்திரை விண்மீன் என்பதற்கான வானியலை நிறுவிய சேரன் “ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்” எனப் புகழ்பெற்றான். சேரன் செங்குட்டுவன் வடநாட்டின் மீது போர் தொடுத்து, இமயமலையில் வில் சின்னம் பொறித்தான் எனப் புகழ்கிறார் இளங்கோ அடிகள். கரூரில் இருந்த அரண்மனையில் வளர்ந்த அடிகள் செம்மொழிகள் இரண்டையும் பழுதறக் கற்றார். முத்தமிழ்க் காப்பியத்தில் கதாமாந்தர் பெயர்களை அமைத்த விதம் பற்றி விரிவாய்க் குறிப்பிட்டுள்ளேன் [1]. தம் சமண சமயக் கோட்பாடுகளை விளக்குவதற்காகவே, கவுந்தி அடிகள் பாத்திரத்தைப் படைத்து நாடுகாண் காதை பாடியுள்ளார்.

இளங்கோ அடிகள் தம் வடமொழி அறிவால், தமிழ்ச் செய்யுள் யாப்பின் அசை, சீர், தளை அடுக்கின் மேல் அடுக்காக, சந்தம் என்னும் கணக்கையும் சேர்த்து அமைத்தார். இதனைச் சிலப்பதிகாரத்தில் இசைப்பாக்களாக உள்ள வரிப்பாடல்களில் காண்கிறோம். சந்தப் பாக்களின் இலக்கணம் சமணர்கள் இயற்றிய யாப்பருங்கல விருத்தி, பௌத்தர் செய்த வீரசோழியம் இரண்டிலும் முதன்முதலாக விளக்கம் பெறுகிறது.

வடமொழி யாப்பிலக்கணம், விருத்தங்களுக்கு எழுத்துக்களையும் மாத்திரைகளையும் கணக்கிடும் வகையால் கூறும் அடிப்படைகள் இலகுவும் குருவும் ஆகும். லகு (< இளகு), குரு விருத்த பேதங்களை உண்டாக்குபவை. சந்த இலக்கணத்தின் வேரான இந்த அடிப்படை கொண்டு, சந்தக்குழிப்பினை அமைத்துள்ளனர். தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன, தய்ய என அடிப்படைச் சந்தம் எட்டு. சிலம்பின் வரிப்பாட்டுகளுக்குச் சந்தக் குழிப்பு இட இயலுகிறது. திருப்புகழில் சந்தக் குழிப்பு அசைகளைப் பாடியுள்ளமை போற்றத்தக்கது.

அடிப்படைச் சந்த வாய்பாடு எட்டின் பெயர்களுக்கும் அடிப்படையாக, அளிவழக்கம் என்று அளிகள் (தேனீ, தும்பி, வண்டு, மதுகரம், …) முரலும் இசையின் அசைகள் அடிப்படையாக அமைந்துள்ளன. இசைத்தமிழுக்கு எழுத்தில் சந்தக் குழிப்பு அமைத்துத்தந்த இலக்கணிகளின் மேதமை வியக்கத்தக்கது. வேறெந்த மொழியிலும் இந்தத் தாள உறழ்வு (தாளப் பிரஸ்தாரம், Rhythmic pattern) விளக்கம் பெறவில்லை. ‘ஷ்வா’ (ə, Schwa) எனப்படும் எழுத்தாக, பல பழைய சொற்களில் தமிழ் மொழியில் இயங்கியிருக்கிறது. ரங்கநாதன் ரெங்கநாதன் ஆகிவிடுவது இந்த  ə (Schwa) ஒலிப்பால் தான். சயசய/செயசெய, ஜயந்தி/ஜெயந்தி, தைவம்/தெய்வம், கல்லு/கெல்லு, கங்கை/கெங்கை இவை போல ‘ஷ்வா’ மாற்றம் எனக் கொள்வர். அளிவழக்கம் என்னும் இயற்கை இசை தென்னா, தெனா, தெத்தா, …  என்பதை மாற்றி, தன, தான, தன்ன, தத்த, தந்த எனக் கொண்டு, சந்த வாய்பாடுகள் அமைத்தனர். சந்தப் பாவலர் பெருமான் அருணகிரிநாதர் இச்சொற்களைப் பாடியுள்ளார். ராக மாலிகை பாடுவது ராகப் பிரஸ்தாரம். சரிகமபதநி எனும் ஏழிசைத் தான உறழ்வு (தானப் பிரத்தாரம்) மட்டுமல்லாது திருப்புகழ்  எட்டுச் சந்த அசைகொண்டு தாள உறழ்வுக்கு இலக்கியமாக, தாளமாலிகையாய் வண்ணப்பாடல்களைத் தருகிறது.

3.        சந்தக் கோலாகலம் திருப்புகழ்

தெய்வத் தமிழ் இலக்கிய வரலாற்றில் “சந்தம்’ என்னும் பேராறு பாய்ந்து ஓசையும் இசையும் இணைந்து வளப்படுத்திய பெருமை அருணகிரிநாத சுவாமிகளுக்கு உரியது. பட்டினத்தார் கோயில் நான்மணி மாலையில் பாடிய வண்ண விருத்தங்களுக்குத் தொங்கல் என்னும் சொல்லையும் சேர்த்துத் திருப்புகழின் புதுவடிவம் தருகிறார். பேரா. இ, அங்கயற்கண்ணி “திருப்புகழ்ப் பாடல்களைத் தாள இலக்கணத்தோடு தொடர்புபடுத்தி ஆராய்ந்ததன் மூலம், மொத்தமாக 857 சந்தங்களும், அவற்றிலிருந்து 178 தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன” என்று திருப்புகழிசை ஆய்வுநூலில் முடிபு தந்துள்ளார். ஒட்டக் கூத்தரின் தக்கயாகப் பரணியின் சந்தங்களை ஆழக் கற்றவர் அருணகிரி.

   “தமது இசைப்பாடலுக்கு அருணகிரிநாதர் ஒட்டக்கூத்தரால் பெரும் பயனடைந்தார் என்று உறுதியாய்ச் சொல்லலாம். ஒன்று, மேலே காட்டியவாறமைந்த விஸ்தாரமான சந்த அமைப்பு. இந்த அமைப்பை இவர் அவரிடமிருந்து பெற்றார் என்று கருதுவதற்கு மற்றொரு சிறந்த சான்று சம்பந்தர் வரலாறு. ஒட்டக்கூத்தர் தான் சம்பந்தரை முருகன் அவதாரம் என்று வைத்து அவருடைய மதுரை வாதத்தைப் பரணியுள் ஒரு சிறப்புக் கிளைக்கதையாக, வலிந்து, ஆனால் மிகவும் சுவையும் நயமும் பொருந்த அமைத்திருக்கிறார். இதனால் அருணகிரிநாதர் தமது நூல்கள் அனைத்திலும் சம்பந்தரை முருகன் அவதாரம் என்று பாடுவது ஒட்டக்கூத்தரைப் பின்பற்றியது என்று தெளிவாக நாம் காண இயலுகிறது.” (மு. அருணாசலம், தமிழ் இசை இலக்கிய வரலாறு).

   சந்தப் பாடல்களுக்கு ஆதியான சமணர் செய்த சிலப்பதிகாரம், இலக்கண நூல் யாப்பருங்கலம், வடமொழியில் இலக்கணமாக உள்ள பார்சுவதேவர் செய்த சங்கீத ரத்னாகரம் போன்றவை, சைவர்களான சம்பந்தர்,  பட்டினத்தார், ஒட்டக்கூத்தர், அருணகிரிநாதர் பாடல்களுக்கு அடிப்படையாய் இருந்துள்ளன. திருப்புகழ்ப் பாடல்களுக்கு இலக்கணத்தை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் “வண்ணத்தியல்பு” என்ற நூல்செய்து தமிழன்பருக்கு உதவியுள்ளார். வண்ணச்சரபம் செய்த அறுவகை இலக்கணம், வண்ணத்தியல்பு நூல்கள் அச்சானபின், வண்ணப் பாக்களுக்குச் சந்தக் குழிப்புடன் பதித்து வெளியிடுவது வழக்கமாயிற்று.  சந்தக் குழிப்பு என்ற பெயரை வண்ண விருத்தங்களுக்கு ஏற்படுத்தியவர் வண்ணச்சரபம் ஆவர்.

1898-ம் ஆண்டில், மாயூரம் வித்வான் கிருஷ்ணய்யர் இயற்றிய தில்லை ஸ்ரீ நடராஜர் திருப்புகழ்ச் சந்தவிருத்தமும், அழகுமுத்துப் புலவரின் ஸ்ரீ மெய்கண்ட வேலாயுத சதகம் திறப்புகழ் 1900-ம் ஆண்டிலும்  சந்தக் குழிப்புடன் அச்சாகியுள்ளது. இதன் பின்னர் பல நூல்கள்: மதுரை மீனாட்சியம்மை மீது சந்தத் திருவடி மாலையும் திருவடிப்பத்தும்,  சோழவந்தான் சிதம்பரவிநாயகர் மாலையும் (அரசஞ் சண்முகனார், மதுரை : விவேகபாநு அச்சியந்திரசாலை , 1914). இதன் பதிப்பாசிரியர் மு. ரா. கந்தசாமிக் கவிராயர். அவரே திருப்புகழ்ப் பாடல்களைச் சந்தக் குழிப்புடன் வெளியிட்டார். எல்லாத் திருப்புகழ்ப் பாக்களுக்கும் சந்தக்குழிப்புடன் பதிப்பித்தவர் தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை ஆவர்.  தாள இலக்கியமாக, இந்தியாவின் எந்த மொழிகளிலும் இல்லாத அளவு இலக்கியங்கள் உருவாக இளங்கோ அடிகள் மூலவர். சம்பந்தர் விரித்தார். தமிழ்க் கடவுள் முருகனின் அடியார்களில் அருணகிரிநாதர் ராஜபாட்டை போட்டு நடந்தார். தண்டபாணி சுவாமிகளும், பாம்பன் சுவாமிகளும் தொடர்ந்துள்ளனர்.

4.        ஆய்வுத்துணை

(1)   இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு

https://karanthaijayakumar.blogspot.com/2017/10/blog-post_18.html

(2)  V.N. Muthukumar, Beyond Tālaprastāra in Indian Music: Prosody as a Generating Function of Rhythmic Complexity in Aruṇakirinātar’s Tiruppukaḻ. Asian Music, 41, 1, 2010, pp. 60-88.

About editor 3244 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply