பக்திப் பாடல்களுக்கும் இலக்கியத் தகுதி உண்டு
பழ. நெடுமாறன்
திருநெல்வேலியில் உள்ள சைவ சபை சார்பில் நூல் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு சொற்பொழிவு, திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி ஆசிரியர் ச. சுப்பிரமணிய ஓதுவார் திருமுறை விண்ணப்பம் வாசித்தார். சைவ சபை துணைத் தலைவர் பி. காந்தி வரவேற்றார். விழாவில் பழ. நெடுமாறன் எழுதிய ‘தமிழ்மொழித் தலைவர் திருநாவுக்கரசர்’ என்ற நூலை சென்னை உயர்நீதிமன்ற நீதிநாயகம் வீ. சிவஞானம் வெளியிட, அதை இலக்கியப் பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் பெற்றுக்கொண்டார். செல்வன் சி.சிவ நாகராசன் எழுதிய ‘My Seven Favorite forms of Lord Siva’ என்ற நூலை நீதிநாயகம் வீ. சிவஞானம் வெளியிட, அதை பழ. நெடுமாறன் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து ஓவியர் பொன். வள்ளிநாயகம் வரைந்த சி.சு. மணியின் படம், தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்ற அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக பழ. நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிநாயகம் வீ.சிவஞானம் வழங்கிய வாழ்த்துரையில் “பழ. நெடுமாறன் எழுதியிருக்கும் ‘தமிழ்மொழித் தலைவர் திருநாவுக்கரசர்’ என்ற நூலில் தமிழ் ஆசிரியர்களைவிட அதிகமாக பாக்களையும், இலக்கணங்களையும் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. திருநாவுக்கரசர் எப்படிப்பட்டவர் என்று நாம் சொல்வதைவிட, சேக்கிழார் மொழியில் சொல்வது சிறப்பாக இருக்கும் என நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். திருநாவுக்கரசர் சில இடங்களில் தன் உயிருக்காகவும், பல இடங்களில் தமிழுக்காகவும் போராடியிருக்கிறார். முதன்முதலில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியவர் திருநாவுக்கரசர்தான் என பழ. நெடுமாறன் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். திருநாவுக்கரசரின் இந்தப் போராட்ட குணம்தான் இந்தப் போராளியையும் (பழ. நெடுமாறன) ஈர்த்துள்ளது என்று நான் தெரிந்துகொண்டேன்.
“இதேபோல் இன்னொரு நூலையும் பழ. நெடுமாறன் எழுதிக்கொண்டிருக்கிறார். அந்த நூலையும் விரைவில் இந்த சபை வெளியிடவேண்டும். அவர் மேலும் பல தொண்டுகளை தமிழுக்கும் சைவத்திற்கும் செய்யவேண்டும். போராளிகளுக்காகப் போராடி தேசமெல்லாம் பாதயாத்திரை வந்தவர். இனி அறிவுப் பயணத்தைத் தொடங்கவேண்டும். இந்த அறிவுப் பயணம் தொடர்ந்து நீளவேண்டும். அந்த அறிவுப்பயணம் எல்லோருக்கும் பயன்பட வேண்டும்” என்றார்.
பழ. நெடுமாறன், ஏற்புரையில் “‘தமிழ்மொழித் தலைவர் திருநாவுக்கரசர்’ என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியிருக்கிறேன். உலக மொழிகளில் எந்த மொழிக்கும் தலைவர் என்று யாரையும் குறிப்பிடுவது கிடையாது. திருநாவுக்கரசரை தமிழ்மொழித் தலைவரென்று சேக்கிழார் சொல்லியிருக்கிறார் என்றால், அதற்கு ஆழமான பொருள் உண்டு. ஏனெனில், சேக்கிழார் தமிழில் பெரும் புலமைப்பெற்றவர். அவர் அலங்கார வாரத்தைகளை சொல்வதில்லை. சேக்கிழார் தன்னுடைய பெரியபுராணத்தில் ஏன் இதை சொன்னார் என்பதை ஆராய்ந்தபோது எனக்கு பல உண்மைகள் பளிச்சிட்டன. அவற்றையெல்லாம் தொகுத்துதான் இந்த நூலை படைத்திருக்கிறேன்.
சங்க காலத்திற்கு முன்னால் தோன்றியது தொல்காப்பியம். அதனடிப்படையில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்கள் படைக்கப்பட்டன. அதில் இடம்பெற்றுள்ள பாடல்களில் தமிழ் மொழியின் சிறப்பு குறித்தோ அல்லது தமிழினத்தின் வீரம், புகழ் குறித்தோ, தமிழ்நாட்டின் சிறப்பு குறித்தோ எதுவும் சொல்லப்படவில்லை. எல்லோரும் தமிழர்களாக வாழ்ந்தார்கள். இந்த தமிழ் மீது மேலாதிக்கம் செலுத்தக்கூடிய எந்த மொழியும் அன்றைக்கு தமிழ்கூறும் நல்லுலகத்தில் இல்லை. எனவே, சங்ககால நூல்களில் அத்தகைய குறிப்பை அவர்கள் சொல்லவேண்டிய தேவையும் ஏற்படவில்லை.
சமயம் என்ற சொல்லாடல்: சங்க கால நூல்களில் சமயம் என்ற சொல்லாடலைக் காண முடியாது. ஐந்திணைத் தெய்வங்கள் சமயம் சார்ந்த தெய்வங்களாகக் குறிப்பிடப்படவில்லை. அந்தக் கால கட்டத்தில் சமணம், பௌத்தம், வைதிகம் ஆகியவை வடக்கே இருந்து தமிழ்நாட்டில் அடியெடுத்து வைத்தன. அதன்பிறகு இந்த சமயங்களோடு அதன் வழிபாட்டு மொழிகளான பிராகிருதம், பாலி, சமற்கிருதம் ஆகியவை அடியெடுத்து வைத்தன. இதன்பிறகுதான் பக்தி இலக்கியம் தோன்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை காதலையும், வீரத்தையும் போற்றிப் பாடின. அகநானூறு காதலின் சிறப்பை பற்றியும், புறநானூறு வீரத்தைப் பற்றியும் பாடின. அகத்தையும், புறத்தையும் பகுத்த பெருமை தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழிக்கும் கிடையாது.
அன்றைக்கு நுண்கலைகள் என்று போற்றப்பட்ட இசை, நடனம் போன்றவை பாவத் தொழில் எனவும், அதை செய்யக் கூடாது எனவும் பௌத்தமும், சமணமும் கூறின. ஆனால் தமிழர்களின் உள்ளங்கள் அதை ஏற்கவில்லை. மாறாக, நுண்கலை வடிவங்களில் இறைவனைப் பார்த்தார்கள். சிவபெருமானை ஆடலரசனாகவும், பெருமாளை குழலூதும் கண்ணனாகவும் கலை வடிவங்களில் வழிபட்டார்கள். நுண்கலை இல்லாத ஒரு வாழ்வு என்பது வறண்ட வாழ்வாகப் போய்விடும் என்பதை உணர்ந்த தமிழர்களின் உள்ளங்களில், அந்த நுண்கலைகளை பசுமை படர வைத்தவர்கள் நாயன்மார்களும், ஆழ்வார்களும்தான். திருமுறை, திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றை ஒவ்வொரு கோயிலிலும் பாடுவதற்கு மன்னர்கள் மானியங்கள் ஒதுக்கி அதற்கு ஓதுவார்களை நியமித்து இசையையும், கலையையும் வளர்த்தனர். கோயில்களில் நடனம் ஆடுபவர்களுக்கு மானியம் கொடுத்தார்கள். இதனால் கலையும் இசையும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வளர்ந்தன. இதனால் தமிழர்கள் தங்களுடைய நுண்கலை வாழ்வுக்கு மீண்டும் திரும்பினார்கள். இது நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆற்றிய ஒரு பெரும் தொண்டு.
இல்லற வாழ்வைத் துறப்பது சிறந்தது என சமணமும், பௌத்தமும் தமிழ்நாட்டில் போதித்தன. இதெல்லாம் நம்முடைய தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான கருத்துகள். அதை ஆழ்வார்களும், நாயன்மார்களும் மறுத்தனர். இல்லறமன்று நல்லறமில்லை என திருக்குறள் கூறுகிறது. “பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே” என தேவாரம் பாடுகிறது. இறைவனும் -இறைவியும் ஒன்றாக வீற்றிருந்து அருள்பாலிப்பார்கள் என பக்தி இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது.
இலக்கியத் தகுதி: ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து 12ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய திருமுறைகளும், திவ்யப் பிரபந்தமும் சிறந்த இலக்கியங்கள். அவை தமிழர் வாழ்வில் தமிழர் எழுச்சிக்கு வழிவகுத்தவை. எனவே, திருநாவுக்கரசரின் வாயிலாக இந்த நூலில் நான் வலியுறுத்தியிருக்கிறேன்.
தேவார பாக்கள் திருவாசகம், வைணவப் பாசுரங்கள் ஆகிய பக்திப் பாடல்களுக்கு இலக்கியத் தகுதி உண்டு. அவை நம்முடைய சிறந்த இலக்கியங்களில் ஒன்று என்ற உணர்வு நமக்கு வரவேண்டும். அவற்றை இலக்கியமாகவும் படிக்கவேண்டும், பார்க்கவேண்டும். நாயன்மார்களும், ஆழ்வார்களும் புதிய வகை பாக்களை படைத்தார்கள். புதிய வகை இலக்கியங்கள் படைக்கப்படவில்லை என்றால், ஒரு மொழி குட்டை போல தேங்கிவிடும். காலத்திற்கேற்ற வகையில் பாக்களை படைக்கவேண்டும். அப்போதுதான் அந்த மொழி குன்றாத இளமை படைத்த மொழியாக இருக்கும். இல்லையெனில் அது ஒரு காலகட்டத்தில் வற்றி மறைந்துவிடும்.
உலகத்தில் எந்த மொழிக்கும் இல்லாத பெரும் சிறப்பு, தமிழ்மொழிக்கு இன்னொரு வகையில் உண்டு. எல்லா சமயங்களுக்கும் தமிழில் காப்பியங்கள் படைக்கப்பட்டுள்ளன. சமணரான இளங்கோவடிகள் படைத்தது சிலப்பதிகாரம். பௌத்தரான சாத்தனார் படைத்தது மணிமேகலை. சைவரான சேக்கிழார் படைத்தது பெரியபுராணம். வைணவ காப்பியமான இராமாயணத்தை கம்பர் படைத்தார். மேற்கேயிருந்து வந்த வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி கிறித்தவ காப்பியமாகும். இசுலாமியரான உமறுப்புலவர் பாடியது சீறாப்புராணமாகும்.
அறுவகை சமயங்களும் தமிழில் சமய இலக்கியங்களைப் படைத்தன. தமிழைப் போற்றின. ஆனால், சமற்கிருதம் உள்பட உலகில் வேறு எந்த மொழிக்கும் இந்த பெருமையும், சிறப்பும் கிடையாது.
இந்த விழாவில் தருமை ஆதீன கட்டளை விசாரணை மீனாட்சிசுந்தரம் தம்பிரான் சுவாமிகள், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி செயலர் செல்லையா, முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.எல்.எஸ். லெட்சுமணன், பொருநை இலக்கிய வட்ட புரவலர் தளவாய்நாதன், வரலாற்று ஆய்வாளர் செ. திவான், கவிஞர் பே. இராசேந்திரன், நல்லாசிரியர் மு. செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செயற்குழு உறுப்பினர் தி.ப. முத்தையா பிள்ளை வாழ்த்துப்பா பாடினார். சைவ சபை பொருளாளர் வி. வள்ளிநாயகம் நன்றி கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.