நாடாளுமன்றத் தேர்தல் 2024: சில அவதானிப்புகள்
Dr Ramesh Ramasamy and S. Vithurshan
November 18, 2024
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியினை தேசிய மக்கள் சக்திப் பெற்றுள்ளது. 225 ஆசனங்களில் 159 ஆசனங்களைக் கைப்பற்றி தெளிவான 2/3 பெரும்பான்மையினைப் பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் 42.31 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றத் தேர்தலில் 61.56 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 6 வாரங்களில் ஏற்பட்ட 12 சதவீத அதிகரிப்பாகும். இவ்வெற்றிக்கு ‘அரகலய’ எனும் மக்கள் போராட்டத்தின் பங்களிப்பு காத்திரமானதாகும். காரணம் போராட்டக் காரர்கள் முன்வைத்த பிரதான கோரிக்கையாக அமைந்தது முறைமை மாற்றம் (System Change) ஆகும். அதில் மரபு ரீதியான அரசியல் கலாசாரத்தை மாற்றுவது, ஊழலற்ற மற்றும் பொறுப்புக் கூறும் அரசாங்கத்தினை உருவாக்குவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது, சட்டத்தின் ஆட்சியினை உறுதி செய்வது மற்றும் ஆட்சி முறையில் மக்கள் நேரடியாக பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்குதல் என்பன பிரதான கோரிக்கைகளாகக் காணப்பட்டன.
அக்கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய இயலுமையுள்ள அரசியல் இயக்கமாக தேசிய மக்கள் சக்தியை இலங்கை மக்கள் நம்பியுள்ளனர் என்பதனை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. அத்துடன், ஏனைய மரபு ரீதியான அரசியல் கட்சிகள் தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுகளை தேசிய மக்கள் சக்தியின் மீது முன்வைப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இருக்கவில்லை. மேலும், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் தொடர்ந்தும் ஊழலுக்கு எதிராக, முறைமை மாற்றத்திற்காக, மேட்டுக்குடி ஆட்சிக்கு எதிராக, நல்லாட்சிக்காக குரல்கொடுத்து வந்துள்ளது. இவை அனைத்தும் தேசிய மக்கள் சக்தியின் வரலாறு காணாத வெற்றியில் பங்களிப்பு செய்துள்ளது. அத்துடன், கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டினை வங்குரோத்து நிலைக்கு இட்டுச்சென்றமை, தீய ஆளுகை மற்றும் ஊழல் மோசடி என்பவற்றுடன், நாட்டில் 2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அதனுடன் இணைந்த வாழ்வாதாரப் பிரச்சினைகள், வாழக்கைச் செலவு அதிகரிப்பு, தொழிலின்மை, வருமான இழப்பு, விலையேற்றம் என்பன மாற்று அரசியலை நோக்கி மக்களை தள்ளியுள்ளது எனக் குறிப்பிடுவது பொருத்தமாகும். இன்று ஏழு மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்றார்கள். இதன் தாக்கம் கிராமிய, பெருந்தோட்டப்புற மற்றும் நகர வறிய மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகின்றது. இவையனைத்தும் மரபு ரீதியான அரசியல் கட்சிகளின் மீது பெரியளவிலான விரக்தியினை ஏற்படுத்தியுள்ளது. இவ் எதிர்ப்பின் அல்லது விரக்தியின் வெளிப்பாடாக இவ்வெற்றியினை நோக்க முடியும்.
இவ்வெற்றியில் சிங்கள இளைஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். சமூக ஊடகங்களின் மூலம் ஜனாதிபதித் தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டனர். அதன் மூலம் தமது அரசியல் எதிர்பார்புகளையும் அரசியல் மாற்றத்தின் தேவையினையும் எடுத்துக்காட்டினர். இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விழிப்புணர்வினை ஊட்டி அவர்களின் அரசியல் ஈடுபாட்டினைத் தூண்டினார்கள். இதன் விளைவு என்னவெனில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பங்குப்பற்றியமையாகும். இத்தகையதொரு ஆர்வத்தினை முஸ்லிம் இளைஞர்கள் மத்தியிலும் காண முடிந்தது. அவர்கள் தேசிய மக்கள் சக்திக்காக சமூக ஊடகங்களில் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டதுடன், முஸ்லிம் மற்றும் தமிழ் இளைஞர்களுக்கு மரபு ரீதியான அரசியலிள் மாற்றத்தின் தேவையினை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள். இப்போக்கு மலையக மற்றும் வட – கிழக்கு தமிழ் இளைஞர்களிடம் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டது.
இலங்கையின் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் ஒரு தனிக் கட்சிப் பெற்ற மாபெரும் வெற்றியாக இதனை கருத முடியும். அந்த வகையில், ஜனாதிபதித் தேர்தலோடு ஒப்பிடுகின்றபோது நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு நடத்தையில் சில அடிப்படை வேறுபாடுகளை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அத்தகைய வேறுபாடுகளையும் இத்தேர்லில் முடிவுகளில் அவதானிக்கக் கூடிய சில முக்கிய மாற்றங்களையும் இக்கட்டுரை சுருக்கமாக ஆராய முற்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி 6 வாரங்களுக்கு முன்பு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 5,634, 915 வாக்குகளைப் பெற்றிருத்துடன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6,863,186 வாக்குகளைப் பெற்று தனது வாக்கு வங்கியினை 12 இலட்சம் வாக்குகளால் அதிகரித்துள்ளது. இது இலங்கையில் தேர்தல் அரசியலில் 6 வாரங்களில் இடம்பெற்ற மிகப்பெரிய மாற்றமாகும். இவ்வெற்றியினை சில அரசியல் அவதானிகள் ஜனாதிபதி தேர்தலில் புவிநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாகவும், அது நாடாளுமன்றத் தேர்தலில் சுனாமியாக மாறியுள்ளது என வர்ணிக்கின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் 2024
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோட்டபாய தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன பல கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டணியாகப் போட்டியிட்டு 6,853,690 வாக்குகளைப் பெற்று 145 ஆசனங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், இந்த வெற்றியானது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினையும், முஸ்லிம் எதிர்ப்புவாதத்தையும் தூண்டிவிட்டு பெற்றுக்கொண்ட வெற்றியாகும். ஆயினும், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியில் இன, மத, சாதி, மொழி மற்றும் பிரதேச காரணிகள் பெரியளவில் செல்வாக்கு செலுத்தவில்லை. மொட்டு கட்சியை மக்கள் முற்றாக புறக்கணித்தமை, திலித் ஜெயவீர போன்றவர்களுடைய இனவாத கட்சிகளையும், வேட்பாளர்களையும் மக்கள் முற்றாக நிராகரித்தமையானது இதனை மேலும் உறுதி செய்துள்ளது.
அந்தவகையில், தெற்கின் சிங்கள மக்கள் இத்தேர்தல் மூலம் ஒரு செய்தியினை வெளிப்படுத்தியுள்ளார்கள். அது என்னவெனில், தீவிர மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட சிங்கள – பௌத்த தேசியவாதத்தினால் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவின் தாக்கத்தினை உணர்ந்திருப்பதாகும். இத்தேர்தலிள் நாம் அவதானிக்க வேண்டிய முக்கிய விடயமாக இது காணப்படுகின்றது. உதாரணமாக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சரோஜா போல்ராஜுக்கு சிங்கள மக்கள் அமோக ஆதரவினை வழங்கியுள்ளனர் (148,379 வாக்குகள்). மாத்தறை என்பது சிங்களத் தேசியவாதம் மிகத் தீவிரமாக காணப்படும் மாவட்டம் என்ற பொதுவான கருத்துநிலையே எம்மிடம் இதுவரைக்காலமும் காணப்பட்டது. இங்கு வாழும் மலையகத் தமிழர்கள் தொடர்ச்சியாக யுத்தக்காலத்திலும் அதற்குப் பின்னரும் இன வன்முறைகளுக்கு ஆழாகியுள்ளனர். சிங்கள மக்களின் ஆதிக்கத்தினால் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை இழந்து சிங்களமயமாகியுள்ளனர். இது 95 விகிதம் சிங்கள மக்கள் வாழும் மாவட்டமாகும். இங்கு தமிழர்கள் 20,000 பேரும் முஸ்லிம்கள் 25,000 பேரும் வாழ்கின்றார்கள். இப்படியான ஒரு பிரதேசத்தில் இருந்து தமிழ்ப் பெண் ஒருவர் அதிகப்படியான விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருப்பது நாம் எண்ணிப்பார்க்க முடியாத விடயமாகும். அதுமட்டுமல்ல, இங்கிருந்து அக்ரம் இலியாஸ் (53,835 வாக்குகள்) எனும் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரும் தேசிய மக்கள் சக்தி சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மிகத் தீவிரமாக இடம்பெற்ற மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
மேலும், இரத்தினப்புரி மாவட்டத்தில் இருந்து சுந்தரலிங்கம் பிரதீப் 112,711 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றமை அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. இவருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் 80 விகிதத்திற்கு மேட்பட்டவை சிங்கள மக்களின் வாக்குகளாகும். காரணம் இரத்தினப்புரியில் 80 ஆயிரம் தமிழ் வாக்காளர்களே காணப்படுகின்றனர். அதில் இம்முறை 55,000 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளார்கள். அதில் 10,000 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. எஞ்சிய 45,000 வாக்குகளில் சுமார் 25,000 வாக்குகள் மாத்திரமே பிரதீப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட சந்திரகுமார் 16,126 வாக்குகளைப் பெற்றுள்ளார். தனிச் சிங்கள தேர்தல் தொகுதிகளில் கூட பிரதீபுக்கு அதிகமான விருப்பு வாக்குகள் வழங்கப்பட்டிருந்தமை பிறிதொரு முக்கிய விடயமாகும். முப்பது ஆண்டுகள் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாதிருந்த இரத்தினபுரி மக்களுக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் இம்முறை பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வெற்றிக்கு தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார உத்திகளும் பங்களிப்புச் செய்தன என்பதனை புரிந்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம் மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதிருந்த குருணாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இம்முறை பிரதிநிதித்துவம் கிடைத்தமைக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவும் முக்கியக் காரணமாகும். இவையெல்லாம் மாற்றத்திற்கான அறிகுறிகலாகும். இதனை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியாக கையாள்வதிலேயே எதிர்கால இன உறவின் செல்வழி தீர்மானிக்கப்படும். ஜனாதிபதியின் உரைகளில் இன ஐக்கியம், பன்மைத்துவம், சமத்துவம், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் போன்ற விடயங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தப்படுகின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும். கடந்தகால ஜனாதிபதிகள் இப்படியான விடயங்களை வெளிப்படையாக குறிப்பிட்டதில்லை. ஆகவே, இவை செயல் வடிவம் பெறும் போது இவ்விலக்கினை அடைய முடியும்.
எவ்வாறாயினும், இத்தேர்தலின் முடிவுகளை மாத்திரம் வைத்துக் கொண்டு இலங்கையில் சிங்கள – பௌத்த பெரும்பான்மைவாதம் முடிவிற்கு வந்துவிட்டதாக அனுமானிப்பது கடினமாகும். அத்தகையதொரு நிலைமை இலங்கையில் உடனடியாகவே ஏற்பட்டு விடும் என எதிர்பார்த்துவிட முடியாது. அதற்கு வரலாற்று படிப்பினைகள் பல உண்டு (உதாரணமாக 2015இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினை குறிப்பிடலாம்). அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால செயற்பாடுகள், இனம் மற்றும் மதம் தொடர்பான விடயங்களில் அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு வரலாற்று ரீதியாக இடம்பெற்ற பாகுபாடுகள் குறித்த புரிதல் என்பன இலங்கையில் சிங்கள – பௌத்தத்தின் மேலாதிக்கத்தின் செல்நெறியை தீர்மானிக்கும். அதேபோல் இத்தேர்தல் முடிவுகளை மாத்திரம் வைத்துக் கொண்டு தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாதம் முடிவிற்கு வந்துவிட்டதாக கருதுவது பொருத்தமற்றதாகும். இவற்றின் இயங்குநிலை தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் கொள்கை தீர்மானங்களிலேயே தங்கியுள்ளது.
மிக முக்கியமாக, சிறுபான்மை மக்கள் (வட-கிழக்கு, மலையகம்) முதல் தடவையாக மரபு ரீதியான அரசியலிருந்து விடுபட்டு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவினை வழங்கியுள்ளனர். இது சிறுபான்மை தேர்தல் அரசியலின் ஒரு புதிய அத்தியாயம் எனலாம். வட கிழக்கு தமிழ் மக்களுக்கு தெற்கில் உள்ள மரபு ரிதீயான அரசியல் கட்சிகள் மீது நீண்டகாலமாகவே விரக்தி நிலையொன்று காணப்பட்டது. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தெற்கில் உள்ள பிரதானக் கட்சிகளால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டமை இதற்கு முக்கிய காரணமாகும். அத்துடன், தமிழ்த் தேசிய அரசியலின் மீதும் நம்பிக்கை இழந்துள்ளார்கள். அதற்கு தமிழ்த் தேசியத்தினை முன்னிறுத்தி தமிழ் அரசியல் கட்சிகள் செயற்பட்ட விதம், ஒற்றுமையின்மை, தன்னல அரசியலை முன்னெடுத்தமை போன்ற பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற அங்கஜன் இராமநாதனை இம்முறை தோல்வியடைய செய்து சலுகை அரசியலையும் புறக்கனித்துள்ளார்கள். ஆகவே, தேசிய மக்கள் சக்தி சிறுபான்மை மக்கள் வழங்கிய ஆதரவினை எவ்வாறு கையாளப் போகிறது, எதிர்பார்ப்புகளை எவ்வாறு நிறைவேற்றப்போகிறது போன்ற விடயங்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாதத்தின் செல்வழியினை தீர்மானிக்கும். முக்கியமாக, இத்தேர்தலின் மூலம் வட கிழக்கு தமிழ் மக்களும் தெற்கிற்கு ஒரு செய்தியினை செல்லியிருக்கின்றார்கள் – அதுவே ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றுபட்டு வாழ்வதற்கான விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளமையாகும். இதுவரைக்காலமும் ஆதிக்கம் செழுத்தி வந்த தமிழ்த் தேசியக் கட்சிகளை புறக்கணித்துள்ளார்கள் – இது ஓர் ஆரம்பம் மாத்திரமே ஆகும். இதன் பிரதிபலிப்புகள் எதிர்காலத்தில் பல்வேறு மட்டங்களில் வெளிப்படும். அதன் மூலம் தேசிய அரசியலுடன் நேரடியாக இணைந்து செயற்படுதற்கான விருப்பத்தினைக் காட்டியுள்ளனர். இம்மாற்றத்தினை சரியாகப் பயன்படுத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை புதிய அணுகுமுறையில் கையாள்வதற்கான வாய்ப்பினை வழங்கும்.
சஜித் பிரேமதாச அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் 43 லட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன், நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 19 லட்சத்து 68 ஆயிரம் வாக்குகளையேப் பெற்றுக் கொண்டார். இதன் மூலம் வெளிப்படுவது யாதெனில், சஜித் பிரமதாசவின் கட்சிக்கு சுமார் 23 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இம்முறை வாக்களிக்கவில்லை என்பதாகும்.
அதேபோல், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் 22 லட்சத்து 99 ஆயிரம் (2,299,767) வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். ஆனால், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெறுமனே 500,835 வாக்குகளையே அவரது புதிய ஜனநாயக முன்னணிப் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் அக்கட்சி 17 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை இத்தேர்தலில் இழந்துள்ளது. இவ்விரண்டு தேர்களும் மிகக்குறுகியக் காலத்தில் இடம்பெற்றமையால் இத்தகைய ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது குறுகியக் காலத்தில் இலங்கையின் கட்சி அரசியலிள் ஏற்பட்டுள்ள தீவிர மாற்றத்தினை விளங்கிக்கொள்வதற்கு உதவும்.
இவ்விரு பிரதானக் கட்சிகளுக்கும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களிக்காமைக்கு பின்வரும் காரணங்கள் ஏதுவாக அமைந்திருக்கலாம். அந்தவகையில்,
- ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ஆதரவாளர்கள் அரசியல் ஆர்வத்தை இழந்தமை.
- தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டில் ஏற்பட்ட முற்போக்கான மாற்றங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் இவ்விரு கட்சிகளின் மீதும் ஒருவகையான அதிருப்தியினை ஏற்படுத்தி இருக்கலாம்.
- இவ்விரு கட்சிகளிலும் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் ஊழல் மிகுந்த, மக்கள் நம்பிக்கையினை இழந்த, வர்க்க அரசியலை ஊக்குவிக்கும் மற்றும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மக்கள் ஆணையை தொடர்ச்சியாக மீறியவர்களாகக் காணப்பட்டமை வாக்களிக்கும் ஆர்வத்தினை குறைத்திருக்கலாம்.
- இம்முறை ஜனாதிபதி தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒனறாகக் காணப்பட்டது. தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு மிக அதிகமாகக் காணப்பட்டது. அதில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களுக்கு வேறுப்பட்ட ஆதரவுத்தளம் காணப்பட்டது. ஆகவே, ரணில் மற்றும் சஜித் ஆதரவாளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அது நாடாளுமன்றத் தேர்தலில் குறைவடைந்திருக்கலாம்.
- பொதுவில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் கட்சியே நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவது கடந்த கால அனுபவமாக காணப்படுகிறது. இதனை 2010, 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் அவதானிக்கக்க கூடியதாக இருந்தது. ஆகவே, இக்காரணியும் சஜித் மற்றும் ரணிலிற்கான வாக்கு விகிதத்தினை குறைவடைய செய்திருக்கலாம்.
மேற்கூறிய காரணங்களுக்கு அப்பால், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் வேறுப்பட்ட சூழ்நிலைகளின் கீழ் இடம்பெறுகின்றன. பின்னையதில் கட்சி அரசியல், சாதி, பிரதேசம், சலுகைகள், தனிப்பட்ட வேட்பாளர்களின் ஆதிக்கம், செல்வாக்கு, நடத்தைகள், அபிவிருத்தி அரசியல், தொழில்வாய்ப்புகள், கட்சி -வாக்காளர் உறவு, பண வலிமை போன்ற பல காரணிகள் தவிர்க்க முடியாதவாறு செல்வாக்கு செலுத்துவதனால் வாக்காளர்களின் தெரிவுகள் மற்றும் வாக்களிப்பு நடத்தை பெரிதும் வேறுப்பட்டதாக அமையும். ஆகவே, ஜனாதிபதித் தேர்தல் பெறுபேற்றில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் பெறுபேறுகள் வேறுபடுவது இயல்பாகும். ஆனால், அவை பாரிய மாற்றத்திற்கு உட்படுவது ஒப்பீட்டளவில் குறைவாகும். ஆகவே, மேற்கூறிய காரணிகளும் சஜித் மற்றும் ரணிலின் வாக்கு வீழ்ச்சிக்கு செல்வாக்கு செழுத்தியுள்ளன என்பது மறுப்பதற்கில்லை.
மறுபுறமாக, ஜனாதிபதித் தேர்தலிலே மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகள் ஒரு கோடி 36 லட்சத்துக்கு அதிகமாக (13,619,916) காணப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் அளிக்கப்பட்ட வாக்குகள் 1 கோடி 18 லட்சமாகக் குறைந்துவிட்டது (11,815,246). இதன்படி 18 லட்சத்துக்கு மேற்பட்ட (1,804, 670) வாக்காளர்கள் இம்முறை தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது புலனாகிறது. இது எண்ணிக்கையில் அதிகமானதாகும். ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து சுமார் ஒன்றரை மாத காலத்திற்குள் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 18 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்பது தேர்தல் அரசியல் மீது அவர்களுக்கு இருக்கின்ற பாரிய அதிருப்தியினை காட்டுகின்றது. இவ் அதிருப்தி தாம் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த வேட்பாளர்கள் தோல்வியடைந்த காரணத்தினாலும் ஏற்பட்டிருக்கலாம்.
அதேபோல், மக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ அல்லது சஜித் பிரமதாசவிற்கோ வாக்களிப்பதனால் தேர்தல் பெறுபேற்றில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்ற எண்ணத்தில் கூட வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். மேலும், அடுத்தடுத்து இரண்டு பிரதான தேர்தல்கள் இடம்பெற்றமையினால் வாக்களிப்பு ஆர்வம் குறைந்திருக்கலாம். அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் பற்றி மக்களுக்கு போதிய தெளிவு மற்றும் அறிமுகம் இருக்கவில்லை என்பதுடன், பல மாவட்டங்களில் மக்களின் அவநம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் போட்டியிட்டமையினால் ஒருவகையான விரக்தி ஏற்பட்டு (ஊழல் மோசடி, குடும்ப அரசியல், சலுகை அரசியல், அதிகார துஸ்பிரயோகம், கட்சிகள் மீதான விரக்தி நிலை போன்றவற்றால்) வாக்களிப்பதனைத் தவிர்த்திருக்கலாம்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, சுமார் 41 லட்சத்துக்கு மேற்பட்ட (4,193,251) வாக்காளர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ அல்லது சஜித் பிரேமதாசவிற்கோ வாக்களிக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகளை நோக்கும் போது வெளிப்படுகின்றது. அதில் சுமார் 12 இலட்சம் பேர் தேசிய மக்கள் சக்திக்கு இம்முறை வாக்களித்துள்ளனர். அத்துடன், சுமார் பதின்னொன்றரை இலட்சம் பேர் ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள் (இலங்கை தமிழரசுக்கட்சி, சிறீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன குரல், ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சுயேட்சைக் குழுக்கள்). எஞ்சிய சுமார் 18 இலட்சம் பேர் இம்முறை வாக்களிப்பதனை தவிர்த்துள்ளார்கள் என்ற முடிவுக்கு வர முடியும்.
அதேபோல் ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 300,300 ஆகவும், நாடாளுமன்றத் தேர்தலில், அது 50 சதவீதத்தால் அதிகரித்து 667, 240 ஆக காணப்படுகிறது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 விகிதமாகும்.
பிரதானக் கட்சிகளான மொட்டுக்கட்சி (3.14), ரணிலின் புதிய ஜனநாயக முன்னணி (4.49) மற்றும் இலங்கைத் தமிழரசு கட்சி (2.31) போன்றன பெற்ற மொத்த வாக்குகள் 5 விகிதத்திற்கும் குறைவாகும் என்பதனை இங்கு பதிவு செய்வது பொருத்தமாகும். இதற்கு வாக்குச்சீட்டும் ஒரு காரணமாகும். வாக்குச்சீட்டு நீளமாகக் காணப்பட்டமையாது சாதாரண வாக்காளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எதிர்கால தேர்தல்களில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும். சில மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை சராசரியாக 30,000 தொடக்கம் 40,000 ஆக காணப்பட்டது. ஆகவே, அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்திற்கு அப்பால் சென்று, வாக்காளர்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது என்ற அறிவூட்டலை வழங்க வேண்டும். மொத்தத்தில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் எதிர்பாராத பல மாற்றங்களுக்கு இட்டுச்சென்றுள்ளது. அதில் ஒரு சில விடயங்கள் மாத்திரமே இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக பெண்களின் அதிகரித்த அரசியல் பிரவேசம், எதிர்க்கட்சியின் நிலை மற்றும் வகிபங்கு போன்ற இன்னும் பல விடயங்கள் ஆராயப்படவில்லை.
கலாநிதி. இரா. ரமேஷ்
அரசியல் விஞ்ஞானத்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்.
சி. விதுர்ஷன்
அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைத் துறை
கொழும்புப் பல்கலைக்கழகம்.
Leave a Reply
You must be logged in to post a comment.