தமிழ் புத்தாண்டு எனக்கூறும் நம்மவர்களின் விளக்கமும் என்ன?
ஆண்டு என்ற சொல் #யாண்டு என்ற சொல்லின் மருவிய வடிவமாகும். யாண்டு என்பது பொழுது, நிலம் இரண்டையும் குறிக்கும் (தொல்காப்பிய முதற்பொருள்= காலம்,நிலம்). `யாண்டு` என்ற சொல் இடம்பெற்ற சில குறள்களைப் பார்ப்போம்.
`வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.` (குறள் 4)
`நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்` (குறள் :1104)
இப்போது காலத்தைத் தெளிவாகக் குறிக்கும் யாண்டு என்ற சொல் இடம்பெற்ற சங்ககாலப் பாடலைப் பார்ப்போம்.
`பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்` (குறு:57:1). 2.
இப் பாடலில் `யாண்டு கழிந்தன்ன` என்பது `அக்காலம் பல யாண்டுகள் கடந்தாற் போன்ற` என்ற பொருளில் இடம்பெறுகின்றது.
இந்த ஆண்டு தற்போதைய நாட்காட்டி ஆண்டு போன்றது (365.2425 days) என நான் கூறவரவில்லை, ஏனெனில் தற்போதைய நாட்காட்டி ஆண்டு (Gregorian calendar) நடைமுறைக்கு வந்தது 18 ம் நூற்றாண்டிலேயே ஆகும். எனவே ஏதோ ஒரு வகையான காலப்பகுதியினை யாண்டு எனச் சங்கத் தமிழர்கள் அழைத்துள்ளனர். அந்த யாண்டின் தொடக்கமாக தை மாதமே இருந்துள்ளது என்பதற்கு நேரடித் தரவுகள் சங்ககாலப் பாடல்களில் காணமுடியவில்லை என்றபோதும், அதற்கான இரு சான்றுகளை உய்த்துணரலாம்.
1. தை மாதமளவிற்கு வேறு எந்தவொரு மாதமும் சங்ககாலப் பாடல்களில் சிறப்புப்படுத்தப்படவில்லை. (தை மாதச் சிறப்பின் 10% அளவிற்கு கூட வேறு எந்த மாதமும் சிறப்புப் பெறவில்லை).
2. தை என்ற சொல்லிற்கு சேர்த்தல் என்ற பொருளும் உண்டு (இரண்டு துணிகளை இணைத்து தைத்தல்). இங்கு இரண்டு யாண்டுகளை (காலப்பகுதிகளை) இணைத்தல்.
இதனைவிட இயற்கைசார்ந்த 2 காரணங்களும் உண்டு.
1. அறுவடைக்காலம் : செல்வவளம்பொருந்திய காலத்தினையே புத்தாண்டாகக் கொண்டாடப் பொருத்தமாகவிருக்கமுடியும்.
{ இன்று பலர் உழவுத்தொழிலில் தங்கியிராத நிலையில், இதன் எச்சமாகவே பொங்கல் மிகைப்பணம் {Bonus } அரசால் வழங்கப்படுகின்றது. அன்று அந்த வாய்ப்பு இல்லாமையால், அறுவடைக்காலமே பொருத்தமானதாகும்}.
2. காலநிலை:- தை மாதத்தின் தண்மை (குளிர்மை) பல பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது (படம் 1). இவ்வாறான ஒரு மகிழ்ச்சியான காலப்பகுதியே யாண்டின் தொடக்கமாகக் கொள்ளப் பொருத்தமானதாகும். (மாறாக தாயகத்தில் சித்திரையில் கொளுத்தும் வெயிலே சுட்டெரிக்கும்).
இப்போது எமக்கு ஏறத்தாழ 300 ஆண்டுகளிற்கு முன்னர்வரை, தை மாதமே ஆண்டின் தொடக்கமாகவிருந்தமைக்கான கல்வெட்டுச் சான்றும் (படம் 1)உள்ளது.
குறிப்பு- படத்திலுள்ள கல்வெட்டு இராமநாதபுரம் கீழக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு= `தை முதலே தமிழ்த் திங்கள்`
இதனாலேயே, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் `பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழரிற்கு புத்தாண்டு தையே` எனப் பின்வருமாறு பாடுகின்றார்.
தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம்முதல்நாள், பொங்கள் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா !
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு
மேற்கூறிய காரணங்களில் சிலவற்றை அடிப்படையாகக்கொண்டு, 1921இல் மறைமலை அடிகளார் தலமையில் 500க்கு மேற்பட்ட அறிஞர்கள் ஒன்றுகூடி தை முதலே தமிழ்புத்தாண்டு என முடிவு செய்திருந்தனர். இவ்வாறு முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் வருமாறு.
மேற்கூறிய காரணங்களில் சிலவற்றை அடிப்படையாகக்கொண்டு, 1921இல் மறைமலை அடிகளார் தலமையில் 500க்கு மேற்பட்ட அறிஞர்கள் ஒன்றுகூடி தை முதலே தமிழ்புத்தாண்டு என முடிவு செய்திருந்தனர். இவ்வாறு முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் வருமாறு.
• தமிழ்க்கடல் மறைமலை அடிகள்,
• தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார்,
• தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை,
• சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை,
• நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார்,
• நாவலர் சோமசுந்தர பாரதியார்,
• முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்,
• பேராசிரியர் சா. நமச்சிவாயனார்.
இலக்கியச்சான்றுகள், கல்வெட்டுச்சான்று, அறிஞர்கள் முடிவு என்பனவற்றுக்கு மேலாக எளிய மக்களின் நாட்டார் வழக்கியல் மொழி, பழமொழி என்பனவும் எமது கருத்திற்கு வலுச்சேர்க்கின்றது. அந்த வகையில்
`தை பிறந்தால் வழி பிறக்கும்`
என்ற பழமொழி தமிழர்களின் புதிய காலம் (யாண்டு) தையிலேயே பிறக்கின்றது என்பதற்கு சான்றாகவுள்ளது.
அதே போன்று தமிழர்களின் தலையான விழாவாக தையே இருந்துள்ளது என்பதற்குச் சான்றாக பின்வரும் நாட்டுப்புற நடைமுறை மொழி வழக்கு சான்றாகவுள்ளது.
`தீய்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகா ராசன் பொங்கல் வரவேண்டும்`
சித்திரைப்புத்தாண்டு பற்றிய புராணக்கதை:
அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. ஒருமுறை நாரதமுனிவர், ‘கடவுள்’ கிருஷ்ணனை “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், “நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்” என்றார். கிருஷ்ணன் நாரதரை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்” எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் ‘கடவுள்’ கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இப்படித்தான் சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.
முடிவாக. நித்திரையில் இருந்து விழித்தெழுவோம், தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என்போம்.
Leave a Reply
You must be logged in to post a comment.