நொவெம்பர் 08, 2024
ஊடக அறிக்கை
எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள்!
அன்பான தமிழர் தாயக உறவுகளே!
இலங்கையின் 17 ஆவது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்றன. இனச் சிக்கலுக்கு தமிழினத்துக்குரிய உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு நியாயமான, நீதியான, நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வை எட்டும்வரை எல்லாத் தேர்தல்களும் எமக்கு முக்கியமானவையே.
இந்தத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (இதஅக) தனித்தே போட்டியிடுகிறது. ததேகூ இல் பங்காளிக் கட்சிகளான ரெலோ, பொளட், இபிஎல்ஆர்எவ் கட்சிகள் தாமாகவே கூட்டமைப்பில் இருந்து சனவரி 2023 இல் வெளியேறிவிட்டன.
தமிழ்மக்கள் 1956 தொடக்கம் இராணுவ நெருக்குவாரம், ஒட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்கள் போன்றவற்றைத் தாண்டி ஒவ்வொரு தேர்தலிலும் ஈழத் தமிழர்களின் முதன்மைக் கட்சியான இதஅக க்கு வாக்களித்து எமது இனத்தின் அரசியல் பிரநித்துவத்தைப் பலப்படுத்தி வந்திருக்கிறீர்கள்.
சென்ற செப்தெம்பர் 21 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் ஊடகங்களின் பலத்த எதிர்மறைப் பரப்புரைக்கு மத்தியிலும் இதஅக ஆதரித்த ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐமச) தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு நீங்கள் வாக்களித்து வட கிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் 676,681 (43.03 விழுக்காடு) வாக்குகள் எடுத்து முதல் இடத்துக்கு வர வைத்தீர்கள். அதே நேரம் சர்வதேசத்துக்குப் புதிதாக தமிழ்மக்கள் ஒரு வலுவான செய்தியைச் சொல்ல வேண்டும் எனக் கூறிய போலித் தேசியவாதிகள் நிறுத்திய தமிழ் வேட்பாளர் பா. அரியநேத்திரன் 218,479 (13.67 விழுக்காடு) வாக்குகள் மட்டும் எடுத்து 4 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
தென்னிலங்கையில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. தேசிய மக்கள் சக்தி (தேமச) வேட்பாளர் அனுர குமார திசநாயக்க 5,740,179 (42.31 விழுக்காடு) வாக்குகள் பெற்று சனாதிபதியாக வந்துள்ளார். தேமச தனது தேர்தல் அறிக்கையில் 13ஏ சட்ட திருத்தத்தை முழுதாக நடைமுறைப் படுத்துவது பற்றி நேரடியாக எதனையும் சொல்லவில்லை. தேர்தல் காலத்தில் மாகாண சபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என்ற பொருள்படவே சனாதிபதி அனுர குமார திசநாயக்கா பேசியிருந்தார். ஆனால் தேமச இன் தேர்தல் அறிக்கையில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் (2015-2019) முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவை அடிப்படையாகக் கொண்டு அது நிறைவு செய்யப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இருந்தும் சனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஆளும் தரப்பில் இருந்து வரும் செய்திகள் தமிழ்மக்களுக்கு நம்பிக்கை தருவதாக இல்லை. மக்கள் விடுதலைக் கழகத்தின் (ஜேவிபி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா “13 ஆவது திருத்தச் சட்டமும் அதிகாரப்பகிர்வும் வடக்கு மக்களுக்கு அவசியமானவை அல்ல, அவர்களுக்கு அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வே அவசியமாக உள்ளது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த விடயங்களை பயன்படுத்தி வருகின்றனர்’’ என்று அவர் பொதுவெளியில் தெரிவித்துள்ளார். இது போன்ற கருத்தை அமைச்சரவைப் பேச்சாளர் விஜித்த ஹேரத்தும் கூறியிருக்கிறார்.
மேலும் போர்க்காலத்தில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக இராணுவ அதிகாரிகள் எவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் எனத் திட்டவட்டமாக தேமச கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப (ஐநாமஉபேரவை) பேரவை நிறைவேற்றிய தீர்மானம் 50/1 நிராகரித்துள்ளார்கள். அதேபோன்று ஐநாமஉ பேரவையின் சர்வதேச விசாரணைக் கோரிக்கையையும் புறந்தள்ளியுள்ளார்கள். சுருங்கச் சொன்னால் அதி தீவிர சிங்கள – பவுத்த கடும்போக்காளரான மகிந்த இராசபக்ச அவர்களது பேரினவாத கோட்பாட்டையே எழுத்துப் பிசகாமல் அனுர குமார திசநாயக்க அவர்களின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பின்பற்றுகிறது – பின்பற்றும் – எனக் கொள்ளலாம்.
ஜேவிபி கட்சி நீண்ட காலமாகவே அதிகாரப் பகிர்வை எதிர்த்து வருகிறது. மாகாண சபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் கையளிக்கப்படும் என்பது பற்றி சனாதிபதி அனுர குமார திசநாயக்க மவுனம் சாதிக்கிறார்.
சனாதிபதி தேர்தல் பரப்புரைக் காலத்திலும் இன்றைய சனாதிபதி அனுர குமார திசநாயக்க தமிழர்களுக்குத் தேவை மூன்று வேளை உணவு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அவற்றைவிட வேறு தேவைகள் இல்லை என்ற பொருள்பட தேர்தல் மேடைகளில் பேசியிருந்தார்.
தேமச ஒரு இடதுசாரிக் கட்சி. அவர்களது சித்தாந்தத்தின் படி எல்லாச் சிக்கல்களுக்கும் பொருளாதரமே மூல காரணம், அதனைத் தீர்த்து வைத்தால் இனச் சிக்கல் மட்டுமல்ல ஏனைய சிக்கல்களும் தாமாகவே தீரும் என்பதுதான். ஆனால் உலக வரலாறு இது கனவுலகக் கோட்பாடு எனச் சொல்கிறது.
சோவியத் ஒன்றியம் 1991 இல் கரைந்து போன போது அதில் இருந்த 15 நாடுகளும் இனவழி பிரிந்து மொழிவழி ஒன்று கூடித் தனித்தனி நாடுகளாக உருப்பெற்றன. யூகோசிலாவிக்கிய குடியரசும் 1991-1996 காலப் பகுதியில் இன, மொழி அடிப்படையில் 6 நாடுகளாக தோற்றம் பெற்றன. இந்த வரலாற்று உண்மையை – அது சொல்லும் பாடத்தை – தேமச, குறிப்பாக ஜேவிபி வசதியாக மறந்து விட்டது.
அதனால் தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம், அவர்களுக்குத் தனித்த மரபுவழித் தாயகம், தனித்த மொழி, தங்களைத் தாங்களே ஆளும் உரிமை உண்டு என்பதை ஏற்க மறுக்கிறது. இனப் பிரச்சனை தொடர்பாக ஜேவிபி கட்சி மகிந்த இராசபக்சவின் சிங்கள – பவுத்த மேலாண்மைக் கொள்கையையே பின்பற்றுகிறது எனலாம்.
தேமச சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்க “ஊழலை ஒழிப்போம். ஊழல்வாதிகளைச் சிறையில் அடைப்போம்” என்ற முழக்கம் முக்கிய காரணம். ஆனால் இதில் கூட சனாதிபதி அனுர குமார திசநாயக்கா சறுக்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபைக்கு முன்னாள் நிர்வாக சேவையில் பல பதவிகளை வகித்த இரேனியஸ் செல்வின் புதிய தலைவராக அமைச்சர் விஜித்த ஹேரத் அவர்களால் நியமிக்கப்பட்டார். கடந்த ஒக்ரோபர் மாதம் 21 ஆம் நாள் நல்வேளையில் செல்வின் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் எண்ணி 9 நாட்களில் (ஒக்தோபர் 29) செல்வின் விரட்டி அடிக்கப்பட்டு அவரது இடத்துக்கு ஊழல்வாதி என நம்பப்படும் விநாயக மூர்த்தி சகாதேவன் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்த்து சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
இரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் 300 க்கும் அதிகமான மதுபான சாலை உரிமங்கள் வழங்கப்பட்டன. அந்தப் பட்டியலைப் பதவிக்கு வந்த 3 நாட்களில் வெளியிடப் போவதாக சனாதிபதி அனுர குமார திசநாயக்கா சபதம் செய்தார். ஆனால் அந்தப் பட்டியலை இன்றுவரை வெளியிட மறுத்து வருகிறார். ஒரு வேளை அந்தப் பட்டியலில் அவரது கட்சிக்காரர்களும் இருக்கிறார்களோ தெரியவில்லை. இவை எல்லாம் ஆட்சி மாறினாலும் காட்சிகளும் கோலங்களும் மாறப் போவதில்லை என்பதைக் கட்டியம் கூறுகின்றன.
தேமச இன் முக்கிய பங்காளிக் கட்சியான ஜேவிபி கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிரான தீவிர இனவாத நிலைப்பாட்டையே எடுத்து வந்திருக்கிறது. 1987 இல் எழுதப்பட்ட இந்திய – இலங்கை உடன்பாட்டை ஜேவிபி மூர்க்கத்தனமாக எதிர்த்ததையும், போர்க் காலத்தில் சிங்கள இராணுவத்துக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஊர்தோறும் திரட்டியதையும் குறிப்பிடலாம். மேலும் வட- கிழக்கு இணைப்பை எதிர்த்து 2006 ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அந்த இணைப்பை இல்லாது ஆக்கிய கட்சியும் இந்த ஜேவிபி என்பதை இலேசில் மறந்துவிட முடியாது.
தேர்தல் களத்தில் அதிக எண்ணிக்கையான சுயேட்சை வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள். இவர்கள் தேர்தலில் வெல்ல மாட்டார்கள் என்று தெரிந்தும் வாக்குகளைச் சிதறடிக்கத் தேர்தல் களத்தில் இறக்கிவிடப் பட்டுள்ளார்கள். இவர்களில் நியமனம் கிடைக்காத வெப்பாரத்தில் முந்தநாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளான் போல சனநாயக தமிழரசுக் கூட்டணி என்ற பெயரில் ஊடக முதலாளி ஈ. சரவணபவன், சட்டத்தரணி கே.வி. தவராசா சுயேட்சைக் குழுவாகப் போட்டி போடுகிறார்கள். இவர்களுக்குப் போடுகிற ஒவ்வொரு வாக்கும் வீணான வாக்குகள் – தமிழ் தேசயத்துக்கு எதிரான வாக்குகள் – என்பதை மக்களாகிய நீங்கள் நன்கு உணர வேண்டும். மேலும் தென்னிலங்கை சிங்கள – பவுத்த மேலாண்மைக் கட்சி வேட்பாளர்களையும் தமிழ்மக்கள் கட்டாயம் புறக்கணிக்க வேண்டும். தமிழர்கள் தங்கள் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களை இழக்கக் கூடாது.
தமிழ்த் தேசியம் பற்றிப் பலர் இதஅக க்கு பாடம் எடுக்கிறார்கள். இன்றல்ல 75 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் ஒரு தேசிய இனம், அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு, அவற்றின் அடிப்படையில் அவர்களது வரலாற்று ரீதியான வாழ்விடமான வட – கிழக்கு தாயகத்தில் ஒரு தமிழரசை நிறுவ அவர்களுக்கு உரிமை உண்டு என்ற கோட்பாட்டை முன்வைத்து போராடி வருகிறது. எனவே தேசியம், தாயகம், சுயாட்சி பற்றிப் போலித் தேசியவாதிகள் எமக்கு வகுப்பு எடுக்கத் தேவையில்லை.
தமிழ்மக்களுக்கான தீர்வு தமிழீழ விடுதலைப் புலிகளும் அன்றைய இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் 2002 டிசெம்பரில் ஏற்பட்ட ‘ஒஸ்லோ’ உடன்படிக்கையில் சில அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இணக்கம் காணப்பட்டன.
‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின் பிரகாரம் சமஷ்டி கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல்’ என்பதாகும். சர்வதேச நியமங்களின் படியும் சர்வதேச சாசனங்களின் பிரகாரமும் தமிழர்களாகிய நாங்கள் தனிச் சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம். ஒரு மக்கள் குழாமான நாங்கள் பேரினவாதத்தின் பிடிக்கு ஆட்படாது கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமுள்ள மக்களாக வாழ விரும்புகிறோம்.’
இதஅக இன் வெற்றியைத் தவிர்க்க பல அச்சு, இலத்திரனியல், தொலைக்காட்சி ஊடகங்களும் பணமுதலைகளும் மெத்தப் பாடுபடுகிறார்கள். இதில் ஊடக முதலாளி கந்தையா பாஸ்கரன் மற்றும் லைக்கா நிறுவனத்தின் முதலாளி அல்லிராசா சுபாஸ்கரன் முன்வரிசையில் நிற்கிறார்கள். இதில் சுபாஸ்கரன் தென்னிலங்கையிலும் கோடிக்கணக்கான பணத்தை இறைத்து கட்சிகளை விலைக்கு வாங்கித் தேர்தல் களத்தில் இறக்கியுள்ளார். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு நடிகர் இரஞ்சன் இராமநாயக்கா தலைமையிலான ஐக்கிய சனநாயகக் குரல் கட்சியாகும். இந்தக் கட்சியின் கூட்டங்களுக்குத் தலைக்கு ரூபா 5,000 கொடுத்து வாக்காளர்கள் ஏற்றி இறக்கப்படுகிறார்கள் எனச் தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
போராடாத எந்த இனமும் விடுதலை பெற்றதில்லை போராடிய எந்த இனமும் விடுதலை பெறாமல் விட்டதுமில்லை. எமது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க அறவழியில் தொடர்ந்து போராடுவோம்.
எனவே தமிழ்மக்கள் வழமைபோல் ஒன்று திரண்டு வீட்டுக்கு வாக்களித்து இதஅக வேட்பாளர்களை வெற்றிபெற வையுங்கள். அப்போதுதான் தென்னிலங்கை அரசுடன் பேரம் பேசும் சக்கி அதிகரிக்கும்.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! (புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)
கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Leave a Reply
You must be logged in to post a comment.