ஓட்டல் கறியைக் கேட்டவனே! ஜம்புலிங்கமே ஜடா ஜடா!!
சிவச் செம்மல்களான திருத்தொண்டர்களின் கதையை, பூசிய புனைவுகள் அதிகம் இல்லாமல்…மூலநூலில் இருப்பது போலவே…
இக்கால/எக்கால நிலைக்கும் ஏற்றாற் போல் சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக…..
சிறுத்தொண்ட நாயனார் (எ) பரஞ்சோதி…அவரின் நினைவுநாள்= சித்திரை மாதம் பரணி (May-03,2011)
ஆகா! பிள்ளைக் கறியைக் கேட்கலாமா? அப்படியே கேட்டாலும் கொடுத்து விடுவதா? தப்பில்லையா?
Pedophile, Infanticide-ன்னு எல்லாம் கொதிச்சி எழ மாட்டாங்களா? சல்மான் கான் தின்ற மானே அவரை ஓட ஓட விரட்டும் போது, பிள்ளைக் கறியின் கதி?
* இறைவனே வந்து பாட்டை எழுதினாலும் குற்றம் குற்றமே-ன்னு சொன்ன உறுதி,
* இறைவனே வந்து பிள்ளைக் கறி கேட்டால் குற்றம் குற்றமே-ன்னு சொல்ல முடியாமல் போனது ஏன்??
அவன் பெயர் “வாதாபி கொண்ட” பரஞ்சோதி! அறிவாளி + வீரன்!
கற்ற கல்வியோ = ஆயுர்வேதம்; உற்ற கலையோ = சிற்ப வேலை; செய்த தொழிலோ = போர்! 🙂
இப்படியான கலவையான பரஞ்சோதி, பரணி பிறந்தான் தரணி ஆள்வான்!
சோழ வளநாடான திருச்செங்காட்டங்குடி (கணபதீஸ்வரம்) தான் அவனோட சொந்த ஊர்! திருவாரூர் பக்கம்! சோழத்தில் பிறந்தவன் பல்லவத்துக்கு வருகிறான்….வேலைக்கு!
காஞ்சியில் ஆயனாரின் மகளான சிவகாமியைக் காப்பாற்றி, புலிகேசியிடம் பிடிபட்டு-விடுபட்டு, மகேந்திர வர்ம பல்லவன் மனதிலே இடம் பற்றி, பல தீரச் செயல்களால் பல்லவத் தளபதி ஆகின்றான்!
பின்பு நரசிம்ம வர்ம பல்லவனுடன் சாளுக்கியம் சென்று, வாதாபி நகரத்தையே கொளுத்தி, அங்கிருந்த “வாதாபி கணபதியை” தமிழகம் கொண்டு வருகிறான் இந்த வெற்றி வீரன்! – வாதாபி கணபதிம் பஜேஹம்!
விநாயகரையே அறியாத தமிழகம், இதன் பின்பு தான் விநாயக வழிபாடு கொண்டது என்று சொல்வாரும் சிலர் உண்டு! ஆனால் அதற்குப் போதுமான தரவுகள் இல்லை!
இந்தப் போரின் கொடூர உக்கிரத்தால் மிகவும் மனம் சலித்துப் போனான் பரஞ்சோதி! மன அமைதியை விரும்பிச் சொந்த ஊருக்கே திரும்புகின்றான்! சிவ பக்தியிலே திளைக்கின்றான்!
திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகங்களைக் காஞ்சியில் கேட்டுக் கேட்டு…
தெய்வத் தமிழ் ஓதுவாரான அப்பரின் பதிகச் சக்தி, அவன் மனசிலே பதிவுச் சக்தியாகி விட்டது!
தன் தந்தையின் அருமைத் தளபதியான பரஞ்சோதிக்கு நரசிம்ம வர்ம பல்லவனும் விடை கொடுத்து அனுப்புகின்றான்!
ஆனால் பெரிய புராணம் பாட வந்த சேக்கிழார் சுவாமிகள், என்ன காரணமோ தெரியலை…சில பல புனைவுகள்….
வாதாபியை வென்றதற்கு பரஞ்சோதியின் சைவப்பிடிப்பு தான் காரணமாம்! அதை லேட்டாக உணர்ந்து கொண்ட மன்னன்………..
“அச்சோ, ஒரு நல்ல சிவபக்தரை அரசியலிலும் போரிலும் நாம் ஈடுபடுத்தி விட்டோமே” என்று பயந்து போய், அவருக்கு விடை கொடுத்து விடுகிறானாம்!
வாதாபியை எரித்த “கருணையே உருவான” பரஞ்சோதியும் சொந்த ஊருக்குத் திரும்பி, வழக்கம் போல் சைவத்தில் திளைக்கிறார் என்று மாற்றி எழுதுகிறார் 🙂
இதனால் சாதித்தது என்ன?
* ஒரு ஊரையே கொளுத்தவல்ல தளபதியின் மன மாற்றம்-அகவியல் மறைந்து விடுகிறது!
* அப்பரின் தேவாரத் தமிழ்ப் பதிகம் மனத்திலே தோற்றுவிக்கும் மாற்றம் மறைந்து விடுகிறது!
* ஒரு போர் வெறியனைக் கூட ஈசனின் அன்பனாக மாற்ற வல்ல அகவியல் மாற்றம் பின்னுக்குப் போக…
* சிவபக்தர் தாமாக எதுவும் எரிக்கலை! மன்னன் தான், சிவபக்தர் என்று தெரியாமல் அவரைத் தளபதியாக வைத்திருந்தான் என்ற புனைவு முன்னுக்கு வந்து விடுகிறது!
ஏன் இப்படி?
சைவ வேளாளப் பெருந்தகையான “தெய்வச்” சேக்கிழார் இப்படிச் செய்ய மாட்டாரே?
சேக்கிழார் சுவாமிகளின் கால கட்டம், குலோத்துங்க சோழனின் கால கட்டம்!
அதற்குச் சில நூற்றாண்டு முன்பு தான், சைவ சமயத்தை, சமண-பெளத்த சமயங்களிடம் இருந்து மீட்டு வென்று இருந்தன பக்தி இயக்கங்கள்!
சிறப்பான சமண-பெளத்த சமயங்கள்…ஒரு கட்டத்தில் அரசாங்கத்தை மட்டுமே சார்ந்து போய், சோர்ந்து போய் விட, பொதுமக்கள் இயக்கமாக பக்தி இயக்கம் வென்று காட்டியது!
ஆனால் விடுதலை பெற்ற பின் காங்கிரசைக் கலை என்று காந்தியடிகள் சொன்னது போல் செய்யாமல்…வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள…..
கிடைத்த “வெற்றி”யை “வெறி”யாக்கிக் கொள்ளச் சிலர் முனைந்து விட்டனர்! அரச-அந்தண-வேளாள மேட்டுக்குடிகள்!
(“வேளாள”-ன்னு எழுதியமைக்கு வீட்டில் இன்னிக்கி திட்டு நிச்சயம் 🙂
“ஈசனுக்காக” என்பது போய்…
“சைவத்துக்காக” எந்தத் தியாகமும் செய்யத் தயாராய் இருக்கணும் என்று பல புனைவுகள் உருவாக்கப்பட்டு விட்டன!
* சமயத்தின் பேரால் மனைவியைக் கேட்டாலும் கொடுக்கும் மனசு
* பிள்ளையைக் கேட்டாலும் கொடுக்கும் மனசு
* சிவன் சொத்து குல நாசம் என்ற பயமுறுத்தல்…போன்ற பின்னல்கள் எல்லாம் பின்னப்பட,
ஏற்கனவே இருந்த திருத்தொண்டர்களின் உண்மையான கதையும் திரிந்து போய் ஆங்காங்கே மாற்றம் கண்டுவிட்டன!
புனிதா (காரைக்கால் அம்மை), கண்ணப்பன், நந்தனார், நீலகண்டக் குயவனாருக்கு ஈடாக…
* சுற்றம் கொன்ற கோட்புலியார்,
* தன் மனைவியையே ஈந்த இயற்பகை,
* பிள்ளையை வெட்டித் தரத் துணிந்த பரஞ்சோதி,
* தந்தையின் காலை வெட்டிய சண்டேசர்…
தொண்டர்களின் இயற்கையான வாழ்க்கை நிகழ்ச்சிகளின் மேல் புனைவுகள் ஏற்றப் பட்டு, ஏற்றம் பட்டன!
நந்தனாரைத் தில்லைத் தீட்சிதர்கள் “வாங்கோ வாங்கோ” என முகமும் அகமும் மலர வரவேற்றனர் என்றும் எழுதப்பட்டது!
“இது உங்க சிதம்பரம், மிஸ்டர் நந்தன்; நீங்க தாராளமா உள்ளே வரலாம்; எங்களுக்கு அப்ஜெக்ஷனே இல்லை! பொன்னம்பலம் Always Free For All;
ஆனா நெருப்பில் இறங்கிப் “புனிதப்”படுத்திக்கிட்டு தரிசனம் பண்ணணும்-ங்கிறது பகவத் சித்தமாப் போயிட்டதே” – இப்படிப் புனைந்து நலம் உரைக்கப்படுகிறது சேக்கிழாரின் பெரிய புராணத்தில்! அட முருகா! 🙁
புனிதா, கண்ணப்பன், நந்தனார், நீலகண்டக் குயவனார் போன்றோரின் மாசில்லாத “சிவ-அன்பு” ஒரு புறம் இருந்தாலும்……
சமயத்தை நிலை+நாட்டணும்-ன்னா, வெறுமனே கருணை போதுமா? சிவ-“அன்பு” மட்டும் போதுமா? அதான் இப்படியான “மதப் பிடிப்பு“!
ஏனோ தெரியலை…ஆழ்வார்களின் கதைகளில் இப்படியான அதீதப் புனைவுகள் “அதிகம்” இருப்பதில்லை, அந்தச் சமயத்திலே பல அபத்தங்கள் இருப்பினும்!
So Called தாழ்ந்த குலத்து ஆழ்வாரை அடித்து ரத்தம் வரச் செய்த அர்ச்சகர்ன்னு ஒளிக்காமல் மறைக்காமல் வருகிறது!
இறந்தவரை உயிர்ப்பித்தல், மண்ணைப் பொன்னாக்குதல், “மேஜிக்”/பரிகார விஷயங்கள் அதிகம் இருப்பதில்லை! ஒழுங்கா கதை எழுதலை போல! அப்படி எழுதி இருந்தால், இன்னும் ஜோராப் பரவி இருக்குமோ என்னவோ!
அதனால் தானோ என்னவோ…சைவக் குடும்பத்தில் பிறந்தூறிய என்னிடம்…நாலாயிர ஈர்ப்பு…வேணாம்…தமிழ்மண விருதுப் பதிவிலேயே பார்த்தோமே…சொன்னால் விரோதமிது…அவரவர்களே உய்த்து உணரட்டும்!
எனக்கு இருக்கவே இருக்கு புனிதாவின் வாழ்க்கை! கிட்டத்தட்ட அவளும் நானும் ஒன்னே!
அது, ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, சமண-பெளத்த சாரணர்களோ…எவராயினும், அடியவர்கள் அடியவர்களே!
புனைவைச் செய்தவர்கள் இவர்கள் அல்லர்! இதைப் புரிந்து கொண்டாலே போதும்!
புனைவை மட்டுமே படித்துவிட்டு, “சீ இவனெல்லாம் நாயன்மாரா?” என்று கோட்புலி நாயானார் பதிவில் வீசியது போல், அவசரப்பட்டு ஏசி விடாதீர்கள்!
புனைவுகளால் அடியார்களின் உண்மையான பெருமைக்கு மாசு வந்து விடாது! அவர்களின் ஞான-பக்தி வைராக்கியம் அப்படி! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!
நாம் கதைக்கு வருவோம்…பரஞ்சோதி எப்படிச் “சிறுத் தொண்டன்” ஆனான்?
போரின் குற்ற உணர்வால் மனம் வெதும்பிய பரஞ்சோதி, கிராமத்தில் மீதி வாழ்நாளைக் கழித்தான்…
பல சிவனடியார்களிடம் பணிந்து நடக்கத் தொடங்கினான்! நாவுக்கு-அரசான அப்பர் பெருமானின் பணிவைக் கண்டவன் ஆயிற்றே!
ஆனாலும் முன்னாள் தளபதி என்கிற பயங் கலந்த மரியாதை மற்றவர்களுக்கு இருக்கத் தான் செய்தது!
இதனால் அடியார்கள் உடனான நெருக்கம் குறைவதைக் கண்ட பரஞ்சோதி, தன்னை இன்னும் தாழ்த்திக் கொண்டான்! “தொண்டன்” என்று கூடச் சொல்லாது, “சிறிய தொண்டன்” என்றே வழங்க…அதுவே “சிறுத்தொண்டர்” என்று ஆகிப் போனது!
அன்று ஒரு நாள்…
பரிவதில் ஈசனைப் பாடி, அன்பே சிவமான ஈசன்…பைராகி (பைரவ சிவயோகி) வேடம் பூண்டு கொண்டார்! பரஞ்சோதி வீட்டு வாசலின் முன்னே பசியோடு…பிட்டுக்கு மண் சுமந்தும் பசி ஆறாத பெருமான்!
சந்தன நங்கை என்னும் பணிப்பெண்: “வாங்க ஐயா! எஜமான் வீட்டில இல்லை! சிவனடியாருக்கு உணவிட்ட பின்னர் தான், தானும் உண்பாரு! அதான் கோயில் பக்கமாப் போய் இருக்காரு! நீங்க உள்ளே வந்து உட்காருங்க, இதோ வந்துருவாரு!”
பைராகி: “நான் உள்ளே வர முடியாது! உள்ளே அவன் மனைவி தனியாக இருக்கிறாள்!”
வெண்காட்டு நங்கை (பரஞ்சோதியின் மனைவி..ஓடோடி வந்து): “சுவாமிகளே, இப்படி அமருங்கள்! இதோ வந்து விடுவார்! பசியாய் இருப்பின் பாதகமில்லை, அவர் வராமலேயே உணவிடுகிறேன்! வாருங்கள்”
பைராகி: “இல்லை பெண்ணே! அது சரி வராது! அவன் வந்தால் என்னை ஆலயத் திண்ணையில் வந்து பார்க்கச் சொல்”
அவன் வந்தான், அவள் சொன்னாள்,
அவன் ஓடினான், அவரை நாடினான்,
ஆனால் பைராகியோ அவன் வாழ்விலே பெரும் குண்டைத் தூக்கிப் போட்டார்!
“நாங்கள் அகோரியைப் போல! அதிகம் சாப்பிட மாட்டோம்! ஆனால் பல நாட்களுக்கு ஒரு முறை மட்டும் சாப்பிடுவோம்! எனக்கு மனித மாமிசம் வேண்டும்! அதுவும் இளம் பிஞ்சு மாமிசம்! வளமான தலைச்சன் பிள்ளையின் வறுத்த கறி!
அதெல்லாம் உங்க ஊரில் கிடைக்காது! சுடுகாட்டுப் பக்கம் தான் கிடைக்கும்! என் பசி என்னோடு போகட்டும்! உனக்கேன் வம்பு? உன்னால் அதெல்லாம் தர முடியாது! தொந்தரவு செய்யாமல் போய்விடு!”
போய்விட வேண்டியது தானே!
என்ன திமிரு! இளம்பிஞ்சு மாமிசமாம் – பிள்ளையின் வறுத்த கறியாம்!
என்னமோ வடை கறி, சால்னா, முட்டைப் போண்டா கேக்குறாப் போல கேக்குறாரு! அயோக்கிய யோகி! அப்படியே அலேக்காப் பிடிச்சி ஜெயிலுக்குள்ளாற போட வேணாமா? 🙂
பரஞ்சோதி, ஒரு வகையான குற்ற உணர்விலேயே இருப்பவன்! ஒரு ஊரையே கொளுத்தியவன் ஆயிற்றே! என்ன காரணமோ தெரியலை, அந்த க்ஷத்ரிய இரத்தம் இன்னும் ஒரு ஓரமாத் துடிக்குது போல;
தான் இப்போது கடைபிடிக்கும் பிராயச்சித்தம்-சைவக் கொள்கையைக் காப்பாத்தணும்-ன்னு நினைச்சிக்கிட்டு ஒப்புக் கொண்டான்! ஆனால்…..?
பிள்ளைக் கறிக்கு எங்கே போவது?
பகுத்தறிவு அரசியல்வாதியா இருந்தா, யாருக்கும் தெரியாம, தேர்தலுக்கு முன்னாடி நரபலி-பிள்ளைப்பலி கொடுத்திருக்கலாம்! ஆனா பரஞ்சோதிக்குத் தான் பகுத்தறிவு பத்தாதே!
இன்னொருத்தர் பிள்ளையைக் கோழி அமுக்கறாப் போல அமுக்கிக் காவு கொடுப்பதற்குப் பதில்…தன் பிள்ளையையே காவு கொடுக்கத் துணிஞ்சிட்டான் பாவி..(அ) முன்னாள் தளபதி!
ஐயோ, அவன் மனைவி என்ன பட்டாளோ, எப்படி அழுதாளோ, நமக்குத் தெரியாது! ஊருக்கும் தெரியாது!
ஊரை எரித்த வெறி அடங்கி, அதுவே கொள்கை வெறியாக மாறினால்? = இப்படித் தான் ஆகும்!
வெட்டத் “துணிந்தான்”……வெட்டிப் பையலான பரஞ்சோதியின் மன உறுதிக்கு ஈசனே பயந்து விட்டார்…! இப்படியும் ஒருவனா?
அன்பே சிவம் என்று ஆன பின்னரும், பழைய குற்றவுணர்ச்சியால் இன்னமும் தவிக்கும் இந்த “வெறி”யனை இப்படியே விட்டு வைக்கக் கூடாது என்று தன்னிடமே சேர்த்துக் கொண்டான் கயிலையான்!
சீராளா என்று அந்தப் பிஞ்சின் பேர் சொல்லி அழைக்க, பிள்ளை-தாய்-தந்தையைத் தன் கயிலையில் அணைத்து இணைத்துக் கொண்டான் ஈசன்!
மூலநூலான திருத்தொண்டர் திருவந்தாதியில் இவ்வளவே இருக்க….
ஏதோ வெட்டிச் சமைத்தே விட்டது போல் “நாடக பாவனை” சேர்த்து… “வரலாறு” ஆக்கி விட்டார் சேக்கிழார் சுவாமிகள்!
என்ன செய்வது…….குலோத்துங்க சோழச் சக்கரவர்த்திகளின் கீழ், அரச-அந்தண-வேளாள முறைமைக்கு, எங்கள் ஈசனையே காவு கொடுத்தாவது சைவத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும் அல்லவா!
மனம் வலித்தால் இந்தப் பத்தியைத் தவிர்த்து விடுங்கள்! ஏன்-னா இனி எழுதுவது சேக்கிழார்…
பிள்ளைச் சீராளனைப் பள்ளியில் இருந்து அவசர அவசரமாய் அழைத்து வர…
பிள்ளைச் சீராளனைத் தாய், தன் இரு தொடையிலே தாங்க…
பிள்ளைச் சீராளன் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சிரிக்க…
பிள்ளைச் சீராளன் கழுத்திலே ஒரே வெட்டில்……
இனிய மழலைக் கிண்கிணிக் கால் இரண்டும் மடியின் புடை இடுக்கி,
கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்க, காதலனும்
நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்ய,
தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலை அரிவார் (12ஆம் திருமுறை: பெரிய புராணம்)
பிள்ளைக் கனி-அமுதை,
பிள்ளைக் கறி-அமுதாய்ப் படைக்க…
இவ்ளோ தான் சோறா? “தலைக்கறி இல்லையா?”
-இப்படிக் கேட்டாராம் சைவச் செம்மலான சிவபெருமான்!
என் முருகா! அசுரன் என்று கூடப் பாராது, வரம் வழங்கும் நம் குலத்தந்தை ஈசனா இப்படிக் கேட்பார்?
அவனவன் சுக போகத்தை எடுத்துக் கொள்ள, விஷத்தை எடுத்து உண்ட கண்டனா இப்படிக் கேட்பார்?…ஆனாலும் கேட்டாராம்! பெரிய புராணத்தில் சொல்கிறார்கள்!
கறி செய்யும் போது பெரும்பாலும் தலையை நீக்கி விடுவது வழக்கம் தானே! பெற்றவர்கள் சிவயோகிக்கு என்ன பதில் சொல்வது-ன்னே தெரியாமல் பரிதவிக்க…
சிறந்த சைவக் குடிப்பிறந்த பெண்ணான வேலைக்காரி சந்தனநங்கை, “இப்படி ஆனாலும் ஆகும்-ன்னு எனக்குத் தெரியும்! எது-ன்னாலும் சைவ யோகிகளின் மனம் கோணவே கூடாது! அதான் ஒதுக்கிய தலையை, யாரும் அறியாமல், நான் தனியாக கறி சமைத்து வைத்துள்ளேன்” என்று கூறினாளாம்!
சரி…இத்துடன் முடிந்து விட்டதா?
“தனியாக உணவருந்திப் பழக்கமில்லை” என்று சிவயோகி சொல்ல, தன் பிள்ளையின் கறியைத் தானும் உண்ணத் துணிந்த பரஞ்சோதி….!
“உங்கள் பிள்ளையை வரும் போது பார்த்தேனே, அவனையும் கூப்பிடுங்கள்” என்று சைவ யோகி சொல்ல….சீராளா என்று அவரே கூவி அழைக்க…
பிள்ளையோ மாயமாய் ஓடி வர…யோகி மறைந்தார்! வேலைக்காரி உட்பட, அந்த வீட்டுக்கே சைவப் பெருவாழ்வு கிட்டியது! சுபம்!!
இது வரையாச்சும் கதை! போனால் போகுது…
ஆனால் இன்றளவும், இந்தப் “படையல்” செங்காட்டங்குடியில் நடத்தப்படுகிறது!
“சீராளங்கறி” என்றே “பிரசாதத்துக்கு” பெயர்! 🙁
பயப்படாதீங்க…பிள்ளைக் கறி அல்ல! மரக் கறி தான்!
வருஷத்துக்கு ஒரு நாள் மட்டுமே இது “நிவேதி”க்கப்படும்! இதை உண்டால் குழந்தைப் பாக்கியம் உண்டாகும் 🙁
இன்னொருத்தன் பிள்ளையின் பேரால் கறி – அதை உண்டால் தனக்குப் பிள்ளை பிறக்கும் – அடா அடா, எவன் பிள்ளையோ நமக்கென்ன கவலை? அவரவர் வாழ்வு அவரவர் கையில்! “பிரசாதத்துக்கு” கூட்டம் கூட்டமாகப் “பக்தர்கள்”….
உங்க பிள்ளையின் பேரால் அர்ச்சனை மட்டும் தானே பண்ணுவீங்க! ஆனா உங்க பிள்ளையின் பேரால் கறி போடுறாங்கன்னா?…
ரவி கறி, ராகவன் கறி-ன்னு போட்டா, சும்மா விட்டுருவீங்களா? ஆனால் சீராளங் கறி-ன்னா மட்டும் நமக்குப் “பிரசாதம்”-ல்ல? Hypocrisy? முருகா!
சிறுத்தொண்டன் (எ) பரஞ்சோதி செய்யாத பலவும் செய்ததாகச் சொல்லி, ஒரு எளிய அடியவனின் வாழ்வில் நடந்த ஒரு துன்பியல் சம்பவத்தை…
கன ஜோரான நாடகமாக மாற்றி விட்டோம்! உம்ம்ம்ம்….சிவம் பெரிதா? சைவம் பெரிதா?? = மேன்மை கொள் “சைவ நீதி” ஓங்குக உலகமெல்லாம்!
இன்றளவும் “சீராளன் கறி” ஆலயத்தில் தேவை தானா? என்பதை அவரவர் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்!!
முருகா, நம் காதலை எப்போதும் உடனிருக்கும் நீ மட்டுமே அறிவாய்! உன் மனச்சாட்சியே என் மனச்சாட்சி!
* சிவச் செம்மல்களான திருத்தொண்டர்களின் கதையை….
* பூசிய புனைவுகள் அதிகம் இல்லாமல்…
* மூலநூலில் (திருத்தொண்டர் திருவந்தாதி) இருப்பது போலவே…
* இக்கால/எக்கால நிலைக்கும் ஏற்றாற் போல் சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக…..
இன்று சிறுத்தொண்ட நாயனார் (எ) பரஞ்சோதி…அவரின் நினைவுநாள்-குருபூசை!!
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்
மெய் அடியார்கள் திருவடிகளே சரணம்!
குழந்தை, சீராளன் திருவடிகளே சரணம்!!
சைவப் பொருளாய் இருப்பவனே – அன்று
ஓட்டல் கறியைக் கேட்டவனே….
ஹிஹி…பிள்ளைக் கறியை கேட்டவனே…
அதே அதே சபாபதே!
அதே அதே சபாபதே!
Leave a Reply
You must be logged in to post a comment.